இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பண்ணை தொழில். Show all posts
Showing posts with label பண்ணை தொழில். Show all posts

Thursday, December 31, 2015

பண்ணை

4 ஏக்கரில் ரூ3,00,000 அள்ளிக் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணை!
‘ஒற்றைப்பயிர் சாகுபடி கூடவே கூடாது’ என்பதுதான் நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண் விஞ்ஞானிகளின் பரிந்துரை. பல வகையான பயிர்கள், கால்நடைகள்... என்று பண்ணையம் செய்தால், நஷ்டத்துக்கு வாய்ப்பே இல்லை என்பது அனுபவ விவசாயிகள் பலருடைய ஆலோசனை! இதைத் தெளிவாகப் பின்பற்றி வஞ்சகமில்லாமல் வருமானம் எடுக்கும் விவசாயிகள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே இருக்கும் சதுப்பேரிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன்.
சாத்துக்குடி, எலுமிச்சை, மா, மல்லிகை, முல்லை, முள்ளில்லா மூங்கில், தேக்கு ஆகிய பயிர்களோடு... ஆடு, கோழி என கால்நடைகளையும் வளர்க்கிறார், மணிவண்ணன். ஒரு காலை வேளையில், வாஞ்சையோடு ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.
“10-ம் வகுப்பு வரைக்கும் படிச்சிட்டு, பெங்களூருல ஒரு கடையில மூணு வருஷம் வேலை பார்த்தேன். அங்க ஓரளவுக்கு எலக்ட்ரீசியன் வேலையைக் கத்துக்கிட்டு, சொந்த ஊருக்கே திரும்பி வந்து எலக்ட்ரிகல் வேலை பார்க்க ஆரம்பிச்சுட்டேன். எங்க கிராம சுத்துவட்டாரத்துல எலக்ட்ரீசியன் யாரும் இல்லாததால நல்ல வருமானம். அப்பா கூட சேர்ந்து 4 ஏக்கர்ல விவசாயமும் பார்த்தேன். கல்யாணம் ஆனதும் சொத்தைப் பிரிச்சாங்க. அதுல ரெண்டு ஏக்கர் நிலம் கிடைச்சுது. அதுல மல்லாட்டை (நிலக்கடலை), உளுந்துனு பயிர் செஞ்சுக்கிட்டு இருந்தேன். பெருசா வருமானம் இல்லாட்டியும், ஆர்வத்தால விவசாயத்தை விடாம செய்துக்கிட்டிருந்தேன்.
ஒரு தடவை போளூருக்குப் பக்கத்துல இருக்குற பர்வதமலைக்குப் போயிருந்தப்போ ஒரு தோட்டத்துல ’ரெட் ரோஸ்’ சாகுபடி செய்திருந்தாங்க. அதைப் பார்த்ததும், எனக்கும் ஆசை வந்தது. உடனே, வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர்ல இருந்து ரோஜா நாற்றுகளை வாங்கிட்டு வந்து, 40 சென்ட்ல நட்டேன். அது நல்லா வளர்ந்து தினம் 500 ரூபாய் அளவுக்கு (23 ஆண்டுகளுக்கு முன்பு) வருமானம் கொடுத்தது. அந்த சமயம் என்னோட அண்ணன் அவரோட நிலத்துல வாழை நட்டார். அதனால, பொதுக்கிணறுல தண்ணீர்ப் பற்றாக்குறை வந்துடுச்சு. அதனால, ரோஜா சாகுபடியை விட்டுட்டேன்” என்ற மணிவண்ணன் தொடர்ந்தார்.
வறட்சியைச் சமாளிக்க முல்லை!
“வறட்சியைத்தாங்கி வளர்ற பூக்களைப் பத்தி விசாரிச்சப்போ, முல்லைப்பூ பத்தி சொன்னாங்க. 33 சென்ட் நிலத்துல 300 முல்லைச் செடிகள நடவு செய்தேன். வீட்டுல இருக்குற ஆட்களே பராமரிச்சோம். மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைச்சது. அந்த வருமானத்துல ரெண்டு ஏக்கர் நிலம் வாங்கினோம். பிள்ளைகளையும் படிக்க வெச்சு கல்யாணம் செய்து கொடுத்தோம்.
சாத்துக்குடிக்கு ஊடுபயிராக மல்லிகை!
அப்பறம் ஒண்ணரை ஏக்கர்ல பங்கனப்பள்ளி, அல்போன்சா மா ரகங்கள்ல 100 செடிகளை நட்டோம். அதுல 30 செடிகள் பட்டுப்போச்சு. இப்போ 70 மரங்கள் நிக்குது. ஆட்கள் பிரச்னை அதிகமானதால, முல்லைச் செடிகள்ல இருந்து பூவெடுக்குறதை நிறுத்திட்டு, நாற்று உற்பத்திக்காக குச்சிகளை மட்டும் வெட்டி அனுப்புறோம். 40 சென்ட் நிலத்துல தண்டு மூலமா உருவாக்கின சாத்துக்குடியை நட்டு, அதுக்கு இடையில மல்லிகைச் செடிகளை ஊடுபயிரா நட்டுருக்கோம். சாத்துக்குடி ரெண்டரை வருஷத்துலேயே காய்ப்புக்கு வந்திடுச்சு. மல்லிகையிலயும் நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சது. 10 சாத்துக்குடிச் செடிகள் பழுதாகிடுச்சு. அந்த இடங்கள்ல எலுமிச்சைச் செடிகளை நடவு செய்துட்டேன். இப்ப எலுமிச்சையெல்லாம் 5 வருஷத்து மரமா நிக்குது.
தோட்டத்துல திருட்டு அதிகமா இருந்ததால, 8 அடி உயரத்துக்கு நிலத்தைச் சுத்தி வேலி போட்டோம். வேலியை ஒட்டி 1,000 தேக்கு கன்னுகளை நட்டுருக்கோம். 4 வருஷம், 3 வருஷம், 2 வருஷ மரங்களா இருக்குது” என்று மணிவண்ணன் நிறுத்த, தொடர்ந்தார் அவருடைய மனைவி தமிழ்ச்செல்வி.
2 கோழியிலிருந்து 200 கோழிகள்!
“வீட்டுக்குப் பக்கத்துல இருக்கிற இடத்துல ஆடு வளர்க்கலாம்னு 19 தலைச்சேரி பெட்டை ஆடுகள், 1 போயர் கிடா வாங்கிட்டு வந்து பரண் அமைச்சு வளர்த்தோம். 40 மாசம் கடந்த நிலையில, 48 ஆடுகளா பெருகி நிக்குது. தாதுஉப்பு கொடுக்காததால 24 குட்டிகள் பிறந்து நாலு மாசத்துலயே இறந்திடுச்சு. சரியா பராமரிச்சிருந்தா இழப்பைத் தவிர்த்திருக்கலாம்.
ஆட்டுத்தீவனத்துக்காக கோ-4, வேலிமசால் வளர்க்கிறோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் 3 கிலோ பசுந்தீவனமும், 60 கிராம் அடர்தீவனமும் கொடுக்கிறோம். தினமும் 5 கிராம் தாதுஉப்பையும், 10 கிராம் சமையல்உப்பையும் தண்ணில கலந்துகுடிக்கக் கொடுப்போம்.
தோட்டத்துக்கே குடிவந்த பிறகு, ரெண்டு கோழி வாங்கி வளர்த்தோம். அந்தக்கோழியில இருந்து கிடைச்ச முட்டைகள்ல வீட்டுத் தேவைக்குப் பயன்படுத்தினது போக மீதியை அடை வைச்சு, 75 பெட்டைகள், 10 சேவல்கள்னு பெருக்கினோம். 6 மாசத்துக்கு முன்ன இன்குபேட்டர் வாங்கினோம். அதுல 200 முட்டைகளைப் பொரிக்க வெச்சதுல பாதி அளவுக்குத்தான் பொரிஞ்சுது. அந்தக் குஞ்சுகளுக்கு ரெண்டு மாசம் வயசாகுது. அதுக்கடுத்து பொரிச்ச குஞ்சுகள் புரூடர்ல இருக்கு. இப்போ 100 முட்டைகளை இன்குபேட்டர்ல வெச்சிருக்கோம்” என்று கால்நடைக் கணக்குகளைச் கச்சிதமாகச் சொன்னார் தமிழ்ச்செல்வி.
ஆட்டு எரு மட்டும்தான் உரம்!
தொடர்ந்த மணிவண்ணன், “வருஷத்துக்கு ரெண்டு முறை ஆட்டு எருவைத்தான் சாத்துக்குடிக்கும், பூஞ்செடிகளுக்கும் உரமா கொடுக்கிறோம். ஒவ்வொரு தடவையும் ஒரு சாத்துக்குடி மரத்துக்கு 10 கிலோ அளவுலயும், பூச்செடிகளுக்கு ஒரு கிலோ அளவுலயும் கொட்டிடுவோம். கோழிகளை மேய விடும்போது எருவைக் கிளறி விட்டு மண்ணோடு மண்ணா ஆக்கிடும். சாத்துக்குடிக்கு பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கிறதில்ல. பூச்செடிகளுக்கு மட்டும்தான் ரசாயனப் பூச்சிக்கொல்லி தெளிக்கிறோம். இயற்கையான முறையிலேயே பூச்சிகளை விரட்ட முடியும்ங்கிற தகவல் தெரியும். ஆனா, அதை இன்னும் செயல்படுத்தி பார்க்கல. அடுத்து, மா மரங்களுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல.
மொத்தம் இருக்குற நாலு ஏக்கர் நிலத்துல ஒன்றரை ஏக்கர்ல மா; 40 சென்ட்ல சாத்துக்குடி, எலுமிச்சை, மல்லிகைப்பூ; 34 சென்ட்ல முல்லை; 65 சென்ட்ல பசுந்தீவனம்; 25 சென்ட்ல முள்ளில்லா மூங்கில்; 16 சென்ட்ல வீடு, ஆட்டுக்கொட்டகை, கோழிக்கொட்டகை இருக்கு. இப்போ தனியா, 30 சென்ட்ல சாத்துக்குடியோட மல்லியை நட்டு வெச்சிருக்கேன். 40 சென்ட் நிலத்தை மல்லாட்டைப் போடுறதுக்காக விட்டு வைச்சிருக்கேன்” என்றவர், வருமானம் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
“70 மா மரங்களையும் வருஷத்துக்கு 15 ஆயிரம் ரூபாய்னு மூணு வருஷத்துக்கு 45 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டிருக்கேன். 40 சென்ட்ல 40 சாத்துக்குடி மரங்கள் இருக்கு. ஒவ்வொரு மரத்துலயும் சராசரியா 120 கிலோ வீதம், 40 மரத்துல இருந்து 4 ஆயிரத்து 800 கிலோ காய் கிடைக்கும். சராசரியா கிலோ 30 ரூபாய்னு விற்பனை செய்தாலே... ஒரு லட்சத்து 44 ஆயிரம் ரூபாய். ஒரு எலுமிச்சை மரத்துல 1,000 காய்கள் வீதம், 10 எலுமிச்சை மரங்கள்ல இருந்து 10 ஆயிரம் காய்கள் கிடைக்குது. ஒரு காய் சராசரியா ரெண்டு ரூபாய்னு விற்பனை செய்றது மூலமா 20 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. சாத்துக்குடி, எலுமிச்சை ரெண்டுலயும் செலவு போக... ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும்.
ஊடுபயிரா இருக்குற 500 மல்லி செடியில் இருந்து தினமும் 3 கிலோ முதல் 12 கிலோ வரைக்கும் பூ கிடைக்கும். சராசரியா தினம் 5 கிலோனு வெச்சுக்கிட்டா, மாசத்துக்கு 150 கிலோ. சராசரி விலையா கிலோவுக்கு 100 ரூபாய்னு வெச்சுக்கிட்டா 15 ஆயிரம் ரூபாய். இதுல, பறிப்பு, பூச்சிக்கொல்லிக்கு 6 ஆயிரம் ரூபாய் செலவு போக 9 ஆயிரம் ரூபாய் லாபம். ஒரு வருஷத்துக்கு சராசரியா 72 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும் (4 மாதங்களுக்கு மல்லிப்பூ பறிப்பு இருக்காது). 34 சென்ட் நிலத்துல இருக்குற முல்லைச் செடிக் குச்சிகளை நாற்று உற்பத்திக்கு விற்பனை செய்றது மூலமா, வருஷத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது. இதுல செலவு போக 50 ஆயிரம் ரூபாய் லாபம்” என்ற மணிவண்ணன் நிறைவாக,
“ஆடுகளை இதுவரைக்கும் விற்பனை செய்யல. அடுத்த வருஷத்துல இருந்துதான் விற்பனை செய்யலாம்னு இருக்கேன். தற்சமயம் 26 பெட்டை ஆடுகள் இருக்கு. ஒரு ஆடு 2 வருடங்களில், 3 முறை குட்டி போடும். ஒவ்வொரு முறையும் 2 குட்டிகள் வீதம் 2 ஆண்டுகளில் 6 குட்டிகள் கிடைக்கும். 26 ஆடுகள் மூலமா, ஒரு வருஷத்துக்கு 78 குட்டிகள் கிடைக்கும். குட்டிகள் வீதம் அதை 6 மாதம் வளர்த்து விற்பனை செய்தா ஒரு ஆடு 4 ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
வருஷத்துக்கு 1,500 நாட்டுக்கோழிகளை உருவாக்கி, நாலு மாசத்துக்கு வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். நாலு மாசம் வளர்க்கும்போது, ஒரு கோழி முக்கால் கிலோவுல இருந்து ஒண்ணேகால் கிலோ வரை எடை வரும். ஒரு கிலோ உயிர் எடைக்கு 200 ரூபாய் கிடைக்கும்.
பயிர்களைப் பொறுத்தவரைக்கும் கிட்டத்தட்ட மூணு லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் வருது. கால்நடைகள்லயும் எதிர்பார்த்தபடி விற்பனை அமைஞ்சிட்டா வருஷத்துக்கு 7 லட்சம் ரூபாய்க்கு மேல லாபம் எடுத்துடுவேன்” என்று சொல்லி சந்தோஷமாக விடைகொடுத்தார்.
வாஸ்துக்கோழி!
நாட்டுக்கோழிகளுடன் சுற்றித்திருந்த அழகுக்கோழிகளை பற்றி பேசிய தமிழ்செல்வி, “இந்த வெள்ளைக் கோழிகளுக்கு வாஸ்துக்கோழினு பேரு. பார்க்குறதுக்கு அழகா இருக்கும். வாஸ்துப்பிரச்னை இருக்குற வீட்டுல இந்தக் கோழியை வளர்த்தா பிரச்னை தீரும்னு சிலர் சொல்றாங்க.
இதே மாதிரி மயில் கழுத்துக்கோழினு ஒண்ணு இருக்கு. இது பார்க்குறதுக்கு மயில் மாதிரியான நிறத்துல லேசான கொண்டையோட இருக்கும். இந்தக் கோழிகள் ஜோடி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகுது” என்றார்.
மழைக்கால நடவு!
சாத்துக்குடி மற்றும் மல்லிகைச் செடி நடவு பற்றிப் பேசிய மணிவண்ணன், “சாத்துக்குடி, மல்லி இரண்டுக்குமே புரட்டாசி முதல் கார்த்திகை வரை உள்ள பட்டம் நடவுக்கு ஏத்தது. நிலத்தை களை நீங்கும் அளவுக்கு உழவு ஓட்டி வரிசைக்குவரிசை
20 அடி, செடிக்குச்செடி 18 அடி இடைவெளியில சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்யலாம். இரண்டு சாத்துக்குடிச் செடிகளுக்கு இடையில் நான்கு அடி இடைவெளியில மல்லிகைச் செடிகளை நடவு செய்யணும்.
சாத்துக்குடிச் செடிகளை நடவு செய்ய 2 அடி நீள, அகல, ஆழத்தில குழி எடுக்கணும். மல்லிகைச் செடிகளுக்கு ஒரு அடி நீள, அகல, ஆழத்துல குழி எடுத்தாலே போதுமானது. குழியை ஒரு வாரம் ஆறப்போட்டு, ஒரு கிலோ அளவுக்கு ஆட்டுச்சாணத்தையும், மேல் மண்ணையும் தள்ளி செடிகளை நடவு செய்யணும். பருவமழையிலேயே செடிகள் வேர் பிடிச்சு, துளிர்த்து வந்து விடும்.’’
15 ஆண்டுகளில் ரூ50 லட்சம்!
வேலி ஓர தேக்கு மற்றும் மூங்கில் பற்றிப் பேசிய மணிவண்ணன், “1,000 தேக்குக் கன்னையும், வளர்த்து மரமாக்கினால், 15 முதல் 20 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம். ஒரு மரம் சராசரியாக 5 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 50 லட்ச ரூபாய் கிடைக்கும். தண்ணீர் தேங்கி களை அதிகமாக முளைக்கும் 25 சென்ட் நிலத்தில முள்ளில்லா மூங்கில் இருக்கு. இதை 10 ஆண்டுகள் வளர்த்து ஒட்டு மொத்தமாக விற்பனை செய்தா 100 டன் மூங்கில் கிடைக்கும். ஒரு டன் 4 ஆயிரம் ரூபாய் வீதம் விற்பனை செய்தா 4 லட்ச ரூபாய் கிடைக்கும்” என்கிறார்.
தொடர்புக்கு,
மணிவண்ணன்,
செல்போன்: 93610-53327
 காசி.வேம்பையன்
 படங்கள்: கா.முரளி

Tuesday, September 16, 2014

நாட்டுக் கோழி வளர்ப்பு! அரசு மான்யத்துடன்!!



ஆடு, பிராய்லர் கோழி, மீன் ,காடை, நண்டு என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. நினைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறும்!!


பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும்.கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் 15 வருடங்களுக்கு முன்பு கோழி வளர்ப்பது வழக்கம் அப்போது கோழி என்றால் அது நாட்டுக்கோழி மட்டுமே காலப்போக்கில் பிராய்லர் கோழி வந்த பிறகு நாட்டுக்கோழியுன் தாக்கம் குறைந்தது அதற்கு காரணம் வீட்டில் கோழி வளர்ப்பவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதனால் பண்ணைகளில் வளர்க்கும் கோழிகள் மக்கள் சாப்பிடுவதற்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது. ஆட்டிறைச்சியின் விலை அதிகமாக அதிகமாக பிராய்லர் கோழியின் விற்பனை அதிகரித்தது.

பிராய்லர் கோழியை விட நாட்டுக்கோழி தான் சிறந்தது என்பதால் கடந்த சிலவருடங்களாக நாட்டுக்கோழிக்கு மதிப்பு அதிகரித்தது. அது கிடைப்பது சுலபமல்ல என்பதால் ஆட்டிறைச்சிக்கு ஈடான விலையில் தற்போது நாட்டுக்கோழி விற்பனை ஆகிறது..

பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம். கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 3 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம்.

முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின் (ரூ.2 லட்சம்), அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் (ரூ.75 ஆயிரம்) தேவைப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்கள் குறைந்த முதலீட்டில் குஞ்சுகளாகவே வாங்கி வளர்ப்பது எளிதானது.பராமரிப்பு முறைகள்

பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
முதல் 48 நாட்களுக்கு புரதசத்து அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.
வளர்ப்பது எப்படி?

அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம்.

அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும். கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு மேல் வளர்த்தால் தீவனச் செலவு அதிகமாகும்.

குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 19 நாட்கள் 100 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 90 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 15 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.


கட்டமைப்பு

ஆயிரம் கோழி வளர்க்க ஆயிரம் சதுர அடி கொண்ட ஷெட் அமைக்க ரூ.70 ஆயிரம், தீவன பக்கெட் மற்றும் தண்ணீர் பக்கெட் 10க்கு ரூ.1000. குஞ்சுகள் ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, புதூர், சாலைப்புதூர், திருப்பூர் மாவட்டம் பல்லடம், பொங்கலூர் மற்றும் கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் கிடைக்கின்றன. இன்குபேட்டர் மற்றும் கேட்சர் மெஷின் ஐதராபாத்திலும், பண்ணை மற்றும் தீவனப்பொருள்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் மாவட்டங்களிலும் வாங்கலாம். முதலீடு
ஆயிரம் கோழி குஞ்சுகள் ரூ.28 ஆயிரம், 3.5 டன் தீவனம் ரூ.66,500, பராமரிப்பு கூலி ரூ.15 ஆயிரம், மின்கட்டணம் ரூ.12 ஆயிரம் என 3 மாதத்துக்கு ஒரு முறை மொத்த செலவாக ரூ.1.22 லட்சம் ஆகிறது. கோழிப்பண்ணை அமைக்க வங்கிகளில் கடனுதவி பெறலாம். தற்பொழுது திருவண்ணாமலை மாவட்டத்தில் 240 பேருக்கு நாட்டுகோழி வளர்ப்பு திட்டத்தில் பயனடைய பயனாளிகளிடம் விண்ணப்பம் பெறப்படுகிறது. உடனடியாக தொடர்பு கொள்ளலாம் .
வருமானம் ஆயிரம் கோழிகள் வளர்த்தால் 30 கோழிகள் வரை இறக்க வாய்ப்பு உள்ளது. 970 கோழிகள் நல்லமுறையில் வளரும். 80 நாள் வளர்த்தபின் விற்பனைக்கு தயாராகும். அப்போது ஒரு கோழியின் சராசரி எடை 1 கிலோ 400 கிராம் வீதம் 1358 கிலோ எடையுள்ள கோழிகளை விற்கலாம். ஒரு கிலோ சராசரியாக ரூ.125க்கு குறையாமல் விற்கப்படுகிறது. இதன் மூலம் ரூ.1.7 லட்சம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.48 ஆயிரம். சராசரியாக மாத லாபம் ரூ.16 ஆயிரம்.

சந்தை வாய்ப்புஇறைச்சி விற்பனையாளர்கள் நேரடியாகவே பண்ணைக்கு வந்து வாங்கி செல்வார்கள். அக்கம்பக்கத்தினர் வீட்டுத்தேவைக்கும், விழாக்கள், விசேஷங்களுக்கு மொத்தமாகவும் வாங்குவார்கள். ஓட்டல்கள், உணவு விடுதிகளுக்கும் நேரடியாக ஆர்டர் எடுத்து சப்ளை செய்யலாம்.

கோழிப்பண்ணை அமைக்க 50 சதவீதம் மானியத்துடன் கடன் வழங்கப்படுகிறது திருவண்ணாமலை மாவட்டத்தில்!

கோழி வளர்க்கும் திட்டம்

கோழி பண்ணை வளர்ப்பில் முன்னோடியாக விளங்கும் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்கள் போல பிற மாவட்டங்களிலும் கோழி வளர்ப்பினை ஊக்கு விக்கும் பொருட்டு தமிழக அரசால் 2013-2014ம் ஆண்டு இத்திட்டம் முதன்முறையாக செயல்படுத்தப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இத் திட்டம் 240 நபர்களுக்கு ரூ.70 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பீட்டில் செயல்படுத்தப் பட்டது. மேலும் இத்திட்டம் தமிழகத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் நடப்பு நிதியாண்டில் செயல் படுத்தப் பட உள்ளது.25 சதவீதம் மானியம்
இத்திட்டத்தின் கீழ் கறிக்கோழி மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு சார்பில் 25 சதவீத மானியமும், நபார்டு வங்கி மூலம் கோழிக்கான முதலீட்டு நிதியில் இருந்து 25 சதவீத மானியமும் ஆக மொத்தம் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள 50 சதவீதத்தை பயனாளிகள் தங்கள் சொந்த செலவிலோ அல்லது வங்கியிலிருந்து கடனாகவோ பெற்றுக் கொள்ளலாம்.
நபார்டு வங்கியின் 25 சதவீத மானியத்தை பெறு வதற்கு பயனாளிகள் வங்கியில் இருந்து கடன் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பினை ஆண்டு முழுவதும் ஊக்குவிக்கும் பொருட்டு, இரண்டாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 50 சதவீத மானியமும் (ரூ.3,125), மூன்றாம் தொகுப்பு கோழிக் குஞ்சுகள் வாங்கும் செலவில் 30 சதவீத மானியமும் (ரூ.1,875) தமிழக அரசால் வழங்கப்பட உள்ளது.
போதிய நிலம்
மேலும் இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள், தனிநபர், தொழில் முனைவோர், சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட தகுதியானர்கள் இவர்களிடம் கோழிப்பண்ணை அமைக்க போதிய நிலம் தங்கள் பெயரிலோ அல்லது குடும்ப உறுப்பினர் பெயரிலோ இருத்தல் வேண்டும். கோழி வளர்ப்பில் முன் அனுபவம் உள்ளவர்களும், ஏற்கனவே கொட்டகை அமைத்த பயனா ளிகள் புதிய கொட்டகை அமைத்து பண்ணையை விரிவாக்கம் செய்ய ஆர்வ முள்ளவர்களும் இத் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
3 நாள் பயிற்சி
தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மையத்தின் மூலம் 5 நாட்களுக்கு கோழி வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். மேலும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதலுடன் கறிக்கோழி வளர்ப்பிற்கும் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், ஆர்வமும் உள்ள வர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள வங்கிகளில் கடன் வழங்குவதற்கான ஒப்புதல் கடிதம் வங்கி மேலாளரிட மிருந்து பெற்று, அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப் பித்து பயன்பெறலாம். மேலும் அப்பகுதி கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரிடம் சமர்ப்பித்து பயன்பெறலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பயனா ளிகள் தேர்வு செய்யப்பட உள்ள னர்.

Wednesday, March 19, 2014

அசத்தல் வருமானம் தரும் ஆடு வளர்ப்பு...


அணுவைக் கொண்டு ஆக்கல், அழித்தல் என்ற இரண்டு வேலைகளையும் செய்வது போலத்தான் தகவல் தொடர்புத்துறை வளர்ச்சியும். ஆக்கமா... அழிவா... என்பது நாம் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. அந்த வகையில், இன்றைக்கு சமூகச் சீர்கேடுகளில் ஒன்றாக 'ஃபேஸ்புக்' எனும் 'முகநூல்' விமர்சிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த முகநூல் மூலமாகவே நண்பர்களாகி, விவசாயத்திலும் ஆடு வளர்ப்பிலும் பட்டையைக் கிளப்பி வருகிறார்கள் நான்கு இளைஞர்கள் என்றால், ஆச்சர்ய சங்கதிதானே!
விருதுநகரைச் சேர்ந்த விஜயகுமார், சிங்கப்பூரில் இருக்கும் ராமசாமி, கோயம் புத்தூரில் இருக்கும் எத்திராஜ், ஓமன் நாட்டில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் ஆகிய நால்வரும் தங்கள் பணிகளுக்கு இடையில், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே குத்தகைக்கு நிலம் எடுத்து விவசாயம் செய்வதுடன், கொட்டில் முறை ஆடு வளர்ப்புத் தொழிலையும் சிறப்பாக செய்து வருகிறார்கள்.
நத்தம்-மதுரை சாலையில் 7-வது கிலோ மீட்டரில் வருகிறது சாத்தாம்பாடிவிலக்கு. இங்கிருந்து இடதுபுறம் திரும்பும் தார்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் வருகிறது சாத்தாம்பாடி. சாலையை ஒட்டியுள்ள மாமரங்களுக்கு இடையில் இருக்கிறது இவர்களுடைய பசுமைப் பண்ணை. நாம் அங்கே ஆஜரானபோது... ஆடுகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த விஜயகுமார், நம்மை உற்சாகத்துடன் வரவேற்றுப் பேசினார்.
''எனக்குச் சொந்த ஊரு விருதுநகர். அடிப்படையில ஒரு இன்ஜினீயர். நாலு வருஷமா 'பசுமை விகடன்' படிச்சுட்டு வர்றேன். அதை படிக்கப் படிக்க விவசாயத்து மேல ஆர்வம் வந்துடுச்சு. அதேபோலவே நண்பர்கள் மூணு பேரும் 'பசுமை விகடன்' வாசிக்கறவங்கதான். நாங்க, நாலு பேரும் இன்ஜினீயர்ங்கிற அடிப்படையிலதான் நட்பானோம். ஃபேஸ்புக்ல அப்பப்ப கமெண்ட் போட்டுக்குவோம். அதுல பெரும் பாலும் விவசாயம் தொடர்பான விஷயத்தைப் பத்தித்தான் பேசுவோம். பசுமை விகடன்ல படிச்ச செய்தியைப் பத்தி விவாதிச்சுக்கு வோம்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
2012 டிசம்பர்ல இருந்து ரொம்ப நெருக்கமான நண்பர்களாயிட்டோம். 2013 ஜனவரியில நாலு பேரும் நேர்ல சந்திக்கத் திட்டமிட்டோம். ராமசாமியின் சொந்த ஊரான சிவகாசி அருகே உள்ள வடமலா புரத்தில் நாலுபேரும் குடும்பத்தோட ஆஜராகி, ஒருத்தருக்கு ஒருத்தர் மனசுவிட்டு பேசிக்கிட்டோம். அதுவரைக்கும் 'ஃபேஸ்புக்' நண்பர்களா இருந்த நாங்க, அதிலிருந்து குடும்ப நண்பர்களா கிட்டோம். ஒரு கட்டத்துல, 'எல்லாரும் சேர்ந்து ஏன் விவசாயம் செய்யக் கூடாது?'னு முடிவு செஞ்சோம். நண்பர்கள் மூணு பேரும் வெளியூர்ல இருக்கறதால, நான் மட்டுமே பண்ணையைப் பாத்துக் கறதுனு முடிவாச்சு. உடனே ராமசாமியோட மாமியார் தோட்டத்தை, குத்தகைக்கு எடுத் தோம்.
இந்த 40 ஏக்கர் தோட்டத்துல... 20 ஏக்கர் மா, 17 ஏக்கர் தென்னை இதெல்லாம் இருக்கு. இங்க இருக்கற மூணு கிணத்துலயும் தாராளமான தண்ணியும் கிடைக்குது. அதனால, ஒருங்கிணைந்தப் பண்ணையா இதை மாத்த நினைச்சோம். கிணத்துல விரால் மீன் வாங்கி விட்டோம். பிறகு, நாட்டுக்கோழி வளர்க்கலாம்னு 50 கோழிகளையும் வாங்கினோம். அந்த நேரத்துல 'பசுமை விகடன்' தண்டோரா பகுதியில வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு, திண்டுக்கல், கால்நடை அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்துல நடந்த ஆடு வளர்ப்புப் பயிற்சியில கலந்துக்கிட்டேன். அதுக்குப் பிறகு, ஆட்டுப்பண்ணை வெக்குற ஆர்வம் வந்துச்சு. பசுமை விகடன் மூலம் அறிமுகமான ஆட்டுப் பண்ணைகள நேர்ல போய் பாத்தோம். பல பண்ணைகளைப் பாத்ததுல... 'தலைச்சேரி ஆடுகளை வாங்கி, போயர்ல கிராஸ் பண்ணி குட்டி எடுத்து வித்தா நல்ல லாபம் வரும்!'னு தெரிஞ்சுக் கிட்டோம்'' என்று சொன்ன விஜயகுமார், அடுத்தக் கட்டமாக நண்பர்களுடன் ஆலோசித்து, களத்திலும் இறங்கியிருக் கிறார்.
பரண்ல ஆடு... பள்ளத்துல கோழி!
''அம்மன் ஆட்டுப்பண்ணை உரிமை யாளர் சதாசிவத்துகிட்ட ஆலோசனை செஞ்சோம். அவரு சொன்னபடி தென்னைக்கு இடையில, கோ-4, அகத்தி, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29 மாதிரி யான பசுந்தீவனங்களை விதைச்சோம். எடுத்தவுடனே பெருசா பண்ணாம சின்ன அளவுல ஆரம்பிச்சு, நெளிவு, சுளிவுகளைத் தெரிஞ்சுக்கிட்டு பிறகு, பெருசா பண்ணலாம்னு முடிவு செஞ்சோம். தீவனப் பயிரெல்லாம் வளர்ந்த பிறகு, ஆட்டுபண்ணைக்கான கொட்டில் அமைச்சோம். கொட்டகையை நானே டிசைன் பண்ணி அமைச்சேன். 60 அடி நீளம், 30 அடி அகலத்துல 5 அடி உயரத் துல கொட்டில் அமைச்சுருக்கோம். உள்ளே குட்டிகளுக்கு தனி அறை, சினை ஆடுகளுக்கு தனி அறை, இனப் பெருக்கத்துக்கு தனி அறைனு பிரிச்சுருக்கோம். ஜி.எல் ஸீட் கூரைதான் போட்டிருக்கோம். இதனால, வெப்பம் அதிகமா உள்ள வராது. ஆஸ்பெஸ்டாஸ் மாதிரி சீக்கிரமா உடையாமலும் இருக்கும். இந்த அளவுல குடில் அமைக்க, 6 லட்ச ரூபாய் செலவாச்சு. கொட்டகை உயரமா இருக்கறதால, பரண்ல ஆடு... பள்ளத்துல நாட்டுக்கோழினு விட்டுட்டோம். சுத்தியும் ஆடுகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள நைலான் வலையை வெச்சு அடைச்சுருக்கோம். கீழ விழுற ஆட்டுப் புழுக்கையில உற்பத்தியாகுற புழு, பூச்சிகளைக் கோழிக தின்னுக்கும்.
ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்துடுவோம்!
2013-ம் வருஷம் ஆகஸ்ட் கடைசியில... 30 பெட்டை ஆடு, ஒரு கிடானு வாங்கிட்டு வந்து கொட்டகையில விட்டோம். முப்பது ஆடுகளையும் ஒரே வயசுல வாங்காம, குட்டி, சினையாடு, இனப்பெருக்கத்துக்குத் தயாரா இருக்கற ஆடுனு பல ரகமா வாங்கிட்டு வந்தோம். 6 மாசம் முடிஞ்சுருக்கு. இப்ப கையில
16 குட்டிகள் இருக்கு. காலையில ஏழு மணிக்கு பசுந்தீவனத்தை வெட்டிட்டு வந்து அரை மணி நேரம் ஆறப்போட்டு, பிறகு மெஷின்ல சின்னச்சின்னதா வெட்டுவோம். 9 மணிக்கு மேல பசுந்தீவனத்தைக் கொடுப்போம். அரைமணி நேரம் கழிச்சு தண்ணி வெப்போம். 11 மணி வாக்குல கொட்டகையைவிட்டு கீழ இறக்கி, கொட்டகையைச் சுத்தி இருக்கற காலி இடத்துல காலாற நடக்க விடுவோம். திரும்பவும் ஒரு மணிக்கு கொட்டகையில ஏத்தி, தீவனமும், தண்ணியும் வெப்போம்.
மருத்துவர்கள் ஆலோசனைப்படி மாசம் ஒரு தடவை குடற்புழு நீக்கம் செஞ்சுடுவோம். மருத்துவர்களோட ஆலோசனைப்படி செய்றதால, எந்தத் தொந்தரவும் இல்லாம போயிட்டு இருக்கு.
ஆறே மாசத்துல 16 குட்டிக கிடைச்சது... எங்களுக்கு பெரிய நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. இன்னும் ரெண்டு வருஷத்துல மொத்த முதலீட்டையும் எடுத்திடுவோம். ஆட்டுப்புழுக்கை மட்டும் மாசம் ஒரு டன் பக்கமா வருது. அதை பசுந்தீவனங்களுக்கும் தென்னைக்கும் உரமா பயன்படுத்திக்குறோம்'' என்ற விஜயகுமார்,
''இப்போதைக்கு எல்லாமே சோதனை முயற்சியாதான் பண்ணிட்டிருக்கோம். இதையே பெரிய அளவுல செய்யுறப்ப... அதிக லாபம் கிடைக்கும்னு நம்புறோம். நாங்க நாலு பேரும் ஆசைப்பட்டபடி இந்தத் தோட்டத்தை சிறந்த 'ஒருங்கிணைந்தப் பண்ணை'யா மாத்துவோம்ங்கிற நம்பிக்கை இப்ப நல்லாவே வந்திருக்கு'' என்றார், பளீரிடும் முகத்துடன்!
எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!
இவர்களுக்குத் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கிவரும் சதாசிவத்திடம் பேசியபோது, ''இன்னிக்கு இருக்கற சூழல்ல விவசாயத்தோட கால்நடை வளர்ப்பையும் செஞ்சாதான் வருமானம் பார்க்க முடியும். பொதுவா ஆடுக இருந்தா வெள்ளாமையைக் கடிச்சுப் போடும்னு ஒரு பயம் இருக்கும். இப்ப அந்த பயமே தேவையில்ல. கொட்டில் முறையில ஆடுகளை வளர்த்தா... ஒரே ஆளு,
100 ஆடுகள் வரை பராமரிக்கலாம். பொதுவா ஆட்டுப்பண்ணைத் தொழில்ல இறங்குற ரொம்ப பேரு தோத்துப் போறதுக்கு காரணம்... முறையான திட்டம் இல்லாதது தான்.
முதல்ல பசுந்தீவனங்களை உற்பத்தி செய்யணும். தீவனம் இல்லாம பண்ணை அமைக்கறதுக்கு இறங்கக் கூடாது. அதேபோல கொட்டகைக்கு அதிக முதலீடு போட்டுட்டு, ஆடு வாங்க காசில்லாம கஷ்டப்படக் கூடாது. முடிஞ்சவரை கொட்டகைச் செலவை குறைச்சா நல்லது. பலரும் எடுத்த எடுப்பிலேயே நூறு ஆடு, இருநூறு ஆடுகனு இறக்கிடுவாங்க. அது ரொம்ப தப்பு. ஆரம்பத்துல இருபது, முப்பது ஆடுகளை வெச்சு, பண்ணையை ஆரம்பிச்சு, நல்ல அனுபவம் வந்த பிறகு அதிகப்படுத்திக்கலாம். தீவனத்தையும், மருந்தையும் சரியா கொடுத்து பராமரிச்சா... ஆட்டுப்பண்ணை மாதிரி லாபமான தொழில் எதுவும் இல்லை.
முதலீடு ரெண்டு மடங்கு அதிகமாகும்!
கொட்டில் முறையில வளர்க்கறதுக்கு தலைச்சேரிபோயர் கிராஸ் ஆடுகள்தான் சிறந்தது. சீக்கிரம் எடை வரும். இன்னிக்கு நிலமையில வளர்ப்பு ஆடு, உயிர் எடையா கிலோ 350 ரூபாய்க்கும், கறி ஆடு உயிர் எடை 250 ரூபாய்க்கும் போகுது. 30 ஆடுக வாங்க கிட்டத்தட்ட ஒண்ணரை லட்ச ரூபாயும், கொட்டில் அமைக்க நாலு லட்ச ரூபாய், பசுந்தீவனம் மத்த விஷயங்களுக்காக ஒரு 50 ஆயிரம்னு மொத்தம் ஆறு லட்ச ரூபாய் தேவைப்படும். இதுக்கு வங்கிகள்ல கடனுதவியும் கிடைக்குது. பண்ணை ஆரம்பிக்க நினைக்கறவங்க, பல பண்ணை களை நேர்ல போய் பாக்கணும். தரமான ஆடுகளா வாங்கிட்டு வந்து, பண்ணையை ஆரம்பிக்கலாம். ஒரே வயசுள்ள ஆடுகளா வாங்கக் கூடாது. சின்னது பெருசுனு பல வயசுள்ள, தெம்பான, நோய் தாக்குதல் இல்லாத ஆடுகளா பாத்து வாங்கணும்'' என்ற சதாசிவம்,
''ஒரு ஆடு, ஒன்பது மாசத்துல பருவத்துக்கு வரும். அதிலிருந்து 8-வது மாசம் குட்டிப் போடும். ஒரு ஆடு ரெண்டு வருஷத்துல மூணு முறை குட்டிப் போடும். தலைச்சேரி ஆடுக ஒரு ஈத்துக்கு ரெண்டு குட்டிப் போடும். அப்ப ரெண்டு வருஷத்துல ஆறு குட்டி கிடைக்கும். தோராயமா ஆறாயிரம் ரூபாய்க்கு வாங்குற ஆடு மூலமா... ரெண்டு வருஷத்துல 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள குட்டிக கிடைச்சுடும். இப்படி முதலீடு ரெண்டு மடங்கா வேறெந்த தொழில்ல பெருகும்?'' என்று கேட்டார் சிரித்தபடியே!

 ஓமனிலிருந்து ஒரு ஆட்டுப்பண்ணை!
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழர்களிடமும் விவசாய ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில், ஓமன் நாட்டிலிருந்தபடி, தன் மனைவி மூலமாக ஆட்டுப் பண்ணைத் தொழிலை மேற்கொண்டிருக்கிறார், கோயம்புத்தூரைச் சேர்ந்த மணி. மாஸ்திகவுண்டன்பதி கிராமத்தில்தான் இருக்கிறது, இவருடைய கொட்டில் முறை ஆட்டுப்பண்ணை. 4 போயர் உட்பட 60 தலைச்சேரி ஆடுகளை இதில் வளர்த்து வரும் மணியின் மனைவி தமிழ்ச்செல்வி, ஆடு வளர்ப்புக்கு தாங்கள் மாறிய கதையை கலகலவென சொன்னார்.
''சொந்த ஊரு கோயம்புத்தூருதான். என்னோட கணவர், ஒரு இன்ஜினீயர். அவர், வளைகுடா நாடுகள்ல வேலை பார்க்கறதால... 29 வருஷமா அங்கதான் இருந்தோம். ஓய்வுநேரத்துல 'ஃபேஸ்புக்' பார்க்கற வழக்கம் அவருக்கு உண்டு. அதுலயும் விகடன் குழும இதழ்களோட 'ஃபேஸ்புக்' எல்லாத்தையும் விடாமல் பார்ப்பார். அப்படி பசுமை விகடன் 'ஃபேஸ்புக்' பார்க்க ஆரம்பிச்சதுல, விவசாயம், கால்நடை வளர்ப்பு மேல அவருக்கு ஆர்வம் வந்துடுச்சு.
ஏற்கெனவே இந்த கிராமத்துல தண்ணீர் வசதியோட ஒண்ணரை ஏக்கர் நிலம் எங்களுக்கு இருந்துச்சு. சில வருஷத்துல ஊர் திரும்பி, அதுல வீடுகட்டி குடியிருக்கலாம்னு யோசனை எங்களுக்கு இருந்துச்சு. ஆனா, ஆட்டுப்பண்ணை அமைக்க லாம்கிற ஆர்வம் காரணமா என்னை மட்டும் ஊருக்கு அனுப்பினார். உடனடியா ஆட்டுபண்ணையை உருவாக்கிட்டேன். தினமும் போன் மூலம் தகுந்த ஆலோசனைகளை அங்கிருந்தபடியே சொல்லிட்டு வர்றார் கணவர்'' எனும் தமிழ்செல்விக்கு, ஆட்டுப் பண்ணை அமைக்க, மொத்தம் ஆன செலவு 14 லட்சம் ரூபாய்.
''60 க்கு 40 அடி நீளத்தில் 7 அடி உயரமுள்ள பால்கனி மீது 7 அடி உயரம் கொண்ட செட் அமைச்சு இருக்கோம். தீவனப்புல் 1 ஏக்கர்ல போட்டிருக்கோம். அடர்தீவனமும் கொடுக்கிறோம். பண்ணை அமைச்சு 3 மாசம்தான் ஆச்சு. இப்ப 7 குட்டிகள் புது வரவா வந்திருக்கு. இன்னும் 10 மாசம் கழிச்சுத்தான் வருமான கணக்கு சொல்லமுடியும்.
ஆடுவளர்க்கற அனுபவ விவசாயிகள்கிட்டயும், தமிழ்நாடு கால்நடை ஆராய்ச்சி மையம் நடத்தின ஆடுவளர்ப்புப் பயிற்சியிலும் கலந்துக்கிட்டு நிறைய தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்ப பக்காவான ஆடுவளர்ப்பு விவசாயியா மாறிட்டேன்.  இது மொத்தத்துக்கும் காரணமே பசுமை விகடன்தான்'' என்று ஆட்டுக்குட்டிகளைச் செல்லமாக அணைத்தபடி சொன்னார் தமிழ்ச்செல்வி.
மணியிடம் தொலைபேசி மூலமாக பேசியபோது, ''எனக்கு ரெண்டு பொண்ணுங்க. மூத்தப் பொண்ணுக்கு கல்யாணமாகிடுச்சு. மாப்பிள்ளையும் ஓமன்லதான் வேலை பாக்கறாரு. ரெண்டாவது பொண்ணு, சொந்த ஊர்லயே காலேஜ் படிக்கறா. பசுமை விகடன் படிச்ச பிறகு, 'வெளிநாட்டுல வேலை பாத்தது போதும். சொந்த ஊருக்குப் போய் விவசாயம் பாக்கலாம்’னு முடிவு பண்ணியிருந்தேன். ஆள் பற்றாக்குறை இருக்கறதால, பராமரிப்பு குறைவான, சந்தை வாய்ப்புள்ள ஆடு வளர்ப்புத் தொழிலைத் தேர்ந்தெடுத்திருக்கேன். தீவனம் வெட்டிப் போடுறதுக்கு ஒரு ஆளை மட்டும் வேலைக்கு வெச்சுருக்கோம். பராமரிப்புச் செலவை எந்தளவுக்குக் குறைக்கிறோமோ அந்தளவுக்கு லாபம் அதிகரிக்கும். ஆரம்பத்துல ஒரு ஆட்டுக்கான பராமரிப்புச் செலவு, ஒரு மாசத்துக்கு 14 ரூபாயா இருந்துச்சு. இப்ப 10 ரூபாயா குறைச்சுருக்கோம் (தீவனம் தவிர்த்து). சீக்கிரமே நானும் இந்தியாவுக்குத் திரும்பி, ஆடு வளர்ப்புல முழு கவனம் செலுத்தப் போறேன்'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார், மணி.
மணியுடன் தொடர்புகொள்ள : mrtmani@yahoo.co.in
தொடர்புக்கு,
விஜயகுமார்,
செல்போன்: 93444-16089

Monday, February 17, 2014

நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்


பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.

கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.
குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.
 தொடர்புக்கு,
பாலமுருகன்,
செல்போன்: 95855-24061.

Saturday, September 21, 2013

கோழிப்பண்ணை உபகரணங்கள் குஞ்சுப் பொரிப்பான் உபகரணங்கள்

1. அடை காப்பான்
Setter
அடை காப்பான்
  • இதில் அடை முட்டைகள் முதல் 19 நாட்கள் வைத்து அடைகாக்க படும். இந்த இயந்திரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் முட்டைகளை திருப்புதல் ஆகியவை கட்டுபடுத்துவதற்கான வசதிகள் உள்ளன.
2. குஞ்சு பொரிப்பான் 
  • இது அடைகாப்பானை போல இருந்தாலும் அடை முட்டைகளை திருப்புவதற்கான வசதி இல்லை. மேலும் இதில் தட்டுகள் பொரிக்கும் குஞ்சுகளுக்கு ஏற்றவாறு அமைக்கபட்டிருக்கும்.
  • இதில் அடைமுட்டைகள் அடைகாத்தல் காலத்தின் கடைசி 3 நாட்கள் இருக்கும்.
  • உலகில் காணப்படும் பல்வேறு வகையான அடைகாப்பான் மற்றும் குஞ்சுப்பொரிப்பான்கள்:
    • காரிடார் வகை பொரிப்பான்கள்
    • குகை வகை பொரிப்பான்கள்
    • செங்குத்தான காற்றாலை பொரிப்பான்கள்
3. அழுத்த காற்று அமைப்பு
  • சில அடைகாக்கும் கருவியில் அழுத்த காற்று முட்டைகள் அடங்கிய தட்டுகளை திருப்பி விட பயன்படுத்தப்படுகிறது.
  • மத்திய பெரிய அழுத்தகாற்று அமைப்பு ஒன்று தூசி தட்டவும் குஞ்சுப் பொரிப்பகத்தினை சுத்தம் செய்யவும் தேவைப்படுகிறது.
4. அவசரகால தயாரன மின் அமைப்புகள்
  • உள்ளூர் மின் வழங்கல் அமைப்பிலிருந்து மின்சாரம் கிடைக்காத பட்சத்தில் குஞ்சுப் பொரிப்பகத்திற்கு மாற்று மின்சார அமைப்பு இருக்கவேண்டும்.
  • ஒரு நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப்பொரிப்பகத்திற்கு அருகில் அல்லது அடுத்த கட்டிடத்தில் இருக்கவேண்டும்.
  • நிலையான மின்சார ஜெனரெட்டர் குஞ்சுப் பொரிப்பகத்தின் அனைத்து மின்சார தேவைகளை பூர்த்தி செய்யும் அளவு இருக்கவேண்டும்.
5. குஞ்சுப் பொரிப்பகத்தில் உள்ள உபகரணங்கள்
  • குஞ்சுப் பொரிப்பானின் தட்டு கழுவிகள்
  • குப்பைகளை நீக்கும் அமைப்புகள்
  • முட்டைகளை மாற்றும் இயந்திரங்கள்
  • முட்டைக்குள் தடுப்பூசி போடும் இயந்திரங்கள்
  • குஞ்சுப் பெட்டிகள் கழுவிகள்
  • அலமாரி கழுவிகள்
  • தடுப்பூசி போடுதல் / இனம் பிரித்தல் / தரம் பிரித்தல் அமைப்புகள்
  • அதிக அழுத்த காற்றடிப்பான்கள்

முட்டைகளை கையாளும் உபகரணங்கள்


1. குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள்

  • பொதுவாக குஞ்சுப் பொரிக்கும் தட்டுகள் தட்டையாகவோ குழியாகவோ இருக்கும்.
  • ஒவ்வொரு தட்டிலும் 90 அல்லது 180 முட்டைகள் வைக்கலாம்.
2. அடை முட்டைகளை மாற்றும் எந்திரங்கள்
  • இதன் மூலம் பண்ணை முட்டை அட்டையிலிருந்து முட்டைகளை குஞ்சுப் பொரிக்கும் தட்டிற்கு மாற்றப்படுகிறது.
  • அதிகமாக முட்டைகளை மாற்றும் குஞ்சுப்பொரிப்பகங்களில் வெற்றிட முட்டை தூக்கிகள் உபயோகப்படுத்தபடுகிறது

முட்டை கண்டறிவான்

  • ஒளியை கொண்டு முட்டையின் உள் அமைப்புகளை காணும் கருவியாகும்.
  • ஒவ்வொரு முட்டை மற்றும் பல முட்டைகளை காணுமாறு இரண்டு வகையான முட்டை கண்டறிவான்கள் உள்ளன.

அடைகாப்பான் உபகரணங்கள்

  • இவை இளங்குஞ்சுகளுக்கு முதல் சில வாரங்கள் கதகதப்பும் மற்றும் வெளிச்சமும் கொடுக்ககூடியவை.
  • இதில் கதகதப்புக்கு என்று ஒரு உபகரணம், வெப்பம் மற்றும் வெளிச்சத்தை எதிரொலிப்பான்கள் மற்றும் உயரங்களை மாற்றி அமைக்க தேவையான வசதிகள் ஆகியவை உள்ளன.
  • அடை காக்க உபயோகப்படுத்தப்படும் சில உபகரணங்கள்:
1. கரி அடுப்பு / மண்ணெய் அடுப்பு
Charcoal stove
கரி அடுப்பு

  • இவ்வகையான அடுப்புகள் மின்சாரம் இல்லாத இடங்கள் அல்லது மின்சாரம் விலை அதிகமாக இருக்கும் இடங்களிலும், மின்சாரம் தட்டுபாடு உள்ள இடங்களிலும் பயன்படுத்தபடுகின்றன.
  • இவ்வகையான அடுப்புகளில் தட்டுகள் மற்றும் குழி போன்ற அமைப்புகள் உள்ளதால், அது வெப்பத்தை ரொம்ப நேரம் இருக்குமாறு செய்கிறது.
2. எரிவாயு அடைக்காப்பான்
Gas brooder
எரிவாயு அடைக்காப்பான்
  • இயற்கை எரிவாயு அல்லது திரவ பெட்ரோலிய வாயு அல்லது மீத்தேன் ஆகியவற்றின் மூலம் சூடாக்கும் கம்பி வெப்படுத்தபட்டு சுமார் 3 – 5 அடி குஞ்சுகளுக்கு மேலே அமைக்கப்படுகிறது.
  • இவ்வகை அடுப்புகளில் பிரதிபலிப்பான்கள் அமைக்கப்பட்டு வெப்பத்தை குஞ்சுகளை நோக்கி எதிரொலிக்கப்படுகிறது.
3. மின்சார அடைக்காப்பான்கள்
Electrical brooder
மின்சார அடைக்காப்பான்கள்
  • இந்த அமைப்பில் சீரான ஒரே அளவு வெப்பம் பெரிய அளவு இடத்திற்கு இருக்குமாறு அமைக்கப்படுகிறது. இதனால் குஞ்சுகள் அடைக்காப்பானில் ஒரே இடத்தில் அடைவது தடுக்கப்படுகிறது.
  • ஒரு மின்சார அடைக்காப்பானை கொண்டு 300 முதல் 400 இளங்குஞ்சுகளை வளர்த்தலாம்.
4. அகச்சிவப்பு விளக்குகள்
infra-red bulbs
அகச்சிவப்பு விளக்குகள்
  • இது அதே எதிரொலிக்கும் தன்மை கொண்டுள்ளதால் தனியாக எதிரொலிப்பான்கள் தேவைப்படாது.
  • 150 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் 250 வாட் பல்புகள் 250 குஞ்சுகளுக்கும் தேவையான வெப்பத்தை அளிக்ககூடியது.
5. எதிரொலிப்பான்கள் அல்லது ஹொவர்கள்
  • இவ்வகை எதிரொலிப்பான்கள் ஹொவர்கள் என அழைக்கப்படுகிறது.
  • இவை வெப்பத்தையும் ஒளியையும் எதிரொலிக்ககூடியது.
i).தட்டையான ஹொவர்கள்
  • இவ்வகை தட்டையானது .இதில் சூடாகும் கம்பிகள், சூடேற்றும் அமைப்புகள் மற்றும் தலைமை விளக்கு ஆகியவை உள்ளன.சிலவற்றில் வெப்பத்தை அளவிட வெப்பமானிகள் அமைக்கப்பட்டிருக்கும்.
  • இவை கூரையிலிருந்து தொங்கவிடமால், நான்கு மூலைகளில் அமைக்கப்பட்ட தூண்கள் மூலம் நிற்க வைக்கப்படுகிறது.
ii).குழி வடிவான ஹொவர்  
  • இதில் குழிவடிவான அமைப்பில் சதாரண மின்சார விளக்கும், வெப்ப நிலைப்படுத்தியும் , சில இடங்ளில் வெப்பமானியும் அமைக்கப்பட்டிருக்கும்.
6. இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு
Brooder guard
இளங்குஞ்சு தடுப்பு அல்லது அடைக்காப்பான் தடுப்பு

  • இவைகள் 1 – 1.5 அடி உயரம் மற்றும் வெவ்வேறு நீளம் கொண்ட மெல்லிய இரும்பு தகடுகள் , அட்டை தட்டிகள் மற்றும் மூங்கில் பாய்களாகும்.
  • இந்த தடுப்பு போன்ற அமைப்பால் கோழிக்குஞ்சுகள் புரூடரை விட்டு தள்ளி சென்று குளிரால் பாதிக்கபடாமல் தவிர்க்கப்படுகிறது.
  • இதனால் கோழிக்குஞ்சுகள் சூடான பகுதிக்கு அருகே செல்ல பழக கற்றுகொள்கிறது.
  • அடைக்காப்பானின் தடுப்பின் விட்டம் 5 அடி மற்றும் உயரம் 1.5 மிகாமல் இருக்குமாறு அமைக்கவேண்டும்.
  • பருவகாலங்களை பொறுத்து அட்டை தட்டு, இரும்பு தகடு, கம்பி வலை மற்றும் பாய் ஆகியவைகளை தடுப்புகளாக பயன்படுத்தலாம்.
  • வெயிற்காலங்களில் அடைக்காக்கும் காலம் 5-6 நாட்களும் குளிர்காலங்களில் 2-3 வாரங்களும் இருக்கவேண்டும்.
7. மின்சார சூடாக்கிகள் (heating rods or coils)
Electrical brooding heaters
மின்சார சூடாக்கிகள்
  • இதில் சூடாக்கும் கம்பிகள் மற்றும் விளக்கு ஆகியவை உள்ளன. சிலவற்றில் வெப்பமானி உள்ளன.
  • சூடாக்கும் கம்பிகள் மற்றும் சுருள் கம்பிகள் மேலே எதிரொலிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கிறது.
  • இதில் தேவைக்கு ஏற்ப வெப்பநிலையை மாற்றிகொள்ளலாம்.

தீவன உபகரணங்கள்

  • இது கோழிகளுக்கு தீவனம் அளிக்க பயன்படுத்தபடுகிறது.
  • இது வெவ்வேறு அளவுகளில் மற்றும் மாடல்களில் பழைய வகையில் அல்லது பாதி தானியங்கி வகையில் இரும்பு அல்லது பிளாஸ்டிக் ஆகியவற்றால் செய்யப்பட்டிருக்கும்.
  • தீவனத் தொட்டிகளின் வகைகள்:
1. தானியங்கி தீவன தொட்டிகள்
Automatic Feeder
தானியங்கி தீவன தொட்டிகள்
  • இவைகள் கோழிக்கொட்டகையின் மொத்த நீளத்திற்கு தள்ளி செல்லும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும்.
  • மின்சாரத்தில் இவை இயங்ககூடியது. இதன் உயரம் கோழிகளின் வயதுக்கேற்ப மாற்றி கொள்ளலாம்.
2.நீளமான தீவனத்தொட்டி
Linear Feeder
நீளமான தீவனத்தொட்டி
  • வெவ்வெறு நீளங்களில் தடுப்புகள் கொண்டவையாக கிடைக்கிறது.
  • உயரத்தை மாற்றிக்கொள்ள வசதிகள் உள்ளன.
  • இவைகள் பொதுவாக துருபிடிக்காத இரும்பினால் தயாரிக்கப்பட்டிருக்கும். சில சமயங்களில் மரம் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்டிருக்கும்.
  • தீவனத்தொட்டிகள் ஆடாமல் இருக்கவும் உயரத்தை மாற்றிக்கொள்ளவும் தேவையான வசதிகள் உள்ளன.
  • கோழிகள் தீவனத்தொட்டியின் இருபுறங்களிலும் இருந்து தீவன எடுக்கும்.
  • மொத்த தீவன இடம் = 2 X தீவனத்தொட்டியின் நீளம்.
  • நீளமான தீவனத்தொட்டிகள் = (2 X தீவனத்தொட்டியின் நீளம்) ÷ தீவனத்தொட்டியின் அளவு ( செ.மீ.)
3. வட்ட தீவனத்தொட்டி
Circular Feeder
வட்ட தீவனத்தொட்டி
  • இவை பாதி தானியங்கி தீவனத்தொட்டிகள் ஆகும். இதிலுள்ள உருளை போன்ற அமைப்பில் 5 -7 கிலோ வரை போட்டு வைக்கலாம்.
  • தீவனம் மெதுவாக புவிஈர்ப்பு விசையால் தீவனத்தொட்டிக்கு கீழே செல்லும்.
  • இதில் தடுப்புகளை அமைத்து தீவன விரயத்தை தடுக்கலாம்.
  • இவைகள் பிளாஸ்டிகினால் தயாரிக்கப்படுகிறது.மேலும் இவைகள் கூரையிலிருந்து அல்லது தனியாக குழாய் அமைத்து அதில் இருந்து தொங்கவிடப்படுகிறது.
  • இவைகள் தொங்கும் தீவனத்தொட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இவைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன. இந்த தீவனத்தொட்டிகள் நிறைய தீவனம் ஒரு முறை இட்டால் ஏறக்குறைய 4- 7 நாட்கள் வரை கோழிகளின் வயது மற்றும் தீவனம் சாப்பிடும் எண்ணிக்கை பொறுத்து போதுமான இருக்கும்.
  • இதன் உயரத்தை சின்ன வசதி மூலம் சுலபமாக மாற்றி கொள்ளலாம்.
  • இவைகள் வெவ்வேறு வண்ணங்ளில் பளிச்சென்று ( நீலம் மற்றும் சிவப்பு ) இருப்பதால் முட்டைகோழிகள் மற்றும் இளங்குஞ்சுகள் ஈர்க்கப்பட்டு தீவனம் உட்கொள்ளுவது எளிதாக நடைபெறுகிறது.
  • தொங்கும் தீவனத்தொட்டிகளின் எண்ணிக்கை = 1.3* ( சுற்றளவு ÷தீவன உண்ணும் இடளவு ) செ.மீ.ல்
  • நீளவாக்கு தீவனத்தொட்டிகளை விட தொங்கும் தீவனத்தொட்டிகளில் 30 சதவீதம் அதிகம் கோழிகள் தீவனம் உண்ணும்.
4. கிளிஞ்சல் பெட்டி
shell grit box
கிளிஞ்சல் பெட்டி
  • முட்டைகோழிகளுக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்காக கிளிஞ்சல் வைப்பதற்கு இவைகள் உபயோகப்படுத்தபடுகிறது.

கோழிகளுக்குத்தண்ணீர் அளிக்கும் உபகரணங்கள்


1. தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள்

  • தண்ணீரில் கலந்துள்ள அதிகமாக திடப்பொருள்களால் ஈரப்பத கட்டுபாட்டு கருவிகள், தெளிப்பான் துளைகள், ஜெட்கள், மற்றும் வால்வுகள் போன்றவற்றில் படிவங்கள் ஏற்பட்டு அதன் செயல்பாடுகளை குறைக்கின்றன.
  • தண்ணீர் மென்மையாக்கிகள் மற்றும் வடிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்தி தண்ணீரில் உள்ள மொத்த கரைந்துள்ள திடப்பொருள்களின் அளவை குறைக்கலாம். இந்த தண்ணீர் பிறகு குஞ்சு பொரிப்பகத்திற்கு உபயோகப்படுத்தபடுகிறது.
2. தண்ணீர் சூடாக்கிகள்
Water heater
தண்ணீர் சூடாக்கிகள்
  • வெந்நீர் குஞ்சுப்பொரிப்பக தட்டு கழுவிகள் மற்றும் பொதுவான சுத்தம் பண்ணுவதற்கு தேவைப்படுகிறது.
  • பெரிய அளவு பாய்லர் தண்ணீரை சூடாக்க பயன்படுத்தபடுகிறது.

தண்ணீர் தொட்டிகள்

  • தண்ணீர் தொட்டிகள் மற்றும் தண்ணீர் குடிப்பான்கள் கோழிகளுக்கு தண்ணீர் வைக்க பயன்படுத்தபடுகிறது.
  • இவைகள் வெவ்வேறு அளவு மற்றும் அமைப்புகளில் கிடைக்கின்றன.
1. தட்டு மற்றும் குடுவை அமைப்பு
Pan and Jar type
தட்டு மற்றும் குடுவை அமைப்பு
  • குடுவை போன்ற அமைப்பில் தண்ணீர் நிரப்பி வட்டமான தட்டு போன்ற அமைப்பில் வைத்து கோழிகளுக்கு அளிக்கப்படுகிறது.
2. நீளமான மற்றும் கால்வாய் தண்ணீர் தொட்டிகள்
  • இவைகள் பொதுவாக கூண்டுகளில் பொறுத்தபட்டு இடைவிடாத தண்ணீர் வசதி செய்யப்படுகிறது.
  • ஒரு முனையில் புனல் போன்ற அமைப்பின் மூலம் தண்ணீர் நிரப்பவும் மற்றோரு முனையில் நீரை வெளியேற்ற தேவையான வசதியும் இருக்கிறது.
3. தண்ணீர் பேசின்கள் (பிளாஸ்டிக் அல்லது மரம் அல்லது இரும்பு தடுப்புகளுடன்)
Water basin made of plastic
தண்ணீர் பேசின்கள்
  • பேசின்கள் வெவ்வேறு விட்டளவுகளில் கிடைக்கின்றன. ( 10, 12,14 மற்றும் 16 அங்குலம்)
  • தனியாக தடுப்புகள் இருப்பதால் கோழிகள் தண்ணீருக்குள் செல்லுவது தடுக்கப்படுகிறது.
4. பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்
Bell type automatic waterer
பெல் வகை தானியங்கி தண்ணீர் அளிப்பான்கள்
  • கடினமான பிளாஸ்டிக்கினால் ஆன இவைகள் இதற்கென அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் தொங்கவிடப்படுகிறது.
  • இதில் தண்ணீர் செல்லும் அளவை கட்டுபடுத்துவதற்கு என தனியாக அமைப்பு உள்ளதால் அதன் மூலம் எப்போதும் தண்ணீர் இருக்குமாறு பார்த்து கொள்ளமுடியும்.
  • இதில் தொடர்ச்சியாக தண்ணீர் செல்லும் வசதி இருப்பதால் நாள்முழுவதும் கோழிகளுக்கு தண்ணீர் கிடைக்கிறது.
  • இந்த தண்ணீர் அளிப்பான்களின் உயரத்தையும் தண்ணீர் செல்லும் அளவையும் மாற்றுவதற்கான அமைப்புகள் இதில் உள்ளன.இந்த பிளாஸ்டிக் தண்ணீர் அளிப்பான்கள் பளபளக்கும் வண்ணங்களில் (சிவப்பு மற்றும் நீலம்) இருப்பதால் கோழி மற்றும் குஞ்சுகள் இவற்றால் கவரப்படுகிறது.
  • பெல் வகை தண்ணீர் அளிப்பான்களின் எண்ணிக்கை =1.3*(சுற்றளவு ÷ தண்ணீர் குடிக்கும் இடஅளவு)
5. நிப்பிள் தண்ணீர் அளிப்பான்
Nipple drinker
நிப்பிள் தண்ணீர் அளிப்பான்
  • இது ஆழ்கூளமுறை மற்றும் கூண்டு முறை வளர்ப்பில் பயன்படுத்தபடுகிறது.
  • ஆழ்கூள முறையில் நிப்பிளுக்கு கீழே கிண்ணம் அமைத்து அதன் மூலம் ஆழ்கூளம் ஈரமாவது தடுக்கப்படுகிறது.
  • நிப்பிளை அழுத்தும் போது அதில் இருந்து தண்ணீர் வெளியே வரும்.
  • They can be used for all types and classes of birds, but most commonly used in laying cages.
  • ஒவ்வொரு கூண்டுக்கும் ஒரு நிப்பிள் அமைத்தால் அது 3 முட்டைக்கோழிகளுக்கு போதுமானது.
6. கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்
Manual drinker
கையால் நிரப்பப்படும் தண்ணீர் அளிப்பான்கள்
  • இளங்குஞ்சுகளுக்கு முதல் வாரத்தில் இது அதிகமாக உபயோகப்படுத்தபடுகிறது.
  • இதில் துளையிலிருந்து ஊற்றுப்போல நீர் வருவதால் இதை ஊற்று தண்ணீர் அளிப்பான்கள் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இதில் மருந்துகள் மற்றும் டானிக்கள் ஆகியவற்றை சுலபமாக கோழிக்குஞ்சுகளுக்கு அளிக்கலாம்.
  • இவைகள் சிவப்பு மற்றும் நீலம் வண்ணங்களில் கிடைக்கின்றன.
  • தண்ணீர் தொட்டிகள் மற்றும் தீவனத் தொட்டிகளுக்கு இடையே உள்ள இடவெளி 0.6 மீ இருக்குமாறு அமைக்கவேண்டும்.

VIII. தடுப்பூசி அளிக்கும் உபகரணங்கள்


1. மருந்தூசி ஊசியுடன் அல்லது தடுப்பூசி சொட்டு அளிப்பான்

  • இதைக்கொண்டு நாசித்தூவரங்களிலும் கண்களிலும் தடுப்பூசி மருந்துகளை அளிக்கலாம்.
2. தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
Automatic vaccinator
தானியங்கி தடுப்பூசி அளிப்பான்
  • இதன் மூலம் குறைந்த நேரத்தில் அதிக கோழிகளுக்கு கண்கள் மற்றும் மூக்கின் வழியே தடுப்பூசி மருந்துகளை இடமுடியும்.
3. கோழி அம்மை தடுப்பூசி அளிப்பான்
  • இறக்கையில் தோலுக்கடியில் தடுப்பூசி மருந்துகளை இட இது உபயோகமாக இருக்கிறது.
மேலே செல்க

IX. பிற உபகரணங்கள்


1. அலகு வெட்டி
Beak trimmer
அலகு வெட்டி
  • மின்சாரத்தால் இயங்கும் இதைக்கொண்டு கோழியின் அலகை வெட்டி கோழிகள் கொத்திகொள்ளுவதை கட்டுப்படுத்தலாம்.
  • இது 2 அல்லது 2.5 அடி உயரமுள்ள தூண் மீது பெடல் போன்ற அமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கும்.பெடலை கால் மூலம் அழுத்தினால் சூடாக்கப்பபட்ட தகடு கோழியின் அலகை வெட்டுமாறு அமைக்கபட்டிருக்கும்.
  • தகட்டின் சூட்டை கட்டுபடுத்த ஒரு அமைப்பும் இந்த கருவியில் உள்ளன.
2. முட்டை பெட்டிகள்
Nest boxes
முட்டை பெட்டிகள்
  • இவை தரைவழி கோழிவளர்ப்பில் சுத்தமான முட்டை உற்பத்திக்கு உபயோகப்படுத்தபடுகிறது.
  • இவை தனியாகவும் கூட்டாகவும் மூடிக்கொள்ளும் தன்மையுடனும் கிடைக்கின்றன.
3. எடை தராசுகள்
Weighing balances
எடை தராசுகள்
  • வெவ்வேறு வகையான எடை தராசுகள் கோழிகள் மற்றும் தீவனங்களை எடைப்போட பயன்படுத்தபடுகின்றன.
4. உட்காரும் குச்சிகள்
Perches  Roost
உட்காரும் குச்சிகள்
  • தரையிலிருந்து 3 – 5 அடி உயரத்தில் மரத்திலான இவ்வமைப்புகள் மூலம் கோழிகள் நிற்க பயன்படுகிறது.
5. அலமாரிகள் 
Rake
அலமாரிகள்
  • இரும்பு மற்றும் மரத்தால் ஆனது.
  • ஆழ்கூள முறையில் ஆழ்கூளம் இதன் மேல் வைக்கப்படுகிறது.
6. தண்ணீர் தெளிப்பான்
Sprinkler
தண்ணீர் தெளிப்பான்
  • வெப்பமான பகுதிகளில் பயன்படுத்தபடுகிறது.
  • சந்தையில் கிடைக்கும் தெளிப்பான் மூலம் பண்ணை சுற்றுபுறம் மட்டுமல்லாமல் கொட்டகையின் கூரை மேல் தண்ணீர் தெளிக்க பயன்படுத்தபடுகிறது.
  • வெப்ப மற்றும் ஈரப்பதம் அதிகமான பகுதியில் மதியவேளையில் கூரையை குளிர்விக்க பயன்படுத்தபடுகிறது.
7. தெளிப்பான்
Sprayer
தெளிப்பான்
  • பல வகையான தெளிப்பான்கள் சந்தையில் கிடைக்கின்றன.
  • கையால் இயக்ககூடிய வகை கோழிப்பண்ணைகளில் உபயோகப்படுத்த மிக சரியானது.
  • இதில் உள்ள டேங்கில் தேவைப்படும் கிருமிநாசினி நிரப்பி தெளிக்கப்படுகிறது.
8. தீ துப்பாக்கி
Flame-gun
தீ துப்பாக்கி
  • மண்ணென்ணெய் மூலமோ அல்லது எரிவாயு மூலமோ இயங்கும் இந்தத் துப்பாக்கியினைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்யலாம்.
  • உலோகத்தாலான கம்பிகளை தீத்துப்பாக்கி கொண்டு சூடாக்குவதால் அதிலிருக்கும் அக ஒட்டுண்ணிகள், அவற்றின் முட்டைகள் மற்றும் இளங்கூட்டுப்புழுக்கள் கொல்லப்படுகின்றன.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites