‘நீங்க கட்டாயம் கீரை சாப்பிடணும்...’’
“தினமும் உணவுல கீரையைச் சேர்த்துக்குங்க”
-இன்றைய மருத்துவர்களின் பொதுவான ஆலோசனை இதுவாகத்தான் இருக்கிறது. வந்த நோய்களைக் குணப்படுத்தவும், வரும்முன் காக்கவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாட உணவில் கீரை ஒரு அத்தியாவசியத் தேவையாகி நிற்கிறது. இதனால் சமீபகாலமாக கீரைக்கான சந்தை வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிலும் இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் கீரைக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதைச் சரியாகப் புரிந்துகொண்ட இயற்கை விவசாயிகள் பலரும் கீரை சாகுபடியில் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள்.
கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் இருக்கும் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற குலசேகர ராமானுஜதாஸன், ஜெயந்தி என்கிற குமுதவல்லி ராமானுஜதாஸயை தம்பதி, இயற்கைக் கீரை சாகுபடியில் அசத்தி வருகிறார்கள். தன் தகப்பனார் வெங்கிடுசாமியுடன் கீரை அறுவடையில் இருந்த சிவக்குமார், கீரைகளை கட்டுக் கட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
பக்தியில் இருந்து பண்ணைக்கு!
“எங்களுக்கு மொத்தம் பதினோரு ஏக்கர் நிலம் இருக்கு. போர்வெல் மூலமாதான் பாசனம். நான் பி.இ. படிச்சிருக்கேன். கோயம்புத்தூர்ல இயந்திர உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யுற தொழிற்சாலையை நடத்திட்டிருக்கேன். மனைவி ஜெயந்தி எம்.பி.ஏ. படிச்சிருக்காங்க. அவங்கதான் தொழிற்சாலையை நிர்வாகம் பண்றாங்க. அப்பாவுக்கு விவசாயம்தான் தொழில். ஆனா, அவருக்கு இயற்கை விவசாயத்தைப் பத்திய விழிப்பு உணர்வு இல்லை. ரசாயன உரத்தைப் போட்டுத்தான் விவசாயம் பாத்துக்கிட்டிருந்தாரு.
ஒருகட்டத்துல, எங்களுக்கு ஆன்மிகத்துல நாட்டம் ஏற்பட்டுச்சு. தொழில், ஆன்மிகம்னு வாழ்க்கைனு போனதால விவசாயத்தைப் பத்திய நினைப்பே இல்லை.
கிராமத்துல போய் அடிக்கடி அப்பாவை பார்த்துட்டு திரும்புறதோடு சரி. விவசாயம் எல்லாம் அவரோடு போகட்டும் என்கிற நினைப்புத்தான் இருந்திச்சு. ஆனா, நாங்க கலந்துக்குற ஆன்மிகக் கூட்டங்கள்ல, சொற்பொழிவாளர்கள், ஆன்மிகத்தோடு பேச்சை முடிக்காம, இயற்கை வாழ்வியல் அதற்கான உணவு முறை, ஆன்மிகத்தில் பஞ்சகவ்யாவின் பங்களிப்பு பத்தியெல்லாம் பேசுவாங்க. அந்த மாதிரி விஷயங்களைக் கேக்க ஆரம்பிச்சப்பறம்தான் இயற்கை விவசாயம் மேல ஆர்வம் ஏற்பட்டுச்சு. சரியா அந்த நேரம் ‘பசுமை விகடன்’ கிடைக்க ஆரம்பிச்சதும், எங்கள முழுநேர விவசாயியா, அதுவும் இயற்கை விவசாயியா மாத்திக்கிட்டோம்.
இதுக்கான பெருமை மொத்தமும் பசுமை விகடனுக்குத்தான். சும்மா வாய் வார்த்தைக்காக சொல்லலை... சத்தியமான உண்மை. அஞ்சு வருஷத்துக்கு முன்ன, கோயம்புத்தூர் கொடீசியா அரங்குல நடந்த விவசாயக் கண்காட்சிக்குப் போனோம்.
அங்க, விகடன் ஸ்டாலைப் பாத்துட்டு சக்தி விகடனுக்கு சந்தா கட்டலாம்னு போனோம். அங்கதான் பசுமை விகடனை முதன்முதலா பார்த்தோம். அப்படியே பசுமை விகடனுக்கும் சந்தா கட்டுனோம். தொடர்ந்து படிக்க படிக்க, இயற்கை விவசாயத்து மேல பெரிய மரியாதை வந்துடுச்சு. 11 ஏக்கர் நிலத்தை வெச்சிருக்கிற நாம ஏன் இயற்கை விவசாயம் பண்ணக்கூடாதுனு தோணுச்சு. கிராமத்துக்குப்போய் அப்பாகிட்ட விஷயத்தைச் சொன்னோம்.
மகன் விவசாயம் பார்க்க வந்ததுல ஒரு பக்கம் மகிழ்ச்சி. அதே நேரம் ரசாயன விவசாயத்தை விடுறதுக்கு அவருக்கு மனசில்ல. யூரியா, காம்ப்ளக்ஸ், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தினால்தான் விளைச்சல் நல்லா வரும்னு தீர்மானமா இருந்தார். ‘மூணு ஏக்கர் நிலத்தை எனக்குக் கொடுங்க, நான் இயற்கை முறையில விவசாயம் பண்ணிக்காட்டுறேன்’னு சொல்லி தரிசா கிடந்த நிலத்தை வாங்கி, இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன்” என்று முன்கதை சொன்ன சிவக்குமார் தொடர்ந்தார்.
மனமாற்றத்தை ஏற்படுத்திய இயற்கை!
“முதல்ல நான் செஞ்ச வேலை நாட்டு மாடு வாங்கினதுதான். அடுத்து தினம் வருமானம் கொடுக்குற பயிரா இருக்கணும்னு யோசிச்சு கீரை சாகுபடி பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருந்துச்சு. பழகப்பழக எல்லாம் சரியாயிடுச்சு. ரசாயன விவசாயம்தான் ஏற்றதுனு சொல்லிட்டிருந்த அப்பாவும், இப்ப இயற்கைப் பக்கம் சாய்ஞ்சிட்டாரு. அவரும் இப்போ பசுமை விகடனுக்கு தீவிர வாசகர். அடுத்ததா, மரவள்ளி, வாழை, பப்பாளினு மீதமுள்ள நிலத்துலயும் இயற்கை விவசாயம் பண்ணலாம்னு முடிவெடுத்திருக்கோம்” என்று சொன்ன சிவக்குமாரைத் தொடர்ந்து பேசினார், அவர் மனைவி ஜெயந்தி.
ஒன்பது வகை கீரைகள்... 400 வாடிக்கையாளர்கள்!
“ஆரம்பத்துல கீரைக்கட்டுகளை கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம்னு தினசரி மார்கெட்டுகள்லதான் கொண்டு போய் விற்பனை செய்தோம். அதுல கிடைக்கிற வருமானத்துல, இடைத்தரகர் கமிஷன், வேன் வாடகை, ஆள்கூலினு பாதி பணம் போயிடும். அந்த வியாபாரிகள்கிட்ட இயற்கை கீரைக்கெல்லாம் தனிமரியாதை கிடைக்கலை. அதுக்கப்பறம்தான் நாங்களே நேரடி விற்பனையில இறங்குனோம். இப்ப நாலு வருஷம் முடியப்போகுது. நானூறுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் எங்களுக்கு இருக்காங்க.
வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை, பாலக்கீரை, மணத்தக்காளிக் கீரை (சுக்கட்டி), அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரைனு 9 வகை கீரைகளை சாகுபடி பண்றோம். மூணு ஏக்கர்ல சுழற்சி முறையில கீரை சாகுபடி பண்றோம். ஒரு நாளைக்கு 200 கீரைக்கட்டுக்களை நேரடியா விற்பனை செய்றோம். எல்லா ரக கீரைக்கும் ஒரே விலைதான். எதை எடுத்தாலும் கட்டு 15 ரூபாய்னு கொடுக்கிறோம். அந்த வகையில தினமும் 3 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. மாசத்துல 25 நாட்கள் மட்டும்தான் விற்பனை செய்றோம். ஆக, மாதம் 75 ஆயிரம் ரூபாய் வருமானம் பாக்குறோம். சுழற்சி முறையில ஒரு ஏக்கருக்கான வருமானம் இது. இதுல, செலவுக்காக 25 ஆயிரம் ரூபாய் போனாலும் மாசம் 50 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்குது. மார்க்கெட்டுல விற்பனை செய்றதை விட நேரடி விற்பனையில ரெண்டு மடங்கு லாபம் கிடைக்குது” என்றார்.
நிறைவாகப் பேசிய சிவக்குமார், “என்னதான் தொழில்ல வருமானம் கிடைச்சாலும், விவசாயம் மூலமா கிடைக்குற வருமானம்தான் மனசை நிறைவாக்குது. வாடிக்கையாளர்களுக்கு கீரையை மட்டும் கொடுக்காம, இயற்கை வேளாண்மை, விஷமில்லா உணவு குறித்த விழிப்பு உணர்வையும் ஏற்படுத்திக்கிட்டு வர்றோம். இயற்கைக் கீரை, 48 மணி நேரத்துக்கு வாடாம இருக்கு. அதனால, இதை ஏற்றுமதி செய்ற யோசனையும் இருக்கு. அதுக்கான வாய்ப்புகளும் கிடைச்சிருக்கு” என்றார், மகிழ்ச்சியுடன்.
தொடர்புக்கு,
சிவக்குமார்,
செல்போன்: 95971-68857
இப்படித்தான் சாகுபடி செய்யணும்!
கீரை சாகுபடி பற்றி சிவக்குமார் சொன்ன விஷயங்கள் பாடமாக....
“தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை உழுது தக்கைப்பூண்டு விதைத்து, பூவெடுக்கும் நேரத்தில் ரோட்டோவேட்டர் மூலம் மடக்கி உழவு செய்ய வேண்டும். பிறகு, ஒரு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்துடன், 4 டன் ஆட்டுஎருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து பாத்திகள் அமைக்க வேண்டும்.
ஒரே முறை அறுவடையாகும் கீரைகளின் வயது அதிகபட்சம் 25 நாட்கள். தொடர் அறுவடை வகை கீரைகளின் வயது ஆறு மாதங்கள். கீரை விதைகளோடு மணல் கலந்து, பாத்திகளில் தூவி, கையால் கிளறி விட்டு, பாசனம் செய்ய வேண்டும். 6-ம் நாளில் முளைவிடும். அந்த சமயத்தில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விடவேண்டும்.
கீரைகளில் பூச்சிகள் தாக்க வாய்ப்புண்டு. இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் சம அளவில் எடுத்து, இடித்து ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து... 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, 10 நாட்களுக்கு ஒரு முறை அதிகாலை வேளைகளில் தெளித்தால் பூச்சிகள் தாக்காது. இது ஒரே முறை அறுவடையாகும் கீரைகளான வெந்தயக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகியவற்றுக்கு பலனளிக்கும். இந்தக் கீரைகளை 25 நாட்களுக்கு மேல் பறித்து விற்பனை செய்யலாம்.
பாலக்கீரை, மணத்தக்காளி, அரைக்கீரை, புளிச்சக்கீரை போன்றவற்றை விதைத்த 30 முதல் 35 நாட்களில் அறுவடை செய்யலாம். இதே இடைவெளியில் தொடர்ந்து ஆறுமாதங்கள் வரை அறுவடை செய்யலாம். இந்த ரக கீரைகளில் பூச்சிகளைச் சமாளிக்க... நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருந்து, 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.