இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Tuesday, October 14, 2014

பலன் தரும் பப்பாளி சாகுபடி

பழவகை மரச் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் பயிராக பப்பாளி உள்ளது என்பதை நிரூபித்து வருகிறார் இளம் விவசாயி பாலமுருகன்.
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இவர், தனக்கு சொந்தமான நிலத்தில் 2 ஏக்கரில் கடந்த ஆண்டில் பப்பாளி சாகுபடி செய்து, தனது உழைப்பின் மூலம் நல்ல லாபத்தையும் பெற்று வருகிறார்.
பப்பாளி சாகுபடியில் தனது அனுபவங்கள் பற்றி பாலமுருகன் கூறியதாவது: “எங்கள் பகுதியில் கிணற்றுப் பாசனம்தான். ஏற்கனவே நெல், சோளம், சூரியகாந்தி போன்றவற்றைதான் பயிர் செய்து வந்தோம். எனினும் சந்தை வாய்ப்பு அதிகம் உள்ள பயிர்கள் பற்றியும், அவை நம் பகுதியில் சாகுபடி செய்ய உகந்ததுதானா என்பது பற்றியும் தொடர்ந்து தேடுதல் முயற்சிகளை மேற்கொண்டேன். நண்பர்கள் மூலமாகவும், தோட்டக் கலைத் துறையினர் மூலமாகவும் பல தகவல்களை பெற்றேன். இப்படி கிடைத்த தகவல்களின் அடிப் படையில்தான் பப்பாளி சாகுபடி செய்வது என முடிவெடுத்தேன்.
முதல் கட்டமாக 2 ஏக்கரில் செய்து பார்ப்போம் என முடிவு செய்தேன். இதற்கான விதையை தோட்டக்கலைத்துறையினரின் உதவியோடு பெற்றேன். தைவான் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த விதை அதிக விளைச்சல் தரக் கூடியது. பழத்தின் சுவையும் நன்றாக இருக்கும். விதை விலைதான் அதிகம். ஒரு ஏக்கருக்கு 20 கிராம் விதை போதுமானது. இதன் விலை ரூ.4,500.
பாக்கெட்டில் மண் நிரப்பி, அதில் விதையைப் போட்டு, 60 நாள்களுக்கு நிழலில் வளர விட வேண்டும். அதன் பின்னர், வாழைக்கு பாத்தி கட்டுவது போன்று வயலை தயார் செய்ய வேண்டும். கன்றுகளை நடுவதற்கு சற்று மேடாக மண்ணை வைத்துக் கொண்டு அதில் கன்றுகளை நட்டு, தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும். பப்பாளி சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவையில்லை. எனவே, சொட்டு நீர் பாசன முறையை பயன்படுத்தி வருகிறேன். ஏக்கருக்கு 800 கன்றுகள் என்ற வகையில் 1,600 மரங்கள் தற்போது உள்ளன.
விதை முளைத்த 6 மாதத்தில் மரம் 5 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும். 7 முதல் 8 மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். வாரம் ஒரு தடவை அறுவடை செய்யலாம். காய்ப்பு தொடங்கி 2 ஆண்டுகளுக்கு காய்கள் அதிக அளவில் காய்க்கும். அதன் பின்னர் குறைந்து விடும். அப்போது மரத்தை வெட்டி விட்டு, புதிதாக நடவு செய்யலாம்.
சொட்டு நீர் பாசனத்தின் வழியாகவே இதற்கு தேவையான உரங்களை செலுத்தலாம். ஓரளவுக்கு நல்ல முறையில் நீர் பாய்ச்சி பராமரித்தால், வாரம் ஒருமுறை ஏக்கருக்கு ஒரு டன் வரை மகசூல் எடுக்கலாம். தற்போது மழை இல்லை. நிலத்தடி நீரும் வற்றி விட்டதால் 2 ஏக்கருக்கு ஒரு டன் தான் மகசூல் கிடைக்கிறது.
அறுவடை செய்யப்படும் பப்பாளியை தனித்தனியே பேப்பரில் சுற்றி, அதை திருச்சி மார்க்கெட்டில் கொண்டு வந்து விற்பனைக்கு அளிக்கிறோம். தற்போது டன் ஒன்றுக்கு ரூ.12,000 வரை விலை கிடைக்கிறது. அதிக விளைச்சல் இருந்தால், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யலாம். விலையும் கூடுதலாக கிடைக்கும்.
பப்பாளியை பொறுத்தவரையில் களர், உவர் நிலங்கள் தவிர அனைத்து நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். தங்கள் பகுதியில் உள்ள சந்தையின் தேவையை அறிந்து கொண்டு சாகுபடி செய்வது அவசியம். பப்பாளி பயிரில் ஓராண்டு வரையில் ஊடு பயிராக சின்ன வெங்காயம் சாகுபடி செய்யலாம். அதன் பின்னர் ஊடுபயிர் சாகுபடி செய்வது பூச்சி அல்லது நோய் தாக்குதலை பப்பாளி மரங்களுக்கு ஏற்படுத்தி விடும்.
சந்தை வாய்ப்பை அறிந்து கொண்டு சாகுபடி செய்தால், எந்த சாகுபடியையும் வெற்றிகரமாக மேற்கொண்டு, அதில் நல்ல லாபமும் ஈட்டலாம்” என்கிறார் பாலமுருகன். மேலும் விவரங்களுக்கு 94864 93933 என்ற செல்பேசி எண்ணில் பாலமுருகனை தொடர்பு கொள்ளலாம்.​
pappali_2080159d.jpg

பணம் காய்க்கும் பந்தல்

12 ஏக்கர்... 7 மாதங்கள்... 25 லட்சம்...
...!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்
புதுப்புது யுக்திகளைப் புகுத்தி, புத்திசாலித்தனமாக செயல்படுவர்களுக்கு... விவசாயம், பொன்முட்டையிடும் வாத்துதான்’ என்பதை நிரூபித்து வருகிறார், எழுபத்து இரண்டு வயதைக் கடந்த மூத்த விவசாயி 'கேத்தனூர்’ பழனிச்சாமி. கேத்தனூர், ஆறு, குளம், வாய்க்கால்... என இயற்கை நீராதாரத்துக்கு வாய்ப்பில்லாத ஊர். ஆயிரத்து இருநூறு அடிக்கும் கீழே போய்விட்ட நிலத்தடி நீர்மட்டம். வறண்டு கிடக்கும் பாசனக் கிணறுகள்... இப்படியான சூழலிலும் 'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.
வாழ்க்கையை மாற்றிய கல்பந்தல்!
''இந்த மாட்டுக்கு மூக்கணாங் கயித்தை மாத்தப்பா; இந்தக் கன்னுக்குட்டிய புடிச்சு வேப்பமர நிழல்ல கட்டப்பா...''
-தொழுவத்தில் நின்றபடி வேலையாட்களிடம் சொல்லிக் கொண்டிருந்த பழனிச்சாமி, நம்மைக் கண்டதும், வரவேற்றுப் பேச ஆரம்பித்தார்...
''எங்களுக்கு மொத்தமா 75 ஏக்கர் நிலம் இருக்கு. பருத்தி, கொண்டைக் கடலை, கோதுமை, கம்புனு ஒரு காலத்துல மானாவாரி வெள்ளாமையில கொடிகட்டிப் பறந்த ஊருங்க இது. இப்போ, கிணத்துப் பாசனத்தை நம்பித்தான் வண்டி ஓடுது. 50 வருஷத்துக்கு முன்ன கொடைக்கானலுக்குப் போயிட்டிருந்தேன். அப்போ, ஒரு இடத்துல கல்பந்தல் போட்டு திராட்சை சாகுபடி பண்ணிட்டுருந்தாங்க. அப்போதான், பந்தல் விவசாயத்தைப் பத்தியே தெரிஞ்சிகிட்டேன். உடனே, என் தோட்டத்துல பந்தல் போட்டு, திராட்சையைப் போட்டேன். நல்ல வருமானம் கிடைச்சுது. அதனால, என்னை 'திராட்சைத் தோட்டத்துக்காரர்’னே கூப்பிட ஆரம்பிச்சாங்க. 88-ம் வருஷம் வரைக்கும் திராட்சை சாகுபடிதான். கூடவே, கத்திரி, தக்காளி, மிளகாய்னு காய்கறி விவசாயமும். 89-ம் வருஷத்துல இருந்து பந்தல்ல காய்கறி சாகுபடி செஞ்சுட்டுருக்கேன். இப்போ, நாலு ஏக்கர்ல பாகல், மூணு ஏக்கர்ல பீர்க்கன், நாலு ஏக்கர்ல புடலை, ஒரு ஏக்கர்ல கோவைக்காய்னு மொத்தம் 12 ஏக்கர்ல பந்தல் விவசாயம் செய்றேன்.
நல்வழி காட்டிய நம்மாழ்வார்!
ஆரம்பத்துல, லாரி லாரியா உரத்தைக் கொண்டு வந்து கொட்டி, ரசாயன விவசாயம்தான் செஞ்சேன். அதேமாதிரி, வீரியமான பூச்சிக்கொல்லிகளைத்தான் தெளிச்சுட்டிருந்தேன். பகல் முழுக்க என் பண்ணையில பவர் ஸ்பிரேயர் ஓடுற சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கும். ஒவ்வொரு முறையும் கணக்கு பாக்குறப்போ, உற்பத்திச் செலவுதான் அதிகமா இருந்துச்சு. லாபம் கம்மியா இருந்துச்சு. 'செலவை எப்படி குறைக்கலாம்?’னு பலர்கிட்ட யோசனை கேட்டுட்டிருந்த சமயத்துலதான், நம்மாழ்வார் பத்திக் கேள்விப்பட்டேன். அவரைத் தேடிப்போய் சந்திச்சுப் பேசி பல தகவல்களைத் தெரிஞ்சிக்கிட்டேன். 'இயற்கை விவசாயம்தான் லாபகரமான விவசாயத்துக்கு ஒரே தீர்வு’னு முடிவு செஞ்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சுட்டேன்.
பஞ்சகவ்யா, மூலிகைப் பூச்சிவிரட்டி, மீன் அமிலம், அரப்பு-மோர் கரைசல்னு இயற்கை இடுபொருட்களை நானே தயாரிச்சு, பயிர்களுக்குக் கொடுத்ததுல நல்ல பலன் கிடைச்சது. அப்படியே, சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சி வகுப்புலயும் கலந்துகிட்டு பயிற்சி எடுத்த பிறகு, முழுக்க முழுக்க இயற்கைக்கு மாறிட்டேன். கலப்பின பசுமாடுகளைக் குறைச்சுட்டு, காங்கேயம் மாடுகளை வாங்கினேன். அதுங்களோட சாணம், மூத்திரத்தை வெச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், அமுதக்கரைசல்னு எல்லா இடுபொருட்களையும் தயாரிக்கிறேன்'' என்ற பழனிச்சாமி... புடலை பந்தலுக்குள் அழைத்துச் சென்றார்.
பந்தலுக்குள் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருந்த முற்றிய வெளிர் பச்சை நிற குட்டைப்புடலங்காய்களைப் பறித்து, சிறிய தள்ளுவண்டிகளில் சில பெண்கள் கொட்ட, அதை அப்படியே களத்து மேட்டுக்கு உருட்டி சென்று கொண்டிருந்தனர், சில ஆண்கள். அந்த பந்தலுக்குள் நின்றவாறே, பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விதத்தைச் சொல்ல ஆரம்பித்தார், பழனிச்சாமி.
அதை அப்படியே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
ஏக்கருக்கு 1,25,000 ரூபாய்!
'நடவு செய்ய வேண்டிய நிலத்தை உழுது, கல்தூண்களை ஊன்றி கம்பிகளைக் கட்டி பந்தல் அமைக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தில் பந்தல் அமைக்க கிட்டத்தட்ட ஒன்றேகால் லட்ச ரூபாய் வரை செலவாகும். ஒருமுறை கல்பந்தல் அமைத்து விட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். பந்தல் அமைத்த பிறகு, 16 அடி இடைவெளியில் தென்வடலாக பார் அமைத்து, சொட்டு நீர்ப்பாசனக் கருவிகளைப் பொருத்திக் கொள்ளவேண்டும். ஏக்கருக்கு தலா, ஒன்றரை கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா ஆகியவற்றை 12 டன் தொழுவுரத்தில் கலந்து, பார் பாத்திகளுக்குள் தூவி... 5 அடி இடைவெளியில் இரண்டரை அடி அகலம் கொண்ட வட்டக்குழிகளை அமைக்க வேண்டும்.
விதைநேர்த்தி அவசியம்!
புடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை  (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும் போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும். நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாட்களுக்கு ஒரு முறை களை எடுக்க வேண்டும்.
வளர்ச்சிக்குப் பிண்ணாக்கு... பூச்சிக்கு புளித்த மோர்!
ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், ஒவ்வொரு செடியின் தூரிலும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்பு-மோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்து செடிகள் மேலும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் செழிம்பாகத் தெளிக்க வேண்டும்.  
நடவிலிருந்து 20 நாட்களுக்கு ஒரு முறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவிணி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக் கொள்ள வேண்டும். இதைத் தெளித்து வந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுக்கள் இருக்காது.
26, 27-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ் வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். 30-ம் நாளுக்குள் கொடிகளை கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாக கெட்டியான காடா நூலை கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும்.
60-ம் நாளில் 100 மில்லி அரப்பு-மோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து, 10 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால், பெண்பூக்கள் உதிராமல் இருப்பதோடு, பூஞ்சண நோய்த் தாக்குதலும் இருக்காது.
பூச்சிகளுக்குப் பொறிகள்!
பந்தலுக்கு உள்பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் விளக்குப் பொறிகளைக் கட்டித் தொங்க விட்டால், பச்சைப்புழுக்கள், காய்துளைப்பான்கள் போன்றவைக் கட்டுப்படும். பந்தலுக்குள் இரண்டு மூன்று இடங்களில் 'சிறிய அரிக்கேன்' விளக்கு வடிவத்தில் உள்ள இனக்கவர்ச்சிப் பொறிகளைக் கட்டித் தொங்கவிட்டால், பந்தல் காய்கறிகளைத் தாக்கும் குளவிகளைக் கட்டுப்படுத்தலாம் இந்தப் பொறிக்குள் சென்று மாட்டிக் கொண்டு அவை இறந்துவிடும்.
இதே பராமரிப்புதான் அனைத்து வகை பந்தல் காய்கறிகளுக்கும். ஆனால், பாகலுக்குக் கொஞ்சம் கூடுதல் பராமரிப்பு தேவைப்படும். புடலை சாகுபடியில், நடவு செய்த 65-ம் நாளில் இருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாட்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும். நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.மீண்டும், மீண்டும் விதைக்காக செலவு செய்வது மிச்சம்'
26 லட்ச ரூபாய் லாபம்!
சாகுபடிப் பாடம் முடித்த பழனிச்சாமி, ''ஒரு கிலோ புடலை சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. ஒரு ஏக்கர்ல விளையற 40 டன் காய்கள் மூலமா, 200 நாள்ல கிட்டத்தட்ட 6 லட்ச ரூபாய் வருமானமா கிடைக்கும். நான் நாலு ஏக்கர்ல புடலை போட்டிருக்கேன். அது மூலமா 24 லட்ச ரூபாய் கிடைக்கும். சாகுபடிச் செலவு
10 லட்ச ரூபாய் போக... 14 லட்ச ரூபாய் லாபம். நாலு ஏக்கர்ல பாகல் இருக்கு. ஏக்கருக்கு சராசரியா 25 டன் விளைச்சல் இருக்கும். இதுவும் சராசரியா கிலோ 15 ரூபாய்னு விலைபோகும். நாலு ஏக்கர் பாகல் மூலமா 15 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும்.
10 லட்ச ரூபாய் சாகுபடிச் செலவு போக 4 லட்ச ரூபாய்க்கு மேல் லாபம்!
மூணு ஏக்கர்ல பீர்க்கன் இருக்கு. ஏக்கருக்கு 30 டன் கிடைக்கும். இதுவும் கிலோ 15 ரூபாய்னு விலைபோகுது. மூணு ஏக்கர்லயும் சேர்த்து மொத்தம் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல 9 லட்ச ரூபாய் செலவு போக, 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் லாபம்.
ஒரு ஏக்கர்ல கோவைக்காய் இருக்கு. இதுல ஏக்கருக்கு 30 டன் மகசூல் கிடைக்கும். இது கிலோ 20 ரூபாய்க்கு விலைபோகுது. இதன் மூலமா 6 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். 3 லட்ச ரூபாய் செலவு போக மூணு லட்ச ரூபாய் லாபம்.
ஆகமொத்தம் 12 ஏக்கர்ல இருந்து, 25 லட்ச ரூபாய்க்கு மேல லாபமா கிடைக்குது. வியாபாரிகள் என் தோட்டத்துக்கே வந்து காய்களை வாங்கிட்டுப் போறதால போக்கு வரத்துச் செலவுகூட இல்லை'' என்ற பழனிச்சாமி,
''இவ்வளவு வருமானத்தைப் பாக்கும்போது மலைப்பா இருக்கலாம். ஆனா, இந்த வெற்றிக்குக் காரணம் தினமும் நான் பந்தலுக்குள்ள போய் பாத்துப் பாத்து தேவையான இயற்கை இடுபொருளைக் கொடுக்குறதுதான். நிலம், நீர், நுணுக்கமான விவசாய அறிவு இருந்தா போதும்... எந்தப் பகுதியில வேணும்னாலும் பந்தல் விவசாயம் செய்து, யார் வேணும்னாலும் ஜெயிக்க முடியும்'' என்று நம்பிக்கை வார்த்தைகள் சொன்னார்.  
தொடர்புக்கு,
கே.வி.பழனிச்சாமி,
செல்போன்: 99439-79791.
நன்றி : பசுமை விகடன்

வனம் தரும் பணம்

தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டம் ....
பளிச்... பளிச்...ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத்தொகை.
வேலையாட்கள் பிரச்னைக்குத் தீர்வு.
4-ம் ஆண்டு முதல் வருமானம்.
வானம் பாத்த பூமி, போக்குக் காட்டும் மழை, சரியில்லாத மண்கண்டம், பற்றாக்குறைத் தண்ணீர், வேலையாட்கள் பிரச்னை என்று பல பிரச்னைகளைப் பார்த்து, பயந்து போய் நிலங்களைத் தரிசாகப் போட்டு வைத்திருக்கும் அப்பாவி விவசாயியா நீங்கள்...? அல்லது 'இனிமே வெள்ளாமை செஞ்சி ஜெயிக்க முடியாது.. பேசாம நிலத்தை வந்த விலைக்கு வித்துட்டு வேற பொழப்பைப் பாக்கலாம்" என யோசிப்பவரா...? எப்படி இருந்தாலும் அவசரப்படாதீர்கள்... உங்களைப் போன்றவர்களுக்காகவே தமிழ்நாடு வனத்துறையின் வன விரிவாக்கப் பிரிவு ஒரு திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
'தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு' என்பதுதான் அந்தத் திட்டம். 'நாட்டில் 33 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும்' என்பதற்காக, அரசால் ஆரம்பிக்கப்பட்டத் திட்டமாக இருந்தாலும், அது பொதுநோக்கோடு குறிப்பாக விவசாயிகளுக்கும் பலன் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் அதன் விசேஷம். இனி இத்திட்டம் பற்றி விரிவாக விளக்குகிறார், மதுரை வன விரிவாக்க அலுவலர், ராஜசேகரன்.
விரும்பும் மரம் கிடைக்கும்
"இன்னிக்கு இருக்குற சூழல் கேடு எல்லாத்துக்கும் காடுகளை அழிச்சதுதான் காரணம். புவிவெப்பம், ஓசோன் ஓட்டைனு பிரச்னை பெருசானதும் உலக நாடுகள் முழுக்க மரங்களை வளக்கறதுல முனைப்பா இருக்கு. நம்ம நாட்டுலயும் காடுகளோட பரப்பை அதிகரிக்கறதுக்காக வனவிரிவாக்கத்துறை முனைப்பா செயல்பட்டு வருது.
காடுகள், மலைகள், தரிசு நிலங்கள்ல மரக்கன்றுகளை நட்டு வளத்துகிட்டு வர்றோம். ஆனா, காடுகளோட பரப்பு 33 சதவிகிதம் அளவுக்கு உயரணும்னா விவசாயிகள் மற்றும் பொதுமக்களோட பங்களிப்பு ரொம்ப அவசியம்ங்கிறதை உணர்ந்து, 'தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்ட'த்தை, 2007-ம் வருஷத்துல இருந்து அரசு செயல்படுத்திக்கிட்டு வருது.
இந்தத் திட்டத்தின்படி, சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் நிலத்துல நடுறதுக்குத் தேவையான மரக்கன்றுகளை இலவசமா கொடுக்குறோம். மரக்கன்று நட விரும்புற விவசாயிகளோட நிலங்களை எங்கள் அலுவலர்கள் ஆய்வு செஞ்சி, அந்த மண்ணுல என்ன மரம் நல்லா வளரும்னு பாத்து மண்ணுக்கேத்த மரக்கன்றுகளைக் கொடுக்குறோம். நாங்க பரிந்துரை பண்ற மரங்கள் மட்டும் இல்லாம விவசாயிகள் விரும்புற மரக்கன்றுகளையும் கேட்டு வாங்கிக்கலாம்.
அனைத்தும் இலவசம்
வெறுமனே மரத்தை நட்டு வளருங்கனு சொன்னா, 'மரம் நட்டா சூழல் சுத்தமாகும், நமக்கென்ன பயன்'னு யோசிக்குறாங்க. அதுனால அவங்களுக்கும் பலன் கிடைக்கணுங்கிறதுக்காக, வணிக ரீதியா பலன் கொடுக்குற மரங்களான, சவுக்கு, பெருமரம் (பீநாரி), குமிழ், மலைவேம்பு, மகோகனி, இலவம், தேக்கு, வாகை, வேம்பு, புங்கன், காயா, சிலவாகை, தடசு... மாதிரியான மரங்களைத்தான் கொடுத்துக்கிட்டு இருக்கோம்.
தேவைப்படுறவங்க நிலத்தை உழுது மட்டும் கொடுத்தா போதும். நாங்களே ஆட்களை அனுப்பி குழியெடுத்து மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்திடுவோம். இதுக்காக விவசாயிக எந்தப் பணமும் செலவழிக்கத் தேவையில்ல. நடவு செய்யுற செடியை நல்லபடியா பராமரிச்சுட்டு வந்தா, நடவிலிருந்து ஒரு வருஷம் கழிச்சு, ஏக்கருக்கு 1,000 ரூபாய் ஊக்கத் தொகையும் கிடைக்கும்.
ஊடுபயிர் சாகுபடியும் செய்யலாம்
பொதுவா மானாவாரி நிலம்னா அதுல இலவம், பெருமரம் நல்லா வளருது. கரிசல் மண் நிலமா இருந்தா, இலவ மரம் அருமையா வளரும். மழைக்காலத்துல நட்டு, செடியைச் சுத்தி குழி எடுத்து வெச்சுட்டா போதும்.
இறவைப் பாசனம்னா வரப்புப் பயிராக கூட மரங்களை நட்டுக்கலாம், அல்லது வரப்பைச் சுற்றி வேலிப்பயிரா சவுக்கை நட்டுட்டு வயலுக்குள்ள 15 அடி இடைவெளியில மரக்கன்றுகளை நட்டு இடையில விவசாயம் செய்யலாம். இப்படி மரக்கன்றுகளை நடும்போது முதல் ரெண்டு வருஷத்துக்கு ஊடுபயிரா காய்கறிகள், தானியங்கள்னு ஏதாவது ஒரு பயிர் செஞ்சி அது மூலமா வருமானம் எடுத்துக்க முடியும்.
வருஷா வருஷம் வருமானம்
3-ம் வருஷத்திலிருந்து இலவ மரத்துல காய்கள் கிடைக்கும். 4-ம் வருஷம் சவுக்கு, 5-ம் வருஷம் பெருமரம், 6-ம் வருஷம் குமிழ், 7-ம் வருஷம் மலைவேம்புனு தொடர்ந்து வருமானம் வந்துகிட்டே இருக்கும். 9-ம் வருஷத்தில இருந்து மூணு வருஷத்துக்கொரு தடவை பெருமரம் மறுதாம்பு மூலமா வருமானம் கொடுத்துக்கிட்டே இருக்கும். ஒரு ஏக்கருக்கு 4 ஆயிரம் சவுக்கு மரக்கன்றுகளை நடவு செய்யலாம். 4 வருஷம் கழிச்சு வெட்டும்போது ஒரு சவுக்கு மரம் 25 ரூபாய்னு விலை போனா கூட ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபா வருமானமாகக் கிடைக்கும்.
நாங்க கொடுக்குற மரங்களிலேயே கம்மியான விலைக்கு போறது சவுக்குதான். அதுலயே இவ்வளவு வருமானம்னா, மத்த மரங்கள் மூலமா கிடைக்கிற வருமானத்தை நீங்களே கணக்கு போட்டுக்குங்க.
வேம்பு, புங்கன் மாதிரியான மரங்களா இருந்தா மரங்கள் பெருசாவதற்குள்ள விதைகள் மூலமாவும் வருமானம் பாத்துடலாம். மரமும், விவசாயமும் சேர்ந்த வேளாண் காடுகளை அதிகமா ஏற்படுத்துறதுதான் இந்தத் திட்டத்தோட நோக்கம். பல பிரச்னைகளால விவசாயத்தை வெறுக்குற விவசாயிகளுக்கு இந்தத் திட்டம் ஒரு வரப்பிரசாதம்னே சொல்லலாம்.
மரப்பயிரை சாகுபடி செய்யுறப்ப 20 ஏக்கர் நிலத்தைக் கூட ஒருத்தரே பராமரிச்சிட முடியும். உரம், பூச்சிக்கொல்லி, வேலையாள்னு எந்தச் செலவும் இல்லை. சுருக்கமாச் சொன்னா இதையும் 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்னே சொல்லலாம். மரம் வளக்குறதுல வருமானம் பாக்குறதோட சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்றோம்ங்கிற திருப்தியும் கிடைக்கும்" என்ற ராஜசேகரன் நிறைவாக,
"மரம் வளக்குற விவசாயிகளுக்கு, 'மரம் வளத்து, விக்குறதுக்காக வெட்டுறப்ப அனுமதி அது, இதுனு அலைய விட்டுடுவாங்களோ'னு ஒரு சந்தேகம் வரும். இது நியாயமான சந்தேகம்தான். மர வியாபாரிகள், தரகர்கள் இந்த விஷயத்தைக் காரணம் காட்டியே மரத்துக்கான விலையில் பாதியைக் குறைச்சுடுவாங்க.
அடையாள அட்டை
இதை தடுக்குறதுக்காக, தனியார் நிலங்களில் மரம் வளர்ப்புத் திட்டத்தின் மூலமா மரம் வளக்குறவங்களுக்கு புகைப்படம் ஒட்டுன அடையாள அட்டையை கொடுத்திடுறோம். அதுல அவங்களோட நிலத்தின் அளவு, மரங்களோட விவரம்னு எல்லாமே இருக்கும். அதை வெச்சே அவங்க கிராம நிர்வாக அலுவலகத்துல அடங்கல் குறிப்புல மரங்களோட விவரத்தைப் பதிவு செஞ்சுக்க முடியும். மரங்களை விற்பனை செய்றப்ப இந்த அட்டையை வனத்துறை அலுவலகத்துல காட்டி தேவையான ஆவணங்களைக் கொடுத்து கட்டணமா 10 ரூபாயை மட்டும் கட்டினாலே போதும். மரத்தை வெட்டி விற்பனை பண்றதுக்கான அனுமதி கிடைச்சுடும்" என்றார்.
இந்தத் திட்டம் உண்மையிலேயே விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? என்று அறிந்து கொள்வதற்காக இந்தத் திட்டத்தின் மூலம் மரங்களை வளர்த்து வரும் விவசாயிகள் சிலரை சந்தித்தோம்.
மானாவாரியிலும் மகத்துவம்
திண்டுக்கல் மாவட்டம் ஏ.வெள்ளோடு கிராமத்தில், 'மழையை விட்டால் வழியே இல்லை' என்ற அளவுக்கு வறண்டு கிடந்த கரிசல் காட்டில் இலவம் மற்றும் குமிழ் மரங்களை சாகுபடி செய்து வருகிற சுப்புராமைப் போய் பார்த்தோம். மனிதர் மிகவும் உற்சாகமாக, "பாசன வசதி இல்லாத நிலம். அதனால, மழையை மட்டும் நம்பி பருத்தி, சோளம்னு மாறி மாறி விதைப்பேன். ஆனாலும், விவசாயத்துல கைக்காசுதான் போச்சுதே தவிர, வருமானம்னு சல்லிக்காசு மிச்சமில்ல.
ஊருக்குப் பக்கத்துல இருக்கற 80 சென்ட் நிலத்துல இலவம் மரம் வெச்சிருந்தேன். அதுல விளையுற காயை எடுத்து, பஞ்சாக்கி வித்துத்தான் குடும்பத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். அந்த நேரத்துல வனவிரிவாக்க மையம் மூலமா 'கன்னு கொடுக்குறோம்'னு சொன்னாங்க, நான் 'இலவங்கன்னு கொடுங்க'னு கேட்டு வாங்கி, அஞ்சு ஏக்கர்ல நட்டு மூணு வருஷமாச்சு. இதுவரைக்கும் மழைத் தண்ணியைத் தவிர வேறெந்த தண்ணியும் பாய்ச்சலை. இப்ப காய் காய்க்க ஆரம்பிச்சுடுச்சு.
இங்க எல்லா மரங்களும் செழிப்பா இருக்கறதுக்குக் காரணம் கரிசல் மண்தான். இந்த மண், மண்ணுல விழுவுற மழைத் தண்ணியை அப்படியே பிடிச்சு வெச்சுக்கும். அதனால நிலத்துல அங்கங்க உயரமான வரப்புகளைப் போட்டு, செடியை சுத்தியும் சைக்கிள் டயர் அளவுக்கு வட்டமா ஒரு அடி ஆழத்துல குழி எடுத்து வெச்சிட்டேன். இந்தக் குழியில ஒவ்வொரு தடவை மழை பெய்யுறப்பவும் 50 லிட்டர் தண்ணி நிக்கும். இப்படி கரை போட்டு, குழி எடுத்து வெச்சதால என் நிலத்துல விழுகுற மழைத் தண்ணி ஒரு பொட்டுக்கூட வெளிய போகாது.
6-வது வருஷத்துக்கு மேல இருந்து இலவு நல்ல வருமானத்தைக் கொடுக்கும். நல்லபடியா விளைஞ்சா ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபா கிடைக்கும். இப்ப வாரத்துல ரெண்டு தடவை மட்டும் வந்து நிலத்தை ஒரு சுத்து சுத்திப்பாத்துட்டு போறதோட சரி. பருத்தி இருந்தப்ப ஆள் கிடைக்காம அவஸ்தைப்பட்ட நான், இன்னிக்கு என் நிலத்தையும் பாத்துக்கிட்டு அடுத்தவங்க கூப்பிட்டா வேலைக்கும் போறேன்.
என்னைப் பாத்துட்டு எங்க பகுதியில ஏகப்பட்ட பேரு மரம் வளக்குறதுல இறங்கிட்டாங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் எந்த வில்லங்கமும் இல்லாத விவசாயம் இந்த மரம் வளர்ப்புதான்" என்றார்.
5 ஏக்கர்...! 20 லட்சம்
அடுத்து நாம் சந்தித்தது, இறவையில் பெருமரம் (பீநாரி) வளர்த்து வரும் திண்டுக்கல், வெள்ளனம்பட்டியைச் சேர்ந்த முருகானந்தத்தை. "இந்த மரத்தை நட்டு 11 மாசம் ஆகுது. இது மானாவாரியிலயே நல்லா வளரும், நான் அப்பப்ப தண்ணியும் கொடுக்குறதால குறுகிய காலத்துலயே நல்லா வளந்திருக்கு. 5 ஏக்கர்ல கிட்டத்தட்ட
2 ஆயிரம் மரங்க இருக்கு. இதே மாதிரி வளந்தா 4 வருஷத்துல வெட்டலாம்.
ஒரு மரம் 1,000 ரூபாயினு வெச்சுக்கிட்டாக்கூட 20 லட்ச ரூபா வருமானம் கிடைக்கும். அடுத்த மூணு வருஷத்துக்கு ஒருதடவை மறுதாம்பு மூலமா இதே தொகை தொடர்ந்து கிடைச்சுகிட்டே இருக்கும். வேறெந்த விவசாயத்துலயும் கிடைக்காத வருமானம் மரம் வளர்ப்புல கிடைக்கிறதோட, சமுதாயத்துக்கு நல்லது செஞ்சோம்ங்கிற திருப்தியும் கிடைக்குது" என்கிறார் முருகானந்தம்.
10 வருடம்... 40 லட்சம்..!
மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான சுப்பாராஜ், "45 வருஷமா விவசாயம் பாத்து, நொந்து நூலாகி இனிமே விவசாயமே வேண்டாம்னு முடிவுக்கு வந்து நிலத்தைத் தரிசாப் போட்டுட்டேன். அப்பதான் இந்தத் திட்டத்தில இருந்து வந்த வனவிரிவாக்க மைய அலுவலர்கள், 'இந்த மண்ணுல தேக்கு நல்லா வளரும்'னு சொல்லி தேக்கு மரக்கன்றுகளை நட்டுக் கொடுத்தாங்க. நானும் ஆரம்பத்துல இஷ்டம் இல்லாமதான் வாங்கி நட்டேன். ஆனா, மரம் வளர, வளர என்னையும் அறியாம எதோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டுப் போச்சு.
விவசாயமே வேணாம்னு ஓடுனவன், இப்ப தினமும் காலையில ஆறு மணியில இருந்து எட்டு மணி வரைக்கும் தோட்டதுலதான் இருக்கேன். ஒவ்வொரு மரமா பாத்து, நுனியக் கிள்ளி தடவிக் கொடுப்பேன். இங்க இருக்க ஒவ்வொரு மரமும் என்னோட பேசும். அஞ்சு ஏக்கர்ல தேக்கு இருக்கு. நட்டு 11 மாசத்துலயே 15 அடி உயரம், 22 செ.மீ சுற்றளவுக்கு தடிமனா பருத்திருக்கு.
10 வருஷத்துக்கு முன்ன இதைச் செஞ்சிருந்தா, இன்னிக்கு நான் கோடீஸ்வரனா இருந்திருப்பேன். கொஞ்சம் தாமதமாயிடுச்சு. இருந்தாலும் பரவாயில்லை இந்த அஞ்சி ஏக்கர்ல 2,000 தேக்கு இருக்கு. அடுத்த 10 வருஷத்துல ஒரு மரம் 2,000 ஆயிரம் ரூபாய்க்கு வித்தாலும், 40 லட்ச ரூபா கிடைக்குமே. எந்த வெள்ளாமையில இவ்வளவு வருமானம் கிடைக்கும்" என்றார் ஆனந்தமாக.
ஊடுபயிர்களும் பயிரிடலாம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகேயுள்ள தொட்டப்பநாயக்கனூரைச் சேர்ந்த ராஜீ, "நான் இந்தத் தோட்டத்துல தண்ணி கட்டிப் பராமரிக்குற வேலை பாத்துக்கிட்டிருக்கேன். (இவர் தோட்ட உரிமையாளர் கிடையாது) தண்ணி வசதி இருக்குறதால இந்த நிலத்துல காய்கறிதான் போடுவோம். போன வருஷம் நவம்பர் மாசத்துல பீநாரியும், குமிழ்ச் செடியும் கொடுத்தாங்க. அதை 15 அடி இடைவெளியில நட்டு, வரப்பு முழுக்க சுத்தி சவுக்கு நட்டுருக்கோம். இடையில பாத்தி எடுத்து தக்காளியை நட்டு, வாய்க்காலோட ரெண்டு பக்கமும் துவரையையும் அகத்தியையும் நட்டுருக்கோம். அகத்தி, மாடுகளுக்கு தீவனமாப் பயன்படுது. தக்காளிக்குப் பாயுற தண்ணியிலயே மரங்க நல்லா உருண்டு திரண்டு வருது. 11 மாசத்துலயே பீநாரி 30 செ.மீ பருமனுக்கு பருத்திருக்கு. அடுத்த வருஷத்திலிருந்து காய்கறி செய்ய முடியாது. நிழல்ல வர்ற வெள்ளாமை ஏதாவதுதான் செய்யணும். 6 வருஷத்துக்கு மேல இந்த மரங்க மூலமா பல லட்சம் வருமானம் வரும்னு சொல்றாங்க. இப்ப இருக்கற சூழ்நிலையில வெள்ளாமை செய்றதை விட மரம் வளக்குறதுதான் நல்லது" என்றார் திட்டவட்டமாக.
இனி முடிவெடுத்துக் கொள்ளுங்கள்... நிலத்தைத் தரிசாகப் போடுவதா... விற்று விடுவதா... அல்லது?,
படங்கள் : வீ. சிவக்குமார்
என்ன செய்ய வேண்டும்?
"இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் நிலம் பற்றிய விவரம், பட்டா, சிட்டா, அடங்கல், 2 மார்பளவு புகைப்படங்கள்... ஆகியவற்றுடன் அந்தந்த மாவத்திலுள்ள வன விரிவாக்க மையங்களை அணுகலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மரக்கன்றுகளை நடவு செய்ய இது சரியான பருவம். தவிர, அனைத்து மையங்களிலும் நாற்றுகள் தயார் நிலையில் உள்ளன. இந்த மையங்களில் தரமான நாற்றுகள் மானிய விலையில் விற்பனையும் செய்யப்படுகின்றன. அதோடு ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் மரம் வளர்ப்பு தொடர்பான இலவசப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன" என்கிறார் ராஜசேகரன்.
ஐந்தடி வரைதான் கவாத்து...
மரங்களுக்கு கவாத்து அவசியம். ஆனால், பலரும் கிளைகளை நன்கு வளர விட்டு வெட்டும் பழக்கத்தைக் கடைபிடிக்கிறார்கள். இது தவறாகும். எந்த மரமாக இருந்தாலும் மரம் 5 அடி உயரத்துக்கு வளருகிற வரைக்கும் வேண்டுமானால், பக்கக் கிளைகள் வளர்ந்ததும் வெட்டலாம். அதற்கு மேல் மரம் வளர்ந்த பிறகு நுனியில் பக்கக் கிளை பிரியும் போதே கிள்ளி எடுத்து விடவேண்டும். வளர்ந்த பிறகு நீக்குவதால் மரத்தில் காயங்கள், தழும்புகள் ஏற்படும். அதே போல மரத்தில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் இலைகளை நீக்கவே கூடாது. தேவையில்லாத இலைகளை மரங்களே உதிர்த்து விடும்.
குறைந்த செலவில் பசுமைக் கூடாரம்...
வன விரிவாக்க மையங்களில் குறைந்த செலவில் பசுமைக் கூடாரம் அமைக்கும் முறையையும் கற்றுத் தருகிறார்கள். இந்தகூடாரத்துக்கு 15,000 ரூபாய்தான் செலவாகிறது. இதில் 1,000 நாற்றுகள் உற்பத்தி செய்ய முடியும். விவசாயிகள் குறைந்த அளவில் நாற்று உற்பத்தி செய்து கொள்வதற்கு இந்த கூடாரம் உதவியாக இருக்கும்.

தொடர்புக்கு,

வனவிரிவாக்க அலுவலர், ராஜசேகரன், அலைபேசி: 94424-05981.
விவசாயிகள்:

சுப்புராம், அலைபேசி: 99445-92378.
சுப்பாராஜ், அலைபேசி: 98653-24930,
முருகானந்தம், அலைபேசி: 98944-54774

ஸ்க்ரீன் பிரின்ட்டிங்

சுயதொழில் தொடங்க ஆர்வம் கொண்ட பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை அவர்கள் கேள்விகளாக கேட்க... அதற்கு தெளிவான பதில்களைப் பெற்றுத் தரும் பகுதி இது. இங்கே உங்கள் கேள்விகளுக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சி. ராமசாமி தேசாய்பதில் அளிக்கிறார்.
''நானும் கணவரும் கல்லூரி அருகில் புத்தகம் மற்றும் ஸ்டேஷனரி கடை வைத்துள்ளோம். கூடுதல் வருமானத்துக்கு வழி செய்யும் சிந்தனையில் இருக்கிறோம். பேனா, ஃபைல், தாம்பூல துணிப்பை போன்றவற்றில் பிரின்ட்டிங் செய்யும் ஸ்க்ரீன் பிரின்ட்டிங் பயிற்சி மற்றும் நேம் கீ செயின் (பிளாஸ்டிக் மாடல்) போடும் முறை, அதற்கான இயந்திரங்கள் கிடைக்கும் இடம் பற்றி கூறமுடியுமா?''
- எஸ்.மெய்யம்மை சுப்பையா, மேலையூர் 
''ஸ்க்ரீன் பிரின்ட்டிங் மூன்று வகைப்படும். குவாலிட்டி முறை, டைரக்ட் முறை, லாஸ் ரன்னிங் ஜாப் என்ற இந்த மூன்று முறைகளிலும், அதற்கு உபயோகிக்கும் ஸ்க்ரீன் வேறுபடும்.
குவாலிட்டி முறை, சில நூறு காப்பிகள் மற்றும் எடுக்கப் பயன்படும். துல்லியமாக இருக்கும். இதற்கு 5 ஸ்டார் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரண்டாவதான டைரக்ட் முறையில், மஞ்சள் பை, 'நான் ஓவன்’ பைகளில் பிரின்ட்டிங் செய்யலாம். இதன் டைரக்ட் ஸ்க்ரீன், மஞ்சள் நிறத்தில் இருக்கும்.
மூன்றாவது முறையான 'லாஸ் ரன்னிங்’குக்கு, கிரோன் (Cron) லேயர் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். இது நீல நிற ஸ்க்ரீன் ஆகும். அதிக எண்ணிக்கையில் பிரின்ட் செய்ய இது உதவும். ஆக, எது உங்கள் வசதிக்கும் வரும் ஆர்டர்களுக்கும் ஏற்றது என்று யோசித்து, தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
சரி, இனி ஸ்க்ரீன் பிரின்ட்டிங் யூனிட் அமைப்பது பற்றிப் பார்ப்போம். தரமான ஸ்க்ரீன் பிரின்ட்டிங் உபகரணங்களுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. வெறும் 6,000 ரூபாயிலேயே சாத்தியப்படுத்தலாம். தேவையான உபகரணங்கள்... 2 அடி அகலம், 1 அடி நீளம், 3 அடி உயரம் உள்ள 'எக்ஸ்போசிஸ் பாக்ஸ்'. இதன் மேல்பாகம் கண்ணாடியில் மூடப்பட்டு இருக்கும், உட்பாகத்தில் 4 டியூப் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கும். நீங்களே தயார் செய்துகொள்ளலாம்,
அல்லது 3,000 ரூபாய் செலவில் வாங்கிக்கொள்ளலாம்.
அடுத்ததாக, எக்ஸ்போசிஸ் ரசாயனக் கலவை ஸ்க்ரீன், இங்க், சட்டம் முதலியவற்றை 1,500 - 2,000 ரூபாய் செலவில் வாங்கிக் கொள்ளலாம். இவை தவிர, ஒரு மர மேஜை. இப்போது உங்கள் ஸ்க்ரீன் பிரின்டிங் யூனிட் ரெடி.
இனி எப்படி ஸ்க்ரீன் தயார் செய்வது என பார்ப்போம். இதற்காக பெரிய பயிற்சி தேவைஇல்லை. முயற்சித்தால் நீங்களாகவே கற்றுக் கொண்டுவிட முடியும். ஆம், வீட்டில் இருந்தே செய்யும் அளவுக்கு மிக எளிமையானதுதான் இதன் செய்முறை.
எந்தப் பொருள் மீது அச்சு தேவையோ, அதற்கான ஸ்க்ரீனை தேர்வு செய்து எடுத்துக்கொள்ளுங்கள். பிரின்ட் செய்ய வேண்டியதை கம்ப்யூட்டர் சென்டரில் வடிவமைத்து, அதை ஸ்க்ரீன் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் தயார் செய்யும் டிரேஸ் பேப்பரில் பிரின்ட் செய்து கொள்ளுங்கள் (சாதாரண பிரின்டர் மூலமாகவே இதை பிரின்ட் எடுக்க முடியும்). ஸ்க்ரீன் மீது எக்ஸ்போசிஸ் கெமிக்கலை தடவி, காய்ந்த உடன் டிரேஸ் பிரின்ட் செய்த மேட்டரை, ஸ்க்ரீனுடன் இணைத்து எக்ஸ்போசிஸ் பெட்டி யின் கண்ணாடி மீது வைத்து, டியூப் லைட்டுகளை எரியவிட்டு எக்ஸ்போஸ் செய்யவும். சிறிது நேரத்தில் உங்கள் பிரின்ட்டிங் ஸ்க்ரீன் ரெடி!
இரண்டு அல்லது மூன்று நிறங்களிலும் பிரின்ட் செய்யலாம். தேவையான சட்டத்தில் ஸ்க்ரீனை ஒட்டி, தேவையான கலர் இங்க்கை கொண்டு பை மீது ஸ்க்ரீன் பிரின்ட்டிங் செய்யலாம். ஒவ்வொரு பிரின்ட்டிங் முடிந்த உடன் காய வைத்த பின்னரே பைகளை ஒன்றாக அடுக்க வேண்டும்.
இதற்கான பொருட்கள் அனைத்தும் சென்னை, கோவை, திருச்சியில் கிடைக்கும். திருச்சியில் அல்லிமால் வீதியில் பல கடைகள் உள்ளன. 'நான் ஓவன்’ பேக், ஃபைல் பிரின்ட்டிங் செய்ய உள்ளதாக குறிப்பிட்டுள்ள நீங்கள், அதற்கான ஸ்க்ரீனை வாங்கி உபயோகப்படுத்துங்கள். அதிக எண்ணிக்கையில் உற்பத்தியைக் குவிக்க, செமி ஆட்டோமேட்டிக் இயந்திரங்களும் உள்ளன.

