இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Saturday, December 6, 2014

உழைக்கத் தயாரா? உதவத் தயார்!


Ready to work? Ready to help!
எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத்  தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.‘படிச்சிருந்தாலாவது வேலைக்குப் போகலாம்’ எனப் படிக்காத பெண்களும்,  ‘படிச்சிருந்து என்ன செய்ய... வீட்டை விட்டு வேலைக் குப் போக அனுமதியில்லை’ எனப் படித்த பெண்களும், ‘படிப்பும் இருக்கு. ஏதாவது  செய்யணும்கிற துடிப்பும் இருக்கு. வழிதான் தெரியலை’ எனப் புலம்புகிற பெண்களும் நம்மிடையே பரவலாக உண்டு. 

இந்த மூன்று தரப்பினரின் ஏக்கங்களையும் போக்கி, பொருளாதார சுதந்திரத்துக்கு வழி காட்டுகிற அமைப்பு ‘தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர்  சங்கம்’ - Women Entrepreneurs Association of Tamil Nadu [WEAT]. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மகளிரியல் துறைப் பேராசிரியர்  மணிமேகலையின் முயற்சியில் உருவாகியிருக்கும் இந்த அமைப்பு, உழைக்கக் காத்திருக்கிற ஒவ்வொரு பெண்ணுக்கும் உதவக் காத்திருக்கிறது. 

‘‘குறுந்தொழிலில் பெண்கள் பத்தி 99ம் வருஷம் ஒரு பேராய்வு பண்ணினேன். சுயதொழில் செய்கிற பெண்களைப் பத்தின பெரிய புள்ளிவிவரங்கள்  எதுவும் இல்லாதது தெரிய வந்தது. ரொம்பவும் சிரமப்பட்டு, ஒட்டுமொத்த திருச்சியிலயும் 550 பெண் தொழில்முனைவோரைக் கண்டுபிடிச்சோம்.  அந்த  550 பேர்ல, 143 பெண்களை மட்டும் வச்சு நடத்தின ஆய்வுல, சில உண்மைகள் தெரிய வந்தது. அதன்படி பெரும்பாலான பெண்கள், மரபு சார்ந்த  தொழில்களான தையல், ஊறுகாய், அப்பளம் செய்யறது மாதிரியான வேலைகள்லதான் அதிகம் ஈடுபட்டிருக்கிறது தெரிஞ்சது. 

அடுத்து அவங்கள்ல பல பேர் வங்கிக் கடனே வாங்காதவங்க. அப்படியே வாங்கணும்னு நினைச்சு முயற்சி பண்ணினவங்களும் ஏதோ காரணங்களால  கடன் இல்லாம மறுக்கப்பட்டவங்க. 2005ல நான் மகளிர் துறை இயக்குனரா பொறுப்பெடுத்துக்கிட்டதும் இந்த விஷயங்களுக்காக ஏதாவது செய்ய  வேண்டிய அவசரத்தை உணர்ந்தேன். சம்பந்தப்பட்ட பெண்களுக்கு ரிப்ளை கார்டு அனுப்பி, நேர்ல சந்திக்க விருப்பம் சொன்னோம். வெறும் 35  பேர்கிட்டருந்து தான் பதில் வந்தது. அது கடைசியா 7 பேரா குறைஞ்சது. 2006ல உருவான தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கத்துக்கு இது  7வது வருடம்...’’ - அமைதியாக அறிமுகம் செய்கிறார் இந்த அமைப்பின் நிறுவனர் மணிமேகலை.

‘‘பெண்கள்னா பியூட்டி பார்லர் வைக்கவும், வத்தல் வடாம் விற்கவும்தான் லாயக்குங்கிற கருத்தை உடைக்கிறதுதான் எங்க சங்கத்தோட பிரதான  நோக்கம். தொழில்னு வரும்போது, பெரும்பாலான பெண்கள், ஆண்கள் அளவுக்கு அதுல தொடர்ந்து நிற்கறதில்லை. குடும்ப சூழல், கணவரோட  சப்போர்ட் உள்ளிட்ட மற்ற காரணங்களையெல்லாம் பொறுத்ததா இருக்கு அவங்களோட தொழில் ஆர்வமும் ஈடுபாடும். அரிதாக சில பெண்கள்,  கணவரோட ஆதரவோட தொழில் பண்றதும் உண்டு. அந்த மாதிரிப் பெண்கள், தொழில்ல நிலைச்சு நிற்கறதையும் பார்த்தோம். ஆண்களுக்கு தொழிலும்  சம்பாத்தியமும் வாழ்க்கையோட முக்கிய அங்கமா இருக்கு.

அதுவே பெண்கள்ல பலரும் ஏதோ ஒரு காரணத்துக்காக தொழில் முனைவுக்குத் தள்ளப்படறாங்க. அந்த வகையில எங்க சங்கத்துல 75 சதவிகித  உறுப்பினர்கள் ஆண் துணையில்லாத காரணத்தால தொழில்முனைவுக்கு வந்தவங்க. கணவனை இழந்தவங்க, கணவரால கைவிடப்பட்டவங்க, விவாகரத்தானவங்க, கணவர் இருந்தும், அவர் மூலம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவங்கன்னு... பலரும்  இதுல உறுப்பினர்கள். வயது, கல்வித் தகுதின்னு எதையும் கணக்குல எடுத்துக்காம, முதல் கட்டமா அவங்களை தொழில் முனைவுக்குத்  தயார்படுத்தினோம். 

திருச்சியில உள்ள சிறு மற்றும் குறு தொழில் சங்கத்தோட இணைஞ்சு, தொழில் பயிற்சி கொடுத்தோம். 15 நாள்களுக்கு ஒரு முறை அவங்களுக்கு  விழிப்புணர்வு முகாம் நடத்தி, கருத்தாளர்களைக் கூப்பிட்டுப் புதுப்புதுத் தொழில்களைப் பத்திப் பேச வைக்கிறோம். கூட்டத்துக்கு வர்ற பல பெண்கள்,  ஏதோ ஒரு தொழில் தொடங்கணுங்கிற எண்ணத்தோட வருவாங்க. ஆனா, என்ன தொழில், எப்படி தொடங்கறதுங்கிற பயமும் கேள்விகளும்  அவங்களுக்கு நிறைய இருக்கும். வெற்றிகரமான சுயதொழில் முனைவோரா இருக்கிற பெண்களைக் கூப்பிட்டு, அனுபவங்களைப் பகிர்ந்துக்க  சொல்வோம். 

அது மற்ற பெண்களுக்கும் ஊக்கமா அமையும். காலங்காலமா பெண்களுக்குப் பழகிப் போன தையல், உணவு சார்ந்த தொழில்களையும் தவிர்க்காம,  அதுக்கான பயிற்சிகளையும் கொடுக்க ஆரம்பிச்சோம். அதோட அடுத்தகட்டமா, பெண்களால இன்ஜினியரிங் துறை சார்ந்த தொழில்களையும் செய்ய  முடியும்னு நிரூபிக்க, வெல்டிங் பயிற்சி கொடுத்து, வேலை வாய்ப்புக்கு வழி செய்தோம். கம்ப்யூட்டர் பயிற்சியிலேருந்து, கால் டாக்சி டிரைவிங்  வரைக்கும் எதையும் விட்டு வைக்கலை. திருச்சியோட முதல் கமர்ஷியல் பெண் கால் டாக்சி டிரைவர் எங்களால உருவாக்கப்பட்டவங்கதான். 

இன்னும் சுற்றுச்சூழலுக்கு உகந்த சணல் பொருள்கள், பாக்குமட்டை பொருள்கள், பேப்பர் பொருள்கள் தயாரிக்கவும், சிறுதானிய உணவுப் பொருள்கள்  தயாரிக்கவும்கூட பயிற்சிகள் கொடுக்கறோம். வெறுமனே பயிற்சி கொடுக்கிறதோட இல்லாம, பல்வேறு அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களோட  இணைஞ்சு அவங்களோட பொருள்களை சந்தைப்படுத்தவும் வழிகளை உருவாக்கித் தரோம். வருடம் ஒரு முறை மாநில அளவிலான கருத்தரங்கு  நடக்கும். அதுல எல்லா மாவட்டங்கள்லேருந்தும் எங்க சங்க உறுப்பினர்கள் கலந்துப்பாங்க. 

புதுசா தன்னோட மாவட்டத்துல கிளை தொடங்க நினைக்கிறவங்களுக்கும் உதவி செய்யறோம். இந்தக் கருத்தரங்குல என்ன தொழில் செய்யலாம்,  எப்படிச் செய்யலாம், அதுக்கு வங்கிக் கடன் கிடைக்குமா, எப்படி விற்கறதுங்கிற அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். புதுசா பயிற்சி  எடுத்துக்கிட்டு, தொழில் தொடங்கினவங்களுக்கு விருது கொடுத்து ஊக்குவிக்கிறோம். சுருக்கமா சொன்னா, எந்த ஐடியாவும் இல்லாம எங்கக்கிட்ட  வர்றவங்களையும் அவங்களோட தனிப்பட்ட திறமையைக் கண்டு பிடிச்சு, வழிகாட்டி, மூலப்பொருள்கள் முதல் வங்கிக் கடன் வரைக்கும் வாங்க  உதவி செய்து, தொழில் தொடங்கின பிறகு பிரச்னைகள் வந்தா எப்படி சமாளிக்கிறதுன்னு பாடம் எடுத்து, மேலாண்மைத் திறன் வரைக்கும் கத்துக்  கொடுக்கறோம். 

வீட்டையும் தொழிலையும் பேலன்ஸ் பண்ணவும் பாலின சமத்துவம் பத்தித் தெரிஞ்சுக்கவும்கூட ஆலோசனைகள் உண்டு. ஆணுக்கு இணையா,  பெண்ணாலயும் எந்தத் தொழிலையும் தைரியமாகவும், தடையில்லாமலும் தொடர்ந்து நடத்த முடியும்னு நிரூபிக்கிற அந்தப் பயணத்துல விருப்பமுள்ள  எந்தப் பெண்ணும் இணையலாம்’’ - அன்பும் அக்கறையுமாக அழைக்கிறார் மணிமேகலை. (தொடர்புக்கு: ( 0431-4200040/ 94887 85806/ 96007  79081)

தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்...

எழ வேண்டும் என்று
ஆசைதான்
ஒருவேளை
தலை வானத்தில் இடித்து விட்டால்?
எதற்கு வம்பு
படுத்திருப்பதே பாதுகாப்பு...
இது ஒரு புதுக் கவிதை...'

-இன்று நம்மவர்களில் சிலரின் மன இயல்பைக் காட்டிடும் ஒரு உரைகல் போல இந்தக் கவிதை உள்ளது. ஒரு செயலைச் செய்யாமல் வீணே இருப்பதற்கு சொல்லக்கூடிய பொய்யான காரணங்கள் பல. அவற்றை சோம்பேறித்தனம், அச்சம், முயற்சியின்மை, தயக்கம், தன்னம்பிக்கையின்மை என்று பெரிய பட்டியலே இடலாம். இது ஒருபுறம் இருக்க...
தொழில் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு சில ஐயப்பாடுகள்... என்னென்ன தொழில்கள் இருக்கின்றன என்று கூட தெரியாத நிலை... நம்மைச் சுற்றிப் பல தொழில் வாய்ப்புகள் கொட்டிக் கிடந்தாலும் அதை இனம் காண முடியாத தன்மை...

முதலில் நாம் தொழிலினை தேர்ந்தெடுக்கும் பொழுது, நாம் வசிக்கும் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் கிடைக்க கூடிய மூலப்பொருட்களைக் கொண்ட தொழிலைத் தேர்ந்தெடுப்பது வெற்றியை எளிதாக்கும். மேலும் தேர்ந்தெடுக்கும் தொழில் அந்தப் பகுதி மக்களுக்குத் தேவையுள்ளதா? அல்லது வெளியிடங்களுக்குப் போய் மார்க்கெட்டிங் செய்ய வேண்டுமா? என்பதையும் அறிந்து கொள்வது நல்லது.

மனதில் பதித்துக கொள்ள வேண்டியவை
எந்தத் தொழிலாக இருந்தாலும் அதைத் தேர்ந்தெடுக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்..
1.கிடைக்க கூடிய வளங்கள்.
2.மூலப்பொருட்கள் கிடைக்கும் வாய்ப்புகள்
3.போட்டியாளர்கள் இருக்கிறார்களா? அவர்களிடம் போட்டியிட்டு ஜெயிக்க முடியுமா?
4.உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் விற்பனை வாய்ப்பு.

இதற்கு முதலில் தொழில் வகைகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்...பொதுவாக சுய தொழில்களை 4 வகையாக பிரிக்கலாம்..
1. நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள்.
2. விவசாயம் சாராத தொழில்கள்,
3. கைத்தொழில், கைவினைப் பொருட்கள் மற்றும் நெசவுத் தொழில்
4, சேவைத் தொழில்கள் போன்றவையாகும்

முதலில் நாம் இன்று நில அடிப்படையிலான தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறித்து காண்போம்..
நிலம் நீர் ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு சுயதொழில் வாய்ப்புகளை அதிகரிக்க நல்ல வாய்ப்புள்ளது..

உதாரணமாக சில தொழில்களை பார்க்கலாம்..
பூக்கள், காய்கறிகள், பழ வகைகள் பயிரிட்டு அதிக வருவாய் பெறலாம்..
விவசாயத்துடனோ, தனியாகவோ கால்நடை சார்ந்த தொழில்களான கறவை மாடுகள், நாட்டு கோழி வளர்ப்பு, கோழிப்பண்ணை, பண்ணை முறையில் ஆடுகள் வளர்ப்பு, காளான் வளர்த்தல் போன்றவை செய்தல்..
கிராம குளங்கள் ஊரணிகளில் மீன் வளர்ப்பு
பட்டுப் பூச்சி வளர்த்தல்...
உயர் தொழில் நுட்பத்துடன் விதை உற்பத்தி , மூலிகை செடி வளர்ப்பு, இயற்கை விவசாயத்தில் காய்கறி உற்பத்தி
உலர் மலர்கள் சேகரித்தல், பதப்படுத்தல்
இயற்கை உரம் தயாரித்தல், கடல் பாசி வளர்த்தல்,
விவசாயம் சார்ந்த தொழில்கள்:
உணவு பதப்படுத்துதல் ; அரிசி, சேமியா, உடனடி இட்லி , தோசை மாவு , சிப்ஸ் தயாரித்தல், உலர்ந்த காய்கறிகள், வெங்காயம் போன்ற பல உணவு பொருட்கள் பதப்படுத்தி விற்பனை செய்தல்...
பழங்கள், காய்கறியிலிருந்து ஊறுகாய் , பழச்சாறு , ஜாம் , ஜெல்லி போன்ற பதப்படுத்தப்பட்ட பழப் பொருட்கள் தயாரித்தல்
குழந்தைகள் உணவு, கேழ்வரகு மாவு, ராகி மால்ட் தயாரித்தல்..
பருப்பு பதப்படுத்துதல் , எண்ணெய் எடுத்தல், புளி பதப்படுத்துதல், போன்ற தொழில்கள்..
இயற்கை சாயம் எடுத்தல், தைலம் எடுத்தல், மூலிகை செடியிலிருந்து பவுடர், எண்ணெய் மற்றும் மாத்திரைகள்,
மிட்டாய்கள் , கடலை பர்பிகள், பனைவெல்லம் போன்றவை தயாரித்தல்
மசாலா பொடி , பருப்பு பவுடர் , வற்றல் அப்பளம், இட்லி, உலர் தேங்காய் , பால் பதப்படுத்துதல், இனிப்புகள், முறுக்கு போன்ற பொருட்கள் தயாரித்தல்
கீரைகள் , காய்கறிகள், வெங்காயம் இவற்றை சுத்தம் செய்து கட் செய்து பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்தல்..
நில அடிப்படையிலான தொழில்கள் குறித்த பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளுக்கு இந்த துறைகளை அணுகலாம்.. நபார்டு, விவசாயக் கல்லூரி, கால்நடைவளர்ப்பு மற்றும் மீன் பிடித்துறை..
விவசாயம் சார்ந்த தொழில்கள் - உணவு பதப்படுத்துதல் தொழில்களுக்கு குடிசை தொழில் சான்றிதழ், கடன் உதவி மற்றும் தொழில் ஆலோசனைகளுக்கு அந்தந்த மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்...
விவசாயம் சாராத தொழில்கள்...
கிராம மற்றும் காதி தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகளை சார்ந்த சில தொழில்கள் இதில் அடங்கும்..

உதாரணமாக…
1. சோப்பு , சோப்புத்தூள்,ஷாம்பூ, பினாயில், கிளினிக் பவுடர் .
2. அகர்பத்தி, வாசனை பவுடர்கள் , கொசுவர்த்தி தயாரித்தல்,
3. மெழுகுவர்த்தி, சாக்பீஸ் தயாரித்தல்,
4, பற்பசை, ஹேர் ஆயில் , பற்பொடி தயாரித்தல்,
5, பேனா மை , பென்சில்கள் தயாரித்தல்,
6. ஆயத்த ஆடைகள் தயாரித்தல்
7. கட்டிடம் கட்ட தேவையான சிமென்ட் பிளாக் போன்றவை...
சொந்தத் தொழில்கள் துவங்க விரும்புவோரின் தொடர்புக்கு...

· District Industries Centre
Thiru Vi Ka Industrial Estate (SIDCO),
Guindy, Chennai - 600 032.
Ph: 044 - 28549753
Email: dicchn@tn.nic.in


· NABARD - 48, Mahatma Gandhi Road
Post Box No. 6074
Nungambakkam Chennai - 600 034
Tamil Nadu Phone No. : 04428276088
Email : chennai@nabard.org

வீட்டிலிருந்தபடியே சம்பாதிப்பதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.

 அதற்கு நம் திறமை என்ன என்பதையும் அதனை நாம் எப்படி புத்திசாலித்தனமாக பயன்படுத்துகின்றோம் என்பது தான் முக்கியம்.

எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிற ஒன்று பொருளாதார சுதந்திரம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான பெண்கள், தமது எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களை சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது.பெண்கள் வீட்டு வேலை போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் தையல்.

காட்டுவாசிகளாகத் திரிந்த ஆதி மனிதர்கள் தங்களுக்கு உடுத்த உடை வேண்டுமென்று உணர்ந்து, இலைகளை தாவரக் கொடிகளில் சேர்த்து கோர்த்து உடுத்தியபோதே தோன்றியதுதான் இந்த தையல் கலை!அந்தக் காலத்தில் அவர்கள் விலங்குகளின் எலும்பிலிருந்து ஊசிகளை உருவாக்கி ஆடைகளைத் தைத்ததாக, தொல்பொருள் ஆராய்ச்சிகளில் கிடைத்த எலும்பு ஊசிகள் மூலம் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.அன்று அவர்கள் பயன்படுத்திய ஊசிதான் இன்று மாடர்ன் ஊசியாக பரிணாம வளர்ச்சியடைந்து நிற்கிறது. அதேபோல் அவர்கள் கண்டுபிடித்த தையல்கலை மெதுமெதுவாக உருமாறி இன்று கண்கவர் தையல் கலைகளாக நம்மை அழகுபடுத்திக் கொண்டிருக்கிறது. 

ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ள பயிற்சி வேண்டும். அந்தந்த ஊர்களில் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக இப்பயிற்சியை முறையாக கற்றுக் கொடுக்கின்றனர்...

நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் கூட தலையணை உறை, டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்கலாம்.

ஒருவர் மற்றும் இருவர் பயன்படுத்துவது என பல்வேறு நீள அளவில் தலையணைகள் உள்ளன. அதற்கேற்ற நீளங்களில்துணிகளை வெட்டி கொள்ள வேண்டும். வெட்டிய துணிகளை 3 புறமும் தைத்து கொள்ள வேண்டும். 4வது புறத்தில் தலையணை திணிக்க திறப்பு இருக்கும். தலையணை திணித்தவுடன், அது வெளியேறாமல் இருப்பதற்காக உள்புறமாக துணியை மூடிபோல் மடித்து தைக்க வேண்டும். தைக்கப்பட்ட நூல் பிசிறுகளை நீக்கினால் தலையணை உறை தயார். தலையணை உறையிலும் பெயிண்டால் அழகிய ஓவியங்கள் மற்றும் கருத்துள்ள வாக்கியங்களால் அழகு படுத்துவதன் வாயிலாக வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தலாம்.. உழைப்பும் தொழில் நேர்த்தியும் போதும். நெருக்கமில்லாமல் தைத்தால் பிரிந்து விடும், அடுத்து நம்மிடம் வாங்க மாட்டார்கள். நல்ல நூலில், நெருக்கமாக தைத்தால் பிரியாது. வாடிக்கையாளர்கள் பெருகுவார்கள்.

உள்பாவாடை தயாரித்தல்:


பாவாடை தயாரிக்கும் வேலை எளிதானது. கட்டிங், தைப்பது ஈஸி. தைத்த பின் நாடா கோர்க்காமல், தைக்கும்போதே நாடாவுடன் தைத்தால், பாவாடையின் இடுப்பு பகுதி தரம் குறையாமல் இருக்கும். 

குறைந்தபட்ச இன்ச் 36க்கு குறையாமல் இருந்தால் நல்லது. 26 இன்ச் இடுப்புள்ளவர்கள்கூட எளிதில் நாடாவை சுருக்கிக் கட்டிக் கொள்ள முடியும். பெண்களின் இடுப்பு பருமனுக்கேற்ப அதிகபட்சம் 44 இன்ச் வரை தைக்கலாம்.

பாவாடையின் கீழ் பகுதியில் சன்னமாக ஒரு லேஸ் வைத்தால் எடுப்பாக இருக்கும். சின்ன டிசைனில் மெஷின் எம்ப்ராய்டரி செய்தால் மதிப்பு கூடும். அதே போல் பாவாடையின் உள்புறம் இரண்டு தையல்கள் முடிந்தால் ஓவர் லாக் அடித்தால் தரம் நன்றாக இருக்கும்..இன்றைய நவீனக் காலத்தில் பாவடையில் அழகிய எம்ப்ராய்டரிகள் போட்டு உடுத்துவது பேஷன் ஆகி விட்டது..முடிந்தால் அந்த சேலை பார்டர் நிறத்தில் லேஸ் வைத்து தைத்து கொடுத்தால் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளலாம்..

சுடிதார் ஜாக்கெட் தைக்கும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய விசயங்கள்...

என்னதான் அழகாக தைத்தாலும், உள்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாக தயாரிப்பது தொழில் வெற்றிக்கு முக்கியமானது. 

சுடிதார் தைப்பதற்கு அடிப்படை கட்டிங் செய்வது தான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். அதில், டாப்ஸின் முன்புற மேல்பகுதி டிசைன் மற்றும் சுடிதாரின் மாடல் இடம்பெற்றிருக்கும். அதன்படி வெட்டி தைக்க வேண்டும். இதில் மீடியம்(எம்), லார்ஜ்(எல்), எக்ஸ்ட்ரா லார்ஜ்(எக்ஸ் எல்), டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்(டபுள் எக்ஸ் எல்) என்று தனித்தனி அளவுகள் உள்ளன.

சுடிதாரில் டாப்ஸ், பேன்ட் என்று 2 பாகங்கள் உள்ளன. டாப்ஸில் சோல்டர், உயரம், உடல் சுற்றளவு, இடுப்பு, பாட்டம் அகலம், கை உயரம், கை அகலம், பேன்டில் இடுப்பு சுருக்கு, பெல்ட் பிளிட்ஸ், உயரம், லூஸ், பாட்டம் அகலம் என்று தனித்தனி அளவுகள் உள்ளன. சில டாப்ஸ்கள் கை இல்லாமலும் (ஸ்லீவ்லெஸ்), சில முழுக்கையாகவும்(புல் ஸ்லீவ்ஸ்) இருக்கும். அதற்கு நிலையான அளவுகள் உள்ளன. 

சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்து கொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் சுடிதார் ரெடி.

அடுத்தபடியாக வெவ்வேறு வெரைட்டியில் இருந்து வெவ்வேறு டிசைன்களை எல்லாம் வெட்டி எடுத்து ப்ளைன் சேலையில் ஓட்டினால் டிசைனிங் சேலை ரெடி..இன்று இதுவும் சக்கை போடும் பிஸ்னெஸ் ஆகி விட்டது...

சேலைக்கேற்ப ஜாக்கெட் தேடியது அந்தக் காலம். ஆடம்பரமான ஜாக்கெட், அதற்கு மேட்ச்சாக சேலை தேடுவது இந்தக் காலம்! கழுத்தில், கைகளில், முதுகில் என ஜாக்கெட்டில் ஏதாவதொரு வித்தியாசத்துடன் தைத்து அணிவதையே இன்றைய பெண்கள் விரும்புகிறார்கள். டிசைனர் சேலைகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகளும் பிரபலமாகி வருகின்றன.ரவிக்கையில் ஜர்தோசி வேலைப்பாடுகள் , பூ வேலைப்பாடுகள் , டிசைன்கள் செய்து கொடுத்து ஒரு ரவிக்கைக்கு ரூபாய் 5000/- வரை வாங்குகின்றனர்...இன்றைக்கு இது தான் பேஷன்..

மனிதன் உயிரோடு இருக்கும் வரை உடைகள் அவசியம்...சந்தை வாய்ப்புள்ள இந்த தொழிலை வாடிக்கையாளர்களின் திருப்திக்கேற்ப செய்து கொடுக்கும் பொழுது பணத்தை கொட்டும் தொழில்...

எந்த ஒரு தொழிலும் ஜெயிக்க வேண்டுமென்றால் மனதில் திகுதிகுவென எரியும் ஆர்வமும், ,அதை செயல்ப்படுத்த கடின உழைப்பும், வாடிக்கையாளர்களை திருப்திப் படுத்த , வித்தியாசமான சிந்தனையும் இருந்தால் இந்த தொழில் வெற்றிக்கனியை கொடுக்கும் தொழிலாகும்.

- ரோஸ்லின்

Wednesday, December 3, 2014

ஏக்கருக்கு 650 கிலோ... மானாவாரியில் மகிழவைத்த ஜீரோ பட்ஜெட் உளுந்து..!


''இந்தப் பகுதிகள்ல ஏக்கருக்கு 300 கிலோ உளுந்து மகசூல் எடுக்கறதே, பெரிய விஷயம். ஆனா, எனக்கு ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. ஜீரோ பட்ஜெட் விவசாயம்கிறதால பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லாம திரட்சியா விளைஞ்சுருக்கு'' என சக நண்பர்களிடம் எல்லாம் பெருமையாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், கோவிந்தபுரம், சுப்ரமணியன்.
இச்செய்தி நமக்கும் எட்டவே, கோவிந்தபுரம் தேடிச் சென்று, தோட்டத்தில் உளுந்து புடைத்துக் கொண்டிருந்த சுப்ரமணியனைச் சந்தித்தோம்.
''15 வயசுலேயே விவசாயத்துல இறங்கிட்டேன். இது செம்மண்ணும் லேசா களியும் கலந்த பூமி. எங்க குடும்பத்துக்கு மொத்தம் 25 ஏக்கர் நிலம் இருக்கு. 20 ஏக்கர்ல நெல்லும், 4 ஏக்கர்ல தென்னையும் சாகுபடி செஞ்சுக்கிட்டுருக்கோம். இந்த ஒரு ஏக்கர் மட்டும் மேட்டு நிலமா தனியா இருக்கு. அஞ்சாறு வருசத்துக்கு முன்னவரைக்கும் இந்த நிலத்துல வாழை சாகுபடி செஞ்சோம். அப்போ, வீரசோழன் ஆத்துல இருந்து வாய்க்கால் தண்ணி கிடைச்சது. இப்போ, இந்த நிலம் வரைக்கும் தண்ணி வர்றதில்லை. இந்த நிலத்துல போர்வெல்லும் கிடையாது. அதனால, நிலத்தைத் தரிசா போட்டுட்டோம்.
இடையில, 'பசுமை விகடன்’ எனக்கு அறிமுகமாச்சு. சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ தொழில்நுட்பங்கள் அத்தனையும் ரொம்ப விரிவா, எளிமையா அதுல வந்துச்சு. அதையெல்லாம் படிச்சு தெரிஞ்சுட்டு... அஞ்சு வருஷமா, இந்த ஒரு ஏக்கர்ல மட்டும் ஜீரோ பட்ஜெட் முறையில மானாவாரியா உளுந்து சாகுபடி செஞ்சுட்டு இருக்கேன்'' என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், தொடர்ந்தார்.
படிப்படியாக அதிகரித்த மகசூல்!
''முதல் வருஷம் ஏக்கருக்கு 15 டன் மாட்டு எரு போட்டு, விதையைத் தெளிச்சு, ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம், தேமோர் கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டினு கொடுத்தேன். அந்த வருஷம் ஏக்கருக்கு 200 கிலோ மகசூல் கிடைச்சுது. அடுத்த ரெண்டு வருசமும், அடியுரம் எதுவும் போடல. மத்த இடுபொருட்கள் எல்லாம் கொடுத்தேன்.
400 கிலோ அளவுக்குக் கிடைச்சுது. போன வருஷமும் அதேமாதிரிதான் செஞ்சேன். கொஞ்சம்கூட, மழையே இல்லாம, வறட்சி கடுமையா இருந்ததால, பயிர் கருகிப் போச்சு. இந்த வருஷம் புழுதி உழவு ஓட்டிட்டு, கண்டிப்பா மழை வரும்ங்கற எதிர்பார்ப்போட பசுந்தாள் உரத்தை விதைச்சு மடக்கி உழுது, உளுந்து விதைச்சேன். ரெண்டு, மூணு மழை கிடைக்கவும் நல்ல விளைச்சல் கிடைச்சுருக்கு'' என்ற சுப்ரமணியன், தனது சாகுபடி முறையைச் சொன்னார். அது பாடமாக இங்கே...
இயற்கை முறை எலி கட்டுப்பாடு!
'ஒரு ஏக்கர் சாகுபடி நிலத்தில், ஐந்து சால் புழுதி உழவு ஓட்டி, மழை கிடைக்கும் நாட்களில், ஏக்கருக்கு 20 கிலோ சணப்பு விதையைத் தெளிக்க வேண்டும். 10 மற்றும் 25-ம் நாட்களில் 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். சணப்பில் 45-ம் நாளுக்குப் பிறகு பூ எடுத்ததும், மடக்கி உழுது... நிலத்தைச் சமப்படுத்த வேண்டும். பிறகு, 10 கிலோ ஆடுதுறை-3 ரக விதை உளுந்தைத் தெளிக்க வேண்டும். தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் எலிகளைச் சாப்பிடக்கூடிய பறவைகள் வந்து அமர்வதற்காக... தலா 12 அடி இடைவெளியில், 5 அடி உயரமுள்ள குச்சிகளை ஊன்றி, அதன் மேல் பகுதியில் கவட்டை (ஆங்கில 'வி' வடிவம்) போன்ற அமைப்பை உருவாக்க வேண்டும். இதுபோல் அமைத்தால் பகல் நேரங்களில் பறவைகள் வந்தமர்ந்து, பூச்சிகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிடும். இரவு நேரங்களில் கோட்டான்கள் வந்தமர்ந்து, பொந்துகளில் உள்ள எலிகளைப் பிடித்துச் சாப்பிடும்.
65 நாளில் 22 ஆயிரம்!
உளுந்து விதைத்த 4-ம் நாள், 100 கிலோ கன ஜீவாமிர்தத்தை நிலம் முழுக்கத் தூவவேண்டும். 10-ம் நாள், 200 லிட்டர் தண்ணீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள், 200 லிட்டர் தண்ணீரில் 10 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்துத் தெளிக்க வேண்டும். 30-ம் நாள், முந்தைய அளவிலேயே மீண்டும் ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 45-ம் நாள், பூ பூக்கும் தருவாயில் 4 லிட்டர் தேமோர் கரைசலை, 200 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும். இந்த தேமோர் கரைசல், வளர்ச்சி ஊக்கியாகச் செயல்பட்டு, அதிகளவில் பூ பூத்து, நன்றாகக் காய் பிடிப்பதற்கு உதவும். 52-ம் நாள், முந்தைய அளவிலேயே மீண்டும்  ஒரு முறை ஜீவாமிர்தம் தெளிக்க வேண்டும். 65-ம் நாள் நன்றாக முற்றி, அறுவடைக்குத் தயாராகி விடும்.’
சாகுபடிப் பாடம் முடித்த சுப்ரமணியன், ''மேற்கண்ட முறையில நான் சாகுபடி செஞ்சதுல, ஏக்கருக்கு 650 கிலோ மகசூல் கிடைச்சுருக்கு. கிலோவுக்கு சராசரியா 50 ரூபாய் விலை கிடைக்குது. அந்தக் கணக்குல ஏக்கருக்கு 32 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம். அதுல, 10 ஆயிரம் ரூபாய் செலவுபோக, 22 ஆயிரத்து 500 ரூபாய் லாபம் கிடைக்கும். மானாவாரியில, அதுவும் 65 நாள்ல இப்படியொரு லாபம்கிறது... சந்தோஷமான சமாச்சாரம்தானே'' என்றார் சிரித்தபடியே!

தொடர்புக்கு, சுப்ரமணியன்,
செல்போன்: 94863-33759.

தென்னை... பப்பாளி... வாழை...


தென்னையோடு அமைந்திருக்கும் லாப கூட்டணி...
காசி. வேம்பையன் படங்கள்: கா. முரளி
தென்னங்கன்றுகளை நட்டுவிட்டு, பலன் எடுக்க ஆண்டுக் கணக்கில் காத்திருப்பதெல்லாம் அந்தக்காலம். அரை காணி நிலமாக இருந்தாலும், குறுகிய காலத்தில் விளைச்சல் தரும் ரகங்களை நடுவது... கூடவே ஊடுபயிர், அடுக்குப்பயிர்... என்று சில தொழில்நுட்பங்களைக் கடைபிடித்து தொடர் வருமானம் பார்ப்பது... இந்தக் கால விவசாய பாணியாக இருக்கிறது! அந்த வகையில், தென்னைக்கு இடையில், பப்பாளி மற்றும் வாழையை சாகுபடி செய்து அசத்திக் கொண்டிருக்கிறார், வேலூர் மாவட்டம், பொன்னம்பலம் கிராமத்தைச் சேர்ந்த மாசிலாமணி.
ஆரணியில் இருந்து, செய்யாறு செல்லும் சாலையில் பயணித்தால்... இருபதாவது கிலோ மீட்டரில் வருகிறது, கன்னிகாபுரம். இங்கிருந்து வலது பக்கமாகச் செல்லும் சாலையில் இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பொன்னம்பலம். செழிப்பாக வளர்ந்திருந்த தென்னை, பப்பாளி, வாழை மரங்கள் அடங்கிய தோப்பில் மாசிலாமணியைச் சந்தித்தோம்.
ஆள் பற்றாக்குறையால் மரப்பயிர்கள்!
''எங்களுது பாரம்பரிய விவசாயக் குடும்பம். சின்னப் பிள்ளையா இருக்கறப்பவே... அப்பா, அம்மா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க. பெரியம்மாதான் வளர்த்தாங்க. காலேஜ்ல பி.எஸ்சி. மேத்ஸ் படிப்புல சேர்ந்த நான், பண வசதி இல்லாததால... படிப்பை பாதியிலேயே விட்டுட்டு, எங்களுக்கு இருந்த ஒன்றரை ஏக்கர் நிலத்துல விவசாயம் பார்க்க வந்துட்டேன். அதுல சுமாரான வருமானம் கிடைச்சுது. கல்யாணம் ஆன பிறகு, மளிகைக் கடை வெச்சேன். அதுல வந்த வருமானம், விவசாயத்துல கிடைச்ச வருமானம் எல்லாத்தையும் போட்டு... ரைஸ்மில் போட்டேன். அந்த சமயத்துல (92-ம் ஆண்டு) விவசாய வேலைக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகமாச்சு. அதனால, தென்னங்கன்றுகளை நட்டுட்டு, வரப்புல தேக்குக் கன்றுகளை நட்டுட்டேன்.
வழிகாட்டிய பயிற்சிகள்!
அப்படியே காலம் ஓடிடுச்சு. என்னோட மூணு பசங்களுக்கும் கல்யாணம் பண்ணி வெச்ச பிறகு, அரசியல்ல இறங்கினேன். 2001-ம் வருஷம் ஊராட்சி மன்றத் தலைவரா ஆனேன். அடுத்தத் தேர்தல்ல தோத்துட்டேன். அப்பறம் அரசியல்ல இருந்து ஒதுங்கி, முழுசா விவசாயத்துல இறங்கினேன். அந்த சமயத்துலதான் 'பசுமை விகடன்’ வெளி வர ஆரம்பிச்சுது. முதல் இதழைப் படிச்சப்பவே... அதுல இருந்த எல்லா தகவலும் எனக்கு ரொம்பப் பிடிச்சு போச்சு. இப்போவரைக்கும் தொடர்ந்து படிச்சுட்டிருக்கேன்.
தேர்தல்ல தோத்தாலும், 'பசுமை விகடன்’ கொடுத்த தெம்பால, இயற்கை விவசாயத்துல இறங்கிட்டேன். 'இனியெல்லாம் இயற்கையே...’, 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சிகள் மூலமா கத்துக்கிட்ட விஷயங்கள வெச்சு... தென்னந்தோப்புல ரெண்டு முறை பல தானிய விதைப்பு செஞ்சு, மண்ணை வளமா மாத்தி, ஊடுபயிரா, ரெண்டு வருஷத்துக்கு காய்கறி சாகுபடி செய்தேன். இப்போ, சோதனை முயற்சியா மூன்று அடுக்குப் பயிரா தென்னைக்கு இடையில இருமடிப்பாத்தி, வட்டப்பாத்தி எடுத்து பப்பாளிச் செடிகளையும், வாழைக் கன்றுகளையும் நட்டிருக்கேன்.
தென்னை நாற்று மூலமும் வருமானம்!
ஒன்றரை ஏக்கர்ல 90 தென்னை மரங்கள் இருக்கு. வரப்புல 100 தேக்கு மரங்கள் நிக்குது. நல்லா வளந்துருக்குற 30 தேக்கு மரங்களை 4 லட்ச ரூபாய் விலைக்குக் கேட்டுட் டிருக்காங்க. தென்னைக்கு இடையில அரை ஏக்கர்ல 500 மொந்தன் வாழை போட்டுருக் கேன். வாழைக்கு இடையில 30 சென்ட்ல 200 'ரெட் லேடி’ பப்பாளி கன்னுகளை நட்டிருக்கேன். இயற்கை விவசாயத்துக்கு மாறி, நாலு வருஷம் ஆகிடுச்சு. முன்ன சராசரியா
100 தேங்காய் காய்ச்ச மரங்கள்ல, இப்போ 150 காய்கள் கிடைக்குது. தேங்காயை உரிச்சு வித்துடறேன். அதில்லாம, நெத்துக்காய்களை நாத்தா வளத்தும் விற்பனை செய்றேன்'' என்றவர், தோப்பைச் சுற்றிக் காட்டினார்.
ஒன்றரை ஏக்கரில்... 4 லட்சம்!
நிறைவாகப் பேசிய மாசிலாமணி, ''90 தென்னை மரங்கள்ல இருந்து மரத்துக்கு 150 காய் வீதம் வருஷத்துக்கு 13 ஆயிரத்து 500 காய் கிடைக்குது. இதுல 7 ஆயிரத்து 500 காய்களை உரிச்சு, ஒரு தேங்காய் 6 ரூபாய்னு வித்துடுவேன். அது மூலமா 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 6 ஆயிரம் காய்களை தென்னங்கன்னுகளா உற்பத்தி பண்ணிடுவேன். எப்படியும் 5 ஆயிரம் கன்னுங்க உருவாகிடும். வருஷத் துக்கு ஆயிரம் கன்னுகள இலவசமா கொடுத்துட்டு, மீதியை 25 ரூபாய் வீதம் விலைக்கு கொடுத்துடுவேன். 4 ஆயிரம் நாத்து மூலமா, வருஷத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானம் கிடைச்சுட்டு இருக்கு.
பப்பாளியில இப்போதான் காய் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. 200 பப்பாளி மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு 10 ஆயிரம் கிலோ அளவுக்கு காய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன். இப்போதைக்கு ஒரு கிலோ 15 ரூபாய்னு விலை போகுது. இந்தக் கணக்குல பார்த்தா... பப்பாளி மூலமா வருஷத்துக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். அரை ஏக்கர்ல இருக்கற 500 வாழை மூலமா, ஒரு லட்ச ரூபாய் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்.
நான் எதிர்பார்த்தபடி விளைஞ்சு வந்துச்சுனா, அடுத்தடுத்த வருஷங்கள்ல ஒன்றரை ஏக்கர்ல இருந்து, வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் வரைக்கும் வருமானம் எடுத்துடுவேன். செலவெல்லாம் போக எப்படியும் வருஷத்துக்கு மூணு லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும்'' என்று உற்சாகமாக விடைகொடுத்தார்!
தொடர்புக்கு:மாசிலாமணி,
செல்போன்: 86810-25763.

5 ஆண்டுகளுக்குப் பிறகு அடுக்குப் பயிர்!
தென்னைக்கு இடையில் அடுக்குப் பயிர் சாகுபடிக்காக மாசிலாமணி சொல்லும் தொழில்நுட்பங்கள்...

''தென்னைக்குத் தென்னை அதிகபட்சம் 27 அடி இடைவெளி கொடுத்து நடவு செய்ய வேண்டும். நடவு செய்ததில், இருந்து நான்கு ஆண்டுகளுக்கு பயறு, தானியங்கள், காய்கள் மாதிரியான குட்டையான பயிர்களை ஊடு பயிராக சாகுபடி செய்யலாம். ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் வாழை, பப்பாளி போன்றவற்றை நடவு செய்ய வேண்டும்.
பலதானிய விதைப்பு!
தென்னைக்கு இடையில் பல தானியங்களை விதைத்து பூ எடுத்ததும் மடக்கி உழ வேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம், சாமை, வரகு போன்ற தானியங்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; காராமணி, துவரை, அவரை, கொண்டைக்கடலை, மொச்சை, உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறுகளில் ஏதாவதொன்றில் 4 கிலோ; நிலக்கடலை, சோயா, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ; சோம்பு, தனியா, மிளகு, சீரகம் போன்ற வாசனைப் பொருட்களில் ஏதாவதொன்றில் 1 கிலோ; சணப்பு, தக்கைப்பூண்டு, அவுரி, கொழுஞ்சி போன்ற பசுந்தாள் உரப் பயிர்களில் ஏதாவதொன்றில் 4 கிலோ... எனக் கலந்து விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழுவதுதான் பல தானிய விதைப்பு (எண்ணெய்வித்துப் பயிர்களில் கடுகு, எள் போன்றவற்றைப் பயன்படுத்தினால் ஒரு கிலோ மட்டுமே போதுமானது).
இருமடிப்பாத்தி!
பல தானியச் செடிகளை மடக்கி உழுது, பதினைந்து நாட்கள் கழித்து, இரண்டடி இடைவெளியில், நான்கு அடி அகலத்துக்கு நீளவாக்கில் இருமடிப்பாத்தி அமைக்க வேண்டும். பாத்திகளில் ஒரு பக்கத்தில் 8 அடி இடைவெளியில், ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, வாழை நடவு செய்ய வேண்டும். பாத்தியின் மறுபக்கத்தில், முக்கோண நடவு முறையில், இரண்டு வாழைகளுக்கு இடையில் ஒரு பப்பாளி வருவது போல நடவு செய்ய வேண்டும். அதாவது, 8 அடி இடைவெளியில் ஒரு கன அடி அளவுக்குக் குழி எடுத்து, பப்பாளிச் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
நடவுக்கு முன்பு ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ அளவுக்கு ஊட்டமேற்றிய தொழுவுரத்தை இட்டு நடவு செய்ய வேண்டும். ஒரு டன் எரு, தலா 20 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, 50 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 5 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து நிழலான இடத்தில் குவித்து... தென்னை மட்டைகளால் மூடி ஒரு மாதம் கழித்து தண்ணீர் தெளித்து புரட்டி விட வேண்டும். மீண்டும் ஒரு மாதத்துக்கு அப்படியே வைத்துவிட்டால், ஊட்டமேற்றிய தொழுவுரம் தயார்.
மாதம் 100 லிட்டர்!
மாதம் ஒரு முறை, பாசன நீருடன் 100 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து விட வேண்டும். இலை, தழை மற்றும் தோப்பில் கிடைக்கும் கழிவுகளை பாத்திகளின் மீது மூடாக்காகப் போடலாம். நடவு செய்த 6-ம் மாதத்தில் மரத்துக்கு 10 கிலோ வீதம் ஊட்டமேற்றிய தொழுவுரம் இட்டு மண் அணைக்க வேண்டும். இயற்கை முறையில் பெரும்பாலும் பூச்சிகள் வராது. அப்படியும் வந்தால், இயற்கைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
நடவு செய்த 4-ம் மாதத்தில் பப்பாளியில் பூவெடுக்கத் தொடங்கும். அந்த சமயத்தில், 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் என்ற கணக்கில் விட்டுவிட்டு, மீதி ஆண் மரங்களைக் கழித்து விட வேண்டும். இரண்டு ஆண்டுகள் வரை பப்பாளியில் மகசூல் எடுக்கலாம். அதன் பிறகு மொத்த மரங்களையும் அகற்றி, புதிதாக கன்றுகளை நடவு செய்ய வேண்டும். வாழை... 9-ம் மாதம் குலைதள்ளி, 12-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.''

பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000...


“மதிப்பு கூடும் மாட்டுப் பண்ணை..!”
68 வயதிலும் அசத்தும் விவசாயி!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
மாத்தி யோசி
‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.
விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!
இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.பி. சுப்பிரமணியன்,
செல்போன்: 99944-49696.

செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.

தகதகக்கும் இயற்கைத் தக்காளி...


நேரடி விற்பனையில், ரூ.1 லட்சம் கூடுதல் லாபம்!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி. விஜய்
கஷ்டப்பட்டு உழைத்து, என்னதான் தரமான மகசூலை எடுத்தாலும்... அதை சந்தைப்படுத்துதல் என்கிற விஷயத்தில், விவசாயிகளுக்குச் சறுக்கல்தான். கமிஷன் மண்டியில், என்ன விலைக்கு விற்றாலும், மொத்த விற்பனையில், 10 சதவிகிதம் தரகு அழுதாக வேண்டும். சிலசமயம் விற்ற பணம் கமிஷனுக்கே சரியாகிப்போய், வெறும் கோணிப்பையுடன் வீடு திரும்பும் நிலையும் விவசாயிகளுக்கு ஏற்படுவது உண்டு. ‘இதை மாற்ற வழியே இல்லையா?’ என்ற ஏங்கும் விவசாயிகள் ஒரு பக்கம் இருந்தாலும்... சில விவசாயிகளே வியாபாரிகளாக மாறி, தரகு இல்லாமல் லாபம் பார்த்து வருகின்றனர். இந்த வரிசையில், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் அடுத்துள்ள நிழலிக்கவுண்டன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சோமசுந்தரமும் ஒருவர்.
விளையும் தக்காளியை வியாபாரிகளுக்குக் கொடுக்காமல்... தன் மனைவி சுகந்தியுடன் சேர்ந்து, நடுத்தர ஊர்களில் நடக்கும் வாரச்சந்தைகளில் கொண்டு போய் சில்லரை விலைக்கு விற்பனை செய்து வருகிறார், சோமசுந்தரம். கொஞ்சம் மாற்றி யோசித்து, இவர்கள் நல்ல லாபம் ஈட்டி வரும் வித்தையை, நாமும் தெரிந்து கொள்வோமா!
ஊடுபயிராக தக்காளி!
பச்சை காட்டி விளைந்து நிற்கும் தக்காளிச் செடிகளில் செந்நிற சீரியல் பல்புகளாய் தொங்கும் பழங்களைப் பறித்துப் பறித்துப் பெட்டியில் அடுக்கும் பணியில் முனைப்பாக இருந்த தம்பதியைச் சந்தித்தோம்.
‘‘எனக்கு சொந்த ஊரே இதுதாங்க. ஏழு ஏக்கர் தோட்டம் இருக்கு. முழுக்க கிணத்துப்பாசனம்தான். எந்த வெள்ளாமை வெச்சாலும், பழுதில்லாம வெளையுற செம்மண் பூமி. வெங்காயம், கத்திரி, தக்காளினு நம்ம தோட்டத்துல ஏதாவது ஒரு பயிர் இருந்துட்டே இருக்கும். ரெண்டு வருஷத்துக்கு முன்ன, நாலு ஏக்கர்ல பொள்ளாச்சி நெட்டை+குட்டை ரக தென்னையை நட்டிருக்கேன். அதுல ஊடுபயிரா 3 ஏக்கர்ல தக்காளி நடவு போட்டிருக்கேன். 50 சென்ட்ல பீர்க்கன் இருக்கு. வருஷம் முழுசும் அறுவடை பண்ற மாதிரிதான் சுழற்சி முறையில தக்காளி போடுவோம். அதனால, எனக்கு தக்காளி மூலமா வருஷம் முழுசும் வருமானம் கிடைச்சுட்டே இருக்கும். நர்சரிகள்ல நாத்தாவே வாங்கி நடுறதால, பழுதில்லாம விளைஞ்சு வருது.
3 லட்சம் ரூபாய்!
தக்காளியை நடவு செஞ்ச 70-ம் நாள்ல இருந்து தொடர்ந்து 50 நாளைக்கு அறுவடை செய்யலாம். ஊடுபயிரா போட்டிருக்கறதால ஏக்கருக்கு 30 டன் அளவுக்குத்தான் மகசூல் கிடைக்கும். தனிப்பயிரா போட்டா, 40 டன்னுக்கு மேல கிடைக்கும். ஒரு வருஷத்துல கிட்டத்தட்ட ஒன்பது, பத்து மாசம் தினமும் காய் கிடைக்கிற மாதிரி நடவு செய்வோம். மொத்தம் மூணு ஏக்கர்லயும் சேர்த்து, சராசரியா வருஷத்துக்கு 90 டன் அளவுக்கு தக்காளி கிடைக்கும். சில சமயங்கள்ல கிலோ 2 ரூபாய் இருக்கும். சமயங்கள்ல 50 ரூபாய் இருக்கும். சராசரியா 10 ரூபாய் கிடைச்சுடும். ஒரு பெட்டிக்கு 15 கிலோ தக்காளின்ற கணக்குல 90 டன்னுக்கு 6 ஆயிரம் பெட்டி மகசூல் இருக்கும்.
எங்க ஊருல செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை. அன்னிக்கு வேலையாட்களுக்கு சம்பள நாள். அதனால அன்னிக்கு பறிப்பு இருக்காது. மத்த ஆறு நாளும் பறிப்பு இருக்கும். அன்னன்னிக்கு பறிக்கிற தக்காளியை காங்கேயம், வெள்ளக்கோவில், முத்தூர்னு வாரச்சந்தைக்கு கொண்டு போய் வித்துட்டு வந்துடுவேன். வாரத்துல ஆறு நாள் சந்தைக்கு தக்காளி கொண்டு போயிடுவேன். வேன் வாடகை, ஏத்துக் கூலி, இறக்குக் கூலி, சுங்கம் எல்லாம் சேர்த்து, ஒரு பெட்டிக்கு 20 ரூபாய் செலவாகும்.
அந்த வகையில, விற்பனைக்காக 90 டன்னுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவு. தொழுவுரம், பாத்தி, களை, பறிப்புக்கூலி மாதிரியான விஷயங்களுக்கு மூணு ஏக்கருக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவாகும். 90 டன் தக்காளியை விற்பனை செய்றப்போ... 9 லட்ச ரூபாய் கிடைக்கும். அதுல செலவு 3 லட்சம் போக, 3 ஏக்கர்ல இருந்து வருஷத்துக்கு 6 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இதையே கமிஷன் மண்டிக்கு அனுப்பியிருந்தா கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் அளவுக்கு அவங்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டி வந்திருக்கும். 5 லட்சம்தான் கைக்கு வரும், என்ற சோமசுந்தரத்தைத் தொடர்ந்து நிறைவாகப் பேசினார், சுகந்தி. 
“விவசாயிங்க விளைவிக்கிற பொருள்ல கொஞ்சத்தையாவது, நேரடியா விற்கணும். அப்பதான் இடைத்தரகு அழியும். கட்டுபடி யாகுற விலையும் கிடைக்கும். காய்கறிகளுக்கு எப்பவுமே நல்ல டிமாண்ட் இருக்கு. அதுவும் இயற்கை முறையில விளையுற காய்கறிகளுக்கு தனி வாடிக்கையாளருங்க இருக்காங்க. கிராமச் சந்தைகள்ல இயற்கை விவசாயம் பத்தின விழிப்பு உணர்வு ரொம்பக் குறைவாத்தான் இருக்கு. எங்க தோட்டத்துல விளையுற தக்காளி ‘சும்மா’ வெங்கைக் கல்லு மாதிரி கெட்டியா இருக்கு.
நீண்ட நாட்கள் நாட்கள் வரை அழுகிப்போறதில்ல. பழ வெடிப்பும் கிடையாது. அதுக்கு காரணம் முழுக்க முழுக்க இயற்கை இடுபொருட் களைப் பயன்படுத்துறதுதான். ஓவ்வொரு சந்தையிலும் இதை எடுத்துச் சொல்லிட்டு இருக்கோம். அதனால, இயற்கையில விளைவிச்சு, நேரடியா வித்தா எல்லா வியா பாரியும் லட்சாதிபதிதான்’’ என்று மனைவி சொன்னதை ஆமோதித்து, தலையாட்டினார் சோமசுந்தரம்.
தொடர்புக்கு,
எஸ். சோமசுந்தரம், செல்போன்: 94433-49150.

வேம்பு, புங்கன் கரைசல்!
வேப்பெண்ணெய் 4 லிட்டர், புங்கன் எண்ணெய் 1 லிட்டர் ஆகியவற்றுடன் 500 மில்லி காதி சோப்புக்கரைசலைச் சேர்த்து... நன்றாகக் கலக்கி, அக்கரைசலில் இருந்து, 100 மில்லியை எடுத்து, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து காலைவேளைகளில், கைத்தெளிப்பான் கொண்டு, புகைபோல் தெளிக்கவேண்டும். 20, 40 மற்றும் 60-ம் நாட்களில், தக்காளியில் பூச்சிகளை விரட்ட, இக்கரைசல் தெளிப்பு அவசியம்.
பூச்சிகளை விரட்ட வேம்புக் கரைசல்!
நடவு செய்த 50 முதல் 65-ம் நாளில், செடிகள் பூத்துக் குலுங்கும். இந்தவேளையில், சாறு உறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி ஆகியவை தாக்குவதோடு, வாடல் நோயும் எட்டிப்பார்க்கும். இதை, விரட்ட வேம்பு, புங்கன் எண்ணெய் கரைசலைத் தெளிக்கலாம்.

நாற்றுகள் கவனம்!
ஊடுபயிராக சாகுபடி செய்யும்போது ஒரு ஏக்கருக்கு பத்தாயிரம் நாற்றுகள் தேவை.

ஒரு நாற்று 40 பைசா.
18 முதல் 20 நாள் வயதுடைய நாற்றுகளே சிறந்தவை.
தண்டு ஊக்கமாக 4 அங்குல உயரத்தில் இருக்க வேண்டும்.


இயற்கை முறையில் தக்காளி சாகுபடி!
தென்னைக்கு இடையில் ஊடுபயிராக தக்காளி சாகுபடி செய்யும் முறை பற்றி, சோமசுந்தரம் சொன்ன தகவல்கள் இங்கே...
ஒன்றரை அடி இடைவெளி!
நிலத்தை நன்கு உழுது, பாத்திக் கட்டி தயார் செய்த பிறகுதான் நாற்றுகளை வாங்க வேண்டும். பாத்திகளில் தண்ணீர்விட்டு வடிந்து சுண்டிய பிறகு, ஒன்றரை அடி இடைவெளியில் நாற்றுகளை ஈர நடவு செய்ய வேண்டும். 2-ம் நாளில் உயிர்த்தண்ணீர் கொடுக்க வேண்டும். நிலம் காயாத அளவுக்கு பாசனம் செய்ய வேண்டும். அடைமழைக் காலத்தில் செடிகள் அழுகி, காய்ப்பு குறையும். அதை மனதில், வைத்து பருவமழைக்கு முந்தைய நாட்களில், பறிப்பு வரும்படி நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்கவேண்டும். 50-ம் நாளுக்கு மேல் செடிகள் வளர்ந்து நிழல் படர்வதால், களைகள் முளைக்காது. 
பளபள வண்ணத்துக்கு அமுதக்கரைசல்!
ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும் செடிக்கு 50 கிராம் வீதம் ஊட்டமேற்றிய மண்புழு உரத்தை வேர்பகுதியில் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து, 55 மற்றும் 70-ம் நாட்களில் ஒரு ஏக்கருக்கு 50 கிலோ மண்புழு உரம் என்ற கணக்கில், பாசன நீரில் கரைத்துவிட வேண்டும். செடிகளை வேர்அழுகல் நோயிலிருந்து காப்பாற்றவும், பறிப்பு முடியும் வரை, ஊக்கமுடன் வைத்திருக்கவும், காய்கள் ‘பளபள’வென நல்ல நிறத்துக்கு வருவதற்கும் அமுதக் கரைசல் உதவுகிறது. 20, 40 மற்றும் 60-ம் நாட்களில் ஏக்கருக்கு 200 லிட்டர்  அமுதக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட வேண்டும்.
நடவு செய்த 70-ம் நாள் தொடங்கி, 120 நாட்கள் வரை காய் பறிக்கலாம்.

அடியுரமாகும் அரசாணிக்கொடி!
“தக்காளி தளதளக்கிற இந்த மூணு ஏக்கர்ல இதுக்கு முந்தி அரசாணி சாகுபடி செஞ்சிருந்தோம். அதை, அறுவடை செஞ்ச பிற்பாடு காய்ஞ்சு கிடந்த கொடிகளையும் சேர்த்து அப்படியே உழவு ஓட்டிட்டோம். அந்தக்கொடிங்க மண்ணோடு மண்ணா மட்கி, அடுத்த போக வெள்ளாமைக்கு அடியுரமா மாறிடுச்சு. அதோட தொழுவுரமும் சேருறப்போ நல்ல பலன் கிடைக்குது” என்கிறார், சோமசுந்தரம்
ஊடுபயிரில், உபரி லாபம்!
தென்னையில் ஊடுபயிராக 50 சென்ட் நிலத்தில் பீர்க்கன் சாகுபடி செய்யும் சோமசுந்தரம், ‘‘வாரம் 200 கிலோனு 50 சென்ட்ல இருந்து மொத்தம் 3 டன் அளவுக்கு பீர்க்கன் கிடைக்கும். அதையும் நேரடியாத்தான் விற்பனை செய்றேன். சராசரியா கிலோவுக்கு 30 ரூபாய் கிடைக்கும். இது மூலமா 90 ஆயிரம் வருமானம். இதுக்கு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்லை’’ என்கிறார்.

மழைக்கால கோழிப் பராமரிப்பு!
இது, வடகிழக்குப் பருவமழைக் காலம். இம்மழையின் மூலம் கோழிகளுக்கு நோய்கள் ஏற்படுவது வாடிக்கை. இதிலிருந்து கோழிகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவையான நுட்பங்கள் குறித்து, இங்கே முத்தான சில விஷயங்களைச் சொல்கிறார்... சுகுணா பவுல்ட்ரி இன்ஃபர்மேஷன் மேனஜ் மெண்ட் கல்லூரி முதல்வர் கே. கஜேந்திரன்.
‘‘கோழிப்பண்ணைகளைச் சுற்றி பள்ளங்கள் இருந்தால், அவற்றையெல்லாம் மூடவேண்டும். இல்லையெனில் மழை நீர் நிரம்பி, தொற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீவன மூட்டைகளை, மழையில் பாதிக்காத இடத்தில் சேமிக்க வேண்டும். மழைத்துளியானது தீவனத்தில் கலந்தால் பூஞ்சை தொற்று ஏற்படக்கூடும்.  மழைச்சாரல் அடிக்காமல் இருக்க, சுற்றிலும் பாலித்தீன் கவர் கொண்டு கட்டவேண்டும். மழைக்கு முன் மற்றும் மழைக்குப் பிறகு போட வேண்டிய தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் உணவு முறைகளை எல்லாம் சரிவரச் செய்ய வேண்டும்.
நனைந்த, ஈரமான தீவனம் காரணமாக பூஞ்சைக்காளான் நோய் வரக்கூடும். காற்று மற்றும் நீரினால் பரவக்கூடிய சுவாச பாதிப்பு, ஈகோலி, காலரா, வெள்ளைக் கழிச்சல் போன்ற நோய்களும் ஏற்படும். இந்நோய்கள் தாக்கிய கோழிகளை உடனே தனிமைப்படுத்த வேண்டும்’’ என்று சொன்னார்.
மு. ரமேஷ்

விதவிதமான ரகங்கள், கூடுதல் மகசூல் கொடுக்கும் உதயம் வாழை!


வ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை அள்ளித்தரும் இந்தப் பகுதியில், வாழை சாகுபடிக்கான பட்டம், மண் வகைகளைப் பற்றிய கேள்விகளுக்கான பதில்களையும், சில வாழை ரகங்களைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, வாழை ரகங்களைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர், திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குநர் எம்.எம். முஸ்தபா மற்றும் முதன்மை விஞ்ஞானி எஸ். உமா.
 களர், உவர் நிலத்துக்கு ஏற்ற கற்பூரவல்லி!
களர், உவர் மண் வகைகளிலும், வறட்சியிலும் தாங்கி வளரக்கூடியது, கற்பூரவல்லி ரகம். மரங்கள் தடித்து வளர்வதுடன், உயரமாகவும், பெரிய இலைகளுடனும் காணப்படும். பழங்கள் நடுத்தர அளவுடன், பழுத்தாலும் காம்பு உதிராமல் நிலையாக இருக்கும். தோல், மிதமான கெட்டித்தன்மையுடன், சாம்பல் பூச்சுடன் காணப்படும். சதைப்பகுதி, சுவையுடன் சாறு மிகுந்து திடமாக, நறுமணத்துடன் காணப்படும். தார்கள் உருளை வடிவில் இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றவை. ஜூஸ், உலர்பழங்கள், வாழைப்பூ சட்னி என தயாரிக்கலாம். இலை பயன்பாட்டுக்கும் இந்த ரகம் பயிரிடப் படுகிறது. இதன் வயது, 14 முதல் 16 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 180 முதல் 200 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 25 முதல் 28 கிலோ வரை எடை இருக்கும். இந்த ரகத்தில் 'பனாமா வாடல்நோய்’ தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆகையால், இந்த நோய் தாக்குதல் இல்லாத மரங்களில் இருந்து, கன்றுகளைத் தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும்.
காற்றில் சாயாத உதயம்!
திருச்சி, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 2005ம் ஆண்டு, 'உதயம் வாழை’ ரகம் வெளியிடப்பட்டது. கற்பூர வல்லியைப் போன்ற குணாதிசயம் கொண்ட ரகம் இது. ஆனால், கற்பூரவல்லியைவிட 40 சதவிகிதம் கூடுதல் மகசூல் கொடுக்கக்கூடியது. தார், உருளையாக இருப்பதால், நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றது. இதன் பழங்களில் இருந்து, ஜூஸ், ஜாம், உலர்பழங்கள் போன்றவற்றைத் தயாரிக்கலாம். மரங்கள் உறுதியான தண்டுடன், உயரமாக இருக்கும். ஒவ்வொரு தாரிலும் 18 முதல் 20 சீப்புகளுடன், 250 முதல் 300 பழங்கள் வரை இருக்கும். இந்த ரகத்தில் ஒவ்வொரு தாரும் 35 முதல் 40 கிலோ எடை வரை இருக்கும். நன்றாக பராமரிப்பு செய்யும்பட்சத்தில், 50 கிலோ வரை எடை  இருக்கும். பழுக்க ஆரம்பித்ததில் இருந்து, அதிகபட்சம் 7 நாட்கள் வரை மஞ்சள் நிறத்திலேயே இருக்கும். காற்று அதிகம் வீசும் பகுதிகளில், பயிரிட ஏற்ற ரகமிது. வாழை முடிக்கொத்து நோயை, எதிர்த்து வளரும் சக்தி கொண்டது. இந்த ரக வாழையும் களர் மற்றும் உவர் தன்மையைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவை.
 ஊடுபயிருக்கு ஏற்ற பச்சநாடன்!
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பச்சநாடன் வாழை ரகம் பயிரிடப்படுகிறது. தென்னை, பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக பயிரிட ஏற்றது. மலைப்பிரதேசங்களில் இதை 'லாடன்’ என்றும், சமவெளிப் பகுதிகளில் 'நாடன்’ என்றும் அழைக்கின்றனர். கற்பூரவல்லி, ரஸ்தாளி, நேந்திரன் மாதிரியான நீண்டகால வாழை ரகங்கள் சாகுபடி செய்யப்பட்ட தோட்டங்களில் கன்றுகள் அழுகிப்போனாலோ அல்லது காய்ந்து போனாலோ இடைவெளிப் பகுதியில் இவற்றை நடவு செய்தால், அந்த வாழை ரகங்களுடன் இந்த வாழை ரகமும் அறுவடைக்கு வந்துவிடும். இதனாலேயே இந்த வாழை ரகத்தை 'காலி வாழை’ என்றும் விவசாயிகள் அழைக்கிறார்கள். இருமண் பாங்கான நிலம், களிமண் மற்றும் கரிசல் மண் ஆகியவற்றில் சிறப்பாக வளரும் தன்மை கொண்டது, இது. இந்த ரகத்தின் வயது 11 முதல் 12 மாதங்களாக இருந்தாலும், 8ம் மாதத்திலே குலை தள்ளிவிடும். ஒவ்வொரு தாரிலும், 7 முதல் 8 சீப்புகளுடன், 100 முதல் 120 பழங்கள் வரை இருக்கும். தாரின் எடை 10 முதல் 15 கிலோ. இந்த ரகத்தில், மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீசு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இந்த ரகத்தை, வாடல் நோய் தாக்கும் வாய்ப்பு உண்டு.
 வறட்சியைத் தாங்கும் நெய் பூவன்!
கிராண்ட்9 (ஜி9) வாழை ரகத்துக்கு அடுத்தப்படியான ஏற்றுமதிக்கு ஏற்ற ரகம், நெய் பூவன். 'ஏழரசி, ஞானிபூவன், ஏலக்கி பாலே, புட்டபாலே’ என்ற பல பெயர்கள் இருந்தாலும், பெரும்பாலும் 'நெய் பூவன்’ என்றே அழைக்கிறார்கள். இந்த ரகம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அதிகமான அளவில் பயிரிடப்படுகிறது. எல்லா வகை மண்ணிலும் நன்றாக வளர்வதுடன், வறட்சியைத் தாங்கியும் வளரும். கர்நாடகா மற்றும் கேரளாவில் பாக்கு மரங்களுக்கு ஊடுபயிராக இ்்தை பயிரிடுகிறார்கள். இதன் வயது 13 முதல் 14 மாதங்கள். ஒவ்வொரு தாரிலும் 10 முதல் 12 சீப்புகளுடன், 120 முதல் 150 பழங்கள் வரை இருக்கும். ஒவ்வொரு தாரும் 15 முதல் 18 கிலோ எடை வரை இருக்கும். பழங்கள் அதிக சுவையுடன் இருந்தாலும், காய்கள் கனிவதற்கு 5 முதல் 6 நாட்கள் ஆகும் என்பதால், நன்கு பழுத்த பழங்கள் கூட எளிதில் உதிர்வதில்லை. இந்த ரக வாழையில் வாடல் நோய், நூற்புழு போன்றவை தாக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், கன்று தேர்வு செய்யும்போது நோய் தாக்காத கன்றுகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
 காய்க்கும், பழத்துக்கும் மவுசு உள்ள நேந்திரன்!
காய்க்காகவும், பழத்துக்காகவும் இந்த வாழை ரகம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஏத்தன், மலையேத்தன், சிப்ஸ்காய், வறுவல்காய், நெடுநேந்திரன், ஆட்டுநேந்திரன் என வேறு பெயர்களும் உண்டு.  இந்த ரகம்  பெருமளவு சிப்ஸ் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டாலும், கேரளாவில் பழமாகவும் சாப்பிடுகிறார்கள். ஓணம் போன்ற பண்டிகைக் காலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. பழங்களின் தோல் சற்று தடிமனாக இருப்பதுடன், இனிப்புச் சுவை அதிகமாக இருக்கும். பழங்களில் வைட்டமின்ஏ வும் (ஒரு கிராமில் 750 முதல் 800 மைக்ரோ கிராம்), எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும் சுண்ணாம்புச் சத்துக்களும் (ஒரு கிராம் பழத்தில் 14 மில்லி கிராம்) நிறைந்துள்ளன.
இந்த ரகத்தின் வயது 11 முதல் 12  மாதங்கள். தமிழ்நாட்டில் மாசிப்பட்டத்தில் நடவு செய்யலாம். இந்த ரகத்தில் மறுதாம்பு விடுவதில்லை. அதிகமான காரத்தன்மை கொண்ட நிலங்களில், இந்த ரகம் சரியாக வளராது. ஒவ்வொரு பழமும் 20 முதல் 25 சென்டி மீட்டர் நீளத்தில் இருக்கும். ஒவ்வொரு தாரும் 5 முதல் 6 சீப்புகளுடன், 40 முதல் 50 பழங்களுடன் இருக்கும். ஒவ்வொரு தாரும் 10 முதல் 12 கிலோ எடை இருக்கும். இந்த ரகத்தில்  நூற்புழு, கிழங்கு கூன்வண்டு  மற்றும் தண்டுத் துளைப்பான் தாக்குதல் அதிகமாக இருக்கும். இவற்றின் தாக்குதலைக் குறைக்க... பூச்சித் தாக்குதல் இல்லாத கிழங்குகளைத் தேர்வு செய்து, நடவு செய்ய வேண்டும்.  
ரொபஸ்ட்டா, விருப்பாட்சி, செவ்வாழை, மொந்தன் போன்ற ரகங்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.

இனிப்பான லாபம் கொடுக்கும் 'ஸ்வீட் கார்ன்’


ஒரு ஏக்கர்... 90 நாட்கள்... ரூ.90 ஆயிரம்..!

"தேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும்...
தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்''
கவிஞர் வைரமுத்துவின் வரிகள் இவை. இது விவசாயத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபிக்கும் விதமாக... புதுப்புது விஷயங்களைத் தேடி அலைந்து தெரிந்துகொண்டு, 'ஸ்வீட் கார்ன்’ எனப்படும் இனிப்பு மக்காச்சோளத்தை சாகுபடி செய்து, நேரடியாக விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகிறார், திருவண்ணாமலை மாவட்டம், சு. கீழ்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர்.
ஒரு காலைவேளையில் அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்த சேகரைச் சந்தித்தோம். ''நான் ஒண்ணரை வயசு குழந்தையா இருந்தப்பவே அப்பா இறந்துட்டார். அம்மாதான், வெண்டைக்காய், கத்திரிக்காய்னு விவசாயம் பண்ணி, என்னை வளர்த்தாங்க. தினமும், பள்ளிக்கூடம் போகும்போது காய்கறி மூட்டையைக் கொண்டு போய் மார்க்கெட்ல போட்டுட்டுப் போவேன். இந்த மாதிரி கஷ்டமான சூழ்நிலையில, எஸ்.எஸ்.எல்.சி. வரைக்கும்தான் படிக்க முடிஞ்சுது. அதனால, அம்மாகூட சேர்ந்து விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். அரை ஏக்கர்ல கத்திரி, வெண்டை போடுவோம். மூணு ஏக்கர்ல நெல், மணிலா போடுவோம். அதுல எல்லாம் லாபம் குறைவாதான் இருந்துச்சு. அதனால, நல்ல லாபம் கொடுக்கக்கூடிய பயிர்களைத் தேட ஆரம்பிச்சேன். நண்பர் கொடுத்த யோசனையில வெள்ளரி, பீட்ரூட், பீன்ஸ், கேரட்னு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கேரட் நம்ம சூழ்நிலைக்குச் சரியா வரல. மத்த பயிர்கள்ல நல்ல மகசூல் கிடைச்சாலும், விலை கிடைக்காம நஷ்டமாகி, பழைய விவசாயத்துக்கே மாறிட்டேன்' என்ற சேகர் தொடர்ந்தார்.
லாபத்தைக் கூட்டிய உழவர் சந்தை!
''தமிழ்நாட்டில ரெண்டாவது உழவர் சந்தை, திருவண்ணாமலை உழவர் சந்தைதான். இங்க எனக்கு காய்கறிகளை விற்பனை செய்றதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. அதனால, பாகல், புடலை, பீர்க்கன்னு சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன். கமிஷன் கடைகள்ல கிடைக்கிற விலையைவிட ஆறு, ஏழு ரூபாய் அதிகமாவே கிடைச்சுது. நல்ல லாபம் கிடைக்கவும், தொடர்ச்சியா காய்கறிகளை சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
பாதை காட்டிய பசுமை விகடன்!
சின்ன வயசுல இருந்தே தொடர்ந்து 'ஆனந்த விகடன்’ படிக்கிறேன். இதன் மூலமா 'பசுமை விகடன்’ பத்தி தெரிஞ்சுக்கிட்டு படிக்க ஆரம்பிச்சேன். பல விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டது இல்லாம, நிறைய பேரோட அறிமுகமும் கிடைச்சுது. இப்படித்தான், கேத்தனூர் பழனிச்சாமி ஐயா அறிமுகமானார். அவர்கிட்ட இயற்கை விவசாயத்தைத் தெரிஞ்சுக்கிட்டேன். இப்போ நாலு வருஷமா பந்தல் காய்கறிகளை இயற்கை முறையிலதான் சாகுபடி செய்றேன். மூணு வருஷத்துக்கு முன்ன 2 ஏக்கர்ல வெள்ளரி சாகுபடி செஞ்சேன். அதை, பெங்களூரு, கோயம்பேடுனு அனுப்பினேன். அதுக்கப்பறம் கோயம்பேடு மார்க்கெட்ல தொடர்பு கிடைச்சுது. அங்கதான், பெங்களூர்ல இருந்து விற்பனைக்கு வந்த இனிப்பு மக்காச்சோளத்தைப் பார்த்தேன். அதைப் பத்தி விசாரிச்சு, பெங்களூர்ல இருந்து விதை வாங்கி 50 சென்ட்ல போட்டதுல,3 டன் மகசூல் கிடைச்சுது. உழவர் சந்தையிலயே விற்பனை செஞ்சுட்டேன். அதனால அடுத்தும் அதை சாகுபடி செஞ்சேன். இப்போ, விளைஞ்சு நிக்கிது. இதுக்கு கொஞ்சமா ரசாயன உரத்தைப் பயன்படுத்தியிருக்கேன். இப்போ இதையும் இயற்கையில சாகுபடி செய்ற வழிமுறைகளைத் தெரிஞ்சுக்கிட்டேன்'' என்ற சேகர், இனிப்பு மக்காச்சோள சாகுபடி முறையைச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...
ஏக்கருக்கு 4 கிலோ விதை!
'இனிப்பு மக்காச்சோளத்தின் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகை உள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ரோட்டோவேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கிக் கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி... ஏக்கருக்கு 5 டிப்பர் என்ற கணக்கில், தொழுவுரம் கொட்டிக் களைத்துவிட வேண்டும். ஓர் அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து, அதன் மையத்தில் ஓர் அடிக்கு, ஒரு விதை வீதம் ஓர் அங்குல ஆழத்தில் நடவுசெய்து, தண்ணீர் கட்டவேண்டும். ஏக்கருக்கு, 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
10 நாட்களுக்கு ஒரு முறை ஜீவாமிர்தம்!
விதைத்த மூன்றாம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பிறகு, மண்ணின் ஈரத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதுமானது. 20-ம் நாளில் களை எடுத்து, பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும். தொடர்ந்து, 10 நாட்களுக்கு ஒருமுறை,200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன தண்ணீரில் கலந்துவிட வேண்டும். வேறு எந்தப் பராமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. கதிர் வருவதற்கு முன்பாக, பூச்சிகள் தாக்கினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம்.
 75-ம் நாளில் முதல் அறுவடை!
55-ம் நாளில் ஆண் பூவெடுக்கும். 60ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75-ம் நாளில் இருந்து, கதிர் முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90-ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவுக்கு, கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும், அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு... மூன்று, நான்கு கதிர்கள் நிற்கும்.’
ஒரு லட்சத்து 20 ஆயிரம்!
நிறைவாக, ''நான் தினமும் 200 கிலோவுல இருந்து, 300 கிலோ அளவுக்கு அறுவடை செஞ்சு, ஒரு கிலோ 20 ரூபாய்னு உழவர் சந்தையில விற்பனை செய்றேன். ஒரு ஏக்கர்ல கிடைக்கிற 6 டன் கதிர் மூலமா, ஒரு லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும்.
30 ஆயிரம் ரூபாய் செலவு போக, 90 ஆயிரம் ரூபாய் லாபமா கிடைக்கும். இதை நேரடியா விற்பனை செய்யாம, கமிஷன் கடைக்கு அனுப்பினா, 50 ஆயிரம் ரூபாய்தான் லாபம் கிடைச்சிருக்கும். ஆக, நேரடி விற்பனை என்னை நிமிர வெச்சிருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார் சேகர்!

மக்காச்சோளத்தை உடனே விற்கவும்!
''தமிழ்நாட்டில் ஜனவரி மாதத்தில் இருந்து மக்காச்சோளம் சந்தைக்கு வரத்துவங்கும். தற்போது, பீகாரில் இருந்து, மக்காச்சோள வரத்து உள்ளது. இது, டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ஒரு குவின்டால், மக்காச்சோளம் (உதிர்த்தது) 1,200 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 11 ஆண்டுகளில் உடுமலைப்பேட்டை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் விற்பனை செய்யப்பட்ட விலைகள் பற்றிய ஆய்வு முடிவுகள்படி... 12 சதவிகிதத்துக்குக் குறைவான ஈரப்பதம் மற்றும் இரண்டு சதவிகிதத்துக்குக் குறைவான பூஞ்சணத் தாக்குதலோடு இருக்கும் மக்காச்சோளத்துக்கு (உதிர்த்தது), நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஒரு குவின்டாலுக்கு 1,100 ரூபாய் முதல் 1,150 ரூபாய் வரை கிடைக்க வாய்ப்புள்ளது. ஜனவரி மாதம் முதல் விலை ஏற்றம் இருக்கலாம். மழைக்காலம் என்பதால், அறுவடை செய்த மக்காச்சோளத்தை உடனடியாக விற்பனை செய்ய வேண்டும்'' என அறிவித்துள்ளது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites