இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label விழிப்புணர்வு. Show all posts

Thursday, December 10, 2015

நீங்கள் வாங்கும் நெய் தரமானதா? ஷாக் ரிப்போர்ட்


மணல் மணலான நெய், மணமணக்கும் நெய் என்றெல்லாம் நெய் விளம்பரங்களில் சொல்வது நமக்குத் தெரியும். ஆனால் அதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள மேற்கொள்ளும் ஆய்வு குறித்தும், நெய் தொடர்பாக நுகர்வோர்கள் சொன்ன கருத்துக்களையும் இங்கே பார்க்கலாம்.

ஒப்பீட்டு ஆய்வு!
ஒப்பீட்டு ஆய்வு என்பது நுகர்வோர் பயன்படுத்தும் பல பொருட்களை அரசு நிர்ணயித்துள்ள தரத்தில் உள்ளதா  என சோதித்து அதில் கண்ட உண்மைகளை வெளியிடுவதாகவும். இதில் அப்பொருள் பற்றிய பயன்பாடு, தரம், பயன்படும் நாட்கள், பயன்படுத்துவதில் நுகர்வோர்க்கு ஆலோசனைகள், தயாரிப்பாளருக்கு ஆலோசனைகள் என பல வகையிலும் இந்த  அறிக்கை அமைந்திருக்கும். கான்சர்ட் இந்திய  நுகர்வோர் நலத்துறையின் அனுமதியுடன் இது போன்ற ஒப்பாய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாண்டு இவ்வகையில் எடுத்துக் கொண்ட உணவுப் பொருட்களில் நெய்யும் ஒன்று.
தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தலா ஐந்து நிறுவனங்களின் நெய் மாதிரிகள் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஆய்வுக்கு எடுத்துக் கொண்டநெய்யின் குணங்களூம் கீழ்க்கண்ட அளவீடுகளில் முக்கிய தன்மைகளின் அடிபடையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
 1.    பாக்கெட் செய்தல் மற்றும் விவரச்சீட்டிடுதல்
 2.    பாதுகாப்பு மற்றும் உடல் நலம்
 3.    தரம்

நுகர்வோர் கருத்துக்கள்!
நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டது போல, நெய் நுகர்வோர்களிடமும் கருத்துக்கள் கேட்கப்பட்டது. நுகர்வோர் நெய் வாங்கும் போது என்ன முறைகளை கையாளுகிறார்கள், எப்படி தேர்வு செய்கிறார்கள், வாங்கிய பின் குறையிருந்தால் அவர்கள் அணுகுமுறை என்ன என்பது அறிய 32 நுகர்வோரின் கருத்துக்கள் இங்கே...
1. 41% பேர் பயன்பாட்டு நாளையும், 29% பேர் தயாரிப்பு தேதியையும் பார்த்து நெய் வாங்குகின்றனர்.
2. 74% பேர் நல்ல கம்பெனி நெய் தயாரிப்புகளையும் 24% பேர் மற்ற தயாரிப்புகளை வாங்குகின்றனர்.
3. 39% பேர் 200 கிராம் பாக்கெட் தேர்வு செய்கையில் 18% பேர் 100 கிராம் பாக்கெட் வாங்குகின்றர்கள்.
4. 84% பேர் வீட்டுத்தயாரிப்புகளை விரும்புவதில்லை ஆனாலும் 13% பேர் வீட்டுத்தயாரிப்புகள் வாங்குகின்றனர்.
5. 76% பேர் வனஸ்பதி ஒரு கலப்படப் பொருளாக நெய்யில் கலப்பது அறிந்துள்ளனர்.
6. 55% பேர் வனஸ்பதியால் ஏற்படும் உடல் பாதிப்புகளை அறிந்துள்ளனர்.
7. 52% பேர் சுத்தமான வனஸ்பதியை வெஜ்டபிள் நெய் என விற்பதை அறியாமல் உள்ளன.
8. 77% பேர் அக்மார்க் முத்திரையுள்ள நெய்யும் 3% பேர் ஐ.எஸ்.ஓ முத்திரையுள்ள நெய்யை யும் தேடி வாங்குகின்றனர்.
9. 47% பேர் நெய்யின் தரத்தை அதன் மணத்தை வைத்தும், 16% பேர் சுவையை வைத்தும் தீர்மானிக்கின்றனர்.
10.45% பேர் நெய்யில் குறையிருந்தால் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், 39% பேர் கடைக்காரருக்கு தெரிவிக்கவும் அறிந்துள்ளனர்.
நுகர்வோர் கவனிக்க!
 1.    நாட்டில் சில பகுதிகளில் உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் வனஸ்பதி வெஜிடபிள் நெய் (Vegetable Ghee) என  விற்கப்படுகிறது. நெய் எனபது ஒரு பால் பொருட்கள் வகையைச் சேர்ந்தது “எனவே நெய் என்னும் பெயரை தாவர வகை பொருட்களோடு இணைத்து “வெஜிடபிள் நெய்” என விற்பது ஒரு தவறான செயலாகும். நுகர்வோர் இது குறித்து விழிப்புடன் இருக்கும் நிலை உள்ளது.
 2.    இந்திய உணவு விடுதிகளில் நெய்யிற்கு பதிலாக வனஸ்பதி (டால்டா, வெஜிடபிள் நெய் மற்றும் ஹைடிரஜினேட்டட் வெஜிடபிள் எண்ணெய்) விலை குறைவு என்பதால் பயன்படுத்தப்படுகிறது. “வெஜிட்டபிள் நெய்” என விற்கப்படும் வனஸ்பதியில் டிரான்ஸ் கொழுப்பு என்ற பொருள் உள்ளது. இது இதய இரத்தத் குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட வழி வகுக்கும். எனவே வெஜிடபிள் நெய்யை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
 3.    நீங்கள் இதய இரத்தக்குழாய்கள் சம்பந்தமான நோய்கள் அல்லது உடல் பருமன் இல்லாதவர் என்றால் சுத்தமான நெய்யை உட்கொள்ளலாம்.
 4.    ஒரு தனிமனிதன் ஒரு நாளில் பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்ட கொழுப்பின் அளவு என்பது 10 முதல் 15 கிராம் ஆகும்.
 5.    நீங்கள் பருமனானவர் என்றால் நெய்யை தவிர்க்கவும்.
 6.    நீர் மற்றும் சூரிய ஒளி இரண்டுமே நெய்யின் தன்மையை பாதிக்க கூடியவையாகும்.

பாதுகாப்பு டிப்ஸ்!
 1.    எப்போதும் நெய்யினை நன்கு மூடி சூரிய ஒளி இல்லாத இடத்தில் வைக்கவும்.
 2.    நெய்யை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துவதாயிருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதீர்கள்
 3.    வெப்பமான காற்றில் திறந்தீர்கள் என்றால்,நீரானது நெய்யுடன் சேர்ந்து கெட்டுவிட வாய்ப்புள்ளது.
 4.    நெய் சுத்தமான கண்டெயினரில் காற்று புகாதபடி அடைத்து வைத்தால் 2 முதல் 3 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
 5.    திறக்காமல் நெய் கண்டெயினரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தால் 1 வருடம் வரை கெடாமல் இருக்கும்.
 6.    நல்ல முறையில் தயாரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட நெய் பல மாதங்கள் அறை வெப்ப நிலையில் கெடாமல் இருக்கும்.
 7.    நீண்ட நாள் பயன்பாட்டிற்கு நெய்யினை ஒளியே புகாத, கண்டெயினரில் காற்று புகாதபடி இறுக்கமாக மூடி இருட்டான பகுதியில் பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.
 8.    நல்ல நெய் என்பது ஈரப்பதம் நீக்கப்பட்டும், பால் திடப்பொருட்கள் 2500 F உஷ்ண நிலையில் எரிக்கப்பட்டும், பின்னர் அந்த திடப்பொருட்கள் அகற்றப்பட்டும் தயாரிக்கப்படுவதாகும்.
 9.     எனவே ஒரு நல்ல நெய் என்பது பால்திடப் பொருள் மற்றும் ஈரப்பதம் இல்லாத ஒரு வெண்ணெயின் கொழுப்பாகும்.




 

அதிகச் சம்பள உயர்வு பெற 7 வழிகள்!


சம்பள உயர்வு என்பது வருடத்துக்கு ஒருமுறை நிறுவனங்களில் நடக்கும் நடைமுறை. இதில் சிலருக்கு அதிகச் சம்பள உயர்வும், சிலருக்குக் குறைந்த அளவில் சம்பள உயர்வும் இருக்கும். இந்தச் சம்பள உயர்வில் அதிகச் சம்பள உயர்வைப் பெற வேண்டும் என்பதுதான் பலரின் ஆசையாக இருக்கும். இந்த ஆசை நினைத்தவுடன் நடந்துவிடாது. இதற்கு அந்த வருடம் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து போலாரிஸ் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டாளர் பாலமுருகன் விளக்குகிறார்.
 
 
 
 1. உங்களின் சம்பளத்தை நிறுவனம் ஏன் உயர்த்த வேண்டும். ஏதாவது தனித் திறமை உள்ளதா, அதனால் அந்த நிறுவனத்துக்கு என்ன பயன் என்பதை நீங்களே ஆராய்ந்து பார்க்க வேண்டும். வருடத்துக்கு 30 சதவிகிதம் சம்பள உயர்வு வேண்டும் நினைக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதை எந்த நிறுவனமும்  உடனே  கொடுத்துவிடாது. நீங்கள் அதற்கு தகுதியானவரா என்பதை நீங்களே தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். 
 
2. செய்யும் வேலையில் முழுதிறமையும் வெளிப்படுத்த வேண்டும்.  இந்த வேலையை மேலோட்டமாகச் செய்தால்போதும் என நினைக்கக் கூடாது. நீங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் ஒரேமாதிரியாகப் பார்க்க வேண்டும். முடிந்தவரை  முழுத் திறமையையும் வெளிப்படுத்தும் வகையிலான வேலைகளைத் தேர்வு செய்வது நல்லது. மேலும் உங்களின் வேலை எப்போதும் ஸ்மார்ட்டாக இருப்பது முக்கியம். மேலும் இது  நிறுவனம் அல்லது உயர் அதிகாரிக்கு தெரியுமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது உங்களின் கடமை. 
 
 
3. சில வேலைகளை எடுத்தால் சிக்கல் வரும். இந்த வேலை மிகவும் கடினமானது என மற்றவர்கள் நினைக்கும் வேலைகளை நீங்களே முன் வந்து சிறப்பாக அந்த வேலையை செய்ய வேண்டும். இதேபோல் இக்கட்டான சூழ்நிலையிலும் வேலையில் தொய்வு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 
 
4. ஒரு வேலையை துவங்குவதற்கு முன் அதற்கு தேவையான தகவல்கள், தொழில்நுட்பங்கள் ஆகிய உங்களுக்கு தெரியுமா என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அதை தெரிந்துக் கொண்டு வேலையை செய்ய வேண்டும். இதற்கு செலவு செய்ய வேண்டும் எனில் தயங்காமல் அந்த செலவை செய்ய வேண்டும். இதுவும் ஒரு வகையான முதலீடாகவே நீங்கள் கருத வேண்டும். அதாவது, புத்தகம் வாங்குவது, தொழில் நுட்பங்களைப் படிப்பதற்குக் கட்டணம் செலுத்துவது போன்றவை. மேலும் எப்போது எந்த வேலைக்கும் தயார் என்ற ரீதியில் எப்போதும் அப்டேட்டாக இருக்க வேண்டும். 
 
5. ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து  எத்தனை வருடம் ஆனாலும்,  புதிதாக வேலைக்கு சேரும் போது எப்படி வேலைப்பார்த்தீர்களோ  அதைபோலவே வேலைகளை செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களின் எண்ணம் புதிதாக இருக்கும்.
 
6. குறிப்பிட்ட தேதிக்கு இந்த வேலையை முடித்து விட வேண்டும் என நீங்களே உங்களுக்கு டார்க்கெட் வைத்துக் கொண்டு வேலை பார்க்க வேண்டும். அப்போது தான் வேலையை விரைவாக வேலை முடிக்க முடியும். மேலும் கொடுத்த டார்க்கெட் தேதிக்குள் வேலையை முடித்துவிட வேண்டும். இதில் காலதாமதம் ஏற்படும் போது உங்களின் மீதான மதிப்பு குறைய வாய்ப்புள்ளது. இதனால் சம்பளமும் அதிக ஏற்றம் அடையாது. 
 
7. ஒரு நிறுவனத்தில் 100 பேர் வேலை பார்த்தாலும் அதில் 5-10 நபர்களை மட்டும்தான் தலைமையில் இருப்பவர்கள் நினைவில் வைத்துக் கொள்வார்கள். அதனால் அந்த டாப் 10-க்குள் நீங்கள் இருப்பதற்கான வழிகளைத் தேடுவது முக்கியம்.
 
இதையெல்லாம் செய்தாலே சம்பள உயர்வின்போது அதிகச் சம்பளம் கிடைக்கும்.

Saturday, December 6, 2014

உழைக்கத் தயாரா? உதவத் தயார்!


Ready to work? Ready to help!
எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத்  தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.‘படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்’ எனப் படிக்காத பெண்களும்,  ‘படிச்சிருந்து என்ன செய்ய... வீட்டை விட்டு வேலைக் குப் போக அனுமதியில்லை’ எனப் படித்த பெண்களும், ‘படிப்பும் இருக்கு. ஏதாவது  செய்யணும்கிற துடிப்பும் இருக்கு. வழிதான் தெரியலை’ எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு. 

இந்த மூன்று தரப்பினரின் ஏக்கங்களையும் போக்கி, பொருளாதார சுதந்திரத்துக்கு வழி காட்டுகிற அமைப்பு ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர்  சங்கம்’ - Women Entrepreneurs Association of Tamil Nadu [WEAT]. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறைப் பேராசிரியர்  மணிமேகலையின் முயற்சியில் உருவாகியிருக்கும் இந்த அமைப்பு, உழைக்கக் காத்திருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவக் காத்திருக்கிறது. 

‘‘குறுந்தொழிலில் பெண்கள் பத்தி 99ம் வருஷம் ஒரு பேராய்வு பண்ணினேன். சுயதொழில் செய்கிற பெண்களைப் பத்தின பெரிய புள்ளிவிவரங்கள்  எதுவும் இல்லாதது தெரிய வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு, ஒட்டுமொத்த திருச்சியிலயும் 550 பெண் தொழில்முனைவோரைக் கண்டுபிடிச்சோம்.  அந்த  550 பேர்ல, 143 பெண்களை மட்டும் வச்சு நடத்தின ஆய்வுல, சில உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி பெரும்பாலான பெண்கள், மரபு சார்ந்த  தொழில்களான தையல், ஊறுகாய், அப்பளம் செய்யறது மாதிரியான வேலைகள்லதான் அதிகம் ஈடுபட்டிருக்கிறது தெரிஞ்சது. 

அடுத்து அவங்கள்ல பல பேர் வங்கிக் கடனே வாங்காதவங்க. அப்படியே வாங்கணும்னு நினைச்சு முயற்சி பண்ணினவங்களும் ஏதோ காரணங்களால  கடன் இல்லாம மறுக்கப்பட்டவங்க. 2005ல நான் மகளிர் துறை இயக்குனரா பொறுப்பெடுத்துக்கிட்டதும் இந்த விஷயங்களுக்காக ஏதாவது செய்ய  வேண்டிய அவசரத்தை உணர்ந்தேன். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரிப்ளை கார்டு அனுப்பி, நேர்ல சந்திக்க விருப்பம் சொன்னோம். வெறும் 35  பேர்கிட்டருந்து தான் பதில் வந்தது. அது கடைசியா 7 பேரா குறைஞ்சது. 2006ல உருவான தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்துக்கு இது  7வது வருடம்...’’ - அமைதியாக அறிமுகம் செய்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மணிமேகலை.

‘‘பெண்கள்னா பியூட்டி பார்லர் வைக்கவும், வத்தல் வடாம் விற்கவும்தான் லாயக்குங்கிற கருத்தை உடைக்கிறதுதான் எங்க சங்கத்தோட பிரதான  நோக்கம். தொழில்னு வரும்போது, பெரும்பாலான பெண்கள், ஆண்கள் அளவுக்கு அதுல தொடர்ந்து நிற்கறதில்லை. குடும்ப சூழல், கணவரோட  சப்போர்ட் உள்ளிட்ட மற்ற காரணங்களையெல்லாம் பொறுத்ததா இருக்கு அவங்களோட தொழில் ஆர்வமும் ஈடுபாடும். அரிதாக சில பெண்கள்,  கணவரோட ஆதரவோட தொழில் பண்றதும் உண்டு. அந்த மாதிரிப் பெண்கள், தொழில்ல நிலைச்சு நிற்கறதையும் பார்த்தோம். ஆண்களுக்கு தொழிலும்  சம்பாத்தியமும் வாழ்க்கையோட முக்கிய அங்கமா இருக்கு.

அதுவே பெண்கள்ல பலரும் ஏதோ ஒரு காரணத்துக்காக தொழில் முனைவுக்குத் தள்ளப்படறாங்க. அந்த வகையில எங்க சங்கத்துல 75 சதவிகித  உறுப்பினர்கள் ஆண் துணையில்லாத காரணத்தால தொழில்முனைவுக்கு வந்தவங்க. கணவனை இழந்தவங்க, கணவரால கைவிடப்பட்டவங்க, விவாகரத்தானவங்க, கணவர் இருந்தும், அவர் மூலம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவங்கன்னு... பலரும்  இதுல உறுப்பினர்கள். வயது, கல்வித் தகுதின்னு எதையும் கணக்குல எடுத்துக்காம, முதல் கட்டமா அவங்களை தொழில் முனைவுக்குத்  தயார்படுத்தினோம். 

திருச்சியில உள்ள சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தோட இணைஞ்சு, தொழில் பயிற்சி கொடுத்தோம். 15 நாள்களுக்கு ஒரு முறை அவங்களுக்கு  விழிப்புணர்வு முகாம் நடத்தி, கருத்தாளர்களைக் கூப்பிட்டுப் புதுப்புதுத் தொழில்களைப் பத்திப் பேச வைக்கிறோம். கூட்டத்துக்கு வர்ற பல பெண்கள்,  ஏதோ ஒரு தொழில் தொடங்கணுங்கிற எண்ணத்தோட வருவாங்க. ஆனா, என்ன தொழில், எப்படி தொடங்கறதுங்கிற பயமும் கேள்விகளும்  அவங்களுக்கு நிறைய இருக்கும். வெற்றிகரமான சுயதொழில் முனைவோரா இருக்கிற பெண்களைக் கூப்பிட்டு, அனுபவங்களைப் பகிர்ந்துக்க  சொல்வோம். 

அது மற்ற பெண்களுக்கும் ஊக்கமா அமையும். காலங்காலமா பெண்களுக்குப் பழகிப் போன தையல், உணவு சார்ந்த தொழில்களையும் தவிர்க்காம,  அதுக்கான பயிற்சிகளையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அதோட அடுத்தகட்டமா, பெண்களால இன்ஜினியரிங் துறை சார்ந்த தொழில்களையும் செய்ய  முடியும்னு நிரூபிக்க, வெல்டிங் பயிற்சி கொடுத்து, வேலை வாய்ப்புக்கு வழி செய்தோம். கம்ப்யூட்டர் பயிற்சியிலேருந்து, கால் டாக்சி டிரைவிங்  வரைக்கும் எதையும் விட்டு வைக்கலை. திருச்சியோட முதல் கமர்ஷியல் பெண் கால் டாக்சி டிரைவர் எங்களால உருவாக்கப்பட்டவங்கதான். 

இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பொருள்கள், பாக்குமட்டை பொருள்கள், பேப்பர் பொருள்கள் தயாரிக்கவும், சிறுதானிய உணவுப் பொருள்கள்  தயாரிக்கவும்கூட பயிற்சிகள் கொடுக்கறோம். வெறுமனே பயிற்சி கொடுக்கிறதோட இல்லாம, பல்வேறு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களோட  இணைஞ்சு அவங்களோட பொருள்களை சந்தைப்படுத்தவும் வழிகளை உருவாக்கித் தரோம். வருடம் ஒரு முறை மாநில அளவிலான கருத்தரங்கு  நடக்கும். அதுல எல்லா மாவட்டங்கள்லேருந்தும் எங்க சங்க உறுப்பினர்கள் கலந்துப்பாங்க. 

புதுசா தன்னோட மாவட்டத்துல கிளை தொடங்க நினைக்கிறவங்களுக்கும் உதவி செய்யறோம். இந்தக் கருத்தரங்குல என்ன தொழில் செய்யலாம்,  எப்படிச் செய்யலாம், அதுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, எப்படி விற்கறதுங்கிற அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். புதுசா பயிற்சி  எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்கினவங்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கிறோம். சுருக்கமா சொன்னா, எந்த ஐடியாவும் இல்லாம எங்கக்கிட்ட  வர்றவங்களையும் அவங்களோட தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடிச்சு, வழிகாட்டி, மூலப்பொருள்கள் முதல் வங்கிக் கடன் வரைக்கும் வாங்க  உதவி செய்து, தொழில் தொடங்கின பிறகு பிரச்னைகள் வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு பாடம் எடுத்து, மேலாண்மைத் திறன் வரைக்கும் கத்துக்  கொடுக்கறோம். 

வீட்டையும் தொழிலையும் பேலன்ஸ் பண்ணவும் பாலின சமத்துவம் பத்தித் தெரிஞ்சுக்கவும்கூட ஆலோசனைகள் உண்டு. ஆணுக்கு இணையா,  பெண்ணாலயும் எந்தத் தொழிலையும் தைரியமாகவும், தடையில்லாமலும் தொடர்ந்து நடத்த முடியும்னு நிரூபிக்கிற அந்தப் பயணத்துல விருப்பமுள்ள  எந்தப் பெண்ணும் இணையலாம்’’ - அன்பும் அக்கறையுமாக அழைக்கிறார் மணிமேகலை. (தொடர்புக்கு: ( 0431-4200040/ 94887 85806/ 96007  79081)

தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்...

எழ வேண்டும் என்று
ஆசைதான்
ஒருவேளை
தலை வானத்தில் இடித்து விட்டால்?
எதற்கு வம்பு
படுத்திருப்பதே பாதுகாப்பு...
இது ஒரு புதுக் கவிதை...'

-இன்று நம்மவர்களில் சிலரின் மன இயல்பைக் காட்டிடும் ஒரு உரைகல் போல இந்தக் கவிதை உள்ளது. ஒரு செயலைச் செய்யாமல் வீணே இருப்பதற்கு சொல்லக்கூடிய பொய்யான காரணங்கள் பல. அவற்றை சோம்பேறித்தனம், அச்சம், முயற்சியின்மை, தயக்கம், தன்னம்பிக்கையின்மை என்று பெரிய பட்டியலே இடலாம். இது ஒருபுறம் இருக்க...
தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்... என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்று கூட தெரியாத நிலை... நம்மைச் சுற்றிப் பல தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அதை இனம் காண முடியாத தன்மை...

முதலில் நாம் தொழிலினை தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கிடைக்க கூடிய மூலப்பொருட்களைக் கொண்ட தொழிலைத் தேர்ந்தெடுப்பது வெற்றியை எளிதாக்கும். மேலும் தேர்ந்தெடுக்கும் தொழில் அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையுள்ளதா? அல்லது வெளியிடங்களுக்குப் போய் மார்க்கெட்டிங் செய்ய வேண்டுமா? என்பதையும் அறிந்து கொள்வது நல்லது.

மனதில் பதித்துக கொள்ள வேண்டியவை
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..
1.கிடைக்க கூடிய வளங்கள்.
2.மூலப்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள்
3.போட்டியாளர்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா?
4.உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை வாய்ப்பு.

இதற்கு முதலில் தொழில் வகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்...பொதுவாக சுய தொழில்களை 4 வகையாக பிரிக்கலாம்..
1. நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்.
2. விவசாயம் சாராத தொழில்கள்,
3. கைத்தொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் நெசவுத் தொழில்
4, சேவைத் தொழில்கள் போன்றவையாகும்

முதலில் நாம் இன்று நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்து காண்போம்..
நிலம் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க நல்ல வாய்ப்புள்ளது..

உதாரணமாக சில தொழில்களை பார்க்கலாம்..
பூக்கள், காய்கறிகள், பழ வகைகள் பயிரிட்டு அதிக வருவாய் பெறலாம்..
விவசாயத்துடனோ, தனியாகவோ கால்நடை சார்ந்த தொழில்களான கறவை மாடுகள், நாட்டு கோழி வளர்ப்பு, கோழிப்பண்ணை, பண்ணை முறையில் ஆடுகள் வளர்ப்பு, காளான் வளர்த்தல் போன்றவை செய்தல்..
கிராம குளங்கள் ஊரணிகளில் மீன் வளர்ப்பு
பட்டுப் பூச்சி வளர்த்தல்...
உயர் தொழில் நுட்பத்துடன் விதை உற்பத்தி , மூலிகை செடி வளர்ப்பு, இயற்கை விவசாயத்தில் காய்கறி உற்பத்தி
உலர் மலர்கள் சேகரித்தல், பதப்படுத்தல்
இயற்கை உரம் தயாரித்தல், கடல் பாசி வளர்த்தல்,
விவசாயம் சார்ந்த தொழில்கள்:
உணவு பதப்படுத்துதல் ; அரிசி, சேமியா, உடனடி இட்லி , தோசை மாவு , சிப்ஸ் தயாரித்தல், உலர்ந்த காய்கறிகள், வெங்காயம் போன்ற பல உணவு பொருட்கள் பதப்படுத்தி விற்பனை செய்தல்...
பழங்கள், காய்கறியிலிருந்து ஊறுகாய் , பழச்சாறு , ஜாம் , ஜெல்லி போன்ற பதப்படுத்தப்பட்ட பழப் பொருட்கள் தயாரித்தல்
குழந்தைகள் உணவு, கேழ்வரகு மாவு, ராகி மால்ட் தயாரித்தல்..
பருப்பு பதப்படுத்துதல் , எண்ணெய் எடுத்தல், புளி பதப்படுத்துதல், போன்ற தொழில்கள்..
இயற்கை சாயம் எடுத்தல், தைலம் எடுத்தல், மூலிகை செடியிலிருந்து பவுடர், எண்ணெய் மற்றும் மாத்திரைகள்,
மிட்டாய்கள் , கடலை பர்பிகள், பனைவெல்லம் போன்றவை தயாரித்தல்
மசாலா பொடி , பருப்பு பவுடர் , வற்றல் அப்பளம், இட்லி, உலர் தேங்காய் , பால் பதப்படுத்துதல், இனிப்புகள், முறுக்கு போன்ற பொருட்கள் தயாரித்தல்
கீரைகள் , காய்கறிகள், வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து கட் செய்து பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்தல்..
நில அடிப்படையிலான தொழில்கள் குறித்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இந்த துறைகளை அணுகலாம்.. நபார்டு, விவசாயக் கல்லூரி, கால்நடைவளர்ப்பு மற்றும் மீன் பிடித்துறை..
விவசாயம் சார்ந்த தொழில்கள் - உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு குடிசை தொழில் சான்றிதழ், கடன் உதவி மற்றும் தொழில் ஆலோசனைகளுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்...
விவசாயம் சாராத தொழில்கள்...
கிராம மற்றும் காதி தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளை சார்ந்த சில தொழில்கள் இதில் அடங்கும்..

உதாரணமாக…
1. சோப்பு , சோப்புத்தூள்,ஷாம்பூ, பினாயில், கிளினிக் பவுடர் .
2. அகர்பத்தி, வாசனை பவுடர்கள் , கொசுவர்த்தி தயாரித்தல்,
3. மெழுகுவர்த்தி, சாக்பீஸ் தயாரித்தல்,
4, பற்பசை, ஹேர் ஆயில் , பற்பொடி தயாரித்தல்,
5, பேனா மை , பென்சில்கள் தயாரித்தல்,
6. ஆயத்த ஆடைகள் தயாரித்தல்
7. கட்டிடம் கட்ட தேவையான சிமென்ட் பிளாக் போன்றவை...
சொந்தத் தொழில்கள் துவங்க விரும்புவோரின் தொடர்புக்கு...

· District Industries Centre
Thiru Vi Ka Industrial Estate (SIDCO),
Guindy, Chennai - 600 032.
Ph: 044 - 28549753
Email: dicchn@tn.nic.in


· NABARD - 48, Mahatma Gandhi Road
Post Box No. 6074
Nungambakkam Chennai - 600 034
Tamil Nadu Phone No. : 04428276088
Email : chennai@nabard.org

Wednesday, December 3, 2014

தென்னை... பப்பாளி... வாழை...


தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி...
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், வேலூர் மாவட்டம், பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி.
ஆரணியில் இருந்து, செய்யாறு செல்லும் சாலையில் பயணித்தால்... இருபதாவது கிலோ மீட்டரில் வருகிறது, கன்னிகாபுரம். இங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பொன்னம்பலம். செழிப்பாக வளர்ந்திருந்த தென்னை, பப்பாளி, வாழை மரங்கள் அடங்கிய தோப்பில் மாசிலாமணியைச் சந்தித்தோம்.
ஆள் பற்றாக்குறையால் மரப்பயிர்கள்!
''எங்களுது பாரம்பரிய விவசாயக் குடும்பம். சின்னப் பிள்ளையா இருக்கறப்பவே... அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. பெரியம்மாதான் வளர்த்தாங்க. காலேஜ்ல பி.எஸ்சி. மேத்ஸ் படிப்புல சேர்ந்த நான், பண வசதி இல்லாததால... படிப்பை பாதியிலேயே விட்டுட்டு, எங்களுக்கு இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க வந்துட்டேன். அதுல சுமாரான வருமானம் கிடைச்சுது. கல்யாணம் ஆன பிறகு, மளிகைக் கடை வெச்சேன். அதுல வந்த வருமானம், விவசாயத்துல கிடைச்ச வருமானம் எல்லாத்தையும் போட்டு... ரைஸ்மில் போட்டேன். அந்த சமயத்துல (92-ம் ஆண்டு) விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகமாச்சு. அதனால, தென்னங்கன்றுகளை நட்டுட்டு, வரப்புல தேக்குக் கன்றுகளை நட்டுட்டேன்.
வழிகாட்டிய பயிற்சிகள்!
அப்படியே காலம் ஓடிடுச்சு. என்னோட மூணு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்ச பிறகு, அரசியல்ல இறங்கினேன். 2001-ம் வருஷம் ஊராட்சி மன்றத் தலைவரா ஆனேன். அடுத்தத் தேர்தல்ல தோத்துட்டேன். அப்பறம் அரசியல்ல இருந்து ஒதுங்கி, முழுசா விவசாயத்துல இறங்கினேன். அந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சுது. முதல் இதழைப் படிச்சப்பவே... அதுல இருந்த எல்லா தகவலும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. இப்போவரைக்கும் தொடர்ந்து படிச்சுட்டிருக்கேன்.
தேர்தல்ல தோத்தாலும், 'பசுமை விகடன்’ கொடுத்த தெம்பால, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். 'இனியெல்லாம் இயற்கையே...’, 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சிகள் மூலமா கத்துக்கிட்ட விஷயங்கள வெச்சு... தென்னந்தோப்புல ரெண்டு முறை பல தானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளமா மாத்தி, ஊடுபயிரா, ரெண்டு வருஷத்துக்கு காய்கறி சாகுபடி செய்தேன். இப்போ, சோதனை முயற்சியா மூன்று அடுக்குப் பயிரா தென்னைக்கு இடையில இருமடிப்பாத்தி, வட்டப்பாத்தி எடுத்து பப்பாளிச் செடிகளையும், வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கேன்.
தென்னை நாற்று மூலமும் வருமானம்!
ஒன்றரை ஏக்கர்ல 90 தென்னை மரங்கள் இருக்கு. வரப்புல 100 தேக்கு மரங்கள் நிக்குது. நல்லா வளந்துருக்குற 30 தேக்கு மரங்களை 4 லட்ச ரூபாய் விலைக்குக் கேட்டுட் டிருக்காங்க. தென்னைக்கு இடையில அரை ஏக்கர்ல 500 மொந்தன் வாழை போட்டுருக் கேன். வாழைக்கு இடையில 30 சென்ட்ல 200 'ரெட் லேடி’ பப்பாளி கன்னுகளை நட்டிருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி, நாலு வருஷம் ஆகிடுச்சு. முன்ன சராசரியா
100 தேங்காய் காய்ச்ச மரங்கள்ல, இப்போ 150 காய்கள் கிடைக்குது. தேங்காயை உரிச்சு வித்துடறேன். அதில்லாம, நெத்துக்காய்களை நாத்தா வளத்தும் விற்பனை செய்றேன்'' என்றவர், தோப்பைச் சுற்றிக் காட்டினார்.
ஒன்றரை ஏக்கரில்... 4 லட்சம்!
நிறைவாகப் பேசிய மாசிலாமணி, ''90 தென்னை மரங்கள்ல இருந்து மரத்துக்கு 150 காய் வீதம் வருஷத்துக்கு 13 ஆயிரத்து 500 காய் கிடைக்குது. இதுல 7 ஆயிரத்து 500 காய்களை உரிச்சு, ஒரு தேங்காய் 6 ரூபாய்னு வித்துடுவேன். அது மூலமா 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 6 ஆயிரம் காய்களை தென்னங்கன்னுகளா உற்பத்தி பண்ணிடுவேன். எப்படியும் 5 ஆயிரம் கன்னுங்க உருவாகிடும். வருஷத் துக்கு ஆயிரம் கன்னுகள இலவசமா கொடுத்துட்டு, மீதியை 25 ரூபாய் வீதம் விலைக்கு கொடுத்துடுவேன். 4 ஆயிரம் நாத்து மூலமா, வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுட்டு இருக்கு.
பப்பாளியில இப்போதான் காய் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. 200 பப்பாளி மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 10 ஆயிரம் கிலோ அளவுக்கு காய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். இப்போதைக்கு ஒரு கிலோ 15 ரூபாய்னு விலை போகுது. இந்தக் கணக்குல பார்த்தா... பப்பாளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அரை ஏக்கர்ல இருக்கற 500 வாழை மூலமா, ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.
நான் எதிர்பார்த்தபடி விளைஞ்சு வந்துச்சுனா, அடுத்தடுத்த வருஷங்கள்ல ஒன்றரை ஏக்கர்ல இருந்து, வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் எடுத்துடுவேன். செலவெல்லாம் போக எப்படியும் வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்'' என்று உற்சாகமாக விடைகொடுத்தார்!
தொடர்புக்கு:மாசிலாமணி,
செல்போன்: 86810-25763.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குப் பயிர்!
தென்னைக்கு இடையில் அடுக்குப் பயிர் சாகுபடிக்காக மாசிலாமணி சொல்லும் தொழில்நுட்பங்கள்...

''தென்னைக்குத் தென்னை அதிகபட்சம் 27 அடி இடைவெளி கொடுத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததில், இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பயறு, தானியங்கள், காய்கள் மாதிரியான குட்டையான பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் வாழை, பப்பாளி போன்றவற்றை நடவு செய்ய வேண்டும்.
பலதானிய விதைப்பு!
தென்னைக்கு இடையில் பல தானியங்களை விதைத்து பூ எடுத்ததும் மடக்கி உழ வேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு போன்ற தானியங்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; காராமணி, துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுகளில் ஏதாவதொன்றில் 4 கிலோ; நிலக்கடலை, சோயா, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; சோம்பு, தனியா, மிளகு, சீரகம் போன்ற வாசனைப் பொருட்களில் ஏதாவதொன்றில் 1 கிலோ; சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ... எனக் கலந்து விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழுவதுதான் பல தானிய விதைப்பு (எண்ணெய்வித்துப் பயிர்களில் கடுகு, எள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மட்டுமே போதுமானது).
இருமடிப்பாத்தி!
பல தானியச் செடிகளை மடக்கி உழுது, பதினைந்து நாட்கள் கழித்து, இரண்டடி இடைவெளியில், நான்கு அடி அகலத்துக்கு நீளவாக்கில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளில் ஒரு பக்கத்தில் 8 அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, வாழை நடவு செய்ய வேண்டும். பாத்தியின் மறுபக்கத்தில், முக்கோண நடவு முறையில், இரண்டு வாழைகளுக்கு இடையில் ஒரு பப்பாளி வருவது போல நடவு செய்ய வேண்டும். அதாவது, 8 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, பப்பாளிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
நடவுக்கு முன்பு ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு டன் எரு, தலா 20 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, 50 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 5 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலான இடத்தில் குவித்து... தென்னை மட்டைகளால் மூடி ஒரு மாதம் கழித்து தண்ணீர் தெளித்து புரட்டி விட வேண்டும். மீண்டும் ஒரு மாதத்துக்கு அப்படியே வைத்துவிட்டால், ஊட்டமேற்றிய தொழுவுரம் தயார்.
மாதம் 100 லிட்டர்!
மாதம் ஒரு முறை, பாசன நீருடன் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். இலை, தழை மற்றும் தோப்பில் கிடைக்கும் கழிவுகளை பாத்திகளின் மீது மூடாக்காகப் போடலாம். நடவு செய்த 6-ம் மாதத்தில் மரத்துக்கு 10 கிலோ வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியும் வந்தால், இயற்கைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
நடவு செய்த 4-ம் மாதத்தில் பப்பாளியில் பூவெடுக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற கணக்கில் விட்டுவிட்டு, மீதி ஆண் மரங்களைக் கழித்து விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை பப்பாளியில் மகசூல் எடுக்கலாம். அதன் பிறகு மொத்த மரங்களையும் அகற்றி, புதிதாக கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை... 9-ம் மாதம் குலைதள்ளி, 12-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.''

இனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’


ஒரு ஏக்கர்... 90 நாட்கள்... ரூ.90 ஆயிரம்..!

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்...
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்''
கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இவை. இது விவசாயத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கும் விதமாக... புதுப்புது விஷயங்களைத் தேடி அலைந்து தெரிந்துகொண்டு, 'ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்பு மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், சு. கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர்.
ஒரு காலைவேளையில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த சேகரைச் சந்தித்தோம். ''நான் ஒண்ணரை வயசு குழந்தையா இருந்தப்பவே அப்பா இறந்துட்டார். அம்மாதான், வெண்டைக்காய், கத்திரிக்காய்னு விவசாயம் பண்ணி, என்னை வளர்த்தாங்க. தினமும், பள்ளிக்கூடம் போகும்போது காய்கறி மூட்டையைக் கொண்டு போய் மார்க்கெட்ல போட்டுட்டுப் போவேன். இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில, எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. அதனால, அம்மாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். அரை ஏக்கர்ல கத்திரி, வெண்டை போடுவோம். மூணு ஏக்கர்ல நெல், மணிலா போடுவோம். அதுல எல்லாம் லாபம் குறைவாதான் இருந்துச்சு. அதனால, நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிர்களைத் தேட ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த யோசனையில வெள்ளரி, பீட்ரூட், பீன்ஸ், கேரட்னு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கேரட் நம்ம சூழ்நிலைக்குச் சரியா வரல. மத்த பயிர்கள்ல நல்ல மகசூல் கிடைச்சாலும், விலை கிடைக்காம நஷ்டமாகி, பழைய விவசாயத்துக்கே மாறிட்டேன்' என்ற சேகர் தொடர்ந்தார்.
லாபத்தைக் கூட்டிய உழவர் சந்தை!
''தமிழ்நாட்டில ரெண்டாவது உழவர் சந்தை, திருவண்ணாமலை உழவர் சந்தைதான். இங்க எனக்கு காய்கறிகளை விற்பனை செய்றதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதனால, பாகல், புடலை, பீர்க்கன்னு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கமிஷன் கடைகள்ல கிடைக்கிற விலையைவிட ஆறு, ஏழு ரூபாய் அதிகமாவே கிடைச்சுது. நல்ல லாபம் கிடைக்கவும், தொடர்ச்சியா காய்கறிகளை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
சின்ன வயசுல இருந்தே தொடர்ந்து 'ஆனந்த விகடன்’ படிக்கிறேன். இதன் மூலமா 'பசுமை விகடன்’ பத்தி தெரிஞ்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன். பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டது இல்லாம, நிறைய பேரோட அறிமுகமும் கிடைச்சுது. இப்படித்தான், கேத்தனூர் பழனிச்சாமி ஐயா அறிமுகமானார். அவர்கிட்ட இயற்கை விவசாயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாலு வருஷமா பந்தல் காய்கறிகளை இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றேன். மூணு வருஷத்துக்கு முன்ன 2 ஏக்கர்ல வெள்ளரி சாகுபடி செஞ்சேன். அதை, பெங்களூரு, கோயம்பேடுனு அனுப்பினேன். அதுக்கப்பறம் கோயம்பேடு மார்க்கெட்ல தொடர்பு கிடைச்சுது. அங்கதான், பெங்களூர்ல இருந்து விற்பனைக்கு வந்த இனிப்பு மக்காச்சோளத்தைப் பார்த்தேன். அதைப் பத்தி விசாரிச்சு, பெங்களூர்ல இருந்து விதை வாங்கி 50 சென்ட்ல போட்டதுல,3 டன் மகசூல் கிடைச்சுது. உழவர் சந்தையிலயே விற்பனை செஞ்சுட்டேன். அதனால அடுத்தும் அதை சாகுபடி செஞ்சேன். இப்போ, விளைஞ்சு நிக்கிது. இதுக்கு கொஞ்சமா ரசாயன உரத்தைப் பயன்படுத்தியிருக்கேன். இப்போ இதையும் இயற்கையில சாகுபடி செய்ற வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்ற சேகர், இனிப்பு மக்காச்சோள சாகுபடி முறையைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 4 கிலோ விதை!
'இனிப்பு மக்காச்சோளத்தின் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகை உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ரோட்டோவேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி... ஏக்கருக்கு 5 டிப்பர் என்ற கணக்கில், தொழுவுரம் கொட்டிக் களைத்துவிட வேண்டும். ஓர் அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து, அதன் மையத்தில் ஓர் அடிக்கு, ஒரு விதை வீதம் ஓர் அங்குல ஆழத்தில் நடவுசெய்து, தண்ணீர் கட்டவேண்டும். ஏக்கருக்கு, 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
10 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம்!
விதைத்த மூன்றாம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு, மண்ணின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாளில் களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும். தொடர்ந்து, 10 நாட்களுக்கு ஒருமுறை,200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன தண்ணீரில் கலந்துவிட வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. கதிர் வருவதற்கு முன்பாக, பூச்சிகள் தாக்கினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
 75-ம் நாளில் முதல் அறுவடை!
55-ம் நாளில் ஆண் பூவெடுக்கும். 60ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75-ம் நாளில் இருந்து, கதிர் முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90-ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவுக்கு, கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும், அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு... மூன்று, நான்கு கதிர்கள் நிற்கும்.’
ஒரு லட்சத்து 20 ஆயிரம்!
நிறைவாக, ''நான் தினமும் 200 கிலோவுல இருந்து, 300 கிலோ அளவுக்கு அறுவடை செஞ்சு, ஒரு கிலோ 20 ரூபாய்னு உழவர் சந்தையில விற்பனை செய்றேன். ஒரு ஏக்கர்ல கிடைக்கிற 6 டன் கதிர் மூலமா, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
30 ஆயிரம் ரூபாய் செலவு போக, 90 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதை நேரடியா விற்பனை செய்யாம, கமிஷன் கடைக்கு அனுப்பினா, 50 ஆயிரம் ரூபாய்தான் லாபம் கிடைச்சிருக்கும். ஆக, நேரடி விற்பனை என்னை நிமிர வெச்சிருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் சேகர்!

மக்காச்சோளத்தை உடனே விற்கவும்!
''தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து மக்காச்சோளம் சந்தைக்கு வரத்துவங்கும். தற்போது, பீகாரில் இருந்து, மக்காச்சோள வரத்து உள்ளது. இது, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஒரு குவின்டால், மக்காச்சோளம் (உதிர்த்தது) 1,200 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் பற்றிய ஆய்வு முடிவுகள்படி... 12 சதவிகிதத்துக்குக் குறைவான ஈரப்பதம் மற்றும் இரண்டு சதவிகிதத்துக்குக் குறைவான பூஞ்சணத் தாக்குதலோடு இருக்கும் மக்காச்சோளத்துக்கு (உதிர்த்தது), நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு குவின்டாலுக்கு 1,100 ரூபாய் முதல் 1,150 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜனவரி மாதம் முதல் விலை ஏற்றம் இருக்கலாம். மழைக்காலம் என்பதால், அறுவடை செய்த மக்காச்சோளத்தை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும்'' என அறிவித்துள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.

வீடு தேடி வரும் வில்லங்கம்...


பெண்களே உஷார்... உஷார்!
சா.வடிவரசு
மாறுபவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள். அதிலும் மாறும் காலத்துக்கு ஏற்ப, திருட்டு தொழில்நுட்பத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு... பெண்கள்தான். குறிப்பாக, வீட்டில் தனியே இருக்கும் பெண்கள்.
இதைப்பற்றி பேசும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியான வசந்தி, ‘`நூதன முறையில் திருட்டு, டெக்னாலஜிக்கலாக கொள்ளை என்றெல்லாம் செய்திகள் பார்க்கும்போது, எங்கோ நடந்தது என்று அதை ஒரு சுவாரஸ்ய தகவலாகப் படிக்காதீர்கள். நமக்கும் நிகழலாம் என்ற பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்!’’ என்று அறிவுறுத்துகிறார். தமிழகத்தின் முதல் பெண் போலீஸ் அதிகாரி என்ற சிறப்பினைப் பெற்றிருக்கும் வசந்தி, தன் பணிக்காலத்தில் சந்தித்த விஷயங்களில் இருந்தே உங்களுக்கு உஷார் பாடமெடுக்கிறார் இங்கே!
ஸ்டவ், எலெக்ட்ரானிக் பொருட்கள் ரிப்பேர் பார்க்க வருகிறார்களா?!
கேஸ் ஸ்டவ் பழுது பார்க்க, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் ரிப்பேர் பார்க்க என்று சொல்லிக்கொண்டு வருகிற முன்பின் அறியாத நபர்களை, வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். ஒன்று, சில நூறு ரூபாய் செலவுள்ள வேலைக்கு, ‘ரெண்டாயிரம் ரூபாய் செலவாகும். புது பார்ட்ஸ் வாங்கணும்’ என்று கறந்துவிடுவார்கள். அல்லது, வீட்டில் யாரும் இல்லாததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கொள்ளை, கொலை, பலாத்காரம் என்று எதுவும் செய்துவிடலாம். எனவே, உங்கள் ஏரியாவில் உள்ள, உங்களின் நம்பிக்கைக்குரிய நபர்களிடமே இதுபோன்ற வேலைகளைக் கொடுத்து வாங்குங்கள்.
கையில் பணமா?
வங்கி, பேருந்து, ரயில் நிலையம் போன்ற பொது இடங்களில் நம் கையில் பணம் இருப்பதை அறிந்துவிட்டால், கொள்ளையர்கள் அதை அபகரிக்க வழிப்பறி முதல் கழுத்தறுப்பு வரை எதையும் செய்யத் துணிவார்கள். அதேபோல பயணங்களில் நகைகளும் அணியாதீர்கள். ஏமாற்றுவதில், ஆசை காட்டி ஏமாற்றுவது என்று ஒரு வகை இருக்கிறது. அப்படித்தான் ஒரு பெண், கழுத்தில் நகை, கையில் குழந்தையோடு பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒரு பரிதாப (?) ஆசாமி அவரிடம், ‘ஆந்திராவுல இருந்து வர்றேன். கையில இருந்த காசை தொலைச்சிட்டேன். ஊருக்குப் போக வழி தெரியல. இந்த அரை பவுன் தங்க மோதிரத்தை வேணும்னாலும் வெச்சுக்கிட்டு, 500 ரூபாய் கொடுங்கம்மா போதும்’ என்று நம்பும்படி ஆசைகாட்ட, அவரும் கொடுத்துவிட்டார். அது அக்மார்க் கவரிங் மோதிரம் என்று பின்புதான் புரிந்தது அந்த அம்மாவுக்கு!
போனில் சத்தம்போட்டு பேசாதீர்கள்!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள்தான், ஏமாற்றுக்காரர்களுக்கு எளிய இலக்கு. மளிகைக் கடைக்கு சென்றுவரும் வழியில், தன் வீட்டில் உள்ள மோட்டார் பழுதடைந்துவிட்டதையும், சரிசெய்ய ஆள் அனுப்பச் சொல்லியும் அந்தப் பெண் தன் கணவரிடம் போனில் பேசிக்கொண்டே வந்ததை நோட்டம் விட்டுவிட்டார்கள் அந்தக் கயவர்கள். சில நிமிடங்களில், ‘சார், மோட்டார் ரிப்பேருக்கு அனுப்பினாரு’ என்று அந்த இருவரும் அவர் வீட்டில் நிற்க, அந்தப் பெண்ணும் தன் கணவரிடம் உறுதிசெய்துகொள்ளாமல் உள்ளே விட்டுவிட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, நகை, பணம், வெள்ளி சாமான்கள் என்று சில நிமிடங்களில் எடுத்துக்கொண்டு, நிதானமாக வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர் இருவரும்.
இது புதுசு!
சென்னையில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனை வளாகம். அங்கு வந்த ஓர் இளம்பெண்ணிடம் சென்ற வயதான பெண்மணி, ‘ஏழைக் குடும்பங்கிறதால, என் பையனுக்கு சலுகைக் கட்டணத்துல இங்க ஆபரேஷன் செஞ்சிருக்காங்கம்மா. இந்த செயினை போட்டுட்டுப் போனா, என்னை சந்தேகப்படுவாங்க. நான் போய் என் பையனுக்கு சாப்பாடு கொடுத்துட்டு வந்துடறேன். அதுவரைக்கும் இதை வெச்சிரும்மா!’ என்று அந்தப் பெண்ணின் உள்ளங்கையில் திணித்துள்ளார். சிறிது நேரத்தில், அந்தச் செயினையும், இளம்பெண் தன் கணவரின் மருத்துவச் செலவுக்காக வைத்திருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றது ஒரு கும்பல். தீவிர விசாரணைக்குப் பின், அந்த வயதான அம்மாவுடன் சேர்ந்து ஒரு கும்பல் இதை அரங்கேற்றியது தெரிந்தது. மயக்கம் ஏற்படுத்தும் மருந்தில் அந்த நகையைத் தோய்த்துக் கொடுத்திருக்கிறார். இதனால், கையில் செயினை வாங்கியதும் இளம்பெண்ணின் கையில் மருந்து ஒட்டிக்கொண்டுவிட்டது. எதேச்சையாக கையை மூக்குக்குக் கொண்டு செல்ல, சில நிமிடங்களில் அந்தப் பெண் சுணங்க, காத்திருந்த கொள்ளையர்கள் கைவரிசையைக் காட்டிவிட்டனர்.
செல்போன் தொலைந்துபோனால்..?!
அந்தப் பெண்ணையும் அவர் குடும்பத்தையும் தொடர்ந்து நோட்டம்விட்ட அவன், அன்று அவர் மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கச் சென்றபோது அவருடைய செல்போனை திருடிவிட்டான். வீட்டுக்கு வந்த அந்தப் பெண் மொபைல் காணாததைப் பார்த்து தன் நம்பருக்கு டயல் செய்ய, போனை எடுத்த அந்தத் திருடன், ‘மார்க்கெட்ல கீழ கிடந்தது மேடம். போலீஸ் ஸ்டேஷன்ல கொடுக்கலாம்னு போனேன். நல்லவேளை நீங்களே கூப்பிட்டீங்க’ என்றவன், அவர் எந்த ஏரியா என்று விசாரித்துவிட்டு (!), ‘அந்தப் பக்கம்தான் இன்னிக்கு எனக்கு ஒரு வேலை இருக்கு. நானே வந்து கொடுத்துடறேன்!’ என்றிருக்கிறான். அந்தப் பெண்ணின் கணவர், பிள்ளைகள், வேலைக்காரப் பெண் என்று அனைவரும் வெளியே கிளம்பி அவர் மட்டும் வீட்டில் தனித்திருக்கும் நேரத்தை முன்கூட்டியே அறிந்தவன், அந்த நேரத்தில் சென்று காலிங் பெல்லை அழுத்தினான். செல்போனை மீட்டுக்கொடுத்ததற்கு நன்றி சொல்லும்விதமாக அவனை வரவேற்று, காபி போட்டுவர அந்தப் பெண் கிச்சனுக்குச் செல்ல, அந்த நொடியில் அவள் பின்னாலேயே சென்று கழுத்தில் கத்தி வைத்து, பணம், நகையை கொள்ளையடித்துவிட்டான் அந்த கில்லாடித் திருடன்.
அதிர்ச்சி தரும் உண்மைச் சம்பவங்களாக அடுக்கிய வசந்தி,
‘‘எங்கு, எப்போது, எப்படி வில்லங்கம் நம்மைத் தேடி வரும் என்று தெரியாது. எனவே, யாராக இருந்தாலும் ஒவ்வொருவரையும் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும்!’’ என்று அக்கறை பொங்கச் சொன்னார்!.

சிலிர்க்க வைக்கும் ஜீரோ பட்ஜெட் நெல்..!


விலையில்லா உரம்... எரிபொருளில்லா வாகனம்!
ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம்
ஒருங்கிணைந்த பண்ணை
'பொதுவா இயற்கை விவசாயத்துல மகசூல் குறையும்னுதான் எல்லாரும் நினைக்கிறாங்க. ஆனா, அது உண்மையில்லை. ரசாயனத்துல இருந்து திடீர்னு இயற்கைக்கு மாறும்போது மகசூல் குறையலாம். ஆனா, போகப்போக இயற்கை விவசாயத்துல செலவே இல்லாம, ரசாயனத்துக்கு ஈடா கண்டிப்பா மகசூல் கிடைக்கும். இதுக்கு நானே உதாரணம்' என்று 'ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறை பற்றி சிலாகிக்கிறார், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த லோகநாதன்.
சுற்றுச்சூழல் பாதிப்பைப் பற்றி வாய்கிழியப் பேசுபவர்கள் எல்லாம், வாகனங்கள் மூலமாக காற்று மண்டலத்தைக் காயப்படுத்திக் கொண்டு இருக்கும்போது, சூழல் நலனைக் கருத்தில் கொண்டு குதிரை வண்டியில்தான் பயணம் செய்து வருகிறார், இந்த சூழலியலாளர் லோகநாதன். சின்னியம்பாளையத்தில் உள்ள அவருடைய பண்ணையில் லோகநாதனைச் சந்தித்தோம்.
விட்டு விட்டுப் பெய்யும் தூறல்மழை... வானம் வெளி வாங்கக் காத்திருக்கும் மேய்ச்சல் ஆடுகள்... தொழுவத்தில் தலைசிலிர்க்கும் நாட்டுமாடுகள்... வெதுவெதுப்பைத்தேடி அலையும் கோழிக்குஞ்சுகள்... அசைபோடும் ஆசைக் குதிரைகள்... என ஒருங்கிணைந்து கிடக்கிறது, இவருடைய ஐந்து ஏக்கர் பண்ணை. ஒற்றைக்குதிரை வண்டியில் வலம் வந்த லோகநாதன், அதை உரிய இடம் சேர்த்துவிட்டு நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
''30 கிலோ மீட்டர் சுத்தளவுக்கு எந்த ஜோலியா இருந்தாலும், எரிபொருள் போடக்கூடிய வாகனங்களைப் பயன் படுத்துறதில்லீங்க. குதிரை வண்டி சவாரிதான். எங்க வீட்டு குழந்தைங்க இதுல தான் பள்ளிக்கூடம் போறாங்க. டவுன் வீதியில ஓட்டிட்டுப் போறப்போ ஆச்சர்யமா பார்ப்பாங்க. வாகனப் புகையால ஏற்படுகிற சுற்றுசூழல் மாசை இந்த குதிரை வண்டி சவாரி ஒரளவு குறைக்கிறதுங்கிறதுல எனக்கு பரமதிருப்தி' எனும் லோகநாதன், சவாரிக்கு மட்டுமல்லாது, பல்வேறு பயன்பாட்டுக்காக மூன்று குதிரைகளை வளர்த்து வருகிறார்.
''காளிங்கராயன் வாய்க்கால் பாசனத்துல மொத்தம் அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. நெல் விவசாயம்தான் பிரதானம். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில பாரம்பரிய ரகங்களைப் பயிர் பண்றேன். ஒரு காலத்துல முப்போகம் நெல்லு வெளைஞ்ச பூமி. பல வருஷமா பருவமழை பெய்யாம போச்சு. கிடைச்ச பாசன தண்ணியை வெச்சு ஒருபோக வெள்ளாமைதான் நடந்துச்சு. அதனால அஞ்சு ஏக்கர்ல மொத்தமா நெல் சாகுபடி செய்யாம, மூணு ஏக்கர்ல மரப்பயிர்களை நட்டுட்டேன். 2007ம் வருஷ கடைசியில, ஈரோட்டுல பசுமை விகடன் நடத்தின ஜீரோ பட்ஜெட் பயிற்சி வகுப்பில கலந்துக்கிட்டு, பயிற்சி எடுத்தேன். பயிற்சி முடிஞ்ச கையோட நாலு நாட்டு மாடுகள வாங்கிட்டு வந்து தொழுவத்துல கட்டினேன். அதுல இருந்து பாலேக்கர் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் பண்ணையம் பண்றேன்.
நாட்டு ரக நெல் வகைகள்!
மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, பூங்கார்னு போன போகங்கள்ல மாத்தி மாத்தி நடவு செஞ்சிருந்தேன். அதை இருப்பு வெச்சு விதைநெல்லாகவும், அரிசியாகவும் கேட்கிறவங்களுக்குக் கொடுத்துட்டு இருக்கேன். இந்த போகத்துல சொர்ணமசூரி ரக நெல்லை நடவு செஞ்சிருக்கேன். இதோட மொத்த வயசு 120 நாட்கள். இப்ப 70 நாள் பருவம். பூட்டை எடுத்திடுச்சு. தை மாசம் அறுவடை செய்யலாம்.
பிழையில்லா விளைச்சலுக்கு பீஜாமிர்தம்!
அடுத்த போக வெள்ளாமைக்குத் தேவையான விதைநெல்லை நேர்த்தி செஞ்சு சேமிச்சு வெச்சுக்குவேன். அதுக்கு பீஜாமிர்த கரைசலைத்தான் பயன்படுத்துறேன். வளரும் நாற்றுகள்ல வேர் சம்பந்தமான நோய்களைக் கட்டுபடுத்த இந்த பீஜாமிர்தம் உதவியா இருக்குது. நெல்லை நாற்றங்கால்ல விதைச்ச 15ம் நாள்ல ஒரு கைக்களை எடுத்து, 10 லிட்டர் அமுதக்கரைசலை பாசன தண்ணியில கலந்து விட்டா போதும். முப்பது நாள்ல இருந்து நாப்பது நாளுக்குள்ள நாத்து தயாராகிடும். ஒரு போகம் முடிஞ்சதும், வயல்ல ஆட்டுக்கிடை, மாட்டுப்பட்டி போட்டுடுவோம். அதனால ஆட்டுப் புழுக்கை, மாட்டுச் சாணம் ரெண்டும் மண்ணுல மண்டிக் கிடக்கும். இது நல்ல அடியுரமா இருக்குது.
அறுவடைக்கு இயந்திரங்களைப் பயன்படுத்துறது கிடையாது. கருக்கறுவாள் மூலமா அறுவடை செஞ்சு, களத்து மேட்டுல கதிரடிச்சுக்குவோம். எனக்கு ஏக்கருக்கு சராசரியா 1,700 கிலோ நெல் கிடைக்குது. இதை நேர்த்தி செய்து 700 கிலோவை விதை நெல்லா, கிலோ 50 ரூபாய்னு விற்பனை செஞ்சுடுவேன். இதன் மூலமா 35 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆயிரம் கிலோ நெல்லை அரிசியா அரைக்கிறப்போ... 600 கிலோ அரிசியும், 400 கிலோ தவிடும் கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 70 ரூபாய்னு 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன். தவிடை மாடுகளுக்குத் தீவனமாக வெச்சுக்குவேன். முழுக்க முழுக்க ஜீரோ பட்ஜெட் முறையில செய்றதால ஏக்கருக்கு அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும். இந்தக் கணக்குல ஏக்கருக்கு 65 ஆயிரம் ரூபாய் லாபம். மாட்டுக்கான தவிடும், வைக்கோலும் போனஸ்' என்று புன்னகைத்த லோகநாதன், தனது ஒருங்கிணைந்த பண்ணையம் பற்றி விவரித்தார்.
ஒன்றின் கழிவு.. மற்றொன்றின் உணவு!
'எங்கிட்ட நாட்டுப் பசுக்கள் 5, வெள்ளாடு மற்றும் குட்டிகள் 20, செம்மறி ஆடுகள், கோழி மற்றும் குஞ்சுகள்20, வாத்துகள்12, குதிரைகள் 4 இதெல்லாம் இருக்கு. மாடுகளோட சாணம், கோமியத்தை வெச்சு ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், பீஜாமிர்தம் மாதிரியான ஜீரோ பட்ஜெட் இடுபொருட்களை பைசா செலவில்லாம தயாரிச்சுக்கிறேன். இதுபோக வீட்டுக்குத் தேவையான பசும்பால் கிடைச்சுடுது. இந்த நாட்டு மாடுகள் மூலமா வருஷத்துக்கு 3 கன்னுகள் வரைக்கும் எடுத்து விற்பனை செய்றேன். இதன் மூலமா 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வருஷத்துக்கு 15 ஆட்டுக் குட்டிகளை விற்பேன். இதன் மூலமா குறைந்தபட்சம் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. ஆடுகளோட புழுக்கை, மூத்திரத்தை எடுத்து சர்க்கரைப் பாகு கலந்து ஆட்டூட்டம் தயாரிச்சு... எள், தட்டைப்பயறு மாதிரியான வரப்புப் பயிர்களுக்கு கொடுக்குறேன். செம்மறி ஆடுகள், வயல்ல இருக்கற களைகளைக் கட்டுப்படுத்திடுதுங்க.. அதுகளோட புழுக்கையும் மண்ணுக்கு உரமாகி, உடனடியா பலன் கொடுக்குது. வருஷத்துக்கு அஞ்சு செம்மறியாட்டுக் குட்டிகளை விற்பனை செய்றது மூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. கோழிகள் மூலமா கிடைக்குற முட்டைகளைப் பொரிக்க வெச்சுடுவேன். இதுல கிடைக்கிற சேவல் குஞ்சுகளை மட்டும் தனியா வளர்த்து, பெரிய சேவலா விற்பனை செய்றேன். இதன் மூலமா வருசத்துக்கு 10 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. வாத்துகள் வயல்ல மேய்ஞ்சு, புழு பூச்சிகளைத் தின்னு காலி செய்யுதுங்க. அதோட எச்சம் பயிருக்கு உரமாகுது. வாத்து முட்டைகள் விற்பனை மூலம் ஒரு சின்ன வருமானமும் கிடைக்குது.
5 அடி இடைவெளியில, மூணு ஏக்கர்ல 8 ஆயிரம் சவுக்கு மரங்களை நட்டு மூணு மாசம் ஆகுது. நாலு வயசுல 200 ஈட்டி மரங்களும் நம்ம பண்ணையில இருக்கு. வயல் முழுக்க வரப்புல தட்டைப்பயறை விதைச்சு இருக்கேன். அதனால வரப்புகள்ல களைகள் கட்டுப்படுறதோடு, வயல்ல இருக்கற மற்ற பயிர்களை நோக்கி வர்ற புழு, பூச்சிகளை ஈர்த்து, பயிர்களையும் பாதுகாக்குது இந்த தட்டைப்பயறு. கூடவே, இதன் மூலமாவும் ஒரு வருமானம் கிடைக்குது'' என்ற லோகநாதன், நிறைவாக, ஆத்மதிருப்தி போதும்!
'ஜீரோ பட்ஜெட் முறையில பண்ணையம் பண்றதால, வீட்டுக்குத் தேவையான அரிசி, பயறு, பால் எல்லாம் செலவில்லாம கிடைச்சுடுது. ஆடு, மாடுகளுக்குத் தேவையான தீவனமும் கிடைச்சுடுது. இதுபோக ரெண்டு ஏக்கர்ல இருந்து நெல், கால்நடைகள் மூலமா வருஷத்துக்கு ஒன்றரை லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. மூணு ஏக்கர்ல இருக்கற மரப்பயிர்கள் மூலமா இன்னும் நாலஞ்சு வருசத்துல ஒரு தொகை கிடைக்கும். இப்படியெல்லாம் லாபக் கணக்குப் போட்டு நான் சொல்றதால, பணம்தான் என்னை திருப்திப்படுத்துதுனு நினைச்சுடாதீங்க. இந்த ஒருங்கிணைந்த பண்ணையில கிடைக்கிற விலைமதிப்பில்லாத ஆத்மதிருப்திக்கு இணையே இல்லீங்க.' என்று சொல்லி விடைகொடுத்தார்.

பீஜாமிர்தம்!
தண்ணீர் 10 லிட்டர், மாட்டுச் சாணம் 3 கிலோ, மாட்டு சிறுநீர்3 லிட்டர், சுத்தமான சுண்ணாம்பு30 கிராம் இவற்றை ஒரு வாளியில் இட்டு, ஒரு கைப்பிடி அளவு வரப்பு மண்ணையும் சேர்த்து, நன்றாகக் கலக்கி... 24 மணிநேரம் ஊறவிட வேண்டும். இதுதான் வல்லமையுள்ள பீஜாமிர்தம். விதைக்கும் முன்னர் விதைநெல்லை இந்தக் கரைசலில் போட்டு, இரண்டு மணி நேரம் ஊறவிட்டு, ஈரப்பதம் போக உலரவைத்து, நாற்றங்காலில் விதைக்கலாம்.

ஜீரோ பட்ஜெட் நெல் சாகுபடி!
லோகநாதன், ஜீரோ பட்ஜெட் முறையில் சொர்ணமசூரி ரக நெல் சாகுபடி செய்யும் முறை இதுதான் நன்கு உழுது தயார் செய்த வயலில், நாற்றுக்கு நாற்று 25 சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும்படி, ஒற்றை நாற்று முறையில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40ம் நாட்களில் கைகளால் களை எடுத்து, 100 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும். இது, மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளை பலமடங்கு பெருக்குவதுடன், ஆழத்தில் இருக்கும் மண்புழுக்களை மேலே வரச்செய்து பயிர்களுக்குத் தேவையான நுண்ணூட்டங்களைக் கொடுக்கச் செய்கிறது. அவ்வப்போது பயிரின் வளர்ச்சியைப் பொறுத்து ஜீவாமிர்தத்தை பாசன நீரில் கலந்து வர வேண்டும்.
அமோக விளைச்சலுக்கு அக்னி அஸ்திரம்!
பயிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் குருத்துப்புழு, இலைச்சுருட்டுப்புழு, கதிர்நாவாய்ப்பூச்சி, வெள்ளை ஈக்கள் வர வாய்ப்புகள் உண்டு. 100 லிட்டர் தண்ணீரில், இரண்டரை லிட்டர் அக்னி அஸ்திரம், 3 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரைக் கலந்து, அதிகாலை வேளையில் புகைபோல் தெளித்தால்... பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் அனைத்தும் போய்விடும். மற்ற ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் போல் வாரம் ஒருமுறை தெளிக்கவேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. ஜீரோ பட்ஜெட் விவசாயத்தைப் பொறுத்தமட்டில் நோய்தாக்குதல் தென் பட்டால் மட்டும், அக்னி அஸ்திரத்தைப் பயன்படுத்தினால் போதுமானது. அசுவிணி, செம்பேன் மற்றும் பூஞ்சணத் தொற்று தென்பட்டால், மாதம் இரண்டு முறை பிரம்மாஸ்திரம் தெளிக்கவேண்டும். தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்ப்பாசனம் கொடுத்து வந்தால், 120ம் நாளில் அறுவடை செய்யலாம்.

செலவில்லாமல் குடற்புழு நீக்கம்!
கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய, தான் பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றிப் பேசிய லோகநாதன், 'ஆடு, மாடுகளுக்கு வருஷத்துக்கு ரெண்டு தடவை குடற்புழு நீக்கம் செய்யணும். இதுக்காக மருந்துக்கு எங்கயும் அலைய வேண்டியதில்லை. தெளிஞ்சு, கண்ணாடி மாதிரி இருக்கற சுண்ணாம்புத் தண்ணியைக் கொடுத்தாலே போதும். தன்னால குடல்ல இருக்கற புழு, பூச்சிக வெளியே வந்திடும். மாட்டுக்கு 500 மில்லி; ஆட்டுக்கு 200 மில்லி; ஆட்டுக்குட்டிக்கு 100 மில்லி; குதிரைக்கு 500 மில்லிங்கிற அளவுல கொடுக்கணும். 50 வருஷமா இதைத்தான் கொடுத்துட்டு இருக்கேன்' என்றார்.
தொடர்புக்கு,
லோகநாதன்,செல்போன்: 9865590883.

Wednesday, September 17, 2014

நான்-ஓவன் தயாரிப்புகள்!

இந்தத் தொழிலுக்கு போட்டி இல்லை என்பது பெரிய ப்ளஸ்பாயின்டாக உள்ளது!

ப்ளாஸ்டிக் பொருட்களின் மீதான விழிப்பு உணர்வு அதிகரித்துவரும் சூழலில், நான்-ஓவன் தயாரிப்புகள்தான் அந்த இடத்தைப் பிடித்துவருகிறது. கேரி பேக் முதல் பலவிதமான பொருட்களை இதன் மூலம் உருவாக்க முடியும். ப்ளாஸ்டிக்கைபோல இலகுவானது, உறுதியானது; அதேசமயம், காகிதப்பை போல காற்று, நீர்புகும் தன்மை கொண்டது. மறுசுழற்சி கொண்டது என்பதால் இப்போது அனைத்துத் தேவை களுக்கும் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இந்த நான்-ஓவன் மூலம் கேரிபேக், தாம்பூலப்பை தவிர, தலையணை உறை, சீட்கவர், கம்ப்யூட்டர் கவர், மாஸ்க், ஏப்ரான், கிளவ்ஸ் போன்ற பலவகைகளில் பொருட்களை செய்யமுடியும். தற்போது மெடிக்கல் சென்டர்களில் ஸ்கேன் ரிப்போர்ட் கவர், ட்ராவல்ஸ் நிறுவனங்களில் சீட் கவர் போன்றவை இந்த நான்-ஓவன் மெட்டீரியல்களுக்கு வந்துவிட்டன. வழக்கமாக ஒரே தயாரிப்பாக இல்லாமல், புதிய புதிய டிசைன்களில் முயற்சித்தால் வெற்றி நிச்சயம்.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால் வருமானத்துக்கு பஞ்சமிருக்காது.
ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகள் உள்ளன. செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட வகைகள் மட்டுமே உற்பத்தி செய்யமுடியும் என்பதால், நாம்  ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் திட்டத்தைப் பார்ப்போம்.
திட்ட அறிக்கை!
முதலீடு விவரம் ( )
வாடகை: அந்தந்தப் பகுதி நிலவரப்படி
இயந்திரங்கள் : 31,97,249
இதில் கட்டிங் மெஷின், ஸ்லிட்டிங் மெஷின், ப்ரின்டிங் மெஷின், கம்ப்ரஸர், ஸ்டெபிலைஸர் என அனைத்து இயந்திரங்களும் அடக்கம்.
நமது பங்கு 5% = 1,59,862
மானியம் 25% = 7,99,312
வங்கிக் கடன் 70% = 22,38,075
(அ) ஒரு மாதத்துக்கு 25 வேலை நாட்கள்.ஒருநாளின் ஒரு ஷிப்டுக்கு 350 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு தேவையான நான்-ஓவன் பேப்ரிக் ரோல் ஒரு கிலோ 150 ரூபாய். பலவித கலர்களில், அழுத்தங்களில் (ஜி.எஸ்.எம்) வாங்கிக்கொள்ளலாம். (350X150X25 = 13,12,500)
போட்டிகள் இல்லை!
ஜோதிலட்சுமி, உரிமையாளர்,
சென்னை நான்-ஓவன், போரூர், சென்னை.
”இந்தத் தொழிலில் தொடக்கத்தில் சற்று சிரமமாக இருந்தாலும், நாளடைவில் தொழிலின் நெளிவு சுளிவுகளைப் புரிந்துகொண்டேன். வாடிக்கையாளர்கள் தரும் ஆர்டர்களுக்கு மட்டும் வேலை பார்க்காமல் நமது டிசைன்களும் வித்தியாசமாக இருந்தால், நாமே நேரடியாக விற்பனையிலும் இறங்கலாம்.  மூலப்பொருள் வேஸ்ட் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். நம்பகமான, பணியாளர்கள் இருந்தால் லாபம் நிச்சயம். இப்போதைக்கு இந்தத் தொழிலில் போட்டிகள் இல்லை என்பதும் எங்களைத் தேடிவர வைக்கிறது.”

யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் புதுமைப் பெண்கள்

எங்களாலும் சுயமாக உழைத்து வாழ முடியும்; 

“வீட்டுக் கஷ்டத்தால்தானே அம்மா ஆட்டோ ஓட்டி உழைக்கிறா. நாங்கள் படிச்சு உழைக்க தொடங்கிட்டால் அம்மா கஷ்டப்படமாட்டாதானே…” என்று கூறுகின்றாள் யாழ்ப்பாணத்தில் ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்துவரும் பெண் ஒருவரின் பிள்ளை.
சமூகத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் புரட்சிகளாகவும் முன்மாதிரிகளாகவும் மாறி விடுகின்றன. அப்படியானதொரு புதுமையான சமுதாய மாற்றத்தையும் சமூகவியல் பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சி.
பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணின் வளர்ச்சி காலத்திற்குக்   காலம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வருவதை காண முடிகின்றது. 1970 களின் பிற்காலத்தில் யாழ்ப்பாணத்தில் பெண்கள் ஆணுடன் சைக்கிளில் செல்வதையும் சைக்கிள் ஓட்டிச் செல்வதையும் விரும்பத்தகாததாகவும் வேடிக்கையாகவும் பார்த்த சமூகம் 1990 களில் நாட்டில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தின்போது  ஆணுக்கு நிகராகப் பெண்கள் செயற்படத் தொடக்கியதும் தன் பார்வையை மாற்றிக்கொள்ள தொடங்கியது.
அவ்வாறே யுத்தத்திற்குப் பின்னரான இக்காலகட்டத்தில் பெண்கள் ஆட்டோ ஓட்டும் சுயதொழில் முயற்சியிலும் இறங்கியுள்ளார்கள். குறிப்பாக பெண்கள் சுயதொழில் முயற்சிகளில் இறங்குவதாக இருந்தால்  வீட்டிலிருந்தோ அல்லது தொழிற்சாலைகளிலிருந்தோ செய்யும் தொழில்களைத்தான் தெரிவு செய்வார்கள்.
பெண்களுக்கு சுயதொழில் வேலை வாய்ப்புக்களுக்கான பயிற்சிகளை வழங்கும் தொண்டு நிறுவனங்களும் தையல், கைவேலைப்பாடுகள் போன்ற பயிற்சிகளைத்தான் வழங்கும். ஆனால் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம் சற்று மாறுதலாக பெண்கள் ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்து சுயமாக வாழ்க்கையில் முன்னேறிக்கொள்ளும் வழிவகையை  ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.
கணவனால் கைவிடப்பட்ட குடும்பப் பெண்கள், மிக வறுமையால் வாடும் குடும்பத்தைச்  சேர்ந்த பெண்கள், தனித்து வாழும் பெண்கள் போன்றவர்களுள் 15 பேரைத் தெரிவு செய்து இப்புதிய தொழில் முயற்சியை வழங்கியுள்ளனர். இவர்களுக்கு இவ் உதவி கிடைப்பதற்கு    வழிகாட்டியாக நின்று செயற்பட்டவர் யாழ். பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தரும் மாவட்ட இணைப்பாளருமான செல்வி. உதயனி. அவரிடம் இத்திட்டம் தொடர்பாக வினவினோம்.
யாழ். மாவட்டத்தில் பெண் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், குடும்ப வறுமையால் தமது தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ளமுடியாமல் பரிதவிக்கும் பெண்களும் நிறையவே உள்ளனர். இப்படியானவர்கள் எமது பிரதேச செயலகங்களை அணுகி தமது வாழ்வை மேம்படுத்துவதற்கேற்ப ஏதாவது உதவிகளைப் பெற்றுத்தாருங்கள் எனக்கேட்டார்கள்.
நாம் இவர்களை ஒரு தடவை சந்தித்துப் பேசும்போது உங்களுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்ய வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்டோம். நாங்கள் சுயமாக நின்று உழைக்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தை உருவாக்கித் தாருங்கள் என்று கேட்டார்கள்.
அப்போது நாம் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்ய விருப்பமா என்று கேட்டோம். ஆரம்பத்தில் பலர் அதற்குத் தயக்கம் காட்டினார்கள். இறுதியாக 15 பேர் அதற்கு சம்மதம் தெரிவித்தார்கள்.
தெரிந்தெடுக்கப்பட்ட  15 பேருக்கும் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் உதவியுடன் 6 மாதப் பயிற்சிகளை வழங்கினோம். இதில் தலைமைத்துவப் பண்புகளை வளர்க்கும் முறை, மகளிர் உரிமை, பகல் நிலை சமத்துவம், முதலுதவி போன்ற பயிற்சிகளை வழங்கினோம்.
அத்துடன் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான பயிற்சியையும் பெறுவதற்கு ஒழுங்கு செய்து கொடுத்தோம். 10 பெண்கள் முழுமையான பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார்கள். இவர்கள் குடும்பம் மற்றும் சமூகத்தினால் ஏற்படுத்தப்பட்ட சவால்களைத் தாண்டி பாரதியார் கண்ட புதுமைப் பெண்ணைப் போல் முன்வந்தார்கள்.
அதன் பின்னர் அந் நிறுவனத்தினால் கடனடிப்படையில் இவர்களுக்கு ஆட்டோ வழங்கப்பட்டது. இன்று வரை அவர்கள் அனைவருமே ஆட்டோ மூலம் தொழில்செய்து தமது குடும்பத்தையும் பிள்ளைகளின் படிப்புச் செலவையும் பார்த்து வருகிறார்கள்.
எமது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண் ஊழியரே அவர்களில் ஒருவர் வாடிக்கையாக ஆட்டோவில் ஏற்றிவந்து விடுகிறார். இதனால் பெண்களுக்கும் பாதுகாப்புக் கிடைக்கிறது என்றவர் ஆட்டோ ஓட்டும் அந்த பெண்மணியை எமக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
கோமலேஸ்வரி செல்லக்குமார் என்ற அப்பெண்ணிடம் இதன் பிறகு எப்படியுள்ளது உங்களின் வாழ்க்கை நிலை என வினவினோம்.
மிகவும் சந்தோசமாக இருக்கு. சொந்தக் காலில் நிற்கும் தைரியத்தை தந்திருக்கு. யாரிடமும் கையேந்தி வாழ ண்டிய தேவை ஏற்படவில்லை. ஐந்து பிள்ளைகளுடன் வாழும் எனக்கு கணவரால் எந்த உதவியும் கிடைப்பதில்லை. அவர் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகியதால் அவர் உழைப்பது அதுக்கு மட்டுமே போகிறது. இந்த உதவி எனக்குக் கிடைக்கும் முன்னர் நான் 5 பிள்ளைகளுடன் நாளாந்தம் சாப்பிடுவதற்கே கஸ்ரப்பட்டுக் ண்டிருந்தேன். இப்போது யாருக்கும் பயப்படாமல் யாரிடமும் மண்டியிடாமல் வாழ முடியுது.
நான் கிழமை நாட்களில் பாடசாலைப் பிள்ளைகளைகளையும் இந்த அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணையும் ஏற்றி இறக்குகிறேன். இதனால் கணிசமான் அளவு மாத வருமானம் கிடைக்கிறது. இடையிடையே தனியான ஓட்டங்களும் வரும். அவற்றையும் செய்து வருகிறேன். கஸ்ரமில்லாமல் என் குடும்பத்தைப் பார்த்து வருகிறேன் என்றார் தன்னம்பிக்கையுடன்.
இவரைப் போலவே ஆட்டோ ஓட்டி தனது குடும்பத்தைக் காப்பாற்றி வரும் திருமதி. சுயாந்தினி இந்திரகுமாரையும் சந்தித்துப் பேசினோம்.
நான் நல்லூரைச் சேர்ந்தனான். எனக்கு மூன்று பிள்ளைகள். பல வருடங்களுக்கு முன்பே கணவர் என்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். வீட்டில் சரியான கஷ்டம். நான் ஏதாவதொரு வேலை செய்து தான் குடும்பத்தைப்  பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் இதைச் செய்வதற்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது.
சொந்தக் காலில் நிற்கவேணும். சுயமாக உழைக்க வேண்டும் என்ற தற்துணிவு வந்ததால் சந்தோஷமாக இந்த வேலையைச் செய்யத் தொடங்கினேன். என்ர பிள்ளைகளுக்கு நான் ஆட்டோ ஓட்டுவது ஆரம்பத்தில் பிடிக்கவில்லை. அம்மா வீட்டுக் கஷ்டத்தால்தானே ஆட்டோ ஓட்டுறா. நாங்கள் படிச்சு உழைக்க தொடங்கிட்டால் அம்மா கஷ்டப்படத் தேவையில்லைத் தானே என்று பின்னர் புரிந்து கொண்டனர். மற்ற ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ஓட்டம் வருவதுபோல் எனக்கும் வரும். இப்ப குடும்பம் கஷ்ரமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது என்றார்.
எங்களாலும் எல்லாம் முடியும். ஆண்களுக்கு நிகராக எங்களாலும் ஆட்டோ ஓட்டித் தொழில் செய்ய முடியும் என்கிறார் செல்வி. தர்மினி விஸ்வநாதன்.  யுத்தத்தால் தாய் தந்தையரை இழந்து தனிமையில் வாழும் இவருக்கு இப்படியானதொரு வாழ்வாதார உதவி கிடைத்தமை புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் நாங்கள் ஆட்டோ ஓட்டுவதைப் புதுமையாகப் பார்த்தவர்களின் பார்வை இப்போது மாறி வருகிறது. ஆண் ஆட்டோ ஓட்டுனர்களிடமிருந்து ஆரம்பத்தில் பிரச்சினை வரும் என்றுதான் எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி ஒன்றும் வரவில்லை. அவர்களால் எங்களுக்கு பூரண ஒத்துழைப்புக் கிடைக்கிறது. எங்களுக்கென்று யாழ்.ந கரின் மத்தியில் தனியாக ஆட்டோத் தரிப்பிடமும் இருக்கு. எங்களோடு பயணிப்பதையே அதிகமானவர்கள் விரும்புகிறார்கள்.
முதல் சவாரி ஓடிக் கிடைத்த வருவாயை கையில் வாங்கும் போது சந்தோஷமாக இருந்தது. விதண்டாவாதம் பேசி குழப்பம் விளைவிக்கும் நோக்குடன் வருபவர்களை நாங்கள் ஏற்றுவதில்லை. இரவு நேர ஓட்டங்களுக்கு போவதில்லை. பெண்களிடத்தில் புரட்சிகரமாக நாங்கள் செய்து வரும் இத்தொழில் ஏனைய பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
ஆட்டோ ஓட்டும் தொழிலைச் செய்வதற்குப் பெண்கள் வெட்கப்படத் தேவையில்லை. இதுவும் ஒரு சுயதொழில் தான். இதையும் பயமில்லாமல் செய்ய முடியும் என்று பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் திடமான மன உறுதியுடன் கூறினார் செல்வி தர்மினி.
சமூகத்தில் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வாழும் இப்பெண்களுக்கு ஆட்டோ ஓட்டும் தொழில் வாழ்க்கையில் புது நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. குடும்பத்தாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்டு வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்படும் இவர்களைப் போன்றவர்களுக்கு இதுவும் ஒரு முன்மாதிரியான, எடுத்துக்காட்டான சுயதொழில் முயற்சியாகும்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites