இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

கண்ணாடி ஓவியம்.. கைநிறைய காசு

ஓவியங்கள் வரைவது சிறந்த பொழுதுபோக்காக அமைவதோடு வருமானத்தையும் தருகிறது. 3டி கண்ணாடி ஓவியம் உள்பட புதுமையான ஓவியங்களை கலைநயத்தோடு வரைய கற்றுக் கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம்Õ என்கிறார் கோவையை சேர்ந்த அருணா. சாய்பாபா காலனியில் ஆர்ட் காட்டேஜ் பயிற்சி நிலையம் நடத்தி வரும் அவர் கூறியதாவது: சிறுவயது முதலே நன்றாக ஓவியம் வரைவேன். திருமணம் முடிந்த பிறகு ஓய்வு நேரங்களில் பொழுது போவதற்காக ஓவியங்கள் வரைந்தேன். உறவினர்கள் எனது ஓவியங்களை பார்த்து விட்டு தத்ரூபமாக இருப்பதாக பாராட்டினார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என்றும் கூறினர். அப்போதுதான் எனக்கு இந்த ஐடியா வந்தது.

இதையடுத்து விற்பனை நோக்கில் படங்கள் வரையத் தொடங்கினேன். பாரம்பரிய ஓவியங்களுக்கு மாற்றாக எளிய முறையில் வித்தியாசமான ஓவியங்களை வரைந்தேன். வீணாகும் காபித்தூள் டிகாக்ஷனைக் கொண்டு லைட், டார்க் என பல்வேறு ஷேடுகளை மிக்ஸ் செய்து நான் வரைந்த ஓவியங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதையடுத்து துணி, கண்ணாடிகளில் ஓவியங்களை வரைந்தேன். 3 கண்ணாடிகளை கொண்டு நான் உருவாக்கிய 3டி கண்ணாடி ஓவியம் பலரையும் ஈர்த்தது. காபித்தூள் ஓவியம், கண்ணாடி ஓவியம், துணியில் வரையும் படங்கள் தான் எனது ஸ்பெஷல். வீடுகள், அலுவலகங்களில் வைப்பதற்காக எனது ஓவியங்களை பலர் வாங்கினர். ஏற்றுமதி நிறுவனங்களிடமும் படங்களை விற்றேன். இதன் மூலம் எனக்கு மூன்று மடங்கு லாபம் கிடைத்தது. பெண்களுக்கு இயற்கையிலேயே கலைத்திறன் உள்ளது. யார் வேண்டுமானாலும் எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.

ஓவியம் வரைவது எப்படி?

காபி ஓவியம்: பேப்பர் அல்லது துணியில் வரைய வேண்டிய படத்தின் அவுட் லைன் வரைந்து கொள்ள வேண்டும். காபி பொடியை தண்ணீரில் கலந்து டார்க், மீடியம், லைட் என ஷேடுகளை ஏற்படுத்த வேண்டும். ஓவியத்துக்கு ஏற்ப லைட், டார்க் ஷேடு தீட்ட வேண்டும். ஓவியத்தின் மீது வார்னிஷ் ஸ்பிரே அடித்தால் தூசு படியாது.
துணி ஓவியம்: அனைத்து வகை துணிகளையும் பயன்படுத்தலாம். ஓவியத்துக்கு தேர்ந்தெடுக்கும் துணியை பொருத்து வண்ணங்களையும், பிரஷ்களையும் பயன்படுத்த வேண்டும். ஜெய்ப்பூர் கற்கள், ஜரிகை நூல்கள் போன்றவற்றை ஒட்டியோ, தைத்தோ ஓவியத்துக்கு மேலும் அழகு சேர்க்கலாம். புடவை முந்தானையில் படம் வரைய
குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஆகும்.

கண்ணாடி ஓவியம்: கண்ணாடி ஓவியத்தில் ஸ்டெய்ன்ட், அகஸ்டல், ரிவர்ஸ், 3டி என வகைகள் உள்ளது. அவற்றுக்கென உள்ள பேனா மூலம் அவுட் லைன் வரைந்து, பின்னர் வண்ணம் தீட்ட வேண்டும். 3டி ஓவியம் வரைய ஒரே அளவிலான 3 கண்ணாடிகள் தேவை. ஓவியத்தின் தொலைவுப்பொருட்களை அடிக் கண்ணாடியிலும், நடுவில் உள்ள காட்சிகளை நடுக்கண்ணாடியிலும், ஓவியத்தின் முன்புறமுள்ள காட்சியை முதல் கண்ணாடியிலும் வரைந்து ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கினால் 3டி கண்ணாடி ஓவியம் தயார்.

எளிதான முதலீடு

வீட்டின் ஒரு பகுதி போதும். ஓவியங்களை பராமரிக்க ஒரு டேபிள், அலமாரி. பல தரப்பட்ட பிரஷ்கள், வண்ணங்கள், காபி பவுடர், தண்ணீர், கண்ணாடி, துணி, அழகுபடுத்தும் கற்கள், கோல்ட் கோட்டிங் தகடுகள், நூல், ஸ்பிரே, கோந்து உள்பட ஓவியங்களை பொருத்து மேலும் சில பொருட்கள் தேவைப்படும். ஓவியம் வரையத் தேவையான பொருட்கள் அனைத்தையும் பேன்சி, ஸ்டேஷனரி மற்றும் ஓவியப்பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்கலாம். பல ஓவியங்களுக்கு இவற்றை பயன்படுத்த முடியும். இவற்றுக்கு ஆகும் செலவு மிகக் குறைவானது.

மாதம் ரூ.24 ஆயிரம்

ஓய்வு நேரங்களில் வரைவதன் மூலம் ஒரு மாதத்தில் 15 ஓவியங்கள் வரையலாம். குறைந்தபட்சம் 8க்கு 10 செ.மீ. அளவு முதல் தேவைக்கேற்ற அளவுகளில் வரைய முடியும். பொதுவாக ஒரு ஓவியத்துக்கு உழைப்புக்கூலி உள்பட குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை செலவாகும். ஓவியத்தின் வகைக்கு ஏற்ப மாதம் குறைந்தபட்சம் ரூ.4000 முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகும். ஒவ்வொரு ஓவியத்தையும் 3 மடங்கு விலைக்கு விற்க முடியும். இதன் மூலம் குறைந்தபட்ச மாத வருவாய் ரூ.12,000, அதிகபட்சம் ரூ.36,000 கிடைக்கும். இதன் மூலம் ரூ.8 ஆயிரம் முதல் அதிகபட்சம் ரூ.24 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும்.

சந்தை நிலவரம்

வீடு, அலுவலகங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், கண்காட்சி அமைப்பாளர்கள், இன்டீரியர் டெக்கரேட்டர்கள் என பல்வேறு தரப்பில் இருந்தும் ஓவியங்களுக்கு நல்ல கிராக்கி உள்ளது. ஓவியங்களின் தரத்துக்கு ஏற்ப விலை போவதால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்க முடியும். கண்ணாடி ஓவியம், துணி ஓவியம், காபி ஓவியத்துக்கு அதிக வரவேற்பு உள்ளது. கண்ணாடி ஓவியங்கள் வெளி மாநிலங்கள், நாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

பல வகை ஓவியங்கள்

ஆயில், துணி, கண்ணாடி, பானை, காபி, கரித்துண்டு, மரம் என பல்வேறு வகை ஓவியங்கள் உள்ளன. புதிதாக வரைபவர்கள் காபித்தூள், கண்ணாடி, துணி ஓவியங்களை வரைந்து அனுபவம் பெற்ற பின் கலை நுணுக்கம் மிகுந்த பிற ஓவியங்களை வரைந்து பழகலாம். வயது வித்தியாசமின்றி ஆர்வமுள்ளவர்கள் எளிதில் கற்றுக்கொள்ளலாம். புதுப்புது ஓவியங்களை வரைந்தால் நிச்சயம் நல்ல லாபம் பார்க்க முடியும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites