இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

கிரிஸ்டல் கொலுசு..

தரமான வெள்ளிக்கொலுசு வாங்க குறைந்தது ரூ.2 ஆயிரம் தேவைப்படுகிறது. மார்டன் பெண்களுக்கு பாரம்பரிய வெள்ளி கொலுசுகளில் மனம் அவ்வளவாய் லயிப்பதில்லை. குறைந்த விலையில், புதுப்புது டிசைன்களில், கலர்கலராய்  கொலுசுகள் கிடைத்தால் சும்மா விடுவார்களா? வாங்கி குவித்து விடுவார்கள். விலை குறைவாக, அதே நேரத்தில் டிரஸ்சுக்கு மேட்ச்சாக கலர்கலராய் கிடைப்பதால் கிரிஸ்டல் கொலுசுகளுக்கு இளம்பெண்கள் மத்தியில் நல்ல கிராக்கி இருக்கிறது.

 கிரிஸ்டல் கற்களால் அலங்கரித்து, ரூ.400 விலையில் வெள்ளிக்கொலுசு தயாரித்து அசத்துகிறார், திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சாந்தி. பிருந்தா ஜுவல் ஒர்க்ஸ் மற்றும் மெருகுக்கடை நடத்தி வரும் அவர் கூறியதாவது:

நகைத்தொழில் செய்து வரும் பாரம்பரிய நடுத்தர குடும்பம் எங்களுடையது. பெரிய நிறுவன நகைக்கடைகளால், குடிசைத் தொழிலாக இருந்து வந்த நகைத்தொழில் நலிந்ததால் எங்கள் குடும்பத்தில் வறுமை தலை தூக்கியது. இதனால் கணவர் நகைக்கடை வேலைக்கு சென்றார். நான் நகைகளுக்கு பாலிஷ் போடுவது, கொலுசு தயாரிப்பது போன்றவற்றை கற்றுக்கொண்டேன். அதுதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.
வெள்ளி விலை உயர்ந்து கொண்டே செல்வதால், கொலுசு எடை, தரத்தை குறைக்காமல் குறைந்த விலையில் கொலுசு விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தேன்.

கொலுசு விலையைக் குறைக்க அதில் சேர்க்கப்படும் வெள்ளியைக் குறைக்க வேண்டும். சராசரியாக 20 கிராமுக்கு குறையாமல் வெள்ளிக் கொலுசு தயாரிக்கும் நிலையில் அதை 2 கிராம், 3 கிராம் வெள்ளியில் சரம், சரமாக பல வண்ணங்களில் டிசைன்களில் கிரிஸ்டல் கற்களை இணைத்து தயாரித்தேன். நான் தயாரித்த கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை பள்ளி, கல்லூரி மாணவிகள் விரும்பி வாங்கினர்.  ¢400க்கு கிடைப்பதால் பலரும் வாங்கிச் செல்கிறார்கள். இதன் மூலம் கிடைத்த லாபத்தில் எனது குடும்பமே தலைநிமிர்ந்து நிற்கிறது.

தொழிலை விரிவுபடுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசக்கரங்கள் தன்னார்வ நிறுவன வழிகாட்டுதலின் பேரில் பிருந்தாவனம் மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி தலைவியானேன். இத்தொழிலே தெரியாத பெண்களுக்கு கிரிஸ்டல் கொலுசு தயாரிப்பதை ஒரு வாரத்தில் கற்றுக் கொடுத்தேன். இன்று குழுவாக சேர்ந்து கிரிஸ்டல் கொலுசு தயாரித்து லாபம் பார்க்கிறோம்.


முதலீடும் லாபமும்

ஒரு கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிக்க 3 கிராம் வெள்ளி ரூ.150, 20 கிரிஸ்டல் கற்களுக்கு ரூ.100, உருக்க, கம்பியாக்க, கப் செய்ய கூலி ரூ.20, செய்கூலி ரூ.50 என அதிகபட்சமாக ரூ.320 ஆகும். இதை கிரிஸ்டல் கற்களின் விலைக்கேற்ப ரூ.300க்குள்ளும் தயாரிக்க முடியும். ரூ.400க்கு குறையாமல் விலை போகும். ஒரு கொலுசுக்கு லாபமாக ரூ.100 நிச்சயம். ஒருவர் ஒரு நாளைக்கு 5 கொலுசுக்கு குறையாமல் தயாரிக்க முடியும். மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். உறவினர்கள், நண்பர்கள், சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள், பள்ளி, கல்லூரி பெண்களை நேரடி வாடிக்கையாளர்களாகக் கொண்டால் குழுவாகச் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.  பெண்கள் படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசுகளை கண்காட்சியாக வைத்து வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினால் வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.  இது தவிர குறைந்த லாபத்தில் நகைக் கடைகளில் மொத்தமாக விற்கலாம்.

கற்றுக் கொள்வது எப்படி ?

மாவட்ட நிர்வாகத்தின் மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழிகாட்டும் தொண்டு நிறுவனங்கள், இத்தொழிலை மேற்கொண்டுள்ள குழுக்கள், குடிசைத்தொழிலாக செய்து வரும் நகைத்தொழிலாளர்களை அணுகினால், ஒரு வாரத்தில் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு தயாரிப்பதை கற்றுக் கொள்ளலாம்.

தங்க முலாம் பூச்சு

வீட்டில் 5க்கு 5 அடி இடம் இருந்தால் போதும். சின்ன நகைப்பட்டறை போல் வீட்டளவில் ஒரு மண் தொட்டி, அதில் உமி, கரித்துண்டுகள் போட்டு, நெருப்பு ஊதி, சின்ன மண் செப்புகளில் தங்கத்தை வெள்ளியை உருக்க வேண்டும். பேசினில் 3 டம்ளர் தண்ணீரில் பொட்டாசியம் சயனைடு, அவல் அரக்கு, ரோசனம் ஆகியவற்றை தலா 5 கிராம் கலந்து, அதில் உருக்கிய தங்கம் அல்லது வெள்ளியை ஊற்றி, அதில் முலாம் பூச வேண்டிய ஆபரணத்திற்கு தங்கம், வெள்ளி கோட்டிங் அளவை சேர்க்க, ரேடியேட்டர் மீட்டர் மூலம் இணைத்து பழைய கவரிங், தங்க, வெள்ளி நகைகளுக்கு முலாம் பூசலாம். ஒரு மக்கில் வைக்கப்பட்டுள்ள காஸ்டிக் சோடாவில் ஆபரணத்தை முக்கி எடுத்தால் புதிது போல ஆகிவிடும். ஒரு பேசின், குட்டி கம்ப்ரசர் மோட்டார் வைத்து சுழலும் பிரஷ்சில் நகையைக் கழுவினாலும் புதுசாகும். இதை பாலிஷ் போடுவது, மெருகு போடுவது என்பார்கள். தங்க முலாம் பூசுவது, மெருகு போடுவது கூடுதல் வருமானம் தரும்.

தயாரிக்கும் முறை

வெள்ளியை வாங்கி, அதன் திடத்தன்மைக்கு செம்பு சேர்த்து உருக்க வேண்டும். உருக்கி கொடுக்கவும், அதை மெல்லிய கம்பியாக்கவும், கிரிஸ்டலில் பொருத்தக்கூடிய சின்ன கப்களை தயாரிக்கவும் ஜாப் ஒர்க் கடைகள் உள்ளன. அங்கு செய்து வாங்கிக் கொள்ளலாம். நூலில் பாசி கோர்ப்பதுபோல், வெள்ளிக் கம்பியில் கிரிஸ்டல் கற்கள் கோர்ப்பதுதான் கிரிஸ்டல் வெள்ளிக்கொலுசின் பார்முலா. கிரிஸ்டல் கற்களை துளை போட்டு, அதன் வழியாக வெள்ளிக் கம்பியை நுழைத்து, கிரிஸ்டல் கற்களின் இருபுறமும் குடையைப் போன்ற சிறு கப்களை ஒட்டவைத்து, குடை வழியாக வெளிவரும் கம்பியை வளையமாக்கி, அந்த வளையத்துக்குள் மற்றொரு வளையத்தைப் பொருத்த வேண்டும். கப், கிரிஸ்டல் என்று தொடர்ந்து சரமாக்குவது தான் கிரிஸ்டல் வெள்ளிக் கொலுசு. இதைச் செய்ய நகைத்தொழில் தெரிய வேண்டியதில்லை. சிறிய ‘சவனம்Õ (கட்டிங் பிளேயர்), இருந்தால் போதும். கைவேலையில் கொலுசு தயாராகி விடும். நகைக்கடைகளில் அன்றைய விலை நிலவரப்படி வெள்ளியை வாங்கலாம். கிரிஸ்டல் கற்கள் நகைத்
தொழிலுக்குரிய பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும்.

டிரஸ்சுக்கு மேட்ச்சா கொலுசு

கிரிஸ்டல் கொலுசுகள் கலர்கலராய் கிடைப்பதால், உடுத்தும் சுடிதார், சேலையின் நிறத்திற்கு மேட்சிங்காக அணிய முடியும். கருக்காத வெள்ளியில் பளீரென மின்னும் வண்ண கிரிஸ்டல் கற்கள் கொலுசுக்கு அழகையும், காலுக்கு கவர்ச்சியையும் கொடுக்கிறது. விலையும் குறைவு. பேஷனாக உள்ளதால் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. சில பெண்கள் இதை கையில் பிரேஸ்லெட்டாக கட்டி புது பேஷனை உருவாக்கி வருகிறார்கள்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites