இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, March 7, 2015

புதுமையான கஸ்டமைஸ்டு தோரணம்

ஏழாவது படிக்கிறதுலேருந்து கைவினைப் பொருட்கள் பண்றேன். இப்ப எனக்குக் கிட்டத்தட்ட 500 வகை கைவினைக் கலைகள் தெரியும். புதுசா எதைக் கத்துக்கிட்டாலும், அதுல என்னோட கிரியேட்டிவிட்டியை கலந்து, சின்னதா ஒரு வித்தியாசம் காட்டுவேன். அதுதான் என் ஸ்பெஷல்’’ என்கிறார் பாலக்காட்டைச் சேர்ந்த ஜோதிலட்சுமி. கேரளாவில் பரபரப்பான கைவினைக் கலைப் பயிற்சியாளராக இருக்கும் ஜோதிலட்சுமியின் லேட்டஸ்ட் கண்டுபிடிப்பு கஸ்டமைஸ்டு தோரணம்!

அதென்ன கஸ்டமைஸ்டு தோரணம்?

‘‘மணி, முத்து, பேப்பர், உட்... இப்படி எதை வேணாலும் வச்சு தோரணம் பண்ணலாம். நான் பண்றதுல கிரிஸ்டல் உருவங்கள் மட்டுமே இருக்கும். கேரளாவுல இந்த கிரிஸ்டல் உருவங்கள் எனக்குக் கிடைச்சது. கிரிஸ்டல் என்பதால ரெண்டு பக்கமும் டிரான்ஸ்பரன்ட்டா இருக்கும். எந்தப் பக்கத்துலேருந்து பார்த்தாலும் பளபளக்கும். அதை வச்சு தோரணம் பண்ணினப்ப பயங்கர வரவேற்பு. கணபதி, குபேரன்னு சாமி உருவங்கள்லயும் யானை, மயில் உருவங்கள்லயும் கிரிஸ்டல் கிடைக்குது. 

சாமி ரூமுக்கு, வரவேற்பறைக்கு இந்தத் தோரணங்களை மாட்டறதால வீட்டோட அழகும் கூடும். பிறந்தநாள், கல்யாணம், கிரஹப்ரவேசம்னு எந்த நல்ல நிகழ்ச்சிக்கும் அன்பளிப்பா கொடுக்கப் பொருத்தமானது இந்தத் தோரணம்...’’ என்கிற ஜோதிலட்சுமி, இந்தத் தோரணங்களிலேயே சம்பந்தப்பட்டவரின் போட்டோவை லேமினேட் செய்து இணைத்துச் செய்கிற புதுமையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ‘‘குழந்தைங்களோட ரூம்ல அவங்களோட போட்டோஸ் வச்ச தோரணம் மாட்டினா சந்தோஷப்படுவாங்க. 

மகனுக்கோ, மகளுக்கோ கல்யாணமாகிப் போற போது, அவங்க குடும்ப போட்டோக்களை வச்சு தோரணம் பண்ணி அன்பளிப்பா கொடுக் கிறதை விரும்பறாங்க. போட்டோவை வாங்கி, லேமினேட் பண்ணி, விருப்பமான ஷேப்ல கட் பண்ணி, தோரணத்துக்கு இடையில இணைச்சுக் கொடுக்கிறதுக்கு நிறைய வரவேற்பு இருக்கு...’’ என்பவர், தோரணத்தையே வீட்டின் அறையின் நடுவில் பிரிக்கும் திரையாகவும் பயன்படுத்த ஐடியா கொடுக்கிறார்.‘‘பட்டு நூல் பந்துகள், கிரிஸ்டல் மணிகள், கிரிஸ்டல் உருவங்கள், வளையம், நூல்னு ஒரு தோரணம் செய்யத் தேவையான பொருட்களுக்கு 750 ரூபாய் முதலீடு வேணும். 

இதுல பட்டுநூல் பந்துகள் ரெடிமேடா கடைகள்ல கிடைக்குது. அதைவிட நாமளே செய்யறதுல பணம் மிச்சமாகும்னு அதைச் செய்யவும் நானே கத்துக் கொடுக்கறேன். ஒரு தோரணத்தை 1,000 ரூபாய் வரைக்கும் விற்கலாம். போட்டோ வச்சதுன்னா இன்னும் கொஞ்சம் காஸ்ட்லி. தோரணத்தைப் போய் இவ்ளோ ரூபாய் கொடுத்து வாங்கு வாங்களானு நினைக்க வேண்டாம். பெரிய வீடுகள்ல சாதாரண தோரணம் மாட்ட யாரும் விரும்ப மாட்டாங்க. அங்கல்லாம் இந்த மாதிரி டிசைனர் தோரணங்களுக்கு ஆர்டர் வாங்கலாம். 

ஒரு நாளைக்கு 6 தோரணம் வரைக்கும் செய்யலாம். அசதியைக் கொடுக்காத அசத்தலான பிசினஸ் இது’’ என்கிற ஜோதியிடம், ஒரே நாள் பயிற்சியில் 3 வகையான தோரணம்,  திரைச்சீலை,  ஊதுவர்த்தி ஸ்டாண்ட்,  மாலை என அத்தனையையும் கற்றுக் கொள்ள தேவையான பொருட்களுடன் சேர்த்துக் கட்டணம் 1,000 ரூபாய். (090481 10272)

அழகான கார் டேங்ளர்ஸ்

திங்க் பிக்’ என்பார்கள். சென்னையைச் சேர்ந்த ராணியோ, அதையே உல்டாவாக சிந்தித்திருக்கிறார். ‘திங்க் ஸ்மால்’ என்கிற அவரது ஐடியாதான் இன்று அவரை பரபரப்பான தொழில் முனைவோராக வைத்திருக்கிறது. பெரிய பெரிய பொம்மைகள் செய்யத் தெரிந்தாலும், குட்டிபொம்மை களுக்கான வரவேற்பை அறிந்து, அதிலேயே கவனத்தைத் திருப்பி வெற்றி கண்டவர் இவர்!

‘‘பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எல்லாரையும் போலத்தான் நானும் பொழுதுபோக்கா நிறைய கைவேலைகளைக் கத்துக்கிட்டேன். ஹேண்ட் எம்பிராய்டரி, மியூரல், ரங்கோலி, பொம்மை பண்றதுனு நிறைய தெரியும். ஒரு ஸ்கூல்ல கிராஃப்ட் கிளாஸ் எடுக்கறேன். குழந்தைங்களுக்காக குட்டிக்குட்டி பொம்மைகள் பண்ணிக் காட்டுவேன். அப்படி நான் பண்ற பொம்மைகளை நிறைய பேர் கார்ல தொங்கவிட வாங்கிட்டுப் போயிருக்காங்க. தொடர்ந்து அந்த பொம்மைகளுக்கு நிறைய வரவேற்பு இருக்கிறது தெரிஞ்சதும், கார் டேங்ளர்ஸ் பண்றதுலயே ஸ்பெஷலைஸ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். 

கார்ல தொங்க விடறதுக்கு மட்டுமில்லாம, இன்னிக்கு காலேஜ் பொண்ணுங்க, அவங்களோட ஹேண்ட்பேக்ல குட்டியா ஒரு பொம்மையை தொங்கவிடறதை ஃபேஷனா வச்சிருக்காங்க. அவங்களுக்கும் நிறைய சப்ளை பண்றேன்’’ என்கிற ராணி, கார்களில் தொங்கவிடக் கூடிய குட்டிக் குட்டி பொம்மைகள் தயாரிக்கிறார். ‘‘ஃபர் கிளாத், ஃபெல்ட் கிளாத், ஊசி, நூல், கத்திரிக்கோல், பொம்மைகளுக்கு வைக்கிற கண், மூக்கு, உள்ளே வைக்கிற நைலான் பஞ்சுனு தேவையான பொருட்களுக்கு 500 ரூபாய் முதலீடு போதுமானது. 1 மீட்டர் துணியில 4 முதல் 5 பொம்மைகள் வரை பண்ணிடலாம். ஒரு நாளைக்கு 3 பொம்மைகள் வரை தைக்கலாம். தையல் மெஷின் தேவையில்லை. கையாலயே தச்சிடலாம். ஆரம்ப விலை 40 ரூபாய்.  மாடலையும் கற்பனைத் திறனையும் பொறுத்து விலையை ஏத்தலாம். 

25 சதவிகிதம் லாபம் தங்கும். கார் டேங்க்ளர் பொம்மைகள் பண்ணத் தெரிஞ்சாலே, பெரிய பெரிய பொம்மைகளையும் சுலபமா பண்ணிடலாம். அடிப்படை தையல் ஒண்ணுதான். அதுக்கான  முதலீடும் லாபமும் இன்னும் அதிகம்’’ என்கிறவரிடம் ஒரே நாள் பயிற்சியில் 5 மாடல் கார் பொம்மை களைக் கற்றுக் கொள்ள, தேவையான பொருட்களுடன் கட்டணம் 750 ரூபாய். (94450 92276)

விதம் விதமான பிரியாணி


எதற்கெடுத்தாலும் ட்ரீட் கேட்கிற மக்களின் முதல் சாய்ஸ் பிரியாணி. தினமுமே பிரியாணி சாப்பிட்டாலும் அலுக்காது சிலருக்கு. எங்கே, என்ன பிரியாணி பிரபலம் எனத் தேடித் தேடி ருசி பார்க்கிற கூட்டமும் உண்டு. பிரியாணி விஷயத்தில் மட்டும் மக்கள் அத்தனை சீக்கிரத்தில் திருப்தி அடைவதில்லை. எங்கே சாப்பிட்டாலும், எப்போதும் ஏதோ ஒன்று குறைவதாகவே உணர்வார்கள். குறிப்பாக வீட்டுச் சுவை எந்த பிரியாணியிலும் இருக்காது. சென்னை திருமழிசையைச் சேர்ந்த விஜயலட்சுமியின் கைவண்ணத்தில் தயாராகிற விதம் விதமான பிரியாணிகளில் சுவை, மணம், வீட்டில் தயாரித்தது போன்ற உணர்வு என எல்லாம் உண்டு!

‘பி.ஏ. இங்கிலீஷ் லிட்ரேச்சர் படிச்சிருக்கேன். பத்து வருஷமா பியூட்டிஷியனா இருக்கேன். அதுதான் என்னோட முழு நேரத் தொழில். வீட்ல வெரைட்டியா சமைச்சு எல்லாருக்கும் பரிமாறுவேன். குறிப்பா பிரியாணி செய்யறதுல நான் எக்ஸ்பர்ட். வாரம் ஒரு வெரைட்டியில பிரியாணி பண்ணுவேன். சைவம், அசைவம்னு நான் பண்ற எல்லா பிரியாணிக்கும் என் ஃப்ரெண்ட்ஸ், சொந்தக்காரங்க மத்தியில பயங்கர வரவேற்பு. ‘வீட்ல ஒரு சின்ன ஃபங்ஷன். கொஞ்சம் பிரியாணி பண்ணித் தரீங்களா’னு கேட்க ஆரம்பிச்சாங்க. அதை சாப்பிடறவங்க பாராட்டறதோட, அவங்கவங்க வீட்டு விசேஷங்களுக்கும் என்கிட்ட ஆர்டர் கொடுத்து பண்ணித் தரச் சொல்லிக் கேட்டாங்க. 

அப்புறம்தான் இதையும் ஒரு சைடு பிசினஸா பண்ண ஆரம்பிச்சேன்...’’ என்கிற விஜயலட்சுமிக்கு 15க்கும் மேலான பிரியாணி வகைகள் செய்யத் தெரியுமாம். ‘‘அசைவத்துல சிக்கன், மட்டன், முட்டை, இறால் பிரியாணி உள்பட நிறைய தெரியும். சைவத்துலயும் வெஜிடபிள், மஷ்ரூம், பனீர், செஷ்வான்னு ஏகப்பட்டது செய்வேன். பொதுவா பிரியாணியோ, ஃப்ரைடு ரைஸோ அதுல செயற்கையான  கலரும் சுவையூட்டியும் சேர்க்காமப் பண்ண மாட்டாங்க. நான் செயற்கையா எதையும் சேர்க்கறதில்லை. 

ஆரோக்கியமான முறையில செய்யறதுதான் இன்னிக்கு எனக்கு ஆர்டர் குவியக் காரணம்...’’ என்பவர், 3 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் பிரியாணி தயாரிக்கும் பிசினஸில் இறங்க முடியும் என நம்பிக்கை தருகிறார். ‘‘ஒரு கிலோ சிக்கன் பிரியாணி 700 ரூபாய்க்கும், மட்டன் பிரியாணி 1,000 ரூபாய்க்கும், வெஜிடபிள் பிரியாணி 400 ரூபாய்க்கும் பண்ணித் தரேன். கடைகளைவிட விலை குறைவு. 1:1 விகிதத்துலதான் பண்ணுவேன். நல்லா சமைக்கத் தெரிஞ்சவங்களுக்கு, அதுலயும் பிரியாணி பண்ணத் தெரிஞ்சவங்களுக்கு இது சூப்பர் பிசினஸ்’’ என்கிறவரிடம், ஒரே நாள் பயிற்சியில் 5 விதமான பிரியாணி வகைகளைக் கற்றுக் கொள்ளக் கட்டணம் 750 ரூபாய். ( 98402 97976)

செல்லப் பிராணிகள்சென்னை, கே.கே.நகரில் உள்ள பாக்யலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பவர்கள் அவர் வீட்டுச் செல்லப் பிராணிகள். குட்டியும், பெரிசுமாக வீடு கொள்ளாத செல்ல நாய்களின் கூட்டம்... நாய்க்குட்டிகளை வளர்த்து விற்பனை செய்கிற வேலையை அத்தனை அன்பாகச் செய்கிறார் பாக்யலட்சுமி!

‘‘என் பொண்ணுக்கு பக் இன நாய்க்குட்டி ஒண்ணு கிஃப்ட்டா வந்தது. அதை ஆசையா வளர்த்திட்டிருந்தோம். அதை வளர்க்கிற அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்ல ஒரு நபரா நேசிச்சோம். நாய்கள் மேல எங்க பிரியம் அதிகமானதால, செயின்ட் பெர்னார்டு இன நாய்க்குட்டி ஒண்ணு வாங்கினோம். முதல்ல வாங்கின பக் நாய் 6 குட்டிகள் போட்டது. தெரிஞ்சவங்க எல்லாரும் எங்களுக்கு ஒரு குட்டி கொடுங்கனு கேட்க ஆரம்பிச்சாங்க.  உடனடியா 3 குட்டிகள் வித்துப் போச்சு. நாய்க்குட்டிகளை வளர்க்கறதுங்கிறது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அனுபவம். 

மனுஷங்களைப் போலவே பார்த்துக்கணும். பெண் குட்டியா இருந்தா அதுக்கும் மாதவிடாய் வரும். ரெண்டாவது முறை மாதவிடாய் வந்ததும் அதை இனப்பெருக்கத்துக்கு விடணும். இனப்பெருக்கத்துக்கு விடப்படற ஆண் நாயோட சொந்தக்காரங்களுக்கு ஒரு குட்டியோ அல்லது அதுக்கான பணத்தையோ கொடுத்துடணும். நாயோட கர்ப்ப காலம் 2 மாசம். குட்டிகள் போட்டதும் 50 நாட்கள் கழிச்சுதான் விற்கணும். ஒவ்வொரு இன நாய்களுக்கும் என்ன சாப்பாடு கொடுக்கணும், எப்படிப் பார்த்துக்கணும்கிற தகவல்களை அவசியம் தெரிஞ்சு வச்சிருக்கணும். 

நாய் குட்டி போட்டதும், அதுங்களோட பிறந்த தேதி, அம்மா பேர் எல்லாம் குறிச்சு வைக்கணும். விற்கற போது அந்தத் தகவல்களைப் பார்த்துதான் வாங்குவாங்க. செல்லப் பிராணிகள் மேல அன்பு இருக்கிறவங்களுக்கு இந்த பிசினஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்’’ என்கிற பாக்யலட்சுமி, 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்க நம்பிக்கை அளிக்கிறார். ‘‘நாய்க்குட்டி வாங்கற செலவு, அதுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவச் செலவுனு எல்லாம் இதுல அடக்கம். யாருக்கு என்ன மாதிரித் தேவைனு பார்த்து அதுக்கேத்த இனமா வளர்க்கலாம். 

சிலர் ஆசைக்காக வளர்க்க விரும்புவாங்க. அவங்களுக்கு பக், பொமரேனியன் மாதிரி அமைதியான நாய்க்குட்டிகள் பிடிக்கும்.  ராட்வீலர், லெசப்சோ, செயின்ட் பெர்னார்டுனு நிறைய இனங்கள் இருக்கு. எந்த இனமா இருந்தாலும் 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற பாக்யலட்சுமியிடம் நாய் வளர்ப்பு, அவற்றுக்கான உணவுகள், பராமரிப்பு, இனப்பெருக்கம், விற்பனை என எல்லாவற்றுக்கும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். கட்டணம் 300 ரூபாய். (98408 44181)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites