இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Monday, January 13, 2014

லாபம் அள்ளும் கிரிஸ்டல் கொலுசு!


மாதம், 10 ஆயிரம் லாபமீட்டும், 'கிரிஸ்டல்' கொலுசு தயாரிக்கும் தொழில் பற்றி கூறும், காமாட்சி: நான், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆனதும், சென்னை, வேளச்சேரியில் செட்டில் ஆனேன். பட்டதாரியான 
என்னால், வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை.கணவரும், 'ஓய்வு நேரத்தில் ஏதேனும் கற்றுக்கொள்' என, ஊக்கமளித்தார். அதனால், எனக்கு விருப்பமான ஆர்ட் அண்ட் கிராப்ட் கற்றேன். மேலும், வீட்டில் இருந்தபடியே சிறு சிறு கைவினை பொருட்களை செய்து வந்தேன்.பெண்கள் விரும்பி அணியும் நகைகளில், கொலுசும் ஒன்று. ஆனால், அவைகள் பெரும்பாலும் வௌ்ளி கொலுசாகவே கிடைக்கின்றன. குறைந்த விலையில், பல வித வண்ண ஆடைகளுக்கு ஏற்ப, கிரிஸ்டல் கொலுசுகளாக செய்தால், நல்ல லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தில், கிரிஸ்டல் கொலுசு செய்ய 
ஆரம்பித்தேன். பெண்களிடம், இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், பல டிசைன்களில் கிரிஸ்டல் கொலுசு செய்து, வாடிக்கையாளர்களை கவர்ந்தேன். மிக எளிமையான முறையில், கிரிஸ்டல் கொலுசு செய்யலாம்.கொலுசின் அளவிற்கு ஏற்ப, 'கியர் ஒயரை' வெட்டி, இணைப்பு கொக்கியில் கோர்த்து, கியர் லாக்கை கொண்டு, 'லாக்' செய்ய வேண்டும். பின், கலர் மற்றும் டிசைன்களுக்கு ஏற்ப, அதற்கு தேவைப்படும் கிரிஸ்டல் மணிகளை ஒயரில் கோர்க்க 
வேண்டும்.முழுவதும் கோர்த்து முடித்த பின், இணைப்பு கொக்கியையும், கியர் லாக்கையும் ஒன்றாக சேர்த்த பின், மீதி இருக்கும் ஒயரை வெட்டி விட்டால், விற்பனைக்கு தேவையான கிரிஸ்டல் கொலுசு கிடைக்கும். இதற்கான மூலப்பொருட்கள், பல பேன்சி கடைகளில் கிடைக்கின்றன.ஒரு ஜோடி கொலுசின் ஆரம்ப விலை, 150 ரூபாய். நம் கற்பனை திறனுக்கு ஏற்ப குந்தன் கற்கள், சக்ரி, முத்துக்கள் என, பலவற்றையும் பயன்படுத்தி, அதிக விலைக்கு விற்று லாபமீட்டலாம்.மேலும், வளமான வாடிக்கையாளர் வட்டம் கிடைத்தால், குறைந்தபட்சம் மாதம், 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை சாதாரணமாக சம்பாதிக்கலாம். முழுநேரமாக செய்யத் துவங்கினால், இன்னும் அதிக வருமானம் கிடைக்கும். 
தொடர்புக்கு: 99402 67779.

Wednesday, January 1, 2014

விபத்துக்குப் பின்னே விஸ்வரூப வெற்றி...நம்பிக்கையின் நிஜ உருவம் நிவேதா!



''இன்டர்னல் எக்ஸாம் வருது. ரெண்டு அசைன்மென்ட் வேற இன்னும் சப்மிட் பண்ணல. புராஜெக்ட் வொர்க்கும் பெண்டிங்ல இருக்கு. டைமே பத்தலப்பா...'' என்று புலம்பல்ஸில் இருக்கும் காலேஜ் கேர்ள்ஸ்... ப்ளீஸ் மீட் மிஸ் நிவேதா!
சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ., சோஷியாலஜி படிக்கும் மாணவி, நிவேதா. படிப்பு தவிரவும், இவரின் செயல்பாடுகள் படர்ந்திருக்கும் தளங்கள் பல. பரபரப்பான எழுத்தாளர், பேச்சாளர்,

 'எக்ஸ்னோரா’வில் பொறுப்பான பணி, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர், 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்’களுக்குச் செல்பவர், வெப் டிசைனர் என நீளுகிறது பட்டியல். இந்த 'பார்ட் டைம்' பணிகளால் மாதத்துக்கு நாற்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார் நிவேதா!

''வாவ்!'' என்ற வார்த்தையில்தான் ஆரம்பித்தது அவருடனான நம் உரையாடல்.

'' 'அதனாலதான் முடியல... இதனாலதான் செய்யல’னு சாக்குகள் கண்டுபிடிக்கற குணத்தை மட்டும் அடிச்சு விரட்டிட்டா, நம்மால... நாம நினைச்சதை கண்டிப்பா சாதிக்க முடியும்!'' என்று எடுத்ததுமே நம்பிக்கை தரும் வார்த்தைகளில் தொடங்கும் நிவேதா, தன்னை வலுவிழக்கச் செய்த ஒரு விபத்தை சாக்காக சொல்லி, சோம்பேறியாக சாயாமல், 'வீழ்வேனென்று நினைத்தாயோ?’ என மீண்டு வந்திருப்பவர் என்பது அவரை மேலும் பெருமையோடு பார்க்க வைக்கிறது!

''அப்பா... ஜார்ஜ் தாமஸ், தடயவியல் துறையில் வேலை செஞ்சு விருப்ப ஓய்வு வாங்கினவர். அம்மா... சரளா, கான்ட்ராக்ட்ஸ் மேனேஜர். அண்ணன் எம். என்.சி. கம்பெனியில ஜெனரல் மேனேஜர். இதுதான் என் குடும்பம். சின்ன வயசுல இருந்தே ஸ்போர்ட்ஸ்ல ரொம்ப ஆர்வம். ஸ்கூல் படிக்கும்போது த்ரோபால், வாலிபால், ஸ்விம்மிங், ஸ்கேட் டிங், டென்னிஸ்னு எல்லா ஸ்போர்ட்ஸ் லயும் பெஸ்ட் பிளேயர். கீ-போர்டு, பரத நாட்டியம்கூட கத்துக்கிட்டேன்.

'ஆல் ரவுண்டர்தான் நீ’னு எல்லாரும் பாராட்டினாலும், என்னோட அடையாளமா நான் பெருமைப்பட்டு சொல்றது, 'டய்க்வாண்டோ'தான் (ஜிணீமீளீஷ்ஷீஸீபீஷீ)! கராத்தே மாதிரியான, கொரிய நாட்டு தற்காப்புக் கலைதான் இந்த 'டய்க்வாண்டோ’. இதுல மாவட்ட அளவுல 28 பதக்கங்கள், மாநில அளவுல 8 பதக்கங்கள், தேசிய அளவுல 2 வெள்ளிப் பதக்கங்கள்னு சாதனை படைச்சிருக்கேன். 'அடுத்து இன்டர்நேஷனல் லெவலுக்கும் முயற்சி பண்ணணும்’னு தீவிரமான பயிற்சியில இறங்கினேன். ஆனா... விதி எனக்குக் கொடுத்த அடி, பயங்கர அதிர்ச்சி!'' என்றவர், அந்தச் சம்பவத்தை பகிரும்போது தளர்கிறது அவர் குரல்.

''அப்போ ப்ளஸ் டூ படிச்சுட்டு இருந்தேன். குடிச்சுட்டு பைக் ஓடிட்டு வந்த ஒருத்தர், என் டூ வீலர் மேல ஒரு வளைவுல மோத, என் வலது தோள்ல ஆழமான அடி. படுத்தபடுக்கை ஆகிட்டேன். 'இனி ஸ்போர்ட்ஸ்ல ஈடுபடக் கூடாது’னு டாக்டர் சொன்னப்போ, நொறுங்கிட்டேன். பப்ளிக் எக்ஸாம் வேற நெருங்கிட்டு இருந்தது. ஓடியாடித் திரிஞ்ச நான் படுக்கையிலயே கிடந்ததால உடம்பும், மனசும் சோர்ந்து போச்சு. அப்போதான், 'உடம்பாலதானே சாதனைகள் பண்ண முடியாது... மூளையை வெச்சு சாதிக்க முடியுமே’னு எனக்கு நானே தெம்பு சொல்லி, மெள்ள எழுந்தேன்'' என்பவர், அந்த எண்ணத்தை அசராத உழைப்பின் மூலம் செயல்படுத்தியிருக்கிறார்.

''எனக்கு நடந்த விபத்தைப் பத்தி ஒரு எச்சரிக்கை கட்டுரையா எழுத, அது எங்க ஸ்கூல் 'ஆண்டு மலர்’ல வெளிவந்துச்சு. 'மனசு நினைக்கறதை தெளிவா, அழகா உன்னால வார்த்தைகள்ல கொடுக்க முடியுது. நீ தொடர்ந்து நிறைய எழுது’னு எங்க பிரின்ஸிபால் ஊக்குவிச்சதுதான் முதல் புள்ளி. தொடர்ந்து, பல பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பிச்சேன். மனசுல இருந்த ஆற்றாமைய எல்லாம்... என் எழுத்து கொஞ்சம் கொஞ்சமா துடைச்சுச்சு.

இதுக்கு இடையில உடம்பும் குணமாக, பிளஸ் டூ-வுல நல்ல மதிப்பெண்களோட தேர்வாகி, இன்ஜினீயரிங் காலேஜ்ல சேர்ந்தேன். இன்னொரு பக்கம் என்னோட எழுத்து ஆர்வமும் தொடர்ந்துச்சு. இதுவரை என்னோட 800 கட்டுரைகள் இன்டர்நேஷனல் இதழ்கள் பலதுலயும் வெளிவந்திருக்கு. அழிந்து வரும் விவசாயம், சுற்றுச்சூழல் கேடு, புற்றுநோயாளிகள், ஊழல்னு அந்தக் கட்டுரைகளுக்கான என்னோட தேடல் எல்லாம், அதுவரை வாழ்க்கையைப் பத்தி எனக்கிருந்த புரிதலை புதுசாக்குச்சு.

'என் வாழ்க்கைக்கான உத்திரவாதமா ஒரு வேலையைத் தேடிக்கறதுக்காக படிக்கற இந்த இன்ஜினீயரிங் படிப்பு எனக்கு வேண்டாம். சமூக முன்னேற்றத்துக்கு என்னாலான பங்களிப்பை தர்ற மாதிரியான வேலைச் செய்யவே எனக்கு விருப்பமா இருக்கு. நான் சோஷியாலஜி படிச்சு, குரூப் ஒன் எக்ஸாம் எழுதறேன்’னு எங்கப்பாகிட்ட கேட்டேன். 'உனக்கென்ன பைத்தியமா?’னு திட்டாம, 'உன்னால முடியும்’னு என்மேல நம்பிக்கை வச்சார் எங்கப்பா. செகண்ட் இயரோட இன்ஜினீயரிங் கோர்ஸுக்கு டாடா சொல்லிட்டு... எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல பி.ஏ. சோஷியாலஜிக்கு 'ஹாய்’ சொன் னேன்!'' என்றவர்,

''எழுதுறது மட்டுமல்லாம, ஒரு கட்டத்துல சபைகள்ல பேசற ஆர்வமும், துணிவும் எனக்கு வர... பேச்சுப் போட்டிகள்லயும் மாநில, தேசிய அளவுல பரிசுகள் வாங்கினேன். தமிழ், தெலுங்கு, இந்தி, பிரெஞ்சு, இங்கிலீஷ்னு ஐந்து மொழிகள் தெரிஞ்ச எனக்கு, அந்த மொழியறிவு என் எழுத்துலயும், பேச்சுலயும் பலமா இருந்துச்சு. இதுக்கு இடையில தன்னார்வ தொண்டு அமைப்பான 'எக்ஸ்னோரா’ யூத் விங்ல வேலைக்குச் சேர்ந்தேன். நியூஸ் லெட்டர், பிரஸ்மீட்னு அங்க இருக்கற ஏ டு இஸட் வேலைகளை சேவையா பார்த்துட்டு இருக்கேன்'' என்றவர்,

''இன்னொரு பக்கம், 'வெப் டிஸைனிங்’ கோர்ஸ் கத்துக்கிட்டு, பார்ட் டைம் வேலையா பண்ணிக்கிட்டிருக்கேன். தவிர, மேடை நிகழ்ச்சிகள், பொதுநிகழ்ச்சிகளை நடத்தித் தர்ற 'ஈவன்ட் மேனேஜ்மென்ட்’ வேலை பார்க்கறேன். பொதிகை டி.வி-யில 'என்றும் இனிமை’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கறேன். இதை எல்லாம் ஏதோ பொழுதுபோக்கா பண்ணாம, எல்லாத்துலயும் என்னோட பர்ஃபெக்ஷனை நிரூபிக்கறதால... இந்த பார்ட் டைம் வேலைகளால மாசம் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கறேன்! இன்னொரு குட் நியூஸ்... ராஜீவ்காந்தி கொலை வழக்கு பத்தி, அந்த வழக்கை விசாரிச்ச சீனியர் சி.பி.ஐ. ஆபீஸர் ரகோத்தமன் சாரோட வழிகாட்டலோட ஒரு புத்தகம் எழுதியிருக்கேன். அடுத்த மாசம் ரிலீஸ்!'' என்று குஷிபொங்கச் சொன்னார்.

''எனக்கு தினமும் தூக்கம் 5 மணி நேரம்தான். எந்த வேலையும் ஒண்ணோட ஒண்ணு கிளாஷ் ஆகாம பிளான் பண்ணிக்கறேன். விபத்துக்கு முன்னால உடலளவுல மட்டும்தான் சுறுசுறுப்பா இருந்தேன். இப்போ, என் உடல், மூளை, மனசுனு எல்லாமே எனர்ஜெடிக்கா இருக்கு! அதனால, எப்பவுமே பி பாஸிட்டிவ்!''

- 'பளிச்' என வருகின்றன வார்த்தைகள் நிவேதாவிடமிருந்து! அவரிடமிருந்து விடைபெற்ற போது... நம்மிடமும் ஒட்டிக் கொண்டது நூறு சதவிகித சுறுசுறுப்பு!

- க.நாகப்பன்
படங்கள்: து.மாரியப்பன்

வியக்க வைக்கும் விவேகானந்தா வித்யா வனம்!



''வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, பாடப் புத்தகத்தை மட்டும் உருவேற்றும் கல்வி முறை, கல்வியில் சிறந்த மாணவர்களை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால், சிறந்த மனிதர்களை உருவாக்குவதில்லை. எங்கள் பள்ளி அப்படியல்ல, வாழ்க்கைக்குத் தேவையான விவசாயம், மூலிகைகள், இயற்கை... அத்தனை விஷயங்களையும் செய்முறையோடு கற்றுக் கொடுக்கிறது'' என பெருமையோடு சொல்கிறார்கள், திருச்சி, ஸ்ரீரங்கம் அருகே அமைந்துள்ள ஸ்ரீவிவேகானந்தா வித்யா வனம் ஆண்கள் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்.

நெடுக வளர்ந்த வாழைகளும், ஓங்கி உயர்ந்த தென்னை மரங்களும் வரவேற்க... பள்ளியில் நுழைந்தோம். முதலில், பள்ளிக்கு சுற்றுச்சுவரே இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. பின்னே, ஒரு தோட்டத்துக்குள்தானே பள்ளிக்கூடமே இருக்கிறது. அதனால், உயிர்வேலியாய் அமைந்துள்ள தோட்டம்தான் அங்கே பாதுகாப்பு! மரங்கள், அழகுச் செடிகள், மூலிகைகள் இவற்றுக்கு மத்தியில்தான் வகுப்பறைகள் அமைந்திருக்கின்றன. மின் விசிறியே இல்லாமல்... இயற்கைக் காற்று மட்டுமே மாணவர்களைத் தழுவிச் செல்கிறது.

வருங்கால சந்ததியை வலுவானவர்களாகவும், நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாகவும் உருவாக்கும்விதமாக, கூடுமான வரையிலும் செயற்கை விஷயங்களுக்கு இங்கே இடம் கொடுக்கப்படவில்லை. கைக்குத்தல் அரிசியில் சமைத்த உணவுகள்தான் மாணவர்களுக்குப் பரிமாறப்படுகிறது! பயிர் வைப்பது, பராமரிப்பது, அறுவடை செய்வது... என அனைத்துப் பணிகளையும் மாணவர்களே செய்கிறார்கள். விவசாய வேலையுடன் சமையலையும் கற்றுக்கொடுத்து, அடிக்கடி சமையல் போட்டியும் நடத்துகிறார்கள்.

இதைப் பற்றியெல்லாம் பேசிய பள்ளியின், 'பசுமைப் படை’ ஒருங்கிணைப்பாளர் சுகுமாரன், ''மாணவர்களுக்காக, மாணவர்களால் மாணவர்களுக்கு’ என்கிற அடிப்படையில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூலிகைகளை கொண்டு வந்து அவற்றை மாணவர்கள் மூலம் சிறப்பான முறையில் பராமரிக்கிறோம். ஒவ்வொரு மூலிகையின் பயனையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறோம். தோட்டத்துக்கு வேலியாக சிறியா நங்கையை பயிரிட்டுள்ளதால், பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் அண்டுவதில்லை. ஆண்டுதோறும் மூலிகைக் கண்காட்சியை நடத்துகிறோம். அதைப் பல்வேறு பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிட்டு கற்றுக்கொண்டு போகிறார்கள். மரங்களை நடுதல், விவசாயம் சார்ந்த விழிப்பு உணர்வு... என அனைத்து விஷயங்களையும் முறையாகக் கற்றுக்கொடுக்கிறோம். அதோடு, மாணவர்களே அருகிலுள்ள கிராமங்களில் சுற்றுச்சூழல் குறித்து விழிப்பு உணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்'' என்று பெருமையோடு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய தலைமை ஆசிரியர் மாசிமலை, ''இப்போதைக்கு இரண்டு இடங்களில் மூலிகைத் தோட்டங்களும், பள்ளியின் பின்புறத்தில் 5 ஏக்கரில் காய்கறித் தோட்டமும் அமைத்துள்ளோம். அதில், முருங்கை, எலுமிச்சை, வாழை, கத்திரி, கொத்தவரை, வெண்டை, கீரை போன்றவற்றைப் பயிரிட்டுள்ளோம். நிலம் தயாரிப்பு, நடவு, களை எடுப்பு, பராமரிப்பு, அறுவடை... என அனைத்தையுமே மாணவர்கள்தான் செய்கிறார்கள். விவசாயத்துக்காக வாரம் ஒரு வகுப்பை ஒதுக்குகிறோம். அதனால், அனைத்து மாணவர்களும் விவசாயத்தைத் தெரிந்து கொள்கிறார்கள். இந்தத் தோட்டத்தில் கிடைக்கும் காய்களைத்தான் மாணவர்களுக்கு உணவாகக் கொடுக்கிறோம்'' என்றவர் நிறைவாக,

''தற்போதைய மாணவர்கள் டி.வி., இன்டர்நெட், ஃபேஸ்புக் என எங்கோ போய்க் கொண்டிருக்கிறார்கள். நமது நாகரிகத்துக்கு அடிப்படையான, உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் விவசாயத்தைப் பற்றியும், உழவர்களின் வேதனை பற்றியும் மாணவர்களுக்குத் தெரியாமல் போய் விடுகிறது. அதனால்தான் படித்தவர்கள் விவசாயம் செய்ய வருவதில்லை. அந்த நிலை மாறவேண்டும் என்ற எண்ணத்தில்தான் எங்கள் மாணவர்களை விவசாயம் அறிந்தவர்களாக உருவாக்குகிறோம். இப்படிப்பட்ட சூழலில் வளர்ந்து, பிற்காலத்தில் விவசாயத்தை விட்டுவிட்டு, இன்ஜினீயர்கள், டாக்டர்கள் என உருவானாலும், அவர்களும் இந்த சமூகத்துக்கு மிகுந்த பலன் தருபவர்களாக இருப்பார்கள் என்பது எங்களுடைய எதிர்பார்ப்பு. அடிப்படையில் தான் ஒரு விவசாயி என்பதை உணரும்போது... எந்தப் பணியிலுமே சிறப்பாக செயலாற்ற முடியும். சூழல் மீதும் அக்கறை கொண்டு செயலாற்ற முடியும்'' என்று மிகுந்த எதிர்பார்ப்போடு பேசிய தலைமை ஆசிரியர்,

''இப்படி விவசாயத்தை பள்ளிக்கூடத்திலேயே சொல்லித் தருவதால், வழக்கமான படிப்பு எந்த வகையிலும் இங்கே குறைவதில்லை. 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்று, மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெறும் பள்ளிகளுள் ஒன்றாகத்தான் இருக்கிறது எங்கள் பள்ளி'' என்று தெம்பாகச் சொன்னார்!

மாணவ விவசாயிகளைப் பாராட்டி, விடைபெற்றோம்.

பி. விவேக் ஆனந்த்
படங்கள்: தே. தீட்ஷித்,

பாடம் படிக்கும் மாடிச் செடிகள்!


    விளைநிலங்கள் வீடுகளாக மாறும் காலம் இது. பசுமையின் அவசியத்தையும், இயற்கை உரங்களின் நன்மையையும் பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களுக்குப் போதிக்கிறது, சீர்காழியில் உள்ள சபாநாயகர் முதலியார் இந்து மெட்ரிக் பள்ளி.
    ''எங்கள் பள்ளி மாடியில் ஒரு நந்தவனமே இருக்கு'' என்று அழைத்துச் சென்றார், பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு. அங்கே மொட்டை மாடியில், மதிய வெயிலின் வெப்பம் துளிகூடத் தெரியாத அளவுக்கு குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் இருந்தது. நிலத்தில் வளரும் செடிகளையே மிஞ்சும் வகையில் வெண்டை, கொத்தவரை, சோளம், காராமணிப் பயறு, முள்ளங்கி எனச் செடிகளின் அணிவகுப்பு.

    அங்கே வந்த சில மாணவிகள்... தேவையற்ற செடிகளை அகற்றுவது, பூச்சி உள்ள இலைகளைக் கிள்ளிப் போடுவது, மண் சாக்குகளின் தரத்தைப் பார்ப்பது எனப் பொறுப்புடன் வேலையில் இறங்கினார்கள்.

    ''இந்த மாடித் தோட்டத்தைத் தினமும் வந்து பார்த்துப்போம். முக்கியமா ஆடு, மாடுகளின் சாணம், வேப்பங்கொட்டை கலந்த இயற்கை உரத்தையே பயன்படுத்துகிறோம். வீட்டில் அம்மா சமையலுக்குக் காய் அறியும்போது தூக்கிப்போடும் கழிவுகளைச் சேகரித்து எடுத்துவருகிறோம். இங்கே ஏற்பட்ட ஆர்வத்தில், எங்க வீட்டு மாடிகளிலும் தோட்டம் அமைச்சு இருக்கோம். மற்ற பள்ளிகளில் படிக்கும் நண்பர்கள் நிறையப் பேர் எங்களைப் பார்த்து இதே மாதிரி வளர்க்கிறாங்க'' என்றார்கள்.

    இதுபற்றிப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தங்கவேலு கூறும்போது, 'ஒவ்வொரு பள்ளியிலும் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் சங்கம், நாட்டு நலப் பணித் திட்டம் என இருப்பதைப் போல எதிர்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு புதிய வழியை அமைத்துத் தர வேண்டும் என்று பள்ளியின் செயலாளர் ராமகிருஷ்ணன் ஆரம்பித்ததுதான் இந்த மாடித் தோட்டம். இதை ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிறது. இதன் மூலம் தாவரங்களின் வளர்ப்புப் பற்றியும், இயற்கை உரங்களினால் ஏற்படும் நன்மை பற்றியும் மாணவர்கள் தெரிந்துகொள்கிறார்கள். சில மாணவர்கள் ஆர்வத்துடன் விதைகள், உரங்கள் எனக் கொண்டுவந்து கொடுக்கிறார்கள். எங்களின் தோட்டத்தைப் பார்த்து பள்ளிக்கு அருகில் இருப்பவர்களும், முன்னாள் மாணவர்களும் தங்கள் வீடுகளில் இதேபோல் தோட்டம் அமைத்து இருப்பதை எங்களுக்கான வெற்றியாகவே நினைக்கிறோம்'' என்கிறார் பெருமிதத்துடன்.
    பள்ளியின் மொட்டைமாடியை இரு பகுதிகளாகப் பிரித்து விளைச்சல் செய்யப்படுகிறது. ஒரு சுற்றுக்கு 200-க்கும் மேற்பட்ட சாக்குப்பைகளில் செடிகள் வளர்க்கப்படுகின்றன.  அவரை, வெண்டை, கொத்தவரை, முள்ளங்கி, ஒரு பகுதியிலும் காராமணி, சிவப்பு முள்ளங்கி, பச்சைமிளகாய், தக்காளி ஆகியன ஒரு பகுதியிலும் பயிரிடப்படுகின்றன. மழை மற்றும் பனிக் காலங்களில் முட்டைக்கோஸ் போன்ற தாவரங்களும் பயிரிடப்படுகின்றன. இப்படி ஒரு வருடத்தில் 20-க்கும் மேற்பட்ட தாவரங்கள் மாற்றி மாற்றிப் பயிரிடப்படுகின்றன.

    அறுவடை என்பது ஒவ்வொரு பயிருக்கும் ஏற்றவாறு காலங்கள் மாறுபடும். கொத்தவரை, வெண்டை போன்ற காய்கள் ஒரு நாள்விட்டு ஒரு நாளும், காராமணி, கொத்தவரை, முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகியவை அவற்றின் முதிர்வைப் பொருத்தும் அறுவடை செய்யப்படுகின்றன. மேலும் செம்மண், ஆட்டுப் புழுக்கை எனப் பாதிக்குப் பாதி கலந்து, சாக்குப்பையில் நிரப்பப்பட்டு, பதப்படுத்திய பிறகே செடிகள் நடப்படுகின்றன.

    ஒரு நாளைக்கு அறுவடை செய்யப்படும் காய்கறியின் விலை, சந்தை அளவில் 150 ரூபாய்க்கும் மேலாக இருக்கும். ஆனால், பள்ளியில் ஆசிரியர்களிடம் விற்கப்படுவதால், சந்தையைவிட பாதி விலையில்
    விற்கப்படுகிறது. விருப்பம் உள்ள பெற்றோர்களும் சில நேரங்களில் பள்ளிக்கு வந்து காய்களை வாங்கிச் செல்கிறார்கள்.

    சற்று நேரத்தில் பள்ளியிலே சந்தை ஆரம்பித்தது. முள்ளங்கி, அவரைக்காய், கொத்தவரை என மாடித் தோட்டத்தில் பறித்த காய்களைச் சுற்றி நிறைய ஆசிரியர்கள் கூடினார்கள். அவர்களுக்கு மத்தியில் தலைமை ஆசிரியர்.   ஆசிரியர்கள் ஏலம் பேசிக் காய்களை வாங்கினார்கள்.

    ''இயற்கை உரங்களை மட்டும் பயன்படுத்தி விளைவித்த இந்தக் காய்களைச் சாப்பிடும்போது, சத்து மட்டும் இன்றி தனி மணமும் சுவையும் கிடைக்கிறது. நீண்ட நாட்களாக நானும் மாடித் தோட்டம் அமைக்க நினைக்கிறேன். ஆனால் வாடகை வீட்டில் இருப்பதால் முடியவில்லை. இதற்காகவே கூடிய சீக்கிரம் ஒரு மாடிவீடு கட்ட வேண்டும்'' என்கிறார் சாரதா என்ற ஆசிரியை.

    மாடித் தோட்டம் தவிர, பள்ளியின் நுழைவு வாயிலிலும் பூச்செடிகள், மரங்கள் எனப் பசுமையுடன் இருக்கிறது. அங்கே இருந்த ஓர் அறிவிப்புப் பலகை நம்மைக் கவர்ந்தது.

    பூக்களைப் பறிக்காதீர்... அவை செடிகளிலே சிரித்துவிட்டுப் போகட்டும்!

    - மா.நந்தினி,
    செ.சிவபாலன்

வாழையில் புதிய தொழில்நுட்பங்கள்



பழைய முறையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள வாழைத் தார்கள். (வலது) 
புதிய தொழில் நுட்ப முறையில் சீப்புகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள 
வாழைப் பழங்கள்.
வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் பழங்களில் வாழை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நமது நாட்டில் கணிசமான அளவு வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்ட வாழைப் பழத்தை நீண்ட நாள் சேமித்து வைக்க அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும். அத்தகைய தரம் கொண்ட வாழைப் பழத்தைத்தான் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல முடியும். வாழைப் பழங்களைப் பாதுகாக்க மற்ற பழங்களைப் போல அல்லாமல் பாதுகாப்பு அறையின் வெப்பநிலை 12 முதல் 21 சென்டிகிரேட் வரை இருக்க வேண்டும். குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கும் போது அதன் தரம் பாதிக்கப்படுகிறது.
தொழில்நுட்பங்கள்: அறுவடைக்கு முன்னரும், அதன் பின்னரும் கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்களே பழங்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. தொழில் நுட்பங்களைச் சரியாகக் கையாளாத காரணத்தால் மொத்த உற்பத்தியில் 18 முதல் 20 சதவீதம் வாழை வீணாகிறது.
உள்ளூர் விவசாயிகள் சந்தைகளுக்கு வாழைப் பழத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க வாழை இலை அல்லது பாலித்தீன் பையால் முழுவதும் மூடியே எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால், ஏற்றுமதி செய்யும்போது பழங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்ப வேண்டும்.
இந்த அட்டைப்பெட்டி 57 ஷ் 30 ஷ் 22.5 செ.மீ. அளவுடையது. இதில் 1.3 செ.மீ. விட்டமுடைய 10 சிறு துளைகள் இருக்கும். இதில் வாழை சீப்புகளை அதன் அடிப்பாகம் கீழிருக்குமாறும், காய்கள் மேல் நோக்கி இருக்குமாறும் நீளவாக்கில் அடுக்க வேண்டும்.
இவற்றை ரயில்கள் மூலம் அனுப்பும்போது ஒன்றின் மேல் ஒன்றாக 9 பெட்டிகள் இருக்குமாறு அடுக்க வேண்டும். 10 டன் கொள்ளளவுள்ள ரயில் பெட்டியில், 100 வாழைப் பெட்டிகளை அடுக்க முடியும். ஒரு டிரக்கில் குறைந்தது இத்தகைய பெட்டிகளை 350 வரை அடுக்க முடியும்.
வெப்ப நிலை: வாழைப் பழங்களை 13 டிகிரி சென்டிகிரேடுக்கு கீழ் உள்ள வெப்பநிலையில் வைத்து சேமிக்கும்போது பழத்தின் தோலில் கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இது குறைந்த வெப்பநிலையால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக் குறைபாடுள்ள பழங்கள் பழுத்த பின்னரும் அதன் தோல் கடினமாக இருக்கும்.
 மேலும், இந்தப் பழங்கள் எளிதில் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே, இந்த வெப்பநிலையில் பழங்களை சேமிப்பது ஏற்றதல்ல.
 ரோபஸ்டா மற்றும் குள்ள வாழைத் தார்களை பூத்த 100 நாள்களுக்குப் பின்னால் வெட்டி, முன் சேமிப்பு நேர்த்தியாக 1,000 பி.பி.எம். தயோபென்ட்சோல் என்ற மருந்தில் வாழை சீப்புகளை நனைக்க வேண்டும்.
 அவ்வாறு சேமிக்கும்போது, அதிகபட்சமாக 28 நாள்கள் 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் சேமிக்க இயலும். 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில், 80 முதல் 90 சதவீத ஈரப்பதமும் பழங்களை சேமிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருக்கும். வெப்பநிலை அதிகரிப்பதால் பழங்கள் விரைந்து பழுத்து விடும்.
மெழுகு பூசுதல்: பழங்களின் வாழ்நாளை அதிகரிக்க 6 சதவீத மெழுகுக் கரைசலில் சீப்புகளை 30 முதல் 60 விநாடிகள் நனைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பழங்கள் பழுப்பது தடைபடுவதுடன் அதன் மணமும், சுவையும் அதிகரிக்கும். இதை 12 சதவீத மெழுகில் மீண்டும் ஒரு முறை நனைத்து எடுப்பதால் பழங்களின் வாழ்நாளை 5 வாரங்களுக்கு மேல் நீட்டிக்க முடியும்.
 மேலும், வாழைச் சீப்புகளை பாலித்தீன் பைகளில் 50 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் சேமிக்கும்போது குறைந்த வெப்பநிலையான 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும், வெளி அறை வெப்பநிலையில் 2 வாரங்களும் பழங்களை பழுக்காமல் பாதுகாக்க முடியும்.
பாலித்தீன் பைகளால் மூடுதல்: பழங்களை காற்றோட்டமில்லாத பாலித்தீன் பைகளைக் கொண்டு மூடும் போது பழங்கள் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 100 காஜ் தடிமனுள்ள பாலித்தீன் பைகளில் 2 சதவீத காற்றோட்ட வசதி செய்து, பழங்களை மூடும்போது வெளி அறை வெப்பநிலையிலும், குறைந்த வெப்பநிலையிலும் (13 முதல் 15 சென்டிகிரேட்) பழங்களை 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை பாதுகாக்க இயலும்.
தாவரங்களின் பங்கு: கொக்கோ இலை அல்லது உமியுடன் சேர்த்து வாழைச் சீப்புகளை குறிப்பாக சமையலுக்கான வாழைக் காய்களை பைகளில் சேமிக்கும்போது 30.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் இரு வாரங்களும், 20.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும் தரம் குறையாமல் சேமிக்க இயலும்.

வாழைத் தார்களை மூடுவதற்கு ஊதா நிற பைகளுக்குப் பதிலாக வெள்ளை நிறப் பைகளே சிறந்தது.
இந்தப் பைகளில் அடைப்பதன் மூலம் பழுப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாள்கள் குறையும். மேலும், பழங்களில் பாதிப்பும் குறைவாக இருக்கும்.
இத்தகைய புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழை விவசாயிகள் தங்கள் வருவாயில் 25 முதல் 40 சதவீதம் கூடுதலாக ஈட்ட முடியும் என்கின்றனர் வேளாண் அலுவலர்கள்.
தொடர்புக்கு...: தருமபுரி வருவாய் கோட்டத்தின் வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) தா.தாம்சன். மொபைல் எண்: 94435 63977.
நன்றி :படங்கள் அனைத்தும் http://www.jaffnavoice.com

கொசு வத்தி்(Coil))சுருள் தயாரிப்பு






சுய தொழில்கள் வரிசையில் கொசு விரட்டி தயாரிப்பது பற்றி பதிவு போட்ட நாளிலிருந்து இன்று வரை நிறைய பேர் மிக்க ஆர்வத்துடன் தொலை பேசி, மெயில்கள் மூலமாக மேலதிக விவரங்கள் கேட்ட வண்ணமிருக்கின்றனர். அவர்களுக்காக இத் தொழில் பற்றி மேலும் சில விவரங்கள் திரட்டிக் கொடுக்கலாம் என எண்ணி, மீண்டும் இத் தொழில் செய்து வரும் நண்பர், ராம நாதன்(குனியமுத்தூர்) அவர்களை சந்திக்க கோவை சென்றேன். அவரிடமிருந்து பெற்ற விளக்கங்களையும், கொசு வத்திச் சுருள் தயாரிப்பு முறை பற்றியும் இங்கு தருகிறேன்.

இவர் ஏற்கனவே கொசு வத்தி சுருள்(coils) செய்து,.பெரிய அளவில் விற்பனை செய்து வந்திருக்கிறார்.சந்தையில் ஒரளவு பிரபலமான (Jumbo Elephant co) நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில், அவர்களது இயந்திரத்தில் தயாரித்து விற்பனை செய்திருக்கிறார். அந்த நிறுவனம் அதிக அளவில் அவர்களது சொந்த தயாரிப்புகளை செய்வதால், அதற்கே நேரம் போதவில்லை என்பதால், இவரது ஆர்டரை அவர்களால் செய்து கொடுக்க முடியவில்லை.
இன்னொரு நிறுவனம், பிரபலமான மார்ட்டீன், ஆல் அவுட் போன்ற நிறுவனங்களுக்கு அவர்களது இயந்திரத்தில் செய்து வந்திருக்கிறார்கள். கொஞ்ச காலம் அங்கும் இவரது தயாரிப்புகளை செய்து வந்திருக்கிறார். அங்கும் சிக்கல். அந்த இயந்திரத்தை பெரிய நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கி ஆந்திரா பக்கம் சென்று விட்டது. இவர் கையிலோ நிறைய ஆர்டர்கள், இயந்திரம் சொந்தமாக இல்லாத நிலையில், தொழில் பாதிக்கப் பட்டு முடங்கி விட்டது. இதனால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்ததால், அத் தொழிலை தற்காலிகமாக நிறுத்தி விட்டாராம். அன்றிலிருந்து இன்று வரை அதை மீண்டும் தொடர முடியாத நிலமை. கையில் இன்னும் தினம் 100 கார்ட்டூன்களுக்கான(72000 காயில்கள்) ஆர்டரை வைத்திருப்பதாக கூறுகிறார்.தற்போது  கொசு விரட்டி(Liquid) தயாரிப்பில் இறங்கி இப்போது வரும் ஆர்டர்களுக்கு மட்டும்  செய்து வருகிறார்.அவரிடம் கொசு வத்தி சுருள் மீண்டும் செய்வதாக இருந்தால் என்ன செலவாகும், தயாரிப்பு முறை, சந்தை படுத்துதல் பற்றி கேட்டதற்கு அவர் தரும் விவரம் இதோ:

மாத வருமானம்:

ஒரு மாதத்திற்கு 3000 கார்ட்டூன்கள் என்ற இலக்குடன் தயாரிப்பதற்கு:

இயந்திரம் (அனைத்தும்) ரூ.15 இலட்சம்

2 மாதங்களுக்கான மூலப் பொருட்கள்( 2x3000 கார்ட்டூன்கள்) ரூ.30 இலட்சம்

கட்டிடம், மின்சார இணைப்பு போன்ற கட்டமைப்பு செலவுகள் ரூ.5 இலட்சம்.
ஆக முதலீடு மூலப் பொருட்களும் சேர்த்து ரூ 50 இலட்சம்.

தயாரிப்பு செலவு:

1 கார்ட்டூன்(720 காயில்ஸ்) தயாரிக்க செலவு ரூ.750
மாதம் ஒன்றுக்கு 3000 கார்ட்டுன் செய்ய தயாரிப்பு செலவு.3000x750 = ரூ.22,50,000

விற்பனை:

ஒரு கார்ட்டூன் குறைந்தது ரூ.1000(அதிகபட்சம் ரூ1100) க்கு விற்பனை செய்வதாக இருந்தால்
3000x1000 =ரூ 30,00,000

ஆக நிகர லாபம் = 30,00,000 - 22,50,000 = ரூ 7,50,000 (மாதம் ஒன்றுக்கு)

மாதத்தில் 3000 கார்ட்டூன்கள்(தினம் 100 கார்ட்டூன்) தயாரித்தது போக மீதமுள்ள நேரத்தில் மற்ற கம்பெனிகளின் ஆர்டர்களையும் செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம் என்கிறார்.
இதில் அனைவர்க்கும்  பெரிய சவாலாக இருப்பது  சந்தை படுத்துதல் தான். ஆனால் இவரோ தேவைகளுக்கு அதிகமாகவே ஆர்டர்கள் கிடைக்கும். அந்த அளவுக்கு இதற்கு டிமாண்ட் இருப்பதாக கூறுகிறார். பொது மக்கள் ஒவ்வொரு இரவும் பல கோடி ருபாய்களை எரித்து சாம்பலாக்கும் விந்தையான தொழில் இது. போகப் போக நம் நாட்டில் இதற்கு மவுசு கூடிக் கொண்டு தான் இருக்கும். இலங்கை போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். இத் தொழிலில் உள்ள நிறை,குறைகளைப் பற்றி நேரிடையாகவே இவரிடம் விளக்கம் பெற்று, நன்கு திட்டமிட்டு செய்தால் இதுவும் ஒரு லாபம் கொழிக்கும் தொழில் தான்.
கோவை போன்ற நகரங்களைச் சுற்றியுள்ள Sipcot போன்ற இடங்களில் முறையாக தொடங்கினால் அரசு மானியம், வங்கி கடன் போன்றவை பெற எளிதாக இருக்கும்.

தயாரிப்பு முறை:

மூலப் பொருட்கள்: 20 சதவீதம் நொச்சி இலை,வேப்பிலை,துளசி,கற்றாலை,மஞ்சள், சாம்பிரானி, குங்கிலியம் போன்றவை.

80 சதவீதம் எரி பொருட்களான தேங்காய் சிரட்டைத் தூள்,மரத்தூள் போன்றவை.
ஒரு கிலோ மூலப் பொருட்கள் என்றால் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைய வேண்டும்( இதையெல்லாம் இயந்திரமே செய்து விடும்).
இந்த கலவையை Extruder எனும் இயந்திரத்தில் கொடுத்தால் அது 4mm thickness, 12cm அகலத்தில் sheet ஆக தயாரித்துக் கொடுக்கும்.

பின், இந்த sheet ஐ பஞ்சிங் இயந்திரத்தில் கொடுத்தால் அது double coil களாக

அடித்து கொடுக்கும். பின் இந்த coil கள் dryer m/c மூலம் coilல் உள்ள நீர்ப் பதம் முழுதும் ஆவியாகி விடும்.
பின் packing m/c மூலம் பெட்டிகளில் அடைக்கப் பட்டு விற்பனைக்கு ரெடியாகி விடும்.
இந்த Process அனைத்தும் முழுக்க முழுக்க இயந்திரங்கள் மூலமே நடைபெறும். இந்த மூலிகை கொசு வத்தி சுருளினால்  எந்த விதமான பாதிப்போ,பின் விளைவுகளோ கிடையாது மற்ற பிரபலமான பிராண்டுகளில் கெமிக்கல் கலந்து தயாரிப்பதால் குழந்தைகளுக்கும், ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்களுக்கும் ஏற்றதல்ல. ஆனால் இந்த மூலிகை சுருளை குழந்தைகள், நோயாளிகள் தூங்கும் அறைகளில் கூட உபயோகிக்கலாம்.

இத் தகவல்கள் அனைத்தும் திரு.ராமநாதன் அவர்களிடமிருந்துப் பெறப்பட்டவை..
மேலதிக விபரங்கள் பெற அவரை தொடர்பு கொள்ள 0091-9382307952










பேப்பர் கவர் தயாரிப்பில் அசத்தும் தோழிகள்


வீட்டில் காகிதம் கிடந்தால் குப்பை தொட்டியில் போடுவதற்கு பதில் கொஞ்சம் யோசித்தால் போதும்; சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு. பணமாக்கவும் முடியும் என்பதை நிரூபித்துள்ளனர் ஊட்டி தோழிகள் காஞ்சனா, ஜெனீபர் ஆகியோர். மிக குறைந்த வருமானம் கொடுத்த தொப்பி தைக்கும் தொழிலை விட்டு பழைய பேப்பரை வாங்கி காகித பை தயாரிக்க ஆரம்பித்தவர்களுக்கு தற்போது மாதம் தோறும் நிலையமான வருமானத்திற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளது.
ஊட்டி ஹில்பங்க் அருள் நகரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஜெனிபர், ராஜா என்பவரின் மனைவி காஞ்சனா. இவர்கள் இருவரும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் தொப்பி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளனர். அப்போது ஒரு தொப்பி தயாரித்து கொடுத்தால் (தைப்பது) ரூ.1 வீதம் வழங்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு கம்பெனிக்குள் சென்றால் மாலை 6 மணிக்குத்தான் வீட்டிற்கு வர முடியுமாம். இந்த இடைப்பட்ட நேரத்தில் மிஷினை விட்டு வெளியே வரமுடியாது. ஒரு நாளுக்கு 100 தொப்பிகள் வரை தைத்து வந்துள்ளனர். இதன் மூலம் ஒரு நாள் முழுவதும் உழைத்தால் ரூ.100 மட்டுமே வருமானம் கிடைத்து வந்துள்ளது.
தொப்பி தயாரிக்கும் வேலையை விட்டு விட்டு வீட்டிலேயே பேப்பர் கவர்களை தயாரிக்கும் தொழிலில் கடந்த 8 ஆண்டுக்கு முன் ஜெனீபர் ஈடுபட துவங்கினார். பின் இவருடன் காஞ்சனாவும் பேப்பர் கவர் தயாரிப்பில் ஈடுப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை சட்டம் சற்று கடுமையாகவே பேப்பர் கவர்களுக்கு கிராக்கி அதிகமானது
தற்போது தினமும் 100 கவர்களை கொண்ட 20 கட்டுக்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். கவர்களின் அளவுக்கு ஏற்றார் போல் விலையும் மாறுபடுகிறது. சிறிய புத்தகங்கள் முதல் பெரிய நாளிதழ்களை கொண்டு கவர்கள் தயாரிக்கப்படுகிறது. தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இருவரும் ரூ.20 ஆயிரம் சம்பாதித்து வருகின்றனர். இதற்கென பெரிய அளவிலான மூல தனம் ஒன்றும் கிடையாது. பழைய பேப்பர் கடைகள், வீடுகளில் வாங்கும் பேப்பர்கள் மற்றும் புத்தகங்களை குறைந்த விலைக்கு வாங்கி வீட்டிலேயே உட்கார்ந்து இந்த கவர்களை செய்கின்றனர்.
சாதாரண பழைய பேப்பர் என்று நினைக்காமல் அதனை முறையாக பயன்படுத்தி மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் சம்பாதித்து வரும் ஜெனிபர் மற்றும் காஞ்சனாவை பார்த்து பல பெண்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்தவர்களிடம் வேலைக்கு சென்று கஷ்டப்படுவதைவிட சுய தொழில் செய்தால் கை நிறைய சம்பாதிப்பது மட்டுமின்றி குடும்பத்தையும் பராமரிக்க முடிகிறது என ஜெனிபர் மற்றும் காஞ்சனா ஆகியோர் தெரிவித்தனர்.
அவர்கள் இருவரும் கூறுகையில், தொப்பி தயாரிக்கும் வேலை சற்று கடினமானது. ஆனால் ஊதியம் மிகவும் குறைவு. லீவு எடுக்க முடியாது. குழந்தைகளை கவனிக்க முடியாது. மன உளைச்சலுடனே இருக்க வேண்டியிருந்தது. பேப்பர் கவர் தயாரிக்க ஆரம்பித்தவுடன் நாங்கள் அதிகம் சம்பாதிக்கிறோம். வீட்டு வேலை மட்டுமின்றி குடும்பத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ள முடிகிறது. நாங்கள் துவக்கத்தில் கடைகளுக்கு சென்று கவர்கள் வேண்டுமா என கேட்கும் போது சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. தற்போது எங்களை பார்த்து கவர்களை சீக்கிரம் கொண்டு வாங்க என கடைக்காரர்கள் அன்பாக மிரட்டுகின்றனர். பழக்கடைகள், சில்லரை கடைகளில் எங்கள் கவர்களுக்கு அதிக மவுசு. தற்போது நாங்கள் தயாரிக்கும் கவர்களுக்கு கிராக்கி அதிகம். எனினும் அதிகளவு தயாரித்து கொடுக்க முடியவில்லை என்றாலும் நாள் தோறும் சுமார் 20 முதல் 25 கட்டுக்கள் தயாரித்து கொடுத்து விடுகிறோம். கை நிறைய சம்பாதிக்கிறோம். சந்தோஷமாக உள்ளது என்றார்.
துவக்கத்தில் கடைகளுக்கு சென்று கவர்கள் வேண்டுமா என கேட்கும் போது சற்று கூச்சமாகவும் தயக்கமாகவும் இருந்தது. தற்போது எங்களை பார்த்து கவர்களை சீக்கிரம் கொண்டு வாங்க என கடைக்காரர்கள் அன்பாக மிரட்டுகின்றனர்.

அதிக லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்!



ஏ.கருணாகரன் : சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு காரணமாக பாலிதீன், பிளாஸ்டிக் கவர்களுக்கு பதிலாக, பேப்பர் கவர் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று சொல்கிறார், பொள்ளாச்சி ஊஞ்சவேலாம்பட்டியில் பேப் பேக்ஸ் எனும் நிறுவனம் நடத்தி வரும் தனராஜ். அவர் கூறியதாவது: பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன்.

பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன. கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது.

பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.
செலவு, வருவாய்

ஒரு நாளில் 200 கிலோ பேப்பர் வீதம் மாதத்தில் 25 நாளில் 5 டன் பேப்பரில் கவர்கள் தயாரிக்கலாம். ஒரு கிலோ பேப்பர் ரூ.29 வீதம் 5 டன்னுக்கு ரூ.1.45 லட்சம், வாடகை ரூ.2500, மின்கட்டணம் ரூ.1000, 3 தொழிலாளர்கள் சம்பளம் ரூ.15 ஆயிரம். இதர செலவுகள் ரூ.5 ஆயிரம் என மாதத்துக்கு ரூ.1.68 லட்சம். கவர்கள் 100 எண்ணிக்கை வீதம் சராசரி விலை: 6 செமீ அகலம், 10 செமீ நீளமுள்ளவை ரூ.30, 7ஜ்12 ரூ.36, 9ஜ்13ரூ.46, 10ஜ்16ரூ.65, 12ஜ்19 ரூ.85, 14ஜ்18ரூ.100, 14ஜ்22ரூ.115, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33 ஆகியவை ரூ.150, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37 ஆகியவை ரூ.230, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39 ரூ.250, 31ஜ்44ரூ.480, 36ஜ்48 ரூ.570க்கு விற்கப்படுகிறது. இந்த விற்பனை விலையோடு, உற்பத்தி செலவை ஒப்பிடுகையில் குறைந்தபட்சம் 10 சதவீத லாபம் அல்லது மாதம் சராசரியாக ரூ.20 ஆயிரம் வரை கிடைக்கும். கடைகளில் நேரில் ஆர்டர் எடுத்து சப்ளை செய்தால் கூடுதல் விலைக்கு விற்கலாம். லாபமும் அதிகரிக்கும். உற்பத்தியை அதிகரித்தால் அதற்கேற்ப லாபம் கூடும்.
கட்டமைப்பு : 20 அடி நீளமும் 16 அடி அகலமும் கொண்ட ஷெட். இதை 3 பகுதியாக பிரித்து ஒரு பகுதியில் இயந்திரம், மற்ற பகுதிகளில் அலுவலகம், ஸ்டோர் ரூம் என பயன்படுத்தலாம். வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். ஒரு எச்பி மின் இணைப்பு (ரூ.2 ஆயிரம்) வேண்டும்.
முதலீடு: பேப்பர் கவர் இயந்திரம் ரூ.2.5 லட்சம், 2 டேபிள் ரூ.8 ஆயிரம், 4 அலுவலக சேர்கள் ரூ.1,000, பசை காய்ச்ச இரும்பு அடுப்பு, அலுமினிய பாத்திரம், பிளாஸ்டிக் வாளி , 2 மக் உள் ளிட்ட இதர பொருட்கள் ரூ.1000.
முதலீட்டுக்கு ரூ.2.82 லட்சம் தேவை. (முதல் மாத உற்பத்தி செலவு ரூ.1.68 லட்சம் தனி)
தேவையான பொருட்கள் : பேப்பர் கவருக்கென பிரவுன் நிற கிராப் பேப்பர் (கிலோ ரூ.29), ரப்பர் பேண்ட் (கிலோ ரூ.350), பசை காய்ச்ச மரவள்ளிக்கிழங்கு மாவு, துத்தம், பிளாஸ்டிக் கட்டு கயிறு.
கிடைக்கும் இடங்கள்: பேப்பர் கவர் இயந்திரங்கள் பொள்ளாச்சி, கோவை நகரங்களிலும், கிராப் பேப்பர் உடுமலை உள்ளிட்ட பேப்பர் மில்களிலும் கிடைக்கிறது.
விற்பனை வாய்ப்பு: மருந்து கடையில் சிறிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படுகிறது. பேக்கரி, பேன்சி ஸ்டோர், டெக்ஸ்டைல், லாண்டரி, டெய்லரிங் ஆகியவற்றில் பெரிய பேப்பர் கவர்கள் பயன்படுத்தப்படு கின்றன. இதனால் விற்பனை வாய்ப்புக்கு பஞ்சமில்லை. கடைகளுக்கு நேரடியாகவோ, பேப்பர் கவர் மொத்த விற்பனை கடைகளுக்கோ வாடிக்கையாக சப்ளை செய்யலாம்.
தயாரிப்பு முறை

பேப்பர் ரோல் 13.5 செமீ, 15.5, 19.5, 21.5, 25.5, 29.5, 37.5, 45.5, 53.5, 63.5, 73.5 செமீ என பல்வேறு அகலங்களில் கிடைக்கிறது. அதன் மூலம் 10 செமீ நீளம், 6 செமீ அகல கவர் முதல் 7ஜ்12, 9ஜ்13, 10ஜ்16, 12ஜ்19, 14ஜ்18, 14ஜ்22, 18ஜ்24, 18ஜ்26, 18ஜ்28, 18ஜ்33, 22ஜ்26, 22ஜ்28, 22ஜ்30, 22ஜ்33, 22ஜ்37, 26ஜ்33, 26ஜ்37, 26ஜ்39, 31ஜ்44, 36ஜ்48 ஆகிய அளவுள்ள கவர்கள் தயாரிக்கலாம்.
வெவ்வேறு அளவு கவர்களை தயாரிக்க அதற்குரிய பிளேட், பேப்பர் ரோலை இயந்திரத்தில் பொருத்த வேண்டும். கவரின் மத்திய பகுதி மற்றும் கீழ் பகுதியை ஒட்ட தேவையான பசையை இயந்திரத்தில் உள்ள டேங்க்கில் நிரப்ப வேண்டும்.
பின்னர் இயந்திரத்தை இயக்கினால் பிளேட்டின் கீழ்பகுதி வழியாக பேப்பர் ஓடும். அதன் மேல் பகுதியில் பேப்பர் மடித்து, கவரின் மத்திய பகுதியில் பசை ஒட்டும். அங்கிருந்து நகரும் பேப்பர் குறிப்பிட்ட அளவில் துண்டிக்கப்பட்டு அடுத்த பகுதிக்கு செல்லும். அங்கு கீழ் பகுதி ஒட்டப்பட்டு கவர் தயாராகும். உற்பத்தியான கவர் 50 எண்ணிக்கை சேர்ந்தவுடன் ஒரு முறை விளக்கு எரியும். கவர்களை 50 அல்லது 100 எண்ணிக்கையில் அடுக்கி ரப்பர் பேண்ட் போட்டால் விற்பனைக்கு தயார். இயந்திரம் துவக்கத்தில் ஓடும்போது பசை சீராக செல்கிறதா, ஒட்டப்படுகிறதா, சரியான அளவுகளில் வெட்டப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். ஓட்டம் சீரானவுடன் ஒரு இயந்திரம் மூலம் நாள்தோறும் 8 மணி நேரத்தில் 200 கிலோ பேப்பரில் கவர் தயாரிக்கலாம். அளவுகளுக்கேற்ப இந்த எண்ணிக்கை மாறுபடும். லாபம் தரும் காகித பை தயாரிப்பு
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம் என்கிறார்
காகிதப் பை வகைகள்

ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.
தேவைப்படும் பொருட்கள்: பழைய அல்லது புதிய பேப்பர்கள். பேப்பரின் வகைகளான டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன்ஷீட், சார்ட் ஆகியவை.
இயந்திரம்: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின்.

உற்பத்தி பொருட்கள்: மெட்டல் வளையம், பசை, கைப்பிடிக்குத் தேவையான கயிறு.

கிடைக்கும் இடங்கள்: பேப்பர்கள் பழைய பேப்பர் கடைகளிலும், கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் சென்னை, பெங்களூர், கோவை, ஐதராபாத் நகரங்களிலும், இதர வகை பேப்பர்கள் மற்றும் பொருள்கள் சிறு மற்றும் பெரு நகர ஸ்டேஷனரி, பேன்சி ஸ்டோர்களிலும் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

எந்த வகை பேப்பர் ஆனாலும், தயாரிப்பு முறை ஒன்றுதான். முதலில் தயாரிக்கப்படவுள்ள அளவை பேப்பரில் ஸ்கேல் வைத்து அளந்து மார்க் செய்ய வேண்டும். அதை கையால் இயக்கக்கூடிய கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷினில் வைத்து தேவையான அளவுகளில் வெட்டியும், கீழ்பகுதியில் மடக்கியும் கொள்ளலாம். அடிப்பாகத்தை வலுப்படுத்த, அட்டை ஒட்ட வேண்டும்.
கைப்பிடி சேர்க்க மேல்பாகத்தின் நடுவில் இருபுறமும் 2 துளைகளை போட வேண்டும். துளை போட அந்த மெஷினையே பயன்படுத்த வேண்டும். ஓட்டைகள் கிழியாமல் இருக்க, மெட்டல் வளையத்தை பிரேம் செய்ய வேண்டும். கடைசியாக துளையில் கயிறு கோர்த்து முடிச்சுபோட்டால் பேப்பர் பை தயார்.
விற்பனை வாய்ப்பு

பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஜவுளி, டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள் என பல்வேறு வியாபார நிறுவனங்களில் ஆர்டர்பிடிக்கலாம். காகிதப் பைகளில் நிறுவனங்களின் பெயர்களை அச்சடித்து கொடுத்தால் பைகளுக்கு மதிப்பு கூடும். அதுபோல நாம் உருவாக்கும் டிசைன்களுக்கு ஏற்ப அதிக விலையும் கிடைக்கும்.
லாபம்

மீடியம் அளவான 11க்கு 9 செ.மீ. பையில், தாங்கு திறனுக்கேற்ப 200 கிராம் முதல் 6 கிலோ எடையுள்ள பொருள்களை வைக்கலாம். செய்தித்தாள் பைகளில் குறைந்த எடை, பெரிய தோற்றமுள்ள பொருட்களை வைக்கலாம். ஒரு மீடியம் சைஸ் காகிதப் பை தயாரிக்க ரூ.3, டியூப்ளக்ஸ் பை தயாரிக்க ரூ.4, கோல்டன் யெல்லோ ஷீட் பை தயாரிக்க ரூ.3.25, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தயாரிக்க ரூ.3.25 செலவாகிறது. இதில் காகிதப் பை, கோல்டன் ஷீட் பை, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பைகள் தலா ரூ.5க்கும், டியூப்ளக்ஸ் பைகள் ரூ.7க்கு விற்கிறது.
இதன் மூலம் பைக்கு ரூ.2 முதல் ரூ.3 வரை லாபம். இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை கிடைக்கும். ஒரு மெஷினில் ஒருவர் கட்டிங் செய்து, மற்றொருவர் கிரீசிங் செய்து, இன்னொருவர் துளையிட்டு கயிறு கோர்த்தால் மாதம் 6 ஆயிரம் பை தயாரிக்கலாம். லாபமும் அதற்கேற்ப அதிகரிக்கும்.
பயிற்சி: பேப்பர் பை தயாரிப்பு தொடர்பான பயிற்சியை வேளாண் பல்கலைக்கழகம், மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் பயிற்சியாளர்கள் மூலம் கட்டண முறையில் ஒரு நாள் முதல் ஒரு வாரம் கால அளவில் அளித்து வருகின்றன.
முதலீடு

கட்டமைப்பு: மெஷின் நிறுவ, பணியாற்ற 10க்கு 10 அடி அறை போதும். பைகளை இருப்பு வைக்கவும், அலுவலக பயன்பாட்டிற்கும் கூடுதலாக ஒரு அறை தேவை.
நிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.
உற்பத்தி செலவு

ஒரு மெஷினில் ஒரு நாளில் ஒருவர் 11க்கு 9 செ.மீ அளவிலான 75 பைகளை வெட்டி, கிரீசிங் செய்து, துளையிட்டு, கயிறு கோர்த்து தயார் செய்யலாம். இதற்கு எந்த வகை பை தயாரிக்கிறோமோ அந்த வகை காகிதம் ஒரு கிலோ போதுமானது. அதன்படி மாதத்துக்கு 26 கிலோவில் 2 ஆயிரம் பைகள் தயாரிக்கலாம். சாதாரண காகிதம் 26 கிலோ ரூ.260, டியூப்ளக்ஸ் போர்டு ரூ.1690, கோல்டன் யெல்லோ ஷீட் ரூ.910, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் ரூ.750. பசை 26 கிலோ ரூ.260, கைப்பிடி கயறு 5 மீட்டர் ரூ.130, மெட்டல் வளையம் ரூ.20, பென்சில் 2க்கு ரூ.10. உற்பத்தியாளர் சம்பளம் மாதம் ரூ.5200.
சாதாரண பை தயாரிக்க மாதத்துக்கு மொத்தம் ரூ.5,880, டியூப்ளக்ஸ் போர்டு பைகள் தயாரிக்க ரூ.7990, கோல்டன் யெல்லோ ஷீட் தயாரிக்க ரூ.6530, பிரவுன் ஷீட் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் தயாரிக்க ரூ.6370 செலவாகிறது. இதில் கூலியாள் இல்லாமல் நாமே உற்பத்தியில் ஈடுபட்டால் குறைந்தபட்சம் ரூ.680, அதிகபட்சம் ரூ.1690 உற்பத்தி செலவுக்கு போதும்.
காகிதப் பொருள்கள் செய்முறை பயிற்சி முகாம்

சென்னை, ஜன. 28: காகிதப் பொருள்கள் செய்முறை பயிற்சி முகாமை சென்னை கிண்டியில் உள்ள மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிலையம் (எம்.எஸ்.எம்.இ.) பிப்ரவரி 27-ம் தேதி முதல் மார்ச் 2-ம் தேதி வரை நடத்துகிறது.பேப்பர் கோப்பைகள், பேப்பர் தட்டுகள், பேப்பர் பைகள் ஆகியவற்றை தயாரிப்பது குறித்த பயிற்சிகள் இந்த முகாமில் அளிக்கப்படும்.பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் எம்.எஸ்.எம்.இ. உதவி இயக்குநர் என். சிவலிங்கத்தை 9940318891, 9940693588 ஆகிய செல்பேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites