இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, May 3, 2014

பூசு மஞ்சள் புன்னகை!

Apply yellow smile!



நாகரிகத்தின் தாக்கத்தால் நாளுக்கொரு கலாசாரமும் பாரம்பரியமும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. அவற்றில் ஒன்று பெண்களின் மஞ்சள்  தேய்த்துக் குளிக்கிற பழக்கம். மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி எனத் தெரிந்தாலும், அதைத் தொடத் தயாராக இல்லை இன்றைய இளம் பெண்கள்.  ஆனாலும், மஞ்சளை மறக்காத பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களை நம்பித்தான் பூசு மஞ்சள் தூள் தயாரிப்பில் பிசியாக  இருக்கிறார் கண்ணம்மா. குழந்தைகள், இளம்பெண்களுக்கு ஒரு  வகை, கொஞ்சம் வயதான பெண்களுக்கு ஒரு வகை என இரண்டு வித மஞ்சள் தூள்  தயாரிக்கிறார் இவர்.

‘‘நான் வீட்லயே உலக்கைல மஞ்சள் இடிச்சு உபயோகிச்சுத்தான் பழக்கம். கடைகள்ல வாங்கற மஞ்சள் தூள் சருமத்துல எரிச்சலை  உண்டாக்கிறதாகவும், வெள்ளைப் புள்ளிகளை ஏற்படுத்தறதாகவும் நிறைய பேர் சொன்னாங்க. அப்ப நாங்க தயார் பண்ணினதைக் கொடுத்து யூஸ்  பண்ணச் சொன்னேன். எல்லாருக்கும் திருப்தி. அப்படியே ஆளாளுக்கு ஆர்டர் கொடுக்கவும் அதையே பிசினஸா ஆரம்பிச்சுட்டேன். பிறந்த குழந்தை  நிறம் கம்மியா இருந்தா, கிராமங்கள்ல கஸ்தூரி மஞ்சள் தேய்ச்சுக் குளிப்பாட்டுவாங்க. தேமலைப் போக்கி, கரும்புள்ளி, வெண்புள்ளிகளை நீக்கி, சரும  நோய்கள் வராமத் தடுக்கிற குணம் அதுக்கு உண்டு.

பருத்தொல்லை வராம இருக்கவும் மஞ்சள் பூசிக் குளிக்கிற பழக்கத்தை இள வயசுப் பொண்ணுங்களுக்குக் கத்துக் கொடுக்கலாம். மஞ்சள் பூசணும்,  ஆனா, அது தெரியக் கூடாதுன்னு நினைக்கிற இளம் பெண்களுக்கும் ஏற்றது. கூடவே வெட்டிவேர், பூலாங்கிழங்கு சேர்த்து அரைக்கிறதால, ரோம  வளர்ச்சியும் இருக்காது.  மஞ்சள் பூசினது தெரியணும்னு நினைக்கிறவங்களுக்காக குண்டு மஞ்சள் நிறைய சேர்த்து அரைக்கிற இன்னொரு தூளும்  தயாரிக்கிறேன்’’ என்கிறார்.

‘‘நல்ல மஞ்சளைத் தரம் பிரிச்சுக் கண்டுபிடிக்கிறது, பதப்படுத்தி, என்னென்ன சேர்த்து அரைக்கிறது, எப்படி மார்க்கெட் பண்றதுங்கிற விவரங்களைக்  கத்துக்கலாம். 50 கிராம், 100 கிராம் பாக்கெட்டாவும், 1 ரூபாய் பாக்கெட்டாவும் போட்டு கடைகள், கோயில்கள்ல கொடுத்தாலே  அதிக லாபம்  பார்க்கலாம். ஒரு கிலோ 250 ரூபாய். கிலோவுக்கு 40 ரூபாய் லாபம் நிச்சயம்’’ என்பவர், தனக்கு ஏற்றம் தந்த இந்த பிசினஸை மற்றவர்களுக்கும்  கற்றுத் தரக் காத்திருக்கிறார். ஒரே நாள் பயிற்சி தான். கட்டணம் 200 ரூபாய். (95661 12724)

வாவ் வாக்ஸ் கிராஃப்ட்!

Wow Wax Craft !



4 இட்லியும் மூன்று விதமான சட்னியும் 200 ரூபாய்... ஒரே ஒரு தோசை 150 ரூபாய்... ஒரு கேக் 500 ரூபாய்... இதெல்லாம் எந்த ஸ்டார்  ஹோட்டலில் என்று கேட்கிறீர்களா? இவற்றில் எதுவுமே சப்புக் கொட்டி சாப்பிடக் கூடியவை அல்ல. ஷோ கேஸில் வைத்து அழகு பார்ப்பவை.  யெஸ்... சென்னை காரம்பாக்கத்தைச் சேர்ந்த சுதா செல்வகுமாரின் கைவண்ணத்தில் உருவாகும் இவை அனைத்தும் மெழுகினால் செய்யப்படுகிற  அழகுப் பொருட்கள். வாக்ஸ் கிராஃப்ட் எனப்படுகிற இந்த முறையில், இட்லி, தோசை, சட்னி, கேக் தவிர, மைசூர்பாகு, லட்டு, பாதுஷா, குலோப்  ஜாமூன் உள்ளிட்ட எல்லா உணவு வகைகளையும் செய்ய முடியுமாம்!

‘‘வீடுகள்ல அழகுக்காக வைக்கலாம். புதுசா ஸ்வீட் ஸ்டால், ஹோட்டல் ஆரம்பிக்கிறவங்க, கடையோட வரவேற்புல அழகுக்காக இந்த மாதிரி மெழுகு  உணவுப் பொருட்களை வாங்கி வைக்கிறாங்க. நிஜ சாப்பாட்டை வச்சா, கொஞ்ச நேரத்துல பழசாயிடும்... கெட்டுப் போகும்... ஈ மொய்க்கும். மெழுகுல  செய்ததை வச்சா, வருஷக்கணக்கானாலும் அப்படியே இருக்கும். அழுக்கானாலும் அலசியோ, துடைச்சோ உபயோகிக்கலாம். பார்க்கிறவங்கக்கிட்ட அது  மெழுகுன்னு சொன்னாதான் தெரியும்’’ என்கிற சுதா, பிறந்த நாள், கல்யாணம், புதுமனைப் புகுவிழா போன்றவற்றுக்கு அன்பளிப்பு கொடுக்கவும் இந்த  வாக்ஸ் கிராஃப்டை பலரும் விரும்பி வாங்குவதாகச் சொல்கிறார்.‘‘பிறந்த நாளைக்கு கேக், ஐஸ்கிரீம், மில்க் ஷேக் மாதிரி செய்து கொடுக்கலாம்.

உணவுப் பொருட்கள் வேண்டாம்னு நினைக்கிறவங்க, ஊஞ்சல் ஜோடி, கடிகாரம் அல்லது கண்ணாடி பதிச்ச அலங்காரப் பொருட்களைக் கொடுக்கலாம்.  பட்டன் சிப்ஸ் வாக்ஸ், பாளம் வாக்ஸ், வாக்ஸ் கலர், அலுமினியப் பாத்திரங்கள், அடுப்பு... இதெல்லாம் இந்தக் கலைக்குத் தேவையான பொருட்கள்.  ஒரு கிலோ வாக்ஸ் 200 - 250 ரூபாய்க்குக் கிடைக்கும். ஒரு கிலோவுல 25 ஸ்வீட்ஸ் அல்லது 2 ஊஞ்சல் செய்யலாம். இட்லி, தோசைக்கு அரை  மணி நேரம் போதும். ஐஸ்கிரீமுக்கு 10 நிமிஷம். ஒரு கப் ஐஸ்கிரீமை 100 ரூபாய்க்கும், 4 இட்லியும் சட்னியும் 200 ரூபாய்க்கும் கொடுக்கலாம்.  கணிசமான லாபம் நிச்சயம்’’ என்கிற சுதாவிடம் ஒரே நாள் பயிற்சியில் 600 முதல் 1,500 ரூபாய் வரையிலான கட்டணத்தில், இந்த வாக்ஸ்  கிராஃப்டை கற்றுக் கொள்ளலாம். ( 93823 32600)

பஞ்சலோக நகைகளில் பிசியாகலாமா

busy in Panchaloha  jewelry



பெண்களின் விருப்பப் பட்டியலில் தங்கம், வெள்ளி நகைகளுக்கு அடுத்த இடம் பஞ்சலோக நகைகளுக்குத்தான். கவரிங் நகைகளைப்  போல பத்தே  நாட்களில் பல் இளிக்காது. பளீரென மின்னி, தன்னைப் போலி எனக் காட்டிக் கொள்ளாது. தங்கத்தோடு தங்கமாக  சமர்த்தாகப் பொருந்திப்  போவதுதான் பஞ்சலோக நகைகளின் சிறப்பம்சமே. ஐம்பொன் என்றும் அழைக்கப்படுகிற இந்த பஞ்சலோக  நகை விற்பனையில் பிசியாக  இருக்கிறார்  சென்னை, தேனாம்பேட்டையைச் சேர்ந்த காந்திமதி!

‘‘என்னோட சொந்த உபயோகத்துக்காக வாங்கின பஞ்சலோக நகைகளைப் பார்த்துட்டு, நிறைய பேர் அவங்களுக்கும் அதே மாதிரி  வேணும்னு  கேட்டாங்க. அப்ப அந்த நகைகளை வாங்கி, வீட்லயே வச்சு விற்பனை பண்ணிட்டிருந்தேன். நல்ல வரவேற்பு இருக்கிறது  தெரிஞ்சதும், நாமே ஏன்  செய்து விற்கக் கூடாதுனு தோணினது. முறைப்படி பயிற்சி எடுத்துக்கிட்டு, இப்ப தனியா கடையே வச்சு  விற்பனை பண்ற அளவுக்கு  வளர்ந்திருக்கேன். தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, இரும்புனு அஞ்சு விதமான உலோகங்கள் கலந்து  செய்யறதாலதான் இது பஞ்சலோக நகை.

உடம்புல உள்ள சூட்டைக் குறைச்சு, டென்ஷன் இல்லாம வைக்கும். மோதிரம், தோடு, வளையல், சங்கிலி, கொலுசு, ஆரம், அட்டி கைனு எல்லா  அயிட்டங்களும் உண்டு. சிலது சுத்தமான ஐம்பொன்லயும், சிலது கவரிங் கலந்தும் வரும். தங்க நகைகளுக்கு  இணையா கல், நவரத்தினம் பதிக்கிறது  வரைக்கும் எல்லாம் இதுலயும் பண்ண முடியும்’’ என்கிறார் காந்திமதி. ‘‘ஐம்பொன் நகை களுக்கான மெட்டீரியல் முழுமை செய்யப்படாத  வடிவத்துலதான் கிடைக்கும். அதை வாங்கி, பஃப்பிங் மெஷின்ல ஃபைல் பண்ணி,  பாலீஷ் ஏத்தி, சரியான வடிவத்துக்குக் கொண்டு வரணும்.

முழுமை செய்யப்படாத நகைகள், பஃப்பிங் மெஷின், மோட்டார், பிரஷ், புஷ்... எல்லாத்துக்கும் சேர்த்து ரூ.7,500 முதல் 10 ஆயிரம்  வரை முதலீடு  தேவை...’’‘‘ஒரு நாளைக்கு ஒரே ஆளா வேலை பார்த்தா, 25 முதல் 50 பீஸ் வரைக்கும் பண்ணலாம். உதவிக்கு ஆள்  இருந்தா 200-300 பீஸ்  வரைக்கும் பண்ண முடியும். குறைந்தது 25 ரூபாய்லேருந்து ஆயிரம் ரூபாய் வரைக்கும் அயிட்டங்கள் இருக்கு.  30 சதவிகித லாபம் பார்க்கலாம்’’  என்கிறவரிடம் 2 நாள் பயிற்சியில் இந்தத் தொழிலின் நுணுக்கங்களை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (98404 30258)

அன்பளிப்புப் பை

Will love gift bag




பரிசுப் பொருட்களைவிட அவற்றைச் சுமந்து வருகிற பைகளும் பெட்டிகளும் பல நேரங்களில் நம் கவனம் ஈர்க்கும். பரிசுப் பொருட்களுக்கு இணையாக  அந்தப் பைகளைக் கூடப் பத்திரப்படுத்துவோம். அப்படிப்பட்ட அழகுப்பைகளைத் தயாரிப்பதில் நிபுணி, அரக்கோணத்தைச் சேர்ந்த ஹேமாவதி!

‘‘ஒரு சின்ன சாக்லெட்டை அன்பளிப்பா கொடுத்தாக்கூட, அதையும் ஒரு அழகான அலங்காரப் பைக்குள்ள வச்சுக் கொடுக்கிறதுதான் இன்னிக்கு  ஃபேஷன். அப்படிக் கொடுக்கிறபோது அன்பளிப்போட மதிப்பு பல மடங்கு கூடும். பிளாஸ்டிக்கை தவிர்க்கணும்னு நினைக்கிறவங்களும், பெரிய  பிளாஸ்டிக் பைகள்ல அன்பளிப்புகளைப் போட்டுக் கொடுக்கிறதுக்குப் பதிலா இது மாதிரி சுற்றுச்சூழலுக்கு உகந்த மெட்டீரியல்கள்ல உருவாகிற  பைகளை உபயோகிக்கலாம்” என்கிற ஹேமாவதி தையல் மெஷினின் உதவியின்றி, முழுக்க முழுக்க கைகளாலேயே இந்தப் பைகளை  உருவாக்குவதாகச் சொல்கிறார்.

‘‘அன்பளிப்புப் பைகளுக்கான மெட்டீரியல்னு கேட்டாலே கடைகள்ல கிடைக்கும். அது தவிர பளபளா துணிகள், மேட் கிளாத்லயும் பண்ணலாம். லேஸ்,  குட்டிக்குட்டி பூக்கள், பசைனு இதுக்கான தேவைகள் ரொம்பக் கம்மி. 500 ரூபாய் முதலீடு போதும். கல்யாணங்கள்ல பீடா போட்டுக் கொடுக்கிற  குட்டிக்குட்டி பை, நிச்சயதார்த்தம், கல்யாணங்களுக்கான தாம்பூலப் பை, கொலுவுக்கான வெற்றிலைப்பாக்குப் பை, பிறந்தநாள் அன்பளிப்புக்கான பை,  சாக்லெட் பை... இப்படி ஒவ்வொரு தேவைக்கும் ஒவ்வொரு மாடல்ல செய்யலாம்.

பெரிய பைகளா இருந்தா ஒரு நாளைக்கு அஞ்சும், சின்னதானா 10 பைகளும் செய்யலாம். நம்ம கற்பனைக்கேத்தபடி பத்துக்கும் மேலான மாடல்கள்  பண்ண முடியும். விற்பனை வாய்ப்புக்கும் பஞ்சமே இருக்காது. உங்க வீட்டுக்குப் பக்கத்துல உள்ள ஃபேன்சி ஸ்டோர், கல்யாண கான்ட்ராக்டர், பிறந்த  நாள் பார்ட்டிகளை ஒருங்கிணைக்கிறவங்க... இப்படி பல இடங்கள்லயும் மாடல்களை காட்டி ஆர்டர் பிடிக்கலாம்.  அளவைப் பொறுத்து 8  ரூபாய்லேருந்து 15 ரூபாய் வரைக்கும் விற்கலாம்‘‘ என்கிற  ஹேமாவதியிடம் ஒரே நாள் பயிற்சியில் தேவையான பொருட்களுடன் சேர்த்து 5 மாடல்  பைகளை 500 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். (75984 91814)

விதம் விதமா மிதியடி செய்வோம

Matting will do nicely manner?

வீட்டுக்கு வீடு வாசல்படி...வாசல்படி உள்ள வீடுகள் எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற அதி அத்தியாவசியமான ஒன்று மிதியடி. பழைய கோணிகளை மிதியடிகளாக உபயோகித்த காலம் மாறி, இன்று வாசலையே அழகாக்கும் அளவுக்கு விதம் விதமான மாடல்களிலும் மெட்டீரியல்களிலும் மிதியடிகள் வந்து விட்டன. சென்னையைச் சேர்ந்த ஹேமலதாவின் கைவண்ணத்தில் அழகழகான வடிவங்களில் மிதியடிகள் உருவாகின்றன!

‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். வேலைக்குப் போக வேண்டிய தேவையில்லைன்னாலும் பொழுது போகணுமேன்னு நிறைய கைவினைக் கலைகளைக் கத்துக்கிட்டேன். அதுல ஒண்ணுதான் மிதியடி பின்றது. சணல் கயிறு, பழைய துணி, புதுசா தைக்கிறதுல வீணாகிற துணிகள்னு எதைக் கொண்டும் மிதியடி பின்னலாம். மிதியடி என்ன கடைகள்ல கிடைக்காத பொருளான்னு கேட்கலாம். கடைகள்ல ரெடிமேடா வாங்கற மிதியடிகள் 3 மாசம் உழைக்கும்னா, நாம கைப்பட பின்ற மிதியடிகள் ஏழெட்டு மாசங்களுக்கு உழைக்கும்” என்கிறார் ஹேமலதா.

‘‘சணல் கயிறு கொண்டு பின்ற மிதியடிக்கு நிறைய வரவேற்பு உண்டு. அதற்கடுத்த இடம் துணிகளால் பின்ற ரகத்துக்கு. கடைசியாதான் பழைய துணிகள்ல செய்யற மிதியடிகளுக்கு. பழைய துணிகள்ல தைக்கிற மிதியடிகளை பெரும்பாலும் நம்ம வீட்டு உபயோகத்துக்குத்தான் வச்சுக்க முடியும். விற்பனை செய்ய முடியாது. விருப்பப் படறவங்க, பழைய துணிகளுக்கு சாயம் போட்டு, புதுசாக்கி, பிறகு மிதியடி செய்ய உபயோகிக்கலாம்.

சணல் கயிறு ஒரு கிலோ 20 ரூபாய்க்குக் கிடைக்கும். அதுல 4 மிதியடி பண்ணலாம். துணிகள்ல பண்ற மிதியடிகளுக்கு செலவு கம்மி. ஒருநாளைக்கு 5 மிதியடிகள் வரைக்கும் பின்னலாம். ஒரு மிதியடியை 40 முதல் 50 ரூபாய் வரைக்கும் விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்” என்கிற ஹேமலதாவிடம் 4 மாடல் மிதியடி வகைகளை தேவையான பொருட்களுடன் 2 நாள் பயிற்சியில் 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.(95001 48840)

மெழுகு விளக்கு மேஜிக்!


மாற Wax Magic Lantern!EPP Group Urges Governments to Use ...

தீபாவளியைத் தொடர்ந்து, கார்த்திகை தீபம், புத்தாண்டு என வெளிச்சத் திருவிழாக்கள் வரிசை கட்டி நிற்கும் நேரமிது. விதம் விதமாக விளக்கேற்றி  ஒளிரச் செய்வதன் மூலம் வீடே சுபிட்சமாகப் பிரகாசிக்கும். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த சாந்தி ரவீந்திரன் செய்கிற மிதக்கும் மெழுகு விளக்குகள்  புதுமையானவை... அழகானவை!

‘‘நிறைய கைவினைக் கலைகள் தெரியும். அதுல மெழுகு உருவங்கள் செய்யறதும் ஒண்ணு. மெழுகுல பொம்மைகள் செய்திட்டிருந்த நான், அதோட  அடுத்தகட்டமா, விளக்குகள் செய்ய ஆரம்பிச்சேன். ரோஜா, செம்பருத்தி, சூரியகாந்தின்னு பூக்கள் வடிவ விளக்குகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கு.  அடுத்து பந்து வடிவ மெழுகுகளையும், ஜெல் கேண்டில்களையும் அதிகம் விரும்பறாங்க.  ஜெல் கேண்டில்கள் பார்க்க ரொம்ப அழகா இருக்கும். குட்டிக்  குட்டி கண்ணாடி டம்ளர்ல ஜெல் மெழுகை நிரப்பி, அப்படியே ஏத்தி வைக்கலாம். இந்த எல்லாமே எல்லா விசேஷங்களுக்கும் அன்பளிப்பா கொடுக்க  ஏற்றவை. இதையே இன்னும் கொஞ்சம் கிராண்டா கொடுக்கணும்னு விரும்பறவங்க, இதுலயே சென்ட் கலந்து செய்யப்படற மெழுகுவர்த்திகளை  விரும்பறாங்க. ஆப்பிள், கிரேப், லெமன், ஆரஞ்சுன்னு நிறைய வாசனைகள் கிடைக்குது’’ என்கிறார் சாந்தி.

வெறும் 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்கலாமாம். ‘‘மோல்டுக்கான முதலீடுதான் அதிகம். மெட்டல் மோல்டுன்னா 2  ஆயிரத்துக்கும், சிலிக்கான் மோல்டை 500 ரூபாய்க்குள்ளேயும் வாங்கலாம். மெட்டல் மோல்டு எத்தனை வருஷங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.  ஒருமுறை பண்ற முதலீடுதான்... மத்தபடி மெழுகு சிப்ஸ் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு கிடைக்கும். அதுல 25 முதல் 30 விளக்குகள் பண்ணலாம்.

திரி, வாக்ஸ் கலர், சென்ட்டை எல்லாம் தேவைக்கேற்ப அப்பப்ப வாங்கிக்கலாம். 10 விளக்குகள் 50 ரூபாய்க்கும், சூரியகாந்தி, ரோஜா மாதிரியான  விளக்குகளை ஒன்று 10 ரூபாய்க்கும், பந்து வடிவ விளக்கை 25 ரூபாய்க்கும் கொடுக்கலாம். இதுல வேஸ்ட்டேஜ் கிடையாது. உடலை வருத்தற  உழைப்பு கிடையாது. 50 சதவிகித லாபம் நிச்சயம்’’ என்கிறவரிடம் ஒரே நாளில் 12 விதமான மெழுகு விளக்குகளை தேவையான பொருட்களுடன்  1,500 ரூபாய்  கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம்.  (99414 46275)

சபாஷ் சாப்பாட்டுக் கடை!

Dining Goodies Store!




கைமேல் காசு மட்டுமின்றி, கன்னாபின்னாவென லாபமும் பார்க்கக் கூடிய ஒரு சில தொழில்களில் உணவு பிசினஸும் ஒன்று.  சுவை, ஆரோக்கியம்,  விலை என எல்லாமே திருப்தியாக இருக்கும் ஓட்டல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். வாடிக்கையாளர் களை ஈர்க்கும் வரை ஒரு தரத்திலும்  வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்ததும் வேறொரு தரத்திலும் உணவு கொடுக்கும் நபர் களுக்கு மத்தியில், சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த  மாலா வித்தியாசமானவர். 20 வருடங்களாக இந்தத் துறையில் இருக்கிற  மாலாவின் கைப்பக்குவத்துக்கு அந்த ஏரியாவாசிகள் அத்தனை பேரும்  ரசிகர்கள்.

‘‘பெரிசா படிக்கலை. சமையல் மட்டும்தான் தெரியும். ஒருமுறை என் பசங்களுக்கு ஓட்டல்ல தோசை வாங்கினப்ப, அந்த மாவுல எங் கக் கண்  எதிர்லயே மைதா கலக்கறதைப் பார்த்தேன். ஓட்டல் தோசைன்னா முறுகலா, மெலிசா, சுவையா இருக்கும்னு நினைச்சு  தேடித் தேடி வாங்கறோம்.  ஆனா, அதுல உடம்புக்குக் கெடுதலான மைதா கலக்கறது தெரிஞ்சதும் அதிர்ச்சியா இருந்தது. அப்பதான்  எனக்குத் தெரிஞ்ச சமையல் கலையை  வச்சு, சின்ன அளவுல கேட்டரிங் ஆரம்பிச்சேன்.

வீட்லயே ஒரு சின்ன இடத்துல கடை  போட்டு, காலையிலயும் ராத்திரியிலயும் டிபன் ஆரம்பிச்சேன். பொங்கல், பூரி, இட்லி, தோசை, வடை,  வடைகறி, சப்பாத்தி, பரோட் டான்னு எளிமையான உணவுகள் மட்டும்தான் கிடைக்கும். ரேஷன் அரிசியை உபயோகிக்கிறது, வெங்காயத்துக்குப் பதில்  முட்டை கோஸ் சேர்க்கறது, சோடா உப்பு சேர்க்கறது, உபயோகிச்ச எண்ணெயை திரும்பத் திரும்ப உபயோகிக்கிறது, மீந்து போன வடையில   வடைகறி பண்றதுன்னு வழக்கமா எல்லா ஓட்டல்லயும் பண்ற ஏமாத்து வேலைகள் எதையும் பண்ணக்கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன்.

செலவெல்லாம் போக ஓரளவுக்கு லாபம் வந்தா போதும்னு நினைக்கிறதால இது எனக்கு சாத்தியமாகுது’’ என்கிற மாலாவுக்கு அவ ரது கணவர்,  மகன்கள் என குடும்பமே ஒத்துழைப்பையும் உதவியையும் கொடுப்பதில் மகிழ்ச்சி.‘‘நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்க தைரியமா கேட்டரிங் பிசினஸ்ல  இறங்கலாம். 5 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும். ஒரு நாளைக்கு செலவெல்லாம் போக ஆயிரம் ரூபாய் கையில தங்கும். சுவையும் ஆரோக்கியமும்  குறையா மப் பார்த்துக்கிட்டா, உங்க வாடிக்கையாளர்கள் எத்தனை வருஷங்களானாலும் உங்களைவிட்டுப் போக மாட்டாங்க...’’ - தொழில்  ரகசியம்  சொல்பவர், 2 நாள் பயிற்சியில் ஓட்டல் ருசியில் 10 அயிட்டங்களை 750 ரூபாய் கட்டணத்தில் கற்றுத்தரக் காத்திருக்கிறார். (99448 08537)

சூப் ஃபார் சூப்பர் பிசினஸ்

Soup For Super Business!




நீங்கதான் முதலாளியம்மா!

குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு உணவு சூப். எல்லா நாளும் சூப் குடிக்கலாம்... எப்படிப்பட்டவரின் தேவையையும் நிறைவேற்றும் என்பதே சூப்பின் சிறப்பம்சம். உடல்நலமில்லாதவர்களுக்கும் சூப் கொடுக்கலாம்... உடல் பருமனைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் அதற்கேற்ற சூப் உண்டு...

உடல் எடை கூட வேண்டும் என்கிறவர்களுக்கும் பாதாம் சூப் போன்றவை உதவும். காய்கறி சாப்பிட மறுக்கிற குழந்தைகளுக்கும், காய்கறிகளை சாப்பிட முடியாத முதியவர்களுக்கும் அவற்றை சூப் வடிவத்தில் கொடுக்கலாம். இன்னும் ஜலதோஷம், மூச்சுப்பிடிப்பு, உடல் வலி, களைப்பு என எல்லாவற்றுக்கும் சூப்பையே மருந்தாகக் கொடுக்க முடியும்.

தெருவுக்குத் தெரு சூப் கடைகள் இருக்கின்றன. ஆனாலும், அவை தயாராகும் இடம், முறை, சுகாதாரம் என எல்லாமே கேள்விக்குறி. பெரிய ஓட்டல்களில் கிடைக்கிற சூப்புகளின் விலையோ பயமுறுத்துகிறது. ''உங்களுக்குப் பிடிச்ச சுவையில, சுலபமான முறையில வீட்லயே உங்க கைப்பட சூப் தயாரிச்சு, உங்க குடும்பத்தாரை சந்தோஷப்படுத்துங்க...’’ என்கிறார் சென்னை, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சவுமியா. விதம் விதமான சூப் வகைகளைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர் இவர்!

‘‘வெளிநாடுகள்ல சூப் குடிக்கிற பழக்கம் ரொம்பப் பிரபலம். ரெண்டு ஸ்லைஸ் ரொட்டி, ஒரு கப் சூப் குடிச்சு பசியாறுவாங்க அவங்க. அடிக்கடி ஸ்டார் ஹோட்டல்கள்ல சாப்பிடுவோம். அங்கே கிடைக்கிற சூப் வித்தியாசமான சுவையில இருக்கும். அது ரொம்பப் பிடிச்சிருந்தது. எப்படிப் பண்றாங்கன்னு தேடித் தேடி நிறைய வகுப்புகளுக்குப் போய் கத்துக்கிட்டேன். முதல் கட்டமா வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு சூப் கொடுக்கிற பழக்கத்தை அறிமுகப்படுத்தினேன்.

அப்படியே எங்க வீட்டு சூப் விருந்து பிரபலமாக ஆரம்பிச்சது. அடிப்படையை வச்சுக்கிட்டு, நானாகவே வேற வேற பொருட்களை உபயோகிச்சு விதம் விதமான சூப் வகைகள் செய்ய ஆரம்பிச்சேன். இன்னிக்கு என் ஃப்ரெண்ட்ஸ் வீடுகள்ல என்ன விசேஷம், பார்ட்டின்னாலும் சூப் ஆர்டர் என்கிட்டதான் வரும். கடைகள்ல கிடைக்கிற மாதிரி கார்ன்ஃப்ளார் சேர்க்காம, செயற்கையான கலப்பு எதுவும் இல்லாம ஆரோக்கியமான முறையில தயாரிக்கிறதுதான் என் ஸ்பெஷல். அந்தத் தரம்தான் 30 வருஷங்களா என்னை இந்தத் துறையில வெற்றிகரமா வழிநடத்திட்டிருக்கு’’ என்கிற சவுமியா, சூப் பிசினஸில் இறங்க நினைப்போருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

இது இப்படித்தான்!


மூலப்பொருட்கள்

சாதா அல்லது இண்டக்ஷன் அடுப்பு, பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மூலிகைகள், பிரஷர் குக்கர், பிளென்டர், ஸ்ட்ரெயினர் (வடிகட்டி), மிக்சி, சூட்டைத் தக்க வைக்கிற பாத்திரங்கள், பரிமாற சூப் கிண்ணங்கள் மற்றும் ஸ்பூன்கள், பார்சல் செய்து கொடுக்க பேப்பர் கப் அல்லது பிளாஸ்டிக் கவர்கள், சீலிங் மெஷின், எடை மெஷின்.

எங்கே வாங்கலாம்? முதலீடு?


சற்றே பெரிய பாத்திரக்கடைகளில் அடுப்பு முதல் வடிகட்டி, பிளென்டர் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்கும். வீட்டிலேயே வைத்து விற்பனை செய்யப் போவதானால் வீட்டில் உபயோகிக்கிற சாதாரண கேஸ் ஸ்டவ்வே போதும். வெளியில் கடை போடுவதாக இருந்தால் இன்டக்ஷன் அடுப்பு சிறந்தது. மளிகைப் பொருட்கள், மூலிகைகள், பேப்பர் கப், கவர், எடை மற்றும் சீலிங் மெஷின் போன்றவற்றை சென்னை, பாரிமுனையில் மொத்த விலைக் கடைகளில் மலிவாக வாங்கலாம். 5 முதல் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு!

என்னென்ன வகைகள்?


காய்கறி சூப், தக்காளி சூப், ஸ்வீட் கார்ன் சூப், வாழைத்தண்டு சூப், காளான் சூப்... இந்த ஐந்தும் பெரும்பாலும் எல்லா சூப் கடைகளிலும் கிடைக்கிற வகைகள். எல்லா வயதினரின் விருப்பங்களையும் நிறைவேற்றும். இவை தவிர, முருங்கைக்காய் சூப், கீரை சூப், புதினா-கொத்தமல்லி சூப், பிரண்டை - இஞ்சி சூப், மிளகு சூப், எலுமிச்சை சூப்... இப்படி இன்னும் சிறப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் ஏரியா வாசிகளின் விருப்பங்களைத் தெரிந்து கொண்டு, தினம் ஒரு ஸ்பெஷல் சூப் கூட கொடுக்கலாம்!

எதில் கவனம் தேவை?


சூப் என்பது கிட்டத்தட்ட மருத்துவ உணவு மாதிரி. அதனால் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் என எல்லாம் தரமானவையாக இருக்க வேண்டும். அவற்றை சுத்தப்படுத்தும் முறையிலும் தயாரிப்பு முறையிலும் சுத்தம் அவசியம். நேரத்தை மிச்சப்படுத்த நினைத்து பலமணி நேரம் முன்னதாக தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து தேவைக்கேற்ப சூடுபடுத்திக் கொடுக்கிற கதையெல்லாம் கூடாது. விற்பனைக்கு சில மணி நேரம் முன்னதாகத்தான் தயாரிக்க வேண்டும்.

விற்பனை வாய்ப்பு? வருமானம்?


சின்னச் சின்ன பார்ட்டிகள், விசேஷங்களுக்கு சூப் மட்டும் செய்து கொடுக்க ஆர்டர் பிடிக்கலாம். தினசரி மாலை வேளைகளில் வீட்டு வாசலில் சின்ன கடை வைத்து விற்கலாம். வீட்டின் அருகே உள்ள பெரிய மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட், மருத்துவமனை போன்ற இடங்களில் அனுமதி பெற்று தனியே கடையாகவும் நடத்தலாம். 150 மி.லி. அளவு சூப்பை 15 ரூபாய்க்கு விற்கலாம். 50 சதவிகித லாபம் நிச்சயம்.

பயிற்சி?

ஒரே நாள் பயிற்சியில் 10 வகையான சூப் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். (99402 48796)

ஆயுளைக் கூட்டும் அற்புத அரிசி !

பலகாரத்துக்கேற்ற ரகம், சாதத்துக்கு ஏற்ற ரகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்ற ரகம்… என்று பாரம்பரிய நெல் ரகங்கள் ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சிறப்பு குணமுண்டு. இதற்காகவே, இயற்கை வழி முறையில் விவசாயம் செய்பவர்கள் இப்படிப்பட்ட ரகங்களைத் தேடிப்பிடித்து பயிர் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அந்த வகையில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம்… போன்ற நோய்களை விரட்டும் மருத்துவ குணமுள்ள ‘காலா நமக்’ எனப்படும் பாரம்பரிய நெல் ரகத்தை சாகுபடி செய்து வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், பெரிய கொழப்பளூர் கிராமத்தைச் சேர்ந்த மருத்துவர் மணி.
இவர், 25.1.2012 தேதியிட்ட இதழில், வெளியான ‘வறட்சியிலும் வாடாத வரகு… பாடில்லாமல் தருமே வரவு!’ கட்டுரை மூலமாக வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான்.
கல்வி கொடுத்த ஐ.ஆர்.-8!
”நான், எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சிட்டு, பி.யூ.சி. படிக்க தாத்தாகிட்ட பணம் கேட்டேன். ‘படிக்கப் போக வேண்டாம், தறி நெய்ற வேலையைப் பார்’னு சொல்லிட்டார். அந்த சமயத்துலதான் ஐ.ஆர்.-8 நெல் ரகத்தை அறிமுகப்படுத்துனாங்க. அதை சாகுபடி செய்றதுக்கு ஏக்கருக்கு 400 ரூபாய் கூட்டுறவு சங்கம் மூலமா கடனும் கொடுத்தாங்க. ரேடியோவுல இந்த விஷயத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு, ‘கூட்டுறவுக் கடனை வாங்கிக் கொடுங்க ஒரு ஏக்கர்ல பயிர் வெச்சு, வழக்கமா விளையுற 15 மூட்டையை உங்களுக்குக் கொடுத்துடறேன். மீதியை நான் எடுத்துக்கிறேன்’னு தாத்தாகிட்ட கேட்டேன். அவரும் வாங்கிக் கொடுத்தார்.
ஐ.ஆர்.-8 ரகத்தை சாகுபடி பண்ணுனப்போ, ஒரு ஏக்கர்ல 80 மூட்டை (75 கிலோ) நெல் கிடைச்சது. அதுல 40 மூட்டையை வீட்டுக்குக் கொடுத்திட்டு, 40 மூட்டையை வித்துதான் நான் படிச்சேன். அதுக்கப்பறம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துல பேராசிரியரா வேலை பார்க்கும்போதுதான், ரசாயன விவசாயத்தோட பாதிப்பைத் தெரிஞ்சுக்கிட்டேன். அதனால, திரும்பவும் இயற்கை முறை விவசாயத்துக்கே திரும்பிட்டேன்.
எனக்கு இயற்கை விவசாயம் செய்யவும், விவசாயத்துல புதுவிதமான தொழில்நுட்பங்களைச் சிந்திக்கவும் தூண்டி விட்டது, நம்மாழ்வாரும்… பசுமை விகடனும்தான்” என்று முன்கதை சொன்னவர், தொடர்ந்தார்.
‘இப்ப 40 ஏக்கர்ல இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டிருக்கேன்.
5 ஏக்கர்ல தென்னை, மா, குமிழ் இருக்கு. ஒன்றரை ஏக்கர்ல வெட்டிவேர்; ஒன்றரை ஏக்கர்ல பசுந்தீவனம்; 10 ஏக்கர்ல வரகுனு இருக்கு. 14 ஏக்கர்ல இருந்த பொன்னியை அறுவடை பண்ணியாச்சு. ரெண்டு ஏக்கர்ல சீரக சம்பா நெல் இருக்கு. அரை ஏக்கர்ல அடுத்த போகத்துக்கு நாத்து விட்டிருக்கேன். அரை ஏக்கர்ல கருங்குறுவை நெல்லும், நாலு ஏக்கர்ல ‘காலா நமக்’ நெல்லும் அறுவடைக்குத் தயாரா இருக்குது. மீதி ஒரு ஏக்கர்ல கட்டடமும் வண்டிப்பாதையும் இருக்கு” என்றவர், ‘காலா நமக்’ ரகத்தைப் பற்றிச் சொன்னார்.
புத்தருக்குப் பிடித்த ரகம்!
”காலா என்ற சொல்லுக்கு ஹிந்தியில ‘கருப்பு’னு அர்த்தம். ‘நமக்’னா ‘உப்பு’னு அர்த்தம். உடம்புக்கு மொத்தம் 72 வகையான தாது உப்புகள் தேவையாம். அதுல கிட்டத்தட்ட 40 தாது உப்புகள் இந்த காலா நமக் ரக நெல்லுல இருக்கறதா சொல்றாங்க.
மூளை நரம்பு இயங்காமை, சிறுநீரகப் பிரச்னை, கேன்சர், தோல் சம்பந்தமான நோய்கள், ரத்த சம்பந்தமான நோய்கள்னு நிறைய நோய்கள் இந்த ரக அரிசியை சாப்பிட்டா கட்டுப்படும்.
புத்தர் இந்த அரிசியில செஞ்ச உணவை மட்டும் சாப்பிடுவாராம். இப்பவும் புத்த பிட்சுக்கள் எங்க போனாலும், இந்த நெல்லையும், அரிசியையும் கையோட எடுத்துக்கிட்டுப் போறாங்க. அவங்கள்லாம் அதிக வயசு வாழறதுக்குக் காரணம் இந்த அரிசிதான்” என்று வரலாற்றுத் தகவல்களைச் சொல்லி பிரமிப்பூட்டியவர், காலா நமக் நெல் சாகுபடி செய்யும் முறைகளைச் சொன்னார். அவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 30 கிலோ விதை!
காலா நமக் ரகத்தின் வயது 120 நாட்கள். ஆடி முதல், கார்த்திகை வரை உள்ள மாதங்களில் சாகுபடி செய்யலாம். சாதாரண நடவு முறையில் ஏக்கருக்கு 30 கிலோ விதைநெல் தேவைப்படும். ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளை உற்பத்தி செய்ய, 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். 50 கிலோ மட்கிய தொழுவுரத்தைப் போட்டு, ரெண்டு சால் சேற்று உழவு செய்து நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். 100 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் அமுதக்கரைசல் கலந்து, அதில் 30 கிலோ விதைநெல்லை சணல் சாக்கில் இட்டு கட்டி, 12 மணி நேரம் ஊறவைத்து எடுத்து… தண்ணீரை வடித்து 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். பிறகு நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்காலில் தண்ணீர் கட்டி விதைக்க வேண்டும்.
12 மணி நேரம் கழித்து, நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்து விட வேண்டும். இது போல நான்கு நாட்களுக்குச் செய்ய வேண்டும். இந்த சமயத்தில் முளைப்பு எடுத்து விடும். அதற்குப் பிறகு தண்ணீரை வடிக்க வேண்டியதில்லை. 10-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுச் சிறுநீரைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளர்ந்து வரும். 25 முதல் 30 நாட்களுக்குள் நடவுக்குத் தயாராகி விடும்.
நாற்று தயாராகும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்துவிட வேண்டும். நடவு வயலில் இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்தி, ஏக்கருக்கு 200 கிலோ தொழுவுரத்தை இட்டு, சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20-ம் நாளில் தொழுவுரம் இடவேண்டும். 25-ம் நாளில் கைகளால் களை எடுக்க வேண்டும். அதற்குமேல் பயிர் வளர்ந்து மூடிக் கொள்வதால், களைகள் வளர்வதில்லை.
மகசூலைக் கூட்டும் மோர்க் கரைசல்!
90-ம் நாளில் கதிர் பிடிக்கத் துவங்கும். இச்சமயத்தில் 10 லிட்டர் தண்ணீருக்கு, ஒரு லிட்டர் மோர் (ஒரு வாரம் வரை புளிக்க வைத்தது) என்ற விகிதத்தில் கலந்து… ஏக்கருக்கு 10 டேங்க் தெளித்துவிட வேண்டும். இதனால், சாறு உறிஞ்சும் பூச்சிகள் கட்டுப்படும். 105-ம் நாளுக்கு மேல் கதிர் முற்றத் துவங்கும். 110-ம் நாள் தண்ணீர் கட்டுவதை நிறுத்தி, 120-ம் நாளில் அறுவடை செய்யலாம்.
ஏக்கருக்கு 54 ஆயிரம் ரூபாய் !
நிறைவாகப் பேசிய மணி, ”தூருக்கு இருபதுல இருந்து இருபத்தஞ்சு சிம்புகளும், ஒரு சிம்புக்கு நூத்தி இருபதுல இருந்து, நூத்தம்பது மணிகளும் இருந்துச்சு. அறுவடை செஞ்சப்போ, ஏக்கருக்கு 20 மூட்டை (75 கிலோ) கிடைச்சுது. எப்பவும் நான் அரிசியா மாத்திதான் விப்பேன்.
நான் மருத்துவரா இருக்கறதால, என்கிட்ட சிகிச்சைக்காக வர்றவங்களே பெரும்பாலும் வாங்கிடறாங்க. மீதியை பசுமை அங்காடிகள் மூலமா விற்பனை பண்ணிடறேன்.
ஒரு மூட்டைக்கு 45 கிலோ அரிசி வீதம் 20 மூட்டைக்கு 900 கிலோ அரிசி கிடைக்கும். ஒரு கிலோ 60 ரூபாய்னு வித்தா… 54 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவு போக, 39 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும்” என்று சொல்லி சந்தோஷமாக விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
மணி, செல்போன்: 96294-66328.

 மகசூலைக் கூட்டும் கழுநீர்!
மணி, மாட்டுக் கொட்டகை கழுவிய நீரையும் உரமாகப் பயன்படுத்தி வருகிறார். அது பற்றிப் பேசிய அவர், ”இயற்கை விவசாயத்துக்காக நாட்டுமாடுகளை வெச்சுருக்கேன். வழக்கமா எரு மட்டும் போடுற நிலத்தைவிட, ஆட்டுக்கிடை மடக்குற நிலத்துல அதிக மகசூல் கிடைக்கும். அதுக்கு காரணம் ஆடுகளோட மூத்திரமும் நிலத்துல விழறதுதான்.
இதை வெச்சே… மாட்டுச் சாணத்தையும், மூத்திரத்தையும் சேர்த்தே வயல்ல விடலாம்னு நினைச்சேன். அதுக்காக, 60 அடி நீளம், 20 அடி அகலம், 8 அடி ஆழத்தில் கான்கிரீட் தொட்டி கட்டியிருக்கேன். மாடு கட்டுற இடத்துல கிடைக்கற மூத்திரம், சாணத்தைக் கழுவி இந்த தொட்டியில விட்டு, நாலு நாள் தேக்கி வெச்சா அதுல நிறைய நுண்ணுயிரிகள் பெருகிடும். அந்தத் தண்ணியை வாரம் ஒரு தடவை நெல் வயலுக்கு விடுறப்போ மகசூல் கூடுது. இந்தத்தொட்டி மேல ஆடு, கோழி, புறானு வளர்க்கப் போறேன். அதுங்களோட எச்சமும் சேர்றதால… இன்னும் சத்துள்ள உரத்தண்ணி கிடைக்கும்” என்று தொழில்நுட்ப தகவல்களைப் பகிர்ந்தார்.

சோலார் பம்ப்செட்டுக்கு 80% மானியம்… வாரிக் கொடுக்கும், பொறியியல் துறை…

தற்போதைய சூழ்நிலையில், விவசாயப் பரப்பு குறைந்துகொண்டே வருவதற்கு… வறட்சி மற்றும் இயற்கைச் சீற்றங்கள் என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், விவசாயத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதும் முக்கிய காரணம். அதனால், விவசாயத்தில் உழவு முதல் அறுவடை வரையில் பலவிதமான இயந்திரங்களின் தேவை அவசியமாகிக் கொண்டே இருக்கிறது. அதற்கேற்ப பல கருவிகளும் சந்தைக்கு வந்த வண்ணம் உள்ளன.

இப்படிப்பட்ட கருவிகளை வாடகைக்கு விடுவதன் மூலமாகவும், மானியம் கொடுத்து சொந்தமாக வாங்க ஏற்பாடு செய்வதன் மூலமாகவும்… இயந்திரங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் வேலையைத் தொடர்ச்சியாக செய்து வருகிறது, தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறை. இத்துறையின் செயல்பாடுகள் பற்றி, வேலூர் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் செயற்பொறியாளர் இன்பநாதன் சொன்ன தகவல்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.
நிலத்தைச் சமன்படுத்த 910 ரூபாய்…
”விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த நாட்களுக்கு மட்டுமே தேவைப்படும் புல்டோசர், டிராக்டர், அறுவடை இயந்திரம்… போன்ற கருவிகளைக் குறைந்த கட்டணத்தில் வாடகைக்குக் கொடுத்து வருகிறோம். நீர்ப்பாசனத்தை முறையாக செய்வதற்கு நிலம் சமமாக இருக்க வேண்டும். அப்படி நிலத்தைச் சமன்படுத்து வதற்கு பயன்படுத்தப்படும் புல்டோசர் இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கான வாடகை, 910 ரூபாய். சேற்று உழவு, புழுதி உழவு செய்வதற்குத் தேவையான டிராக்டருக்கு ஒரு மணி நேரத்துக்கு 370 ரூபாய். டயர் மூலமாக இயங்கக்கூடிய நெல் அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 910 ரூபாய் என நிர்ணயம் செய்திருக்கிறோம். இக்கருவிகளை வாடகைக்குக் கேட்டு ஒரே நேரத்தில் பலர் அணுகும்போது, பதிவு முன்னுரிமை அடிப்படையில், அனுப்பி வைப்போம்.
நிலத்தடி நீரைக் கண்டுபிடிக்கும் கருவி!
தவிர, பாசனக் கிணறுகளில் இருக்கும் பாறைகளை, வெடி வைத்து உடைத்து ஆழப்படுத்தும் கருவிகளும் உண்டு. இக்கருவிக்கு ஒரு நாளுக்கு 250 ரூபாய் வாடகை. கிணறு, போர்வெல் போன்றவற்றை அமைப்பதற்கு முன்பாக எங்கள் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால்… நீரோட்டம் உள்ள பகுதிகளையும் ஆய்வு செய்து கொடுக்கிறோம். அதற்காக, விவசாய நிலங்களுக்கு 500 ரூபாய் கட்டணமும், மற்ற இடங்களுக்கு 1,000 ரூபாய் கட்டணமும் செலுத்த வேண்டியிருக்கும்.
புதிய கருவிகளுக்கு 50% மானியம்!
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கருவிகள் வாங்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதிகபட்ச மானியமாக… பவர் டில்லருக்கு 45 ஆயிரம் ரூபாய்; டிராக்டருக்கு 45 ஆயிரம் ரூபாய்; ரோட்டவேட்டருக்கு 20 ஆயிரம் ரூபாய்; டிராக்டர் மூலம் இயங்கும் இயந்திரங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய்; ஒருங்கிணைந்த கதிர் அறுவடை இயந்திரத்துக்கு 4 லட்சம் ரூபாய் என வழங்கப்படுகிறது. தவிர, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு புழக்கத்துக்கு வந்துள்ள நெல் நடவு இயந்திரம், நேரடி நெல் விதைக்கும் கருவி, தென்னை மட்டையைத் தூளாக்கும் கருவி, களை எடுக்கும் கருவிகள், பயிர் பாதுகாப்புக் கருவிகள், பல வகை தானியம் அடிக்கும் கருவிகள்… போன்றவற்றுக்கு 50% மானியம் உண்டு.
பயிற்சியும் உண்டு..!
வேலூர், திருச்சி, திருவாரூர், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஆறு மாவட்டங்களில் டிராக்டர் பழுதுபார்க்கும் மையங்கள் உள்ளன. இம்மையங்களில்… எழுதப் படிக்க தெரிந்த கிராமப்புற இளைஞர்களுக்கு வேளாண் கருவிகள் பராமரித்தல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சியில் சேர்பவர்களுக்கு ஊக்கத்தொகையும் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் ஒரு குழுவுக்கு 50 பேர் வீதம், இரண்டு குழுக்களுக்கு 3 மாத காலம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி தேவைப்படுவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இளைஞர்களுக்கு முழு மானியத்தில் இயந்திரம்!
‘உழவர் குழுக்கள்’ திட்டத்தின் கீழ் 16 இளைஞர்களை ஒன்றாகச் சேர்த்து குழு அமைத்து… அவர்களுக்கு இயந்திரங்களை இயக்குவது, இயந்திர நடவுக்கான நாற்றுகளை உற்பத்தி செய்வது போன்ற தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொடுக்கிறோம். இத்திட்டத்தின் கீழ், நான்கு பவர் டில்லர்கள், நான்கு நெல் நடவு இயந்திரங்கள், நான்கு களை எடுக்கும் இயந்திரங்கள் என 12 இயந்திரங்களை 100 சதவிகித மானியத்தில் கொடுக்கிறோம். இக்குழுக்களை எங்களின் கண்காணிப்பில் வைத்து, தேவையான ஆலோசனைகளைக் கொடுத்து வருகிறோம். இதுபற்றிய விவரங்கள் தேவைப்படுபவர்கள், அந்தந்த மாவட்டங்களில் உள்ள வேளாண் பொறியியல் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
சோலார் பம்ப் செட்டுக்கு 80% மானியம்!
மின்சாரப் பற்றாக்குறையால் பாசனம் தடைபடும் பிரச்னையைப் போக்க, போர்வெல் மற்றும் கிணறுகளில்
5 ஹெச்.பி. திறன் கொண்ட சோலார் பம்ப் செட்டுகள் அமைத்துக்கொள்ள 80% மானியம் வழங்கப்படுகிறது. விவசாயி தனது பங்காக 20% தொகை யையும் அதற்கான வரித்தொகையையும் செலுத்த வேண்டும். அதாவது, போர்வெல் பாசனமாக இருந்தால், வரியுடன் சேர்த்து, 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து, 35 ஆயிரத்து 200 ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக 1 லட்சத்து 4 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்த வேண்டும்.
கிணற்றுப் பாசனத்துக்கு வரியுடன் சேர்த்து, 5 லட்சத்து ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும். இதில் 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மானியமாகக் கிடைக்கும். பயனாளி தனது பங்காக, 1 லட்சத்து 17 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும்.  இத்திட்டத்தில் பயன்பெற… 200 முதல் 300 அடி ஆழத்தில் தண்ணீர் இருக்க வேண்டும். கண்டிப்பாக சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருக்க வேண்டும் அல்லது சொட்டு நீர்ப்பாசனம் அமைப்பதாக உத்தரவாதம் கொடுக்க வேண்டும்” என்று மிகவும் விரிவாகப் பேசிய இன்பநாதன்,
”இன்றையச் சூழ்நிலையில் ஆள்பற்றாக்குறை, மின்தட்டுப்பாடு போன்ற பிரச்னைகளைச் சமாளிக்க இதுபோன்ற கருவிகள், இயந்திரங்கள் அவசியம். அதனால், அரசு வழங்கும் சலுகைகளை முறையாக விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அழைப்பு வைத்தார்!
நன்றி விகடன்

பட்டதாரி இளைஞரின் பலே விவசாயம்!

வெண்டை, கீரை, அவரை, மிளகாய்... 3மாதம் 90 ஆயிரம்...

காலநிலை மாறுபாடு, வறட்சி, இயற்கைச் சீற்றங்கள்... என விவசாயம் பொய்த்துப் போவதற்கு பல காரணங்கள் உண்டு. ஆனால், நன்கு விளைந்து அதிக மகசூல் கிடைக்கும் சூழ்நிலையிலும், விளைபொருட்களுக்கு விலை குறைந்து பிரச்னை வந்துவிடும். குறிப்பாக, ஒரே பயிரையே அதிகப் பரப்பில் சாகுபடி செய்யும் விவசாயி களுக்குத்தான் இந்த பிரச்னை அடிக்கடி ஏற்படுகிறது. ஆனால், குறைந்த பரப்பாக இருந்தாலும், பலவித பயிர்களைக் கலந்து சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, விலை பிரச்னை பெரியளவில் வருவதில்லை. ஏனெனில், ஒரு பயிர் கைவிடும்போது... இன்னொரு பயிர் காப்பாற்றி விடுகிறது. இந்த சூட்சமத்தைத் தெரிந்து வைத்திருக்கும் பலர், நல்ல வருமானம் ஈட்டி வருகிறார் கள். அவர்களில் ஒருவர்... காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் பரத்.
பேராசிரியர் விதைத்த வித்து!
காலைவேளை ஒன்றில், தன் தோட்டத்தில் பரத் வேலை செய்து கொண்டிருந்தபோது சந்தித்தோம். ''சென்னை, பச்சையப்பா காலேஜ்ல எம்.எஸ்.சி ஜுவாலஜி படிச்சுட்டு இருந்த சமயத்துல, பஞ்சகவ்யா பத்தி ஒரு பேராசிரியர் சொன்னார். அந்த விஷயத்துல எனக்கு ஆர்வம் வந்து, அதைப்பத்தி நிறைய விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். படிப்பு முடிஞ்சதும், தமிழ்நாடு அரசின் பசுமையாக்கல் திட்டத்துல உதவி ஆராய்ச்சியாளரா தற்காலிகப் பணியில சேர்ந்தேன். வண்டலூர் வன ஆராய்ச்சி நிலையத்துக்கு உட்பட்ட கொளப்பாக்கம் பகுதியில மரங்களை ஆய்வு செஞ்சு அறிக்கை கொடுக்கறதுதான் வேலை. அங்கதான், மரங்கள்ல இலையைச் சாப்பிடற பூச்சிகள், தண்டுகள துளைக்கிற வண்டுகள், வேரை பாதிக்கிற பூச்சிகள் பத்தியெல்லாம் அனுபவரீதியா தெரிஞ்சுக்கிட்டேன். குறிப்பா, தேக்கு மரத்துல இலைப்புள்ளி நோய், இலைக்கருகல் நோயோட பாதிப்பு அதிகமா இருந்துச்சு. அந்த மரங்களுக்கு பஞ்சகவ்யாவைக் கொடுத்தப்போ பூச்சிகள் கட்டுப்பட்டுச்சி. நன்மை செய்ற பூச்சிகளும் நிறைய வந்துச்சி. புதுசா வெச்ச மரக் கன்றுகளுக்கு பஞ்சகவ்யா கொடுத்தப்போ, வளர்ச்சி அபரிமிதமா இருந்துச்சி. அப்போதான், 'இதைப் பயன்படுத்தி நாம ஏன் விவசாயம் செய்யக்கூடாது?’னு யோசனை வந்துச்சி. இதுதான், இன்னிக்கு என்னையும் ஒரு விவசாயியா உங்ககிட்ட பேச வெச்சிருக்கு.
நிறைய இயற்கை... கொஞ்சம் செயற்கை!
நாலு வருஷமா அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பாத்துட்டிருக்கேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, வேலை பார்த்துட்டு இருக்குற தம்பி பாஸ்கரனும் லீவு நாட்கள்ல எங்களோட சேர்ந்துக்கு வான். ஒரே பயிரைப் போடுறப்போதான், பூச்சிகள், நோய்கள், விலை இல்லாம போறதுனு பல பிரச்னைகள் வரும். அதனால, கீரை, காய்கறிகள், நெல்னு கலந்துதான் சாகுபடி செய்றோம். கொஞ்சம் ரசாயனம், கொஞ்சம் பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம்னு கலந்து விவசாயம் செய்றோம். நண்பர் மூலமா சீரகச் சம்பா விதைநெல் கிடைச்சுது. 20 சென்ட்ல அதை விதைச்சு... பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் ரெண்டையும் சேத்துக் கொடுத்ததுல நல்லா வளந்துச்சு. இப்போ ஊர்க்காரங்கள்லாம் என்கிட்ட பஞ்சகவ்யா பத்தி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்ற பரத், தொடர்ந்தார்.
கலப்புப் பயிரோடு கறவை மாடுகளும்!
''மொத்தம் ரெண்டு ஏக்கர் இருக்கு. செம்மண் கலந்த சரளை மண். அதனால, எந்தப் பயிர் வெச்சாலும் தங்கமா விளையும். 15 சென்ட்ல கோ-4 தீவனப் பயிர், 10 சென்ட்ல மிளகாய் (இந்த 25 சென்ட்லயே 20 செம்மரம், 20 மகோகனி, 20 தேக்குக் கன்றுகள 6 க்கு 6 இடைவெளியில் நடவு போட்டிருக்கிறார்), 30 சென்ட்ல வெண்டை, 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா அவரையும், 20 சென்ட்ல கனகாம்பரம், 10 சென்ட்ல ராகி, 15 சென்ட்ல தனியாக கீரையும், 30 சென்ட்ல கீரை அதுல ஊடுபயிரா நூக்கல், முள்ளங்கி, பாம்பு வெள்ளரியை போட்டிருக்கேன். மீதி 40 சென்ட்ல வெண்டையும், நெல்லும் அறுவடை முடிச்சுருக்கேன். மூணு மாடுகள், மூணு கன்னுகுட்டிகளும் இருக்கு. அதுல, ரெண்டு மாடு கறவையில இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. மரப்பயிர், கனகாம்பரம், ராகி இதெல்லாம் இப்பத்தான் நடவு போட்டு வளர்ந்துகிட்டிருக்கு. இதுல மகசூல் பார்க்க இன்னும் நாளாகும்.

சிறுகீரையை 17-வது நாள்ல இருந்து அறுவடை பண்ணலாம். அரைக்கீரை, முளைக்கீரை ரெண்டையும் 20-வது நாள்ல அறுவடை பண்ணலாம். தொடர்ந்து, 5 நாள் வரை கீரை பறிக்கலாம். தனித்தனியா மேட்டுப்பாத்தி அமைச்சு, ஒவ்வொரு பாத்தியிலயும் ரெண்டு நாள் இடைவெளியில விதைகளைத் தூவுவேன். இப்படி செய்யுறப்போ, தொடர்ந்து 20 நாளுக்கு கீரை பறிக்க முடியுது. மேட்டுப்பாத்திங்கிறதால, மழைக் காலத்துல தண்ணி தேங்காது. அதேமாதிரி சுழற்சி முறையில்தான் பயிர் நடவு செய்றேன். ஒரு முறை கீரை போட்டா... அந்த நிலத்துல அடுத்த முறை வெண்டை, அடுத்த முறை நெல், அடுத்த முறை கேழ்வரகுனு மாத்தி மாத்தி பயிர் செய்றப்போ, நிலத்துல சத்துக்கள் குறையறதில்லை.
நிலத்திலேயே விதை வங்கி!
இப்போ, கடைகள்ல 1 கிலோ விதை சிறுகீரை-180 ரூபாய், முளைக்கீரை-300 ரூபாய், அரைக்கீரை-400 ரூபாய்னு விதைகளை விற்பனை பண்றாங்க. விலை கூடுதலா இருக்கறதால... நானே விதையை உற்பத்தி பண்ணிக்கிறேன். எவ்வளவு விதை தேவையோ... அந்தளவுக்கான கீரைகளை மட்டும் பறிக்காம நிலத்துல விட்டுட்டா 40-45 நாள்ல விதை வந்துடும். அப்படியே கீரையை வேரோட பிடுங்கி, ஒரு வாரத்துக்கு காய வெச்சு கம்பால தட்டி தூத்துனா, விதைகள் கிடைச்சுடும். இதனால, விதைச்செலவு குறைஞ்சுடுது'' என்ற பரத் வருமானம் பற்றிச் சொன்னார்.
3 மாதங்கள்... 90 ஆயிரம் ரூபாய்!
''30 சென்ட்ல இருக்கற வெண்டை அறுவடை முடிஞ்சிருக்கு. ஒரு அறுப்புக்கு ஏறக்குறைய 60 கிலோ வரைக்கும் கிடைச்சுது. எனக்கு மொத்தம் 22 அறுப்பு மூலமா 1,300 கிலோ காய் கிடைச்சுது. ஒரு கிலோ 13 ரூபாய்ல இருந்து 18 ரூபாய் வரைக்கும் வித்துச்சி. சராசரியா 15 ரூபாய் கிடைக்கும். அப்படி பார்த்தா... 1,300 கிலோ மூலமா, 19 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. வருஷத்துல மூணு முறை இப்படி வெண்டை போட்டுடுவேன்.
கீரை மொத்தம் 75 சென்ட்ல இருக்கு. இதுல தனியா 15 சென்ட்ல இருக்கற கீரை இன்னும் அறுவடைக்கு வரல. 60 சென்ட் கீரை மூலமா... 3 ஆயிரத்து 800 கட்டு கீரை அறுவடை செஞ்சு, கட்டு 6 ரூபாய்னு விற்பனை செஞ்சதுல, 22 ஆயிரத்து 800 ரூபாய் கிடைச்சுது. இந்த 60 சென்ட் கீரையில ஊடுபயிரா போட்டிருந்த வெள்ளரி, முள்ளங்கி, நூக்கல் எல்லாத்துலயும் சேர்த்து 5,800 ரூபாய் கிடைச்சுது. இதுல ஊடுபயிரா இருக்கற அவரையில 300 கிலோ கிடைச்சுது. கிலோ 20 ரூபாய் வீதம் விற்பனை செய்ததுல... 6 ஆயிரம் ரூபாய் கிடைச்சுது. மிளகாய்ல 7 ஆயிரத்து 500 ரூபாய் கிடைச்சுது. ஆகக்கூடி மூணு மாசத்துல கிடைக்கிற மொத்த வருமானம்... 61 ஆயிரத்து 600 ரூபாய்.
மாடு வளர்க்கறதால... பால் மூலமா மாசம் 9 ஆயிரம் 660 ரூபாய் கிடைக்குது. இதையே மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா..
28 ஆயிரம் 980 ரூபாய் கிடைக்குது. ஆக, 1 ஏக்கர் 70 சென்ட் நிலத்துல இருக்கற பயிர் மற்றும் மூணு கறவை மாடுகள் மூலமா, 90 ஆயிரத்து 580 ரூபாய் கிடைக்குது. மூணு மாசத்துக்கான செலவு 23,200. லாபம்...
67 ஆயிரத்து 380 ரூபாய். மாசத்துக்கு 22 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாம கிடைக்கும்'' என்ற பரத், நிறைவாக, ''எவ்வளவு நல்ல விலை கிடைச்சாலும், ஒரே காயை அதிகப் பரப்புல சாகுபடி செய்ய மாட்டேன். கலந்து பயிர் செய்றதால எனக்கு விலை கிடைக்கலைங்கிற பிரச்னை இல்லை. நிறைய பேர் என்கிட்ட 'நல்ல படிப்பு படிச்சுட்டு விவசாயத்தை ஏன் பாக்குற’னு கேக்குறாங்க. அதுக்காக நான் ஒரு நாளும் வருத்தப்பட்டதில்லை. மழை மட்டும் கைகொடுத்தா, இன்னும் கூடுதலாவே என்னால சம்பாதிக்க முடியும். நல்ல மனநிறைவோட எனக்கு பிடிச்ச வேலையை சந்தோஷமா செஞ்சுட்டு இருக்கேன்'' என்று புன்னகையோடு விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, பரத், 
செல்போன்: 99766-92219.

மாத்தி யோசிக்கும் பிசினஸ்மேன்கள்! - வெற்றிக்கு வித்திடும் வித்தியாசமான சூழல்கள்



ஒரு தொழில் ஓஹோவென வளர்வதற்கு முக்கியமான தேவை, அந்தத் தொழில் மூலம் கஸ்டமர்களுக்குக் கிடைக்கும் வித்தியாசமான அனுபவம்தான். இந்த அனுபவம் மட்டும் ஒரு கஸ்டமருக்கு பிடித்துப்போய்விட்டால், அந்த கஸ்டமர் அந்த நிறுவனத்தைத் தேடி அடிக்கடி வருவார் என்பதே பிசினஸ் ரகசியம். சென்னையில் வித்தியாசமான சூழலைத் தரும் சில நிறுவனங்களை தேடிப்போய், அந்தச் சூழலை உருவாக்கும் ஐடியா எப்படி பிறந்தது என்று விசாரித்தோம். நாங்கள் முதலில் கோடம்பாக்கத்தில் உள்ள டவுன்பஸ் ஹோட்டலுக்குச் சென்றோம்.
கோடம்பாக்கத்தின் அடையாளம்!
பெயருக்கேற்ப முழு ஹோட்டலை யும் டவுன்பஸ் வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். உண்மையான பஸ் போன்றே சக்கரம், கண்ணாடி ஜன்னல், சைடுமிரர் என்று இருக்கிறது வெளிப்புறம். அப்படியே உள்ளே சென்றால் பஸ்ஸில் உள்ளது போன்றே உட்காரும் சேர் உள்ளது. வெளியே காத்திருக்கும் இடத்தில் உள்ள சேர்களும் இதே வடிவம்தான். மேற்புறத்தில் கைபிடி கம்பிகளையும் பஸ்ஸில் உள்ளதுபோன்றே இரண்டு வரிசைகளில் டேபிள்களையும் அமைத்திருக்கிறார்கள். சாப்பாடு மெனுவில்கூட 'டவுன்பஸ் சூப்பர் ஃபாஸ்ட்’, 'டவுன்பஸ் எல்.எஸ்.எஸ் ஸ்பெஷல்’ என வெரைட்டியான உணவு வகைகளைத் தருகிறார்கள்.
டவுன் பஸ் ஹோட்டலின் உரிமையாளர் வேலுவிடம் பேசினோம். ''எங்க அப்பா ஏகநாதன் பல்லவன் பஸ் சர்வீஸில் டிரைவராக வேலை பார்த்து ரிட்டையர் ஆனவர். 2008-ம் ஆண்டு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என யோசித்தபோது எங்க அப்பாதான், 'இந்தமாதிரி பஸ் வடிவத்தில் அமைத்தால் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். என்னுடைய டிரைவர் வேலைக்கும் அடையாளமாக இருக்கும்’ எனச் சொன்னார். அவரது  விருப்பப்படியே இந்த ஹோட்டலை அமைத்தேன்.
கஸ்டமர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஹோட்டலை இப்படி வித்தியாசமாக வடிவமைத்தபோது அதுவே எங்களுக்கு ஒரு பெரிய விளம்பரமாக மாறியது. எங்கள் கடை கோடம்பாக்கத்தின் அடையாளமாகத் திகழ்வது எங்களுக்கு கிடைத்த அங்கீகாரம்தான்'' என்று பெருமிதத்துடன் சொன்னார்.
வித்தியாசமான முகப்புகள்!
அடுத்து, நாங்கள் சென்றது போத்தீஸ் ஜவுளிக் கடைக்கு. போத்தீஸின் ஸ்பெஷாலிட்டியே பண்டிகைகள் மற்றும் பருவகாலத்துக்கேற்ப கடையின் இன்டீரியர்களை மாற்றுவது மற்றும் கடையின் முகப்பில் வித்தியாசம் காட்டுவதும்தான். இதன்மூலம் தங்களது கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது இந்த நிறுவனம். தீபாவளி, சம்மர் கொண்டாட்டம், கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் ஆடித் தள்ளுபடி என ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப முகப்புத் தோற்றத்தையும் உள்ளே இருக்கும் இன்டீரியர் டிசைனையும் இந்த நிறுவனம் மாற்றத் தவறுவதில்லை.
அதிலும் குறிப்பாக, சம்மர் சீஸனில் பசுமை கொண்டாட்டம் என்ற பெயரில் இந்த நிறுவனம் அமைக்கும் மாற்றங்களை மக்கள் கவனிக்காமல் இருக்க முடிவதில்லை. கடையின் முன்புறம் செடிகளை வளைவாக அமைக்கிறார்கள். வாடிக்கையாளர் களுக்கு இலவச மரக்கன்றுகள், உள்ளே வருபவர்களுக்கு குடிக்க மோர், லஸ்சி போன்றவற்றைத் தருகிறார்கள்.
இதுபற்றி போத்தீஸின் விளம்பரப் பிரிவு மேனேஜர் ஆரோக்கியராஜுடன் பேசினோம். ''ஒவ்வொரு சீஸனுக்கேற்ப இப்படி ஏதாவது வித்தியாசமாக செய்வதால், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர முடிகிறது. இந்த வித்தியாசமான அனுபவத்துக்காகவே எங்கள் கடையைத் தேடிவரும் வாடிக்கையாளர்கள் பலர்'' என்றார் அவர்.
திகில் தரும் ராக்!
'தி ராக் ரெஸ்டாரன்ட்’ - சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் இந்த ஹோட்டலின் நுழைவு வாயிலை குகை வடிவத்தில் அமைத்திருக்கிறார்கள். கதவு ஒரு மனித குரங்கு பொம்மை மாதிரி இருக்கிறது. உள்ளே சென்றால், ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்துவிட்ட மாதிரி ஓர் அனுபவம்.  குறுகலான பாதைகள், ஆதிமனிதனின் சிலைகள், தீப்பந்தம் போன்ற லைட்கள், சுற்றிலும் பாறைகளைச் செதுக்கியது போன்ற அமைப்பு, இருட்டறைகள், மரத்தூண்கள் என வித்தியாசமான சூழலை அனுபவிக்க முடிகிறது. இங்கே கிடைக்கும் உணவுப்பொருட்களும் இப்படி வித்தியாசமாக இருக்குமோ என்று கேட்டால், அப்படி எல்லாம் இல்லை; எல்லா உணவுவகைளும் எங்களிடம் கிடைக்கும் என்கிறார்கள் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.
இந்த ஹோட்டலின் மேனேஜர் ரவிச்சந்திரனுடன் பேசினோம். ''2009-ம் ஆண்டு இதன் உரிமையாளர் கலைவாணன் மற்ற ரெஸ்டாரன்ட்கள் மாதிரி அல்லாமல் வாடிக்கையாளர்களைக் கவருகிற மாதிரி புது ஹோட்டல் ஒன்றை ஆரம்பிக்க நினைத்தபோது இப்படி அமைக்க முடிவெடுத்தார். வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் திருப்தியை விளம்பரமாக்குவது தொழில் வளர்ச்சிக்கு உதவும் என்று எண்ணினோம். இதை அமைப்பதற்குக் கொஞ்சம் செலவு அதிகம்தான். ஆனாலும், வருகிற வருமானத்துக்குக் குறையில்லை. நாங்கள் வித்தியாசமாக அமைத்திருக்கும் சூழ்நிலை எங்களது கஸ்டமர்களுக்குப் பிடித்துப்போகவே, சென்னையில் ஆறு இடங்களில் இதேமாதிரி கிளைகளை வடிவமைத் திருக்கிறோம்'' என்றார்.
கஸ்டமர்கள்தான் முதுகெலும்பு!
வித்தியாசமான சூழலை உருவாக்கி வெற்றிகரமாக பிசினஸ் செய்துவரும் நிறுவனங்கள் பற்றி பிராண்ட்காம் நிறுவனத்தின் சிஇஓ-வான ராமானுஜம் ஸ்ரீதரிடம் கேட்டோம். ''ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடக்கவேண்டுமெனில், இந்த வித்தியாசமான அணுகுமுறை கட்டாயம் வேண்டும். இதுவே அந்த நிறுவனத்துக்கு வெற்றி தேடித்தரும் விளம்பரமாகவும் அமையும். வித்தியாசமான சூழலை அமைத்துத் தரும்போது அது வெறும் விளம்பர உத்தியாக மட்டும் இல்லாமல், கஸ்டமர்களுக்கு திருப்தி தருகிறமாதிரி இருப்பது நல்லது.
வித்தியாசம் காட்டும் மருத்துவமனை!
இதற்கு பெங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனையை உதாரணமாக சொல்வேன். பொதுவாக, மருத்துவமனையில் ஐசியூ வார்டுகளை மற்றவர்களுக்குத் தெரியாதபடி அமைத்திருப்பார்கள். ஆனால், இந்த மருத்துவமனையில் மட்டும் ஐசியூ வார்டில் இருப்பவருடைய நன்மைக்காகவும், அவரது உறவினர்களின் திருப்திக்காகவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும்படி, ஐசியூ வார்டு  அமைத்திருக்கிறார்கள். இதனால் நோயாளிக்கு உறவினர்களைப் பார்க்க முடியவில்லை என்கிற கவலை இல்லை. இதனால் நோயாளிகளும் அவர்களை பார்க்க வருகிறவர்களும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
யதார்த்தமாக இருக்க வேண்டும்!
இப்படி வித்தியாசமான சூழலை உருவாக்கும்போது கஸ்டமர்கள் முகம் சுழிக்கிறமாதிரி எதையும் செய்துவிடக் கூடாது. நமது வாழ்க்கையின் யதார்த்தமான விஷயங்கள் கஸ்டமர்களுக்கு நினைவூட்டுகிற மாதிரி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, வித்தியாசம் என்கிற பெயரில் கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடச் சொன்னால், பலருக்கும் அது சங்கடமான அனுபவமாகவே இருக்கும்.
ஆனால், கஸ்டமர்களின் மனத்தில் தைக்கிறமாதிரியான மாற்றங்களைக் கொண்டுவரும்போது, அதுவே அந்த நிறுவனத்துக்கு பெயர் பெற்றுத்தரும் விளம்பரமாக மாறிவிடுகிறது. அதன்பிறகு அந்த நிறுவனம் விளம்பரத்துக்காக பெரிதாக செலவு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
தொழில் செய்பவர்கள் கவனத்துக்கு!
வித்தியாசமான சூழலைத் தருகிறோம் என விளம்பரம் செய்துவிட்டு, அதைப் பார்த்து கஸ்டமர்கள் கடையைத் தேடிவந்தால், அவர்களை சிறப்பாக கவனிக்க வேண்டும். அப்போதுதான் சிறிய அளவிலான கடை என்றாலும் அங்கு தனக்குக் கிடைத்த அனுபவத்தைப் பற்றி சாதாரணமாக இன்னொருவருடன் பேசும்போதும், சமூக வலைதளங்களிலும் பதிவு செய்வார்கள் கஸ்டமர்கள்.
மோசமான அனுபவமாக இருந்தால், அதையும் மறக்காமல் மற்றவர்களிடம் சொல்லி, சமூக வலைதளங்களிலும் பதிவு செய்து, வரநினைக்கிற ஒன்றிரண்டு கஸ்டமர்களையும் வராமல் தடுத்துவிடுவார்கள். எனவே, வெறும் வடிவமைப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல், கஸ்டமர்களை உபசரிப்பதிலும் கவனம் காட்டினால்தான் உங்கள் ஸ்மார்ட் ஐடியா நிச்சயம் வெற்றி பெறும்'' என்றார் அவர்.
தொழிலில் ஜெயிக்க நினைப்பவர்கள் இந்த விதத்தில் யோசித்து, வெற்றி பெறலாமே!
ஹெச்.ராசிக் ராஜா,
படங்கள்: தி. குமரகுருபரன்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites