இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பனை மரம். Show all posts
Showing posts with label பனை மரம். Show all posts

Monday, February 17, 2014

எந்த ஊரில் என்ன வாங்கலாம்-கருப்பட்டி

கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம்  அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால்  இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுவோர் மிக சிலரே என்பதால், அதை தயாரிக்க கற்றுக்  கொண்டால் லாபத்தை  அள்ளிக்கொடுக்கும் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்தூரில் ‘கவித்தமிழ்Õ என்ற பெயரில் பனங்கருப்பட்டி  தயாரிக்கும் முருகேசன். அவர் கூறியதாவது: 10 ஆண்டுக்கு முன்பு, பாத்திரக்கடையில் வேலை பார்த்தேன். கள் இறக்க அனுமதி இல்லாததால், இங்குள்ள பனை மரங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருந் தன. விவசாயிகளிடம் கேட்டு, மரம் ஏற ஆட்களை ஏற்பாடு செய்து பதநீர் இறக்கினேன். அதைக் காய்ச்சி கருப்பட்டியாக விற்றால் நல்ல லாபம்  சம்பாதிக்கலாம் என நினைத்து அத்தொழிலில் இறங்கினேன்.tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

துவக்கத்தில் குறைந்த அளவு பதநீர் கிடைத்தது. புட்டுக் கருப்பட்டி என்ற சின்ன சின்ன கருப்பட்டிகளை வீட்டிலேயே தயாரித்து கிராமங்களில் தெரு தெரு வாக கூவி நானே விற்றேன். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஒருநாள் தெருவில் விற்றுக் கொண்டிருந்தேன்.அப்போது தலையில் இருந்த கூடையை கீழே இறக்க குனிந்தபோது  வேட்டி கிழிந்தது. மானத்தை காக்க வேட்டி தேவை. கருப்பட்டி விற்காததால் புதுவேட்டி வாங்க கையில் காசும் இல்லை. அருகிலுள்ள சர்வோதயா சங்கத் தில் 2 கிலோ கருப்பட்டியைக் கொடுத்து வேட்டி வாங்கினேன். பணத்தைக் கொடுத்துவிட்டு கருப்பட்டியை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, மீதமுள்ள  கருப்பட்டியை விற்பதற்காக சென்றேன்.

 

பின்னர், சர்வோதயா சங்கத்தில் பணத்தை கொடுத்து கருப்பட்டியைக் கேட்டபோது, ‘நீங்கள் கொடுத்த கருப்பட்டி விற்று விட்டதுÕ என்றனர். அடுத்து வ ரும்போது மொத்தமாக சப்ளை செய்யும்படி கூறினர். அடுத்த முறை கொடுத்தேன். கருப்பட்டியை பிளாஸ்டிக் கவரில் போட்டு, லேபிள் வைத்து மாவட்டத் திலுள்ள அனைத்து சர்வோதயா கடைகளுக்கும் சப்ளை செய்யும்படி கூறினார்கள். தினசரி 10 கிலோ அளவு தயாரித்த எனக்கு, தற்போது 500 கிலோ அளவுக்கு ஆர்டர் கிடைக்கிறது. ஆனால், 100 கிலோவுக்கு மேல் உற்பத்தி செய்யும் அளவு  பதநீர் கிடைப்பதில்லை. ஆள் பற்றாக்குறையும் உள்ளது. இவ்வாறு முருகேசன் கூறினார்.

முதலீடு எவ்வளவு?

மூலப்பொருட்கள்: 

பனை பதநீர், சுக்கு, மிளகு, திப்பிலி.

கட்டமைப்பு: 

பதநீர் காய்ச்ச, கருப்பட்டி பாகு அச்சில் ஊற்ற ஒரு அறை. உலர வைக்க, பேக்கிங் செய்ய மற்றொரு அறை. மூலதனச் செலவு: கட்டிட அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். கொப்பரை அல்லது அலுமினிய பாத்திரம் 4 கிலோ அளவுள்ளது ணீ600, அச்சுப்பலகை 6 அடி நீளம்  ரூ2000, உலர வைக்க 20 தட்டுக்கூடை ரூ1500, துடுப்பு, கரண்டி ரூ200, பேக்கிங் செய்ய எடை மெஷின் ரூ500 என கட்டமைப்புக்கு ரூ24,800 தேவை.

உற்பத்தி செலவு: 

தினசரி 100 கிலோ சுக்கு கருப்பட்டி தயாரிக்க 750 லிட்டர் பதநீர் வீதம், மாதம் 26  நாளில் 2,600 கிலோ பனை சுக்கு கருப்பட்டி தயாரிக்க  19,500 லிட்டர் பதநீர் தேவை. லிட்டர் ரூ10 வீதம் பதநீருக்கு மட்டும் மாதம் ரூ1.95 லட்சம், பிளாஸ்டிக் கவர் ரூ110, லேபிள் ரூ25, செலோ டேப், பார்சல்  பெட்டி, பேக்கிங் கயிறு உட்பட ரூ50. உற்பத்திக் கூலி தினசரி 5 பேருக்கு தலா ரூ150 வீதம், மாதம் ரூ19,500. இட வாடகை ரூ2,000 என உற்பத்திச் செலவுக்கு ரூ2.16 லட்சம் தேவை.

பதநீர் எங்கு வாங்கலாம்?

ஒரு லிட்டர் பதநீர் தோட்டங்களில் ரூ.10க்கு கிடைக்கும். மொத்த வியாபார கடைகளில் சுக்கு கிலோ ரூ255, மிளகு ரூ260, திப்பிலி ரூ650க்கு கிடைக்கும்.  பதநீர் போதிய அளவு கிடைக்காவிட்டால் கருப்பட்டி தயாரிக்கும் குன்னத்தூர், வேம்பாரை, தூத்துக்குடி, உடன்குடி, நாகர்கோவில், சிறுவலூர், வேலூர்  மாவட்டம் ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் தயாரிக்கும் கருப்பட்டியை வாங்கி வந்து, நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கும் பதநீரை ஊற்றி மீண்டும்  காய்ச்சி அதில் சுக்கு, மிளகு, திப்பிலி போட்டு சுக்கு கருப்பட்டியாக தயாரிக்கலாம். 

தயாரிக்கும் முறை 

கருப்பட்டி: அலுமினிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து 70 அல்லது 80 லிட்டர் பதநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். பாகு ஆனவுடன் அடுப்பில்  இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும். கொஞ்சம் ஆறிய பின்பு அச்சுப்பலகையில் ஊற்றினால், அரை மணி நேரத்தில் கட்டியாக மாறியிருக்கும். அச்சுக்கு ழியில் உள்ளவற்றை குச்சியால் நெம்பி எடுத்து, நன்கு ஆற வைக்க வேண்டும். 10 கிலோ கருப்பட்டி கிடைக்கும். பின்னர் பேக்கிங் செய்து விற்கலாம். சுக்கு கருப்பட்டி: பனங்கருப்பட்டி தயாரிப்பு முறையில் 70 அல்லது 80 லிட்டர் பதநீர் கொதிக்கும்போது 200 கிராம் சுக்கு, 75 கிராம் மிளகு, 50 கிராம்  திப்பிலி ஆகியபொடி கலவையை போட்டுக் கலக்கி கொதிக்க வைக்க வேண்டும். மற்றவை பனங்கருப்பட்டி தயாரிப்பு போலவே.

மாத லாபம் ரூ31 ஆயிரம்

தினமும் 100 கிலோ கருப்பட்டி வீதம் உற்பத்தி செய்து மாதம் சுமார் 2600 கிலோ தயாரிக்க முடியும். கருப்பட்டி ஒரு கிலோ ரூ90க்கும், பனம் சுக்கு கருப்ப ட்டி ரூ100க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. மாத உற்பத்திச் செலவு ரூ2.16 லட்சம். விற்பனை வருவாய் சராசரியாக கிலோவுக்கு ரூ95 வீதம், மாத லாபம்  ரூ31 ஆயிரம்.

பனங்கற்கண்டு தயாரிக்கலாம்

100 லிட்டர் பனை பதநீரை கொப்பரையில் ஊற்றி 110 டிகிரி வெப்பத்தில் கொதிக்க வைக்க வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய கொப்பரையை மூடி நிலத் துக்கடியில் புதைக்க வேண்டும். 40 நாள் கழித்து கொப்பரையை வெளியே எடுத்தால் உள்ளே பதநீர் பனங்கற்கண்டாக மாறியிருக்கும். 100 லிட்டர் பதநீருக்கு  5 கிலோ பனங்கற்கண்டு கிடைக்கும். கிலோ ரூ300 முதல் ரூ500 வரை விற்கலாம்.

விற்பனை வாய்ப்பு

புட்டு கருப்பட்டி, சுக்கு கருப்பட்டி தயாரிப்பு தேதியில் இருந்து ஒரு ஆண்டுக்கு கெடாது. சுக்கு கருப்பட்டிக்கு அதிக வரவேற்பு உள்ளது. 100 கிராம், 200  கிராம் பாக்கெட்களில் தின்பண்டமாக விற்கலாம். தமிழகத்திலுள்ள சர்வோதய சங்கங்கள், கடலூர் பனை பொருள் தயாரிப்பு நிலையம் மற்றும் தமிழகம்  உள்ளிட்ட கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்கள், முக்கிய விற்பனை நிலையங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.  வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப சப்ளை குறைவாக இருப்பதால் கிராக்கி உள்ளது.  

மருத்துவ குணம்

சீரகத்தை வறுத்து சுக்கு கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால் நன்கு பசி எடுக்கும். ஓமத்தைச் சேர்த்து சாப்பிட்டால் வாயு தொல்லை நீங்கும்.
25 கிராம் குப்பைமேனி கீரையுடன் 25 கிராம் கருப்பட்டி எடுத்து வாணலியில் வதக்கி சிறு துண்டுகளாக சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி  குணமாகும். இஞ்சி டீயிலும் இதைக் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.



கருப்பட்டி கதை கேளூ...!



தற்போது 20, 30 வயதுகளிலேயே... Ôசர்க்கரை வியாதி வந்துவிடுமோÕ என்கிற
 பயத்துடனேயே திரிகிறார்கள் பலரும். 30 வயது கடந்த நிலையிலேயே பலரும்
 அந்த நோய்க்கு ஆட்பட்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்! ஏன்... 
குழந்தைகள் கூட இப்போதெல்லாம் சர்க்கரை நோய் (டைப் 2) தாக்குதல்
 காரணமாக பாதிக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது! ஆனாலும்கூட
 கருப்பட்டியின் மகத்துவத்தை இன்னமும் உணராமல்தான் இருக்கிறார்கள்
 நம்மவர்கள்!


கருப்பட்டி பயன்படுத்துவது ஒரேயடியாகக் குறைந்து போக... அதன் உற்பத்தியும்
 பெருமளவு குறைந்து விட்டது. என்றாலும்... பாரம்பரியத்தை மறக்காத
 பகுதிகளில் கருப்பட்டி உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து கொண்டுதான் இருக்கிறது.
 தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு
 கருப்பட்டி உற்பத்தி செய்யப்படுகிறது.

நாலரை லட்சம் பனை மரங்கள்!
வட்டன்விளை கிராமத்தைச் சேர்ந்த பனைபொருள் உற்பத்தியாளர்
 ராமச்சந்திரனை, அவரது பனை மரத் தோப்பில் சந்தித்தபோது...இருபது 
வருஷங்களுக்கு முன்ன சுமார் 790 ஹெக்டேர் பரப்பளவுல, சுமார் 4 லட்சத்து 50
 ஆயிரம் பனைமரங்கள் கற்பகவிருட்சமா பயன் தந்திட்டிருந்துச்சு. உள்ளூர் 
ஆட்கள் தவிர, திருநெல்வேலி, கன்னி-யாகுமரி மாவட்டங்கள்ல இருந்தும்
 பனைஏறும் தொழிலாளிகள் வந்து தங்கியிருந்து, மரம் ஏறுவாங்க. ஒரு
 நாளைக்கு ஒவ்வொரு மரத்துலயும் மூணு தடவை ஏறுவாங்க. அந்தக் 
காலத்துல ‘கள்‘ இறக்கறதுக்கு அனுமதி இருந்ததால... கள் வியாபாரம் 
அமோகமா நடந்துச்சு. பனை ஏறுற தொழிலை மட்டுமே நம்பி
 கிட்டத்தட்ட ரெண்டாயிரம் குடும்பங்கள் இருந்துச்சு. திரும்பிய
 திசையெல்லாம் கருப்பட்டித் தொழில் கமகமத்த காலம் அது என்று
 பனை பெருமை பேசினார்.

Saturday, September 14, 2013

கலைத் தொழிலை காப்பாற்றுங்கள்

73 வயது என்றால் நம்ப முடியவில்லை. கிரேஸ்லின் லியோனின் பேச்சு, பார்வை என எல்லாவற்றிலும் அத்தனை தெளிவு. அதையெல்லாம் தாண்டி  அசத்துகிறது அவரது கைத்திறன். பனை ஓலையில் கைவினைப் பொருள்கள் செய்வதில் நிபுணத்துவம் பெற்றவர் கிரேஸ்லின். சுற்றுச்சூழலுக்கு உகந்த  பனை ஓலையில் தட்டு, கூடை, சைக்கிள் கூடை, கிலுகிலுப்பை, தொப்பி, ஹேண்ட் பேக், பர்ஸ் உள்ளிட்ட பல பொருள்களையும் செய்கிறார்.  கைகளால் பின்னியது என்று நம்ப முடியாத அளவுக்கு ஒவ்வொன்றிலும் அத்தனை நேர்த்தி! 

பனை ஓலைக்குப் பின்னே பல கதைகள்!


பாராட்டுகளைப் பணிவாக ஏற்றுக் கொண்டபடி, அதன் பின்னணியில் உள்ள சோகக் கதையை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கிரேஸ்லின்.  ‘‘ஏழாவதுக்கு மேல படிக்க வீட்ல வசதியில்லை. மணப்பாடுதான் எனக்குப் பூர்வீகம். அங்கே பனையோலையில பொருள்கள் செய்யறதுதான்  பெரும்பாலான மக்களோட வாழ்வாதாரமே. ஒரு ரூபாய் வருமானம் வந்துச்சுன்னா, அதுல பத்து பைசாவை மணப்பாடு பெண் தொழிலாளர்கள் பனை  ஓலை கூட்டுறவு சங்கத்துக்கு கமிஷனா கொடுப்போம். 

அந்தப் பைசா அப்படியே சேர்ந்துக்கிட்டே வரும். கல்யாணத்துக்கோ, வேற அவசரத் தேவைக்கோ பணம் வேணுங்கிறப்ப அதை வாங்கிக்கலாம். அதை  ‘டவுரி பணம்’னு சொல்வோம். என்னோட 14வது வயசுலேருந்து பனை ஓலை பின்றேன். சென்னைக்கு வந்தேன். என் கணவர், என்னோட  கைவேலையைப் பார்த்து, டவுரி பணம் கூட வேண்டாம்னு சொல்லிட்டு, என்னை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டார். ‘சுற்றுச்சூழலைக் காப்பாத்துவோம்’னு உலகம் முழுக்க பிரசாரம் பண்றோம். 

ஆனாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருள்களை உபயோகிக்கிறதுல நம்ம மக்களுக்கு இன்னும் ஒரு தயக்கம் இருக்கவே செய்யுது. பனை ஓலை  பொருள்களை உபயோகிக்கிறதுல அந்தத் தயக்கம் கொஞ்சம் அதிகமாவே இருக்கிறதைப் பார்க்கறேன். கல்யாணத்துக்குப் பிறகும் நான் பனை ஓலைப்  பொருள்கள் செய்யறதை விடலை. நினைவு தெரிஞ்சு நான் செய்யற எந்தப் பொருளுக்கும்  இதுதான் விலைன்னு நிர்ணயம் பண்ணினதில்லை.  என்னோட வறுமையும் திறமையும் தெரிஞ்சு, என்னைத் தேடி வந்து, விரும்பிக் கேட்கறவங்களுக்குக் கொடுப்பேன். 

அவங்களா அதோட மதிப்பு தெரிஞ்சு கொடுக்கறதை மறுக்காம வாங்கிப்பேன். அன்புக்கு விலை வைக்க முடியுமா சொல்லுங்க...’’ என்கிறவரின்  வார்த்தைகளிலும் அதே அன்பின் பிரதிபலிப்பு.‘‘எங்க ஊரைச் சேர்ந்த பத்து பேர், சென்னையில பனை ஓலைப் பொருள்கள் பண்ணிட்டிருந்தாங்க.  செய்து வச்ச பொருள்களை வாங்க இங்கே ஆளில்லை. கையில உள்ள காசைப் போட்டு, ராத்திரி, பகலா பின்னி வச்ச பொருள்களை, சீண்ட  ஆளில்லாம, எலி கடிச்சுப் பாழானதுதான் மிச்சம். 

அவங்களுக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கே... விரக்தியில, அந்தப் பெண்கள் எல்லாரும் வீட்டு வேலை செய்யப் போயிட்டாங்க. எனக்கு  இதைவிட்டா வேற எதுவும் தெரியாது. மாற்றுத்திறனாளியான என் கணவருக்கோ, எனக்கோ அரசாங்கத்துலேருந்து வேற எந்தவிதமான சலுகைகளும்  இல்லை. மகளிர் சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்தவங்களுக்கு இந்தத் தொழிலை நான் கத்துக் கொடுக்க தயாரா இருக்கேன். ஆனா, அதுக்கான  ஆர்வமோ, பொறுமையோ யாருக்கும் இல்லை. 
Save the art business
இந்தத் தலைமுறைப் பெண்களுக்கு இன்னிக்கே ஒரு தொழிலைக் கத்துக்கிட்டு, நாளைக்கே பணம் பார்க்கணுங்கிற அவசரம்தான் இருக்கே தவிர, ஒரு  கலையைக் கத்துக்கணும்னோ, அதுல நிபுணத்துவம் பெறணும்னோ எந்த எண்ணமும் இல்லைங்கிறதைப் பார்க்கிறப்ப வருத்தமா இருக்கு. இந்த 73  வயசுலயும் என்னால ஒரு சின்ன பிசிறுகூட இல்லாம பின்ன முடியும்னா, அதன் பின்னணியில இருக்கிறது என் பசியும் வறுமையும்தான். ஓலையை  எண்ணி எண்ணி நான் பின்றதில்லை. பட்டினி கிடந்த வேளைகளையும், எதிர்காலத்தைப் பத்தின பயத்தையும் எண்ணி எண்ணிப் பின்றேன். 

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில இந்தப் பொருள்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. நம்மூர் மக்களுக்குத்தான் இதோட மவுசு தெரியலை.  எனக்குப் பிறகு இந்தத் தொழில் காணாமலே போயிடுமோங்கிற கவலைதான் பெரிசா இருக்கு. இத்தனை வயசுக்கு மேல, இந்தத் தொழிலை வச்சு நான்  லட்சங்களை சம்பாதிக்கப் போறதில்லை. என்னோட லட்சியமெல்லாம், இந்தக் கலையை ஆர்வமும் தேவையும் உள்ள அடுத்த தலைமுறைப்  பெண்களுக்குக் கொண்டு போய் சேர்க்கணுங்கிறது தான்...’’ - கண்களில் ஏக்கம் தேக்கிப் பேசுகிற கிரேஸ்லின், ஆர்வமுள்ளோருக்கு மூலப்  பொருள்களுக்கான தொகையை மட்டும் பெற்றுக் கொண்டு, இலவசமாக பயிற்சி அளிக்கக் காத்திருக்கிறார். (தொடர்புக்கு: 93809 46043)

-கிருஷ்ணமூர்த்தி
நன்றி குங்குமம்தோழி

Monday, February 27, 2012

பனை ஓலையில் பொருள் சேர்க்கலாம்

சுற்றுச்சூழலுக்குக் கேடு என்று தெரிந்தும், பிளாஸ்டிக் உபயோகத்தைக் கைவிடுவதாக இல்லை நாம். சாப்பிடுகிற சிப்ஸில் இருந்து, அணிகிற செருப்பு வரை சகலத்திலும் பிளாஸ்டிக் கலப்பு!

நாகை மாவட்டம் வேட்டைக்கார நெருப்பைச் சேர்ந்த பெரியநாயகி தயாரிக்கிற பொருள்கள் ஒவ்வொன்றும், பிளாஸ்டிக்குக்கு சரியான மாற்று! தொப்பி, தட்டு, கூடை, பை, பூக்கள், பூந்தொட்டி... இப்படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கக்கூடிய அத்தனை அயிட்டங்களையும், இயற்கைக்கு உகந்த பனை ஓலையில் செய்கிறார் இவர்.

‘‘அஞ்சாவதுக்கு மேல படிக்கலை. கூலி வேலைக்குப் போயிட்டிருந்தேன். மகளிர் சுய உதவிக் குழுவில சேர்ந்தா, சுய தொழில் பண்றதுக்கு பேங்க் கடன் கிடைக்கும்னு சொன்னாங்க. சேர்ந்தேன். பனை ஓலைல பொருள்கள் தயாரிக்கக் கத்துக் கொடுத்தாங்க. கடனும் கிடைச்சது. அஞ்சு வருஷமா இந்தத் தொழில்தான் சோறு போடுது’’ என்கிறார் பெரியநாயகி.பனை ஓலையில் செய்கிற கைவினைப் பொருள்களுக்கு இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறவர், இந்தக் கலையைக் கற்றுக்கொண்டு, தொழிலாகத் தொடங்க விரும்புவோருக்கு வழிகளைக் காட்டுகிறார்.

என்னென்ன தேவை? முதலீடு?
‘‘பனை ஓலை... ஒரு குருத்து 5 ரூபாய்லேர்ந்து 7 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். ஓலை கிழிக்கிற மெஷின், சாயம், அதைக் கலக்கறதுக்குப் பெரிய பாத்திரம்... அவ்வளவுதான். 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு போதும்.’’

என்னென்ன பொருள்கள்?
ஒரு நாளைக்கு எத்தனை?
‘‘விதம்விதமான கூடை, மாலை, தட்டு, தொப்பி, பை, முறம், பூங்கொத்து... இப்படி பத்துக்கும் மேலான அயிட்டங்கள் பண்ணலாம். ஒரு குருத்துல ஒரு அயிட்டம்தான் பண்ண முடியும். ஒரு நாளைக்கு 4 பீஸ் பண்ணலாம்.’’

விற்பனை வாய்ப்பு? லாபம்?
‘‘கோயில் திருவிழாக்கள்ல அதிகம் விற்பனையாகும். டூரிஸ்ட் அதிகம் வர்ற ஏரியாக்கள்ல உள்ள கடைகளுக்கு சப்ளை பண்ணலாம். கண்காட்சிகள்ல வைக்கலாம். பாதிக்குப் பாதி லாபம் நிச்சயம்.’’

பயிற்சி?
‘‘அவங்கவங்க வேகத்தையும் திறமையையும் பொறுத்து 15 முதல் 30 நாள் பயிற்சி... ஒருநாளைக்கு 100 ரூபாய் கட்டணம்.’’

Wednesday, December 7, 2011

கெத்தூப்பாட் (Ketupat),


மலேசியாவில் விழாக்காலங்களின் போது அந்தந்த இனத்தவரின் பிரபலமான உணவுகள் செய்து பரிமாறுவது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம். இப்போது முஸ்லிம்களின் நோன்பு பெருநாள். இவர்களின் பிரபலமான மூன்று உணவுகள் என்று சொன்னால் கெத்தூப்பாட் (Ketupat), லெமாங் (Lemang) மற்றும் டோடோல் (Dodol). இன்று இங்கே உங்களுக்கு கெத்துப்பாட் என்பது என்ன என்று அறிமுகப்படுத்தப்போகிறேன்.

கெத்துப்பாட் 5 வகை இருக்கின்றது. அவை: கெத்துப்பாட் நாசி, கெத்துப்பாட் பாலாஸ், கெத்துப்பாட் சாத்தே, கெத்துப்பாட் பசார் மற்றும் கெத்துப்பாட் பாவாங். மலேசியாவில் பிரபலமானது கெத்துப்பாட் நாசி மற்றும் கெத்துப்பாட் பாலாஸ். இதில் கெத்துப்பாட் பாலாள் வடக்கு மாநிலங்களான பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ்-இல்தான் பிரபலம்.

கெத்துப்பாட் நாசி:

இது சதுர வடிவத்தில் இருக்கும். தென்னைமர இலையில் சதுர வடிவத்தில் நெய்து அதில் அரிசியை போட்டு வேக வைப்பார்கள். இதன் வடிவத்தை நெய்வதுக்கு தனி பயிற்சி தேவை. சரியாக நெய்ய தவறினால், உள்ளே போட்ட அரிசி அதன் ஓட்டையில் வெளியாகிவிடும். இதன் முழு process 10 மணி நேரம் எடுக்கும். மலேசியாவில் ஊர் பகுதியில் உள்ளவர்கள் அண்டை அயலாருடன் சேர்ந்து செய்வார்கள். இப்படி செய்வதால் நேரத்தையும் சேமிக்க முடியும். அதே நேரத்தில் அண்டை அயலாருடன் நல்ல நட்புறவையும் அதிகரிக்க முடியும்.

ஆனால், இப்போதுள்ள காலக்கட்டத்தில் பட்டணத்தில் 10 மணி நேரம் என்பது அதிக நேரம் என்பதால், இவர்கள் நாசி இம்பிட் (Nasi impit) செய்வார்கள். கெத்துப்பாட் அரிசி ஏற்கனவே பைகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகிறது. அதை நாம் வாங்கி அப்படியே கூக்கரில் வேக வைத்து எடுத்து பரிமாறலாம்.

கெத்துப்பாட் பாலாஸ்:

பாலாஸ் என்பது பனை மரம். இந்த கெத்துப்பாட்டின் வெளிப்புரம் பனைமரத்து இலைகளினால் நெய்யப்பட்டதினால் கெத்துப்பாட் பாலாஸ் என்றழைக்கபடுகிறது. இது முக்கோண வடிவத்தில் இருக்கும். கெத்துப்பாட் நாடிக்கும் இதுக்கும் உள்ள இன்னொரு வேறுபாடு இதில் பூலூட் அரிசி (Glutinous rice) உபயோகிப்பார்கள்.

இவை இரண்டுக்கும் தொட்டுக்க என்ன உபயோகிக்கிறது என்று கேட்பீர்கள். சரியா? மேலே சொல்லப்பட்ட இரண்டும் சைவம்தான். கெத்துப்பாட் என்றாலே கச்சான் கறி (Kuah kacang) செய்வார்கள். இதுவும் சைவ ஐட்டம்தான். அசைவம் உண்போருக்கு கெத்துப்பாட்டை நீங்க கோழி ரெண்டாங் (Rendang Ayam) உடன் சப்பிடுவது சாப்பிடலாம். என்னைப்பொருத்தவரை கெத்துப்பாட் – கோழி ரெண்டாங் ஒரு சூப்பர் காம்பினேஷன்

பனை மரம் பொருள்கள்

அந்தக் கண்காட்சி அரங்கைக் கடந்த போது பொறிமுறை உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்த ஆறாவது அரங்குக்குச் செல்ல முடிந்தது. இன்றைய இளஞ்சந்ததி கண்டறியாத பொறிமுறை உபகரணங்கள் பல வைக்கப்பட்டிருந்தன. கடந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்து யாழ்ப்பாணத்து புழக்கத்தில் இருந்த பொறிமுறை உபகரணங்களான வானொலிப்பெட்டி, கிராம போன், கையால் இயக்கும் சிறிய தையல் இயந்திரம் போன்ற பல அவற்றுள் அடங்கும்.
அவற்றைக் கண்டவுடன் மூத்த சந்ததியர் தம் பழைய நினைவுகளை மீட்கத் தொடங்கியதையும், தம்மோடு வந்திருந்த இளஞ்சந் ததியினருக்கு, அந்தக் காலத்து நினைவுகளை விளக்கியதை யும் காணக்கூடிய தாக இருந்தது. அவற்றைப் பற்றிய விளக்கங்களை மாணவர்கள் அளித்திருந்தால் அந்த அரங்கில் கிடைத்த அனுபவம் மேலும் சிறப்பாக அமைந்திருக்கும்.
யாழ்ப்பாண வாழ்வியலுடன் பனை வளம் பின்னிப் பிணைந்தது. தெற்கிலிருந்து பயணிக்கும் போது யாழ்ப்பாணத்தை அண்மிக்கிறோம் என்பதன் அடையாளமாக அந்தப் பனை மரங்கள் இருந்தன. இன்று வழி நெடுகிலும் கலையிழந்து காட்சி தருகின்றன. கடந்த காலத்தின் கொடூர யுத்தம் அவற்றை அப்படி மாற்றியிருக்கிறது.
பனையைக் கற்பக தரு என்பர். கட்டும் வீட்டிலிருந்து படுக்கும் பாய் வரை பனை எம் நடைமுறை வாழ்வுடன் இயைந்ததாய் இருந்தது. ஆனால் நவீனம் அந்த வாழ்வியலைக் கைவிட வைத்து விட்டது எனலாம். அதனால் இன்றைய இளஞ்சந்ததியினருக்கு பனையின் அருமை தெரியவில்லை. அதைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஆர்வப்பட்டதாகத் தெரியவில்லை.
இந்தக் கண்காட்சி நிச்சயம் அவர்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வைத் தோற்றுவித்திருக்கும் என நம்பலாம். யாழ். குடாநாட்டு பழங்குடி மக்கள் பனை ஓலைகளால் வேயப்பட்ட வீடுகளிலேயே வாழ்ந்தார்கள். அது தவிர புதிதாக வீடு கட்டுவதற்கும் பனை மரங்களில் இருந்து பெறப்பட்ட மரக்குற்றிகள், சிலாகைகள், வளைவுகள் என்பவற்றை அவர்கள் பயன்படுத்தினார்கள். பனை மரம் மூலம் பெறப்பட்ட பொருட்களில் இருந்து கட்டப்பட்ட வீடுகள் வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் மழை காலத்தில் இதமான வெப்பத்தையும் கொடுத்தது. இதனால் வருடம் முழுவதும் சிறந்த சுவாத்தியத்துடன் அவர்கள் ஆரோக்கியமாகவும் மனநிறைவோடும் வாழ்ந்தார்கள்.
பாய், சுளகு, கொட்டைப் பெட்டி, பெட்டி, மூடு பெட்டி, கடகம், உறி, திருகணை, கூடை, பட்டை, பிளா, குடுவை, தட்டுவம், தொப்பி, நீத்துப்பெட்டி என வைக்கப்பட்டிருந்த எண்ணற்ற பனை உற்பத்திப் பொரு ட்கள் பிரமிக்க வைத்தன. எம் வாழ்வியல் எவ்வளவு தூரம் இயற்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது என்பதற்கு அவை ஒவ்வொன்றும் சான்று பகர்ந்தன. மின்சாரத்தைக் காணாத காலம் அது. குளிசாதனப் பெட்டிகள் இல்லை. ஆனால் இரவு ஓலைப் பெட்டியில் போட்டு மூடி வைத்த பிட்டு, காலையிலும் அப்போது தான் புதிதாக அவித்தது போல் இருப்பதன் இரகசியம் தான் என்ன? அது தான் பனை சொல்லும் வாழ்வு.
பனை ஓலைகளால் பொருட்களைப் பின்னுவதென்பது ஒரு அழகான, நயமான கலை. ஒவ்வொரு பொருளைப் பின்னுவதற்கும் ஒவ்வொரு நுட்பம் இருக்கும். அவை எல்லாம் இன்று காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன என்பது தான் கசப்பான உண்மை. மூத்த சந்ததிக்குத்தான் அந்த நுட்பங்கள் தெரிந்திருக்கின்றன. இடையிலே யுத்தம் ஒரு பெரிய சந்ததி இடைவெளியை ஏற்படுத்தி விட்டது.
இளஞ்சந்ததி சற்று ஆர்வமாகத்தான் இருக்கிறது. இங்கு சந்ததி இடைவெளிகள் நிரப்பப்படுவதும் அவசியமாகிறது. அதேவேளை மூத்த சந்ததி மறைய முதல் மூன்றாவது சந்ததிக்காவது அந்தக் கலை நுட்பங்கள் கடத்தப்பட வேண்டும். அவை எல்லாம் எமது கைகளில் தான் இருக்கின்றன.
பாடசாலைக் காலங்களில் வடலிக் குருத்தோலைகளில் செய்யக் கற்றுக்கொண்ட கைப்பணிகள் எல்லாம் மனக்கண்ணில் ஒரு கணம் வந்து போயின. இடப்பெயர்வுகளுக்குமப்பால் நவீனம் நோக்கிய எமது பயணமானது எம் பாரம்பரிய வாழ்வியலிலிருந்து எம்மை எவ்வளவு தூரம் தனிமைப்படுத்தி விட்டது என்பதை உணர முடிந்தது.
ஏறாத்தாழ 15 வருடங்களுக்கு முன்பு வடக்கில் மின்சாரமில்லை. தொலைக்காட்சி, கணனி முதலாய நவீன பொழுது போக்குகள் இல்லை. வீட்டிலிருக்கும் முதியவர்கள் பாடசாலை விடுமுறை நாட்களிலே, இந்த அருங்கலைகளை சிறார்களுக்கும் கற்றுத்தருவார்கள். அதை விட ஓய்வு நேரங்களில் பனையோலைப் பொருட்களைப் பின்னுவதே அவர்களது வேலையாக இருக்கும்.
தாம் தயாரித்த பொருட்களை வீட்டுத்தேவைகளுக்கு மட்டுமன்றி, அயலவர்களுக்கும் கூட அன்பளிப்பாகத் தருவார்கள். எங்காவது பயணம் போகும் போதும் கொண்டு சென்று கொடுப்பார்கள். அவற்றைப் பெற்றுக்கொண்டவர்கள்” “இது ஊரிலிருந்து ஆச்சி அப்பு கொண்டுவந்தது” என்று பெருமையாகக் கூறுவதை நாம் கண்டிருப்போம். அந்த அழகிய வாழ்வு இன்று எங்கே போய்விட்டது?
இங்கு வருத்தத்துக்குரிய விடயம் யாதெனில், இக்காலத்தில் இந்தப் பொருட்களையெல்லாம் பிளாஸ்டிக், கறையில் உருக்குப் பொருட்கள் பிரதியீடு செய்து விட்டன. நீண்டகாலப் பாவனையையும் இலகு தன்மையையும் கருத்தில் கொண்டு நாம் பணம் பொருட்களையும் கைவிட்டு விட்டோம்.
ஆனால் அந்த நீண்ட காலத்துக்கு நிலைக்கும் என எண்ணும் பிளாஸ்டிக் பாவனைப் பொருட்களால் எவ்வளவு தூரம் எம் சுற்றுச்சூழல் மாசடைகிறது என்பது பற்றி நாம் சிந்திப்பதில்லை. அவற்றால் எத்தனை கொடிய விளைவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன? ஏற்படப்போகின்றன என்பன பற்றியும் கவலைப்படுவதில்லை. நாம் கொண்டிருக்கும் இத்தகைய அலட்சியப் போக்கானது, எம் எதிர்காலச் சந்ததிக்கு ஒரு சுகாதாரமற்ற சூழலைத் தான் விட்டுவைக்கும்.
இது எமது உலகின் நிலை. ஏனெனில் யுத்தம் எம்மை ஒரு குறுகிய வட்டத்திற்குள் முடக்கி விட்டது.
யுத்தம் நிலவிய கடின சூழலில் அந்த நிலைமை தவிர்க்க முடியாததாகவும் இருந்தது. வெளி உலகில் என்ன நடக்கிறது என அறியும் ஆர்வம் எம்மக்களிடம் காணப்படவில்லை. ஏனெனில் தத்தமது பாடுகளைப் பார்ப்பதே அவர்களுக்குக் கடினமாக இருந்தது. ஆனால் யுத்தம் ஓய்ந்த இன்றைய சூழலில் நிலைமை வேறுபக்கமாகத் திரும்பியது. ஒரு காலம் தேடலுக்காகவே தன்னை அர்ப்பணித்த சமூகம், இன்று பணத்தின் காலடியில் விழுந்து கிடக்கிறதோ எனவும் எண்ணத்தோன்றும்.
பணத்துக்கு அத்துணை மரியாதை. அதனால் தேடல் காணாமல் போய்விட்டது. வெளியுலகத்தைப் பார்க்கும் ஆர்வம் அதிகரிக்கவில்லை. பணமிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற கொள்கை வேகமாகப் பரவி வருகிறது எனலாம்.
(தொடரும்)

எண்ணெய் பனை பயிரிட்டால் ரூ.1 லட்சம் அரசு மானியம்

மலேசியாவின் வருமானம் தரும் பயிரான எண்ணெய் பனைக்குப் பல்வேறு சிறப்பம்சங்கள்  உண்டு. காப்பி, தேயிலை போன்ற பயிர்கள் வளம் தரும்  மேற்குத் தொடர்ச்சி மலைக் குன்றுகளை மொட்டை அடித்ததுதான் மிச்சம். அவற்றால் ஒரு சொட்டு மழையைக் கூட தர இயலாது. வெறும் பணத்திற்காக அவற்றைப் பயிரிட்டு இலாபமடைந்து வருகிறார்கள் நம் முதலாளிகள். ஆனால் எண்ணைய் பனை மழைக் காடுகளாகவும் இருப்பதால் வருமானத்திற்கு வருமானம். சுற்றுச்சூழலுக்கும் நன்மை. இதை நம்மவர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
எண்ணெய் பனை
எண்ணெய் பனை
இனி செய்திக்கு வருவோம்
விழுப்புரம் மாவட்டத்தில் எண்ணெய் பனை பயிர் கடந்த 5 ஆண்டுகளாக சுமார் 2,500 எக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு எண்ணெய் பனை பயிரிடும் விவசாயிக்கு அரசு ரூ.1 லட்சம் மானியம் வழங்குகிறது.
  • ஒரு எக்டேருக்குத் தேவையான எண்ணெய் பனை கன்றுகள் வாங்க ரூ.9,998,
  • பயிரிடும் வயலுக்குச் சொட்டு நீர் பாசனக் கருவிகள் அமைக்க ரூ.15,000 மானியம்.
  • எண்ணெய் பனையுடன் மணிலா, பயறு, கரும்பு போன்ற பயிர்களை ஊடுபயிராகப் பயிரிடத் தேவையான இடுபொருள்களுக்கு ரூ.10,000 மானியமாக வழங்கப்படுகிறது.
  • பயிர் பதுகாப்பு மருந்துகள் நுண்ணுரம் முதலியவற்றுக்கு ரூ.5,000,
  • எண்ணெய் பனை பயிரிட்ட வயலுக்கு பாசன வசதி அளித்திட புதிதாகக் குழாய் கிணறு அமைக்க விரும்பினால் ரூ.50,000 மானியம்
  • சிறிய அளவில் மண்புழு உரத்தொட்டி அமைக்க ரூ.15,000 மானியமாக ஒரே விவசாயிக்குக் கிடைக்கும்.
எனவே விவசாயிகள் அரசு அளிக்கும் மானியத்தைப் பயன்படுத்தி எண்ணெய் பனை பயிட்டு பயன்பெறலாம்.
இது தொடர்பாக மேலும் விவரம் அறிய விரும்பும் விவசாயிகள். தங்கள் பகுதியில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள், வேளாண்மை விரிவாக்க மையங்கள் அல்லது 04146-222291 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்
தினமணி செய்திக்காக – விழுப்புரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ராஜேந்திரன்

பனை மரம்

இப்பூவுலகில் கோடிக் கணக்கான தாவரங்கள் (Plants) நிலத்திலும் நீரிலும் பரிணமித்துள்ளன என்பது தாவரவியலாளரது (Botanist) கூற்றாகும். விலங்குகளைப் (Animals) பொறுத்தவரை இனப் பெருக்கம் (Reproduction) மேற்கொள்வதற்கு ஏற்ற பக்குவத்தை பெண் இனமே தன்னத்தே கொண்டுள்ளது.
பொதுவாகத் தாவரங்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை, பப்பாசி என்பனவற்றில் ஆண் பனை, பெண் பனை, ஆண் பப்பாசி, பெண் பப்பாசி என்று தனித்தனி மரம் உண்டாகி வளர்கின்றன. ஆண் பனையும் ஆண் பப்பாசியும் முதிர்ச்சியடைந்ததும் பூத்துக் குலுங்குவதுடனே தமது வாழ்நாளைக் கடத்தி வருகின்றன என்றும் கூறலாம். காய், பழம், விதை என்பவற்றை இவற்றிலிருந்து பெறுவது முடியாத காரியமாகும்.
ஏலவே வட மாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் அதிக அளவு வளர்ந்து பயன் தருகின்ற பனை மரம் (Palmyra Tree) பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
தேக்க (Teak), கருங்காலி (Ebony)போன்ற வலிமை மிக்க காட்டு மரங்களை வீட்டு நிர்மாணப் பணிக்கும் ஏனைய தளபாடங்கள் தயாரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதே வலிமை பனை மரத்திற்கும் உண்டு என்பதால் இம் மரத்திலிருந்து பெறப்படும் கைமரம், சிலாகை என்பவற்றை வீட்டுக் கூரை ((Roof) நிர்மாணிப்பதற்கு இன்றும் பலர் பயன்படுத்திய வண்ணம் உள்ளனர்.
நம் நாட்டில் ஒருவர் சுமார் நூற்று ஐம்பது பனை மரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தால் அவரது குடும்ப பொருளாதாரம் (Economic) நலிவுறுவதற்கு சந்தர்ப்பம் உண்டாகாது.
‘கற்பகதரு’ என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற பனை மரத்திலிருந்து பெறப்படுகின்ற அனைத்து பொருட்களும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகமாகிக் கொண்டே இருக்கின்றமை கண்கூடு, குருத்தோலை, காவோலை, பனை ஓலை, பனை மட்டை, பனஞ்சிராய், பனை ஈர்க்கு, பன்னாடை, பனஞ்சாறு, வெல்லம், பனம் கற்கண்டு, சக்கரை, நுங்கு பனம் பழம், பனாட்டு, பனம் விதை, பனங் கிழங்கு, புழுக்கொடியல், பனங்கள், பனஞ் சாராயம் ((Palmyra Arrack)போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
இனி பனை மரத்தை வளர்த்தெடுப்பது பற்றி சிறிது பார்ப்போம். இலங்கையில் இம் மரங்கள் உலர் வலயங்களில் செழித்து வளர்ந்து பயன் தருகின்றன. நம் நாட்டில் மனைமரத்துக்கு பெயர்பெற்ற மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். கற்பகத்தருவை உற்பத்தி செய்ய பெரும் உழைப்போ மிகுந்த செல்வோ தேவைப்படாது.
பனம் விதையை சுமார் நாற்பது சென்ரி மீற்றர் ஆழத்தில் புதைத்து விட்டால் அது தானாகவே முளைத்து வளரக் கூடியது. வேலி அடைத்து காவல் காக்வோ அல்லது பசளையிட வேண்டிய அவசியமும் இல்லை. பெரும்பாலும் நூறு சதவீதமான விதைகள் முளைக்கின்றன.
பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என்று இரு வர்க்கங்கள் காணப்படுகின்றன. இது பனை மரத்திற்குள்ள சிறப்பு அம்சமாகும். பெண் பனை பூத்துக் காய்த்து பழுத்து இன விருத்தியைத் தொடருகின்றது. ஆண் பனை காய்ப்பதில்லை ஆனால் பெண் பனையைப் போன்று மற்றெல்லாம் பயன்களையும் நல்குகின்றது.
பனை மரத்தின் குருத்தோலையை எடுத்து ஈர்க்குகளை நீக்கிவிட்டால் பல்வேறு வகையான பாய்கள், ஓலைப் பெட்டி, பை, கடகம், விசிறி, சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள், தொப்பி, பணப் பை போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
Pannadai 1
முதிர்ந்த பனை மரத்தின் முற்றிய ஓலைகள் கிராமத்து வீடு வேய்வதற்குப் பெரிதும் பயன்படும். பனை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளில் வாழ்பவர்கள் சிறிதும் வெயில் வெப்பத்தினால் தாக்கப்பட மாட்டார்கள்.
மட்டையோடு கூடிய பனை ஓலை வேலி அடைப்பதற்குப் பெரிதும் பயன்படும். இந்தப் பனை ஓலை மட்டையின் இரு புறங்களிலும் மரம் அறுக்கும் வாளுக்கு இருப்பது போன்ற பற்கள் தென்படுகின்றன. இதனைக் கருக்கு என்றும் அழைக்கலாம். இதனால் நாய், நரி, ஓநாய் போன்ற பாலூட்டி விலங்குகள் (Mammals) பனை ஓலை வேலிகளை ஊடுருவிச் செல்ல முடியாது. மீறிச்செல்ல எத்தனித்தால் அவற்றுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வீடுகளைச் சுற்றியும் பனை ஓலை வேலிகளை அமைக்கலாம். பனை ஓலை கொண்டு அடைக்கப்பட்ட வேலி குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பழுதுபடாமல் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது என்கின்றனர்.
பழைய பனை ஓலைகளை உதவாது என்று எண்ணி யாரும் எரித்து விடுவதில்லை. சிலவற்றை விறகாகப் பயன்படுத்தியது போக மிகுதியை நெல், மிளகாய், புகையிலை முதலான செடிகள் பயிராகும் நிலங்களில் வெட்டிப் புதைத்துவிடுவார்கள். இதனால் மண்ணில் உண்டாகும் பயிர்கள் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.
பனை மரத்திலேயே முற்றி உலர்ந்து தானாகக் கீழே விழும் ஓலைக்கு காவோலை என்று பெயர். இந்தக் காவோலை விறகாகப் பயன்படுகிறது.பண்டைக்காலத்து மக்கள் தங்களுடைய விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதிய இலக்கியங்களை எல்லாம் பனை ஓலைகளினால் செய்யப்பட்ட ஏடுகளில் தான் எழுதி வைத்திருந்தார்கள். உலகம் போற்றும் திருவள்ளுவர்கூட தாம் யாத்த இணையற்ற திருக்குறளைப் பனை ஓலை ஏட்டில் தான் எழுதினார். சங்க இலக்கியங்கள் யாவும் பனை ஓலையினால் செய்யப்பட்ட ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டவைகளாகும்.
ஆதிகாலத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பனை ஓலையினால் தயாரிக்கப்பட்ட பறிகளையே பயன்படுத்தினார்கள்.
பனை ஓலையின் ஒரு பகுதி பனை ஈர்க்காகும். இந்த ஈர்க்கினால் முறம் (சுளகு) விளக்குமாறு என்பன தயாரிக்கப்படுகின்றன. பனை ஓலையினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெட்டிகள் மடங்காமலும் சுருங்காமலும், வளையாமலும் இருப்பதற்காக அமைக்கப்படும். சட்டத்தைத் தைப்பதற்கு பனை ஈர்க்கு பயன்படுகின்றது- பனை ஈர்க்கினால் கயிறு திரித்துக் கொள்வதுமுண்டு. திருகணை, உறி போன்ற சமையலறைப் பொருட்களும் ஈர்க்கினாலேயே தயாரிக்கப்படுகின்றன.
Pannadai
பனையிலிருந்து பெறப்பட்ட பன்னாடையை ஆதிகால மக்கள் தேன், நெய் முதலியவற்றை வடிகட்டுவதற்குப் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பனஞ்சாறு அல்லது பதநீர் மிகவும் சுவையுள்ள பணமாகும். இது பனை மரப் பாளையினின்றும் கிடைக்கின்றது.
இளம் பளம் பாளையைச் சுற்றி நாரினால் இறுகக் கட்டுவார்கள். பின்பு அப்பாளையின் முனையைச் சிறிதளவு சீவி அதன் உட்புறத்தில் சுண்ணாம்பு தடவிய மண் கலயத்தைக் கட்டிவிடுவார்கள். அந்தப் பாளையிலிருந்து கசியும் பனஞ்சாறு பானையில் விழுகின்றது. அதைத்தான் பதநீர் என்கின்றோம்.
இந்தப் பதநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் வெப்பம் குறைகின்றது. அத்துடன் பருகியவரை இது வீரியமடையச் செய்கின்றது.வெல்லம் பனஞ் சாற்றிலிருந்து பெறப்படுகின்றது. கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற வெல்லத்தை விட இது உடலுக்கு உகந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பனை வெல்லத்தில் பல ஆயுள்வேத மருந்துகளைக் கலந்து உண்டார்கள்.
பனஞ்சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பனங்கற்கண்டும் மருந்துக்கு பெரிதும் பயன்படுகின்றது-சித்த மருத்துவர்கள் பல மருந்துகளை பனங் கற்கண்டுடன் கலந்து உண்ணும்படி கூறுகின்றனர்.
பனஞ்சாற்றிலிருந்து சீனியையும் தயாரிக்கலாம். இது கரும்பிலிருந்து பெறப்படும் சீனியைப் போன்று வெண்மை நிறத்தைக் கொண்டிராது. ஐந்து சதாப்த காலங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டு தொழிலதிபர் ஒருவர் நம்நாட்டில் பனஞ்சாற்றிலிருந்து பனம் சக்கரை ((Java) தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை உருவாக்கினார். உற்பத்தியும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆனால் இலங்கை மக்கள் ஜாவா ((Java) விலிருந்து இறக்குமதியான சீனியை மிகவும் விரும்பி கொள்வனவு செய்ததினால் தொழிற்சாலை மூடப்பட்டது என்றும் அறிய முடிகின்றது.காய்க்கும் இயல்புடையது பெண்பனை ஆகுமென்று முன்னர் பார்த்தோம். பனங்காய் முற்றுவதற்கு முன்பு நுங்காகவே தென்படுகின்றன. இந்த நுங்கு மிகவும் சுவைமிக்கதாகும். இதை அருந்தினால் சோர்வும், களைப்பும் நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்.
வைத்தியர்களின் கூற்றின் பிரகாரம் இளம் நுங்கு வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குடலைத் (Intestine) துப்பரவு செய்வதுடன் வலுவூட்டும் பணியையும் மேற்கொள்கின்றது. வயது பேதமின்றி நுங்கை யாரும் சாப்பிடலாம்.
பனம் பழத்திலிருந்து பிழிந்து தயாரிக்கப்படுகின்ற பனாட்டு சுவை மிக்கது. பசி போக்கும் தன்மையும் கொண்டது. ஜாம் (Jam) சந்தைக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதினால் பனாட்டின் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி கண்டது என்றும் கூறலாம்.
நீண்ட நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக ‘ஏ’ ஒன்பது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததை நாமறிவோம். இதனால் வடபகுதியிலிருந்து பனை உற்பத்திப் பொருட்கள் தென் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது ‘ஏ’ ஒன்பது ((A-Nine)பாதை திறந்து போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்பியதினால் தென்பகுதி மக்களே வடபகுதி சென்று பனை உற்பத்திப் பொருட்களை சுளகு, ஒடியல், புழுக்கொடியல் என்பவற்றைக் கொள்வனவு செய்து எடுத்துச் செல்வதைக் காணமுடிகின்றது.
எனவே கற்பகத்தருவின் மகிமையை இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியமை உண்மை. கருங்காலிக்கு நிகர் கற்பக தரு என்பது நிதர்சனமாகும்.

Saturday, October 8, 2011

பனை.

1. மூலிகையின் பெயர் -: பனை.

2.
தாவரப் பெயர் -: BORASSUS FLABELLIFERA.
3.
தாவரக்குடும்பம் -: ARECACEAE.
4.
வகைகள் -: இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும்.

5.
பயன் தரும் பாகங்கள் -: நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

4.
வளரியல்பு -: பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், ஜாப்னா மற்றும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

5.
மருத்துவப் பயன்கள்- பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வே

1. மூலிகையின் பெயர் -: பனை.

2.
தாவரப் பெயர் -: BORASSUS FLABELLIFERA.
3.
தாவரக்குடும்பம் -: ARECACEAE.
4.
வகைகள் -: இது கூந்தல் பனை, மற்றும் கரும்பனை என இரு வகைப்படும்.

5.
பயன் தரும் பாகங்கள் -: நொங்கு, பனம்பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலியன.

4.
வளரியல்பு -: பனை கற்பக மரமாகும். கூந்தல் பனை, கரும்பனையில் கரும்பனையே மருத்துவ குணமுடையதாகும். பனை இந்தியாவில் தமிழ் நாட்டிலும், ஜாப்னா மற்றும் இலங்கையிலும் அதிகமாகக் காணப்படும். இது எல்லா மண்வளத்திலும் வளர்க்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பனை வைத்தவனுகுப் பயன் தராது என்பர். இதன் வளர்ச்சி ஆரம்பத்தில் மெதுவாக வளரும். நூறு ஆண்டுகள் உயிருடன் இருக்கும். இது தொண்ணூறு அடிக்கு மேல் வளரும். பனங்கை ஓலை 9 -10 அடி நீளம் வரை நீண்டிருக்கும். பக்கவாட்டில் அடுக்கடுக்காக பனங்கை வளர்ந்திருக்கும். இது விதை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

5.
மருத்துவப் பயன்கள்- பனை உடலுக்கு ஊட்டத்தை அளிப்பது. குளிர்ச்சி தருவது. வெப்பத்தைத் தணிப்பது, துவர்ப்பும் இனிப்பும் கலந்த சுவை உடையது.
பனை மரத்தின் பால் தெளுவு-தெளிவு எனப்படும். சுண்ணாம்பு கலவாதது கள் எனப்படும். வைகறை விடியல் இந்தப் பாலை 100 -200 மி.லி. அருந்தி வந்தால் போதும். உடல்குளிர்ச்சி பெறும். ஊட்டம் பெறும். வயிற்றுப் புண் நிச்சையம் ஆறிவிடும். புளிப்பேறிய கள் மயக்கம் தரும், அறிவை மயக்கும் ஆனல் உடல் நலத்தைக் கொடுக்கும். சுண்ணாம்பு சேர்த்த தெளிவு எல்லோருக்கும் சிறந்த சுவையான சத்தான குடிநீராகும். அதைக் காய்ச்சினல் இனிப்பான கருப்பட்டி கிடைக்கும்.
நுங்கு வெயிலின் கொடுமையைக் குறைக்க மனிதனுக்குக் கிடைத்த அரு மருந்தாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற சிறந்த சத்துணவாகும். நுங்கின் நீர் வேர்க்கருவிற்குத் தடவ குணமாகும்.
பனம்பழம் சிறந்த சத்துணவாகும். உயிர் சத்து நிறைந்தது. பித்தம் தருவது. சுட்டு சாப்பிடலாம்.
பனங்கொட்டையை மிருதுவான மண் அல்லது ஈர மணலில் புதைத்து வைத்து இரண்டு மூன்று இலை விட்ட பின் தோண்டி கொட்டைக்குக் கீழ் உள்ள நீண்ட கிழங்கை எடுத்து வேக வைத்துச் சாப்பிட்டால் மிகச் சிறந்த ஊட்ட உணவாகும். சிறு குழந்தைகளுக்கு உடலைத் தேற்றும்.
பனை மரத்தின் அடி பாகத்தில் கொட்டினால் நீர் வரும் அதை கருப்படை, தடிப்பு, ஊரல், சொறி உள்ளவர்களுக்கு அதன் மீது தடவினால் குணமடையும். ஐந்தாறு முறை தடவ வேண்டும்.
பனையோலை வேய்த இருப்பிடம்ஆரோக்கிய வாழ்வைத் தரும். வெப்பம் அண்டாது. இதில் விசிறி, தொப்பி, குடை, ஓலைச்சுவடி தயார் செய்யப் பயன் படும். கைவினைப் பொருள்கள் செய்யலாம். இந்தோனேசியாவில் ஓலையை எழுதும் பேப்பராகப் பயன் படுத்தினார்கள். அதைப்பக்குவப்படுத்த கொதிநீரில் வேக வைத்து மஞ்சள் பொடி இட்டு ஓரத்தில் ஓட்டைகள் போட்டு ஏட்டுப் புத்தகம் உண்டாக்கினார்கள்.
கண்ணில் புண் ஆனால் பனை குருத்து மட்டையைத் தட்டிப் பிழிந்த சாறு மூன்று நாள் விட குணமடையும் எரிச்சில் தீரும்.
அடிப்பனை வெட்டிசோறு செய்தார்கள். பனங்கையில் பிரஸ் செய்தனர். கயிறுகள் தயார் செய்தனர். வேலிக்கும் பயன் படுத்தினர். பனையின் எல்லாபாகமும் உபயோகப் படுத்தினார்கள்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites