இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, November 12, 2011

வசீகர சேலைகள்.. வருவாய் பிரமாதம்

பேப்ரிக் பெயின்டிங் சேலை களை கலைவண்ணம் உள்ளதாக மிளிர செய்யும். இது பெண்களின் புதிய பேஷனாக உருவாகியுள்ளது. சேலைகளில் பேப்ரிக் பெயின்டிங் செய்ய கற்றுக்கொண்டால் வீட்டு பெண்கள் நல்ல வருவாய் ஈட்டலாம்’ என்று கூறுகிறார் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த கீதா. கீதா கூறியதாவது: கணவர் செல்வம், வங்கி அதிகாரி. நாகர்கோவிலுக்கு டிரான்ஸ்பர் ஆகி, அங்கு வசித்தபோது டிவி நிகழ்ச்சி ஒன்றில், பேப்ரிக் பெயின்டிங் கற்றுக்கொண்டால் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் என்று கூறி செயல்விளக்கத்தையும் காட்டினர். இது எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. ஓவியம், எம்ப்ராய்டரி பயிற்சி பெற்றேன்.

அருகில் வசிக்கும் பெண்களின் சேலைகளுக்கு இலவசமாக பேப்ரிக் பெயின்டிங் செய்து கொடுத்தேன். ‘சாதாரண சேலைய கூட சூப்பரா பண்ணீட்டீங்களே...’ என்று பெண்கள் பாராட்டினர்.  பலர் என்னிடம் சேலைகளை கொடுத்து பெயின்டிங் செய்து கொடுக்குமாறு கூறினர். குறைந்த கட்டணம் நிர்ணயித்து தொழிலை துவக்கினேன்.  ஓரளவு வருமானம் கிடைத்தது. கணவர் கோபிச்செட்டிபாளையம் டிரான்ஸ்பர் ஆனார். இது போன்ற சிறிய நகரங்களில் சேலைகளில் ஆடம்பரமான, அழகான வேலைப்பாடுகளை பெண்கள் விரும்பினாலும், இவற்றை செய்துதர தகுதியான ஆட்கள் இல்லை. எனவே முழு நேரமாக இத்தொழிலை தொடங்கினேன்.

வழக்கமான பேப்ரிக் பெயின்டிங்குடன் கூடுதலாக எம்ப்ராய்டரிங் ஒர்க், ஜமிக்கி ஒர்க் சேர்த்து செய்தேன். வாடிக்கையாளர்கள் பெருகினார்கள். வேலையாட்களையும் தேர்ந்தெடுத்து கற்றுக்கொடுத்து தொழிலை விரிவுபடுத்தினேன். லாபகரமாக நடக்கிறது. நிரந்தர கிராக்கி உள்ள இத்தொழிலை பலரும் செய்யலாம். லாபம் நிச்சயம். பேப்ரிக் பெயின்டிங், எம்ப்ராய்டரி தொடர்பான புத்தகங்கள் நிறைய உள்ளன. இவற்றைப் பார்த்தும் கூடுதலாக கற்றுக்கொள்ளலாம்.
படங்கள்: கே.சுப்பிரமணியன்

பெயின்டிங் செய்வது எப்படி?

புதிதாக தொழிலில் இறங்குபவர்கள் பேப்ரிக் பெயின்டிங்கில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்னர் மற்ற டிசைன் வேலைப்பாடுகளில் இறங்க வேண்டும். பேப்ரிக் பெயின்டிங் செய்வதற்கு முன்னதாக அதில் வரைய வேண்டிய படத்தை தேர்வு செய்ய வேண்டும். படத்தின் மீது டிரேசிங் பேப்பரை வைத்து படத்திலுள்ள கோடுகள் மீது ஊசி மூலம் சிறிய ஓட்டைகள் போட வேண்டும். ஓட்டை போடப்பட்ட டிரேசிங் பேப்பரை சேலையில் வைத்து, பேப்பரின் மீது  மண்ணெண்ணெய் கலந்த கலர் பவுடரை  தடவ வேண்டும். சேலையில் ஓவியத்துக்கான அவுட் லைன் கிடைக்கும். அதற்குள் வண்ணங்களை வரைந்தால் பேப்ரிக் பெயின்டிங் தயாராகி விடும்.

கற்பனைக்கேற்றவாறு வண்ணங்களை மாற்றி அமைத்தால் ரகங்கள் கூடும். இதர வேலைப்பாடுகள்:  டிரேசிங் பேப்பர் மூலம் வேலைகளை மேற்கொண்டு பேப்ரிக் பெயின்டிங்குக்குப் பதில் பல வண்ண நூல் மூலம் எம்ப்ராய்டரிங் செய்தால் அது எம்ப்ராய்டரி ஒர்க், எம்ப்ராய்டரிங்கோடு ஜமிக்கிகளையும் கோர்த்தால் அது ஜமிக்கி எம்ப்ராய்டரிங். ஜமிக்கிகளோடு, கண்ணாடி, கண்ணாடி கற்கள், சிறிய அளவிலான மிளிரும் பாசிகள் ஆகியவற்றை டிசைனுக்கேற்ப கோர்த்து அழகை அதிகரித்து கொண்டே செல்லலாம்.

சேலைகளில்  பெயின் டிங், ஜமிக்கி போன்ற எக்ஸ்ட்ரா ஒர்க் செய்யப்பட்ட சேலைகளை பெண்கள் விரும்புகிறார்கள். இதனால் பிளைன் மற்றும் சாதாரண டிசைன் சேலைகளை எக்ஸ்ட்ரா ஒர்க் செய்து ஜவுளி கடைகள் விற்பதில் ஆர்வம் காட்டுகிறன. சேலைகளில் ஒர்க் செய்யத்தெரிந்தவர்கள் குறைந்த அளவில் உள்ளதால், அவர்களுக்கு கிரா க்கி உள்ளது. ஜவுளி கடைகளில் ஆர்டர் கிடைக்கும். ஜவுளி ஆர்டர் கிடைத்தால் குழுவாக சேர்ந்து அதிகளவில் செய்ய வேண்டும். வீட்டின் முன் போர்டு வைத்தால், தானாகவே வந்து கொடுப்பார்கள். சொந்தமாக மொத்தமாக சேலைகளை வாங்கி, பெயின்டிங் உள்பட பல்வேறு டிசைன் ஒர்க் செய்து பண்டிகை காலங்களில் அக்கம்பக்கத்தினருக்கு விற்கலாம். சுடிதார்களுக்கும் ஆர்டர் பிடிக்கலாம்.

முதலீடு

பேப்ரிக் பெயின்டிங்: பேப்ரிக் பெயின்டிங் செய்ய ஒரு சேலைக்கு 15 மி.லி அளவுள்ள 2 கலர் பெயின்ட் ரூ.30, கோல்டு கலர் பெயின்ட் ரூ.15, 10ம் நம்பர் ரிங்க் ரூ.30, பிரஸ் ரூ.10, டிரேசர் பேப்பர் ரூ.5 என மொத்தம் ரூ.90 செலவாகும். பிரஸ், ரிங்க் அடிக்கடி வாங்க தேவையில்லை. மாதம் அதிகபட்சம் 30 சேலை வரை பேப்ரிக் பெயின்டிங் செய்யலாம். முதலீடு குறைந்தபட்சம் ரூ.1500; அதிகபட்சம் ரூ.3 ஆயிரம்.

எம்ப்ராய்டரிங்: ஒரு சேலைக்கு சில்க் நூல் 24 கிராம் கொண்ட 4 நூல்கண்டுகள் தலா ரூ.15 வீதம் ரூ.60, ஊசி ரூ.12, ஜரிகை நூல் 25 கிராம் ரூ.15 என மொத்தம் ரூ.87 செலவாகும். தினசரி ஒரு சேலை வீதம் மாதம் 30 சேலை செய்யலாம். முதலீடு ரூ.2,700.

ஜமிக்கி எம்ப்ராய்டரிங்: ஒரு சேலைக்கு 50 கிராம் ஜமிக்கி ரூ.60, 25 கிராம்  ஜரிகை நூல் ரூ.30, பிளாஸ்டிக் கண்ணாடி ரூ.10, குழல்பாசி ரூ.45, ஜர்தோசி நீளரக பாசிகள் ரூ.120, சில்க் நூல் ரூ.60 என மொத்தம் ரூ.340 செலவாகும். மாதம் 4 சேலைகள் செய்யலாம். முதலீடு ரூ.1,400.

பட்டுச்சேலை ஒர்க்: ஒரு சேலைக்கு 100 குண்டுபாசிமணிகள் ரூ.5, நீளபாசிகள் ரூ.7, பெரிய அளவிலான நீள பாசிகள் 50 பீஸ் ரூ.15, சீனி பாசிகள் ரூ.10, குந்தன் ரூ.30, ஜரிகைநூல் ரூ.15, ஜர்தோசி ரூ.120 என மொத்தம் ரூ.202 தேவை. மாதம் 8 சேலைகள் செய்யலாம். முதலீடு ரூ.1,600.

வருவாய்

பேப்ரிக் பெயின்டிங் செய்ய ஒரு சேலைக்கு செலவு ரூ.90. அதற்கு ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் வசூலிக்கலாம். இதன் மூலம் வருவாய் ரூ.200 முதல் ரூ.400 வரை. மாத வருவாய் ரூ.6000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கும். இதில் உழைப்புக்கூலிக்கு ரூ.3 ஆயிரம் போக லாபம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.9 ஆயிரம் வரை கிடைக்கும். எம்ப்ராய்டரிங் சேலைக்கு செலவு ரூ.87 செலவு. மாத லாபம் ரூ.9 ஆயி ரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை கிடைக்கும். ஜமிக்கி எம்ப்ராய்டரிங் ஒரு சேலைக்கு செலவு ரூ.340. ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். மாதம் 4 சேலைகள் மூலம் லாபம் மட்டும் ரூ.7,600 முதல் ரூ.15,600 வரை கிடைக்கும்.

பட்டுசேலை ஒர்க்குக்கு ஒரு சேலைக்கு செலவு ரூ.202. ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை கிடைக்கும். மாதம் 8 சேலைகள் மூலம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். எங்கும் கிடைக்கும்  துணிகளில் வரைய பேப்ரிக் பெயின்ட் என தனியாக விற்கிறது.  சேலையில் ஒர்க் செய்ய தேவைப்படும் பொருட்களை மொத்தமாக வாங்கினால், உற்பத்தி செலவு குறையும். பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். பேப்ரிக் பெயின்டிங், எம்ப்ராய்டரி, ஜமிக்கி மற்றும் இதர வேலைப்பாடுகள் தொடர்பான புத்தகங்களும் எளிதில் கிடைக்கிறது.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites