இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

கயிறு, மிதியடி தயாரிப்பு, சாரம் கட்டுதல், கயிறு என்று பல்வேறு வகைகள் தயாரிக்கப்படுகிறது.


உடுமலை எஸ்.கண்ணன் தென்னையின் அனைத்து பாகங்களும் மக்களால் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் தென்னை மட்டை நாரில் இருந்து தயாராகும் கயிறுமுக்கியமானவை. மிதியடி தயாரிப்பு, சாரம் கட்டுதல், கூரை வேய பயன்படும் கயிறு என்று பல்வேறு வகைகள் தயாரிக்கப்படுகிறது. தென்னை சார்ந்த கிராமங்களில் இரும்பு ராட்டை மூலம் கயிறு தயாரித்து வந்த தொழிலாளர்கள்  சமீப காலமாக தொழிற்கூடங்கள் நிறுவி இயந்திரங்கள் மூலம் இந்த தொழிலை லாபகரமாக செய்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே வாகத்தொழுவு ஊராட்சியைச் சேர்ந்த கற்பக விருட்சம் கயிறு தொழில்
கூட்டமைப்பின் செயலாளர் சுதா கூறியதாவது:

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிகம். அதை சார்ந்த தொழில்களில் இங்குள்ள கிராமப்புற மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் கயிறு தயாரிப்பது. கையால் இயக்கப்படும் இரும்பு ராட்டை மூலம் இத்தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வருகின்றனர். எங்கள் பகுதியை சேர்ந்த பெண்களும் ஆரம்பத்தில் இந்த முறையில் தான் செய்து வந்தோம். எங்களிடம் கயிறு வாங்கி விற்கும் கடைக்காரர்களின் வாழ்க்கை தான் முன்னேறியது. எங்கள் வருமானம் கூலியாகத்தான் கிடைத்தது.

இந்நிலையில் தொழிற்சாலை மூலம் கயிறு தயாரிக்கும் தொழிலை செய்ய, மாவட்ட நிர்வாகத்தின் ‘வாழ்ந்து காட்டுவோம், திட்டத்தில்’ எங்கள் மகளிர் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பிறகுஎங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டது. கடனுதவி மற்றும் மானியம் கிடைத்ததால் இயந்திரங்களுடன் தொழிற் கூடம் நிறுவி கயிறு தயாரிக்கத் தொடங்கினோம். தென்னை நார் மிதியடி தயாரிப்பதற்குத் தேவையான கயிறுகளை தயாரிக்கிறோம். தயாரிக்கும் கயிறுகளை கேரளாவில் உள்ள தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகிறோம். அதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கிறது. தொழிலுக்காக வாங்கிய கடனை அடைத்து விட்டோம் என்கிறார் சுதா.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி

தென்னை நார் கயிறு மூலம் கலைநயம் மிக்க பொருட்கள் உள்பட பல்வேறு உபயோக பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் உற்பத்தியாகும் கயிறுகள் உடனுக்குடன் விற்பனையாகிறது. கயிற்றை வாங்கி மிதியடி தயாரிப்பவர்கள் உள்நாடு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர்.
ஏற்றுமதி மிதியடி உற்பத்தி நிறுவனங்கள் கேரளா, பொள்ளாச்சியில் அதிகளவில் உள்ளதால் மிதியடி தயாரிப்பிற்குத் தேவையான கயிறுக்கு நிரந்தர தேவை உள்ளது.

கட்டமைப்பு

தென்னை நார் கட்டுகள், உற்பத்தி செய்யப்பட்ட கயிறுகளை இருப்பு வைக்க, எடை போட, அலுவலகம் ஆகியவற்றுக்கு 30க்கு 20 அடியில் ஒரு ஹால். தென்னை நாரில் கிடக்கும் கழிவுகளை நீக்கத் தேவையான புளோயிங் மெஷின் 1, நாரை பதப்படுத்த சிலிவரிங் மெஷின் 1, கயிறு திரிக்கும் ஸ்பின்னிங் மெஷின் 6.

முதலீடு

கட்டிடத்துக்கு ரூ1 லட்சம். புளோயிங் மெஷின் ரூ1.25 லட்சம், சிலிவரிங் மெஷின் ரூ1.8 லட்சம், ஸ்பின்னிங் மெஷின் தலா ரூ85 ஆயிரம் வீதம் ரூ5 லட்சம் என இயந்திரங்களுக்கு ரூ8.05 லட்சம், தினசரி 6 பேர் உழைப்புக்கு ஒரு நாளைக்கு 90 (3 பேல்) கிலோ தென்னை நார் தேவை. ஒரு மாதத்திற்கு 2.25 டன் (75 பேல்). பேல் விலை சராசரியாக மழைக் காலத்தில்ரூ750 வரையும், வெயில் காலத்தில் ரூ550க்குள்ளும் இருக்கிறது. ஒரு மாத உற்பத்திக்கு தேவையான தென்னை நாருக்கு ரூ41 ஆயிரம், 6 பேருக்கு கூலி தினசரி தலா ரூ150 வீதம் 25 நாளுக்கு ரூ22,500 என தொழில் துவங்க மொத்தம் ரூ10.68 லட்சம் தேவை. வருவாய் ஒரு நாளில் 90 கிலோ நாரில் 87 கிலோ கயிறு உற்பத்தி செய்ய முடியும். மாதத்தில் 2175 கிலோ கயிறு கிடைக்கும். ஒரு கிலோ கயிறு ரூ35க்கு கொள்முதல் செய்யப்படுவதால் மாதத்திற்கு ரூ76 ஆயிரம் கிடைக்கும். நார், கூலி, மின்கட்டணம் ஆகியவற்றுக்கு செலவானது போக மாதம் சராசரியாக ரூ12 ஆயிரம் முதல் ரூ20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

ஒரு வார பயிற்சி போதும்

தென்னை நார்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக உற்பத்தி செய்யப்படுவதால் எளிதில் கிடைக்கும்.
அவற்றை வாங்கி வந்து பிரித்து போட்டு, லேசாக தண்ணீர் தெளிக்க வேண்டும். புளோயிங் மெஷினில் திணித்தால், நாரிலுள்ள கட்டைகள், கழிவுகள் ஒருபுறம் வெளியேறும். மறுபுறம் சுத்தமான நார் வெளியேறும். அதை சிலிவரிங் மெஷினில் விட்டால் வாழைத்தண்டு அளவிலான குழைவான கயிறாக வெளிவரும். பின்னர் ஸ்பின்னிங் மெஷினில் கோர்த்து விட்டால் நார்கள் தூள் தூளாக்கப்பட்டு மெல்லிய நைலான் நூலில் படர்ந்தவாறு கயிறாக திரிக்கப்படும். அது சிறு உருளையில் சுற்றப்படும். அதை கை ராட்டையில் வேறு அளவுக்கு சுற்றி, எடை போட்டால் விற்பனைக்கு தயாராகி விடும். மெஷின்கள் எளிய தொழில்நுட்பம் கொண்டவை. அதை இயக்கவும், பழுதடைந்தால் சரிபார்க்கவும் முடியும். கயிறு திரிக்கும் அனைத்து தொழில் நுட்பங்களையும் ஒரே வாரத்தில் கற்றுக் கொள்ளலாம். மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட மேலாளர்களைத் தொடர்பு கொண்டால் பயிற்சியில் சேரலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites