இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Friday, November 6, 2020

மெட்ரிக் பள்ளி தொடங்கும் முறைகள்

 

அறிமுகம்

தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் மேலான ஆர்வம் அதிகரித்து மெட்ரிக் பள்ளிகள் அதிகமாகத் தொடங்கப்பட்டுள்ளன. இவை ஆங்கில மொழியை பயிற்று மொழிப் பாடமாகக் கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகிறது. இந்த மெட்ரிக் பள்ளிக் கல்வி நிறுவனங்கள் தனியார் அமைப்புகளால் மட்டுமே நிறுவப்பட்டுள்ளன. பள்ளிக்குத் தேவையான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களைத் தனியார் அமைப்புகளே நியமித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்து, மாணவர்களிடம் தேவையான கல்விக் கட்டணங்களைப் பெற்றுக் கொள்கின்றன.

மெட்ரிக் பள்ளி தொடங்கத் தேவையானவை

அமைப்பு பதிவு

மெட்ரிக் பள்ளி தொடங்கவிருக்கும் அமைப்பு ஒரு சங்கமாக (Society) அல்லது அறக்கட்டளை (Trust) ஆகப் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

நிலம்

மெட்ரிக் பள்ளி தொடங்க உள்ள பதிவு செய்யப்பட்ட அமைப்பின் பெயரில் நிலம் கிரயமாகப் பெற்றிருக்க வேண்டும் அல்லது நிலம் நீண்ட கால ஒப்பந்த அடிப்படையில் (50 வருடத்திற்கு மேற்பட்ட ஒப்பந்தமாக) பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த நிலத்தின் அளவு குறைந்தது ஊரகப் பகுதியாக இருந்தால் 3 ஏக்கர் நிலமும், பேரூராட்சிப் பகுதியாக இருந்தால் 1 ஏக்கர் நிலமும், நகராட்சிப் பகுதியாக இருந்தால் 55 சென்ட் நிலமும் இருக்க வேண்டும்

கட்டிடங்கள்

  1. மெட்ரிக் பள்ளிகளில் தொடக்கத்தில் ஒன்று முதல் ஆறு வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால் ஆறு வகுப்புகளுக்குத் தேவையான கட்டிடங்கள் பாதுகாப்பு வசதிகளுடன் குறிப்பிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதி பெற்று கட்டப்பட்டிருக்க வேண்டும்.
  2. இந்தக் கட்டிடங்களுக்கு கட்டிடங்களுக்கான வரையறுக்கப்பட்ட மற்றும் தமிழ்நாடு அரசால் அனுமதியளிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து கட்டிடத்திற்கான உறுதிச் சான்று பெற வேண்டும்.
  3. இந்த கட்டிடங்களுக்கு பள்ளி அமையவுள்ள பகுதி வட்டாட்சியரிடம் கட்டிடத்திற்கான அனுமதி ( Building License) சான்றிதழ் பெற்றிட வேண்டும்.
  4. இந்தக் கட்டிடங்களில் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருப்பதற்கான சான்றிதழை நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதியாக இருந்தால் குறிப்பிட்ட பகுதியின் சுகாதார ஆய்வாளரிடம் சுகாதாரச் சான்றிதழ் பெற வேண்டும். பிற பகுதிகளுக்கு மாவட்ட அளவிலான சுகாதாரத் துறை துணை இயக்குனர் அலுவலகத்திலிருந்து சான்றிதழ் பெற வேண்டும்.
  5. கட்டிடங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட அளவிலான கோட்டத் தீயணைப்பு அதிகாரியிடம் சான்று பெற வேண்டும்.

ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்கள்

பள்ளிக்குத் தேவையான தகுதியுடய ஆசிரியர் மற்றும் பிற பணியிடங்களுக்கானவர்கள் தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும்.

பள்ளியின் பங்களிப்புத் தொகை

பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி பள்ளிக்கான நிர்வாகத்தின் பங்களிப்பாக அரசுக்கு கரூவூலத்தின் வழியாகப் பணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

  • 500 க்குக் குறைவான எண்ணிக்கையுடைய மாணவர்கள் கொண்ட பள்ளிகள் - ரூபாய் 10,000
  • 500 -லிருந்து 750 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 20,000
  • 750 -லிருந்து 1000 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 40,000
  • 1000 -லிருந்து 1500 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 60,000
  • 1500 -லிருந்து 2000 வரையிலான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 80,000
  • 2000 க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் - ரூபாய் 1,00,௦௦௦ செலுத்த வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்

பள்ளியின் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000/-ஐ அரசுக்கு கரூவூலத்தின் வழியாகப் பணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

ஆய்வுக் கட்டணம்

பள்ளியின் ஆய்வுக்கட்டணமாக ரூபாய் 2500/-ஐ அரசுக்கு கரூவூலத்தின் வழியாகப் பணம் செலுத்தப்பட்டு அதற்கான ரசீது இணைக்கப்பட வேண்டும்.

பள்ளியின் நிதி ஆதாரம்

பள்ளியை நடத்தவிருக்கும் அமைப்புக்கு பள்ளியை நடத்த போதுமான நிதி ஆதாரம் இருப்பதற்கான சான்றாக பள்ளியின் பெயரில் வங்கியில் வகுப்புக்கு 20, 000 ரூபாய் வீதம் நிரந்தர வைப்புத் திட்டத்தில் செலுத்த வேண்டும்.

பள்ளியின் நடப்புச் செலவு நிதி

பள்ளியை நடத்தவிருக்கும் அமைப்புக்கு பள்ளியை ஓராண்டுக்கு நடத்த போதுமான நிதி ஆதாரம் இருப்பதற்கான சான்றாக பள்ளியின் பெயரில் வங்கியில் சேமிப்பு அல்லது நடப்புக் கணக்கில் குறிப்பிட்ட அளவு பணம் சேமிப்பில் வைத்திருக்க வேண்டும்.

அருகிலுள்ள பள்ளிகளின் தடையில்லாச் சான்றிதழ்

பள்ளி அமையவுள்ள இடத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளின் நிலைக்கு ஏற்ப அதன் சுற்றளவிலான பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடமிருந்து இந்த மெட்ரிக் பள்ளி தொடங்க தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். குறிப்பாக அருகிலுள்ள தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களிடம் பெற வேண்டும்.

விண்ணப்பப் படிவம்

விண்ணப்பப் படிவம் முழுவதும் நிரப்பப்பட்ட பின்பு அமைப்பின் செயலாளர் அல்லது பள்ளியின் தாளாளர் அல்லது பள்ளியின் மேலாளர் படிவத்தில் குறிப்பிட்ட உறுதிமொழிக்கு ஒப்புதல் அளித்து கையொப்பமிட வேண்டும். கையொப்பத்தின் கீழ் பள்ளியில் அவருடைய பொறுப்புக்கான முத்திரை இடப்பட வேண்டும்.

விண்ணப்பத்தில் இணைக்க வேண்டியவை

  1. பள்ளியின் விண்ணப்பக் கட்டணமாக ரூபாய் 1000/- கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீது. (உண்மையானது)
  2. பள்ளியின் ஆய்வுக்கட்டணமாக ரூபாய் 2500/-ஐ கருவூலத்தில் செலுத்தியதற்கான ரசீது.(உண்மையானது)
  3. பள்ளிக்கான நிர்வாகத்தின் பங்களிப்பாக கருவூலத்தில் செலுத்தியதற்கான தொகைக்கான ரசீது.(உண்மையானது)
  4. உள்ளாட்சி அமைப்பில் கட்டிடங்களுக்கான அனுமதிக்குப் பெற்ற அனுமதிக் கடிதம் மற்றும் கட்டிடத்திற்கான வரைபட நகல்கள்
  5. தமிழ்நாடு அரசால் அனுமதியளிக்கப்பட்ட பொறியாளரிடமிருந்து பெறப்பட்ட கட்டிடத்திற்கான உறுதிச் சான்று நகல்கள்
  6. வட்டாட்சியரிடம் பெற்ற கட்டிடத்திற்கான அனுமதிச் சான்றிதழ் நகல்
  7. கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள சுகாதார வசதிக்கான சான்றிதழ் நகல்
  8. கட்டிடங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்த கோட்டத் தீயணைப்பு அதிகாரியின் சான்றிதழ் நகல்
  9. பள்ளியின் பெயரில் வங்கியில் செலுத்தப்பட்ட நிரந்தர வைப்பு நிதிச் சான்றிதழின் நகல்
  10. பள்ளியின் பெயரில் வங்கிக் கணக்கில் உள்ள சேமிப்புப் புத்தகத்தின் கணக்கு நகல்.
  11. பள்ளிக்கு அருகிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தடையில்லாச் சான்றிதழ் நகல்கள்
  12. பள்ளிக் கட்டிடத்தின் முன் தோற்றம் மற்றும் விளையாட்டு மைதானத்துடன் சேர்ந்த புகைப்படம், பின் தோற்றம் புகைப்படம்
  13. பள்ளிக் கட்டிடத்தில் செய்யப்பட்டிருக்கும் இரு பாலின மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான இருக்கை வசதிகள், உணவுக்கூட வசதிகள், கழிப்பிட வசதிகள், நூலகம் மற்றும் விளையாட்டு வசதிகள் போன்ற புகைப்படங்கள்
  14. மெட்ரிக் பள்ளிக் கல்வி இயக்குனரகத்தால் அவ்வப்போது செயல்படுத்தப்படும் ஆணைப்படியான தேவைகள்

நகல்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பதிவு பெற்ற அதிகாரிகளிடம் சான்றொப்பம் பெற்று இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பப் படிவம் அனுப்புதல்

மெட்ரிக் பள்ளிக் கல்வி இயக்குனர் முகவரிக்கு விண்ணப்பக் கடிதம் ஒன்றுடன் நிரப்பப்பட்ட விண்ணப்பபடிவம் இரண்டு படிவங்களாகத் தயார் செய்யப்பட்டு, மாவட்ட அளவிலான மெட்ரிக் பள்ளியின் ஆய்வாளருக்கு முதலில் அனுப்பப் பட வேண்டும். விண்ணப்பப் படிவத்துடன் இணைப்புகள் அனைத்தும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மெட்ரிக் ஆய்வாளர் ஆய்வு

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொண்ட மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் விண்ணப்ப் படிவம் கிடைக்கப் பெற்ற சில நாட்களுக்குப் பிறகு விண்ணப்பப் படிவம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட இணைப்புகளை ஆய்வு செய்கிறார். அவை சரியாக இருக்கும் நிலையில் பின் பள்ளியில் ஆய்வு செய்ய ஒரு தேதியைக் குறிப்பிட்டு நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்று அனுப்புகிறார். கடிதத்தில் குறிப்பிட்ட நாளில் பள்ளிக்கான கட்டிடத்தில் நேரடி ஆய்வு மேற்கொள்கிறார். இந்த ஆய்வின் போது விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கப்பட்ட நகல்கள் அனைத்தின் உணமைச் சான்றுகளைப் பார்வையிட்டு அவை சரியாக இருக்கிறதா என்று ஆய்வு செய்கிறார். மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கருதும் நிலையில் அவர் மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனருக்கு ஒரு படிவத்தை இணைந்து பரிந்துரைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கிறார்.

மெட்ரிக் பள்ளி இயக்குனர் அனுமதி

மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் அனுப்பிய பரிந்துரைக் கடிதத்தின் அடிப்படையில் விண்ணப்பப் படிவத்தில் வேறு குறைபாடுகள் எதுவுமிருக்கிறதா என்பதை ஆய்வு செய்து அனைத்தும் சரியாக இருக்கிறது என்று கருதும் நிலையில் அந்த பள்ளி தொடங்குவதற்கான அனுமதியை அளிக்கிறார்.

பிற அனுமதிகளும் அங்கீகாரங்களும்

  1. பள்ளியில் கூடுதல் வகுப்புகளுக்குத் தேவையான கட்டிடம் மற்றும் இதர வசதிகள் செய்யப்பட்டு குறிப்பிட்ட விண்ணப்பப் படிவம் பெற்று தேவையானவைகளை நிறைவு செய்து விண்ணப்பித்துப் பெறலாம்.
  2. ஒன்று முதல் ஆறு வகுப்பு வரை பள்ளிக்கான தொடக்க அனுமதி பெற்ற பிறகு மாணவர்கள் சேர்க்கையைத் தொடங்கி பள்ளியை நடத்தலாம்.
  3. பள்ளியில் மாணவர்கள் சேர்க்கைக்குப் பின்பு பள்ளிக்கான தற்காலிக அங்கீகாரம் கோரி அதற்கான விண்ணப்படிவம் நிரப்பி அனுப்பி தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.
  4. அதன் பிறகு ஏழு முதல் எட்டு வகுப்புகளுக்கு தொடக்க அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  5. அதன் பிறகு எழு முதல் எட்டு வகுப்புகளுக்கான தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.
  6. அதன் பிறகு ஒன்பது மற்றும் பத்து வகுப்புகளுக்கான தொடக்க அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  7. அதன் பிறகு ஒன்பது மற்றும் பத்து வகுப்புகளுக்கான தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.
  8. பின்னர் மேல்நிலை வகுப்புகளுக்கான சில பிரிவுகள் குறிப்பிட்டு தொடக்க அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
  9. அடுத்து மேல்நிலை வகுப்புகளுக்கான தற்காலிக அங்கீகாரம் பெற வேண்டும்.

மெட்ரிக் பள்ளியின் கல்விக் கட்டணம்

தமிழ்நாடு அரசு, மெட்ரிக் பள்ளிகள் மாணவர்களிடம் பெறும் கட்டணத்தை நிர்ணயம் செய்யாததால் கட்டணத்தில் அதிக வேறுபாடுகள் இருந்தன. தற்போது இந்த பதின்மப் பள்ளிகளுக்கான கட்டணங்களை நிர்ணயிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையின் கீழான அமைப்பு ஒன்று நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமச்சீர்க் கல்வி

தமிழ்நாட்டில் முன்பு மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிக் பாடத் திட்டங்கள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது, சமச்சீர்க் கல்வி முறையிலான ஆங்கில வழிப் பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்றன.

மெட்ரிக் பள்ளித் தேர்வுகள்

மெட்ரிக் பள்ளிகளில் மெட்ரிக் எனப்படும் பத்தாம் வகுப்புத் தேர்வும், பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளும் தமிழ்நாடு அரசின் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் அளிக்கப்படுகின்றன.

THANKS FOR எஸ்.பாலசுப்ரமணியன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

ஆதாரம் : எஸ்.பாலசுப்ரமணியன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites