இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label வாழை நாரின் பயன். Show all posts
Showing posts with label வாழை நாரின் பயன். Show all posts

Wednesday, March 30, 2016

விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன் வாழை...

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.

*தரகர் இல்லாத விற்பனையில் அதிக லாபம்.

*ஒரு தாரில் 100 பழங்கள்.

*ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்.

*மாசிப்பட்டம் ஏற்றது.

*செம்மண்ணில் நன்றாக வளரும்.

ரசு கொள்முதல் செய்யாத அல்லது குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்காத எந்தவிளைபொருளுக்கும் விலை உத்தரவாதம் கிடையாது. அதற்கு வாழையும் விதிவிலக்கல்ல. மாதப் பயிர்களில் வெள்ளாமை செய்யும் பயிர்களுக்கு விலை கிடைக்காமல் போனாலே, விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். இந்த நிலையில் வாழை போன்ற ஆண்டுப் பயிர்களுக்கு விலை இல்லாமல் போனால், என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஆனால், ‘வாழை சாகுபடியில் அப்படிப்பட்ட சூழ்நிலையையும் எளிதாக சமாளித்து நஷ்டமில்லாமல் சம்பாதிக்க முடியும்’ என்கிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிவண்ணப் பெருமாள். தற்போது பரவலாக அனைத்து ரக வாழைகளுமே விலை வீழ்ச்சியடைந்துள்ள சூழ்நிலையிலும் கூட... விற்பனையில் சில விஷயங்களைக் கடைபிடிப்பதன் மூலம், நிலையான விலையில் விற்பனை செய்து லாபம் பார்த்து வருகிறார், மணிவண்ணப் பெருமாள்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் இளையநயினார்குளம் கிராமத்தில் உள்ளது, மணிவண்ணப் பெருமாளின் வாழைத்தோட்டம். பஞ்சகவ்யா தயாரிக்கும் பணியில் இருந்த மணிவண்ணப் பெருமாளிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டவுடன் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். 

‘பசுமை விகடன்’ தூண்டிய விவசாய ஆசை!

“நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே நாகர்கோவில்லதான். பூர்வீகமாவே நாங்க விவசாயக் குடும்பம். ஆனா, நான் சின்ன வயசுல விவசாயம் செஞ்சதில்ல. டிப்ளமோ இ.சி.இ படிச்சிட்டு கோயம்புத்தூர்ல நாலு வருஷம் வேலை பார்த்தேன். பிறகு, நாகர்கோவிலுக்கே திரும்பி வந்து மளிகைக் கடை வெச்சிருந்தேன். 1993-ம் வருஷத்துல நம்மாழ்வாரைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். அவர் எழுதின கட்டுரைகளையெல்லாம் படிக்க ஆரம்பிச்சதும் இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. ஆனாலும் விவசாயத்தை ஆரம்பிக்கலை.  அப்பறம் ‘பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சது. அதை, முதல் இதழ்ல இருந்து படிச்சுக்கிட்டு இருக்கேன். இதுவரை வெளியான அத்தனைப் புத்தகங்களையும் பத்திரமா பொக்கிஷம் மாதிரி வெச்சிருக்கேன். அதைப் படிக்க படிக்கத்தான் விவசாயத்து மேல அதிக ஆர்வமும், இயற்கை விவசாயம் செய்யணும்கிற எண்ணமும் வந்துச்சு.

பாடம் சொல்லித்தந்த வாழை!

ஆறு வருஷத்துக்கு முன்னாடிதான் இந்த ஊருக்கு (இளையநயினார்குளம்) வந்து இந்த நிலத்தை வாங்கினோம். இது, என் மனைவி ஊர். இந்த நிலம் மொத்தம் ஒன்பதரை ஏக்கர். செவல் கலந்த மணல். 2012-ம் வருஷம்தான் முதல்முறையா அரை ஏக்கர் நிலத்துல கற்பூரவல்லி வாழை சாகுபடி செஞ்சேன். முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்ததால காய்கள் நல்லா திரட்சியாத்தான் இருந்துச்சு. ஆனா, விலை கிடைக்கலை. இனிமேல் வாழையே சாகுபடி செய்யக்கூடாதுனு முடிவெடுத்துட்டேன்.

அடுத்து அரை ஏக்கர் நிலத்துல கத்திரி, அரை ஏக்கர் நிலத்துல குட்டைப்புடலைனு சாகுபடி செஞ்சேன். ‘விவசாயியே வியாபாரியா மாறணும்’னு நம்மாழ்வார் ஐயா அடிக்கடி சொல்வார். அதை மனசுல வெச்சு காய்கறிகளை நாமளே விற்பனை செய்யலாம்னு முடிவு செய்து நாகர்கோவில்ல இருக்கிற கடைகளுக்கும் உள்ளூர் கடைகளுக்கும் நேரடியா விற்பனை செய்தேன். ஒருகட்டத்துல உள்ளூர்லயே நல்ல விற்பனை வாய்ப்பு கிடைச்சதால வெளியூர்களுக்குப் போறதை நிறுத்திட்டேன்” என்று சொல்லும்போது, மணிவண்ண பெருமாளுக்கு செல்போனில் ஓர் அழைப்பு வர அதற்கு பதிலளித்து விட்டு, நம்மிடம் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.
விற்பனைக்கு வில்லங்கமில்லா பேயன்!

“நாகர்கோவில் சந்தைக்குப் போகும் போதுதான் நேந்திரன் ரக வாழையை எடை முறையில விற்பனை செய்றதைப் பாத்தேன். வாழை குறித்து விசாரிச்சப்போ, பேயன் ரக நாட்டு வாழைக்கு எப்பவும் தேவை இருக்கிறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். உடனே ஒரு ஏக்கர் 60 சென்ட் பரப்புல பேயன் ரக வாழையை நடவு செஞ்சுட்டேன். இப்போ, அறுவடை பண்ணிக்கிட்டு இருக்கேன். மத்த ரக வாழைகளுக்கு இப்போ விலை குறைவா இருக்கிற நேரத்துலயும் எனக்குக் கட்டுப்படியான விலை கிடைச்சுக்கிட்டிருக்கு. இப்போ, வாழை தவிர்த்து, 60 சென்ட் நிலத்துல சம்பங்கியும் இருக்கு. மீதி நிலத்தை  உழுது போட்டிருக்கேன். ரெண்டு ஏக்கர் நிலத்தில் தென்னையும், மீதமுள்ள இடத்தில் சுழற்சி முறையில் காய்கறிகளும், கீரைகளும் போடலாம்னு இருக்கேன்” என்ற மணிவண்ணப் பெருமாள், தனது விற்பனைச் சூத்திரத்தைச் சொல்ல ஆரம்பித்தார்.

பழமாகத்தான் விற்பனை!

“நான், இயற்கை விவசாயத்துல விளைவிக்கிறதால சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலினு மூணு ஊர்கள்ல உள்ள இயற்கை அங்காடிகள்லதான் வாழையை விற்பனை செய்றேன். அதனால, இருக்கிற ஆர்டரை பொறுத்துதான் குலையை வெட்டுவோம். மொத்தமா, அத்தனை வாழைக்குலைகளையும் (வாழைத்தாரைத் தான் இப்படிச் சொல்கிறார்கள்) வெட்டி விற்பனைக்கு அனுப்புறப்போதான் விலை கிடைக்காம கஷ்டம் வரும். மாசத்துக்கு 10 குலையில இருந்து 50 குலை வரைதான் வெட்டுவோம். குலை வெட்டுனதும் ஒரு ரூமுக்குள்ள அடுக்கி... மண்பானையில் வாழைச் சருகை வெச்சு ஒரு ராத்திரிக்கு புகைமூட்டம் போடுவோம். காலையில 6 மணிக்கு குலைகள்ல இருந்து சீப்பு சீப்பாக வெட்டி எடை போட்டு பேப்பர் சுற்றி விற்பனைக்கு அனுப்புவோம். இப்படி மூட்டம் போட்ட காய், அடுத்தநாள் சாயங்காலம்தான் மஞ்சள் நிறத்துக்கு வரும். இதை அஞ்சு  நாள் வரை கூட வெச்சு விற்பனை செய்ய முடியும். கடைகளுக்கு அனுப்புறது போக, உள்ளூர்க்காரங்க எங்க வீட்டுக்கே வந்தும் வாங்கிட்டுப் போறாங்க” என்றார்.
ஒரு கிலோவுக்கு 10 பழங்கள்!

நிறைவாக  மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த மணிவண்ணப் பெருமாள், “ஒரு குலையில் உள்ள பழங்கள், 6 கிலோ முதல் 10 கிலோ எடை வரை இருக்கும். ஒரு குலையில 10 சீப்புகள் வரை இருக்கும். ஒரு கிலோவுக்கு 10 பழங்கள் வரை இருக்கும். ஒரு குலையில இருந்து சராசரியா 7 கிலோ அளவுக்கு பழங்கள் கிடைக்கும். ஒரு கிலோ 35 ரூபாய்ல இருந்து 45 ரூபாய் வரை விலை போகும். இதுவரை (16.03.16) 820 கிலோ பழங்களை அறுவடை பண்ணி,  கிலோ 35 ரூபாய்னு விற்பனை செய்ததுல 28 ஆயிரத்து 700 ரூபாய் கிடைச்சிருக்கு. ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்துல 1,900 கன்னுகள் வரை நட்டாலும் 1,800 மரங்கள்தான் தேறும். இன்னும் கிட்டத்தட்ட 12 ஆயிரம் கிலோ வரை அறுவடை பண்ணலாம். அதுல சொத்தைக்காய்கள், வீணான காய்கள் எல்லாம் போக 9 ஆயிரம் கிலோ பழங்கள் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். 9 ஆயிரம் கிலோ பழங்களுக்கும் குறைந்தபட்ச விலையா 35 ரூபாய் கிடைச்சாகூட 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அந்தக் கணக்குல மொத்த வருமானம்னு பார்த்தா 3 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். அதுல 69 ஆயிரம் ரூபாய் வரை செலவு போக, எப்படியும்  2,74,000 ரூபாய்  லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்’ என்றவர்  அறுவடையில் மும்முரமானார். 
தொடர்புக்கு,
மணிவண்ணப் பெருமாள்,
செல்போன்: 98651-31290.

முக்கோண நடவில் செழிக்கும் வாழை!

ஒரு ஏக்கர் 60 சென்ட் நிலத்தில் பேயன் வாழை சாகுபடி செய்யும் விதம் குறித்து மணிவண்ணப் பெருமாள் சொன்ன விஷயங்கள் இங்கே...

6 அடி இடைவெளி!

வாழை சாகுபடிக்கு வடிகால் வசதியுள்ள அனைத்து மண் வகைகளும் ஏற்றவை என்றாலும், செம்மண் நிலம் மிகவும் ஏற்றது. மாசிப்பட்டம்தான் வாழைக்குச் சிறந்த பட்டம். தை மாதம் தொடக்கத்தில் உழுது 20 நாட்கள் இடைவெளி விட்டு 2 டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி அடுத்த உழவு செய்ய வேண்டும். அடுத்து 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் ஓர் உழவு செய்து... வரிசைக்கு வரிசை 6 அடி, செடிக்குச் செடி 6 அடி என்ற இடைவெளியில்  முக்கோண நடவு முறையில் குழி எடுக்க வேண்டும். குழியின் அளவு அரை அடி சதுரம், ஓர் அடி ஆழம் இருக்க வேண்டும். இந்தக் கணக்கில் 1 ஏக்கர் 60 சென்ட் பரப்பில் 1,900 குழிகள் வரை எடுக்கலாம்.

பஞ்சகவ்யாவில் விதைநேர்த்தி!


ஒரு குழிக்கு ஒரு விதைக்கிழங்கு என்ற விகிதத்தில் நடவு செய்ய வேண்டும். நல்ல தரமான விதைக்கிழங்குகளைத் தேர்வு செய்து... அவற்றை 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா கலந்த கரைசலில் மூழ்க வைத்து எடுத்து நிழலில், 20 நிமிடங்கள் உலர்த்தி விதைநேர்த்தி செய்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். ஒவ்வொரு விதைக்கிழங்கும் அரை கிலோ எடைக்கு அதிகமாக இருக்க வேண்டும். விதைத்த இருபது நாட்கள் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சலாம். சொட்டுநீர் அமைப்பது நல்லது. விதைத்த 15 முதல் 20 நாட்களுக்குள் இலைகள் தளிர்க்கும்.
சுழற்சி முறையில் ஊட்டக்கரைசல்கள்!

விதைத்த 20-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 35-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். 50-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 150 மில்லி இ.எம் திறமி நுண்ணுயிரிக் கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் தெளித்து வர வேண்டும். மாதம் ஒரு முறை ஒவ்வொரு கன்றுக்கும் அரை லிட்டர் பிண்ணாக்குக் கரைசல் ஊற்ற வேண்டும் (செய்முறை தனியே கொடுக்கப்பட்டுள்ளது). பிண்ணாக்குக் கரைசல் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மீன் அமிலக்கரைசல் 20 மில்லி புங்கன் எண்ணெய் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். புங்கன் எண்ணெய்க்குப் பதிலாக,  வேப்பெண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் ஆகியவற்றைக் கூட பயன்படுத்தலாம். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் போது பெரும்பாலும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் இருக்காது என்றாலும், முன்னெச்சரிக்கையாக வருமுன் காப்பது போல இரண்டாவது மாதத்தில் இருந்தே இஞ்சி+பூண்டுக் கரைசல் தெளித்து வருவது நல்லது.

மூன்றாவது மாதத்தில் மூடாக்கு!

மூன்றாவது மாதத்தில் இருந்து பண்ணையில் கிடைக்கும் இலைதழைகளைக் கொண்டு வாழையின் தூரைச் சுற்றி மூடாக்கு இட வேண்டும். இதனால் நீர் தேவை குறையும். 3, 7 மற்றும் 12-ம் மாதங்களில் ஒவ்வொரு வாழைக்கும் கைப்பிடி அளவு வேப்பம் பிண்ணாக்கை தொழுவுரத்தில் கலந்து தூரில் இட்டு மண் அணைக்க வேண்டும். அவ்வப்போது பக்கக்கன்றுகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். வாழை, குலை தள்ளிய பிறகு, குலைக்கு நேர் எதிர்திசையில் இருக்கும் பக்கக் கன்றை மட்டும் மறுதழைவுக்காக வளர விட வேண்டும். 8 மாதத்துக்கு மேல் பூக்கள் வர ஆரம்பிக்கும். 10-ம் மாதத்தில் குலையில் இருந்து பூவை ஒடித்து விட்டு குலையின் நுனித்தண்டில்... 

200 மில்லி பஞ்சகவ்யா நிரப்பிய பாலிதீன் பாக்கெட்டைக் கட்டி விட வேண்டும். அப்படிக் கட்டும் போது குலையின் நுனி, கரைசலுக்குள் மூழ்கியவாறு இருக்க வேண்டும். குலை நுனி மூலம் பஞ்சகவ்யா உறிஞ்சப்பட்டு காய்கள் நல்ல திடமாக வளரும். சுவையும் அதிகமாக இருக்கும். இப்படி 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். 13-ம்  மாதத்தில் இருந்து தேவையைப் பொறுத்து குலைகளை வெட்ட ஆரம்பிக்கலாம்.

பிண்ணாக்குக் கரைசல்!

10கிலோ கடலைப் பிண்ணாக்கை 200 லிட்டர் கொள்ளளவுள்ள டிரம்மில் போட்டு பிண்ணாக்கு மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும். அடுத்த நாள் பார்த்தால் முழு தண்ணீரையும் பிண்ணாக்கு உறிஞ்சியிருக்கும். அதில் பாதியளவு எடுத்து இன்னொரு டிரம்மில் போட்டு இரண்டு டிரம்களிலும் தண்ணீரை நிரப்பி... காலையும், மாலையும் கலக்கி விட வேண்டும். நான்காவது நாள், இக்கரைசலுடன் சமபங்கு தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் பிண்ணாக்குக் கரைசல் தயார்.

இஞ்சி+பூண்டுக் கரைசல்!

இஞ்சி 10 கிலோ, பூண்டு 10 கிலோ, பச்சைமிளகாய் 10 கிலோ ஆகியவற்றை உரலில் இடித்து 25 லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இரண்டு நாட்கள் முழுவதும் ஊற வைத்து... மூன்றாவது நாள் வடிகட்டினால் இஞ்சி+பூண்டு கரைசல் தயார்.  10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும்.பழங்கள் ஐந்து நாட்கள் வரை கெடாது.
இ.கார்த்திகேயன், படங்கள்: எல்.ராஜேந்திரன்

Saturday, January 31, 2015

பூஜைக்கு ஏற்ற பூவன்...மகசூல்


பழத்தில்  1 லட்சத்து 12 ஆயிரம்...  இலையில்  1 லட்சத்து 98 ஆயிரம்!
வாழைப்பழங்களில் பல ரகங்கள் இருந்தாலும் பெரும்பாலும் பூஜைக்கு பூவன் வாழையைத்தான் பயன்படுத்துவார்கள். ஆண்டு முழுவதுமே வாழைப்பழங்களுக்குத் தேவை இருந்தாலும்... பொங்கல் சமயத்தில் பூவன் வாழைக்கு நல்ல கிராக்கி இருக்கும். அதிலும் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு பகுதியில் விளையும் பூவன் வாழைக்கு தனி மரியாதை. இப்பகுதியின் பிரத்யேக தட்பவெப்ப நிலையால் இந்த வாழை, புள்ளிகள் இல்லாமல், திரட்சியாக இருப்பதுடன் கூடுதல் சுவையும் கொண்டிருப்பதுதான் கிராக்கிக்குக் காரணம்.
பொங்கல் சமயத்தில் திருவையாறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான வாழைத்தார்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிக்கின்றன. இப்படி பயணிக்கும் தார்களில், திருவையாறு தாலூகா, கடுவெளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜ்குமாரின் இயற்கை விவசாய வாழைத்தார்களும் அடக்கம்.
இயற்கையிலேயே விளையும்!
ஒரு மதிய வேளையில் ராஜ்குமாரைச் சந்தித்தபோது, ''காவிரி ஆத்தங்கரையில் இருக்கறதால நிலங்கள்ல வண்டல் நிறைஞ்சிருக்கு. அதனால வாழை நல்லா வேர் பிடிச்சு செழிப்பா வளருது. மத்த பகுதிகள்ல எல்லாம் தார் விட ஆரம்பிச்ச பிறகுதான் மரம் எட்டு அடி உயரத்தைத் தொடும். ஆனா, எங்க பகுதி பூவன் வாழை மரங்கள் தார் விடுறதுக்கு முன்னயே எட்டு அடிக்கு மேல வளந்துடும். இந்தப் பகுதியில குறைவான அளவுலதான் ரசாயன உரம் பயன்படுத்துறாங்க. ஆனா, மண் வளமா இருக்குறதால இயற்கை முறையிலேயே மரம் அருமையா வளரும்'' என்ற ராஜ்குமாரின் வார்த்தைகளுக்கு வலு சேர்த்தன, அவரது தோப்பில் உயர்ந்து நிற்கும் வாழை மரங்கள்.
வழிகாட்டிய பசுமை விகடன்!
''2007-ம் வருஷத்திலிருந்தே 'பசுமை விகடன்’ படிச்சுட்டு இருக்கோம். அதைப்படிக்க ஆரம்பிச்ச பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரசாயன உரத்தைக் குறைக்க ஆரம்பிச்சோம். இப்போ, நாலு வருஷமா முழு இயற்கை முறையில 5 ஏக்கர்ல பூவன் வாழை சாகுபடி செஞ்சுட்டு இருக்கோம். 8 ஏக்கர்ல நெல் இருக்கு. அதை இன்னும் முழுமையா இயற்கைக்கு மாத்தல. ஆனா, சுத்தமா ரசாயன பூச்சிக்கொல்லியைக் கைவிட்டுட்டோம்' என்ற ராஜ்குமார், இயற்கை முறையில் வாழை சாகுபடி செய்யும் விதங்களைச் சொன்னார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 1,000 கன்றுகள்!

'ஏக்கருக்கு 5 டன் மாட்டு எருவை இட்டு, நான்கு சால் உழவு ஓட்டி, வரிசைக்கு வரிசை, கன்றுக்கு கன்று ஆறரை அடி இடை வெளி இருக்குமாறு அரை அடி ஆழத்துக்கு குழி பறித்து வாழை விதைக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். இந்த இடைவெளியில ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஆயிரம் கன்றுகளை நடவு செய்யலாம். நடவு செய்த 3ம் மாதம் ஒவ்வொரு கன்றுக்கும் அரை கிலோ வீதம்,  மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும் (350 கிலோ மாட்டு எருவோடு தலா 50 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றைக் கலந்து தினமும் லேசான ஈரம் இருக்குமாறு தண்ணீர் தெளித்து 45 நாட்கள் வைத்திருந்தால் மேம்படுத்தப்பட்ட எரு தயார்). இதேபோல 5 மற்றும் 7-ம் மாதங்களில் தலா ஒரு கிலோ மேம்படுத்தப்பட்ட மாட்டு எரு கொடுக்க வேண்டும். இதைத்தவிர வேறு எந்த இடு பொருட்களும் கொடுக்கத் தேவையில்லை.
பூச்சி, நோய் தாக்காது!
இயற்கை முறை என்பதால், வேர்ப்புழு, நூற்ப்புழு, சாறு உறிஞ்சும் பூச்சி மற்றும் வாடல் நோய் உள்ளிட்ட தொந்தரவுகளும் கூட கட்டுப்படும். தவிர்க்க முடியாமல் மட்டைக் காய்ச்சல் நோய் வந்தால்...
3 லிட்டர் ஜீவாமிர்தத்தில் தலா 1 கிலோ டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸ், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றைக் கலந்து, இக்கரைசலை 200 லிட்டர் தண்ணீர்ல கலந்து மட்டைகளில் தெளித்தால், நோய் குணமாகி விடும். நடவு செய்த 7-ம் மாதம் தார் விடத்தொடங்கும். 8- ம் மாதம் 13 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். இந்த அளவு 40 தார்களுக்கு சரியாக இருக்கும். தொடர்ந்து 15 நாட்கள் இடைவெளியில இரண்டு முறை தெளிக்க வேண்டும். தார் விட்ட 90 முதல் 100 நாட்கள்ல தார் முதிர்ச்சி அடைந்து அறுவடைக்குத் தயாராகி விடும்.''
ஒரு தார் 200 ரூபாய்!
சாகுபடிப்பாடம் முடித்த ராஜ்குமார், 'ஒவ்வொரு தாரும் இரண்டரை அடியில இருந்து 4 அடி உயரம் வரை இருக்கும். ஒரு தார் சராசரியா 18 கிலோ எடை இருக்கும். ஒரு தாருக்கு சராசரியா 200 ரூபாய் கிடைக்கும். ஒரு ஏக்கர்ல ஆயிரம் மரங்கள் வளர்ந்தா, சராசரியா 700 தார்கள் நல்ல முறையில வளர்ந்து விற்பனைக்குத் தேறும். வேலி ஓரங்கள்ல இருக்குற மரங்கள்ல தார் சுமாராத்தான் இருக்கும். அந்த வகையில சுமாரான தரத்துல 200 தார்கள் கிடைக்கும். இதுக்கு விலையும் குறைவாத்தான் கிடைக்கும். மொத்தமா விற்பனை செய்றப்போ... ஒரு ஏக்கர்ல பூவன் வாழை மூலமா 1 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லா செலவும் போக, 1 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிகரலாபம்.
இரண்டாம் போகத்தில் இலை மூலம் வருமானம்!
தார் அறுத்து முடிச்ச பிறகு, மட்டை களை மட்டும் நீக்கிட்டு, தாய் மரத்தின் தண்டுப்பகுதியை விட்டுடுவோம். அடுத்த போகத்துல இலை மூலமா வருமானம் எடுப்போம். ஒவ்வொரு தாய் மரத்துல இருந்தும் அஞ்சுல இருந்து ஏழு பக்கக் கன்றுகள் உருவாகும். இதுல 4 கன்றுகள் மட்டும் தரமா வளரும். அந்த கன்றுகள்ல மூணாவது மாசத்துல இருந்து இலைகளை அறுவடை செய்யலாம். ஒரு மரத்துல இருந்து மாசத்துக்கு குறைந்தபட்சம் 2 இலைகள் கிடைக்கும். ஒரு முழு இலை 7 அடி நீளம் இருக்கும். ஒரு இலை 6 ரூபாய் அளவுக்கு விற்பனையாகும். ஒரு ஏக்கர்ல மாசத்துக்கு 4 ஆயிரம் இலைகள் கிடைக்கும். இதை விற்பனை செய்றப்போ 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அறுப்புக்கூலி உள்ளிட்ட செலவுகள் 7 ஆயிரத்து 500 ரூபாய் போக, மாசத்துக்கு நிகர லாபமாக, 16 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கும். வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சுடும்' என்ற ராஜ்குமார் நிறைவாக, ''இயற்கை விவசாயத்துல மரத்தின் வேரும், தண்டும் நல்லா உறுதியா திடகாத்திரமா இருக்குறதுனால, என்னதான் வேகமா காத்த டிச்சாலும் இங்க உள்ள வாழை மரங்கள் முறியறதில்லை. இதனால் ஒரு மரத்துக்கு 55 ரூபாய் வீதம் முட்டுக்கால் கொடுக்குற செலவும் மிச்சம். இயற்கை இப்படி எனக்கு லாபத்தைக் கொடுக்கறதால, இனி நெல் சாகுபடியையும் முழுக்க இயற்கைக்கு மாத்தப்போறேன்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

தொடர்புக்கு,
ராஜ்குமார், செல்போன்: 87604-72815.

Wednesday, December 3, 2014

விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!


வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்களைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம். முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா.
 களர், உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி!
களர், உவர் மண் வகைகளிலும், வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியது, கற்பூரவல்லி ரகம். மரங்கள் தடித்து வளர்வதுடன், உயரமாகவும், பெரிய இலைகளுடனும் காணப்படும். பழங்கள் நடுத்தர அளவுடன், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும். தோல், மிதமான கெட்டித்தன்மையுடன், சாம்பல் பூச்சுடன் காணப்படும். சதைப்பகுதி, சுவையுடன் சாறு மிகுந்து திடமாக, நறுமணத்துடன் காணப்படும். தார்கள் உருளை வடிவில் இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. ஜூஸ், உலர்பழங்கள், வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம். இலை பயன்பாட்டுக்கும் இந்த ரகம் பயிரிடப் படுகிறது. இதன் வயது, 14 முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தில் 'பனாமா வாடல்நோய்’ தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால், இந்த நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்து, கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
காற்றில் சாயாத உதயம்!
திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005ம் ஆண்டு, 'உதயம் வாழை’ ரகம் வெளியிடப்பட்டது. கற்பூர வல்லியைப் போன்ற குணாதிசயம் கொண்ட ரகம் இது. ஆனால், கற்பூரவல்லியைவிட 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. தார், உருளையாக இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றது. இதன் பழங்களில் இருந்து, ஜூஸ், ஜாம், உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மரங்கள் உறுதியான தண்டுடன், உயரமாக இருக்கும். ஒவ்வொரு தாரிலும் 18 முதல் 20 சீப்புகளுடன், 250 முதல் 300 பழங்கள் வரை இருக்கும். இந்த ரகத்தில் ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும். நன்றாக பராமரிப்பு செய்யும்பட்சத்தில், 50 கிலோ வரை எடை  இருக்கும். பழுக்க ஆரம்பித்ததில் இருந்து, அதிகபட்சம் 7 நாட்கள் வரை மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில், பயிரிட ஏற்ற ரகமிது. வாழை முடிக்கொத்து நோயை, எதிர்த்து வளரும் சக்தி கொண்டது. இந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தன்மையைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.
 ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பச்சநாடன் வாழை ரகம் பயிரிடப்படுகிறது. தென்னை, பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக பயிரிட ஏற்றது. மலைப்பிரதேசங்களில் இதை 'லாடன்’ என்றும், சமவெளிப் பகுதிகளில் 'நாடன்’ என்றும் அழைக்கின்றனர். கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன் மாதிரியான நீண்டகால வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் கன்றுகள் அழுகிப்போனாலோ அல்லது காய்ந்து போனாலோ இடைவெளிப் பகுதியில் இவற்றை நடவு செய்தால், அந்த வாழை ரகங்களுடன் இந்த வாழை ரகமும் அறுவடைக்கு வந்துவிடும். இதனாலேயே இந்த வாழை ரகத்தை 'காலி வாழை’ என்றும் விவசாயிகள் அழைக்கிறார்கள். இருமண் பாங்கான நிலம், களிமண் மற்றும் கரிசல் மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது, இது. இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்களாக இருந்தாலும், 8ம் மாதத்திலே குலை தள்ளிவிடும். ஒவ்வொரு தாரிலும், 7 முதல் 8 சீப்புகளுடன், 100 முதல் 120 பழங்கள் வரை இருக்கும். தாரின் எடை 10 முதல் 15 கிலோ. இந்த ரகத்தில், மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீசு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த ரகத்தை, வாடல் நோய் தாக்கும் வாய்ப்பு உண்டு.
 வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ட்9 (ஜி9) வாழை ரகத்துக்கு அடுத்தப்படியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம், நெய் பூவன். 'ஏழரசி, ஞானிபூவன், ஏலக்கி பாலே, புட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலும் 'நெய் பூவன்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுகிறது. எல்லா வகை மண்ணிலும் நன்றாக வளர்வதுடன், வறட்சியைத் தாங்கியும் வளரும். கர்நாடகா மற்றும் கேரளாவில் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இ்்தை பயிரிடுகிறார்கள். இதன் வயது 13 முதல் 14 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை இருக்கும். பழங்கள் அதிக சுவையுடன் இருந்தாலும், காய்கள் கனிவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால், நன்கு பழுத்த பழங்கள் கூட எளிதில் உதிர்வதில்லை. இந்த ரக வாழையில் வாடல் நோய், நூற்புழு போன்றவை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், கன்று தேர்வு செய்யும்போது நோய் தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
 காய்க்கும், பழத்துக்கும் மவுசு உள்ள நேந்திரன்!
காய்க்காகவும், பழத்துக்காகவும் இந்த வாழை ரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஏத்தன், மலையேத்தன், சிப்ஸ்காய், வறுவல்காய், நெடுநேந்திரன், ஆட்டுநேந்திரன் என வேறு பெயர்களும் உண்டு.  இந்த ரகம்  பெருமளவு சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டாலும், கேரளாவில் பழமாகவும் சாப்பிடுகிறார்கள். ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் தோல் சற்று தடிமனாக இருப்பதுடன், இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். பழங்களில் வைட்டமின்ஏ வும் (ஒரு கிராமில் 750 முதல் 800 மைக்ரோ கிராம்), எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்புச் சத்துக்களும் (ஒரு கிராம் பழத்தில் 14 மில்லி கிராம்) நிறைந்துள்ளன.
இந்த ரகத்தின் வயது 11 முதல் 12  மாதங்கள். தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் நடவு செய்யலாம். இந்த ரகத்தில் மறுதாம்பு விடுவதில்லை. அதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில், இந்த ரகம் சரியாக வளராது. ஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு தாரும் 5 முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோ எடை இருக்கும். இந்த ரகத்தில்  நூற்புழு, கிழங்கு கூன்வண்டு  மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றின் தாக்குதலைக் குறைக்க... பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து, நடவு செய்ய வேண்டும்.  
ரொபஸ்ட்டா, விருப்பாட்சி, செவ்வாழை, மொந்தன் போன்ற ரகங்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

Thursday, February 6, 2014

வாழை நார் பிரிக்கும் எந்திரம்


கல்லூரி மாணவர்களின் கலக்கல் கண்டுபிடிப்பு…
கண்டுபிடிப்பு
”கழிவுகளைக் காசாக்கும் வித்தையைத் தெரிஞ்சுக்கிட்டாதான்… நம்ம விவசாயி களும் பொருளாதார முன்னேற்றம் அடைய முடியும். அந்த வகையில நம்ம நாட்டுல பெரும்பாலான விவசாயிகள், சாகுபடி செய்யுற வாழையில இருந்து கூடுதல் வருமானம் எடுக்கணும்னுதான் எங்க படிப்பறிவைப் பயன்படுத்தி இந்தக் கருவியைக் கண்டு பிடிச்சுருக்கோம்” என்று பெருமை யுடன் சொல்கிறார்கள், தூத்துக்குடி, அண்ணா பல்கலைக் கழகப் பொறியியல் கல்லூரியில் இறுதி யாண்டு இளநிலை இயந்திரவியல் பயிலும் ராம்குமார், ஹரிகுமார், வசந்தகுமார் மற்றும் வினோத்குமார் ஆகியோர். இவர்கள் வடிவமைத் திருப்பது… வாழை மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும் கருவி!
கல்லூரி தேடிச் சென்ற நம்மிடம் பேசிய ஹரிகுமார், ”இன்ஜினீயரிங் படிப்புல மாணவர்கள் குழுவா சேந்து ஒரு மெஷினை வடிவமைக் கணும். அதுக்கும் மார்க் உண்டு. எங்க ‘டீன்’, ‘மார்க்குக்காக மட்டும் ஏதாவது ஒரு மெஷினை உருவாக்கா தீங்க. சமுதாயத்துக்கும் மக்களுக்கும் தொடர்ந்து பயன்படுற மாதிரியான ஒண்ணை உருவாக்குங்க’னு சொன்னார். விவசாயக் குடும் பத்தைச் சேந்தவங்களான எங்க நாலு பேர் மனசுலயும் அது நல்லா பதிஞ்சுட்டுது. விவசாயியோட கஷ்ட, நஷ்டம் புரிஞ்ச நாங்க… ‘விவசாயிகளுக்கான மெஷின் தயாரிப் போம்’னு முடிவு பண்ணி… விவசாயிகளோட தேவை என்னனு தெரிஞ்சுக்கறதுக்காக நிறைய அலைஞ்சோம். அப்போ உருவானது தான் இந்த மெஷின்!
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்துல வாழை சாகுபடி அதிகமா நடக்குது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில வாழை நார்களுக்கானத் தேவை அதிகமா இருக்கு. எங்க மாவட்டத்துல இருந்து பிளேடு மூலமா நாரைப் பிரிச்சு எடுத்துதான், கன்னியாகுமரிக்கு அனுப்பு றாங்க. அதனால, ‘அதுக்கான மெஷினையே உருவாக்கிடலாம்’னு முடிவு பண்ணிட்டோம். கரன்ட் தட்டுப்பாடு அதிகமா இருக்கறதால கையால இயக்குற மாதிரி இதை வடிவமைச் சோம். இதன் மூலமா பூக்கட்டுறதுக்கு மட்டுமில்ல… புடவை, கைவினைப் பொருட்கள் தயாரிக்கனு வாழையிலிருந்து நார் எடுத்து பயன்படுத்தலாம்” என்றவரைத் தொடர்ந்த ராம்குமார், இயந்திரத்தின் செயல்பாடு பற்றி விளக்கினார்.
”நாலு அடி உயர செவ்வக வடிவச் சட்டத்தின் மேல், சுருள் வளைய இணைப் புக்கத்தி கொண்ட தொடர் பற்சக்கரத்தைப் பொருத்தியிருக்கிறோம். இது சுழலக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வலது முனையில் சுருள் வளையத்துடன் பிடிப்புக் கத்தி, இருபக்கமும் கூர்மை கொண்ட கத்தி என இரண்டு கத்திகளைப் பொருத்தியிருக் கிறோம். ஒரு மீட்டர் நீளம், இரண்டு அங்குல அகலத்தில் உள்ள வாழை மட்டையை மெஷினில் இரண்டு பிளேடுகளுக்கு கீழ் வைக்கும்போது… எதிர்முனையிலுள்ள காந்தம் கத்திகளின் மறுமுனையைப் பிடித்துக் கொள்ளும். பிறகு, பற்சக்கரத்தை கையால் சுழற்றினால், வாழை மட்டையில் உள்ள ரெசின், பித்து மற்றும் நீர் போன்ற பிசுபிசுப்பு திரவம், வாழை மடலின் நார்க்கழிவு ஆகியவை நீங்கி, சுத்தமான வாழைநார் கிடைத்துவிடும்” என்றார், ராம்குமார்.
”இந்த மெஷினோட அடக்க விலை 4 ஆயிரத்து 500 ரூபாய். நிறைய எண்ணிக்கையில தயாரிக்கும்போது இதுல பாதி பணத்துக்குக் கூட தயாரிக்க முடியும். சராசரியா ஒரு நாளைக்கு ஒரு கிலோ அளவுக்கு நார் பிரிக்க முடியும். வழக்கமா பிளேடு வெச்சு பிரிக்கும்போது முக்கால் கிலோ அளவுக்கு கூடப் பிரிக்க முடியாது. இந்த மெஷினை சீக்கிரமாவும், சுலபமாவும் இயக்க முடியும். பெண்களேகூட இயக்க முடியும். இடம் மாத்துறதும் சுலபம். பாதுகாப்பனதும்கூட” என்று சிலாகித்தார், வசந்தகுமார்.
நிறைவாக, ”இந்த மெஷினுக்காக சிறந்த கண்டுபிடிப்பு சான்றிதழும், 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் எங்களுக்குக் கிடைச்சுருக்கு. நிறைய விவசாயிகள் இதைப் பார்த்துட்டு போறாங்க. அடுத்ததா, ஒரடி ஆழம் வரை ஏர் உழும் கலப்பை; கரும்பு லாரி, டிராக்டர்னு லோடோட கிராமத்து சாலைகள்ல போற வாகனங்கள்… சேறு-சகதியில சிக்கிடாம இருக்கறதுக்காக ரோட்டுல இருக்குற குழியோட ஆழத்தைக் காட்டுற எச்சரிக்கை மணியோட கூடிய ரேடியேட்டர் கருவி… இது ரெண்டையும் உருவாக்கலாம்னு இருக்கோம்” என்று கையை உயர்த்தினர் அந்த நான்கு மாணவர் களும்!

Wednesday, January 1, 2014

வாழையில் புதிய தொழில்நுட்பங்கள்



பழைய முறையில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ள வாழைத் தார்கள். (வலது) 
புதிய தொழில் நுட்ப முறையில் சீப்புகளாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள 
வாழைப் பழங்கள்.
வாழையில் அறுவடைக்குப் பின் புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதலாக 25 முதல் 40 சதவீதம் வருவாய் பெறலாம் என்று வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தியாவில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படும் பழங்களில் வாழை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. நமது நாட்டில் கணிசமான அளவு வாழைப் பழங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் தமிழ்நாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்ட வாழைப் பழத்தை நீண்ட நாள் சேமித்து வைக்க அதன் பச்சை நிறம் மாறாமல் இருக்க வேண்டும். அத்தகைய தரம் கொண்ட வாழைப் பழத்தைத்தான் நீண்ட தொலைவுக்கு எடுத்துச் செல்ல முடியும். வாழைப் பழங்களைப் பாதுகாக்க மற்ற பழங்களைப் போல அல்லாமல் பாதுகாப்பு அறையின் வெப்பநிலை 12 முதல் 21 சென்டிகிரேட் வரை இருக்க வேண்டும். குறைந்த வெப்பநிலையில் பாதுகாக்கும் போது அதன் தரம் பாதிக்கப்படுகிறது.
தொழில்நுட்பங்கள்: அறுவடைக்கு முன்னரும், அதன் பின்னரும் கடைப்பிடிக்கப்படும் தொழில் நுட்பங்களே பழங்களின் வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. தொழில் நுட்பங்களைச் சரியாகக் கையாளாத காரணத்தால் மொத்த உற்பத்தியில் 18 முதல் 20 சதவீதம் வாழை வீணாகிறது.
உள்ளூர் விவசாயிகள் சந்தைகளுக்கு வாழைப் பழத்தை எடுத்துச் செல்லும்போது ஏற்படும் சேதத்தைத் தவிர்க்க வாழை இலை அல்லது பாலித்தீன் பையால் முழுவதும் மூடியே எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால், ஏற்றுமதி செய்யும்போது பழங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் அடைத்து அனுப்ப வேண்டும்.
இந்த அட்டைப்பெட்டி 57 ஷ் 30 ஷ் 22.5 செ.மீ. அளவுடையது. இதில் 1.3 செ.மீ. விட்டமுடைய 10 சிறு துளைகள் இருக்கும். இதில் வாழை சீப்புகளை அதன் அடிப்பாகம் கீழிருக்குமாறும், காய்கள் மேல் நோக்கி இருக்குமாறும் நீளவாக்கில் அடுக்க வேண்டும்.
இவற்றை ரயில்கள் மூலம் அனுப்பும்போது ஒன்றின் மேல் ஒன்றாக 9 பெட்டிகள் இருக்குமாறு அடுக்க வேண்டும். 10 டன் கொள்ளளவுள்ள ரயில் பெட்டியில், 100 வாழைப் பெட்டிகளை அடுக்க முடியும். ஒரு டிரக்கில் குறைந்தது இத்தகைய பெட்டிகளை 350 வரை அடுக்க முடியும்.
வெப்ப நிலை: வாழைப் பழங்களை 13 டிகிரி சென்டிகிரேடுக்கு கீழ் உள்ள வெப்பநிலையில் வைத்து சேமிக்கும்போது பழத்தின் தோலில் கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இது குறைந்த வெப்பநிலையால் ஏற்படும் குறைபாடாகும். இந்தக் குறைபாடுள்ள பழங்கள் பழுத்த பின்னரும் அதன் தோல் கடினமாக இருக்கும்.
 மேலும், இந்தப் பழங்கள் எளிதில் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு ஆளாகின்றன. எனவே, இந்த வெப்பநிலையில் பழங்களை சேமிப்பது ஏற்றதல்ல.
 ரோபஸ்டா மற்றும் குள்ள வாழைத் தார்களை பூத்த 100 நாள்களுக்குப் பின்னால் வெட்டி, முன் சேமிப்பு நேர்த்தியாக 1,000 பி.பி.எம். தயோபென்ட்சோல் என்ற மருந்தில் வாழை சீப்புகளை நனைக்க வேண்டும்.
 அவ்வாறு சேமிக்கும்போது, அதிகபட்சமாக 28 நாள்கள் 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் எந்தவிதச் சேதமும் இல்லாமல் சேமிக்க இயலும். 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில், 80 முதல் 90 சதவீத ஈரப்பதமும் பழங்களை சேமிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையாக இருக்கும். வெப்பநிலை அதிகரிப்பதால் பழங்கள் விரைந்து பழுத்து விடும்.
மெழுகு பூசுதல்: பழங்களின் வாழ்நாளை அதிகரிக்க 6 சதவீத மெழுகுக் கரைசலில் சீப்புகளை 30 முதல் 60 விநாடிகள் நனைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பழங்கள் பழுப்பது தடைபடுவதுடன் அதன் மணமும், சுவையும் அதிகரிக்கும். இதை 12 சதவீத மெழுகில் மீண்டும் ஒரு முறை நனைத்து எடுப்பதால் பழங்களின் வாழ்நாளை 5 வாரங்களுக்கு மேல் நீட்டிக்க முடியும்.
 மேலும், வாழைச் சீப்புகளை பாலித்தீன் பைகளில் 50 கிராம் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டுடன் சேமிக்கும்போது குறைந்த வெப்பநிலையான 13 முதல் 15 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும், வெளி அறை வெப்பநிலையில் 2 வாரங்களும் பழங்களை பழுக்காமல் பாதுகாக்க முடியும்.
பாலித்தீன் பைகளால் மூடுதல்: பழங்களை காற்றோட்டமில்லாத பாலித்தீன் பைகளைக் கொண்டு மூடும் போது பழங்கள் பூஞ்சண நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. 100 காஜ் தடிமனுள்ள பாலித்தீன் பைகளில் 2 சதவீத காற்றோட்ட வசதி செய்து, பழங்களை மூடும்போது வெளி அறை வெப்பநிலையிலும், குறைந்த வெப்பநிலையிலும் (13 முதல் 15 சென்டிகிரேட்) பழங்களை 21 நாள்கள் முதல் 28 நாள்கள் வரை பாதுகாக்க இயலும்.
தாவரங்களின் பங்கு: கொக்கோ இலை அல்லது உமியுடன் சேர்த்து வாழைச் சீப்புகளை குறிப்பாக சமையலுக்கான வாழைக் காய்களை பைகளில் சேமிக்கும்போது 30.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் இரு வாரங்களும், 20.2 சென்டிகிரேட் வெப்பநிலையில் 4 வாரங்களும் தரம் குறையாமல் சேமிக்க இயலும்.

வாழைத் தார்களை மூடுவதற்கு ஊதா நிற பைகளுக்குப் பதிலாக வெள்ளை நிறப் பைகளே சிறந்தது.
இந்தப் பைகளில் அடைப்பதன் மூலம் பழுப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நாள்கள் குறையும். மேலும், பழங்களில் பாதிப்பும் குறைவாக இருக்கும்.
இத்தகைய புதிய தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் வாழை விவசாயிகள் தங்கள் வருவாயில் 25 முதல் 40 சதவீதம் கூடுதலாக ஈட்ட முடியும் என்கின்றனர் வேளாண் அலுவலர்கள்.
தொடர்புக்கு...: தருமபுரி வருவாய் கோட்டத்தின் வேளாண் அலுவலர் (வேளாண் வணிகம்) தா.தாம்சன். மொபைல் எண்: 94435 63977.
நன்றி :படங்கள் அனைத்தும் http://www.jaffnavoice.com

Sunday, December 16, 2012

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை




பொதுவாக, வாழையில் இருந்து நாரை பிரித்து எடுக்க நேரமும் முயற்சியும் அதிகம் வேண்டும். வேலை செய்ய ஆட்களும் தேவை. பொதுவாக, ஒரு நபரால், ஒரு மணியில் 500 கிராம் நார் மட்டுமே எடுக்க புடியும்
இந்த புது முறையால், இதை போன்று பாத்து மடங்கு நார் எடுக்க முடியும்.
இந்த முறையில், காற்றிலா செயல்முறை (anaerobic process) என்சைம் (enzyme) பயன் படுத்தி ஒரு வாரத்தில் நிறைய நாரை பிரித்து எடுக்க முடியும்.
மிச்சம் உள்ள நீரும் கழிவும் பயோ காஸ் ஆக மாற்ற படுகிறது. நீரும் மறுசுழற்சி செய்ய படுகிறது.Way forward:Banana fibre extracted using the technology developed by the CISR-NIIST
இந்த முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04712515388 என்ற தொலை பேசியை அணுகவும்
நன்றி: ஹிந்து

Way forward:Banana fibre extracted using the technology developed by the CISR-NIIST
The National Institute for Inter-disciplinary Science and Technology (NIIST) here, a laboratory of the Council of Scientific and Industrial Research (CSIR), has developed a technology for extraction of banana fibre, the raw material for a range of eco-friendly products.
The indigenously developed process know-how is for ‘clean extraction of banana fibre from pseudo stems (leftover banana trunk after harvest) and empty bunches.’ The fibre can be used to make yarn, paper and paper cups, cordage, tea bags, handbags, and footwear.
Patent sought
An international patent has been sought for the process know-how, a spokesman for the CSIR-NIIST said. It has already been licensed to three parties, including one based in the Philippines. The CSIR-NIIST expects the process to become acceptable at the local level, the spokesman said.
The alternatives
Banana fibre is generally extracted through a cumbersome manual process. By using a metal scraper (flat and blunt blade), the pseudo stem sheaths are scraped and the fibre is separated.
An individual at work can extract just about 500 gm in this manner; the mechanical process yields 10 times the quantity but with heavy damage to the fibre.
The CSIR-NIIST technology involves an anaerobic (without oxygen) process. The fibres are separated by enzymes produced through microbial action in an anaerobic reactor.
Waste into biogas
The organic wastes get converted into biogas in the process. The process water is recirculated.
Under optimum conditions, separation of the fibres gets completed in a week’s time, says V. Manilal of the Process Engineering and Environmental Technology division at the NIIST. The fibres are washed and dried in sunlight to bring down the moisture content considerably.
Brilliant white
The fibre obtained is brilliant white in colour and has little pith residues. The CSIR-NIIST claims that the process is inexpensive, pollution- free, and avoids damage to fibres.
It also has the potential to generate employment and can offer higher earnings for farmers. For details, the CSIR-NIIST can be contacted on phone 0471-2515388.

Design Development workshop on Banana fibre

Ecogreenunit organized a Design Development workshop on Banana fibre in coimbatore rural. 30 women artisans participated.New prototype models was developed by Empaneled designer Mrs. Puja singh from delhi came and trained the artisans in banana fibre.The programme was sponsored by O/o Development Commissioner,Handi crafts,New Delhi.its a 15 days training programme .

a new prototype models in banana fibre


Address:EcoGreenUnit,C-5,Agri Business Directorate,Tamil Nadu Agri cultural University,Coimbatore-641003, PH:09600876767/09894422180/07708202420

Contact Details

ECOGREENUNIT, C-5,BUSINESS PLANNING DEVELOPMENT AGRI BUSINESS DIRECTORATE. TAMILNADU AGRICULTURAL UNIVERSITY COIMBATORE 641003. PH.04224376397/M.9600876767

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites