இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பேக்கரி தொழில். Show all posts
Showing posts with label பேக்கரி தொழில். Show all posts

Thursday, July 13, 2023

பேக்கரி தொழில்

 முந்தைய காலத்தில் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட கேக், திருமணங்கள், அலுவலகக் கொண்டாட்டங்கள், முக்கிய பண்டிகை தினங்கள் எனப்

பல நிகழ்ச்சிகளிலும் அத்தியாவசிய உணவுப் பொருளாக மாறிவிட்டது. பல்வேறு பேக்கரிகளில் ரசாயன சேர்மானங்கள் சேர்த்து கேக், சாக்லேட் தயாரிக்கப்படுவதாகப் பலரும் ஆதங்கப்படும் நிலையில், அதற்கு மாற்றாக உடலுக்குக் கெடுதல் ஏற்படுத்தாத கேக் வகைகளை நாடுவோர் அதிகரித்து வருகின்றனர். நான் வசிக்கும் பகுதியிலேயே 20 பேர் வீட்டில் இருந்தபடியே கேக் தயாரிக்கின்றனர். எனக்குத் தெரிந்தே சென்னையில் நூற்றுக்கணக்கானோர் இந்தத் தொழிலில் இருக்கின்றனர். ஆனால், எல்லோருக்குமே ஆர்டர்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத் தரப்பினரும் விருப்பும் கேக், சாக்லேட் தயாரிப்பில் தரத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தால் ஆர்டர்கள் எப்போதும் தடையின்றி கிடைக்கும்.

நிலையான வெற்றிக்கு!

எத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும், ஒவ்வொரு முறையும் கேக் தயாரிப்பில் மாறுபாடுகள் வரும். அதற்குப் பயன்படுத்திய பொருள்கள், தயாரிப்பு முறை, கேக்கில் வெப்பநிலை மாறுபாடு எனக் காரணங்கள் வேறுபடலாம். எனவே, ஒவ்வொரு முறையும் மிகுந்த கவனத்துடனும் பக்குவத்துடனும் கேக் தயாரிப்பை மேற்கொள்ள வேண்டும். அதேபோல, புதுப்புது ரெசிப்பிகள், ஃப்ளேவர்களைத் தயாரிக்க வேண்டும். அப்போதுதான் போட்டிச்சூழலை மீறி இந்தத் தொழிலில் பல ஆண்டுகளுக்கு நிலையான வெற்றி வாய்ப்புகளை உறுதி செய்ய முடியும். பண்டிகை, பிறந்த நாள், திருமண நாள் போன்று ஆர்டர்களுக்கு ஏற்ப புதுமையான டிசைன்களில் கேக் தயாரித்துக் கொடுப்பதும் நமக்கான தனித்துவத்தை உயர்த்தும்.

விற்பனையைவிட வாடிக்கையாளர் நலன் முக்கியம்!

மைதாவுக்கு மாற்றாக ஆட்டா மாவிலும் சிறுதானிய மாவிலும் கேக் தயாரிப்போர் அதிகரித்துவிட்டனர். அதிலும்கூட பலருக்கு உடன்பாடு இல்லாததால், கீன்வா (Quinoa) பயன்பாடு அதிகரித்து விட்டது. சிலர் க்ரீம் வேண்டாம் என்பார்கள். அவர்களுக்கு க்ரீம் இல்லாத பிரத்யேக கேக் வகைகளைத் தயாரிக்கலாம். சர்க்கரையைத் தவிர்க்க நினைப்பவர்களுக்கு மைதா மற்றும் சர்க்கரை சேர்க்காமல் பிரத்யேக ‘சுகர் ஃப்ரீ’ சர்க்கரை, பேரீச்சை, வாழைப்பழம், தேன் உள்ளிட்ட பொருள்களைச் சேர்த்து கேக் தயாரிக்கலாம்.

முதலீடு: குடும்பத்தினர், தெரிந்தவர்கள் பலருக்கும் சோதனை முயற்சியாக கேக் தயாரித்துக் கொடுத்து, சாதக, பாதக விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம். பிறகு, விற்பனை ரீதியாகச் செல்லலாம். வீட்டில் இருந்தபடியே மாதம் சில ஆயிரம் ரூபாய் முதலீட்டில் நிலையான ஆர்டர்கள் எடுத்துச் சிறப்பான வருமானம் ஈட்டலாம்.



பயிற்சி: ஒருநாள் பயிற்சி வகுப்புகள், ஆன்லைன் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். யூடியூப் பார்த்து கேக், சாக்லேட் செய்யவும் கற்றுக்கொள்ளலாம்.

பேக்கிங் தொழிலுக்குத் தேவையானவை: மைக்ரோவேவ் அவன், சமையல் பாத்திரங்கள், ஹேண்ட் பிளெண்டர், மைதா அல்லது ஆட்டா, பால், சர்க்கரை, உலர் பழங்கள் உள்ளிட்ட கேக் தயாரிப்புக்கான அடிப்படையான உணவுப் பொருள்கள்.

விற்பனை வாய்ப்பு: நம் தயாரிப்பு கேக், சாக்லேட்டுகளை போட்டோ எடுத்துச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட வேண்டும். கேக், சாக்லேட் தயாரிப்பில் அதிக அனுபவம் இருந்தால், குழுவாகப் பல நபர்களுக்கும் அல்லது தனி நபருக்கும் பயிற்சி வகுப்புகள் எடுத்தும் வருமானம் ஈட்டலாம். உணவுக் கண்காட்சிகளில் பங்குபெற்றும் வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தலாம்.

நோட் பண்ணுங்க!

எந்த ஆர்டராக இருந்தாலும் நிச்சயம் அவர்களிடம் ஃபீட்பேக் கேட்க வேண்டும். டெலிவரி செய்த கேக், வாடிக்கையாளருக்குப் பிடிக்கவில்லை என்ற பதில் கிடைத்தால், தயங்காமல் கட்டணம் இன்றி மற்றொரு கேக் கொடுத்து அவர்களைத் திருப்திபடுத்த வேண்டும். மற்றவர்களைப் பின்தொடராமல் நம் தயாரிப்புக்குத் தனி அடையாளம், பிராண்டு மதிப்பு கிடைக்கும்படி அனுபவம் பெற வேண்டும். அவ்வப்போது ஆஃபர்கள் அறிவிக்கலாம். தரமான மூலப்பொருள்களைக் கொண்டு தயாரித்தால், அதிக விலைக்கும் வாங்கவும் வாடிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். ஒரு ஸ்பூன் கெட்டித்தயிர் சேர்த்தால் கேக் சாஃப்ட்டாக வரும். சிறிதளவு காபி தூள் சேர்த்தால் சாக்லேட் கேக் சுவையாக இருக்கும்.

* பேக்கிங் தொழிலுக்கான ஆலோசனை மற்றும் பயிற்சிகள் பெற, ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

Saturday, June 9, 2012

கேக் செய்து விற்கலாம்

குழந்தைகளின் விருப்ப உணவுகளில் கேக்குகளுக்கு முதலிடம். உடல்நலமில்லாதவர் மட்டுமின்றி, எல்லா வயதினருக்கும் அவசரத்துக்குப் பசியாற்றும் உணவு பன்னும் பிரெட்டும். ‘‘எல்லா வீடுகளிலும் இந்த இரண்டுக்கும் தேவை இருக்கும்போது, ஏன் கடைகளில் வாங்க வேண்டும்? வீட்டிலேயே செய்யலாமே’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த நிர்மலா ராமச்சந்திரன்.

கேக், பன், பிரெட், பிஸ்கெட், பஃப் என பேக்கரி அயிட்டங்கள் அத்தனையும் செய்வதில் நிபுணியான நிர்மலா, இவற்றைக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு லாபகரமான எதிர்காலம் காத்திருப்பதாகச் சொல்கிறார்.

‘‘பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை நானும் சாதாரண ஹவுஸ் ஒயிஃப்தான். பொழுதுபோக்கா பேக்கரி பயிற்சி கத்துக்கிட்டேன். குழந்தைங்களோட பிறந்த நாள், எங்களோட கல்யாண நாளைக்கெல்லாம் என் கைப்பட கேக், பஃப்ஸ் பண்ணுவேன். கடைல வாங்கறதை விட, வீட்ல செய்யறது சுவையோடவும், செலவு குறைவாகவும் இருக்கிறது தெரிஞ்சு, அக்கம்பக்கத்துல உள்ளவங்க பார்ட்டிகளுக்கு ஆர்டர் கொடுக்க ஆரம்பிச்சாங்க. இன்னிக்கு பிறந்த நாள், கல்யாணம், பார்ட்டினு மாசத்துல 30 நாளும் நான் பிசினஸ்ல பிசி...’’ என்கிற நிர்மலா, மற்றவர்களுக்கும் வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?

‘‘பேக்கரி அயிட்டங்கள் பண்றதுக்கு ஓடிஜி வசதியுள்ள மைக்ரோவேவ் பெஸ்ட் (விலை ரூ.5 ஆயிரத்திலிருந்து). அது முடியாதவங்க கன்வெக்ஷன் வசதியுள்ள மைக்ரோவேவ் ஓவன் (ரூ.4 ஆயிரத்திலிருந்து) வாங்கலாம். அதுவும் முடியாவங்களுக்கு, கேஸ் அடுப்புல வைக்கக்கூடிய சிம்பிளான கேக் பாத்திரம் கிடைக்குது. அது 200 ரூபாய்தான். கேக் அச்சு, தட்டு, மத்த பொருள்கள்னு எல்லாத்துக்கும் சேர்த்து 1,000 ரூபாய் முதலீடு தாராளம்.’’

எத்தனை வெரைட்டி?என்ன ஸ்பெஷல்?

‘‘கேக், பிஸ்கெட், குக்கீஸ், ரோல்ஸ், பாஸ்ட்ரீஸ், பஃப்ஸ்னு வெரைட்டி எக்கச்சக்கம். கடைகள்ல வாங்கறப்ப, அவங்க ஏற்கனவே செய்து வச்சதுலேர்ந்துதான் செலக்ட் பண்ண முடியும். பெரும்பாலான கடைகள்ல டால்டா, மார்ஜரின் உபயோகிக்கிறாங்க. அது உடம்புக்கு நல்லதில்லை. வீட்ல வெஜிடபுள் ஆயில் உபயோகிச்சு, ஃப்ரெஷ்ஷான பழங்களையும், பழச்சாறுகளையும் வச்சு பண்ணலாம். கொழுப்பும், இனிப்பும் கம்மியா இருக்கிற மாதிரி பண்ணலாம். ஐசிங் இல்லாமலும் செய்யலாம். விருப்பமான சுவைல செய்ய முடியுங்கிறதுதான் எல்லாத்தையும் விடஹைலைட்!’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?

‘‘பிறந்த நாள் பார்ட்டிகளுக்கு ஆர்டர் எடுத்தாலே வருஷம் முழுக்க பிசினஸ் இருக்கும். சின்னச் சின்ன கடைகளுக்கு சப்ளை பண்ணலாம். கண்காட்சிகள்ல ஸ்டால் போட்டா, ஒரே நாள்ல வித்துடும். ஆரம்பத்துல மூணுல ஒரு பங்கும், போகப்போக பாதிக்குப் பாதியும் லாபம் கிடைக்கும்.’’
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
தேவையான பொருள்கள்:
முந்திரிப் பருப்பு – 3/4 கப்
பாதாம் பருப்பு – 3/4 கப்
கடலை மாவு – 1 டேபிள்ஸ்பூன்
பால் – 3/4 லிட்டர்
சர்க்கரை – 1 1/2 கப்
நெய் – 1 கப்
ஏலக்காய் – 5

செய்முறை:
  • பாதாம் பருப்பை வெந்நீரில் 10 நிமிடம் ஊறவைத்து தோல்நீக்கி, காயவைத்துக் கொள்ளவும்
  • முந்திரி, பாதாம் பருப்பை மிக்ஸியில் மென்மையாகப் பொடித்துக்கொள்ளவும்.
  • பாலை அடுப்பில் வைத்து சேர்ந்தாற்போல் திரிதிரியாய் வரும் பதத்திற்குக் காய்ச்சிக்கொள்ளவும். (முற்றிலும் இறுகவேண்டாம்.)
  • அதே நேரத்தில் இன்னொரு அடுப்பில் வாணலியில் சர்க்கரையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, (தேவைப்பட்டால் சர்க்கரை கரைந்ததும் சிறிது பால்சேர்த்து அழுக்கு நீக்கி) ஒற்றைக் கம்பிப் பதத்திற்கு பாகு காய்ச்சவும்.
  • பாகு வந்தவுடன் பருப்புப் பொடிகள், கடலைமாவை சிறிது சிறிதாகத் தூவிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.
  • எல்லாப் பொடியும் கலந்து, கலவை சேர்ந்தாற்போல் வரும்போது, பால்கோவாவையும் கலந்து கிளறவும்.
  • ஏலப்பொடி தூவி, நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து, தொடர்ந்து கிளறவும்.
  • நெய் பிரிந்து, கலவை ஒட்டாமல் சேர்ந்துவரும்போது நெய்தடவிய தட்டில் கொட்டி, லேசான சூடு இருக்கும்போதே வில்லைகள் போட்டு, ஆறியதும் எடுத்துவைக்கவும்
  • xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Sunday, May 20, 2012

பிஸ்கட் தயாரிப்பு!

நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.

தவிர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன.


சந்தை வாய்ப்பு!

பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், கிராமப்புற மற்றும் மிகச்சிறிய நகரங்களின் சந்தையை லோக்கல் தயாரிப்புகள்தான் கைகளில் வைத்திருக்கின்றன. புதிதாக தொழிலில் இறங்கும்போது இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சுலபம். முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது. 50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.

தயாரிப்பு முறை!

சுலபமான தயாரிப்பு முறைதான். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி,போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகுடவ் மெஷின்மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடை
தரக்கட்டுபாடுத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.



உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.

நிலம் மற்றும் கட்டடம்!

இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். நிலமாக வாங்கி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, கட்டடமாக வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கும் இடத்துக்கேற்ப விலை நிலவரம் இருக்கும். பிஸ்கெட் தயாரிக்க 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன் படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25லட்சம் வரை செலவாகும்.

இயந்திரம்!

ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம். இயந்திரங்கள் புதுடெல்லி, செகந்தராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும். சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.

கூடுதல் செலவுகள்!

தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.

மூலப் பொருள்கள்!

கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள். எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான்; அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.

வேலையாட்கள்!

முன்னனுபவம் உள்ள நபர் – 1உதவியாளர்கள் – 2 விற்பனையாளர் - 1 வேன் அல்லது சிறிய ஆட்டோ ஓட்டத் தெரிந்த விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.

உற்பத்திக்கு முந்தைய செலவுகள்!

நிர்வாகச் செலவுகள், சட்டப்பூர்வமான கட்டணங்கள், தொழில் தொடங்குவதற்கு முந்தைய முதலீட்டுக்கான வட்டி என 50,000 ரூபாய் செலவாகும்.

மானியம்

இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும். சுறுசுறுப்பாக செயல்பட நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் இது என்பதால் இதில் தாராளமாக இறங்கி, முன்னேற்றம் காணலாம்!

