நம் நாட்டின்
பொருளாதாரம் எந்த அளவிற்கு மோசாமாகிக்கொண்டிருக்கிறது எந்த நிலையை நோக்கி சென்று
கொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டுமானால் ஒரு சிறு தொழில் செய்பவருடனோ, சேல்ஸ் வேலையில்
இருப்பவருடனோ கொஞ்ச நேரம் செலவழித்து பாருங்கள் புரியும். ஒரு பொருளை உற்பத்தி
செய்வதற்குள் ஆயிரம் பிரச்சனை. உற்பத்தி முடிந்து அதை விற்பனைக்கு அனுப்பும் போது, வாங்க ஆள் இல்லை.
எனக்கு தெரிந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல பொருட்கள் கடந்த இரண்டு
ஆண்டுகளை விட இந்த ஆண்டு வியாபாரம் கம்மி. அப்படியே நடக்கும் வியாபாரம் கூட
கடனுக்கு தான் நடக்கிறது. பணப்புழக்கம் சுத்தமாக இல்லை. இதற்கெல்லாம் காரணம் நம்மை
ஆட்சி செய்யும் பொருளாதார வல்லுனர்களின் சில அரசியல்/ஓட்டு ஆசைகள் தான். இதை
மைக்ரோ லெவலில் அதாவது நாம் அன்றாடம் பார்க்கும் விசயங்களை வைத்து கொஞ்சம் தெளிவாக
பேசலாம் வாருங்கள்.
பொதுவாக ஒரு
நாட்டில் பணப்புழக்கம் என்பது இரண்டு வழிகளின் மூலம் தான் பெரும்பாலும் நடக்கும்.
ஒன்று அரசின் மூலம்.. அதாவது அரசு தன்னுடைய உள்கட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம்
பணப்புழக்கத்தை கொண்டு வரும். இது பணம் மேல் இருந்து கீழ் பாயும் நிலை.. அரசிடம்
இருந்து கான்ட்ராக்டர் ---> கூலிகள் ----> வியாபாரிகள் என்று ஒவ்வொரு
படிநிலையாக பணம் கைமாறி புழக்கத்தில் இருக்கும். இரண்டாவது வழி சிறு தொழில்
முனைவோர் மூலம். சிறு தொழில் முனைவோரில் விவசாயிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்றுவிட்டு அந்த பணத்தில் தங்களின்
தேவைகளுக்கு செலவு செய்வார்கள். இது கீழிருந்து மேல் போகும் நிலை. அதாவது சிறு
தொழில் முனைவோரிடம் இருந்து வியாபாரி, கச்சா பொருள்
விற்பவன், அரசு என்று மேல் நோக்கி போகும். நம்மை போன்ற நுகர்வோர் இந்த
இரண்டு நிலைகளிலும் நடுவில் இருப்போம்.. அதாவது அரசும் சிறு தொழில் முனைவோரும்
தான் பணப்புழக்கத்தின் ஆரம்பம் மற்றும் கடைசி புள்ளி.. அந்த பணத்தை நடுவில்
இருந்து புழங்கிக்கொண்டிருப்பது நாம் தான். நம் மூலம் தான் அந்தப்பணம்
ஆரம்பப்புள்ளிக்கோ கடைசி புள்ளிக்கோ போகும். அதாவது பணப்புழக்கம் என்பது ஆரம்பமும்
முடிவும் தெரிந்த ஒரு வட்டம்.
சரி இப்போது இதை
ஏன் சொல்கிறேன் என்கிறீர்களா? பிரச்சனையே இந்த வட்டத்தினால் தானே? முதலில்
வட்டத்தின் ஒரு பக்கத்தில் இருக்கும் சிறு தொழில் முனைவோரையும் விவசாயிகளையும்
பற்றி பார்க்கலாம். எங்கள் சிவகாசியை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம். கடந்த
நான்கு வருடங்களாக எங்கும் நிரந்தரமான மின் உற்பத்தியோ, மின் சேவையோ
இல்லை. (நம் அரசுகளின் மோசமான திட்டமிடல் தான் இதற்கு காரணம் என்பது கொசுறு
செய்தி). சிவகாசியில் தீப்பெட்டியும் அச்சுத்தொழிலும் தான் வருமானத்திற்கு ஆதாரம்.
பட்டாசு உற்பத்தியும் முக்கியமான தொழில் என்றாலும், மூலப்பொருட்கள்
விலை உயர்வால் அது கொஞ்சம் டல்லடித்து தான் இருக்கிறது. மின்சாரம் இல்லாததால்
ஜெனரேட்டர் உபயோகிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் ஒவ்வொரு தீப்பெட்டி மற்றும்
அச்சாபிஸ் உரிமையாளர்கள். ஜெனெரேட்டருக்கு மண்ணெண்ணையோ டீசலோ கொட்ட வேண்டும் அதன்
வயிற்றில். இரண்டும் கடந்த சில வருடங்களாக விற்கும் விலையை பார்த்தால் பேசாமல் ஒரு
லிட்டரை வாங்கி அதன் வயிற்றில் ஊற்றாமல் நம் உடம்பில் ஊற்றி பற்ற
வைத்துக்கொள்ளலாம். சரி வேறு வழி இல்லை என்று எங்கள் ஊர் சிறு தொழில் முனைவோர்
ஜெனரேட்டர் உபயோகிக்க ஆரம்பித்தார்கள். ஒரு நாளைக்கு ரெண்டு மணிநேரம், மூன்று மணி நேரம்
என்று இருந்த மின்வெட்டு ஒரு நாளைக்கு 15 மணி நேரம்
என்னும் கின்னஸ் ரெக்கார்டில் வந்து நிற்கிறது. ஒரு நாளில் வரும் 15 மணிநேர
மின்வெட்டு வேலை நேரத்தில் மட்டும் 10மணி நேரம்
போய்விடுகிறது. ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் ஜெனெரேட்டர் போட்டால் பொருளின் விலை
என்னவாகும்? மின்சாரத்தை பயன்படுத்து உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு
பொருளும் இதனால் இரண்டு மடங்கு மூன்று மடங்கு விலை கூடுகிறது.
பொருளின் இந்த
யானை விலை, குதிரை விலையை பார்த்து, ஆர்டர் கொடுத்த
பார்டிகள் பலர் பொருளை வாங்காமலேயே எஸ்கேப் ஆகிவிட்டார்கள். பொருளை வாங்கிய
இன்னும் சிலரோ பாதி பணத்தை கொடுத்துவிட்டு மீதி பணத்தை கொடுக்காமல்
ஓடிவிட்டார்கள். இங்கு எங்கள் சிறு தொழில் முனைவோர்களால் தங்களின் கச்சா பொருள்
உற்பத்தியாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. கச்சா பொருள் விற்பவருக்கு தன்
பொருளுக்கான பணம் கிடைக்காததால் அவரால் தொடர்ந்து பொருட்களை சப்ளை செய்ய
முடியவில்லை. உற்பத்தி பாதிக்கிறது. பொருளின் விலை ஏற்கனவே இருக்கும் மின்சார
பிரச்சனையோடு இந்த கச்சா பொருள் பிரச்சனையும் சேர்ந்து விடுவதால் மீண்டும்
அதிகரிக்கிறது. ஆனால் விலை அதிகமாக இருப்பதால் வாங்க ஆள் இல்லை. உற்பத்தி
செய்யப்பட்ட பொருள் யாருக்கும் பலனில்லாமல் கிட்டங்கியில் தூங்குகிறது. இது
சிவகாசியில் மட்டும் என்று இல்லை. சிறு தொழில் பெருத்திருக்கும் பல நகரங்களிலும்
இது தான் கதை. என்னை பொறுத்தவரை நவீன இந்தியாவின் முதுகெலும்பு சிறு தொழில் தான்.
ஒவ்வொரு சிறு தொழிலும் ஒரு நீரூற்று, ஒரு பொன்
முட்டையிடும் வாத்து. ஆனால் நம் அரசாங்கங்களின் மட்டமான திட்டமிடல்களினாலும், மோசமான
உள்கட்டமைப்புகளினாலும் ஆட்டம் கண்டுகொண்டிருக்கிறது சிறு தொழில் வணிகம்.
இந்த நேரத்தில்
உங்களுக்கு ஒரு டவுட் வரலாம், நாம் ஜெனரேட்டருக்கு ஊத்து ஊத்து என்று எண்ணெயும்
டீசலும் ஊற்றுகிறோமே அந்த பணம் அரசுக்கு தானே போகிறது? அப்போது நமது ’பணப்புழக்க வட்ட
விதி’யின் படி அரசிடம் இருந்து அந்தப்பணம் மக்களுக்கு வந்து
பணப்புழக்கத்தை அதிகரித்து பிரச்சனையை சரியாக்கலாமே என்று.. அப்படி ஒரு டவுட்
வந்தால் உங்களுக்கு என் பாராட்டுக்கள். உங்கள் புத்தி கூர்மையாக இருக்கிறது. ஆனால்
நீங்கள் நினைப்பது போல் நம் நாட்டில் நடக்கவில்லையே!! நம் ஆட்கள் நடக்கவிடவில்லையே? ஏன் எப்படி என்று பின்னர்
கூறுகிறேன்.
நாம் அடுத்து
பார்க்கப்போவது விவசாயம். இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்கிறார்கள். அந்த
விவசாயத்தின் நிலையை கொஞ்சம் பார்ப்போம்.. என்ன பெருமூச்சு? விவசாயம் பற்றி
பேசினாலே மனதில் ஒரு வித சோகம் வந்துவிடுகிறதா? என்ன செய்ய? “விவசாயிகள் வேறு
நல்ல தொழிலை பார்த்து பிழைத்துக்கொள்ளட்டும்” என்று சொல்லும்
பிரதமர் அல்லவா நமக்கு கிடைத்திருக்கிறார்? விவசாயத்திற்கும்
அதே மின்சார பிரச்சனை தான். டெல்டா பகுதியை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும்
கிணற்றுப்பாசனம் தான். மின்சாரம் இல்லாததால் எங்கும் பயிர் சரி வர விளையவில்லை.
கர்நாடகாக்காரன் நம்மை பிச்சைக்காரனை விட கேவலமாக நடத்தி, டெல்டா
பகுதிகளையும் மலடாக்கிவிட்டான். முழுதாக விளைந்தாலே முதலுக்கு மோசமில்லை என்பது
தான் விவசாயியின் நிலை. ஆனால் இந்த முறை ஒன்றுமே இல்லை. உர மானியம் ரத்து, பூச்சுக்கொல்லியின்
விலை அதிகரிப்பு, மின் தட்டுப்பாடு, மழை பொய்ப்பு, தண்ணீர்
தட்டுப்பாடு என்று விவசாயம் சரியான அடி வாங்கியிருக்கிறது. டெல்டா பகுதியில்
தரையில் இருந்து 5அடி தோண்டினாலே நீர் வரும் பகுதியில் வசிக்கும் என் டீலர்
ஒருவரது வயலில் வழக்கமாக 100மூடை நெல் விளையுமாம் போன வருடம் வரை. இந்த வருடத்தில் போன
வாரம் தான் அறுப்பு முடிந்திருக்கிறது. எத்தனை மூடை நெல் வந்தது தெரியுமா? 35 மூடைக்கு கொஞ்சம்
கம்மி.. முப்பத்தி நாலே முக்கால் மூடை.. இன்று என் முன் தான் அளந்து
கொண்டிருந்தார். ஆனால் செலவுக்கணக்கை பார்த்தால் 100 மூடைக்கும்
அதிகமான செலவு.’என்ன பண்ண சார்? நஷ்டம் வந்தாலும்
எங்களால விவசாயத்த விட முடியாது’ - இது என் டீலரின் பதில் மட்டும் அல்ல, செத்துப்போகும், அடுத்து
செத்துக்ப்போக வரிசையில் நிற்கும் ஒவ்வொரு விவசாயியின் பதிலும் இது தான்..
ஆக
பணப்புழக்கத்திற்கு ஒரு வகையில் ஆதாரமாக இருக்கும் சிறுதொழில்களும் விவசாயமும்
இந்த ஆண்டு மிக மிக மோசமான நிலையில் வீழ்ந்துவிட்டன. இன்னொரு பக்கம் ஆதாரமாக
இருக்கும் அரசாங்கம் என்ன செய்திருக்கிறது என்று பார்ப்பதற்கு முன், நடுவில்
இருக்கும் நம்மை போன்ற சாதாரண மக்களைப்பற்றி பார்த்துவிடலாம். ஏனென்றால் நாம்
பணப்புழக்கத்திற்கு ஆதாரமோ முடிவோ இல்லை. அப்படியென்றால் நம் கையில் போன வருடம்
இருந்த பணம் தானே இப்போதும் புலங்க வேண்டும்? அதனால் நம்மை
பற்றி பார்ப்போம்.
உங்கள் ஊரில்
நான் சொல்லும் தொழில்கள் எல்லாம் இப்போது இருக்கின்றனவா என உங்கள் மனதில் லேசாக
ஓட்டிப்பாருங்கள். செருப்பு தைப்பது, கிழிந்த துணி
தைப்பது, குடை ரிப்பேர் செய்வது, டிவி ரிப்பேர்
செய்வது, சிறு மின் சாதனங்களான டியூப் லைட், மின்விசிறி
ரிப்பேர் பார்ப்பது, ஒழுகும் பைப்பை அடைக்கும் ப்ளம்பிங் வேலை, சிறு மர வேலை, கட்டிலுக்கு
வயர்/நார் பின்னுவது.. இது எதாவது இருக்கிறதா இன்னும் உங்கள் ஊரில்? என்ன ஞாபகம்
இல்லையா? முன்பெல்லாம் (ரொம்ப வருசத்துக்கு முன்னாடியெல்லாம் இல்லை, ஜஸ்ட் 5வருடங்களுக்கு
முன்பு வரை) எங்கள் தெருவில் தினமும் குடை ரிப்பேர் செய்பவரும், கிழிந்த துணி
தைப்பவரும் வருவார்கள். கிழிந்த துணியையும் செருப்பையும் தைக்க ஒரு சிறு ஏரியாவே
உண்டு எங்கள் ஊரில். இப்போது தான் நாம் எல்லாமே புதுசாக வாங்கி விடுகிறோமே? டிவியில்
பிரச்சனையா? புது டிவி.. செருப்பு அறுந்துவிட்டதா? புது செருப்பு..
லைட்டு ஃபேனில் பிரச்சனையா? புது லைட்டு.. இதெல்லாம் கடந்த 5,6 வருடங்களில் வந்த
மாற்றங்கள். இதனால் சிறு வேலை செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டார்கள்.
எங்கேவாது ஒரு சிலர் அப்படியே கிடைத்தாலும் அவர்களின் கூலி அதிகம். எல்லோரும்
இன்று ஓரளவுக்கு படித்திருப்பதும் இது போன்ற சின்ன சின்ன வேலைகளுக்கு ஆட்கள் கிடைக்காததற்கு
காரணம். ஆள் கிடைக்காததால் தொழில் தெரிகிறதோ இல்லையோ, அந்த தொழிலை
செய்ய எவனோ ஒருவன் வந்து விண்ணை முட்டும் கூலி கேட்பான்.
நாமும் எல்லா
முறையும் புது டிவியோ, புது செருப்போ வாங்கி விட முடியாது. வீட்டில் குழாய்
ஒழுகுகிறது. மொத்தமாக குழாயை எடுத்துவிட்டு புதுசாக மாட்ட முடியுமா? ஆனால் அந்த சின்ன
ரிப்பேருக்காக நீங்கள் ப்ளம்பரை கூப்பிட்டால் அவர் தெனாவட்டாக சொல்வார், “இந்த மாதிரி
சின்ன வேலைக்குலாம் வரதில்ல.. நீங்க எனக்கு ஒரு நாள் கூலி குடுத்தீங்கன்னா வாரேன்”.. சரி அவரின் ஒரு
நாள் கூலி என்ன என்று கேட்கிறீர்களா? வெறும் 500ரூபாய் தான்!!!!!
ஒரு மணி நேர வேலைக்கு அந்த காசை கொடுக்க நீங்கள் ஒத்துக்கொண்டாலும் அவர் உடனே வர
மாட்டார். ஒரு வாரம் உங்களை பழனிக்கு பால் காவடி எடுக்க வைத்துவிட்டு தான்
வருவார். சென்னையில் இருப்பவர்களுக்கு இது தெரியுமா என்று தெரியவில்லை. சிறு நகரங்களில்
இருப்பவர்களுக்கு இது நன்றாக தெரியும். இன்று ஒரு சித்தாளின் கூலி 200ரூபாய்..
கொத்தனார்களின் கூலி, 450ல் இருந்து 600ரூபாய் வரை.
கிட்டத்தட்ட B.E. முடித்து வேலையில் சேரும் ஒரு இன்ஜினியரும் ஒரு கொத்தனாரும்
மாதம் ஒரே அளவு சம்பாதிப்பார்கள். போன வருடத்திற்கும் இந்த வருடத்திற்கும் இது
போல் உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட வேலைக்கு மட்டும் கூலி கிட்டத்தட்ட இரண்டு மடங்கு
கூடியிருக்கிறது. ஆனாலும் ஆள் கிடைப்பதில்லை. நுகர்வோர் நம்மின் சம்பளம் போன
வருடத்திற்கு இந்த வருடம் எவ்வளவு கூடியிருக்கிறது? அதாவது நம்
கையில் போன வருடம் இருந்த அதே பணம் தான் இப்போதும் இருக்கிறது, ஆனால்
பொருட்களின் விலையும் கூலியும் அசுர வேகத்தில் கூடிவிட்டன. ஒரு பக்கம் பொருளின்
விலையேற்றம், மற்றொரு பக்கம் வேலையாட்கள் தட்டுப்பாடு+கூலி உயர்வு..
அதனால் பணப்புழக்க வட்டத்தில் இடையில் இருக்கும் நாமும் சென்ற வருடங்கள் போல்
இப்போது பணத்தை செலவழிக்க முடியவில்லை. செலவழித்தாலும் சரியான பலன் இருபப்தில்லை.
சரி இப்போது நம்
பணப்புழக்க வட்டத்தின் ஆரம்ப புள்ளியான அரசாங்கத்தை பற்றி பார்ப்போம். முதலில் நம்
மதிப்பிற்குரிய மத்திய அரசின் பணப்புழக்கம் பற்றி. நாம் கொடுக்கும் வரி, பெட்ரோல்
டீசலுக்கு அழும் தண்டம் என்று மத்திய அரசுக்கு நல்ல வருமானம் தான். சும்மா எண்ணெய்
நிறுவனங்கள் நஷ்டம் நஷ்டம் என்று சொன்னாலும் ஒவ்வொரு எண்ணெய் நிறுவனத்தின் பேலன்ஸ்
ஷீட்டும் உண்மையை பேசிவிடுகிறது. பின்னே, இவ்வளவு மக்கள்
தொகையும் வாகன போக்குவரத்தும் இருக்கும் தேசத்தில் பெட்ரோலிய பொருட்களுக்கு எப்படி
நஷ்டம் வரும்? வரியின் மூலமும் பெட்ரோலிய பொருட்களின் மூலமும் வரும்
வருமானத்தை கொண்டு மக்களின் வாழ்க்கை தரத்தையும் பணப்புழக்கத்தையும் எவ்வளவோ
மேம்படுத்தியிருக்கலாம் நம் மத்திய அரசு. ஆனால் என்ன செய்தார்கள் நம் மத்திய
அரசில் இருக்கும் வெளிநாட்டு பல்கலையில் பொருளாதார பட்டம் பெற்ற இருவர்?
ஒரு சூப்பர்
திட்டத்தை கொண்டு வந்தார்கள். இந்த 100 நாள் வேலை
வாய்ப்பு என்பது விவசாயம் இல்லாத கிராமங்களில்/விவசாயம் இல்லாத நேரங்களில்
கிராமவாசிகளிக்கு வருமானம் கிடைக்க கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படும் திட்டம்.
ஆனால் நிஜத்தில் இவை தான் விவசாயத்தையே அழிக்கின்றன. ‘கலகலப்பு’ படத்தில்
சந்தானம் சொல்வாரே, “டேய் நீ குடவுன்ல இருக்குற மூட்டைய தென்னந்தோப்புல
போட்டிரு.. நீ தென்னந்தோப்புல போடுற மூட்டைய எடுத்து திரும்ப குடவுன்லயே போட்டிரு..
குடுத்த காசுக்கு உங்களுக்கு எதாவது வேல குடுக்கணும்ல?” என்று.. அது போல்
தான் நம் 100 நாள் திட்டமும். ஏரியை சுத்தம் செய்கிறோம் என்று மண்ணை
அள்ளுவார்கள் இன்று.. மறுநாள் ஏரியை சமப்படுத்துகிறோம் என்று அதே மணலை மீண்டும்
அங்கேயே கொட்டிவிடுவார்கள். இது கூட பரவாயில்லை. பல இடங்களில் காலையில் இருந்து
சும்மாவே அமர்ந்திருப்பார்கள். மாலையில் கூலி 70ல் இருந்து 80ரூபாய் வரை
உங்களை தேடி வரும். ஆம் மொத்த பணம் 100ரூ கிடைக்காது.
கமிசன் பிடித்துக்கொண்டு தான் கொடுப்பார்கள். ஒருவன் இப்படி ஒன்றுமே செய்யாமல் 70ரூ சம்பாதிக்க
நினைப்பானா அல்லது வயலுக்கு வந்து காலையில் இருந்து மாலை வரை முதுகு வலிக்க
வெயிலில் உழன்று 100ரூ சம்பாதிக்க நினைப்பானா? அப்படியே
விவசாயத்திற்கு ஆள் வந்தாலும் கூலி குறைந்தது 200ரூ.. பின்
விவசாயம் எப்படி வளரும்?
அரசாங்கம் நாம்
கொடுக்கும் பணத்தை முறையாக அதை பெருக்கும் வழியில் செலவழிக்காமல் இப்படி ஓசிக்கு
கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவன் அந்த 70ரூபாயோடு
திருப்திப்பட்டுக்கொண்டும் இலவசங்களை அனுபவித்துக்கொண்டும் தானும் முன்னேறாமல்
மொத்த முன்னேற்றத்தையும் கூட தடுக்கிறான். அவனால் விவசாயம் தடைபடுகிறது.
பொருளாதாரமே கூட கொஞ்சம் ஆட்டம் காணுகிறது. ஆனால் இந்த 100நாள் வேலை
வாய்ப்பு திட்டத்தை நம் காங்கிரஸ் அரசு ரொம்ப பெருமையாக பேசுகிறது. ஆனால் நாட்டில்
பாதி விவசாயத்தை கொன்றதே இவர்களின் இந்த திட்டம் தான். அதுவும் போக ஒரு சோம்பேறி
சமுதாயத்தை உருவாக்குகிறது. பொருளாதாரத்தில் ”மக்கள் தொகை
அதிகரிப்பால் மொத்த வளர்ச்சியும் சிதைந்துவிடும்” என்று மால்தஸ்
சொல்லியிருப்பார் தன்னுடைய Malthusian Theory of Populationல். ஆனால் அவரின்
மக்கள் தொகை தியரியை மறுத்து சொன்னவர்கள் கூறிய அற்புதமான வாக்கியம், ”ஒவ்வொரு
குழந்தையும் பிறக்கும் போது ஒரு வாயுடன் தான் பிறக்கிறது. ஆனால் அதற்கு இரண்டு
கைகளும் இரண்டு கால்களும் இருக்கிறன்றன. அதனால் எப்படியும் தானும் உழைத்து
பொருளாதாரத்தையும் பெருக்கும்” என்று.. ஆனால் நம் அரசாங்கம் இங்கு நமக்கு கையும்
காலும் இருப்பதை மறந்து தினமும் 70ரூபாயும் 80ரூபாயும் பிச்சை
போட்டுக்கொண்டிருக்கிறது. நாமும் சொகுசாக தின்று விட்டு நம்மோடு சேர்த்து
இன்னொருவனின் பிழைப்பை மறைமுகமாகவும் நாட்டின் வளர்ச்சியை நேரடியாகவும்
கெடுக்கிறோம்..
சரி மத்திய அரசு
தான் இப்படி என்றால் மாநில அரசு அதை விட ஒரு படி மேலே இருக்கிறது. மத்திய அரசுக்கு
எப்படி வரியும், பெட்ரோலும் கை கொடுக்கிறதோ, மாநில அரசுக்கு
அதை விட அதிகமாக கை கொடுப்பது TASMAC.. TamilNadu State Marketing Corporation என்பதன்
சுருக்கம் தான் நம் டாஸ்மாக். ஆனால் அவர்கள் என்ன மார்க்கெட்டிங் செய்கிறார்கள்? ஊரையே குடிகாரன்
ஆக்குகிறார்கள். சாராயக் கடை வருமானத்தை நம்பித்தான் அரசே இயங்கிக்கொண்டிருக்கும்
சூழல் இங்கு.. அகில இந்திய அளவில் நம் டாஸ்மாக் மூன்றாவது அதிக வருமானம்
கொடுக்கும் ஒரு மாநில அரசின் ஸ்தாபனம். முதல் இரண்டு இடத்தில் மராட்டிய
மின்துறையும் குஜராத்தின் ஒரு துறையும் இருக்கின்றன. கிட்டத்தட்ட ஆண்டுக்கு 18000கோடி ரூபாய், நம் குடிகார
ஜனங்களால் நம் மாநில அரசுக்கு கிடைக்கிறது.. சரி இவ்வளவு வருமானம் கிடைக்கிறதே, அதை மக்களின்
முன்னேற்றங்களுக்கு பயன் படுத்தும் விதத்திலோ வேலை வாய்ப்பை பெருக்கும் விதத்திலோ
பயன்படுத்தினார்களா என்றால் இல்லை. இலவச டிவி, இலவசை மிக்ஸி, இலவச கிரைண்டர், இலவச ஃபேன், இலவச அரிசி, இலவச கேஸ்
அடுப்பு, இலவச லேப்டாப் (இந்த கட்டுரையை கூட நான் இலவச லேப்டாப்பில்
தான் பதிவேற்றிக்கொண்டிருக்கிறேன்) என்று எங்கும் இலவசம். இன்னும் நம் அரசாங்கம்
விடலை பசங்களுக்கு கேர்ள் ஃப்ரெண்ட்ஸ்களை தான் இலவசமாக தரவில்லை என்று
நினைக்கிறேன்.. ஒருவனுக்கு நல்ல கல்வியை இலவசமாக கொடுத்துவிட்டால் வருங்கால
சமுதாயமே சிறந்து விளங்கும் என்று நினைத்த காமராஜர் எங்கே? கல்வியை தவிர
எல்லாவற்றையும் இலவசமாக கொடுத்து ஒரு சமுதாயத்தையே சோம்பேறியாக்கும் இவர்கள் எங்கே?
ஒருவன் வேற்று
ஜாதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். அந்த பெண் கொஞ்சம் படித்திருக்கிறது
என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனுக்கு அரசு திருமணத்திற்கு மானியம் கொடுக்கும், தாலிக்கு தங்கம்
கொடுக்கும், அடுத்து அவர்களுக்கு பசுமை வீடு கொடுக்கும், ரேசன் அரிசி, டிவி, மிக்ஸி, கிரைண்டர், ஃபேன், கேஸ் அடுப்பு, etc.. ஒரு
குடும்பத்தலைவன் என்று அவன் எதற்கு இருக்கிறான் என்று யாருக்குமே தெரியாது? பேசாமல் ஒவ்வொரு
குடம்பத்திற்கும் இலவசமாக குடும்பத்தலைவனையும் கொடுத்துவிட்டால் எல்லா ஆணும்
வீட்டிற்கே வராமல் சொகுசாக நிம்மதியாக டாஸ்மாக்கிலேயே பொழுதை கழித்துவிடுவான்..
இலவசம்
கொடுப்பதால் ஏழைகளின் வாழ்வாதாரம் முன்னேறுகிறது என்று சிலர் சொல்வார்கள்.. எப்படி
முன்னேறும்? இலவசமாக கொடுத்த பொருட்களில் பாதி மின்சாதன பொருட்கள். ஒரு
நாளில் முக்கால்வாசி நேரம் மின்வெட்டு. மின்சாரம் இருக்கும் நேரத்தில் இலவச
அரிசியையும் 100நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் கிடைத்த காசில் கொஞ்சம்
காய்கறியும் வாங்கி தின்றுவிட்டு, டிவியில் சினிமா பாட்டை பார்த்துக்கொண்டே
தூங்கிக்கொண்டிருக்கிறான் நம் நாட்டின் குடிமகன். அங்கு தூங்குவது அவன் மட்டும்
அல்ல. ஒருவனின் productivity அதாவது உற்பத்தித்திறன் அங்கு தூங்குகிறது. அவன் மூலம் அவன்
குடும்பத்திற்கும் இந்த நாட்டிற்கும் கிடைக்கப்போகும் வருமானம் தூங்குகிறது. நம்
பொருளாதாரம் தூங்குகிறது. மொத்தத்தில் சோம்பேறி குடிமக்களை உருவாக்கி, அவர்களை குடிக்கு
அடிமைப்படுத்தி எதிர்காலத்தை பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் நம் பொருளாதாரத்தை
நாசமாக்கும் வேலையை மத்திய அரசும் மாநில அரசும் தெளிவாக செய்கின்றன.
இப்படி ஒருவர்
குடித்துவிட்டு தூங்குவதால், சிறு தொழில் முனைவோருக்கும், விவசாயம்
செய்வதற்கும் ஆட்கள் கிடைப்பதில்லை.. ஆட்கள் கிடைக்காததால் பொருட்களின் உற்பத்தி
பாதிக்கிறது..இது பொருளின் விலையை உயர்த்துகிறது. அரசு தன் பணத்தை எல்லாம்
இலவசங்களுக்கு தாரை வார்ப்பதால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து பொருளை வாங்க
முடியாத சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். பணப்புழக்கம் குறைவதால் பணவீக்கம்
அதிகரிக்கிறது.. பண வீக்க அதிகரிப்பால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது. அரசு
அக்கறை இல்லாமல் இலவசத்தை தொடர்கிறது. இலவசத்தை பெற்று குடிமகன் உழைக்காமல்
எப்பவும் போல் தூங்கிக்கொண்டிருக்கிறான். அதனால் மீண்டும் வேலைக்கு ஆள்
கிடைப்பதில்லை. ஆள் கிடைக்காததால் பொருளின் விலை இன்னும் கூடுகிறது.. இப்படியே இது
ஒரு வட்டமாக மீண்டும் மீண்டும் சுற்றுகிறது.. ஒவ்வொரு முறை சுற்றும் போதும்
பொருளின் விலை இன்னும் கூடுகிறது, நமது வாங்கும் சக்தி இன்னும் குறைகிறது, ரூபாயின் மதிப்பு
இன்னும் வீழ்கிறது, பண வீக்கம் இன்னும் அதிகரிக்கிறது. மொத்தத்தில் நம்
பொருளாதாரம் சீரழிகிறது.. இதை தடுக்க ஒரே வழி, தங்களின் பெரிய
சாதனையாக மத்திய அரசு கூறிக்கொண்டிருக்கும் 100 நாள்
வேலைவாய்ப்பு திட்டத்தையும், மாநில அரசு பீற்றிக்கொண்டிருக்கும் இலவசத்தையும்
நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும்.. செய்வார்களா நம்அரசியல்வாதிகள்???????
ஹலோ தற்கொலை செஞ்சுக்கனும் என்ன பூச்சிமருந்து சாப்பிடனும்னு..சொல்லமுடியுமா..?