இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Sunday, February 24, 2019

குல்பி

ஜில் ஜில் கூல் கூல் குல்பி

விடுமுறை நாட்கள் தொடங்கி விட்டது, அதிகபடியான வெயிலும் தொடங்கி விட்டது... இந்நேரத்தில் அனைவரும் விரும்புவது ஜில்லுனு ஒரு ஐஸ் கிரீம்... சிறுவர்கள் வீட்டுலே இருப்பதால் தினமும் ஐஸ் கிரீம் வாங்கி தர சொல்லுவார்கள்.. எனவே இன்று நாம் வீட்டுலேயே எப்படி சுலபமா ஐஸ் கிரீம் செய்வதுனு பார்போம்.. (ஆமாம் இருக்குற கரண்ட் பிரச்சனைல எங்கேந்து ஐஸ் கிரீம் செய்வதுனு ! உங்க மனசு சொல்லுறது கேக்குதுங்க... அதுக்கும் ஒரு டிப்ஸ் கடைசியா சொல்லுறேன்.. )


தேவையான பொருட்கள் 
பால் - 1 லிட்டர்
மில்க் மேட் - 3 ஸ்பூன்
சக்கரை - 5 ஸ்பூன்
மைதா / சோள மாவு - 2 ஸ்பூன்
குங்கும பூ - 1 சிட்டிகை
பிஸ்தா, பாதாம் பருப்பு - தலா 5

செய்முறை

 • பாலை நன்றாக காச்ச வேண்டும். பால் நல்லா திக்கான வுடன் நிதானமான தீயில் வைத்து  கொள்ளவும்.

 • குங்குமபூ, சக்கரை, மில்க் மேட் சேர்த்து கிளறவும்.
 • சக்கரை கரைந்தவுடன் பாதாம், பிஸ்தா பருப்பை ஒன்னும் பாதியாகவும் உடைத்து அதனுடன் சேர்க்கவும்.


 • கடைசியாக மைதா மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றி கிளறவும். 

 • 5 நிமிடம் கொதிக்க வேண்டும். கஞ்சி போல் வந்து விடும்.
 • இப்பொழுது அடுப்பை அனைத்து விடவும். சூடு அடங்கியதும் குல்பி மோல்டில் ஊற்றி ப்ரிட்ஜில் பிரீசரில் வைக்கவும்.
 • குறைந்தது 6 மணி நேரம் கழித்து பரிமாறவும். ஜில் ஜில்  கூல் கூல் குல்பி தயார்.
குறிப்பு
 • தேவையான பொருட்களில் மில்க் மேட் வீட்டில் இல்லை என்றால் கவலை வேண்டாம், அதற்கு பதில் சக்கரையின் அளவை அதிகமாகி கொள்ளவும். பெரிய மாற்றம் தெரியாது.
 • இனிப்பின் அளவு அதிகமாக இருக்க வேண்டும் அப்போது  தான் ஐஸ் கிரீம் செட்  ஆனவுடன் சுவைத்தால் செரியாக  இருக்கும். 
 • வீட்டில் கேசர் பாதாம் காம்ப்ளான் (kesar badam flavour complan) இருந்தால் அதையும் ஒரு ஸ்பூன் சேர்த்து கொள்ளுங்கள்  சுவை கூடும்.
 • இதே முறையில் குங்கும பூக்கு பதிலாக  சிறிது வெண்ணிலா எசென்சு சேர்த்தால் வெண்ணிலா ஐஸ் கிரீம் தயார்.
 • விரைவாக ஐஸ் கிரீம் செட்டாக வேண்டும் என்றால் அலுமினிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். 3 மணி நேரத்தில் செட் ஆகி விடும். 

 • குல்பி மொல்ட்கள் இப்பொழுது அலுமிநியதிலும் கிடைகிறது.

சீமாறு | துடைப்பம் தயாரிப்பு

வருமானத்தைப் ‘பெருக்கலாம்’!
பா ர்த்தால் சின்ன துடைப்பம்தான்... ஆனால், அதற்குப் பின்னால் கொட்டிக்கிடக்கும் வருமானத்தைப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
‘‘நம் மாநிலத்தில் தென்னைமரம் இல்லாத ஊர் கிடையாது. அதனால், இந்த தென்னந்துடைப்பம் தொழிலுக்கு எந்தப் பிரச்னையும் இருக்கப் போவதில்லை. சிறிய அளவில் தொழில் தொடங்க நினைப்பவர்கள் தாராளமாக இந்தத் தொழிலில் இறங்கலாம்’’ என்று நம்பிக்கை கொடுக்கிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த பைசுல் ஹுசைன்.
இந்த சுற்றுவட்டாரத்தில் மட்டும் 10 துடைப்பம் மண்டிகள் இருக்கின்றன. இங்கு தயாராகும் தென்னந்துடைப் பங்கள் வட மாநிலங்களில் ஏக பிரசித்தம்.
40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், குறைந்தபட்சம் மாதம் 10 ஆயிரம் ரூபாய் வருமானம் பார்க்கலாம். மழைக் காலம் தொழில் நடத்த ஏதுவாக இருக்காது.
இந்தத் தொழிலின் தன்மை பற்றி விவரித்தார் பைசுல்ஹுசைன். ‘‘வீடு, தோப்புகளில் கிடைக்கும் தென்னங்கீற்றுகளில் இருந்து கிழித்து எடுக்கப்பட்ட குச்சிகளைச் சேர்த்துக்கட்டி, துடைப்பமாக்கி வைப்பார்கள். அதை இரண்டு அல்லது மூன்று ரூபாய் கொடுத்து வாங்கி மொத்த வியாபாரிகளுக்குக் கொடுத்து லாபம் பார்க்கும் சிறு தொழிலாளிகளும் இருக்கிறார்கள்.
சுமார் அரைக்கிலோ எடை நிற்கும் துடைப்பத்தை வாங்கி வந்து மொத்த வியாபாரியிடம் கொடுக்கும்போது அவர்கள் எடைபோட்டுத்தான் எடுக்கிறார்கள். ஒரு கிலோவுக்கு குறைந்தபட்சம் எட்டு ரூபாய் கிடைக்கிறது. ஆக, ஒரு துடைப்பத்துக்கு லாபமே இரண்டு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். ஒரு நாளில் 200 துடைப்பங்களைக்கூட சேகரிக்கிறார்கள். அவர்களுடைய தினசரி வருமானம் 300 முதல் 400 ரூபாயாக இருக்கிறது. செலவுகள் எல்லாம் போக லாபமாக குறைந்தபட்சம் 250 ரூபாய் சம்பாதிக்கிறார்கள்’’ என்றார்.
இந்தத் தொழிலில் இன்னொரு தரப்பு, மொத்த வியாபாரிகள்... இவர்கள் சேகரிக்கும் துடைப்பங்களைத் தரம் பிரித்து, ஐம்பது ஐம்பதாக பிளாஸ்டிக் பைகளில் பேக் செய்து ஃபார்வேர்டிங் ஏஜென்ட்கள் மூலமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
ஒரு பண்டலின் விலை 300 முதல் 800 ரூபாய் வரையில் தரத்துக்கு ஏற்ப அமைகிறது. ஃபார்வேர்டிங் ஏஜென்ட்களுக்கு 3% கமிஷன் கொடுத்தாலும் மொத்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது.
இதில் துடைப்பங்களை அடுக்கி வைப்பதற்கு இடம், அதை தரம்வாரியாக பிரித்து சுத்தம் செய்வதற்கு வேலையாட்கள் என்கிற அளவில் சிறு முதலீடு செய்ய வேண்டியிருக்கும்’’ என்றார்.
மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் துடைப்பங்களுக்கான சீசன் உச்சத்தில் இருக்கும். மழைக்காலம் தவிர்த்த மற்ற மாதங்களிலும் நிரந்தர வருமானம் கிடைக்கக்கூடிய தொழில் இது.
அதோடு, சராசரியாக 100 பேருக்கு வேலை வாய்ப்பும் வழங்கக்கூடிய தொழிலாக இருக்கிறது.
சுத்தமாக இருக்கப் பயன்படுத்தும் துடைப்பங்கள் நமக்குச் சோறு போடும் என்பது இந்தத் தொழிலுக்கு நிச்சயம் பொருந்தும்!

ஜாம் பதபடுத்தல் தொழில்


ஆர்வம் இருக்கிறதா...
அள்ளுங்க வாய்ப்பை!
தொ ழில் தொடங்க ஆசைப்படுபவர் களுக்கு வாய்ப்பு தரும் வளமான நிலமாக இருக்கிறது கோவை, வேளாண் பல்கலைக்கழகம்.
வேளாண் பல்கலைக்கழகம் தந்தாலும் இது விவசாயத் தொழில் வாய்ப்பு இல்லை... உணவுப் பொருள் சார்ந்த தொழிலைத்தான் ஊக்குவிக்கிறது பல்கலைக் கழகம். கனடா நாட்டின் சர்வதேச மேம்பாட்டு முகமை உதவி யுடன் நடத்தப்படும் இந்தத் திட்டம் பற்றிப் பேசினார், அதைச் செயல்படுத்தும் தொழில் நுட்ப மையத்தின் தலைவராக இருக்கும் பேராசிரியர் தங்கவேல்.
‘‘குறைந்த மூலதனத்தில் சுயமாகத் தொழில்செய்ய விருப்பம் உள்ளவர் களுக்கு பயிற்சி கொடுத்து அவர்களை முன்னேற்றும் திட்டம் இது!
இந்தப் பயிற்சித் திட்டதில் சேர, வயது வரம்பு, கல்வித்தகுதி எதுவும் தேவையில்லை. தொழில் செய்வதற்கான குறைந்தபட்ச முதலீடு, உழைப்பதற்கான உற்சாகம், முயற்சி போதும்!
இங்கு அளிக்கப்படும் பயிற்சிகள், பாட்டில் மற்றும் டின்களில் பழரசம், ஜாம் போன்ற உணவுப் பொருட்களை பதப்படுத்தி அடைத்து அனுப்புவது எப்படி? என்பதுதான்!
பேக்கரி மற்றும் கன்ஃபெக்ஷனரி தயாரிப்புகள், மசாலா பொடி போன்ற சமையல் பொருட்களையும் தயாரிக்க பயிற்சி அளிப்பதோடு அவற்றை மார்க்கெட்டிங் செய்வது தொடர் பான ஆலோசனைகளும் வழங்கு கிறோம்’’ என்றார் தங்கவேல்.
ஒரு மாத பயிற்சி, 10,000 ரூபாய் கட்டணம் என்பதாக இருக்கிறது இந்தப் பயிற்சிமுறை! பயிற்சி முடிந்தபின் வழங்கப்படும் சான்றிதழை வைத்து வங்கிக் கடன் பெற்று சுயமாகத் தொழில் தொடங்கலாம்.
‘‘பெரிய இயந்திரங்களை நிறுவித்தான் தொழிற்சாலையை ஆரம்பிக்க வேண்டும் என்பதில்லை. எங்கள் மையத்தில் உறுப்பினர் களாகச் சேர்ந்து, குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்திவிட்டு எங்களிடம் உள்ள பதப்படுத்து தலுக்குத் தேவையான இயந்திரங் களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுயமாக இதுபோன்ற தொழில் கூடத்தை உருவாக்கவும் ஆலோசனை கள் வழங்குகிறோம். இளைஞர்கள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் இதன்மூலம் பயன்பெறு கிறார்கள்’’ என்றார்.
மாதம் தோறும் இருபது நபர்களுக்கு இந்த மையத்தின் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள், ஒரு வாரம், ஒரு மாதம் என்று பிரிவுகளாக நடத்தப்படுகிறது. சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. இந்தப் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆர்வமுள்ளவர்களை அழைக்கிறது பல்கலைக் கழகம்!

சாஸ் தயாரியுங்க… ஜமாயுங்க

வ ல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்பார்கள். அதேபோல கிடைக்கிற பொருள் எதுவாக இருந்தாலும் அதை வைத்து தொழில் நடத்தி லாபம் பார்க்க முடியும் என்பதற்கு சாஸ் தயாரிப்பு எளிய உதாரணம்!
சென்னையில் சாஸ் தயாரிப்பில் முழுவேகத்தில் செயல்பட்டு வரும் ளிபிவிஷி நிறுவனத்தின் சுப்பாராவையும் தியாகராஜனையும் சந்தித்துப் பேசிய போது, சாஸ் தயாரிப்பு வீட்டில் இருந்தே சிறு தொழில் செய்ய ஆசைப்படும் பெண்களுக்கு ஏற்ற வாய்ப்பு என்பது புரிந்தது.
‘‘இருபது ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு ஓட்டலில் சுவைத்த சாஸ், எங்கள் ஆர்வத்தைத் தூண்ட, இப்போது தமிழ்நாடு முழுக்க சாஸ் சப்ளை செய்யும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம்’’ என்றார்கள் இருவரும்!
இப்போது பாஸ்ட்ஃபுட் கடை களும், ஓட்டல்களும் பெருகிக் கொண்டே இருப்பதால் மார்க்கெட்டில் சாஸ்களுக்கு டிமாண்ட் குறையவே போவதில்லை. அதனால், நம்பிக்கை யோடு சாஸ் தயாரிப்பில் இறங்கலாம்.
‘ஒரு கிலோவுக்கு அரைலிட்டர் சாஸ்... இதுதான் அளவு! எந்தளவுக்கு சாஸ் தயாரிக்கவேண்டுமோ அதைப்போல இரண்டு மடங்கு தக்காளியை வேகவைத்து, அரைத்து வடிகட்டி, அதோடு சர்க்கரை அல்லது மிளகாய் தூள், உப்பு, வினீகர் போன்றவற்றை சுவைக்கு ஏற்ப சேர்த்து கூடவே, நன்கு அரைத்த வெங்காயம் மற்றும் லவங்கம், பட்டை, கிராம்பு பவுடர் சேர்த்து மீண்டும் வேகவைத்து இறக்கினால் சாஸ் ரெடி! தக்காளியைக் கொண்டே புளிப்பு, காரம், இனிப்பு என பல சுவைகளில் சாஸ் தயாரிக்கலாம்’’ என்றார் சுப்பாராவ்.
தியாகராஜன், ‘‘இதை சிறிய அளவில் செய்யும்போது வீட்டில் வைத்தே தயாரிக்கலாம். தக்காளிப் பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி வேக வைத்து அரைத்துக் கொடுப் பதற்கு மெஷின் உள்ளது. வடிகட்டிய தக்காளி ஜூஸைப் பதமாக வேக வைக்க நீராவிக் கலன் உள்ளது. தக்காளி சாஸை பாட்டில் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து விற்கலாம்.
மூலப்பொருளான தக்காளி உள்ளூரிலேயே கிடைக்கிறது. அதிகளவில் தயாரிக்கும்போது விவசாயிகளிடம் ஒப்பந்த முறையில் நேரடியாக வாங்கிக்கொள்ளலாம். சிறிய அளவில் தயாரித்து விற்பனை செய்வதாக இருந்தால் இயந்திரங்கள் எதுவும் வாங்கத் தேவையில்லை. வீட்டிலேயே மிக்ஸியில் அரைத்து அடுப்பில் கொதிக்க வைத்து தயாரித்துவிடலாம். நமக்கு என்று தனி மார்க்கெட்டை பிடித்துக் கொண்ட பின்னர், இயந்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்’’ என்றார்.
சுப்பாராவ் தொடர்ந்தார். ‘‘உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்கு ‘மினிஸ்டரி ஆஃப் ஃபுட் ப்ராஸசிங்’ என்ற மத்திய அரசு அலுவலகத்தில் சான்றிதழ் வாங்க வேண்டும். இவர்கள் லைசென்ஸ் கொடுத்தால் மட்டுமே பெரிய அளவில் தயாரித்து விற்பனை செய்யமுடியும். தயாரிப்பு சாம்பிளை ஆய்வுசெய்த பின்னர், நம்முடைய தயாரிப்பு இடத்தை ஆய்வு செய்ய வருவார்கள். மேலும் சாஸ் தயாரிக்கப் பயன்படுத்தும் தண்ணீரையும் ஃபுட் ப்ராஸசிங் அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள். எனவே தரக்கட்டுப்பாடு என்பது இதில் மிக முக்கியம்!
தற்போது பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்பு அதிக அளவில் இருந்து வரும் நிலையில் உள்நாட்டு தயாரிப்புகளுக்கும் ஏக வரவேற்பு இருக்கிறது. சாஸ் தயாரிப்பில் இறங்கும்முன், நம் இடத்தைச் சுற்றி எவ்வளவு ஃபாஸ்புட் கடைகள் இருக்கின்றன, எவ்வளவு ரெஸ்டாரென்ட்களில் சாஸ் பயன்படுத்துகிறார்கள் என்பது குறித்து ஓர் ஆய்வு செய்யவேண்டும். அவர்களிடம் சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். தக்காளியைத் தவிர, பிற காய்கறிகள் விலை குறைவாகக் கிடைக்கும்போது அதை வாங்கியும் சாஸ் தயாரித்து விற்கலாம். குறிப்பாக மிளகாய், சோயா போன்ற பொருட்கள் மூலம் சாஸ் தயாரிக்கலாம்.
வீட்டில் இருந்தே ஒரு நாளைக்கு 50 பாட்டில்களைத் தயாரிக்க முடியும். ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் லாபம் வைத்து விற்றாலும் 300 முதல் 500 ரூபாய் கிடைக்கும். வீட்டுத் தயாரிப்புக்கு வரி பிரச்னை இல்லை. தக்காளி சீசன் சமயத்தில் நிறைய தயாரித்து கொடுத்து பணத்தை அள்ளலாம். மேலும், நம்மூரில் கிடைக்கும் பல்வேறு பழங்களைக்கொண்டு ஜாம், பழச்சாறு முதலியவற்றையும் தயாரித்தும் காசு பார்க்கலாம். வீட்டில் உள்ள குடும்பப் பெண்கள் மிக்ஸியை கூட பயன்படுத்தி சாஸை தயாரிக்கலாம். நன்கு அனுபவம் பெற்றபின் பெரிய அளவில் களமிறங்கிக் காசு பார்க்கலாம்’’ என்றார்


அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்

சில பெரிய ஹோட்டல்களில் பார்சல் செய்துதரும் உணவுப் பொருட்கள் வீட்டுக்குப் போகிறவரை சூடாக இருக்கிற மாதிரி அலுமினியம் ஃபாயில் பாக்ஸில் போட்டுத் தருவார்கள். இந்த அலுமினியம் ஃபாயில் கன்டெய்னர்களைத் தயாரிக்கும் தொழிலைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
தொழில் எப்படி?
சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்குத்தான் இந்த அலுமினிய ஃபாயில் பாக்ஸ்கள் பயன்படுத்தப்பட்டன. இப்போது, ரயில்களில் மட்டுமல்ல, பெரிய ஹோட்டல்களில் பலவற்றிலும் இந்த பாக்ஸ்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.  இந்த பாக்ஸ்களில் அடைக்கப்படும் உணவுகள், சூட்டைத் தாங்கும் திறனும், ஒளி ஊடுருவாமல் உணவின் தன்மையைப் பாதுகாக்கவும் செய்வதால் இந்த அலுமினிய பாக்ஸ்களுக்கு தேவை அதிகமாகியுள்ளது.
தமிழக அளவில் இந்தத் தொழிலுக்கு அதிக போட்டிகள் கிடையாது. பெரும்பாலான வடமாநில தயாரிப்பாளர்கள்தான் இங்குள்ள மார்க்கெட்டை கையில்வைத்துள்ளனர். எனவே, உள்ளூர் மார்க்கெட்டை குறிவைத்து இறங்கினாலே வெற்றி கிடைத்துவிடும். முக்கியமாக, ரயில்வே கேன்டீன், பேருந்து நிறுத்த ஹோட்டல்கள் மற்றும் பெரிய பெரிய உணவு விடுதிகளுக்கு  நேரடியாக சப்ளை செய்யலாம்.  
பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாநில அரசின் 'நீட்ஸ்’ திட்டம் அல்லது பொது மானியத் திட்டம்... இவற்றில் ஏதாவது ஒன்றில் இயந்திரம் வாங்கும் தொகையிலிருந்து மானியம் பெற வாய்ப்பு உண்டு.
நடைமுறை மூலதனம் மாதத்துக்கு 7 - 10 லட்சம் ரூபாய். இதற்கு தனியாக வங்கிக் கடன் கிடைக்கும்.


திட்ட அனுமானங்கள்!
மூலப்பொருள் செலவு:
நாள் ஒன்றுக்கு 80 கிலோ வரை  உற்பத்தி செய்யமுடியும். இதற்கு 100 கிலோ மூலப்பொருள்  தேவைப்படும். உற்பத்தி செய்யும்போது 20 சதவிகிதம் கழிவு போய்விடும். 1 கிலோ மூலப்பொருள் விலை 200 முதல் கிடைக்கும். கழிவுபோக கிலோவுக்கு 225 நடுத்தர சைஸ் பாக்ஸ்கள் கிடைக்கும். இந்த பாக்ஸ்களை 1,500 எண்ணிக்கையில் அட்டைப் பெட்டிகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்ப வேண்டியதுதான். ஒரு மாதத்துக்கு (25 வேலை நாட்கள்) மூலப்பொருட்கள் செலவு 100X200X25=5,00,000 ரூபாயாக இருக்கும்.
எங்கு கிடைக்கும்?
இதற்கான மூலப்பொருளான அலுமினியம் ரோல் ஜிண்டால் அலுமினியம் (Jindal Aluminium), குஜராத் ஃபாயில்ஸ் (Gujarat Foils) மற்றும் டால்கோ (Talco) போன்ற நிறுவனங்களிலிருந்து கிடைக்கும். அருகில் உள்ள விற்பனை மையங் களில் இருந்து வாங்கிக்கொள்ள முடியும். மாதத்துக்கு 2.5 டன் தேவை என்கிறபோது, இரண்டு மாதத்துக்கு ஒருமுறை என மொத்தமாக வாங்கிக் கொள்ளலாம். போக்குவரத்து செலவு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை தோராயமாக 20 ஆயிரம் செலவாகும்.
250மி பெட்டிக்கு 40 மைக்ரான் அளவு ரோலும், 450மி பெட்டிக்கு 42 மைக்ரான், 750மி பெட்டிக்கு 45 மைக்ரான் அளவில் மூலப்பொருட்கள் வாங்கவேண்டும். தேவையான டை-யை இயந்திரத்தில் பொருத்தி, இந்த அலுமினிய ரோல்களை உட்செலுத்தினால் அலுமினியம் பாக்ஸ்களாக தனித்தனியே வந்துவிடும்.இவற்றை பாலிதீன் கவர்களில் அடைத்து, பேக்கிங் செய்யவேண்டும்.

விற்பனை வரவு!
ஒரு பாக்ஸ் ரூ.1.60 வரை விற்க முடியும். 80 கிலோ மூலப்பொருளுக்கு 18,000 பாக்ஸ்கள் வரை ஒருநாளில் உற்பத்தி செய்ய முடியும். இதன் அடிப்படையில் மாதத்துக்கு 25 வேலை நாட்கள் என்று கணக்கிட்டால், ஒரு மாத விற்பனை வரவு (18,000X1.60X25= 7,20,000) ஆக இருக்கும்.
கழிவு மூலப்பொருளை கிலோ ரூ.60 முதல் 70 வரை திரும்ப விற்க முடியும். அந்தவகையில் மாத வரவு 30,000 (20X60X25 = 30,000).
செலவுகள்!
அலுமினிய பெட்டிகளை பாலிதீன் கவரில் அடைத்து, அட்டைப் பெட்டியில் பேக் செய்ய ஒரு பாக்ஸுக்கு 10 காசுகள் செலவாகும். இதன்படி 1,500 ஃபாயில்கள் என்கிற கணக்கில் அட்டைப்பெட்டியில் அடைப்பதற்கு  ஒரு மாதத்துக்கு பேக்கிங் செலவு ரூ.45,000.  
இந்தத் தொழிலை செய்வதற்கான பயிற்சியை சென்னையில் உள்ள எம்எஸ்எம்இ மூலமாக பெற முடியும்.

(திட்டவிவரங்கள் உதவி: குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம், சென்னை. (MSME Development Institute).
ஆர்டர் தொடர்ச்சியாக கிடைக்கிறது!
சிவராஜ் மோகன்குமார், எக்கோபாய் அலுமினியம் இண்டஸ்ட்ரி, திருப்பூர்.
''நான் எம்பிஏ முடித்திருக்கிறேன். சொந்தமாக தொழில் தொடங்குவதில்தான் ஆர்வம் இருந்தது. இந்தத் தொழிலுக்குத் தேவை இருப்பதை அறிந்து இதில் இறங்கினேன். வெளிமாநிலங்களில் அதிக முதலீடுகளில் மற்றும் பெரிய அளவில் உற்பத்தி செய்வதால் இங்கு குறைந்த விலைக்கு கொடுக்கிறார்கள்.
ஆனால், நான் உள்ளூர் கடைகள் மற்றும் ரயில்வே கேன்டீனில் ஆர்டர் வாங்கி சப்ளை செய்கிறேன். பெரிய அளவில் முதலீடுகள் போட்டால் குறைந்த விலைக்கு சப்ளை செய்ய முடியும். மாதம் 70 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது."

மறு சுழற்சி முறை

புத்திசாலித்தனமாகச் செயல்பட்டால் எந்தத் தொழிலிலும் ஜெயிக்கலாம் என்பதுதான் நிதர்சனமான உண்மை. ‘இதைப்போய் நான் செய்வதா..? எனக்கு அதில் அனுபவமில்லையே! என் வீட்டுக்குத் தெரிந்தால் அனுமதிக்கவே மாட்டார்கள்’ என்று சிலர் தொழிலுக்குள் இறங்கும் முன்பே தயங்குவார்கள். அதுபோன்ற ஆட்கள் ஜெயிப்பது சிரமம்தான். காரணம், தொழிலில் ஈடுபடுவோருக்கு மிக முக்கிய குணமே கூச்சம், தயக்கம், பயம் இவற்றை உதறிவிட்டுக் களமிறங்குவதுதான்.
பலரும் பார்க்கத் தயங்கும் வேலைகள்கூட சிலசமயம் லட்சங்கள் புரளும் பெரிய லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்கும். காக்கைகள் போல், நகரின் குப்பைகளில் கிடக்கும் பாட்டில்கள், பாலீதீன்களைச் சேகரிக்கும் ஆட்களைக் கவனித்திருக்கிறீர்களா..?
ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு சக்கர, மூன்று சக்கர சைக்கிள்களில் பிஸியாக பழைய பேப்பர், பாட்டில் கள், வீண்பொருட்களை வாங்கும் வியாபாரிகளைப் பார்த்திருக் கிறீர்களா..?
பழைய புத்தகங்கள், இரும்புச் சாமான்களை வாங்கி கடை முழுக்க அடுக்கி வைக்கும் வேஸ்ட் மார்ட் களின் பிஸியைக் கவனித்திருக் கிறீர்களா..?
அவற்றுக்குப் பின்னால் ஒரு பெரிய இண்டஸ்ட்ரியே இருக்கிறது. ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாறும் அந்த வட்டச் சுழலுக்குப் பின்னால் இருக்கிற பிஸினஸ் அற்புதம், ஐடியாக்களால் நிறைந்தது.
நாம் பயன்படுத்திய பொருட்களை என்னவாகத் தருகிறோமோ, அதே பொருளாக மீண்டும் மாற்றித்தர இவர்களும் ஒருவகையில் உதவுகிறார்கள். இதுதான் ரீ-சைக்கிளிங் துறை.
இப்படி தெருவில் பிளாஸ்டிக் சேகரித்து அதை ஒரு காலி மனையில் போட்டு வைத்திருந்தார் ஒருவர். அதைக் கவனித்த மனையின் உரிமையாளர், ‘கண்ட குப்பையையும் என் இடத்தில் போட்டு நாறடிக்காதே! மரியாதையா எல்லாத்தையும் எடுத்துட்டுப் போயிடு!’ என்று மிரட்டினார். ‘வேணும்னா இந்த இடத்துக்கு மாசம் 500 ரூபாய் வாடகை தரட்டுங்களா..?’ என்று அந்த நபர் கேட்க... மனையின் உரிமையாளருக்கு ஆச்சர்யம். சும்மா கிடக்கிற இடத்துக்கு வாடகையா..! ‘சரி... ஆனா, நான் இடத்தை விக்கிறப்போ காலி பண்ணச் சொல்வேன். மறுபேச்சு பேசாம போயிடணும். ஓகே!’ என்று கிளம்பிப் போனார். சில மாதங்கள் கழித்து, இடத்தை விற்கும் முடிவில் அந்த நபரைக் காலி பண்ணச் சொன்னார் உரிமையாளர். ‘பண்ணிடறேனுங்க... இப்போ, இந்த இடம் எவ்வளவுக்குப் போகுதுங்க..?’ என்று பணிவாகக் கேட்ட நபர், அவர் சொன்ன விலைக்கு அந்த இடத்தைத் தானே வாங்கிக்கொண்டார். சாதாரண வேலையிலும் சூப்பர் வருமானம் வரும் என்பதற்கு அந்த வீண் பொருட்கள் சேகரிப்பவர் மாதிரி ஆட்களே சாட்சிகளாக இருக்கிறார்கள். ரீ-சைக்கிளிங் துறையில் இது சாத்தியமாக இருக்கிறது.
பாட்டில்களை வாங்கி, அதை மறுபயன்பாட்டுக்கு விடுவது என்பது ஒருவகை. பாட்டில்களில் அடைக்கப் பட்டு வரும் ஜூஸ், ஊறுகாய், சில மருந்துப் பொருட்கள், மதுபான வகைகள் என்று கண்ணாடி பாட்டில்கள் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டு அதில் மீண்டும் தங்கள் தயாரிப்பை அடைத் துத்தர, நிர்வாகமே வாங்கிக் கொள்வது ஒருவகை.
பிளாஸ்டிக் கேன்களைப் பொறுத்தவரை, அதை சுத்தப்படுத்தி மீண்டும் பயன்படுத்துவது சிரமம். அது ஜூஸ் பாட்டிலோ, ஷாம்பூ பாட்டிலோ... புதிய கேனில் அடைத்துத் தருவதுதான் வாடிக்கையாளர்களைக் கவரும். தண்ணீர் பாட்டில் களையே எடுத்துக் கொள்ளுங் களேன். அதைப் பயன்படுத்திய பிறகு, ‘நசுக்கி வீசுங்கள்’ என்ற வாசகம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். காரணம், அப்படியே குப்பைத் தொட்டியில் வீசினால், அதை மீண்டும் ஒருமுறை யாரேனும் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என்பதற்காகச் செய்யப்படும் எச்சரிக்கை. சுகாதாரம் ஒருபக்கம்... பழைய கேனிலேயே தண்ணீர் அடைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் புதிய கேனை வாங்க வைக்கும் வியாபார உத்தி மறுபக்கம்!
இதில் ஒருவிஷயத்தில் ஆறுதல் அடையலாம். நாம் பயன்படுத்திய கேனிலேயே மறுபடியும் தங்கள் தயாரிப்புகளை அடைத்துத் தருவதில்லை அவர்கள். புதிய கேனில்தான் தருகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஆரம்பத்தில் அந்த முத்திரை பற்றிச் சொன்னேனே... இப்படி ஒரு முத்திரை, கேனின் அடியில் இருந்தால், அது ரீ-சைக்கிள் செய்யப்படக்கூடிய பிளாஸ்டிக் என்று அர்த்தம்.
தெ ருவில் அலைந்து, வீடு தேடி வந்து பிளாஸ்டிக் பொருட்களை வாங்குபவருக்கு ஒரு லாபம் கிடைக்கும். அதை வாங்குகிற கடைக் காரர் மொத்த வியாபாரி ஒருவரை நாடிச் சென்று விற்பார். அவருக்கு ஒரு லாபம் கிடைக்கும். இதையெல்லாம் மொத்தமாக பிரித்துச் சுத்தப்படுத்தி, வகை வாரியாக ஒழுங்கு செய்து பேக் பண்ணி ரீ-சைக்கிளிங் செய்கிற பெரிய நிறுவனத்தாரிடம் கொடுப்பார் அந்த மொத்த வியாபாரி.
அங்கே ரீ-சைக்கிளிங் நடந்து அதிலிருந்து புதிய கன்டெய்னர்களைத் தயாரிக்கும் ஒரு நிறுவனம்.
இதுபோன்ற சுழற்சியில் பல ஆயிரம் தெரு வியாபாரிகள், சில ஆயிரம் சிறு வியாபாரிகள், நூற்றுக்கணக்கான பெரு வியாபாரிகள், சில நிறுவனங்கள் என்று எத்தனை அழகாக லாபம் பங்கிடப்பட்டு வருகிறது பார்த்தீர்களா..? இவை எல்லாம் எதிலிருந்து..? நாம் வீண் என்று தூக்கி எறியும் அல்லது சிறு தொகைக்கு தரும் பொருட்களில் இருந்து!
இந்தத் துறையில் கடந்த பல வருடங்களாக இருக்கிற ராஜகோபால், புழல் பகுதியில் ஒரு பெரு வியாபாரியாக மாதம் ஒன்றுக்கு 40 டன் பெட் பாட்டில்களை பெரிய நிறுவனங்களுக்கு விற்பவராக இருக்கிறார். இந்தோ பாலிமர் என்ற நிறுவனத்தின் சார்பாக இத்தொழிலைச் செய்து வரும் இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினீயர். சௌதி அரேபியாவுக்குப் போய் திரும்பிய இவர், உறவினர் ஒருவர் இதே தொழிலைச் செய்வதைப் பார்த்து ஈர்க்கப்பட்டு இந்த யூனிட்டை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். பலருக்கு வேலை வாய்ப்பும் தந்திருக்கிறார்.
கரகர சத்தத்தோடு, இவரது ஃபேக்டரியில் பாட்டில்கள் நொறுங்கி சதுர பேல்களாக அடைக்கப்படுவதைப் பார்ப்பதே தனி அனுபவமாக இருக்கிறது.
இவர் போன்றோரிடமிருந்து பெரிய நிறுவனங்கள் வாங்குகின்றனவே... அவர்கள் என்ன செய்கிறார்கள்..? இந்த பழைய பிளாஸ்டிக் பேல்களை வாங்கி, கலர் வாரியாகப் பிரித்து சுத்தம்செய்து, மிக்ஸி போன்ற பெரிய மெஷின்களில் போட்டு துண்டு, துண்டாக நொறுக்குகிறார்கள். மீண்டும் ஒருமுறை சுத்தம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட பவுடர் போல் ஆக்கி, மீண்டும் சுத்தம் செய்கிறார்கள். அதன்பிறகு, அது புதிய பாட்டிலாக உருமாற்றம் பெறுகிறது. நாம் கடையில் வாங்கும் பெப்ஸி, கோக் போன்ற பாட்டில்களைத் தயார் செய்து தருகிறார்கள்.
சென்னையை அடுத்த மணலியில் இருக்கிற ஃப்யூச்சுரா ( futura ) நிறுவனம் பாலியஸ்டர் பொருட்கள் தயாரிப்பதோடு, இது போன்ற ரீ-சைக்கிளிங் துறையிலும் மிளிர்கிறது. ரூபாய் 500 கோடிக்கும் மேலே டர்ன் ஓவர் பார்க்கிற இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.ஓ.ஓ-வாக இருக்கிறார் ரங்கராஜன்.
‘சென்னையிலும் அதன் சுற்றுப்புறத்திலும் உள்ள இதுபோன்ற மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கி ரீ-சைக்கிளிங் செய்கிற பணிகளையும் நாங்கள் செய்கிறோம். இதன்மூலம் மூலப்பொருள் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறது. அதுபோக, தவறான பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக சுற்றுச்சூழல் கெடுவதையும் தவிர்க்க முடிகிறது. போட்டிருக்கும் முதலீட்டுக்கு ஏற்ற வகையான பெரிதான லாபம் என்று எங்களுக்குக் கிடைக்காமல் இருந்தாலும் இந்தத் துறையின் பாதை பிரகாசமாக இருக்கிறது. உலக அளவுத் தொடர்பு களோடு எங்கள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது’ என்று பெருமை பொங்கச் சொல்கிறார் ரங்கராஜன். இந்த நிறுவனத்துக்கு போட்டி என்று பெரிதாக இங்கில்லை. இதனால் எதிர்கால வளர்ச்சி அபரிமிதமாக இருக்க வாய்ப்பு தெரிகிறது.
இப்படித் தனித்தன்மை யோடு உள்ள, போட்டி குறை வாக உள்ள, யாரும் இறங்கத் துணியாத தொழில்களில் குதிக்கும் தைரியம் கொள்ளுங் கள். மூளையை முழுதாகப் பயன்படுத்தி, திட்டமிட்டுக் காய் நகர்த்தினால் நிச்சயம் அதற்கான பலன் கிடைத்தே தீரும். வலுவான வருமானம் வந்தே தீரும்!

Saturday, February 9, 2019

காலணிகளுக்கான சந்தை வாய்ப்புகள்

காலணிகள் என்பது எல்லோருக்குமே அத்தியாவசியமான ஒரு பொருளாகும். சிறியோர் முதல் பெரியவர்கள் வரை எல்லோருமே பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்ப அவற்றின் வடிவமைப்புகள் மாறிக்கொண்டே வருகின்றன. எனினும் இதற்கான தேவை எப்போதுமே அழியாத ஒன்றாகவே இருக்கும். இந்த காலணிகள் தயாரிக்கும் தொழிலை நீங்கள் குறைந்த முதலீட்டுடன் செய்து கொள்ள முடியும்.
காலணிகளுக்கான சந்தை வாய்ப்புகள்
கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்கள் என எல்லா இடங்களிலுமே காலணிகள் பயன்படுத்துகின்றனர்.சமுதாயத்திற்கு ஏற்றாற்போல் தேவைகளும் மாறுபடுகின்றன.எனவே காலணிகளும் வித்தியாசமான வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. இதன் தேவை எப்போதும் இருப்பதனால் தைரியமாக இந்த தொழிலை செய்து கொள்ளலாம்.
காலணி தயாரிக்கத் தேவையான அடிப்படை இயந்திரங்கள்
 • தாள் வெட்டும் இயந்திரம் (Fly press for cutting sheet)
 • துளையிடும் இயந்திரம் (Drilling machine)
 • வெவ்வேறு வடிவங்களில் வெட்டும் இயந்திரம் (Cutting dies of different sizes and shape)
 • கை கருவிகள் (Hand tools)
 • தளபாடங்கள் மற்றும் உபகரணங்கள்.
images
காலணி தயாரிப்புக்கான அடிப்படை செய்முறை
 • செருப்பு உற்பத்திக்கான ரப்பர்களை வாங்குதல்
 • 1 முதல் 9 வரையான அளவுடைய துளையிடும் மெஷின் வாங்குதல்
 • ரப்பர் தாள்களை அந்த இயந்திரத்துக்குள் செலுத்தி உங்களுக்குத் தேவையான அளவுகளில் வெட்டிக் கொள்ளுதல்.
 • அதன் பின்னர் துளையிடும் இயந்திரத்தின் மூலம் அதில் துளையிட்டுக் கொள்ளுதல்
இப்பொழுது செருப்புகள் [பாவனைக்கு தயாராகி வீட்ட் டன. இந்த தோழிலை சிறியை அளவான முதலீட்டுடன் ஆரம்பித்துக் கொள்ளலாம். உங்கள் உழைப்பு கடினமானதாக இருந்தால் நிச்சயம் நல்ல லாபம் சம்பாதிக்கலாம்.

காலணி தயாரிப்பில் களை கட்டும் லாபம்

சர்க்கரை, ரத்த அழுத் தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி பலரும் உடல் நலம் பேணும் பிரத்யேக காலணிகளை பயன்படுத்துகி றார்கள். அவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார் கோவை பூ மார்க்கெட்டை சேர்ந்த கர்ணன். அவர் கூறியதாவது: 5ம் வகுப்பு வரை தான் படித்தேன். 15 வயதில் சென்னையில் ஒரு காலணி தயாரிக்கும்  நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கு தொழிலை கற்றுக்கொண்டேன். உடல்நலம் பேணும் பிரத்யேக காலணிகளுக்கு கிராக்கி இருப்பதை அறிந்து, அதை தயாரிக்க தொடங்கினேன். 
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

பல்வேறு மருத்துவமனைகளை அணுகி எனது முகவரியை கொடுத்தேன். அங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் எனக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். அதன் மூலம் நல்ல வருமானம் கிடைக்கிறது. இந்த தொழில் எளிதானது. சிறிய முதலீட்டில் துவங்க ரூ.40 ஆயிரம் போதும். இயந்திரங்கள் பொருத்தி பெரிய அளவில் துவங்க ரூ.3 லட்சம் தேவை. மருத்துவமனைகளில் டிஸ்பிளே செய்து ஆர்டர் பிடிக்கலாம். மருத்துவமனை ஸ்டோர்களுக்கு குறைந்த லாபத்தில் விற்கலாம். 

மருத்துவமனை அனுமதி பெற்று உள் நோயாளிகளிடம் நேரில் விற்கலாம். இந்த செருப்புகளை நோயாளிகள் மட்டுமல்ல; மற்றவர்களும் பயன்படுத்தலாம். செருப்பு கடைகளிலும் விற்கலாம். ஆர்டர் குறைவாக இருக்கும் போது மற்ற செருப்புகளையும் தயாரித்தால் லாபம் பெருகும். 

தேவையான பொருட்கள்

செருப்பின் அடிப்பாகத்துக்கு தேவையான ரப்பர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.450) அடிப்பாகத்தின் மேல் அடுக்காக பயன்படும் பாலிமர் கவர் ஷீட் (ஒரு ஷீட் ரூ.150), செருப்பின் ஸ்டிராப் செய்ய சிந்தடிக் ஷீட் (ஒரு ஷீட் ரூ.280) ஸ்டிராப்களை இணைக்கும் வெல் க்ரோவ் (மீட்டர் ரூ.30) செருப்பின் முன்பாகத்தில் மட்டும் ஒட்டும் ரப்பர்  பீடிங் பன்வர் (ஒரு ஷீட் 800), பசை, நூல்.

கட்டமைப்பு: 10க்கு 16 அடி நீள, அகலம் கொண்ட இடம் போதுமானது.

கிடைக்கும் இடங்கள் 

காலணி தயாரிக்க தேவையான பொருட்கள் பெரிய மற்றும் சிறிய நகரங்களில் கிடைக்கின்றன.

பயன்கள்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காயம் ஏற்பட்டால் சீக்கிரம் ஆறாது. காயம் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். சர்க்கரை நோயளிகள் காலில் காயம் ஏற்படாமல் இருக்க பீடிங் பன்வர் பொருத்திய காலணிகள் உதவியாக இருக்கின்றன. எதன் மீதாவது மோதினால் காலில் அடிபடாமல் இவை காக்கின்றன.பிஸியோதெரபி, அக்குபஞ்சர் சிகிச்சையில் உள்ளவர்களின் பாதங்களுக்கு அழுத்தம் கொடுக்கவும், ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு ரத்த ஓட்டத்தை சீராக்கவும் பாலிமர் கவர் ஷீட் பொருந்திய காலணிகள் நல்லது. இதை அணிய டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இவற்றுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் இல்லை. கூலியாட்கள் வைத்து உற்பத்தியை அதிகமாக்கினால் வருவாய் பெருகும். 

முதலீடு 

இட வாடகை அட்வான்ஸ் 
ரூ.10 ஆயிரம், தையல் மெஷின் 
(ரூ.6 ஆயிரம்), அலமாரி 2 
(ரூ.8 ஆயிரம்), மரத்தால் ஆன 
மாதிரி கால் 12 வகை அளவுகள், கொட்டல் 1, உளி 1, 
கத்தரிக்கோல் 3, பல்வேறு 
பாத அளவுகளை கொண்ட சார்ட் 
ஆகிய மூலதன பொருட்கள் (ரூ.7 ஆயிரம்). மொத்த முதலீடு  ரூ.31 ஆயிரம். 

உற்பத்தி செலவு 

அறை வாடகை ரூ.3 ஆயிரம், மின் கட்டணம் ரூ.300, ஒரு நாளில் ஒரு நபர் 4 ஜோடி காலணிகள் தயாரிக்கலாம். மாதம் 25 நாளில் ஆண்களுக்கான காலணி 100 ஜோடி அல்லது பெண்களுக்கான காலணி 150 ஜோடி தயாரிக்கலாம். ஆண்கள் காலணி ஒன்று தயாரிக்க உற்பத்தி பொருள் மற்றும் உழைப்பு கூலி உள்பட ரூ.150 செலவாகும். பெண்கள் காலணி தயாரிக்க ரூ.100 செலவாகும். எந்த செருப்பு தயாரித்தாலும் ரூ.15 ஆயிரம் தேவை. மொத்த மாத செலவு
ரூ.18,300. 

வருவாய் 

ஆண்கள் காலணி குறைந்தபட்சம் ரூ.250க்கும், பெண்கள் காலணி ரூ.170க்கும் விற்கிறது. மாத வருவாய் ரூ.25 ஆயிரம். செலவு ரூ.18,300. 
லாபம் ரூ.6,700. ஓரளவு அனுபவம் கிடைத்த பிறகு தொழிலை விரிவுபடுத்தினால் அதிக லாபம் கிடைக்கும்.

தயாரிப்பது எப்படி?

ரப்பர்ஷீட், பாலிமர் கவர் ஷீட் ஆகியவற்றில் தேவைப்பட்ட அளவில் அடிப்பாகத்தை வரைந்து, வெட்டி எடுக்கவேண்டும். இரண்டையும் ஒன்றின் மீது ஒன்றாக ஒட்ட வேண்டும். இப்போது அடிப்பாகம் தயார். சிந்தடிக் ஷீட்டில் காலணியின் மாடலுக்கேற்ப இருபுற ஸ்டிராப்களை வெட்டி எடுக்க வேண்டும். அதை தையல் மெஷினில் வைத்து தைக்க வேண்டும். இப்போது மேல்பாகம் தயார். இதை அடிப்பாகத்தில் இணைக்க வேண்டும். 

அதற்கு அடிப்பாகத்தின் 2 அடுக்குகளுக்கு இடையில் பிளவு ஏற்படுத்தி உள்ளே பசை தடவி மேல் பாகத்தை திணித்து இறுக்க வேண்டும். பின்னர் காலணியின் முன்பாகத்தில் மட்டும் கீழ்பாகத்தின் 2 அடுக்குகளை இணைக்கும் இடத்தில் பீடிங் பன்வர் ஒட்டவேண்டும். கடைசியாக செருப்பின் மேல்பாகத் தில் வெல்க்ரோவ் ஒட்ட வேண்டும். 

பயிற்சி பெற... 

டிப்ளமா இன் லெதர் டெக்னாலஜி படிப்பு உள்ளது. இதன் மூலம் தோல் பதப்படுத்துதல், காலணி தயாரிப்பு ஆகியவற்றை கற்று கொள்ளலாம். அல்லது காலணி உற்பத்தி கூடங்களில் 3 மாதத்தில் அனுபவ ரீதியாக கற்று கொள்ளலாம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites