இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, November 29, 2011

பனி கால பிரச்னைக்கு தீர்வு

காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்குகிறார் இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம். குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம்.  இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.   குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.

பனிக்காலத்தில் ஏற்படும்  சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது. இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்ப டுத்தாமல் தலை வலியை உண்டாக்கும். சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர் களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.

பாதுகாப்பு முறை:  சளி பிடித் திருந்தால் நோய்த் தொற்றைத் தடுக்க திறந்த வெளிகளில் விற்கும் உணவு மற்றும் பழ வகைகள், பழச்சாறுகள் சாப்பிடக் கூடாது. பனியால் ஏற்படும் தோல் வறட்சியை விரட்ட வெளியில் சென்று வந்த பின்னர் தண்ணீரில் முகம் கழுவவும். மாய்சரைசிங் சோப்பை மட்டுமே பயன்படுத்தவும். வெயில் மற்றும் பனியால் தோலுக்கு ஏற்படும் பிரச்னைகளை சமாளிக்க தரமான கிரீம்களை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் முடி கொட்டும். இதைத் தடுக்க முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.  குளிர் காலத்தில் அடிக்கடி நாக்கு வறட்சி ஏற்படும். தாகம் தீர நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.  பிரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அவற்றை சூடுபடுத்தி சாப்பிட வேண்டும். தலைவலி மற்றும் சளித் தொல்லையின் போது டீ, காபி தவிர்க்கவும்.

காபின் உள்ள உணவுப் பொருட்களை சாப்பிடுவதால் சளித்தொல்லை அதிகரிக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம்.
- ஸ்ரீதேவி


ரெசிபி


புதினா ஜூஸ்: இஞ்சித் துருவல் 1 டேபிள் ஸ்பூன், புதினா இலை அரை கப் ஆகியவற்றை மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதில் 1 கப் எலுமிச்சை சாறு, 1 கப்  சர்க்கரைத்தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் கலந்து 3 நாள் வரை பயன்படுத்தலாம். தினமும் 1 கப் புதினா ஜூஸ் குடிப்பதால் சளியை உருவாக்கும் கிருமிகள் அழிக்கப்படுகிறது.

பிரிஞ்சால் ராய்தா: கத்தரிக்காய் 100 கிராம், புளிக்காத கெட்டி தயிர் கால் கப், பெரிய வெங்காயம் 1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய் 1, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கத்தரிக்காயை நெருப்பில் சுட்டு எடுக்கவும். மேல் தோலை உரித்து விட்டு பிசைந்து கொள்ளவும். தயிர், வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளலாம். சப்பாத்தி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

கொத்தமல்லி  துவையல்: கொத்தமல்லி இரண்டு கப், தேங்காய் அரை கப், பொட்டுக்கடலை கால் கப், இஞ்சி, பூண்டு அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் 2, புளி சிறிதளவு  எடுத்துக் கொள்ளவும். இவற்றுடன் தேவைக்கேற்ப உப்பு, தண்ணீர் சேர்த்து சேர்த்து அரைக்கவும்.

டயட்


குளிர் காலமாக இருந்தாலும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். சுண்டல் வகைகள், முளை கட்டிய தானியங்களும் எடுத்துக் கொள்ளலாம். மிளகு சேர்த்த உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நாளில் இருவேளை உணவில் காய், கீரை மற்றும் பழ வகைகள் கண்டிப்பாக இருக்க வேண்டும். இரும்பு சத்துள்ள உணவுகளை கட்டாயம் உணவில் சேர்க்கவும். முருங்கைக்கீரை, பேரீச்சை, திராட்சை உள்ளிட்டவைகளை சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியான பதார்த்தங்கள், குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. புளிக்காத தயிர் மற்றும் மோர் சேர்க்கலாம். வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் இரும்புச் சத்தை உட்கிரகித்துக் கொள்ள உதவும். சத்தான உணவு முறை  மூலம் குளிர்கால நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

*   எலுமிச்சை சாற்றில் உப்பு சேர்த்து குடித்தால் சளியால் ஏற்படும் வாந்தி நிற்கும்.
*   எலுமிச்சை பழச்சாற்றை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி தீரும். எலுமிச்சை இலைகளை தேநீரில் போட்டு கொதிக்க வைத்துக் குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி             உண்டாகும்.
*   கடல் அழிஞ்சில் பட்டை, திப்பிலி, தாளிசபத்திரி மூன்றையும் சம அளவில் எடுத்து பொடி செய்து இரண்டு கிராம் பொடியை தினமும் இரண்டு வேளை தேனில் குழைத்து         சாப்பிடலாம். சளி, இருமல்,  தும்மல் மற்றும் அலர்ஜியில் இருந்து தீர்வு கிடைக்கும்.
*   கடுகை பொடி செய்து தொண்டையில் பற்றுப் போட்டால் தொண்டை வலி குணமாகும்.
*   அரைக் கீரை தண்டுடன் மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து தினமும் அதிகாலையில் குடித்தால் சளி, இருமல் மற்றும் நுரையீரல்
    தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
*   அறுவதா இலையுடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து அரைத்து சாப்பிட்டால் மார்பு சளி குணமாகும்.
*   ஆடாதொடா இலையை பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் சளித் தொல்லை தீரும்.
*   ஆலமர விழுதை பொடி செய்து காலை, மாலையில் சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites