5 ஆயிரம் முதலீட்டில் சுகுணா கோழி பண்ணை தொடங்கிய சவுந்திரராஜன் இன்றைக்கு 2000 கோடி மதிப்புள்ள சுகுணா பவுல்ற்றியின் முதலாளி |
தமிழக சட்டசபை கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் "நாட்டுக்கோழிகளின் இனம் அழிந்துவருகிறது" ஏன்? என்ற கேள்வியை அமைச்சரிடத்திலே எழுப்பப்பட்டது. அந்த கோழிகளை அரசியல்வாதிகள் நிறைய சாப்பிடுவதால் அழிந்து வருவதாக கூசாமல் பதிலும் சொல்லப்பட்டது. இது பத்திரிகைகளிலும் வந்தது. இதனையடுத்து இந்த பதிவை இங்கு இடுகிறேன்.
என்னதான் விளைந்தாலும் விளைச்சலுக்கு பலன் இல்லை. எல்லாம் இடைத்தரகர்கள் பிடுங்கி கொண்டு போய் விடுகிறார்கள். "காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்' என்று சும்மாவா பாடினார்கள் பழைய படத்தில்! பசுமைப்புரட்சி என்ற பெயரில் நிலத்தில் கடுமையான ரசாயனங்களை கொட்டி மண்ணை மரணத்திற்கு கொண்டு போய்விட்டார்கள். மண்ணில் இருந்து கொண்டு கண்ணுக்கு தெரியாமல் மண்ணை உழுது கொண்டிருந்த பாக்டீரியாக்கள் முதல் உழவனின் நண்பனான மண்புழுக்கள் வரை அனைத்தும் மடிந்து போய் மண் மலடியாக மாறி விட்டது.
இந்த நிலையில் ஒரளவுக்கு மேல் மண்ணிலிருந்து பலனை எதிர்பார்க்கவும் முடியவில்லை. இதனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராமங்களும், அது சார்ந்த விவசாயமும் நாளுக்கு நாள் நம்பிக்கையை இழந்து வருகின்றன. விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஏதாவது நடக்கிறதா என்பதை பூதக்கண்ணாடி வைத்து பார்த்தாலும் எதுவும் புலப்படவில்லை.
ஆக..இப்படி இருக்கும் நிலையில் விவசாயிகளுக்கு கையில் பணம் புரள ஏதாவது செய்தாக வேண்டும். நகரங்களில் ஐடி கம்பெனிகளில் இரவும் பகலும் கண்விழித்து சம்பாதிக்கும் இளைஞர்கள் உழைத்து பணத்தை வைத்திருக்கிறார்கள். இவர்களை தவிர பிசினஸ் பண்ணும் நபர்களிடமும் பணம் புழங்குகிறது. இது தவிர அரசியல் வாதிகளிடமும், லஞ்சம் வாங்கி கொழுக்கும் அரசு ஊழியர்களிடமும் பணம் புழங்குகிறது. அதாவது சமூகத்தின் வாங்கும் சக்தி அதிகம் உடைய தரப்பினர் இவர்கள் தான்.
இவர்களிடம் எதையாவது விற்க முடிந்தால் அதை விற்பவரின் பாக்கெட்டுக்கு பணம் வந்து நிரம்பும்.மேற்குறிப்பிட்ட இந்த தரப்பினர் அனைவரும் சிக்கனம் பார்க்காமல் செலவழிப்பது சாப்பாட்டுக்குத் தான். சரவணபவனும், திண்டுக்கல் வேலு பிரியாணியும்,ஆரிய பவனும் இவர்களால் தான் அதிகம் நிரம்பி வழிகிறது. சத்து இருக்கிறது என்றால் எதையும் வாங்கி சாப்பிட இவர்கள் முன்வருவார்கள். இவர்களுக்கு எதை விற்பது தான் கேள்வி?
'நாட்டுக் கோழி' என்றாலே முருங்கைக்காய் போல் அந்த விடயத்துக்கு பலத்தை சேர்ப்பது என்று ஒரு எண்ணம் இருக்கிறது. இது ஓரளவு உண்மையும் கூடத்தான். ஆனால் நாட்டுக் கோழியின் விலை இன்றைக்கு ஒரு கிலோ 250 ரூபாய். காரணம், நாட்டுக்கோழி அவ்வளவாக கிடைப்பதில்லை. இதனால் இதன் இறைச்சியும் விலை அதிகமாக இருக்கிறது.
நாட்டுக் கோழி ஏன் டிமாண்ட் ஆக இருக்கிறது? நாட்டுக் கோழிகளை யாரும் "பிராய்லர்" கோழிகள் போல் லட்சக்கணக்கில் பண்ணை முறையில் வளர்ப்பதில்லை. கிராமங்களில் பெண்கள் இவற்றை புழக்கடையில் தான் வளர்க்கிறார்கள். அதனால் இந்த கோழிகள் பெருமளவில் கிடைப்பதில்லை. ஆனால் பிராய்லர் கோழிகளை இன்குபேட்டர் முறையில் பொரிக்க வைத்து எடுப்பதால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகளை பெற முடிகிறது. அவற்றை வளர்த்து கறிக்கோழிகளாக மாற்ற முடிகிறது.
இந்த பிராய்லர் கோழிகள் செயற்கையாகவே பிறந்து ஊக்கமருந்துகளால் உப்பிய பலூன் போல பெருத்து 47 நாட்களில் 2 கிலோவை தாண்டி விடுகிறது. இந்த கோழிகளின் நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் மருந்துகள் மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது பற்றி இன்னும் சரியான விளக்கம் இல்லை.
இதையெல்லாம் கணக்கில் கொண்டால் நாட்டுக்கோழிகள் பலசாலிகள் தான். இவற்றின் இறைச்சியும் குழம்பும் ருசியாக இருக்கும். அதனால் அரசியல்வாதிகள் இவற்றை ஆயிரக்கணக்கில் கபலீகரம் செய்வதாக பேசப்படுகிறது. இது இருக்கட்டும். இந்த கோழிகளை சாப்பிட சாமானியர்களுக்கும் கசக்குமா என்ன? ஆனால் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் விலை அதிகம்.
ஆக..இந்த நிலையில் நாட்டுக்கோழிகளை அதிக அளவில் உற்பத்தில் செய்தால் ஏராளமாக நாட்டுக் கோழிகள் விற்பனை ஆகும். நாட்டுக் கோழி பண்ணை வைப்பவருக்கு இதனால் லாபம் கொட்டும்.
இதனை கணக்கில் கொண்டு "தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்' கிராமப்புற பெண்களுக்கும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் நாட்டுக் கோழி வளர்ப்பது பற்றிய 3 மாத கால தொலை தூர படிப்பை வழங்க உள்ளது. தபால் வழியில் கற்பிக்கப்படவுள்ள இந்த பாடத்திட்டத்தில் கோழியினங்கள், தீவனங்கள்,நோய் கண்டறியும் முறை உள்பட எளிதாக நாட்டுக் கோழிகளை வளர்ப்பது பற்றி சொல்லித் தர போகிறார்கள்.
இந்த பாடத்தை படித்து விட்டால், கிராமப்புறத்தில் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் சிறிய அளவில் பண்ணையை தொடங்கி நடத்தலாம். பிறகு வெற்றிகரமாக பெரிய பண்ணைகளை தொடங்கலாம். இந்த நாட்டுக் கோழி வளர்ப்பு தபால் வழி படிப்பில் சேர 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். தமிழில் எழுதப்படிக்க ெத்ரிந்திருக்க வேண்டும். இவ்வளவு தான் தகுதி.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தேசிய வங்கி ஒன்றில் 220 ரூபாய்க்கு கல்வி இயக்குநர், தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழகம், மாதவரம், சென்னை. என்ற பெயருக்கு டிமாண்ட் டிராப்ட் எடுத்து கூடவே ஒரு கடிதத்தில் தங்கள் பெயர்,முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை எழுதி இதே முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
அவர்கள் பாடத்திட்டங்களை அனுப்புவார்கள். படித்து பாஸாகலாம்.
இது பற்றி மேலும் விவரங்கள் அறிய 044-2555 4375, 2555 1586, 2555 1587 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
0 comments:
Post a Comment