 ஒரு லட்சம் முதல் பல லட்சம் வரை விலை இருக்கும். பயிற்சியைப் பொறுத்தவரை, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் கட்டணப் பயிற்சியை திருச்சி, தஞ்சா வூரில் பெறலாம். மேலும், இந்தப் பொருட்களை விற்பனை செய்பவர்களே பயிற்சிக்கும் ஏற்பாடு செய்வார்கள்.
அடுத்ததாக, நேம் கீ செயின் பற்றி கேட்டிருந்தீர்கள். இதுவும் மிக எளிதான முறைதான். தேவையான பிளாஸ்டிக் கீ செயினை பல்வேறு மாடல்களில் வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பிளாஸ்டிக் வடிவத்தின் மீது வாடிக்கையாளர்களின் பெயர் பதித்துக் கொடுக்கும் இந்த முறைக்கு, ஒரு ஹேண்ட் பிரஸ் (பெஞ்ச் டைப்) எந்திரம் சிறிய அளவில் கிடைக்கும். அதன் கைப்பிடியை மேலும் கீழும் தளர்த்தினால், எந்திரத்தின் மத்திய பகுதி மேலும் கீழும் வரும். இந்த அமைப்பில் கீழே ஒரு படிவ அச்சும், மேலே பெயர் சேர்த்து மாட்டும் ஒரு அச்சும் சேர்க்க வேண்டும். இந்த அச்சுகளை தனியாக ஆர்டர் கொடுத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

 இப்போது உங்கள் பிளாஸ்டிக்கை கீழ் அச்சில் வைக்கவும். மேலே பெயர் பொருந்திய அச்சை 100 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் சூடேற்றுவதற்காக, சூடேற்றும் ஹீட்டரைப் பொருத்திக் கொள்ளுங்கள். பெயர் பொருத்திய டை மற்றும் பிளாஸ்டிக் கீ செயின் இடையில் கோல்ட் ஃபாயிலை வையுங்கள். இப்போது கோல்ட் ஃபாயில் மீது அழுத்தினால், கீ செயினில் உள்ள பிளாஸ்டிக்கில் வாடிக்கையாளரின் பெயர் படிந்துவிடும்.
இந்த எந்திரம், கோல்ட் ஃபாயில் அனைத்தும் சென்னை, திருச்சி, கோவையில் எந்திரங்கள் விற்பனை செய்பவர்களிடம் கிடைக்கும். இதுபோன்ற குறைந்த முதலீட்டில் செய்யும் தொழில்களுக்கு நல்ல வருமானம் உள்ளது. அனைத்து வேலைகளையும் நாமே செய்வதால் லாபமும் அதிகம். எனவே, நல்ல தொழில் செய்ய முடிவெடுத்திருக்கும் உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!''

Thursday, October 2, 2014

பிஸ்கட் தயாரிப்பு,ஏற்றுமதியும் செய்யலாம்நொறுக்குத் தீனி வகைகளில் பிஸ்கெட்டுக்கு உள்ள இடத்தை வேறு எதனாலும் பூர்த்தி செய்ய முடியாது. டீ, காபியோடு ஒன்றிரண்டு பிஸ்கெட்களை சாப்பிடுவது என்பது அன்றாட உணவு விஷயங்களில் பழகிப்போன ஒன்று. எளிதில் ஜீரணமாகிவிடும் என்பதால் குழந்தைகள், வயதானவர்கள் என அனைவரும் விரும்பிச் சாப்பிடும் சிறந்த உணவாக இருக்கிறது.
விர, சில மாதங்கள்வரை வைத்திருந்து விற்றாலும் பொருள் கெடாது என்பது இதிலுள்ள இன்னொரு பெரிய பிளஸ் பாயின்ட். விதவிதமான சுவையோடு, தரமாகவும் பிஸ்கெட் தயார் செய்து கொடுத்தால் மார்க்கெட்டில் நமக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்பதற்கு நம்மூர் பேக்கரிகள் நல்ல உதாரணம். அதுவே புதிய தொழில்நுட்பங்களோடு இறங்கும்போது பிராண்டட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு இத்தொழிலில் சாதிக்க வும் நிறையவே வாய்ப்புள்ளன.  
சந்தை வாய்ப்பு!

பெருநகரம், சிறுநகரம் மற்றும் கிராமப்புறங்கள் என சந்தை வாய்ப்புகளை மூன்று விதமாகப் பிரிக்கலாம். பெருநகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் சந்தையை பிராண்டட் தயாரிப்புகள் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும், கிராமப்புற மற்றும் மிகச்சிறிய நகரங்களின் சந்தையை லோக்கல் தயாரிப்புகள்தான் கைகளில் வைத்திருக்கின்றன. புதிதாக தொழிலில் இறங்கும்போது இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது சுலபம். முக்கியமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், டீக்கடைகள், நெடுஞ்சாலை உணவகங்கள் போன்ற இடங்களில் அதிகளவிலான விற்பனை வாய்ப்புகள் உள்ளது. 50-60 கிலோ மீட்டருக்குள் இருக்கும் இதுபோன்ற இடங்களை மையப்படுத்தி டெலிவரி வேன் மூலம் விற்பனையைப் பெருக்கலாம்.  
தயாரிப்பு முறை!
சுலபமான தயாரிப்பு முறைதான். கோதுமை மாவு அல்லது மைதா மாவுடன் சர்க்கரை, பால், வனஸ்பதி,  போன்ற மூலப்பொருட்கள் சேர்த்து பிசைந்து, சாதாரண வெப்பநிலையில் இரண்டு மணி நேரம் வைத்திருக்க வேண்டும். பிறகு 'டவ் மெஷின்’ மூலம் பூரி மாவு பதத்திற்கு கொண்டுவந்து, பிஸ்கெட் மோல்டிங் டிரேக்களில் வைத்து சரியான வெப்பநிலையில் சூடுபடுத்த வேண்டும். பதத்திற்கு வந்ததும் எடுத்து ஆறவிட்டு, பாக்கெட்களில் அடைத்தால் பிஸ்கெட்டுகள் விற்பனைக்குத் தயார்.
தரக்கட்டுபாடு
உணவு பதப்படுத்துதல் மற்றும் உணவுக் கலப்படத் தடுப்புத் துறைகளிலிருந்து அனுமதி பெறவேண்டும்.
நிலம் மற்றும் கட்டடம்!
இந்தத் தொழிலுக்கு குறைந்த பட்சம் 800 சதுரஅடி இடம் தேவைப்படும். நிலமாக வாங்கி கட்டடம் கட்டுவதற்குப் பதிலாக, கட்டடமாக வாங்குவது நல்லது. தேர்ந்தெடுக்கும் இடத்துக்கேற்ப விலை நிலவரம் இருக்கும். பிஸ்கெட் தயாரிக்க 400 சதுர அடி இடமும் மீதமுள்ள இடத்தில் பேக்கிங் மற்றும் சில்லறை விற்பனை செய்வதற்கும் பயன் படுத்தலாம். இதற்கு ரூபாய் 1.25  லட்சம் வரை செலவாகும்.
இயந்திரம்!
ஐம்பது டன் உற்பத்தி என்ற இலக்கு வைக்கலாம். ஆண்டுக்கு 330 வேலை நாட்கள், தினமும் 12-14 மணி நேரம் வேலை செய்தால் இந்த இலக்கை எட்டலாம். இயந்திரங்கள் புதுடெல்லி, செகந்தராபாத் போன்ற இடங்களில் கிடைக்கும். சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் மாவு பிசைவதற்கு வேலை ஆட்கள் வைத்துக் கொள்ளலாம். இது செலவை சற்று குறைக்கும்.

கூடுதல் செலவுகள்!
தயாரிப்பு செலவு மட்டுமல்லாமல் ஃபர்னிச்சர், அளவை சரி பார்க்கும் இயந்திரம், பேக்கிங் செய்ய, ஸ்டோர் செய்து வைக்க என்ற வகையில் 90,000 ரூபாய்வரை செலவாகும். தினமும் 20 ஹெச்.பி. மின்சாரமும், 500 லிட்டர் தண்ணீரும் தேவை.
மூலப் பொருள்கள்!
கோதுமை மாவு, மைதா மாவு, ஈஸ்ட், நெய் அல்லது வனஸ்பதி, சர்க்கரை, பால் அல்லது பால் பவுடர், உப்பு மற்றும் உணவு கலர் இவைதான் மூலப்பொருள். எல்லாமே தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கக்கூடிய பொருள்தான்; அதனால் உற்பத்தியில் தொய்வு இருக்காது.
வேலையாட்கள்!
முன்னனுபவம் உள்ள நபர் - 1
உதவியாளர்கள் - 2
விற்பனையாளர் - 1
வேன் அல்லது சிறிய ஆட்டோ ஓட்டத் தெரிந்த விற்பனையாளர் ஒருவர் என மொத்தம் ஐந்து நபர்கள் வேலைக்குத் தேவைப்படுவார்கள்.

உற்பத்திக்கு முந்தைய செலவுகள்!
நிர்வாகச் செலவுகள், சட்டப்பூர்வமான கட்டணங்கள், தொழில் தொடங்குவதற்கு முந்தைய முதலீட்டுக்கான வட்டி என 50,000 ரூபாய் செலவாகும்.
மானியம்
இத்தொழில் சிறுதொழிலுக்கு கீழ் வருவதால் மத்திய அரசிடமிருந்து மானியம் கிடைக்கும்.
சுறுசுறுப்பாக செயல்பட நினைக்கும் இளைஞர்களுக்கு ஏற்ற தொழில் இது என்பதால் இதில் தாராளமாக இறங்கி, முன்னேற்றம் காணலாம்!
-பானுமதி அருணாசலம்
''அவசரத்துக்குப் பசியைத் தணிக்கவும், நொறுக்குத் தீனியாகவும் பிஸ்கெட் சாப்பிடும் பழக்கம் இருப்பதால் இந்தத் தொழிலுக்கு எப்போதுமே டிமாண்ட்தான். அதேநேரத்தில் பெரிய எம்.என்.சி. நிறுவனங்களும் லோக்கல் பிராண்ட்களுக்கு நிகராக குறைந்த விலையில் விற்பனை செய்ய இறங்கிவிட்டதையும் சமாளிக்க வேண்டும். விதவிதமான சுவைகளுடன், வித்தியாசமான மார்க்கெட்டிங் உத்திகளோடு இறங்கினால் இந்தப் போட்டியை சமாளிக்கலாம், தனியரு அடையாளமும் பெறலாம். அத்துடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் வாய்ப்புகள் உள்ளது. தென்ஆப்பிரிக்க நாடுகளில் நமது தயாரிப்புகளை விரும்பி வாங்குகின்றனர்.
இந்த பிஸினஸில் இருக்கும் டிமாண்டை போலவே சில ரிஸ்க்கான விஷயங்களும் இருக்கிறது. முன்பு சிறுதொழிலாக பிஸ்கெட் தயாரிப்பவர்களுக்கு மானிய விலையில் கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற மூலப்பொருட்களை அரசு கொடுத்து வந்தது. ஆனால், தற்போது மானிய விலையில் கொடுப்பதில்லை. மூலப்பொருட்களின் விலை ஏறியுள்ளதால் மீண்டும் மானிய விலையில் அவைகளை வழங்கினால் ஏற்றுமதி செய்வதற்குக் கூடுதல் பலனாக இருக்கும். இந்த ரிஸ்க் அனைத்தையும் சமாளித்து பிஸ்கெட் தயாரிப்பில் நிலைத்துவிட்டால் நீங்களும் பிராண்டட் நிறுவனமாக வளரலாம்.''

சிறுதானிய பிஸ்கெட்

சிறுதானியங்களின் மீதான மக்களின் அக்கறையும் ஆர்வமும் அதிசயிக்க வைக்கின்றன. நீரிழிவு, பருமனால் பாதிக்கப்பட்டோர் மட்டுமே சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டது போக, இன்று ஆரோக்கியமாக வாழ ஆசைப்படுகிற அத்தனை பேரின் மெனுவிலும் அவை இடம்பெறத் தொடங்கியிருக்கின்றன. இட்லி, தோசை, உப்புமா, அடை உள்ளிட்ட அத்தனை உணவுகளையும் சிறுதானியங்களிலும் செய்ய முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். சென்னையைச் சேர்ந்த அக்சீலியா அஷோக், சிறுதானியங்களில் சுவையான பிஸ்கெட் மற்றும் குக்கீஸ் செய்து அசத்துகிறார்!

‘‘பிளஸ் டூ படிச்சிருக்கேன். பியூட்டிஷியன் கோர்ஸ், டெய்லரிங்னு பொழுதுபோக்கா கத்துக்கிட்ட பல விஷயங்கள்ல பேக்கரியும் ஒண்ணு. ஆரம்ப காலத்துல எல்லாரும் செய்யற மாதிரி மைதா உபயோகிச்சுதான் பிஸ்கெட் பண்ணிட்டிருந்தேன். சிறுதானிய உணவுகள் பத்தின ஒரு பயிற்சி வகுப்புக்குப் போனதுலேருந்து, அதைப் பத்தின விழிப்புணர்வு அதிகமாச்சு. ‘சாதாரணமா நாம சாப்பிடற எல்லா உணவுகளையும் சிறுதானியங்கள்லயும் பண்ண முடியும்’னு அந்தப் பயிற்சியில சொன்னாங்க. அதை வச்சு நானே, சிறுதானியங்கள்ல பிஸ்கெட் வருமானு முயற்சி பண்ணிப் பார்த்தேன். வழக்கமான பிஸ்கெட்டுகளைவிட பிரமாதமா வந்தது. 

சாம்பிள் கொடுத்துப் பார்த்ததுல அக்கம்பக்கத்து வீட்டாருக்குப் பிடிச்சுப் போய், உடனடியா ஆர்டர் கொடுத்தாங்க. இப்ப சாதாரண பிஸ்கெட் வகைகளைவிட, சிறுதானிய பிஸ்கெட் செய்யறதுலதான் நான் பிஸி’’ என்கிற அக்சீலியா, கேழ்வரகு, திணை, கம்பு, கோதுமை, பலதானியக் கலவை என 5 வகைகளில் பிஸ்கெட் செய்கிறார். இனிப்பும் கொழுப்பும் கம்மியான இந்த பிஸ்கெட்டுகளை வயதானவர்கள், நோயாளிகள், டயட் செய்கிறவர்களும் தைரியமாக சாப்பிடலாம்.

‘‘கம்பு, கேழ்வரகு, திணை, கோதுமை, ஆர்கானிக் சர்க்கரை, வெண்ணெய், உப்புனு எல்லாமே தரமானதா பார்த்து வாங்கணும். டயட் பிஸ்கெட்டுங்கிறதால, அதிக வெண்ணெயோ, இனிப்போ சேர்க்கறதைத் தவிர்க்கறது நல்லது. ஓடிஜி அல்லது மைக்ரோவேவ் அவன் அவசியம். மற்ற பொருட்களுக்கு 500 ரூபாய் முதலீடு போதும். இதர பிஸ்கெட் வகைகளைப் போல இதை மொத்தமா செய்து வச்சுக்கிட்டு, விற்க முயற்சி பண்ணக் கூடாது. ஆர்டர் எடுத்துட்டு, அதுக்கேத்தபடி ஃப்ரெஷ்ஷா பண்ணிக் கொடுக்கலாம். சூப்பர் மார்க்கெட், பேக்கரிகளுக்கும் சப்ளை பண்ணலாம். 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற அக்சீலியாவிடம் 5 வகையான சிறுதானிய பிஸ்கெட்டுகளை ஒரே நாள் பயிற்சியில் கற்றுக் கொள்ள கட்டணம் 750 ரூபாய். 98431 80300

பேப்பர் நகைகள்

பொற்செல்வியின் நகை கலெக்ஷனில் தோடு, ஜிமிக்கி, வளையல், செயின், பிரேஸ்லெட், மோதிரம், கொலுசு என எல்லாம் இருக்கின்றன. பார்ப்பதற்கு  ஆடம்பரமாகக் காட்சியளிக்கிற அவற்றைக் கையில் எடுத்துப் பார்த்தால், கனமின்றி இருக்கின்றன. ‘‘அத்தனையும் பேப்பர் ஜுவல்லரி’’ என அசத்தல்  பதில் தருகிறார் பொற்செல்வி. நம்ப முடியவில்லை. அத்தனை நேர்த்தி... அத்தனை கலர்ஃபுல்!

‘‘எம்.பி.ஏ. படிச்சிருக்கேன். குடும்பச் சூழல் காரணமா வேலைக்குப் போக முடியலை. எம்பிராய்டரி, ஃபேஷன் ஜுவல்லரினு நிறைய கத்துக்கிட்டேன்.  அதுல பேப்பர் ஜுவல்லரியும் ஒண்ணு. அதிக முதலீடு தேவைப்படாத தொழிலா இருந்ததால அதையே இப்ப முழுநேர பிசினஸா பண்ணிட்டிருக்கேன்’’  என்கிற பொற்செல்வி, கற்பனையும் கலர்களோடு விளையாடும் திறனும் இருப்பவர்களுக்கு இந்தத் துறையில் பெரிய லாபம் காத்திருப்பதைக்  குறிப்பிடுகிறார்.‘‘தங்கம், வெள்ளியை விரும்பாத காலேஜ் பொண்ணுங்களுக்கும் சரி, சிம்பிளான ஜுவல்ஸ் போட நினைக்கிற வேலைக்குப்  போறவங்களுக்கும் சரி, பேப்பர் ஜுவல்லரிதான் சரியான சாய்ஸ். செய்யறதும் சுலபம். 

ஒவ்வொரு டிரெஸ்ஸுக்கும் மேட்ச்சா நாலஞ்சு செட் வச்சுக்கலாம். 25 முதல் 30 ஷேப்ஸ் பண்ணலாம். ‘பேப்பர் நகையா? வியர்வையோ, தண்ணியோ  பட்டா பாழாயிடாதா‘ங்கிற சந்தேகம் வர்றது சகஜம். அப்படி நடக்காம இருக்க நகைகள் மேல வார்னிஷ் கொடுக்கலாம். தோடு, ஜிமிக்கி, பிரேஸ்லெட்,  வளையல், பென்டென்ட் வச்ச செயின், மோதிரம், கொலுசுனு சாதாரண ஜுவல்லரியில கிடைக்கிற எல்லாத்தையும் பேப்பர்ல பண்ண முடியும்.  பார்க்கிறதுக்கு பேப்பர் நகைகள் மாதிரியே தெரியாது’’ என்கிறவர், 500 ரூபாய் முதலீட்டில் பேப்பர் ஜுவல்லரி பிசினஸில் இறங்கலாம் என நம்பிக்கை  தருகிறார்.

‘‘குவில்லிங் ஸ்ட்ரிப்புகள் (வேற வேற அளவுகளில்), குவில்லிங் செட், பசை, தோடுக்கான கொக்கி, செயினுக்கான கயிறு மற்றும் ஸ்பிரிங், பிளெயின்  வளையல், கொலுசுக்கான ஹூக், மோதிரத்துக்கான பேஸ், டிசைன்களுக்காக குவில்லிங் புத்தகம்னு எல்லாத்துக்கும் சேர்த்து 500 ரூபாய் முதலீடு  போதும். குவில்லிங் பேப்பர் ஸ்ட்ரிப்பா கிடைக்கும். ஒரு செட்ல 100 ஸ்ட்ரிப்ஸ் இருக்கும். அதுல 5 முதல் 9 செட் பேப்பர் ஜுவல்ஸ் பண்ணலாம்.  ஒரு நாளைக்கு 3 செட் நகைகளை முழுமையா முடிக்கலாம். அளவு, டிசைனை பொறுத்து இந்த நகைகளை 20 ரூபாய்லேருந்து 300 ரூபாய்  வரைக்கும் விற்கலாம். 50 சதவிகிதம் லாபம் நிச்சயம்’’ என்கிற பொற்செல்வியிடம், ஒரே நாள் பயிற்சியில் பேப்பர் ஜுவல்லரி கற்றுக் கொள்ள  தேவையான மெட்டீரியல்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,500 ரூபாய். 91763 29517

காய்கறி ஜூஸ்

பழங்களில் ஜூஸ் தயாரிப்பதைப் போலவே காய்கறிகளிலும் தயாரிக்கலாம் என்கிற விவரம் பலருக்கும் தெரியாது. கேரட், நெல்லிக்காய் போன்ற ஒரு  சிலதில் மட்டுமே ஜூஸ் தயாரிக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கிற அவர்களுக்கு பலவிதமான காய்களில் பலவிதமான ஜூஸ் தயாரிக்க  முடியும் எனப் புதிய தகவல் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஜெகதா!

‘‘நான் குழந்தையா இருந்தப்ப, வீட்ல யாருக்காவது வயிற்றுவலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம்னா எங்கம்மா, பாட்டியெல்லாம் உடனடியா காய்கறி  ஜூஸ் பண்ணித் தருவாங்க. உதாரணத்துக்கு தலைசுற்றல், வாந்திக்கு இஞ்சியும் எலுமிச்சையும் சேர்த்த ஜூஸ், வெயிலுக்கு வெள்ளரிக்காய் ஜூஸ்னு  எல்லா காய்கள்லயும் ஜூஸ் பண்ணித் தருவாங்க. அப்படித்தான் எனக்கும் ஆர்வம் அதிகமாச்சு. வளர்ந்த பிறகும் என்னோட அந்த ஆர்வம்  தொடர்ந்தது. நிறைய சமையல் போட்டிகள்ல கலந்துக்கிட்டு, அங்கல்லாம் காய்கறி ஜூஸ் டெமோ பண்ணிக் காட்டுவேன். 

முதல்ல காய்கறியில ஜூஸானு தயக்கத்தோட பார்க்கிறவங்க, அதைக் குடிச்சுப் பார்த்ததும் ஆர்வமாகிடுவாங்க. காய்கறியோட பச்சை வாசனையோ,  கசப்புத் தன்மையோ இல்லாம சுவையா தயாரிக்க முடியும்ங்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டு உற்சாகமாயிடுவாங்க...’’ என்கிற ஸ்ரீஜெகதா, காய்கறிகளில்  ஜூஸ் தயாரிப்பதில் பல வருடங்களாக பயிற்சியும் அளிக்கிறார்.‘‘மாங்காய், முள்ளங்கி, முட்டைக்கோஸ், புதினா, பூசணிக்காய்னு நாம தினமும்  சமையலுக்குப் பயன்படுத்தற காய்கறிகளுக்கான செலவு மட்டும்தான் மூலதனம். வசதி இருக்கிறவங்க ஜூஸர் உபயோகிக்கலாம். இல்லாதவங்க  மிக்ஸியை வச்சே செய்யலாம். 200 ரூபாய் முதலீடு போதும். 


50 சதவிகித லாபம் உறுதி. எடை குறைப்புக்கு பூசணிக்காய், வாழைத் தண்டு, குளிர்ச்சிக்கு வெள்ளரிக்காய், நோய் எதிர்ப்பு சக்திக்கு தக்காளி,  நெல்லிக்காய், யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு வாழைத் தண்டு, முள்ளங்கி, கால்சியம் பற்றாக்குறைக்கு முட்டைக்கோஸ், பாஸ்பரஸ் குறைபாட்டுக்கு  மாங்காய்னு யாருக்கு என்ன தேவையோ, அதுக்கேத்தபடி தயாரிச்சுக் கொடுக்கலாம். எந்தப் பிரச்னைக்கு என்ன ஜூஸ் கொடுக்கணுங்கிற அடிப்படை  அறிவு அவசியம். பிறகு அதை சுவையா செய்யக் கத்துக்கணும். வீட்ல மொத்தமா செய்து கொடுத்து, பார்க், கடற்கரை ஓரங்கள்ல வாக்கிங்  போறவங்கக்கிட்ட விற்க ஏற்பாடு செய்யலாம்’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 வகையான காய்கறி ஜூஸ் தயாரிப்பை 500 ரூபாய்  கட்டணத்தில் கற்றுக் கொள்ளலாம். 98841 14285

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites