ஹலோ! நாளமில்லாச் சுரப்பிகள் பற்றித் தெரிந்துகொள்ளலாமா? அதுதான் தைராய்டும், பிட்யுட்டரியும்.. தெரியும் என்கிறீர்களா?
ஆமாம். அந்த இரண்டு சுரப்பிகளை உங்களுக்குத் தெரியும். ஆனால், எங்களையெல்லாம் தெரிய வேண்டாமா? நாங்கள் யார் யார்? பாராதைராய்டு (parathyroid), தைமஸ் (thymus), சுப்ரரீனல் (suprarenal) மற்றும் பைனியல் ஆகிய சுரப்பிகள் நாங்கள்! ஒவ்வொருவராக நாங்களே அறிமுகப்படுத்திக் கொள்கிறோம்.
பாராதைராய்டு சுரப்பிகள் நாங்கள் பக்கத்துக்கு இரண்டு பேராக மொத்தம் நால்வர். சற்றே மஞ்சள் கலந்த பிரவுன் நிறத்தில் சிறிய நிலக்கடலை போல் இருக்கும் நாங்கள், தைராய்டு சுரப்பியின் பின்பக்கத்தில், அதனோடு ஒட்டினாற்போல் இருக்கிறோம். மேலே இருவரும் கீழே இருவருமாக இருக்கும் எங்களை மேல் பாராதைராய்டுகள் (superior parathyroids – சுப்பீரியர் – மேல்) மற்றும் கீழ் பாராதைராய்டுகள் (inferior parathyroids-inferior-கீழ்) என்று அழைக்கிறார்கள்.
எங்களுக்குள் இரண்டு வகையான அணுக்கள் உள்ளன. சிறிய வடிவில் நிறைய இருக்கும் சீஃப் அணுக்கள் (chief cell); பெரிய அளவுகொண்ட இங்கொன்றும் அங்கொன்றுமான ஆக்ஸிஃபில் (oxyphil) அணுக்கள்.
சீஃப் அணுக்கள்தான், பாராதைராய்டு சுரப்பியின் ஹார்மோனான பாராதார்மோனைச் (parathormone) சுரக்கின்றன.
பாராதார்மோன் ரத்தத்தில் உள்ள கால்ஷியம் அளவைச் சரியான விகிதத்தில் வைக்கிறது. ரத்தத்தில் கால்ஷியம் குறைந்து போனால், அதனால் நரம்புகளும் தசைகளும் செயல்படுவது குறைந்து போகும். பலவகைக் கோளாறுகள் ஏற்படும்.
தைமஸ் (Thymus)
நான் கழுத்து நெஞ்சோடு சேரும் இடத்தில், அதாவது உங்கள் நெஞ்சு எலும்புக்குப் பின்புறம் இருக்கிறேன்.
நான் நோய் எதிர்ப்புச் சக்தியோடு தொடர்புடையவன்.
எனக்கு இரண்டு கதுப்புகள் (lobes) உள்ளன. கதுப்புகளுக்குள் சிறுசிறு குறுங்கதுப்புகள் (lobules) உள்ளன. காலிஃப்ளவரின் பூக்கள்போல இவை தோற்றம் தரும்.
நான் சிசுக்களிலும், சின்னக் குழந்தைகளிலும் பெரிய உருவில் இருப்பேன். பின்னர், சிறிது சிறிதாகச் சுருங்கிப் போவேன். முதியவர்களில், நான் நானாக இருக்க மாட்டேன். நிறைய நார்த்திசுவும், கொழுப்புத்திசுவும் என்னை ஆக்ரமித்துக்கொள்ளும். குழந்தைகளிலும் சிறுவர்களிலும்தான் நான் முழுமையாக வேலையும் செய்கிறேன்.
என் வேலை என்ன தெரியுமா? உங்கள் உடம்பில் லிம்ஃபோசைட்டுகள் (lymphocytes) உள்ளன. இவை நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரக்கூடியவை. இந்த லிம்ஃபோசைட்டுகளை முழுமையாகச் செயலாக்க வைக்கும் பணி என்னுடையது ஆகும். என்னுடைய ஹார்மோன்களுக்கு தைமிக் ஹார்மோன்கள் (thymic hormons) என்று பெயர். குறிப்பாக, இவற்றுள் இரண்டு முக்கியமானவை. தைமோஸின் (thymosin) மற்றும் தைமோ பாய்டின் (thymopoietin) என்னும் இவையே, லிம்ஃபோசைட்டுகளை முழுமையாகவும் செயல்படவைக்கின்றன.
சுப்ரரீனல் சுரப்பி
சுப்ரரீனல் சுரப்பி
சுப்ரரீனல் சுரப்பிக்கு, அட்ரினல் சுரப்பி (adrenal gland) என்றும் பெயர் உண்டு (அது சற்று பழைய பெயர்).
இரண்டு சுப்ரரீனல் சுரப்பிகள் உள்ளன. இடப்பக்கம் ஒன்று; வலப்பக்கம் ஒன்று.
சிறுநீரகங்களின் மேலாக, அவற்றின் மீது தொத்திக் கொண்டாற்போல் அமர்ந்திருக்கும் சுப்ரரீனல் சுரப்பிகள் நாங்கள்.
தெளிவாகப் பார்த்தால் ஒவ்வொரு சுப்ரரீனல் சுரப்பியும், இரண்டு நாளமில்லாச் சுரப்பிகளின் கூட்டாகும். ஒவ்வொரு சுப்ரரீனல் சுரப்பியிலும், அகணி (medulla), புறணி (cortex) என்று இரு பகுதிகள் உண்டு. அகணி என்பது நரம்புத்திசுக்கள் கொண்டு, பரிவு நரம்பு மண்டலத்தின் (Sympathetic nervous system) பகுதியாகச் செயல்படுகிறது. புறணிபகுதி யானது, அகணியைச் சூழ்ந்த மாதிரி அமைந்துள்ளது.
புறணியின் சுரப்புகளை மொத்தமாகச் சேர்த்து கார்ட்டிகோஸ்டிராய்டுகள் (Cortico steroids) என்றழைக்கிறோம். புறணியில் மூன்று பாகங்கள் உள்ளன. அவையாவன:
ஸோனா க்ளாமெருலோசா (Zona glomerulosa):
இங்குள்ள அணுக்கள், உருண்டைத் தொகுப்புகளாக அமைந்துள்ளன. இங்கு சுரக்கப்படும் ஹார்மோன்கள் மினரலோகார்டிகாய்டுகளாகும் (Mineralo corticoids) இவற்றுள் மிக முக்கியமானது அல்டோஸ்டிரான் (Aldosterone) என்பதாகும். ரத்த அழுத்தத்தைச் சரியாக வைக்க உதவும் ஹார்மோன் இது.
ஸோனா ஃபாஸிகுலேடா (Zona fasciculata):
இங்குள்ள அணுக்கள் நீண்ட நீண்ட கொடிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இங்கு சுரக்கப்படும் க்ளுகோகார்டி காய்டுகளில் (Gluco corticoids) முக்கியமானது கார்டிஸால் (cortisol) என்பதாகும். உடலில் ஏதேனும் படபடப்புக்கான சூழல் உருவாகும்போது இவை சுரக்கப்படுகின்றன. பதற்றமான சூழலில், பரபரப்பில், வேகத்தில், அவசரத்தில் உடலைச் சரியாகச் செயல்பட வைக்கும் ஹார்மோன்கள் இவை.
ஸோனா ரெடிகுலாரிஸ் (Zona Reticularis) இங்கு அணுக்கள் வலைப்பின்னல் போல் அமைந்துள்ளன. இங்கு சிறிதளவு பாலுணர்வு ஹார்மோன்கள் சுரக்கப்படுகின்றன.
சுப்ரரீனல் அகணியானது எபிநெஃப்ரின் (epinephrine) நார் எபிநெஃப்ரின் (Nor epinephrine) ஆகிய ஹார்மோன்களைச் சுரக்கிறது. இவை இரண்டும் உடலை ‘அவசர’ மற்றும் தீவிர சூழல்களுக்குத் தயாராக்குகின்றன.
அகணியின் ஹார்மோன்களைப் பற்றிச் சொல்லும்போது மருத்துவர்கள் 3F என்பார்கள். அதாவது,
FIGHT – சண்டை
FLIGHT – ஓடுவது
FRIGHT – பயம்
இப்படிப்பட்ட தருணங்களில் இந்த ஹார்மோன்கள் அதிகமாகச் சுரக்கின்றன.
பைனியல் சுரப்பி (Pineal gland):
பைனியல் சுரப்பி (Pineal gland):
மூளையின் உள்ளே ஒரு சிறு கூம்புபோல் அமைந்திருக்கும் சுரப்பிதான் நான். அதாவது பைனியல் சுரப்பி. என்னுடைய அணுக்களுக்கும் பைனியலோஸைட்டுகள் (pinealo cytcs) என்று பெயர். என் அணுக்களுக்கு நடுவே, நிறைய கால்சியம் காணப்படும். இந்தக் கால்சியத் துகள்கூட்டங்களை, மருத்துவர்கள் பைனியல் மணல் (pineal sand) என்றழைப்பார்கள்.
என்னுடைய பைனியலோஸைட்டுகள், மெலடோனின் (melatonin) என்னும் ஹார்மோனைச் சுரக்கின்றன.
உங்கள் உடலுக்குள் ஒரு கடிகாரம் இயங்குகிறது. அதை உயிரியல் கடிகாரம் என்பார்கள். அதாவது, நீங்கள் நினைத்துப் பார்க்காமலே, உங்கள் உடலில் காலை வேளைக்கான மாற்றங்கள், மாலை வேளைக்கான மாற்றங்கள் என்று சில ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தி சரியாக வைத்திருப்பது இந்த மெலடோனின்தான்.
இவை தவிர, இன்னுமொரு நாளமில்லாச் சுரப்பியை உங்களுக்குத் தெரியும்.
யார்?
கணையம் (pancreas)
கணையத்தின் தீவுத் திட்டுகளை நினைவிருக்கிறதா?
இவற்றின் ஆல்ஃபா அணுக்கள் க்ளுக்கானை யும், பீடா அணுக்கள் இன்சுலினையும் சுரக்கின்றன. இவையும் ஹார்மோன்கள்தான்.
இதுதவிர, ஆண்களில் உள்ள டெஸ்டிஸ் (TESTIS) என்றும் உறுப்பும், பெண்களில் உள்ள ஓவரிக்களும் (OVARIES) பாலுறுப்புகளாகும். இவை இனப்பெருக்க ஹார்மோன்களைச் சுரக்கின்றன. ஆண்களில் டெஸ்டோஸ்டிரான் (TESTOSTERONE) என்பதும், பெண்களில் ஈஸ்டோஜென் (OESTROGEN) மற்றும்ப்ரொஜெஸ்டிரான்(றிஸிளிநிணிஷிஜிணிஸிளிழிணி) என்பவையும் சுரக்கப்படுகின்றன.
ரத்தத்தில் கால்ஷியம் மிகமிகக் குறைந்துபோனால் தசைகளில் இழுப்பு ஏற்படும். தசைகள் திடீரென்று துடிக்கும்.
இது சிறிய அளவில் இருந் தால் சரிசெய்துவிடலாம். ஆனால், சிலநோய்களில் இவ்வகைக் கோளாறால் சுவாசத் தசைகள் போன்ற மிக முக்கிய மான தசைகள் பாதிக்கப்படும்போது, உயிருக்கேகூட ஆபத்தாக இது முடியலாம்.
குளுகோகார்டிகாய்டுகள் உடலில் அதிக அளவில் இருக்கும்போது, அவை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைக்கின்றன. எனவே, இவை சில சமயம் மருந்துகளாகப் பயன்படுத்தப் படுகின்றன.
சில வகை மூட்டு நோய்கள், ஒவ்வாமை போன்ற கோளாறுகளில் உடலின் நோய் எதிர்ப்பு திசுக்கள் அளவுக்கு அதிகமாக வேலை செய்கின்றன. அதனால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க க்ளுகோகார்டிகாய்டுகளை மருத்துவர்கள் பயன்படுத்துவர்.
சுப்ரரீனல் புறணியின் ஹார்மோன்களை யெல்லாம் சேர்த்து ஸ்டிராய்டுகள் (Steroids) என்றழைப்பர்.
தேர்வுக்குச் செல்லுமுன் படபடப்பு, கைகளில் வியர்வை, வயிற்றில் கடகட என்று ஏதோ உருள்வது போன்ற உணர்வு, நெஞ்சு அடைப்பு, சிறுநீர் கழிக்கும் உணர்வு – இவை யெல்லாம் அகணி ஹார்மோன்களின் விளைவுகள்.
0 comments:
Post a Comment