Wednesday, April 18, 2012

பேக்கரி தொழில்


கடந்த பத்து, இருபது ஆண்டுகளில் நம்மவர்களின் உணவுப் பழக்கத்தில் நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பு காலை டிபன் என்றாலே இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் வகையறாக்கள்தான் இருக்கும். ஆனால், இன்றோ அத்தனை உணவுகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னணிக்கு வந்துகொண்டிருக்கிறது பிரட் வகைகள்.
ஒரு காலத்தில் காய்ச்சல் வந்தால் சாப்பிடலாம் என்றிருந்த இந்த பிரட், இன்று அன்றாடம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளாக மாறி விட்டது. விளைவு, பெரிய நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்களிலும் சக்கைப் போடு போட்டு வருகின்றன பேக்கரிகள்.
தயாரிப்பு முறை:
மைதா மாவு, சர்க்கரை, நெய் அல்லது வனஸ்பதி, ஈஸ்ட் போன்ற மூலப்பொருட்களைக் கொண்டு பிரட், பிஸ்கெட், கேக் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும். இதனோடு கைதேர்ந்த மாஸ்டர்களைக் கொண்டு  பஃப்ஸ், சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சைடு பிஸினஸாக விற்றுக் கொள்ளலாம்.
அனுமதி:
பேக்கரி மூலம் நாம் உணவுப் பொருளை விற்பனை செய்ய நினைத்தால், உணவு பதப்படுத்துதல் துறையின் அனுமதி வாங்க வேண்டும். மேலும், பி.ஐ.எஸ். தரச்சான்று வாங்கினால், மக்களுக்கு நம் பேக்கரியின் மீது இருக்கும் நம்பிக்கை இன்னும் அதிகரிக்கும்.
கட்டடம்:
ஷோரூமுடன் கூடிய பேக்கரிக்கு, 100 சதுர மீட்டரில் கட்டடம் தேவைப்படும். இதன் மொத்த மதிப்பு குறைந்த பட்சம் 2,50,000 ரூபாய் வரை ஆகும். நீங்கள் தேர்வு செய்யும் பகுதியைப் பொறுத்து இடத்தின் மதிப்பு மாறுபடும். உதாரணமாக, மக்கள் அதிகமாகக் கூடும் பஸ் ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை வைத்தால் அதன் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அல்லது அதிக அளவில் வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
இயந்திரம்:
ஆண்டுக்கு 72 டன் பிரட் மற்றும் பிஸ்கெட் 7.5 டன் தயாரிக்கும் திறனுக்கு ஏற்ப இயந்திரங்கள் தேவைப்படும். இதற்கான இயந்திரங்களான டவ், மாவு பிசையும் இயந்திரம், பாய்லர், ஓவென், மோல்டு மற்றும் டை போன்றவற்றை வாங்க 2,75,000 ரூபாய் வரை ஆகும். அசாம், மொரதாபாத் (புது டில்லி) போன்ற  இடங்களில் பேக்கரிக்கான இயந்திரங்கள் கிடைக்கின்றன.

மற்ற செலவுகள்:

ஃபர்னிச்சர், பேக்கரி தயாரிப்பு பொருட்களை அடுக்கி வைக்க ரேக்குகள், சில்லறை வியாபாரம் செய்ய அலங்கரிக்கப்பட்ட ஷோரூம்கள் போன்ற செலவுகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
தண்ணீரும் மின்சாரமும்:
20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் ஒரு நாளைக்குத் தேவைப்படும்.

மூலப்பொருள்:

இத் தொழிலுக்கான முக்கிய மூலப்பொருள் மாவுதான். மைதா மற்றும் கோதுமை மாவு எந்தவித சிக்கலும் இல்லாமல் தொடர்ந்து கையிருப்பில் இருக்க வேண்டும். மேலும், சர்க்கரை, ஈஸ்ட், பால் பவுடர், உப்பு, நெய், தேவையான கலர் மற்றும் ஃபிளேவர்கள் தடையில்லாமல் கிடைத்திட வேண்டும்.
வேலையாட்கள்!
இந்த உற்பத்தித் திறனுக்கான வேலையாட்கள் மொத்தம் ஐந்து பேர் தேவை. நன்கு திறமையாக வேலை செய்யும் ஒருவர், நன்றாக வேலை பார்ப்பவர்கள் இருவர், விற்பனையாளர்கள் இருவர் என மொத்தம் ஐந்து பேர் தேவை. அனுபவம் மிக்க மாஸ்டர் கட்டாயம் ஒருவராவது தேவை.
முந்தைய செலவுகள்:
பதிவுக் கட்டணங்கள், கடை தொடங்குவதற்கான செலவுகள், சோதனை ஓட்டச் செலவுகள் என 30,000 ரூபாய் வரை செலவாகும்.
செயல்பாட்டு மூலதனம்:
முதல் ஆண்டுக்கான மொத்த செயல்பாட்டு மூலதனமாக சுமார் 2.04 லட்சம் ரூபாய் வரை தேவைப்படும்.

சந்தை வாய்ப்பு!
உணவுத் துறையில் பேக்கரிக்கு மிகவும் முக்கிய இடம் உண்டு. பிரட்கள், பலவிதமான கேக்குகள், பஃப்ஸ், சான்ட்விச், சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் என பலவகையான உணவுப் பொருட்களை விற்கும் இடமாக இந்த பேக்கரிகள் இருக்கின்றன. இயந்திரகதியான இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பல சமயங்களில் வீட்டில் சமைக்க முடியாமல் போய்விடுகிறது. எனவே, பேக்கரியிலிருந்து பிரட் வாங்கி சாப்பிடும் பழக்கத்துக்கு பல்வேறுவிதமான மக்கள் ஆளாகி வருகிறார்கள். இதனால் நகர்ப் பகுதிகளிலும் கிராமப்புறங்களிலும் பேக்கரி தொடங்க நிறைய வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்து பேக்கரியைத் தொடங்கினால், விற்பனை களைகட்டும் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
ரிஸ்க்:
ரஸ்க்கே தயாரித்தாலும் ரிஸ்க் இல்லாமல் இருக்குமா? தயாரிக்கும் பேக்கரி வகைகளை அன்றே விற்றுவிட வேண்டும். எனவே, தேவையைப் பொறுத்து தயாரிப்பது முக்கியம்.
சாதகமான விஷயம்:
பண்டிகைக் காலங்களில் அதிகப்படியான தேவைகள் இருக்கும். அதிலும் குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் டிமாண்டுக்கு ஏற்ப கூடுதல் வேலையாட்களைக் கொண்டு செயல்பட்டால் அந்த மாதங் களில் மட்டும் பல மடங்கு விற்பனையைப் பார்க்கலாம்.
தற்போது குழந்தைகளின் பிறந்தநாளை மிக விமரிசை யாகக் கொண்டாடுகிற வழக்கம் வந்துவிட்டது. அதனால் பர்த்-டே கேக்கு களுக்கான ஆர்டர்களை வாங்கி செய்து கொடுக்க லாம். இதில் குழந்தைகளுக்கு பிடிக்கிற மாதிரி கேக்குகளைத் தரமாகவும் அழகாகவும் கொடுத்தால், கஸ்டமர்கள் மீண்டும் மீண்டும் தேடிவந்து பர்த்-டே கேக்கிற்கு ஆர்டர் கொடுக்க வாய்ப்புள்ளது.  பிரகாசமான எதிர்காலம் உள்ள இத்தொழிலில் இறங்க இனி என்ன தயக்கம்?

 

Saturday, November 12, 2011

பப்ஸ், பர்கர்,பீட்ஸா பணம் பார்க்க பேஷ்.. பேஷ்

பர்கர், பீட்ஸா, பப்ஸ் போன்ற பேக்கரி உணவுப்பொருட்கள் நகரங்களை ஆக்கிரமித்து கிராமங்களிலும் தலைகாட்டத் தொடங்கி விட்டன. பன், கேக் உள்ளிட்டவைக்கும் கிராக்கி உள்ளது. இவற்றை தயாரித்து விற்கும் யுத்தியை அறிந்து கொண்டால் நல்ல வருமானம் பார்க்கலாம் என்கிறார் கோவை தொப்பம்பட்டியில் ஸ்ரீஅலம்பதா பேக்கரி உணவுக் கூடம் நடத்தி வரும் கோகிலவாணி. அவர் கூறியதாவது: கணவர் விஜயகுமார் ஒரு தொழிற்சாலையில் கேன்டீன் நடத்தி வருகிறார். இதற்காக 4000 பேருக்கு தேவையான உணவு தயாரிக்க சமையல் கூடத்தை தொப்பம்பட்டியில் கட்டியுள்ளார். கணவரின் சமையல் தொழிலை நானும் செய்ய விரும்பினேன்.
அதனால் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பேக்கரி தயாரிப்பு பயிற்சி பெற்றேன். தனியாக தொழில் துவங்க முன்னோட்டமாக, பல்கலை. தொழிற்பயிற்சி நிலையத்தில் தயாரிப்பு இயந்திரங்களை பயன்படுத்தி பேக்கரி உணவுகள் தயாரித்தேன்.

அவற்றை கோவையில்உள்ள சில பள்ளி, கல்லூரி விடுதிகளுக்கு சாம்பிள் வழங்கினேன். அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு வழக்கமாக வழங்கும் பேக்கரி உணவுகளுக்குப் பதில், நான் தயாரித்த பப்ஸ், கேக், சாண்ட்விச் பிரட்களை வழங்கினர்.நான் தயாரித்த உணவுகளின் மணம், சுவை, மிருதுதன்மை, மொறுமொறுப்பு பலருக்கும் பிடித்து போனது. விலையும் ஏற்றதாக இருந்ததால் எனக்கு ஆர்டர் கொடுத்தார்கள். இதனால் தொழில் சூடு பிடித்தது. எனது கணவரின் சமையல் கூடத்தின் ஒரு பகுதியில் இயந்திரங்களை நிறுவி பேக்கரி துவக்கினேன். கோவையில் 3 பொறியியல் கல்லூரி, ஒரு மேல்நிலைப்பள்ளி, ஒரு ஐடி நிறுவனம் மற்றும் 10 கடைகளுக்கு தினசரி விற்கிறேன். தரத்தை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் நிலையான வரவேற்பு உள்ளது. பல பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் புதிதாக ஆர்டர் கொடுத்து வருகின்றன.
இந்த தொழிலில் போட்டி அதிகம். அதேசமயம் லாபத்தை குறைத்து, தரத்தை அதிகப்படுத்தினால் கூடுதல் வாடிக்கையாளர்களை பெற முடியும். இதுவே தொழில் வெற்றிக்கு தாரக மந்திரம். இவ்வாறு கோகிலவாணி கூறினார்.

தயாரிப்பது எப்படி?

பன், பர்கர், பப்ஸ், கேக், பிரட் தயாரிக்க மைதா மாவு, சர்க்கரை, உப்பு, டால்டா, ஈஸ்ட், தண்ணீர், முட்டை, கேக் ஜெல், எசென்ஸ், வெள்ளை எள், சிபி எனப்படும் வேதிப்பொருள், டூட்டி புரூட்டி துண்டுகள் தேவைப்படுகின்றன. தயாரிக்கும் உணவுக்கேற்ப, பொருட்களை மிக்ஸிங் மெஷினில் போட்டு 15 நிமிடம் இயக்கினால் மிருதுவான மாவு கிடைக்கும். அதை பல்வேறு அளவு டப்பாக்களில் நிரப்பி, 45 நிமிடங்கள் ஊற வைத்தால், மாவு புஸ்ஸென்று உப்பியிருக்கும். பின்னர் டப்பாக்களை டிராலியில் அடுக்கி, ட்ராலியை ஓவன் மெஷினில் வைத்து மூட வேண்டும். குறிப்பிட்ட வெப்பநிலையில் அரை மணி நேரம் இயக்கினால், மாவு வெந்து பன், பிரட், கேக் தயார். பன் மாவின் மேல் வெள்ளை எள் தூவி வேக வைத்தால் அது பர்கர் பன். சாதா பப்ஸ் தயாரிக்க மாவுக்கலவையை மெல்லியதாக தேய்த்து, பல மடிப்புகளாக மடித்து டப்பாக்களில் ஊற வைத்து, வேக வைக்க வேண்டும்.

உள்ளே அவித்த முட்டை, காய்கறிகள், சிக்கன், பனீர், காளான் வைத்து வேக வைத்தால் பலவிதமான பப்ஸ்கள் கிடைக்கும். பிரட்டை ஸ்லைஸ் செய்தோ, செய்யாமலோ பேக் செய்யலாம். மைதாவுக்கு பதில் கோதுமை, ஓட்ஸ் மூலம் பிரட் தயாரிக்கலாம். கேக்ஜெல், ஈஸ்ட், எசென்ஸ், சிபி, டூட்டி புரூட்டி ஆகியவை பேக்கரி தயாரிப்பு பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கும். மிக்ஸிங் மெஷின், ஓவன் மெஷின் முக்கிய நகரங்களில் கிடைக்கிறது. பேக்கரி தயாரிப்பு குறித்த பயிற்சிகளை பெற வேளாண் பல்கலை., மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.

முதலீடு

20க்கு 30 அடி நீள, அகலமுள்ள இடம். மிக்ரூங் மெஷின் ரூ1.95 லட்சம், ஓவன் மெஷின் ரூ4.7 லட்சம், சிலைசர் மெஷின் ரூ47 ஆயிரம், டப்பாக்கள், டிராலி, டேபிள்
ஆகியவை ரூ28 ஆயிரம் என கட்டமைப்புக்கு ரூ7.4 லட்சம் தேவை. ஒரு மாத உற்பத்திக்குத் தேவையான பொருள்கள், 5 தொழிலாளர் சம்பளம், மின்கட்டணம், இடவாடகை, போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்கு மாதம் ரூ3 லட்சம் தேவை. அதிக முதலீடு என்பதால் 2, 3 பேர் சேர்ந்து தொழில் துவங்கலாம். வங்கி கடனுதவியும் பெற முடியும்.

மாதந்தோறும் லட்ச ரூபாய் லாபம்

மாதந்தோறும் 25 நாளில் உத்தேசமாக 53 ஆயிரம் பன், 2,600 பிரட் (பெரியது), 5,300 பிரட் (சிறியது), 10,600 பப்ஸ், 650 முட்டை பப்ஸ், 355 கிலோ கேக் தயாரிக்கலாம். வாடிக்கையாளர் தேவைக்கேற்ப கூட்டியோ, குறைத்தோ தயாரிக்கலாம். பன் ரூ3, பெரிய பிரட் ரூ30, சிறிய பிரட் ரூ15, சாதா பப்ஸ் ரூ4.50, முட்டை பப்ஸ் ரூ6, கேக் கிலோ ரூ90க்கு விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ4 லட்சம். உற்பத்தி செலவு ரூ3 லட்சம். மாத லாபம் ரூ1 லட்சம்.

மார்க்கெட்டிங்:

பேக்கரி உணவுகள் சில நாள் வரை கெடாமல் இருக்கும் என்பதால், டீக்கடைகள், ஓட்டல், ஸ்வீட் ஸ்டால், பேக்கரி, கேன்டீன், பள்ளி, கல்லூரி விடுதிகள், மருத்துவமனைகள், நிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் பேக்கரி உணவுப்பொருள் விற்க ஆர்வம் காட்டுகின்றனர். தினமும் தேவைப்படுவதால் நிரந்தர விற்பனை வாய்ப்பு உள்ளது. இந்த கடைகளுக்கு சப்ளை செய்யலாம். பேக்கரியின் லேட்டஸ்ட் வரவான பீட்ஸா நகரங்களில் பிரபலமாகி வருகிறது. பீட்ஸாவை யும் குறைந்த விலையில் தயாரித்து விற்கலாம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites