இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

காகித கப்

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக ‘யூஸ் அண்ட் த்ரோÕ பிளாஸ்டிக் கப்களுக்கு பதில், காகித கப்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கப் தயாரிக்கும் தொழிலுக்கும் மவுசு கூடியுள்ளது. இத்தொழிலில் ஈடுபட்டால் லாபம் நிச்சயம் என்கிறார் கோவை மத்வராயபுரம் இருட்டுப்பள்ளத்தில் உள்ள லிட்டில் ஹார்ட்ஸ் தொழிற்பயிற்சி மைய நிர்வாகி நசீமா பிலால் (29). அவர் கூறியதாவது: எங்கள் மையத்தின் நிறுவனர் ஐயப்பன் ஆவார். சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, சேலத்திலும் மையங்கள் உள்ளன. கோவை மையத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட மூளை வளர்ச்சி குன்றிய ஆண்களுக்கு இலவசமாக பேப்பர் கப் தயாரிப்பதை கற்றுக் கொடுக்கிறோம். மேலும் செயற்கை பூக்கள், பூச்செண்டு, மெழுகுவர்த்தி, பேனா ஸ்டாண்ட் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கிறோம். தயாரித்த பொருட்களை நாங்களே விற்பனை செய்து வருகிறோம். பேப்பர் கப் தயாரிக்க, ஒரு மாத பயிற்சி போதும். மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கு ஒரு ஆண்டு பயிற்சி தேவைப்படுகிறது.
இங்கு 30 பேர் தங்கி பயிற்சி மற்றும் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழிலில் பயிற்சி பெற்ற இளைஞர்கள் நல்ல நிலையில் உள்ளனர். அர்ப்பணிப்பு உணர்வு மற்றும் தரமான பொருட்களை தயாரிக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு செயல்பட்டால், நல்ல வருவாய் நிச்சயம். இவ்வாறு நசீமா பிலால் கூறினார்.

முதலீடு எவ்வளவு?

கட்டமைப்பு: குறைந்தபட்சம் 150 சதுர அடி முதல் அதிகபட்சம் 400 சதுர அடி வரை (இட வாடகை தனி).  இயந்திரங்கள்: சைடு சீலிங் மெஷின், பாட்டம் மேக்கிங் மெஷின், பாட்டம் சீலிங் மெஷின், டாப் பீடிங் மெஷின். மேனுவலில் இயக்கப்படும் 4 மெஷின்களும் சேர்த்து ரூ.3 லட்சம். 4 மெஷின்களும் சேர்த்து ஆட்டோமேட்டிக் மெஷினாகவும் கிடைக்கிறது. விலை ரூ.8 லட்சம். இயந்திரங்கள் கோவை, சென்னையில் கிடைக்கும். உற்பத்தி செலவு: பேப்பர் கப் தயாரிக்க வால்பேப்பர்கள் தேவை. சிவகாசியில் குறைந்த விலையில் கிடைக்கும். அதை வெட்டி, மேனுவல் மெஷின் மூலம் ஒரு நாளைக்கு 8 மணி நேரத்தில் 8 ஆயிரம் பேப்பர் கப்பு தயாரிக்கலாம், மாதத்துக்கு 2.4 லட்சம் கப்பு. இடவாடகை, இயந்திர தேய்மானம், மின்சாரம், ஆள்கூலி உள்பட ஒரு கப் தயாரிக்க 25 முதல் 28 பைசா வரை செலவாகும். மாதம் ரூ.67,200 தேவை.

மாதம் ரூ.16,800

ஒரு கப் மொத்த கொள்முதல் விலையில் 35 காசுக்கு விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு கப்புக்கு குறைந்தபட்சம் 7 பைசா லாபம் கிடைக்கும். மாதம் 2.4 லட்சம் கப்பு விற்றால் ரூ.84 ஆயிரம் கிடைக்கும். லாபம் மட்டும் ரூ.16,800. தரமான பேப்பரில் பேப்பர் கப் தயாரித்து முத்திரை பதித்தால், கூடுதல் விலைக்கு விற்க முடியும். லாபமும் கணிசமாக கூடும்.

சந்தை வாய்ப்பு

ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் கப் விற்பனை நிலையங்களில் விற்கலாம். ‘யூஸ் அண்ட் த்ரோ‘ என்பதால், பேப்பர் கப்புக்கு நிரந்தர தேவை உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக உள்ளதால் பேப்பர் கப்புக்கு ஆதரவு பெருகி வருகிறது. விற்பனையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வங்கி கடனுதவி

பேப்பர் கப் தயாரிக்கும் இயந்திரங்கள் எளிதில் கையாளக்கூடியவை. பெண்கள் வீட்டிலேயே இயந்திரங்களை நிறுவி, தொழிலை மேற்கொண்டால் நிரந்தர வருமானம் கிடைக்கும். இதற்கு வங்கிகள் கடனுதவி வழங்குகின்றன.

தயாரிக்கும் முறை

பேப்பர் கப்பு 50, 100, 110, 150, 250 மி.லி. ஆகிய அளவுகளில் உற்பத்தி செய்யலாம். பேப்பர் கப் தயாரிக்க ஈரம் உறிஞ்சாத பேப்பர்கள் உள்ளன. தேவையான அளவுகளில் கப்பின்  மேல்பாகத்தையும், கீழ் பாகத்தையும் தனித்தனியாக வெட்டிக் கொள்ள வேண்டும். பேப்பர் வாங்கும் கடைகளிலேயே வெட்டிக் கொடுப்பார்கள் அல்லது பேப்பர்களை வெட்டுவதற்கு பஞ்சிங் மெஷின் பயன்படுத்தலாம். முதலில் ஒவ்வொரு கப்புக்குரிய மேல் பாகத்தின் விளிம்புகளில் பேஸ்ட் தடவி சைடு சீலிங் மெஷினில் வைத்து இயக்கினால் உருளை வடிவில் இணைக்கப்பட்ட கப்பின் மேல் பாகம் தயாராகும். அதில் கீழ்பாகத்துக்குரிய பேப்பரை இணைக்க பாட்டம் சீலிங் மெஷினை இயக்கினால், மேல்பாகமும், கீழ்பாகமும் ஒட்டிக் கொள்ளும் (கீழ்பாகத்தை மேல்பாகத்தோடு ஒட்டுவதற்கு முன்பு, கீழ் பாகத்துக்கு உரிய வட்ட விளிம்பை மடிக்க பாட்டம் சீலிங் மெஷினை பயன்படுத்த வேண்டும்). இறுதியாக டாப் பீடிங் மெஷினில் கப்பின் மேல் பகுதி விளிம்பை வளைத்து வடிவமைத்தால் பேப்பர் கப் தயாராகி விடும்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites