இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Wednesday, August 27, 2014

ஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்..

விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே! இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.
விருதுநகரில் இருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரலொட்டி கிராமத்திலிருக்கிறது தண்டபாணிக்குச் சொந்தமான ‘சுமதி பழத்தோட்டம்’. நாம் அங்கே சென்றிருந்த நேரத்தில் ஆட்டுக்கு அகத்திக் கீரையைப் பறித்து கொடுத்துக் கொண்டிருந்தவர், அதைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.
”பி.காம் வரைக்கும் படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட எங்களுக்குச் சொந்தமான காய்கறிக் கடையில வியாபாரத்தைப் பார்க்க வந்துட்டேன். பரம்பரையாவே காய்கறிக் கடைதான்கிறதால, மிச்சமாகிற காய்கறி, பழங்களை எல்லாம் வீட்டுல வளர்க்கிற ஆடு, மாடுங்களுக்குப் போடுவோம். சின்னவயசுல இருந்தே கோழி, ஆடு, மாடுங்கனா ரொம்ப இஷ்டம். அதுங்கள வளர்க்கறதுல நிறைய ஈடுபாடு காட்டுவேன். இந்த ஆர்வம்தான், இப்ப இந்த 5 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தோட ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வளர்க்கவும் வெச்சிருக்கு” என்று பெருமையோடு சொன்ன தண்டபாணி, தொடர்ந்தார்.
”இந்த நிலத்துல மூணடிக்கு கீழ சுக்காம் பாறை. அதனால, ‘வேற எந்தப் பயிரும் போட முடியாது’னு சொல்லிட்டாங்க. கருவேல மரங்களும், மஞ்சனத்தி மரங்களும் சூழ்ந்து கிடந்த இந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, கல், மண்ணையெல்லாம் நிரவி, 2004-ம் வருஷத்துல ஒரு ஏக்கர் அளவுல காஞ்சன் ரக நெல்லி, ஒண்ணரை ஏக்கர்ல சப்போட்டா, ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரக கொய்யா போட்டேன். 2007-ம் வருஷத்திலிருந்து கோழிப் பண்ணை இருக்கு. ஒன்பது மாசத்துக்கு முன்ன 1 ஏக்கர்ல ரெட் லேடி ரக பப்பாளி நடவு செய்தேன்.
விருதுநகர்ல, 2013-ம் வருஷம் டிசம்பர் மாசம், ‘பசுமை விகடன்’ நடத்தின வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அப்பத்தான் ஆட்டுப் பண்ணை அமைக்கணும்கிற எண்ணம் வந்துச்சு. என்னோட நண்பர் பாலமுருகன் கோயமுத்தூர்ல ஆட்டுப் பண்ணை வெச்சிருக்கார். அவரோட ஆலோசனைப்படியும், ‘அம்மன் ஆட்டுப் பண்ணை’ சதாசிவத்தோட வழிகாட்டுதல்படியும் ஆட்டுப் பண்ணை¬யை அமைச்சுட்டேன். 6 மாசமா ஆட்டுப் பண்ணையும் நடந்துட்டிருக்கு” என்றபடியே நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளி சாகுபடி பற்றியும்… ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புப் பற்றியும் அழகாக அடுக்கத் தொடங்கினார். அதை, இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.
இரண்டு ஆண்டுகளில் மகசூல்!
‘நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளியை இளங்கன்றுகளாகவே நடவு செய்யலாம். இதற்கு, புரட்டாசியில் ஓர் உழவு போட்டு, 18 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். பப்பாளிக்கு 8 அடி இடைவெளியில் குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு தட்டுக்கூடை அளவு செம்மண் கொட்டி, ஒரு வாரம் வரை ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு தட்டுக்கூடை ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டுச்சாணத்தைப் போட்டு வைத்தால், ஐப்பசி மாதம் மழை பெய்யவும் சரியாக இருக்கும்.
1 ஏக்கரில் 125 நெல்லி, ஒன்றரை ஏக்கரில் 170 சப்போட்டா, ஒரு ஏக்கரில் 125 கொய்யா, ஒரு ஏக்கரில் 1,000 பப்பாளிக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். முதல் மூன்று மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர்விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும் (இவர், கொய்யா, பப்பாளி இரண்டுக்கும் வாரம் ஒரு முறையும்; சப்போட்டாவுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும்; நெல்லிக்கு 12 நாட்களுக்கு ஒரு முறையும் வாய்க்கால் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சி வருகிறார்). மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு அரைத் தட்டுக்கூடை என்கிற அளவில், ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரத்தை இட வேண்டும்
(இவரிடம் ஆடு, கோழிக் கழிவுகள் தாராளமாக இருப்பதால், அவற்றை குழியில் சேகரித்து தண்ணீரில் கரைத்து பாசன நீரில் கலந்து விடுகிறார்). முழு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. நெல்லி, சப்போட்டா மற்றும் கொய்யா ஆகியவை இரண்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். பப்பாளி ஒன்பது மாதங்களில் மகசூலுக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் வரை வருமானம் தரும்..
கோழிகளில் கொட்டும் வருமானம்!
கோழிகளுக்கு ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகிதத்தில் இடம் கொடுத்து… நாம் வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் 30 அடி நீளம், 18 அடி அகலம் அளவில் கொட்டகை அமைத்திருக்கிறோம். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவு என்பதால், 500 கோழிகளுக்கும் மேல் வளர்க்கலாம். இப்போது 250 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள் என 400 கோழிகளுடன் 15 வாத்துகள் மற்றும் 20 கின்னிக்கோழிகள் இருக்கின்றன. கோழி, வாத்து, கின்னிக்கோழிகள் ஆகியவற்றுக்கு வளர்ப்பு முறை ஓன்றுதான். இவற்றுக்கு காலை, மாலையில் பிண்ணாக்குக் கலந்த தவிட்டுக் கலவையை உணவாகக் கொடுக் கிறோம். 1 கிலோ தவிட்டுக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்கிற விகிதத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொட்டகைக்குள் ஆறு இடங்களில் வைத்து விடுவோம். முட்டைகோஸ் இலை, காலிஃபிளவர் இலை, என மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இதைத் தவிர புழு, பூச்சிகள், பல்லிகள், வண்டுகளை எல்லாம் கோழிகளே பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளும். இதனால், கொட்டகைக்குள் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கும் செலவு மிச்சம். கோழி மற்றும் வாத்து ஆகியவற்றின் எச்சங்கள்… தோட்டத்துக்கு உரம்தான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது.
அசத்தும் ஆட்டுப் பண்ணை!
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதுதான் நல்லது. கொட்டகை அமைக்கும்போது… பெரிய ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு பத்து சதுர அடி, குட்டி ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு 5 சதுர அடி என்ற அளவில் இடம் கொடுக்க வேண்டும். அதனால், நாம் வளர்க்க இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கொட்டகை இருக்க வேண்டும். நாங்கள், 80 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில், 8 அடி உயரத்தில் கொட்டில் அமைத்து பத்து பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு ஆனது.
ஒரு பிரிவில் பெரிய ஆடு என்றால் 10 முதல் 15 ஆடுகளையும், குட்டி என்றால் 25 முதல் 30 வரையிலும் அடைக்கலாம். இப்போது தலைச்சேரி-47, ஜமுனாபாரி-20, நாட்டு ஆடுகள்-60, பீட்டல் கிடா-1, பீட்டல் ஆடு-1, கோபார் கிடா-1, சேலம் கருப்பு-20, செம்மறி-15 என மொத்தம் 165 ஆடுகள் இருக்கின்றன. ஆடுகளின் எச்சம் கீழே விழுந்துவிடுவதால், சுத்தம் செய்வது எளிது. சாதாரண முறை ஆடு வளர்ப்பு என்றால், பராமரிப்புக்குக் குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர்கள் தேவைப்படும். ஆனால், கொட்டில் முறை என்பதால், 165 ஆடுகளை ஒரே ஆள் பராமரிக்க முடியும்.
தினமும் காலையில் பசுந்தீவனமாக அகத்தி, சோளத்தட்டை, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்கலாம் (இதற்காகவே அரை ஏக்கரில் அகத்தி போட்டிருக்கிறார் தண்டபாணி). மதியத்தில் அடர்தீவனமாக கருக்கா தவிடு, மக்காச்சோளம், சோளம், உளுந்தம்குருணை, துவரைக்குருணை, தாது உப்பு, அயோடின் உப்பு ஆகியவற்றைக் கலந்து, மெஷினில் திரித்து, ஒரு பெரியஆட்டுக்கு 300 கிராம், பெரிய குட்டிக்கு 200 கிராம், சின்ன குட்டிக்கு 150 கிராம் என்கிற அளவில் தினமும் கொடுக்கலாம்.
கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும்போது ஆடுகளுக்கு சரியாகச் செரிமானம் ஆகாமல் கழிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, கொட்டிலுக்கு முன்பாக 100 அடி நீளம் 50 அடி அகலத்தில் வேலி அமைத்து, ஆடுகளைக் காலாற நடக்க வைக்கலாம். கொட்டிலை விட்டு இறங்கி, இந்த வேலிகளுக்குள் மட்டும் ஆடுகள் மேயும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலமாக, ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். குட்டிகள், செம்மறி ஆடுகள், சினையாடுகளை தனித்தனிக் கொட்டகையில் வளர்ப்பது நல்லது.
முயல் பத்தி சொல்லலையா?!
சாகுபடி மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி தண்டபாணி பேசி முடிக்க… ”முயல், புறா, மாடு பத்தியெல்லாம் சொல்லலையா..?” என்று கேட்ட அவருடைய மனைவி சுமதி,
”ஒரு வருஷமா முயல் வளர்க்கிறோம். ஒரு ஜோடி முயல் 300 ரூபாயிலிருந்து விலை போகும். தனித்தனி கூண்டு வெச்சு, காலிஃபிளவர் இலை, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் இதையெல்லாம் உணவா கொடுக்கிறோம். நூத்துக்கணக்குல முயல்களை வளர்த்து வித்துட்டே இருக்கோம். இபபோதைக்கு 12 முயலுங்க இருக்கு. 80 புறாக்கள் இருக்கு. ஜோடி 160 ரூபாய் வரை விலை போகுது. ரெண்டு சிந்தி பசு வாங்கி ஒரு மாசம் ஆகுது. அடுத்ததா மாட்டுப் பண்ணை, லவ்பேர்ட்ஸ், நாய்ப் பண்ணைனு கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்” என்று முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சொன்னார் சுமதி.
பழ மரம்… தரும் பலன்!
நிறைவாகப் பேசிய தண்டபாணி, ”இந்த மண் அத்தனை வளமில்லாத மண்ணா இருந்தாலும், நெல்லியைத் தவிர மத்ததெல்லாம் நல்லாவே வளர்ந்து வருது. நெல்லியில அந்த அளவுக்கு மகசூல் வரல. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ரெண்டு தடவை, அதாவது ஆறு மாசத்துக்கு ஒரு பறிப்பு. மூணு மாதம் வரை மகசூல் இருக்கும். சராசரியா தினமும் 40 கிலோ வீதம் மாசத்துக்கு 1,200 கிலோ. மூணு மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். கிலோ 25 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாய்; கொய்யா, வருஷத்துக்கு ரெண்டு தடவை பறிப்பு வரும். தினமும் 100 கிலோ வீதம், மாசத்துக்கு 3 ஆயிரம் கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால, 9 ஆயிரம் கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 30 ரூபாய் வீதம், 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்; சப்போட்டாவும் வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் கொடுக்குது. தினமும் 90 கிலோ வீதம் மாசத்துக்கு 2 ஆயிரத்து 700 கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால 8 ஆயிரத்து 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் வீதம் 1 லட்சத்தி 62 ஆயிரம் ரூபாய்; பப்பாளி தினமும் 120 கிலோ வீதம் மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா… 10 ஆயிரத்து 800 கிலோ. ஒரு கிலோ 25 ரூபாய் வீதம் 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் 7 லட்சத்தி 92 ஆயிரம் ரூபாய். இதை வருஷத்துக்கு கணக்குப் போட்டா… 15 லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் வரும். செலவைப் பொறுத்தவரை 2 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் வரும். இதைக் கழிச்சா… 13 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.
எனக்கு விருதுநகர் மார்க்கெட்ல கடை இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை. இயற்கைப் பழங்கள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்குறதால ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. தோட்டத்துக்கே வந்தும் வாங்கிட்டு போயிடுறாங்க. அதில்லாம, எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கும் மார்க்கெட்ல கடைகள் இருக்கு. அதனால அன்னன்னிக்கு பறிக்கிறது, அன்னன்னிக்கே வித்து தீந்துடுது. இருப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. புத்தம்புது இயற்கை பழங்கள்ன்றதால விற்பனை சுலபமாயிடுது” என்று பழ மரங்களின் வருவாய் பேசியவர், கால்நடைகளின் வருவாய் பக்கம் வந்தார்.
”கிரிராஜா கோழி 150 இருக்கு. இது மொத்தமுமே முட்டைக்காக மட்டும்தான் வளர்க்கிறேன். நாட்டுக் கோழிகள்ல பெரிய பெட்டைகள் 100 தவிர, மீதியிருக்கிற 150 மட்டும் வளரவளர விற்பனை செஞ்சுடுவேன். தை முதல் பங்குனி வரைக்கும் 3 மாசத்துக்கு கிடைக்கிற முட்டைகளை விற்பனை செய்யுறது கிடையாது. இந்த மாசத்துல அடைக்கு வைப்போம். ஒரு நாட்டுக்கோழி 8 முதல் 10 முட்டை வைக்கும். 100 கோழிக்கு 1,000 முட்டை. இதுல 700 முதல் 750 குஞ்சுகள் வரை பொறிக்கும். 500 முதல் 600 குஞ்சுகள் பெரிய கோழியா வளரும். எப்படியும் மொத்தம் 500 கோழிகள் விற்பனையாகிடும். கோழி ஒண்ணுக்கு 400 ரூபாய் வீதம், 500 கோழிக்கு வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் வரும். கிரிராஜா, நாட்டுக் கோழிகள் மொத்தமா சேர்த்து 400 கோழிகள் இருக்கு. இதன் மூலமா சராசரியா தினமும் 120 முட்டை கிடைச்சுடும். மாசம் 3,600 முட்டை. ஒரு முட்டை பத்து ரூபாய் வீதம் விலை போகுது. இதன்படி பார்த்தா.. 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி ஒன்பது மாசத்துக்கு முட்டை விற்பனை மூலமாவே 3 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முட்டைகளையும் என்னோட கடையில வெச்சே வித்துடறேன்.
கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, மொத்த கோழிகளுக்கும் ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகும். 365 நாட்களுக்கு 54,750 ரூபாய் செலவு பிடிக்கும். கோழி விற்பனை, முட்டை விற்பனை மூலமா 5 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவுத் தொகையைக் கழிச்சா. 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 250 ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக, பழ மரங்கள், கோழி வளர்ப்பு மூலமாவே 18 லட்சத்துக்கு மேல லாபம் கிடைக்கும். முயல், புறா வருமானமெல்லாம் தனி. பழங்கள், கோழி, முட்டைனு எல்லாத்தையும் நான் நேரடியா விக்கிறதாலதான் இந்த விலைக்கு விற்பனை செய்ய முடியுது. இல்லாட்டி இதுல பாதி அளவு ரூபாய்க்குகூட விற்பனை செய்ய முடியாது. அந்த வகையில எனக்குக் கடை இருக்கிறது ஒரு வரப்பிரசாதம்.
வாத்து மற்றும் கின்னிக்கோழிகளை இதுவரை விற்பனை செய்யல. அதேமாதிரி ஆடுகளையும் இன்னமும் விற்பனை செய்ய ஆரம்பிக்கல. கிடைக்கிற குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இப்போதைக்கு நாட்டு ஆடு உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்க்கும், ஜமுனாபாரி கிலோ 350 ரூபாய்க்கும், தலைச்சேரி கிலோ 300 ரூபாய்க்கும் விலை போயிட்டிருக்கு. செம்மறி ஆடுகளை உருப்படிக் கணக்குலதான் வாங்குவாங்க. இன்னும் ஆறு மாசத்துல ஆடுகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சுடுவேன். எப்படி பார்த்தாலும் செலவெல்லாம் போக ஆடுகள் மூலம் மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்” என்ற தண்டபாணி,
”இப்பவெல்லாம் கடும் வறட்சி ஆட்டிப்படைக்குது. 500 அடிக்கு மேல போர் போட்டாகூட தண்ணி வரமாட்டேங்குது. இதனால காய்கறி, பூ இதையெல்லாம் சாகுபடி செய்றது சாத்தியமில்லாம இருக்கு. இதுங்கள காட்டிலும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புல காசு கொட்டுது. இதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு செய்தா… லாபம் நிச்சயம்” என்று நம்பிக்கைப் பகிர்ந்தார்.
நன்றி விகடன்

விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்!


பிரச்னை
வறட்சி, விலைவீழ்ச்சி, ஆள்பற்றாக்குறை போன்ற பல பிரச்னைகள் விவசாயத்தை வாட்டி எடுக்கும் சூழலில்... வெனிலா பீன்ஸ், பேரீச்சை, கோகோ, அகர் மரம் என மாற்றுப் பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள், விவசாயிகள். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கையைக் கடிக்கவே... பலவித சிக்கல்களில் மாட்டிக் கொள்வதோடு, பொருளாதார இழப்புக்கும் உள்ளாகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டம், பொலவக்காளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்.
பேரீச்சை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து, கன்றுகள் வாங்கி நட்டு ஏமாந்த விஷயத்தை, நமது அலுவலகக் குரல் வழிச் சேவையில் பதிவு செய்திருந்தார், சுப்பிரமணியம். அதைத் தொடர்ந்து அவரது தோட்டம் தேடிப்போய் அவரைச் சந்தித்தோம்.
ஒன்பது வருஷமாகியும்...?
''2006-ம் வருஷத்துல, 'பேரீச்சை வளர்த்தா பெரும் லாபம்’னு சில பத்திரிகைகள்ல விளம்பரங்கள் வந்துச்சு. அதைப் பாத்து ஆசை வந்து, அந்த கம்பெனியைத் தேடி தர்மபுரிக்குப் போனேன். அங்க, பேரீச்சை பத்தி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க. 'வறட்சியைத் தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணுலயும் வரும். நட்ட அஞ்சாம் வருஷத்துல மகசூலுக்கு வந்துடும். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 100 கிலோ பேரீச்சை கிடைக்கும். தொடர்ந்து 100 வருஷம் வரை, வருமானம் கொடுக்கிற அமுதசுரபி’னெல்லாம் சொல்லிட்டு 'பேரீச்சையை விக்கிறதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சு தர்றோம்’னும் சொன்னாங்க.
அதை நம்பி ஒரு கன்னு 65 ரூபாய்னு,175 கன்னுகளை வாங்கி, வேன் வெச்சு தோட்டத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பெனிக்காரங்க சொன்ன மாதிரியே,
20 அடி இடைவெளியில நட்டு, களை, உரம், பூச்சிக்கொல்லி, பாசனம்னு முறையாதான் பராமரிச்சுட்டு இருந்தேன். அஞ்சு வருஷத்துக்குள்ள மரமெல்லாம் தளதளனு வளர்ந்துச்சு. 'இன்னிக்கு பூ எடுத்துடும், நாளைக்கு பூ எடுத்துடும்’னு தினமும் குட்டிப்போட்ட பூனை மாதிரி மரங்களையே சுத்திச்சுத்தி வந்தேன். ஆனா, ஒன்பது வருஷம் ஆகியும் பூவும் பூக்கல. பிஞ்சும் பிடிக்கல. அப்படியே அத்தனை மரமும் மலடா நிக்குது. அவங்க 'பில்டப்’ கொடுத்த மாதிரி ஒண்ணுமே நடக்கல. பொறுத்துப் பார்த்துட்டு ஒரு கட்டத்துல கம்பெனிக்கு போன் போட்டேன். 'சில ஊர்கள்ல சீதோஷ்ண நிலை சரியில்லைனா காய்க்கிறதுக்கு 10 வருஷம்கூட ஆகும். அப்ப நல்ல லாபம் பார்க்கலாம். அவசரப்பட்டு மரங்களை அழிச்சுடாதீங்க’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு'' என்ற சுப்பிரமணியம், தொடர்ந்தார்.
குறி வைத்த கூன்வண்டு!
''அவங்க சொன்னதை இன்னமும் நம்பிக்கிட்டு மரங்களைப் பாதுகாத்து பராமரிச்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் பூக்குற அறிகுறி தெரியல. ஆனா, இன்னொரு பிரச்னை ஆரம்பிச்சிருக்கு. சிவப்பு கூன்வண்டுகள் படையெடுத்து வந்து, மரங்கள்ல ஓட்டை போட்டு சேதப்படுத்த ஆரம்பிச்சதுல, தளதளனு இருந்த மரங்களெல்லாம் வாடி வதங்க ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல இருக்குற விவசாய ஆபீஸ்ல போய் சொன்னதுக்கு, 'விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வெச்சுக் கட்டுபடுத்தலாம்’னு சொன்னாங்க. பொறிகளை வெச்சுட்டு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியையும் தெளிச்சேன். ஆனாலும், பிரயோஜனமில்லை. வண்டுகள், பாதி மரங்களை அழிச்சுடுச்சு.
மஞ்சள், கரும்பு, குச்சிக்கிழங்குனு ஒழுங்கா வெள்ளாமை வெச்சு, பத்துக்கு ரெண்டு பழுதில்லாம வருமானம் பாத்துட்டு இருந்தேன். அந்த நிலத்துல பேரீச்சையைப் போட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறேன். மத்த விவசாயிகளுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டுமேனுதான் இதை உங்கக்கிட்ட சொல்றேன்'' என்ற சுப்பிரமணியத்தின் பேச்சில் அக்கறை ததும்பியது!
எல்லா மரங்களையும் எரிச்சிட்டேன்!
இதே அனுபவம்தான் அப்பகுதியைச் சேர்ந்த வீரப்ப கவுண்டருக்கும். ''ஒரு ஏக்கர்ல எழுபது பேரீச்சைச் செடியை நட்டு எட்டு வருஷமாச்சு. காய்ப்பும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை. சிவப்பு கூன்வண்டுகளை ஒண்ணுமே செய்ய முடியல. இந்த மரங்களை அழிச்சது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த என்னோட தென்னந்தோப்புலயும் வண்டுகள் சேதப்படுத்த ஆரம்பிச்சிடுச்சு. விட்டா மொதலுக்கே மோசமாகிடும்னு மொத்த பேரீச்சை மரங்களையும் மெஷின் வெச்சு பிடுங்கி... பக்கத்துல இருக்குற வறட்டுக் குட்டையில போட்டு தீ வெச்சுட்டேன். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி வெச்சிருக்கேன். அதையும் எரிச்சிடுவேன்'' என்று சோகமாகச் சொன்னார், வீரப்ப கவுண்டர்.
வறட்சியைத் தாங்கி வளராது!
பொலவக்காளிப்பாளையத்தில் மட்டுமில்லை. மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பாதிப்புகளே என்பதற்கு சாட்சி சொல்கிறார்... இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படையின் முன்னாள் உதவி ஆணையரும் முன்னோடி விவசாயியுமான கே. தெய்வசிகாமணி.
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பக்கத்துல என்னோட தோட்டம் இருக்கு. 200 பேரீச்சைக் கன்னுகளை வாங்கி நட்டேன். பராமரிப்பும் சரியாத்தான் செஞ்சேன். ஆனா, ஒரு பலனும் இல்லை. 'வறட்சியைத் தாங்கி வளரும்’னு சொன்னதே தப்பு. தென்னைக்கு பாய்ச்சுறதைவிட இதுக்கு அதிக தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கு. இல்லாட்டி மரம் வாடிடுது. இதுல பெரிய சிக்கலே மகரந்தச் சேர்க்கைதான். 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் இருக்கணுங்கிறாங்க. இதை வித்தியாசம் கண்டுபிடிக்கிறது பெரிய சிரமம். அதில்லாம கம்பெனிக்காரங்க கொடுக்குற கன்னுல பாதிக்குப்பாதி ஆண் மரமாத்தான் இருக்கு. இதுல இயற்கையா மகரந்தச் சேர்க்கை நடக்காது. நாமதான் ஒவ்வொரு மரத்துலயும் மகரந்தச் சேர்க்கையைச் செய்யணும். இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.
அறுவடை செஞ்ச பிறகு பழங்களை அப்படியே விற்பனை செய்ய முடியாது. அதைத் தனியா பக்குபவப்படுத்தித்தான் விற்பனைக்கு அனுப்ப முடியும். இதையெல்லாம்கூட சமாளிச்சுடலாம். ஆனா, பூச்சிகளை ஒண்ணுமே செய்ய முடியல. முக்கியமான விஷயம் என்னான்னா... இந்த விவசாயத் துக்கு அரசாங்க உதவிகள் எதுவுமே கிடையாது. சொட்டு நீர், பயிர்க்கடன், உரம், தொழில்நுட்ப உதவினு எதுவும் அரசு தரப்புல கிடைக்கிறதில்லை.
திசு வளர்ப்பும் துன்பமே!
இப்போ, திசு வளர்ப்பு மூலம் கன்னுங்க விற்பனைக்கு வந்திருக்கு. இந்த மரங்கள்ல கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்த வேண்டியதில்லை. பறிச்சு அப்படியே விற்பனைக்கு அனுப்பலாம். ஆனா, விற்பனையில நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு கன்னு 60 ரூபாய்னு விதை நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு திசுவளர்ப்பு நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... பேரீச்சை நட்டா பெருந்துன்பம்தான் வந்து சேரும். இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏத்த பயிர் கிடையாது. நட்ட அஞ்சு வருஷத்துலேயே அத்தனை கன்னுகளையும் நான் பிடுங்கிப் போட்டுட்டேன்'' என்று வேதனை பொங்கச் சொன்னார் தெய்வசிகாமணி.
பராமரிச்சா... லாபம்தான்!
பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்துவரும் தர்மபுரி 'சாலியா நர்சரி' உரிமையாளர் நிஜாமுதீனிடம் பேசியபோது, ''விதைகளை முளைக்க வெச்சு உருவாகுற நாத்துகள்ல மகசூல் கிடைக்க ஏழு வருஷத்துல இருந்து பத்து வருஷம் வரைகூட ஆகும். அதுவரைக்கும் பொறுமையா இருந்தா கண்டிப்பா நல்ல மகசூல் எடுத்து லாபம் பாக்கலாம். இதுல சந்தேகமே தேவையில்லை. அதேமாதிரி விற்பனை வாய்ப்பு பத்தியும் கவலைப்படவே தேவை யில்லை. இப்பகூட நல்ல டிமாண்ட்லதான் போயிட்டிருக்கு. கூன்வண்டு, ஊசிவண்டு, நோய்த் தாக்குதல் எல்லாம் எல்லா பயிர்கள்லயும் வரக்கூடியதுதான். அதுக்கு தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் செஞ்சுக்கணும். சரியான முறையில வாரம் ஒரு தண்ணி கொடுத்து, பராமரிச்சா, பேரீச்சை விவ சாயம் லாபகரமானதுதான்'' என்றவரிடம்,
''நீங்கள் சொல்கிற அத்தனை பராமரிப்பை செய்தும் எந்தப் பலனும் இல்லை என்பதுதானே பொலவக்காளிப்பாளையம் சுப்பிரமணியம் உள்ளிட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டு' என்று கேட்டோம். இதற்கு, ''சுப்பிரமணியம் தோட்டத் துக்கு எங்க கம்பெனியில இருந்து ஒரு விவசாய ஆலோசகரை அனுப்பி ஆலோசனை சொல்லியிருக்கோம். அதை சரியா கடைபிடிச்சா... அவரும் நல்ல மகசூல் எடுக்கலாம்'' என்று விடாமல் பேசியவர்,
''இப்போ நாங்க இறக்குமதி செய்து விற்பனை செய்ற திசு கல்ச்சர் கன்னுகள்ல அமோக விளைச்சல் கிடைக்கும்'' என்று அடுத்தக் கட்டத்துக்கும் அழைப்பு வைத்தார்.
இதுமட்டுமல்லாது, ''எங்கக்கிட்ட கன்னு வாங்கி நட்ட நிறைய பேர் நல்ல மகசூல் எடுத்துட்டு இருக்காங்க. அவங்க நம்பர் தர்றேன். அவங்ககிட்டயே கேளுங்க'' என்று சொல்லி சிலரின் செல்போன் எண்களையும் கொடுத்தார் நிஜாமுதீன்.
''கியாரண்டியும் இல்ல... வாரண்டியும் இல்ல''
அவர்களில் ஒருவரான, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரிடம் பேசியபோதுதான் தெரிந்தது... 'தம்பி... போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்கிற கதை.
''நான் ஒரு ஏக்கர்ல விதைமூலம் வளர்த்த 100 கன்னுகளை நடவு செஞ்சேன். அதுல 20 மரங்கள் ஆண் மரமாகிடுச்சு. 20 மரங்களை கூன்வண்டுகள் அழிச்சுடுச்சு. மிச்சம் 60 மரங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன். இதுல மகரந்தச் சேர்க்கையை நாமதான் செய்ய வேண்டியிருக்கு. இப்போதான் முதல் மகசூலை எடுத்திருக்கேன். மரத்துக்கு சராசரியா 30 கிலோ கிடைச்சுது. போகப்போக ஒரு மரத்துல 100 கிலோவுக்கு மேல கிடைக்கும்னு சொல்றாங்க. விற்பனை செய்றதும் கஷ்டம்தான். ஒவ்வொரு கடையா ஏறி இறங்கித்தான் விக்க வேண்டியிருக்கு. மொத்தத்துல எந்த கியாரண்டியும், வாரண்டியும் இல்லாத விவசாயம் இது'' என்று வேதனைதான் பொங்கியது குணசேகரனின் வார்த்தைகளில்!
விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் வேளாண் துறை அதிகாரியுமான 'அக்ரி’ வேலாயுதத்திடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''கன்றுகளை விற்கும் நர்சரிகளுக்கான விற்பனை உரிமம் மட்டும்தான் வேளாண்துறையினரால் வழங்கப்படுகிறது. உற்பத்திக்கான சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. விதை உற்பத்திக்கு சான்றிதழ் வழங்கும் முன்பு குறிப்பிட்ட அளவு விதைகளை வேளாண்மை அலுவலக பரிசோதனைக் கூடத்தில் முளைக்கவைத்து... முளைப்புத்திறன் குறைபாடு இன்றி இருந்தால் மட்டுமே, சான்றிதழ் வழங்கும் முறை உள்ளது. ஆனால், 'நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் காய்ப்புத்திறன் கொண்டதா?’ என்கிற பரிசோதனைகள் எல்லாம் நடத்தப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, விற்பனை உரிமத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற புதுப்புது ரகங்களை கொள்ளை விலைக்கு விற்று, விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் சிலர். இப்படி, 'வெளிநாட்டு நாற்றுகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, முதலில் வேளாண் துறைக்கு தெரியுமா?’ என்பதே சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. இது அரசால் தெளிவுபடுத்தப் படவேண்டிய விஷயம். நாற்றுப் பண்ணைகளையும் ஆய்வு செய்வதற்கு தனித்துறை அமைத்தால்தான் இதுபோன்ற கவர்ச்சி வியாபாரிகளிடம் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காப்பாற்ற முடியும்'' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் விவசாயிகள் ஏமாற்றப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தலையாய கடமை என்பதே விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது
 தொடர்புக்கு,
டாக்டர் ஆர்.எம். விஜயகுமார்,
தொலைபேசி: 0422-6611269
'அக்ரி’ வேலாயுதம்,
செல்போன்: 94437-48966
தெய்வசிகாமணி, செல்போன்: 89036-04727

உளவியல், உடலியல் டிப்ஸ்


திருமணம்  ஆயிரம் தேவதைகள் கூடி ஆசீர்வதிக்கும் தருணம். எல்லோருக்குமே திருமணம் குறித்த பரவசமும் எதிர்பார்ப்பும் இருக்கும். திருமணம் நிச்சயமானதும் வருங்கால மணமகன் மணமகள் இருவரின் கண்களும் கனவில் மிதக்கும்; கவிதை பிடிக்கும்; எல்லாவற்றிலும் அப்படி ஓர் அழகு தெரியும். வருங்கால வாழ்க்கைத்துணையிடம் பேசிப்பேசியே செல்போனில் பேட்டரி சார்ஜ் இறங்கும். ஆனால் இருவருக்கும் எக்கச்சக்கமாக சார்ஜ் ஏறும்.
திருமணம் என்பது புதிய பொறுப்புகளை நம் தோள்களில் ஏற்றும். இதுநாள்வரை பார்த்துப் பார்த்து வளர்த்த பெற்றோர்கள், பார்த்துப்பழகிய நண்பர்களையும் தாண்டி புத்தம் புதியதாக ஓர் உறவை ஏற்று, வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ளும் சடங்கு. எல்லோர் வாழ்விலும் இது இரண்டாம் அத்தியாயம். 'இன்று புதிதாகப் பிறந்தேன்’ என்று சொல்லும் மங்களகரமான மறுஜென்மம்.
திருமணம் என்கிற ஆயிரம் காலத்துப் பயிர் வளமாக, வளர உரமாக எதை இடவேண்டும்? திருமணத்துக்கு, உடலாலும் மனதாலும் எப்படித் தயாராக வேண்டும் என்பதை நிபுணர்கள் எடுத்துரைக்கிறார்கள். இனிமையான வசந்தகாலம் உங்களைக் கைகூப்பி வரவேற்கட்டும்... வாழ்த்துகள்!
உடலால் தயாராவது எப்படி?
டாக்டர் தீபா தியாகராஜமூர்த்தி,மகளிர் மற்றும் மகப்பேறு சிறப்பு நிபுணர்.
"திருமணத்துக்குத் தயாராகும் ஆணும் பெண்ணும் உடல்ரீதியாக ஆரோக்கியமாக இருந்தால்தான், மகிழ்ச்சியான, நிலையான குடும்ப வாழ்க்கையை நடத்த முடியும்.
முன்பு புதிய இளம் தம்பதியினருக்கு, ஆலோசனைகள், அறிவுரைகள் சொல்ல பெரியவர்கள் வீட்டிலேயே இருந்தனர். இன்று தனிக்குடித்தனம், வீட்டுக்கு ஒரு குழந்தை என்றாகிவிட்ட நிலையில், எந்த ஒரு விஷயத்துக்குமே ஆலோசனை சொல்ல ஆள் இல்லாத நிலைதான்.அதிலும், திருமணத்துக்கு முன்னர், சரியான ஆலோசனையை யாரிடம் கேட்பது?
கட்டுப்பாடு இல்லாத உணவு முறை, கலப்படம் சேர்ந்த உணவுப் பொருட்கள், குளிர்பானங்கள், மன அழுத்தம்... போன்றவற்றால் இளம் வயதிலேயே எல்லா நோய்களும் எளிதில் ஆக்கிரமித்துவிடுகின்றன.
இதனால், திருமண வாழ்வு பாதிக்கப்படுகிறது. அதனால், திருமணத்துக்கு முன்பு 'ப்ரீ மேரிட்டல் ஸ்கிரீனிங்' எனப்படும் முழுமையான உடல் நலப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. பிரச்னை எதுவும் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துச் சரி
செய்து கொள்வதற்கும், திருமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இந்தப் பரிசோதனை உதவும்.
பரிசோதனைகள்:
திருமணத்துக்குத் தயாராகும் ஜோடி, செய்து கொள்ள வேண்டிய முக்கியமான மூன்று
பரிசோதனைகள்:
1. மருத்துவப் பரிசோதனை
2. நோய்த்தொற்றுக்கான பரிசோதனை
3.  மரபியல்ரீதியான பரிசோதனை
மாறிவரும் வாழ்க்கை முறையினாலும், பல மணி நேரம் உட்கார்ந்தே பணி செய்வதாலும், மன அழுத்தத்தாலும் இளம் வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோய் போன்றவை வந்துவிடுகின்றன. இதுபோன்ற வேறு மருத்துவப் பிரச்னைகள் இருக்கின்றனவா என்று தெரிந்துகொள்ள, அதற்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும்.  பிறரிடம் இருந்து, ரத்தம் மூலமாகத் தொற்றும் நோய்களுக்கான பரிசோதனைகள், பரம்பரை நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் இருக்கின்றனவா என்பதை அறியும் பரி சோதனைகள்   ஆகியவை தான்  முக்கியமானவை.மேற்சொன்ன பரிசோதனைகளில், பெண்ணுக்கும் ஆணுக்கும் எவையெல்லாம் தேவை?
பெண்ணுக்கான பரிசோதனைகள்:
1. மருத்துவப் பரிசோதனை:
  ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால், ருபெல்லா, சிபிலிஸ் (பால்வினை நோய்கள்) போன்ற பரிசோதனைகள்.
  அநேகமாக எல்லாப் பெண்களுக்கும் சிறு வயதிலேயே ருபெல்லா காய்ச்சல் ஏற்பட்டிருக்கும் கருவுற்றிருக்குபோது முதல் மூன்று மாதங்களில் ருபெல்லா வந்துவிட்டால், பிறக்கும் குழந்தை ஏதேனும் குறையோடு பிறக்க வாய்ப்பு உண்டு. எனவே, ருபெல்லா தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளலாம்.
  ருபெல்லா எதிர்ப்பு அணுக்கள் உடலில் இருக்கின்றனவா என்று பரிசோதித்து விட்டு, அவை இல்லையென்றால், தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.  
   எச்சரிக்கை: திருமணத்துக்கு மிகச் சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போடுவது என்றால், ஊசி போட்ட மூன்று மாதங்கள் கருத்தரிக்கக் கூடாது. கவனமாக இருக்க வேண்டும்.
  கர்ப்பப்பை, சினைப்பை நார்மலாக இருக்கிறதா என்று பார்க்கவும். தேவைப்பட்டால் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் செய்து கொள்ளலாம்.
  கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கான தடுப்பூசியும் போட்டுக்கொள்வது நல்லது. 0  2  6 என்ற மாதக் கணக்கில், 3 டோஸ் போடவேண்டும். ஒருவேளை தடுப்பூசி போட்ட பிறகு, கருவுற்றால், குழந்தை பிறந்த பிறகுதான் அடுத்த டோஸ் போடவேண்டும்.
2. நோய்த்தொற்றுப் பரிசோதனை:
ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் மற்றும் ஹெச்.ஐ.வி வைரஸுக்கான ரத்தப் பரிசோதனை.
ஹெபடைட்டிஸ் பி வைரஸுக்கான எதிர்ப்பு அணுக்கள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துவிட்டு, தடுப்பூசி மூன்று டோஸ் (0  1  6) போடவேண்டும்.
3. மரபியல்ரீதியான பரிசோதனை:
தலசீமியா, சிக்கிள் செல் அனீமியா (ரத்த அணுக்கள் தொடர்பான குறைபாடு) போன்ற மரபியல் நோய்களின் பாதிப்பு இல்லாவிட்டாலும், குறைபாடுடைய அந்த ஜீன்களை எடுத்துச் செல்பவராக (carrier)' இருந்தாலும்கூட, பிறக்கும் குழந்தைக்கு அந்தக் குறைபாடு வருவதற்கு 25 சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. எனவே மரபியல் நோய்களைப் பற்றி கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குறிப்பு: பெண்களுக்கான தடுப்பூசிகளை, எந்த வயதில் வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்றாலும்,  9 வயதில் இருந்து 26 வயதுக்குள் போட்டுக் கொள்வது நல்லது. குறிப்பாக, பாலியல் உறவில் ஈடுபட ஆரம்பிப்பதற்கு முன்பே போட்டுக்கொள்வது நல்லது.
ஆணுக்கான பரிசோதனைகள்:
 ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்ட்ரால் ஆகியவற்றுக்
கான ரத்தப் பரிசோதனை.
  இ.சி.ஜி. பரிசோதனை.
  தேவைப்பட்டால், ஹார்
மோன்ஸ் (டெஸ்டோஸ்டிரான்) பரிசோதனை மற்றும் உயிரணுக்கள் பரிசோதனை.
  நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள், பெண்
ணுக்குச் செய்வது போன்ற பரிசோதனைகளை, ஆண்களும் செய்து கொள்ளலாம். ஏதாவது நோய்த்தொற்று அல்லது நோய் அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். சில முக்கியமான குறிப்புகள்:
ஒழுங்கற்ற மாதவிலக்கு:
பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிலக்கு பிரச்னை இருந்தால், திருமணத்துக்கு முன்பே, மகளிர் நல நிபுணரிடம் ஆலோசித்து, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், முட்டை ஒழுங்காக வரவில்லை என்றால்தான், மாதவிலக்கு சீராக வராது. அதனால் கருத்தரிப்பதில் பிரச்னை வரலாம்.
பாலியல் உறவு:
தாம்பத்ய உறவு குறித்த சந்தேகங்களை நிபுணர்களிடம் கேட்டுத் தெளிவதே சிறந்தது. என்னதான் இன்டர்நெட்டில் தகவல்கள் கொட்டிக் கிடந்தாலும், அவை முழுமையான உண்மைகள் என்று சொல்ல முடியாது. பெற்றோரிடமோ, நண்பர்களிடமோ தெரிந்துகொள்ள முடியாத விஷயங்களை, மருத்துவர்களிடம் முறையாகத் தெரிந்துகொள்ளலாம். பலர் திருமணமாகி மூன்று வருடங்கள் கழித்தும்கூட, முறையான பாலியல் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பார்கள். இதனால் குழந்தைப்பேறும் தள்ளிப்போகும்.
கருத்தடை சாதனங்கள்:
திருமணமான உடனேயே குழந்தை வேண்டாம் என்று தள்ளிப்போட விரும்புபவர்களுக்குச் சிறந்த வழி, கருத்தடை மாத்திரைகள்தான். டாக்டரிடம் பரிசோதனை செய்த பிறகே, கருத்தடை மாத்திரைகள் எடுக்க வேண்டும். அவரவர் உடலுக்கு ஏற்ற சரியான மாத்திரைகளை டாக்டர் பரிந்துரைப்பார்.
கவனத்தில்கொள்ளவேண்டிய விஷயங்கள் :
  சில பெண்களுக்கு, திருமண நாளையொட்டி மாதவிலக்கு கெடு வரும். உடனே, தாங்களாகவே,  அம்மா சொன்னாங்க... பாட்டி சொன்னாங்க' என்று ஏதாவது மாத்திரைகளை வாங்கிப் போட்டுக்கொள்வார்கள். இது மிகவும் ஆபத்தான செயல்.
  பொதுவாகவே, திருமண தினத்தில் மாதவிலக்கு வரும் என்றால், அதைக் கடைசி நிமிஷத்தில் தள்ளிப்போட முயற்சிப்பது மிகவும் தவறு. உடல் உறுப்புகளும் ஹார்மோன்கள் செயல்பாடும், சுருதி பிசகாத ஒரு லயமான சுழற்சியில், ஒழுங்காக வேலை செய்துகொண்டிருக்கின்றன. கடைசி நிமிஷத்தில், அந்த ஒழுங்கைக் குழப்பினால் அடுத்த  ஆறு மாதங்களுக்கு நம் உடலின் ஹார்மோன் செயல்பாடு குழம்பிவிடும். மாதவிலக்கு நாளைப் பொறுத்தே திருமணத் தேதி தீர்மானிக்கப்பட வேண்டும்.
  மாதவிலக்கைத் தள்ளிப் போடவேண்டும் என்றால், இரண்டு மாதங்கள் முன்பே மருத்துவரிடம் சென்று, இரண்டு சுழற்சிகளுக்கு முன்பே முறைப்படி அந்த வேலையைத் தொடங்கிவிட வேண்டும். மாதவிலக்கு சுழற்சி குழம்பாத வண்ணம் மருத்துவர் பார்த்துக்கொள்வார்.  
ஃபோலிக் ஆசிட்:
ஒரு பெண் கருவுற்றவுடன், அவள் வயிற்றில் வளரும் கரு மிக வேகமாக வளரும்.  கருவில், மூளை, நரம்பு மண்டலம், தண்டுவடம் போன்றவை வேகமாக வளரக்கூடியவை.  இத்தகைய வளர்ச்சிக்கு, ஃபோலிக் ஆசிட் அவசியம் தேவை. ஃபோலிக் ஆசிட் மாத்திரைகளை, மருத்துவர் வழிகாட்டுதலுடன், குழந்தைப் பேற்றுக்குத் தயாராகும் முன்பே எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கவேண்டும். குழந்தையின் மூளை, தண்டுவடம் போன்றவை, கரு உருவாகிய எட்டு வாரங்களுக்குள் முழுமையாக வளர்ந்துவிடும். எனவே, கருவுற்ற பிறகு, ஃபோலிக் ஆசிட் எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை.
  திருமணத்துக்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, வெளி இடங்களில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுச் சாப்பாடு சாப்பிடுவதுடன், காய்கறிகள், பழங்களை அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நன்கு உடற்பயிற்சி செய்து, உடலைச் சீராகப் பராமரிக்க வேண்டும். எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  மிக முக்கியமாக, குழந்தைக்கு முயற்சிக்கும் முன்பு, ஆணுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருந்தால், கண்டிப்பாக அவற்றை நிறுத்த வேண்டும்.
ஆரோக்கியமான வாரிசுகளைப் பெற்றெடுக்க, பெற்றோர் நலமாக இருக்கவேண்டியது, மிகவும் அவசியம்.
ரத்த வகை:
நம்முடைய ரத்த வகைகள், Rh positive, Rh negative என்ற இரு பிரிவுகளுக்குள் அடங்கும். திருமணத்துக்கு முன், இருவரும் ரத்த வகையைப் பரிசோதித்துக்கொள்வது நல்லது. கணவன், மனைவி இருவரின் ரத்தமுமே Rh positive ஆகவோ அல்லது Rh negative ஆகவோ இருந்துவிட்டால் பிரச்னை இல்லை. அதேபோல், மனைவிக்கு Rh positive, கணவனுக்கு Rh negative என்று இருந்தாலும் பிரச்னை இல்லை.
 
ஆனால், கணவன் Rh positive, மனைவி Rh negative ஆக இருந்தால், மனைவி கருவுற்றதும் 7-வது மாதத்தில் Anti D ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். பிறகு, குழந்தை பிறந்ததும், மீண்டும் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். கருவுற்றதுமே, மகப்பேறு மருத்துவர் இதற்கான ஆலோசனையை வழங்கிவிடுவார். இந்த ஊசி போட்டுக்கொள்ளவில்லை என்றால், முதல் குழந்தைக்குப் பிரச்னை இருக்காது. ஆனால் இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உறவுமுறையில் திருமணம்:
உறவுமுறையில் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு, மரபியல்ரீதியான குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே சொன்னது போல் இவர்கள் மரபியல் பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது. சிலருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மிகச் சிறிய அளவில் உடல்குறைகள் இருக்கலாம். சிலருக்கு தீவிரமான பிரச்னைகள் வரலாம். சில குழந்தைகள் பிரச்னைகளே இல்லாமல், ஆரோக்கியமாகப் பிறக்கலாம். ஆனால், நெருங்கிய உறவினர்
களுக்குள் திருமணம் நடக்கும்போது நோய்க்கூறு மரபணுக்கள் கடத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பதால், மனநலக் குறைபாடுகள் மற்றும் பல உடல்நலக் குறைபாடுகள் வருவதற்கு வாய்ப்பு உண்டு. எனவே, நெருங்கிய உறவுக்குள் திருமணம் செய்வதைத் தவிர்த்தலே நல்லது.
நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை:
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண் அல்லது பெண்ணுக்கு உயர் ரத்த அழுத்தம், காசநோய், ஆஸ்துமா போன்ற நாள்பட்ட நோய்கள் ஏதேனும் இருந்து, அதற்கான மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருந்தால், அவசியம் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில், சில மாத்திரைகளை, கருவுற்றிருக்கும்போது எடுத்துக்கொள்ளக் கூடாது. மருத்துவர்கள், அதற்கு ஏற்றவாறு மாத்திரைகளை மாற்றிக்
கொடுப்பார்கள். முக்கியமாக, பெண்ணுக்கு தீவிரமான இதய நோய்கள் ஏதாவது இருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறாமல், கருத்தரிக்கவே கூடாது.  
குழந்தைப்பேறு:
திருமணத்துக்குப் பிறகு, குழந்தை எப்போது பெற்றுக்கொள்வது என்பதையும் முன்கூட்டியே மனம்விட்டுத் தெளிவாகப் பேசி, முடிவு எடுப்பது நல்லது. பல தம்பதிகள்,திருமணத்துக்கு முன்னர் முடிவு எடுக்காமல், கருத்தரித்த பின்னர், 50 நாட்களில் வந்து, குடும்பத்தில் பல கமிட்மென்ட்ஸ் இருக்கு... இப்போ குழந்தை வேண்டாம்னு நினைக்கிறோம்' என்று கருவைக் கலைக்க ஆலோசனை கேட்பார்கள். அது மிகப் பெரிய தவறு. திருமணத்துக்கு முன்பே, எல்லாவற்றையும் பேசிக்கொள்ளும் இந்தக் காலத்தில், குழந்தைப்பேற்றையும் திட்டமிடுதல் வேண்டும்.
மனதால் தயாராவது எப்படி?
பிருந்தா ஜெயராமன், உளவியல் ஆலோசகர்.
ஆண் மணமுடிக்கும்போது, ஒரே நேரத்தில் கணவன், மருமகன் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். அதே போல, ஒரு பெண்ணும், திருமணத்தின் மூலம் மனைவி, மருமகள் என்று இரண்டு பொறுப்புகளை ஏற்கிறார். எனவே, ஆண், பெண் இரண்டு பேருமே, இந்த இரண்டு பாத்திரங்களுக்குமே தங்களைத் தயார்செய்துகொள்ள வேண்டியது  அவசியம்.
திருமணம் ஆகப்போகும் ஆண், பெண் இருவருமே, தங்கள் பெற்றோரின் குடும்ப வட்டம், தங்கள் குடும்ப வட்டம் எனத் தனித் தனியே அமைத்துக்கொண்டால் நல்லது.
திருமணம் ஆன பிறகு, எந்த விஷயங்களில் எல்லாம் பிரச்னைகள் வரலாம் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டால், அவற்றைத் தவிர்ப்பது சுலபம். இதற்காகவே, இப்போது திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை'யை (ப்ரீ மேரிட்டல் கவுன்சிலிங்) பலர் பெற்றுக்கொள்கிறார்கள்.
கணவன் மனைவி உறவில்,இருவருமே கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான நான்கு பகுதிகள் (areas):
1. உணர்வுபூர்வமான பந்தம் (emotional relationship).
2. தாம்பத்ய உறவு (sexual relationship).
3. குடும்பம் சார்ந்த உறவு (family relationship).
4. வேலை, பொருளாதாரம் தொடர்பானவை (financial affairs).
இந்த நான்கு வகையான உறவுகளிலும் ஆண், பெண் இருவருமே கவனம் செலுத்தியாக வேண்டும்.  
உணர்வுபூர்வமான பந்தம்:
உணர்வுபூர்வமான பந்தம் இறுக, இரண்டே இரண்டு தேவைகள்தான். ஒன்று, 'நான் உன்னை நேசிக்கிறேன்'. மற்றது, 'நீ எனக்கு முக்கியமானவள்/ன்'.
மணம் செய்துகொள்ளப்போகும் ஆண், பெண் இருவருமே, 'நான் உன்னை நேசிக்கிறேன்' என்பதை ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும். வெறும் வார்த்தைகளால் மட்டும் அல்லாமல் ஒருவர் மீது மற்றவர் காட்டும் கரிசனம், உடல்மொழி மற்றும் சில செயல்பாடுகள் மூலமாக அன்பைக் காட்டவேண்டும். சோர்வாக இருந்தால், 'என்னடா தலை வலிக்குதா?' என்று கேட்பது, 'இந்த டிரெஸ் நல்லாயிருக்கு' என்று பாராட்டுவது...  இப்படி அவரவர் மொழியில் நேசம் பகிர்வது முக்கியம்.
இன்னொரு முக்கியமான விஷயம், தன் வாழ்க்கைத்துணை எதிர்பார்க்கும் விதத்தில் அன்பை வெளிப்படுத்த வேண்டும். இது, அவரவர் வளர்ந்த சூழலைப் பொறுத்து வேறுபடும். சிலர் வீடுகளில் ஆண், பெண் சகஜமாகப் பேசக்கூட முடியாத சூழல் இருக்கும். சில வீடுகளில் சகஜமாகக் கட்டியணைத்து ’ஹாய்’ சொல்லும் சூழல் இருக்கலாம்.  
திருமணத்துக்கு முன்பு இருந்து போலவே, திருமணத்துக்குப் பின்பும் இந்த நெருக்கம் தொடரவேண்டும். அப்போதுதான் திருமண பந்தம் உணர்வுபூர்வமானதாக அமையும்.
படுக்கையறை பந்தம்:
திருமணத்துக்கு முன்பே, ஒருவரைப் பற்றி மற்றவர் நன்கு அறிந்துகொள்ளும் காலம் இது. எனவே, தாம்பத்ய உறவு குறித்தும் ஒரு புரிதல் இருக்கவேண்டும்.
திருமணம் ஆன பிறகு, மனைவியுடனான தாம்பத்ய உறவு இனிமையாக இருக்க வேண்டும் என்றால், ஆண் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. பெண்ணுக்கும் சில விருப்பங்கள் இருக்கும். ஆண், தன் தேவைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாரோ, அதே முக்கியத்துவத்தைப் பெண்ணின் தேவைகளுக்கும் கொடுக்கும் அளவுக்கு, மனதளவில் தயாராக வேண்டும். ஏனெனில், இது முதலிரவிலேயே தொடங்க வேண்டும். 'உனக்கும் இதில் பரிபூரண மகிழ்ச்சியும் திருப்தியும் இருக்கவேண்டும் என்பது எனக்கு முக்கியம்' என்பதைப் பெண்ணுக்குப் புரியவைத்துவிட்டால், தாம்பத்ய வாழ்க்கை இனிய இல்லறம்தான்.
படுக்கையறை பந்தம் மட்டும் அவர்களுக்குள் நன்கு அமைந்துவிட்டால், பிறகு அவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் வராது. வந்தாலும் தீர்வு காண்பது மிக எளிது.
பாலியல் உறவு பற்றி முன்கூட்டியே இருவரும் நன்கு விவரங்கள் தெரிந்துகொள்வது அவசியம். பாலியல் உறவு குறித்த சந்தேகங்களை இணையத்தில் தேடித் தெளிவுபெறுவதைவிட, தகுந்த ஆலோசகர்களிடம் கேட்டு, தெளிவது நல்லது.
இல்லையெனில் அனாவசியமான பதற்றம் ஏற்பட்டு, அதுவே அவர்களின் தாம்பத்ய உறவுக்குத் தடையாகி, வாழ்க்கையில் நிம்மதியைத் தொலைக்க நேரிடும்.
குழந்தைப்பேற்றைத் தள்ளிப்போட வேண்டும் என்றால், கருத்தடை குறித்தும் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்பட வேண்டும். இருவருமே தங்கள் அந்தரங்க சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். உதாரணத்துக்கு, வியர்வை வாடை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் இருந்தால், அதற்கான சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது. ஏனெனில், இந்த விஷயங்கள் மனரீதியான அழுத்தத்தைக் கொடுப்பதுடன், இனிமையான இல்லற வாழ்க்கைக்கே உலைவைக்கக்கூடிய அளவுக்கு, பெரிய பிரச்னைகளாக விஸ்வரூபம் எடுத்துவிடும்.  
குடும்ப உறவுகள்
திருமணம் செய்துகொள்ளப்போகும் ஆண்கள், ஒரு விஷயத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும். அவருடைய மனைவியாக வரப்போகும் பெண், இன்னொரு வீட்டில் குறைந்தபட்சம் ஆண்டுகள் 20 வளர்ந்து வாழ்ந்தவள். கல்யாணம் என்னும் பந்தம் மூலம், அவள் புத்தம் புதிய ஒரு சூழலுக்கு வரப்போகிறாள். ஓர் இடத்தில் பல ஆண்டுகளாக நன்கு வளர்ந்து வேரோடிய மரத்தை, அப்படியே வேருடன் பிடுங்கி இன்னொரு புதிய இடத்தில் நடுவது போன்றது இது. அந்த மரம், புதிய இடத்தில் வேர்பிடித்து வளர, சிறிது காலம் பிடிக்கும். அதைப்போலவேதான், பெண்ணுக்கும் புகுந்த இடத்தில் அனைவரையும் புரிந்துகொண்டு, சகஜமாக சில காலம் பிடிக்கும். அதுவரை அவளுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். வேர்பிடிக்கும் அந்தக் காலகட்டத்தில், கணவனின் அன்பும் ஆதரவும் அவளுக்கு முழுமையாகத் தேவை. இதைத் திருமணத்துக்கு முன்னரே புரிந்துகொண்டால், திருமணம் முடிந்த கையோடு முதல்  இரண்டு, மூன்று மாதங்களில் வரும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
மணமாகப்போகும் பெண்ணும், திருமணத்துக்கு முன்பே, 'இனிமேல் இது என் குடும்பம்' என்ற ரீதியிலேயே சிந்திக்கவேண்டும். அப்போது, மாமனார், மாமியார் சொல்வதோ, மற்ற விஷயங்களோ பெரிய பிரச்னையாகத் தெரியாது.  
திருமணத்துக்கு முன்பு இருவருமே தங்களது குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர்கள் குணநலன்கள் பற்றியும் பகிர்ந்துகொள்ளலாம். ஆனால், ஒரேயடியாக எதிர்மறையாகச் சொல்லி, துணையைப் பயமுறுத்திவிடக் கூடாது. பிறகு, திருமணமாகி வரும்போதே, ஒருவித அலர்ஜியுடன் வருவதுபோல ஆகிவிடும்.
எங்க அம்மா கொஞ்சம் அதிகமாக எதிர்பார்ப்பாங்க... பார்த்து நிதானமா நடந்துக்க...' என்றோ, அப்பா ரொம்பப் பேசலையேனு வருத்தப்
படாதீங்க... அவர் எப்பவுமே அப்படித்தான்... அவர் உண்டு, நியூஸ்பேப்பர் உண்டுனு இருப்பார்' என்றோ மிதமாக, இதமாகச் சொல்லிவைப்பதில் தவறு இல்லை.
திருமணத்துக்குப் பிறகு, முக்கியமான விஷயங்களில் முடிவெடுக்கும் பொறுப்பை யார் எடுத்துக்கொள்வது என்ற விஷயத்தையும் பேசிக்கொள்வது நல்லது..
எல்லாப் பிரச்னைகளையும் பற்றி இருவருமே பேசி, விவாதித்தாலும், இறுதியில் முடிவை இருவரும் சேர்ந்து எடுக்கலாம். அல்லது, 'அந்தப் பிரச்னை சார்ந்த 'ஏரியா'வில் யார் திறமைசாலியோ அவர் முடிவெடுக்க வேண்டும்' என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.
உதாரணத்துக்கு, பணம், வாங்கல், கொடுக்கல் சார்ந்த விஷயங்களில், ஆண் பெண் இருவரில் யார் திறமைசாலியோ  அவர் முடிவு எடுக்கலாம்.  அதேபோல உறவுகள், குழந்தைகள் சார்ந்த விஷயங்
களையும் யார் அதில் திறமையானவரோ, அவரே கையாளும்படி சொல்லலாம். ஆனால், யார் எந்த விஷயத்தைக் கையாளுவதில் புலி என்பது, திருமணத்துக்குப் பிறகுதான் பலருக்கும் தெரியவரும்.
ஒருவர் முடிவெடுக்கும் போது, மற்றவர் அந்த உரிமையிலோ, முடிவிலோ குறுக்கிட்டுக் குழப்பாமல் இருப்பதற்கு, திருமணத்துக்கு முந்தைய தீர்மானம் உதவும்.
பொருளாதார பந்தம்:
   இந்தக் காலத்தில் ஆண், பெண் இருவருமே நன்கு படித்து, வேலைக்குப் போகிறார்கள். எனவே,  திருமணத்துக்கு முன்பே, பெண் தொடர்ந்து வேலைக்குப் போகவேண்டுமா, இல்லையா என்பதைப் பேசி, குடும்பத்துடன் ஆலோசித்து, தீர்க்கமாக முடிவு செய்துகொள்ள வேண்டும்.
அதேபோல, சம்பாதிக்கும் ஆண் அவருடைய பெற்றோருக்குப் பணம் தர வேண்டுமா என்பதையும், சம்பாதிக்கும் பெண் எனில், திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து அவருடைய பெற்றோருக்குப் பணம் அனுப்ப வேண்டுமா என்பதையும் மிகத் தெளிவாகப் பேசிக்கொள்ளவேண்டும். பணம் அனுப்ப வேண்டும் என்றால், எவ்வளவு என்பதையும் முடிவுசெய்துவிடலாம். இருவருமே மனபூர்வமாகச் சம்மதித்து அதற்கான முடிவுகளை எடுத்துவிட வேண்டும். பண விஷயத்தில் இருவருக்குள்ளும் ஒளிவுமறைவு இருக்கக் கூடாது. மாத வருமானம், முதலீடுகள், கடன்கள், இ.எம்.ஐ., குடும்பத்துக்குத் தரவேண்டிய தொகை... எல்லாவற்றையுமே வெளிப்படையாகப் பரஸ்பரம் பேசிக்கொள்வது (transparency), அவர்கள் தொடங்கப்போகும் வாழ்க்கைக்கு நல்ல அடித்தளத்தை அமைக்கும்.
காதல் திருமணம் செய்துகொள்கிறீர்களா? ஒரு நிமிஷம் ப்ளீஸ்...!
காதல் திருமணத்துக்கான எதிர்ப்பு, முந்தைய காலத்தைவிட  விட இப்போது ரொம்பவே குறைந்திருந்தாலும், இன்றும் பல ஜோடிகள் பெற்றோர்களின் எதிர்ப்புக்குப் பயந்து, காவல் நிலையத்தைத் தஞ்சமடைகிறார்கள். இதுபோல, அம்மா, அப்பா ஏற்றுக்கொள்ளாத காதலர்கள் மணம்புரிவதற்கு முன்னர், தங்கள் அன்பின் வலிமையை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். என்ன இடர்ப்பாடு வந்தாலும், அதை எதிர்நோக்கும் மனோதிடமும் இருவருக்கும் ஒரே மாதிரியான உணர்வும் இருக்க வேண்டும். அப்போதுதான், குடும்பத்தாரின் ஆதரவு இன்றித் தொடங்கப்போகும் வாழ்க்கையில் வேறு பிரச்னைகள் இல்லாமல் கொண்டுசெல்ல முடியும். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சந்தோஷமாக வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுதான் அவர்களுக்குப் பெரிய சப்போர்ட்!
காதல் திருமணம் செய்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் காதல் வேறு, திருமண வாழ்க்கை வேறு என்பதைத்தான்.
காதலிக்கும் காலத்தில், வெறும் 2 மணி நேரம் பார்த்துப் பேசும் ஜோடி, திருமணத்துக்குப் பின் தினமும் பல மணி நேரம் சேர்ந்து வாழ வேண்டும். அப்போது ஒருவரின் 'மைனஸ்'கள் மற்றவருக்குத் தெரியவரும். அடிக்கடி கோபம் வருதலும், மூட் அவுட் ஆகுதலும் அருகில் இருந்து பார்க்கும்போதுதான் தெரியும். அதனால் ஏமாற்றம் அடையக் கூடாது. அந்த மைனஸ்'களை ஏற்றுக்
கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். அய்யோ... லவ் பண்றப்போ அப்படி இருந்தாரே... இப்படிக் கோபமே வரலியே!' என்று எண்ணக் கூடாது. இந்த ஏமாற்றத்தைத் தவிர்க்க, முன்கூட்டியே இருவரின் மைனஸ், ப்ளஸ்களைப் பற்றி சொல்லிவைத்து விடலாம். இதனால் அனாவசிய ஏமாற்றங்களைத் தவிர்க்க முடியும்!
திருமணத்துக்கு முந்தைய காதல் உறவுகளை, காதல் தோல்விகளை வரப் போகும் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாமா? - என்பதே திருமணம் செய்துகொள்ளப்போகும் அனை வருக்கும் எழும் மில்லியன் டாலர் கேள்வி. 'உங்கள் காதல் அல்லது பள்ளிப் பருவ ஈர்ப்பு (infatuation), மிக ஆழமா னதாக இல்லாமல் இருந்து, உங்கள் துணை நன்கு புரிதல் உள்ளவராக இருந்தால் சொல்லலாம். அதனால், பெரிய பிரச்னைகள் வந்துவிடாது. ஆனால், உங்கள் காதல் மிகவும் ஆழமானதாக, உறவு நெருக்கமானதாக, உணர்வுபூர்வமாக இருந்தது என்றால், சொல்லாமல் இருப்பதே பல பிரச்னை களைத் தவிர்க்கும். அப்படிச் சொல் பவர்கள் அதன் பிறகு ஏற்படும் பின் விளைவுகளுக்குத் தயாராக இருக்க வேண்டும்.
கடைசியில்... ஆனால்,
முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம்...
மேலே சொன்ன நான்கு பகுதிகளிலும் வரும் சோதனைகளைக் கடந்து, திருமணமாகி முதல் வருடத்துக்குள், இந்த உறவு அழுத்தமான பந்தமாகி விட்டால், அதன் பிறகு அவர்கள் மணவாழ்க்கையில் என்ன புயல் அடித்தாலும் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும்; எளிதாகக் கரை சேர்ந்துவிட முடியும். மணமாலை சூடக் காத்திருப்பவர்களுக்கு அத்தியாவசியமான அடிப்படைத் தேவைகள் நான்குதான்.
ஆழமான அன்பு, பரஸ்பர மரியாதை, பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படையான தகவல் தொடர்பு (open communication). இந்த நான்கு துடுப்புகளும் உங்களிடம் இருந்தால் போதும்... உங்கள் வாழ்க்கைப் படகில், ஜம்மெனப் பயணத்தைத் தொடங்கலாம்!
பிரேமா நாராயணன்,  படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites