இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label பால்பண்ணை. Show all posts
Showing posts with label பால்பண்ணை. Show all posts

Monday, December 25, 2017

நல்ல லாபம் கொடுக்கும் நாட்டு மாட்டுல்ப்பா! தினமும் ₹ 1,700 /-

இயற்கை விளைபொருள்கள் குறித்த விழிப்பு உணர்வு பெருகிவரும் சூழ்நிலையில் சுத்தமான பாலையும் நுகர்வோர் தேடி வாங்கத் துவங்கியுள்ளனர். இதனால், பெரும்பாலானோர் பாக்கெட் பாலைத் தவிர்த்து, கறந்த பாலை நேரடியாக வாங்குகிறார்கள். 

இதனால், விவசாயிகள் பலரும் நாட்டு மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில், நாட்டு மாடுகளை வளர்த்து நல்ல வருமானம் எடுத்து வருகிறார்கள் திருவள்ளூர் மாவட்டம், ஒதப்பை கிராமத்தைச் சேர்ந்த கதிரவன், சங்கர் ஆகியோர். 

திருவள்ளூர்- ஊத்துக்கோட்டைச் சாலையில் 12 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது ஒதப்பை கிராமம். இங்குதான் இவர்களின் மாட்டுப்பண்ணை இருக்கிறது. பண்ணையில் மும்முரமாக வேலை செய்துகொண்டிருந்த சங்கர் மற்றும் கதிரவன் ஆகியோரைச் சந்தித்தோம். நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் சங்கர். “நாங்க ரெண்டு பேரும் கிட்டத்தட்ட இருபத்தஞ்சு வருஷமா நண்பர்கள். ஸ்கூல்ல படிக்கிறப்ப இருந்தே ஒண்ணாத்தான் இருப்போம். படிப்பு முடிச்சு நான் அம்பத்தூர்ல ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். அது எனக்குச் சரிப்பட்டு வரல. வேலையை விட்டுட்டு ஊருக்கு வந்துட்டேன். வந்து நான், கதிரவன், இன்னொரு நண்பர் மூணு பேரும் சேர்ந்து மாட்டுப்பண்ணை ஆரம்பிச்சோம். அந்த நண்பர் இப்போ வெளிநாடு போய்ட்டதால, நானும் கதிரவனும்தான் மாடுகளைப் பார்த்துக்கிறோம். ஆரம்பத்துல பாலை எங்களால விற்பனை செய்ய முடியல.
அதில்லாம நிறைய பிரச்னைகளும் வந்துட்டே இருந்துச்சு. ஆனாலும், நாங்க இதுதான் நமக்கான வாழ்வாதாரம்னு முடிவு பண்ணி இறங்கினதால, இழுத்துப் பிடிச்சு சமாளிச்சுட்டிருந்தோம். நாங்க திருவள்ளூர்ல நேரடியா பாலை விற்பனை செய்யக் கொண்டு போனப்போ, ‘திருவள்ளூர் இந்த்செட்டி பயிற்சி நிலையம்’ பத்திக் கேள்விப்பட்டோம். அங்கே மாட்டுப்பண்ணை அமைக்கிறது பத்தி முறையாகப் பயிற்சி எடுத்துக்கிட்டோம். அந்தப்பயிற்சிதான், எங்களுக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது” என்ற சங்கரைத் தொடர்ந்து பேசினார் கதிரவன். 

“அந்தப் பயிற்சியிலதான் பாலை மதிப்புக்கூட்டி விற்பனை செய்றது பத்தியும் தெரிஞ்சுகிட்டோம். பயிற்சி மைய அதிகாரிகள், எங்களுக்குப் பேங்க் லோனுக்கும் ஏற்பாடு செஞ்சு கொடுத்தாங்க. இப்போ, பாலை மட்டும் விற்பனை செய்யாம வெண்ணெய், நெய், பால்கோவானு தயாரிச்சு விற்பனை செய்றோம். மாடு வளர்ப்பைத் தொடங்கி நாலு வருஷமாச்சு. இப்போ பண்ணையில கிடைக்குறது, மற்ற விவசாயிகள்கிட்ட வாங்குறதுன்னு தினமும் 150 லிட்டர் அளவுக்குப் பால் விற்பனை செய்றோம். பாலுக்கான ஆர்டர் அதிகமா இருக்குறதால, மத்த விவசாயிகள்கிட்ட இருந்தும் பால் வாங்குறோம். சென்னை வரைக்கும் இந்த பாலை அனுப்பிட்டிருக்கோம்.
அதிக பணவசதி இல்லாததால இப்போதைக்குச் சின்ன அளவுலதான் செஞ்சுட்டிருக்கோம். சங்கரோட அப்பாவுக்கு மாடு வளர்ப்புல நல்ல அனுபவம் இருக்குறதால, அவர்தான் பண்ணையைக் கவனிச்சிட்டிருக்கார். நாங்க வளர்க்குறது எல்லாமே இந்த மாவட்டத்துல வளர்ற நாட்டு மாடுகள்தான். நாட்டு மாடுகள் குறைவான பால் கொடுத்தாலும் அதுல சத்து அதிகம். 

அதனால, மக்கள் விரும்பி வாங்குறாங்க. சந்தையில் விற்பனையாகுற பால் விலையைவிட, அதிக விலை கொடுத்து வாங்கவும் தயாரா இருக்காங்க. அதேமாதிரி, நாட்டு மாட்டு நெய்க்கும், வெண்ணெய்க்கும் நல்ல வரவேற்பு இருக்கு. எருமை மாட்டுப்பாலுக்கும் நல்ல வரவேற்பு இருக்குது. மாடுகளை மேய்ச்சல் முறையிலதான் வளர்க்குறோம். இதனால், ஆரோக்கியமா வளருது. சத்தான பால் கிடைக்குது. மத்த விவசாயிகள்கிட்ட வாங்குற பாலையும் தரமா இருந்தாத்தான் வாங்குவோம். 

பால்ல இருக்குற கொழுப்போட அளவைப் பொறுத்து விலை கொடுப்போம். எங்ககிட்ட 10 பசுக்கள், 10 பசுக்கன்றுகள், 12 எருமைகள், 12 எருமைக் கன்றுகள்னு மொத்தம் 44 உருப்படிகள் இருக்கு. இதுபோக 15 வெள்ளாடுகளும் இருக்கு. இப்போதைக்குத் தினமும் 23 லிட்டர் பசும்பாலும் 26 லிட்டர் எருமைப்பாலும் கிடைச்சுட்டிருக்கு” என்றார்.
வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்த சங்கர், “பசும்பாலை 42 ரூபாய்னும், எருமைப்பாலை 50 ரூபாய்னும் விற்பனை செய்றோம். இப்போதைக்குத் தினமும் 2,266 ரூபாய் வருமானமாகக் கிடைச்சுட்டிருக்கு. வெளியிலிருந்து வாங்குற பாலைத் தனியா விற்பனை செய்றோம். அது மூலமா ஒரு வருமானம் கிடைச்சிட்டிருக்கு. ஆர்டரைப் பொறுத்துத் தயிர், வெண்ணெய், நெய்னும் விற்பனை செய்றோம். தினமும் தீவனம், போக்குவரத்து, மருந்துனு 900 ரூபாய் செலவாகுது. எல்லாம் போகத் தினமும் சராசரியா 1,700 ரூபாய் வரை லாபமாக் கிடைக்குது” என்றார். 

நிறைவாகப் பேசிய நண்பர்கள், “கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு ஆர்டர் அதிகரிச்சுட்டே இருக்குறதால, பெரியளவுல பண்ணையை விரிவுபடுத்துற முயற்சிகளை எடுத்துட்டுருக்கோம். சீக்கிரத்துல ஒரு பெரிய இடத்தைப் பிடிச்சுடுவோம்னு நம்பிக்கை இருக்கு” என்று சொல்லி விடைகொடுத்தனர்.

தொடர்புக்கு:
சங்கர்,
செல்போன்: 97915 52601


மேய்ச்சல் முறை சிறந்தது! 

மாடுகளைப் பராமரிப்பது குறித்துச் சங்கர் சொன்ன தகவல்கள் இங்கே இடம் பிடிக்கின்றன.... 

ஒவ்வொரு பருவகாலம் தொடங்கும்போதும் மருத்துவர்கள்மூலம் உரிய தடுப்பூசியைப் போட வேண்டும். பண்ணையைத் தினமும் கழுவிச் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். குறித்த காலத்தில் குடற்புழுநீக்கம் செய்ய வேண்டும். மேய்ச்சல் முறையில் வளர்ப்பது சிறந்தது. சினைப்பருவத்துக்கு வரும் மாடுகளைத் தனிமைப்படுத்தி இனச்சேர்க்கை செய்ய வேண்டும். 

மாடுகளுக்குக் கோமாரி நோய் வந்தால், தினம் ஒரு நாட்டுக்கோழி முட்டை என மூன்று நாள்களுக்குக் கொடுக்க வேண்டும். மேலும், எருக்கன் பாலை, விளக்கெண்ணெயில் கலந்து, மாட்டின் உடம்பில் புள்ளிகள் வைக்க வேண்டும். கோமாரி தாக்கிய மாட்டின் மூக்கணாங்கயிற்றை எடுத்துவிட வேண்டும். 50 மில்லி நல்லெண்ணெயில் நான்கு வாழைப்பழங்களை ஒரு மணிநேரம் ஊற வைத்து, நான்கு நாள்களுக்குக் கொடுத்து வந்தாலும் கோமாரி சரியாகிவிடும். கோமாரி தாக்கிய மாட்டிடம் கன்றைப் பால் குடிக்க விடக் கூடாது. 

மாடுகள் தீவனம் எடுக்காமல் இருந்தால், கல்யாண முருங்கை இலை, வெற்றிலை ஆகியவற்றோடு வெல்லம் கலந்து கொடுக்கலாம். மூங்கில் இலையை உண்ணக்கொடுத்தால் மாடுகளின் வயிறு சுத்தமாகும். 

மாடுகளுக்கு உப்புசம் ஏற்பட்டால் 100 கிராம் பழைய புளி, இரண்டு எள் செடி ஆகியவற்றைத் தண்ணீரில் ஊறவைத்துக்கொடுத்தால் சரியாகிவிடும். கழிச்சல் இருந்தால் 2 கிலோ கொய்யா இலை, மலராத தென்னம்பாளை இரண்டையும் நான்கு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, இரண்டு லிட்டராகச் சுண்ட வைத்துக் கஷாயமாகக் கொடுத்தால் சரியாகிவிடும். புண்களுக்கு வேப்பெண்ணெய் தடவினாலே சரியாகிவிடும்.

Thursday, December 31, 2015

பழுதில்லாமல் லாபம் கொடுக்கும் பால் பண்ணை!

22 மாடுகள்... மாதம் ஒரு லட்சம்! 
பரம்பரையாக மாடு வளர்ப்பவர்களே பால் பண்ணையில் போதிய வருமானம் இல்லை என வேறு தொழில்களை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில்... “சரியாகத் திட்டமிட்டு செய்தால் பசுக்களில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்து நல்ல லாபம் எடுக்க முடியும்” என்று விரல் உயர்த்துகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகிலுள்ள தம்மனூர் கிராமத்தைச் சேர்ந்த ஹரிபிரசாத்.
பண்ணையில் வேலை செய்துகொண்டிருந்த ஹரிபிரசாத்தைச் சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
‘‘நான் சென்னை, பல்லாவரத்துல குடியிருக்கேன். பால் பண்ணை வைக்கணுங்கிற ஆர்வத்துல ஒரு  மணி நேர பயண தூரத்துல இருக்கிற மாதிரி நிலம் தேடுனேன். அப்படி 2001-ம் வருஷம் கிடைச்சதுதான் இந்த நிலம். எங்க வீட்டுல இருந்து 50 கிலோ மீட்டர் தூரம்தான். மொத்தம் மூணே முக்கால் ஏக்கர். பக்கத்துலேயே ரெண்டே கால் ஏக்கர் நிலத்தை குத்தகைக்குப் பிடிச்சிருக்கேன். மொத்தம் ஆறு ஏக்கர். இதுல, நாலு ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான கோ-3, கோ-4, சவுண்டல், அகத்தி மாதிரியான பசுந்தீவனங்களைப் போட்டிருக்கேன். ஒண்ணே கால் ஏக்கர்ல ஏ.டி.டீ-43 நெல் இருக்கு. மீதி இடங்கள்ல கிணறு, மாட்டுக் கொட்டகை, பாதை எல்லாம் இருக்கு.
பயிற்சிக்குப் பிறகு பண்ணை!
பால் பண்ணை வைக்கணும்னு முடிவு பண்ணிட்டதால ‘கே.வி.கே’வில் மாடு, கோழி வளர்ப்பு தொடர்பான பயிற்சிகளை எடுத்துக்கிட்டு... ஆரம்பத்துல ஆறு கலப்பின மாடுகளை வாங்கினேன். அவை மூலமா, தினமும் 20 லிட்டர் வரை பால் கிடைச்சது. தனியார் பால் பண்ணைக்குத்தான் பால் கொடுத்துக்கிட்டிருந்தேன். அதோட, இயற்கை முறையில பசுந்தீவனங்கள், காய்கறி, சோளம், சாமை, தினைனு சாகுபடியும் செய்துட்டு இருந்தேன். சிறுதானியங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால விற்பனைக்கு பிரச்னையில்லை. ஒரு கட்டத்துல சிறுதானிய விவசாயத்துல கவனம் போனதால மாடுகளை சரியா கவனிக்க முடியாமப் போயிடுச்சு. ஆனா, இப்போ மறுபடியும் பால் உற்பத்தியில முழுகவனத்தையும் திசை திருப்பியிருக்கேன்.
கைகொடுத்த வங்கிக்கடன்!
பால் விற்பனைனு மட்டும் நின்னுடாம மதிப்புக் கூட்டல் செய்து கூடுதல் லாபம் பாக்கணும்னு முடிவு பண்ணி... வங்கியில 35 லட்ச ரூபாய் கடன் வாங்கி, பால் பண்ணையை விரிவுபடுத்தினேன். கிணறு வெட்டி, நிலத்தைச் சரிபடுத்தினேன். அதோட, தார்பார்க்கர், சாஹிவால், சிந்தினு நாட்டு மாடுகளையும், பால் மதிப்புக் கூட்டல் இயந்திரங்களையும் வாங்கினேன். இப்போ மொத்தம் 22 மாடுகள் இருக்கு. பால் பண்ணை ஆரம்பிச்சு ஒரு வருஷம் முடியப் போகுது. இப்ப, தினமும் 150 லிட்டர்ல இருந்து
180 லிட்டர் வரை பால் கிடைக்குது.
இயற்கைப்பாலுக்கு கூடுதல் ருசி!
இயற்கை விவசாயத்தில் விளைந்த தீவனங்களை மட்டுமே சாப்பிடுற நாட்டு மாடுகளோட பால்ங்கிறதால, என் பண்ணை பால் நல்ல திக்கா, ருசியா இருக்கும். இந்த பாலுக்கு பிராண்ட் பெயர் பதிவு செஞ்சு, சிறுதொழிலுக்கான சான்றையும் வாங்கி பாக்கெட்ல அடைச்சு சென்னையில இருக்கிற பசுமை அங்காடிகளுக்குக் கொடுக்கிறேன். நல்ல வரவேற்பு இருக்கு. மீதமுள்ள பால்ல ஆர்டரைப் பொறுத்து பனீர், வெண்ணெய், நெய் தயாரிச்சு விற்பனை செய்றேன். அப்படியும் பால் மீதமானா தனியார் பண்ணைகளுக்கு ஊத்திடுவேன்” என்ற ஹரிபிரசாத், மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்புப் பற்றிச் சொன்னார்.
அட்சயப் பாத்திரம்!
“பால் பண்ணை வெக்கிறவங்க, பாலை மட்டும்தான் பணமா பாக்குறாங்க. அதனாலதான் சிலசமயங்கள்ல நஷ்டம் வந்துடுது. ஆனா, பசு ஒரு அட்சயப் பாத்திரம் மாதிரி. அது கொடுக்குற அத்தனையும் மதிப்புமிக்கது. அதை நான் சரியா புரிஞ்சுக்கிட்டதால எதையுமே வீணாக்கிறதில்லை. சாணம், சிறுநீரை விற்பனை செய்றேன். பஞ்சகவ்யா தயாரிச்சு விற்பனை செய்றேன். யாகத்துக்கான வறட்டி தயார் பண்ணி விற்பனை செய்றேன். தார்பார்க்கர் மாட்டுச்சாண வறட்டி யாகத்துக்கு நல்லதுங்கிறதால எப்பவும் ஆர்டர் இருந்துகிட்டே இருக்கு. ஒரு லிட்டர் சிறுநீரை எட்டு ரூபாய்னும், ஒரு வறட்டியை மூணு ரூபாய்னும் விற்பனை செய்றேன்.
‘இப்ப என்கிட்ட மொத்தம் 22 மாடுகள் இருக்கு. இதன் மூலமா மாசத்துக்கு சராசரியா 5 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்குது. இதுல, பசுமை அங்காடிக்கு லிட்டர் 55 ரூபாய் விலையில தினமும் 50 லிட்டர் கொடுக்கிறேன். மாசத்துக்கு 82 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்குது. நெய், பனீர், வெண்ணெய் விற்பனை மூலமா சராசரியா மாசத்துக்கு 75 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. தனியார் பண்ணைக்குக் கொடுக்கிற பால் மூலமா மாசத்துக்கு 34 ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்குது. சிறுநீர், சாணம், பஞ்சகவ்யா, வறட்டி, கோழி  முட்டை, வாத்து முட்டை விற்பனை மூலமா மாசத்துக்கு சராசரியா 33 ஆயிரம் ரூபாய் வருது. ஆக மொத்தம் மாசம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் வருமானம். இதுல, 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவு போக, ஒரு லட்ச ரூபாய் லாபமா நிக்குது. அதுல, கடனுக்கான தவணைத் தொகையா மாசம் 80 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. மீதி 20 ஆயிரம் ரூபாய் கையில நிக்குது. வங்கிக் கடனை அடைச்சப் பிறகு, மாசம் ஒரு லட்சம் சொளையா கைக்கு கிடைக்கும்’’ என்ற ஹரிபிரசாத், மாடுகளுக்கான நோய் மேலாண்மை பற்றியும் பேசினார்.
தீவனத்தோடு மருந்து!
“மாடுகளுக்கு கோமாரி, சப்பை நோய்னு சீசனுக்கு தகுந்தாப்புல நோய்கள் வரும். அந்தந்த சீசனுக்குத் தகுந்த மாதிரி நோய் வர்றதுக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுட்டா நோய்த்தாக்குதலைத் தவிர்த்துடலாம். அதுபோக, மடிவீக்க நோய்தான் பெரும் பிரச்னை. அது எப்ப வரும்னே தெரியாது. அதுக்கு மருத்துவர்கள் ஆலோசனை கண்டிப்பா அவசியம். நாங்க பெரும்பாலும் கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கிட்டத்தான் ஆலோசனை கேட்டுக்குவோம். அது போக, எங்க மாடுகளுக்கு... வாரத்துல ஒரு நாள் தீவனத்தோட வேப்பிலை; ஒரு நாளைக்கு பூண்டு; ஒரு நாளைக்கு மஞ்சள்னு கொடுத்துடுவோம். அதுனால பெருசா நோய் தொந்தரவு இல்லாம ஆரோக்கியமா இருக்கு.
பண்ணையில இருக்கிற வாத்துகள் மாட்டு ஈ, உண்ணிகளையெல்லாம் பிடிச்சு தின்னுடுது. அதனால பாதி பிரச்னை சரியாகிடுது. பொதுவா, மாடுகளை தினமும் குளிப்பாட்டணும். ஒவ்வொரு மாட்டையும் தனித்தனியா கவனமா பார்க்கணும். சில மாடுக தீவனம் எடுக்காம இருக்கும். சில மாடுக சோர்வா இருக்கும். அந்த மாடுகளுக்கு என்ன பிரச்னைனு பாத்து அதை சரி செய்யணும். ஆகமொத்தம் முறையா செய்தால் பால் பண்ணை நிச்சயமா லாபம் கொழிக்கும் தொழில்ங்கிறதுல சந்தேகமேயில்லை” என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி விடைகொடுத்தார் ஹரிபிரசாத்.
தொடர்புக்கு,
ஹரிபிரசாத்,
செல்போன்: 99406-69714.
வெண்ணெய்க்கு தார்பார்க்கர்!
வெண்ணெய் எடுக்க தார்பார்க்கர் மாட்டுப்பாலை மட்டுமே பயன்படுத்தும் ஹரிபிரசாத், ‘‘பழைய கால முறைப்படி பானையில வெச்சு கடைஞ்சி வெண்ணெய் எடுக்கிறேன். 25 லிட்டர் பாலுக்கு 5 கிலோ வெண்ணெய் கிடைக்கும். ஒரு கிலோ வெண்ணெய் 700 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. 5 கிலோவுக்கு 3,500 ரூபாய் கிடைக்கும். விசேஷ நாட்கள்ல வெண்ணெய் ஆர்டர் அதிகமாக வரும்’’ என்கிறார்.
பலே பனீர்!
மதிப்புக் கூட்டுப் பொருட்கள் செய்வதற்கு முறையாகப் பயிற்சி எடுத்திருக்கும் ஹரிபிரசாத், ‘‘பனீர் தயாரிக்க அதிகம் மெனக்கெடத் தேவையில்லை. பால்ல எலுமிச்சைச்சாறை விட்டா, கால் மணி நேரத்துல பால் புளிச்சுடும். 5 லிட்டர் பாலுக்கு, ஒரு எலுமிச்சைப் பழத்தைப் பிழிஞ்சு விடலாம். புளிச்சு கெட்டியான பாலை, வடிகட்டி பனீர் தயாரிக்கிற கருவியில போட்டு இடியாப்பம் பிழியிற மாதிரி பிழிஞ்சா, தண்ணியெல்லாம் சுத்தமா வடிஞ்சு கட்டியான பனீர் கிடைக்கும். அதை அப்படியே பாக்கெட் பண்ணிக் கொடுத்திடலாம். ஒரு கிலோ பனீர் தயாரிக்க 10 லிட்டர் பால் தேவை. ஒரு கிலோ பனீர் 400 ரூபாய்க்கு விற்பனையாகுது” என்கிறார்.
கைசெலவுக்கு முட்டை!
சில ரக கோழிகளையும் வளர்க்கிறார் ஹரிபிரசாத். அவற்றைப் பற்றி பேசும்போது, ‘‘எங்க பண்ணையில 150 நாட்டுக்கோழிகள் இருக்கு. கிரிராஜா, வனராஜா ரகக் கோழிகளைத்தான் வளர்க்கிறேன்.
இதுகளுக்காக தனியா கொட்டகை கிடையாது. அப்பப்ப தீவனம் கொடுக்கிறது, தடுப்பூசிகள் போடுறதோட சரி.
காலையில கிளம்பி தோட்டம் முழுக்க மேய்ஞ்சுட்டு, சாயங்கால நேரத்துல அதுகளா அடைஞ்சுக்கும். அடைக்கு வெக்கிறது போக மீதி முட்டைகளை மட்டும் விற்பனை செய்றோம். கோழிகளை விற்பதில்லை. அதேமாதிரி வாத்துகள் மூலமா கிடைக்கிற முட்டைகளை மட்டும்தான் விற்பனை செய்றேன். இந்த முட்டை வருமானம் கைசெலவுக்கு சரியா இருக்குது’’ என்று குஷியாகச் சொல்கிறார்.
துரை.நாகராஜன்
படங்கள்: எஸ்.சந்திரமௌலி

Sunday, September 6, 2015

பால் பொருட்கள்

அபரிதமான பால் உற்பத்தி….ஆகவே இனி கூட்டுறவு சங்கம் மூலம் கொள்முதல் செய்யும் பாலின் அளவை கட்டுப்படுத்துவதற்காக இனிமேல் வாரம் ஒருநாள் ஞாயிற்றுகிழமை மட்டும் பால் எடுக்க மாட்டோம். அன்று நீங்கள் உற்பத்தி செய்யும் பாலை என்னவாவது செய்து கொள்ளுங்கள் என 'ஆவின்’ அதிகாரிகள் வாய்மொழி கட்டளையிடவே கதிகலங்கிப் போனோம்.
ஆட்களுக்கு வார விடுமுறை விடலாம். ஆனால் ‘பால் கறக்கும் பசுக்களுக்கு’ வார விடுமுறை விட முடியுமா? ஒரு வேளை பால் கறக்காவிட்டால் பசுவும் கெட்டு, நம்மையும் கெடுத்துவிடும். இந்த அறிவிப்பு வந்ததும் எங்கள் முக நூல் குழுவான ‘கால்நடை தகவல் மற்றும் விற்பனை மையத்தில்’ ஒரு பதிவைப் போட்டேன். என் சக மாடுமேய்ப்பாளர்களும், நண்பர்களும் ஆலோசனைகளை அள்ளி வழங்கினார்கள். பாலின் மதிப்பைக் கூட்டுங்கள். அதன் ‘சேமிக்கும் காலத்தை அதிகப்படுத்துங்கள்’ என்பதே அதன் சாரம். அதை என்னென்ன செய்யலாம். எப்படியெல்லாம் உருமாற்றலாம் என செய்தி தேடியதில் கிடைத்தவற்றை இங்கே கொஞ்சம் பகிர்ந்து கொள்ள உத்தேசம்.

உணவில் வெண்மை நிறம் ஒதுக்கப்பட்ட வேண்டியது ஒன்று. தீட்டப்பட்ட வெண்மையான அரிசி, ஆலையில் இருந்து வரும் வெள்ளைச் சர்க்கரை, மைதா மாவு, ரவை என வெள்ளை லிஸ்டில் சிலர் பாலையும் சேர்க்கின்றனர். சிலர் விலக்குகின்றனர். பாலும், பாலின் பொருட்களும் பெரிதும் வெண்மையாகவே இருக்கின்றது. இந்த வெள்ளையின் ஒதுக்கல் பட்டியலில் பால் இருக்கிறதா இல்லையா என்பதல்ல நமது ஆராய்ச்சி. இந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு ஒரு தீர்வுதான் இப்போதைய அவசர தேவை.
பழங்காலம் தொட்டே நாம் பாலை பாலாய் மட்டுமே பயன்படுத்துவதில்லை. வீட்டிலேயே தயிர், மோர், வெண்ணெய், நெய், சீம்பால் (கன்று ஈனும்போது கிடைக்கும் பால்) என கிராமப்புற பொருட்களை தயாரித்துக் கொண்டுதான் வந்தோம். நம் பார்வை உலகளாவியதாக விரிய, விரிய பால் படுபொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகின்றது. வெளிநாட்டு பால் பொருள், வடநாட்டுப் பால் பொருள் எல்லாம் அவர்களுக்கு அவர்களின் உள்ளூர் உணவுதான். இதை எழுதப் போனால் அன்னிய நாட்டு அடிவருடி, தரகு முதலாளிகளின் கைக்கூலி என எவராவது பட்டை பூசிய மிசோராம் பேராசிரியர் காரசாரமாக பின்னூட்டும் போட்டு தாளித்துவிடப் போகிறார். நீங்கள் நல்லவரா கெட்டவரா என நாயகன் கேள்வியும் வரப்போகிறது. சுவையூட்டிய பால், கோவா, இனிப்பு கோவா, இனிப்பு தயிர், தயிர், மோர், ஸ்ரீகந்த், லஸ்ஸி, பன்னீர், பாலாடைக் கட்டி, ஐஸ் க்ரீம், குல்பி, பாலேடு, வெண்ணெய், நெய், ஊநீர்பானம் இனிப்பு வகைகளான குலோப்ஜாமூன், பால் அல்வா, பால் பாயசம், சன்னா, சம்சம், ரசகுல்லா, ரசமலாய் எனப் பெரிய பட்டியலே உள்ளது.
பாலை கறந்த ஆறு மணி நேரத்திற்குள் விற்பனை செய்ய முடிந்தால் நேரடியாக விற்பனை செய்யலாம். கறந்த பாலில் உள்ள நுண்ணுயிர்கள் நேரம் ஆக ஆக பெருகி, ஆறு மணி நேரத்திற்கு மேலானால் பாலைக் கெடுத்து விடுகின்றது. கறந்தவுடன் எவ்வளவு விரைவாக பயன்படுத்த இயலுமோ அவ்வளவு விரைவாக பயன்படுத்துவதே நல்லது. காலையில் கறந்த பாலை மாலையிலும்,மாலையில் கறந்த பாலை மறுநாள் காலையிலும் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், பாலை 5 c வெப்பநிலைக்கு குளிரவைத்து விற்பனை செய்யலாம். இவ்வாறு பாலைக் குளிர வைப்பதால் அதனை 24 மணி நேரம் கெடாமல் பாதுகாக்கலாம். குளிர வைக்கப்படும் போது பாலில் உள்ள நுண்ணுயிர்கள் (பேக்டீரியாக்கள்) அழக்கப்படுவதில்லை. ஆனால் அவைகளின் எண்ணிக்கை அதிகமானது.

பாலை 4 நாட்களிலிருந்து 1 வாரம் வரை பாதுகாக்க வேண்டுமானால் பாஸ்சரைசேஷன் செய்யவேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதற்குள் இன்னொரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி 63 C அளவிற்கு சூடு செய்யவேண்டும். பாலை நேரடியாக சூடு செய்யக்கூடாது.
30 நிமிடம் சூடு செய்த பின்னர் அறை வெப்ப நிலைக்குக் குளிரச் செய்து பின்னர் 5 c அளவிற்கு குளிரச் செய்து பால் பாக்கெட்டுகளில் அடைத்து சீல் செய்து வைக்கலாம்.
கறந்த பால் 3 – 6 மணி நேரம் கெடாமல் இருக்கும்.
குளிரூட்டிய பால் 24 மணி நேரம் கெடாமல் இருக்கும்.
பாஸ்சரைசேஷன் பால் 4 முதல் 7 நாட்கள் கெடாமலிருக்கும்.
இந்த பாஸ்சரைசேஷன் செய்யத் தனியாக இயந்திரங்கள் உள்ளன.

100 மில்லி பசும்பாலில் என்னென்ன உள்ளன?
87.2 தண்ணீர்
மீதமுள்ள 12.5 திடப்பொருள்
இதில் 4% கொழுப்பு
மீதம் 8.5 கொழுப்பற்ற திடப்பொருள் SNF (Solid Not Fat)
இதில் 5% லேக்டோஸ்
3.5 % புரதம்
87.2 + 12.5 = 99.7 மட்டும் தானே வருகின்றது. மீதமுள்ள 0.3% சாம்பல்.
கருப்பு வெள்ளை கலந்த நிறமுறை HF எனப்படும் பிரீசியன் ரக பசுவின் பாலில் 3.5% கொழுப்பு உள்ளது.
சிவலை நிறத்திலுள்ள ஜெர்ஸி இனப் பசுக்களின் பாலில் 4.5% கொழுப்பு உள்ளது. சிமிழ் அல்லது திமில் அமைப்பு கொண்ட இந்திய இனக் கறவைப் பசுவில் 5.5% கொழுப்பு உள்ளது. ஆனால் கழுதைப்பாலில் 6.5% கொழுப்பு உள்ளது.
பால் பல்வேறு ஊட்டச் சத்துக்கள் அடக்கியதாக இருப்பதால் ஆரோக்கிய நல் வாழ்விற்கு பால் அவசியம் தேவைப்படுகின்றது. நம் நாட்டில் பால் உற்பத்தி பெருகி, இன்று உலக அளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. ஆனால் நம் கடந்தகால பால் வரலாறு அவ்வளவாகச் சுவைக்காது. அமெரிக்காவிலிருந்து பால் பெளடரை கப்பல் கப்பலாக இலவசமாக பெற்றோம். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட பால் பெளடர், உலர் வெண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்து கொண்டிருந்தோம். ஆனால் இன்று உலகில் சிறந்த பால் பொருட்கள் ஏற்றுமதியாளர் வரிசையில் இருக்கின்றோம். பால் விலையை அரசும் அரசின் நிறுவனங்களும் மட்டுமே நிர்ணயித்த காலம் மலையேறி இப்போது தனியார் நிறுவனங்களும் பால் தொழிலில் ஈடுபட்டு பாலுக்கு சற்று கூடுதலான விலை கொடுக்கின்றது. ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் நிலவி வரும் அபரிதமான பால் உற்பத்தி ‘பால் உற்பத்தியாளர்களை’ மாற்று சிந்தனையை நோக்கி தள்ளுகின்றது. ஆகவேதான் பால் பொருட்களைப் பற்றிய சிந்தனை எழுகின்றது.

பொதுவாக பாலினால் செய்யக்கூடிய பொருட்கள்
1. அதிக கொழுப்பு சத்துள்ள பால் பொருட்கள் - நெய், வெண்ணெய், க்ரீம்
2. அதிக புரதச் சத்துள்ள பால் பொருட்கள் - சீஸ், பீட்சா,பன்னீர்
3. குளிர்ந்த, உறைந்த பால் பொருட்கள் – நறுமணப்பால், பால் ஐஸ், ஊநீர் பானம், ஐஸ்கிரீம், குல்பி, மில்க் கேக்
4. பால் இனிப்பு பொருட்கள் – கோவா, பேடா, பர்பி, கலாகந்த், குலோப் ஜாமூன், ரசகுல்லா, ரசமலாய்
5. உறைமோர் ஊற்றித் தயாராகும் பால் பொருட்கள் – தயிர், மோர், லஸ்சி, ஸ்ரீகந்த், யோகர்ட்
அத்தனை தயாரிப்பு முறைகளும் பெரிய இயந்திரங்களின்றி சிறிய இயந்திரங்களைக் கொண்டு எந்த அளவிலும் செய்ய சாத்தியமானவை.
நெய், வெண்ணெய், க்ரீம் என மூன்றும் தயார் செய்ய, காய்ச்சாத பாலிலிருந்து க்ரீம் செபரேட்டர் எனும் கருவி கொண்டு பாலேடு எனும் க்ரீமை பிரிக்கலாம். இதனை நாட்டுப்புறத்தில் பாலை அரைப்பது எனக் கூறுவர். 4% கொழுப்பு சத்துள்ள 100 லிட்டர் பாலிலிருந்து 10 கிலோ க்ரீம் கிடைக்கும். பாலை க்ரீம் செப்பரேட்டர் இயந்திரம் மூலம் சுழற்றும் போது க்ரீமாகவும், கொழுப்பு நீக்கப்பட்ட பாலாகவும் பிரிகின்றது.
க்ரீமானது நெய் மற்றும் ஐஸ்கிரீம் தயாரிக்க பயன்படுகிறது. க்ரீம் நீக்கப்பட்ட பால் கட்டி தயிர், சுவையூட்டிய பால் தயார் செய்ய பயன்படுகின்றது.
வெண்ணெயில் பல வகைகள் உள்ளன. பதப்படுத்திய க்ரீம், நுன்ணுயிர்கள் சேர்க்கப்பட்ட க்ரீம், நுண்ணியிர்கள் சேர்க்கப்படாத க்ரீமிலிருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய், உப்பு சேர்த்த வென்ணெய், உப்பு சேர்க்காத வெண்ணெய் என நறுமணத்துடனும், நீண்டு நாட்களுக்கு கெடாமலுமிருக்கும். பின் டின் செய்து அல்லது பட்டர்பேப்பரில் பேக் செய்து -23 முதல் -29 C யில் வைத்தால் நீண்ட காலம் கெடாமல் வைக்கலாம்.
பசு அல்லது எருமைப்பாலிலிருந்து உருவாக்கப்பட்ட வெண்ணெய்க் கொழுப்பே நெய் ஆகும். மற்ற அனைத்து பால் பொருட்களைவிட நெய்யில் தான் கொழுப்பு அதிகம். வைட்டமின் ஏ, டியும் அதிகம்.  வீட்டில் பாலை காய்ச்சி பின்னர் உறை ஊற்றி உறைய வைத்து தயிராக்கி அதிலிருந்து வெண்ணெய்ப் பிரித்து, வெண்ணெயை காய்ச்சி நெய்யாக மாற்றுகிறோம். இது நாட்டு முறை. வீட்டளவில் உற்பத்தி செய்ய ஏற்றது. அடுத்தது க்ரிமெரி முறை (creamery method)/ எவர்சில்வர் பாத்திரத்தில் வெண்ணெயை நீராவியால் சூடுபடுத்த வேண்டும். மிதமான சூட்டில் வெண்ணெய் உருகும் வரை துடுப்பினால் கிளறிவிட வேண்டும். இம்முறையில் நெய் கருகாமல் ஒரே மாதிரி தரத்துடன் இருக்கும். அடுத்தது முப்பிரி நிலை Pre stratification method. வெண்ணெயை 80-85 C யில் 15-30 சூடுபடுத்தி அப்படியே விட்டுவிட வேண்டும். முதலில் தயிர் துகள்களும், இரண்டாவதாக கொழுப்பும், மூன்றாவதாக மோரும் பிரிந்திருக்கும். மோரை மட்டும் நீக்கிவிட்டு மீண்டும் 110 – 120 c அளவு சூடு செய்தால் உருக்கிய நெய் கிடைக்கும். 100 லிட்டர் 4% கொழுப்புச் சத்து உள்ள பாலில் 4 கிலோ நெய் செய்யலாம்.

அடுத்தது அதிக புரத சத்துள்ள சீஸ் எனும் பாலாடைக்கட்டியும், பன்னீரும் நல்ல விற்பனை வாய்ப்புள்ள பொருட்கள். பாலாடைக்கட்டி (cheese) என்பது பாலை உறைய வைத்து, பாலிலுள்ள புரதத்தை தகுந்த முறையில் கெட்டியான கட்டிகளாக மாற்றுவது. உலகில் 400 க்கு மேற்பட்ட வகைகளில் சீஸ் தயாரிக்கப்படுகிறது. மொசரல்லா சீஸ் (Mozarella Cheese), காட்டேஜ் சீஸ் (cottage cheese) ரிகோட்டா சீஸ் (Ricotta cheese), செட்டார் சீஸ் (Chattar cheese) போன்றவை பிரபலமானவை. பாலை 4 C க்கு குளிர வைத்து, 1 லிட்டர் பாலுக்கு 20% லாக்டிக் அமிலம் 16 மில்லி சேர்த்து, 25 லிட்டர் பாலுக்கு 1 கிராம் சேர்க்க வேண்டும். பின் வெப்ப நிலை 4 C யிலிருந்து 27 c க்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்திப், பாலுறைந்து, வே எனும் ஊநீர் பிரியும். பின்னர் இதில் உப்பு சேர்த்து 100 c கொதிக்கும் தண்ணீரை ஊற்றியதும் ரப்பர் போல மாறும். இதுதான் சீஸ். இதனை தொழில்முறையில் செய்ய வல்லுநர்களின் உதவி தேவை.
பாலைத் திரிய வைத்து தயாரிக்கப்படும் மிருதுவான பால் பொருள் பன்னீர் ஆகும். வாயகன்ற பாத்திரத்தில் 3% கொழுப்புச் சத்துள்ள பாலை எடுத்து 5 நிமிடம் 22 C க்கு சூடுபடுத்திப் பின் குளிரச் செய்து, அதில் 2% சிட்ரிக் அமிலம் சேர்த்து 30 நிமிடம் அப்படியே விட வேண்டும். பால் திரிந்து இளம் பச்சை நிறத்தில் ஊநீர் பிரியும். இதனை வடிகட்டி எடுத்தபின் கிடைப்பது பன்னீர். இதனை நூல் துணியில் கட்டி 3 மணி நேரம் கழித்து அழுத்தினால் மீத நீரும் வெளியேறும். பின்னர் இதனை செங்கல் துண்டுகள் போல அறுத்து 5 C யில் குளிர் நீரில் வைக்க வேண்டும். பின்னர் ¾ அங்குல க்யூபுகளாக வெட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.
குளிர்ந்த, உறைந்த நிலையில் பாலை விற்பனை செய்வதில் ஐஸ்க்ரிமும், நறுமணப்பாலும் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளவை. நறுமணப்பால் (flavoured milk) தயார் செய்ய வெண்ணெய் பிரித்த பாலே சிறந்தது. பாலுடன் 7% சர்க்கரை சேர்த்து 63 C க்கு காய்ச்சி 30 நிமிடம் பதப்படுத்தி அத்துடன் நிறமூட்டும் பொருள், வாசனைப் பொருள் சேர்த்து பாதாம் பால், பிஸ்தா பால், ரோஸ் மில்க், சாக்லேட் பால், பூட்ரூட் பால் என பல வகையில் தயாரித்து பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். ஐஸ் க்ரீமிற்கு அழகான தமிழ் பெயர் பால்பனி குழைவு. அந்த வார்த்தையிலே அதன் அர்த்தம் தொனிக்கின்றது. 10 சதவிகித கொழுப்புச் சத்தும், 12 சதவிகிதம் இதர திடப்பொருளும் நிறைந்த ஐஸ்க்ரீம் மனித வளர்ச்சிக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் அதிகம் நிறைந்தது. சிறிய குடிசை தொழில் முதல் பெரும் நிறுவன அளவிற்கும் இந்தத் தொழிலை செய்யலாம். ஐஸ்க்ரீமின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து நல்ல வாய்ப்புள்ள பால் தொழிலாக உள்ளது. பாலிலிருந்து பல வகைகளில் ஐஸ்க்ரீம் தயார் செய்யலாம். நறுமண எஸன்ஸ், கலர் கலந்தது, கோகோ அல்லது சாக்லெட் கலந்தது, பழம் மற்றும் பழரசம் கலந்தது, பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உயர் வகை பருப்புகள் கலந்தது எனப்பல வகைகளில் தயாரிக்கலாம்.

ஒரு லிட்டர் ஐஸ்க்ரீம் தயார் செய்ய 700 மில்லி பால், 50 கிராம் வெண்ணெய், 50 கிராம் பால் பெளடர், 150 கிராம் சர்க்கரை, 3 கிராம் நிலைப் படுத்தும் பொருள் (சோடியம் அல்ஜினேட்), 2 கிராம் குழம்பாக்கும் பொருள் ஆகியவை தேவை. பெரிய அளவில் ஐஸ்க்ரீம் தயார் செய்ய பால் பதப்படுத்தும் இயந்திரம் Pasteurizerம் க்ரீம் செபரேட்டர், ஹோமோஜீனைஸம், குளிரூட்டும் சில்லர், ஐஸ்க்ரீம் ஃப்ரீஜர் போன்றவை தேவை. ஐஸ்க்ரீம் கலவையினுள் காற்றை உட்புகுத்துவதனால் அதன் அளவு அதிகரிப்பதுடன் ஐஸ்க்ரீம் மிருதுவாகவும், சிறுசிறு கட்டிகள் உருவாகாமலும் தடுக்கிறது.
இனிப்பு பொருட்கள் பலவற்றில் ஆதாரமே பால்தான். பால் ஸ்வீட்டுக்கு ஆதாரம் ‘கோவா’. கோவா எனப்படுகின்ற பால் பொருள் பாலை நன்கு சூடுபடுத்தி கிளறுவதன் மூலம் கிடைக்கின்ற திடப்பொருள். பாலின் அளவை 20% சுருக்கப்பட்டு தயார் செய்யப்படுவதே கோவா. கோவாவில் 20% கொழுப்பு சத்தும், 60-70 சதவிகித திடப்பொருளும் இருக்கும். 100 லிட்டர் பசும்பாலிலிருந்து 18-20 கிலோ வரை கோவா கிடைக்கும். வாயகன்ற தட்டையான பாத்திரத்தில் பாலை காய்ச்சிக் கொண்டே தொடர்ந்து கிளர வேண்டும். கோவா செய்வதற்கெனவே நீராவி சூட்டில் இயங்கும் பாத்திரங்கள் உள்ளன. பாலில் 2.5 பங்கு குறைந்தும் பால் பிரியத்துவங்கும்.

அப்போது பாலின்  நிறம் மாறும். தொடர்ந்து கிளறிக் கொண்டே இருந்தால் தான் பால் கலவை கருகி, தீய்ந்து போய்விடாமல், பாத்திரத்தில் ஒட்டாமல் பிரியும். 0.1 சதவிகிதம் சிட்ரிக் அமிலம் சேர்த்தால் குருணை போன்ற கோவாவைப் பெறலாம். இந்த கோவாவை கொண்டுதான் மில்க் பர்பி, குலோப் ஜாமூன், காலா ஜாமூன், குல்கந்த், பேடா போன்ற பல்வேறு ஸ்வீட் வகைகள் தயார் செய்யப்படுகின்றது. பசும்பாலை பொங்கும்வரை சூடு செய்து எலுமிச்சை சாறு ஊற்றி பாலைத் திரிய வைத்து துணியில் வடிகட்டி ‘சன்னா’ பிரித்து அதிலிருந்து ரசகுல்லா செய்யலாம். சன்னாவை சிறு துண்டுகளாகப் பிய்த்து போட்டு சர்க்கரை தூவி இளஞ்சூட்டில் கிளறி ஏலக்காய்த் தூள் சேர்த்து எண்ணெய் தடவிய தட்டில் ஆற வைத்து அச்சில் ஊற்றி எடுப்பது சந்தேஸ்.
உறையூற்றி தயார் செய்யப்படும் பால் பொருட்களில் இனிப்பு தயிர் (யோகர்ட்) என்பது பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்படும் பொருள். ஸ்டெப்டோகோக்கள், லேக்டோ பேசில்லஸ் நுண்ணுயிர்கள் பயன்படுத்தி இனிப்புத் தயிர் செய்யலாம். சாதா தயிருக்கும் இனிப்பு தயிருக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. சாதா தயிரில் பாலிலுள்ள அளவே கொழுப்பு மற்றும் இதர திடப்பொருள் இருக்கும். ஆனால் இனிப்பு தயிருக்கு கொழுப்பு இல்லாத இதர திடப்பொருள் 11-12% அளவிற்கு உயர்த்தினால்தான் தரமும் மிருதுதன்மையும் உயரும். சாதாரண தயிருக்கு பல்வேறு நுண்ணுயிர் கலவையை உபயோக்கின்றோம். ஆனால் இனிப்பு தயிர் தயாரிக்க எஸ்.தெர்மோ பில்லஸ், எஸ்.பல்கேரிகல் ஆகிய நுண்ணுயிர்களை 1:1 என்கின்ற விகிதத்தில் கலந்து அந்த கலவையைப் பயன்படுத்த வேண்டும். சாதாரண தயிரில் நுண்ணுயிர் வளர்ந்து தயிராக 15 மணி நேரம், 37 C வெப்பநிலை தேவை. ஆனால் இனிப்பு தயிர் 42 C வெப்பநிலையில் 4 மணி நேரத்தில் தயிராகிவிடும்.

இனிப்புத் தயிருள்ள நுண்ணுயிர்கள் லேக்டோஸ் எனப்படும் பாலிலுள்ள சர்க்கரைப் பொருளைச் சிதைத்து குளுகோஸ் மற்றும் கேலக்ஸோஸ் ஆக மாற்றுகின்றன. லேக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் கூட இனிப்புத் தயிர் சாப்பிடலாம். இனிப்பு தயிர் குடல் அசைவுகளை கட்டுப்படுத்தி உணவு ஜீரணமாவதை மேம்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு, புற்றுநோய், மலச்சிக்கல், ரத்தத்தில் கொழுப்பு சேர்வது போன்ற அபாயங்களிலிருந்து இனிப்பு தயிர் நம்மை பாதுகாக்கிறது.
சாதாரண தயிர் என்பது உறை ஊற்றி புளிக்க வைத்த பால் பொருள். நமது இந்திய உணவு வகைகளில் பெரிய பங்கு வகிக்கின்றது. வெண்ணெய், நெய், மோர் தயாரிக்க மூலப் பொருளாக இருக்கின்றது. தயிருடன் சர்க்கரை, ஐஸ்கட்டி, குளிர்ந்த நீர், சாட் மசாலா கலந்து தயாரிக்கப்படும் குளிர்பானம் லஸ்சி.இது வடக்கு, வடமேற்கு இந்தியாவில் மிக பிரபலமான குளிர்பானம். ஸ்ரீகந்த் என்பது தயிரிலிருந்து நீரை நீக்கிவிட்டு அதனுடன் சர்க்கரை, மணமூட்டி, நிறமூட்டி, கலந்து தயாரிக்கப்படும் இனிப்பு வகை. இதனை சிறுசிறு கப்புகளில் ஊற்றி குளிர் சாதனப் பெட்டியில் சேமித்து வைக்கலாம்.
நம்முடைய பலம், பலவீனம் இவற்றை நன்கு தெரிந்து விற்பனை வாய்ப்பை கவனித்து, எந்தப்பொருள் செய்யலாம் என முடிவெடுத்து அதற்கான பயிற்சி, கல்வி அறிவு, நிறுவனங்களை பார்வையிடல் அனுபவமிக்க பணியாளர்கள் போன்ற பணியை முடிவு செய்த பின், பால் பொருட்கள் தொழிலில் இறங்கலாம். பாலின் விலையில், உற்பத்தியில் திடீரென ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்தால் எழும் பாதிப்பு போல, பால் உப பொருட்கள், பால் படுபொருட்கள் உற்பத்தியில் இல்லை. உலகில் பன்னாட்டு நிறுவனங்கள் முதல் கிராம குடிசைத் தொழில் வரையிலும் பல்வேறு அளவு, முதலீட்டில் பால் பொருட்கள் உற்பத்தித் தொழில் நடைபெற்றுக் கொண்டிருகின்றன. ஆகவே முறையாக திட்டமிட்டுச் செய்தால் பால்பண்ணை பொருட்கள் தொழிலில் வெற்றி நிச்சயம்.

கறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள, கறவை மாடுகள் வாங்கும் விவசாயிகள் சில வழிமுறைகளை பின்பற்றி வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் ஈட்ட முடியும் என கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 விவசாயத்தில் கால்நடை விவசாயமும் இன்றிமையாதது. புதிதாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட ஆர்வமுள்ள விவசாயிகள் கறவை மாடுகளை வாங்கும்போது, அதை வளர்க்க ஏற்ற இட வசதி, மேய்ச்சலுக்கான வசதி ஆகியவற்றை உறுதி செய்த பின்னர் வாங்க வேண்டும்.
 மேலும், நமது தட்பவெட்ப நிலை, சீதோஷ்ண நிலைக்கேற்ற மாடுகளைக் கேட்டறிந்து வாங்க வேண்டும். பெரும்பாலும் 3 வயதுக்கு உள்பட்ட மாடுகளையே வாங்க வேண்டும். நோயால் பாதிக்கப்படாத, ஆரோக்கியமான, அதிக பால் உற்பத்தி கொடுக்கக் கூடிய மாடாக இருக்க வேண்டும்.
 சிறப்பான பசுவின் தோற்றமும், பெண்மை குணாதிசயங்கள் கொண்ட மாடாக இருக்க வேண்டும். சுறுசுறுப்பாகவும், சாந்தமான மனநிலை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
 பசுவின் தோல் பளபளப்பாகவும், மினுமினுப்பாகவும் இருக்க வேண்டும். தோல் மிருதுவாகவும், இழுத்து விட்டால் உடனடியாக பழைய நிலைக்கு தோல் செல்லும் தன்மை உடையதாகவும் இருக்க வேண்டும்.
 கண்கள் பளிச்சென்று துறுதுறுப்பாகவும், மூக்கு அகலமானதாகவும், மூக்கின் நுனிப்பகுதி ஈரமானதாகவும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆரோக்கியமான பசு என கருத்தில் கொள்ள முடியும்.
 மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும். 
Image result for கறவை மாடு

 முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். கால்கள் வலுவானதும், வளைந்து இல்லாமலும் இருக்க வேண்டும்.
 பால்மடியானது தொடைகளுக்கு நடுவில் பின்புறம் சிறிது உயரத்தில் இருந்து தொடங்கி வயிற்றின் முன் பாகம் வரை இருப்பது நல்ல பால் உற்பத்திக்கு அடையாளமாகும்.
 பால்மடி தொடுவதற்கு மிருதுவாகவும், பால் கறந்தவுடன் மடி வற்றிப் போகவும் வேண்டும். பால் காம்புகள் மிகப் பெரியதாகவோ, சிறியதாகவோ இல்லாமல் சரிசமமான அளவில் இருக்க வேண்டும். பால் காம்புகள் ஒரே அளவு இடைவெளியுடன் இருக்க வேண்டும். 
 எல்லா காம்புகளிலும் கறவை பால் வருகிறதா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.
Image result for கறவை மாடு

 மடியில் ஓடும் ரத்த நாளங்கள் வளைந்தும், புடைத்தும் காணப்பட வேண்டும். அப்படி இருந்தால் மாட்டுக்கு நல்ல ரத்த ஓட்டம் இருப்பதையும், பால் சுரக்கும் தன்மையையும் அறிய முடியும்.
 கறவை மாடுகளை சந்தையில் சென்று வாங்காமல் கால்நடை வளர்க்கும் விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்குவதே நலம். நமது மண்ணுக்கேற்ப அனைத்து சீதோஷ்ண நிலையையும் தாங்கக் கூடிய கலப்பின மாடுகளை வாங்குவதே மிகச் சிறந்ததாகும். 
 மேற்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி கறவை மாடுகளை வாங்கினால், கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் நல்ல வளம் பெற முடியும் என கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 மாட்டை பக்கவாட்டில் பார்க்கும்போது, உடல் நீள வடிவ முக்கோணமாக இருக்க வேண்டும். முதுகுப் பகுதி வளைந்தில்லாமல் நேர்க்கோடாக இருக்க வேண்டும். 

Wednesday, December 3, 2014

பால் தினசரி ரூ. 7,500... மண்புழு தினசரி ரூ.7,000...


“மதிப்பு கூடும் மாட்டுப் பண்ணை..!”
68 வயதிலும் அசத்தும் விவசாயி!
ஜி. பழனிச்சாமி படங்கள்: தி.விஜய்
மாத்தி யோசி
‘மகசூல் எடு... கேட்ட விலைக்குக் கொடு... வந்தது வரவு... சென்றது செலவு’ என்கிற கதையாகத்தான் போய் கொண்டிருக்கிறது, விவசாயிகள் வாழ்க்கை. பெரும்பான்மையான விவசாயிகள் விற்பனை வாய்ப்பு பற்றி யோசிப்பதே இல்லை. இந்த விஷயத்தில் கொஞ்சம் மெனக்கெட்டால் கூடுதல் வருமானம் பார்க்கும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், எல்லப்பாளையம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.பி. சுப்பிரமணியன். 68 வயது இளைஞரான இவர், சுறுசுறுப்பாக 35 ஏக்கரில் விவசாயம் செய்வதோடு, பால் பண்ணையையும் நடத்தி வருகிறார். உற்பத்தி செய்யும் பாலை கேன் மற்றும் பாக்கெட்களில் அடைத்து, நேரடி விற்பனை செய்து வருகிறார்.
கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பல ஏக்கரில் விரிந்து கிடக்கும் வேலி அடைத்த மேய்ச்சல் நிலங்கள், இடையிடையே சில தோட்டங்கள் எனக் காட்சி அளிக்கிறது, எல்லப்பாளையம்புதூர். வளைந்து வளைந்து செல்லும் தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கிறது, சுப்பிரமணியனின் தோட்டம். வேம்பு, கருவேல், பூவரசு என நிழல் பரப்பி நிற்கின்றன, வகைவகையான மரங்கள். அங்கிருந்த கொட்டகையில் தகுந்த இடைவெளியில் எதிரெதிர் வரிசையில் அசைபோட்டு படுத்திருந்தன, பசு மாடு கள். பசுந்தீவன வயல்கள், அவற்றை பொடிப்பொடியாய் நறுக்கும் இயந்திரம், அடுக்கி வைக்கப்பட்ட அடர்தீவன மூட்டைகள், காற்றோட்டமான இடத்தில் போடப்பட்டிருக்கும் சோளத்தட்டைப் போர்கள், நீண்டு கிடக்கும் மண்புழு உர உற்பத்திப் பந்தல்கள் என இருக்க... வேலையாட்கள் அவர்களுக்கான பணிகளில் மும்முரமாக இருந்தனர். சுப்பிரமணியனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், வேலையாட்களுக்கு பணிகளைச் சொல்லி விட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.
விதைச்சவனுக்கு நஷ்டம்... விக்கிறவனுக்கு லாபம்!
‘‘பாட்டன் பூட்டன் காலந்தொட்டு பரம்பரையா இந்த ஊர்லதான் இருக்கோம். விவசாய நெலம், மேய்ச்சல் காடுனு இங்க 35 ஏக்கர் இருக்கு. 50 வருஷத்துக்கு முந்தியே மெட்ராஸ் அனுப்பி, படிக்க வைக்கிற அளவுக்கு செல்வாக்கான குடும்பம். பச்சையப்பன் காலேஜ்ல ஏம்.ஏ. எக்னாமிக்ஸ் படிச்சேன். அப்போலாம், அரசாங்க வேலை ஈஸியா கிடைக்கும்னாலும், வேலைக்கு முயற்சி செய்யாம அப்பாவுக்குத் துணையா விவசாயத்துல இறங்கிட்டேன். அப்போ, இந்தப்பகுதியில புகையிலை வெவசாயம்தான் பிரதானம். அதனால புகையிலை பதப்படுத்துற தொழிலையும் செஞ்சேன். பொருளாதாரம் படிச்சிருந்ததால, அப்பப்போ விவசாயிகளோட வருமானத்தைப் பத்தி யோசிச்சுப் பார்ப்பேன். வெதைச்சவன் நஷ்டப்படுறான். ஆனா, வாங்கி விக்கிறவன் நல்ல லாபம் பார்க்கிறான். மத்த பொருளை உற்பத்தி பண்றவங்களுக்கு இந்த நிலைமை கிடையாது. விவசாயத்துல மட்டும்தான் இந்த முரண்பாடு. இதை மாத்தி விவசாயியே லாபம் எடுக்க என்ன வழினு யோசிச்சுட்டே இருப்பேன்” என்ற சுப்பிரமணியன் சற்று இடைவெளிவிட்டு, தொடர்ந்தார்.
மதிப்புக்கூட்டினா, கூடும் மதிப்பு!
“இந்த நிலையில, விவசாயிகள் கூட்டம் ஒண்ணுல கலந்துக்குறதுக்கு வாய்ப்பு கிடைச்சுது. பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா, ‘விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்கிற பொருள்ல, 30 சதவிகிதத்தையாவது மதிப்புக்கூட்டி விற்பனை செய்யணும். அப்போதான், கட்டுப்படியாகிற விலை கிடைக்கும். பல வெளிநாடுகளுக்குப் போய் பார்த்து வந்தவன்ற முறையில் உங்ககிட்ட இதைச் சொல்றேன்’னு அந்தக் கூட்டத்துல பேசினார். அந்தப் பேச்சுதான் எனக்குள்ள ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துச்சு. அதுக்குப்பிறகு, புகையிலைத் தொழில்ல பல யுக்திகளைக் கொண்டு வந்து இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்னு ஏற்றுமதி பண்ண ஆரம்பிசேன். இந்த நிலையில எனக்கு கல்யாணம் ஆச்சு. மனைவி பேரு ரங்கநாயகி. சட்டம் படிச்சவர். சுதந்திரப் போராட்ட வீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு புகையிலை சம்பந்தமான தொழில் செய்றது பிடிக்கல. அதனால, புகையிலை குடோனை மூடிட்டு, ஆட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, பவர்லூம்னு தொழில் களோட விவசாயத்தையும் பாக்க ஆரம்பிச் சோம்.
ரெண்டு பொண்ணு, ஒரு பையன்னு மொத்தம் மூணு வாரிசுங்க. கல்யாணம் முடிஞ்சு எல்லாரும் வெளியூர்ல இருக்காங்க. ‘இந்த வயசுல ஏம்ப்பா கஷ்டப்படுறீங்க.. சும்மா ஓய்வெடுங்க’னு அன்புக் கட்டளை போடுறாங்க பிள்ளைங்க. ஆனா, ‘யாரு சும்மா இருந்தாலும், தப்பில்லை. ஒரு விவசாயி சும்மா இருக்கக்கூடாது’ங்கிறதுல உறுதியா இருக்கிறவன் நான். அதனாலதான் இந்த 68 வயசிலும் மாட்டுப் பண்ணை வெச்சு பால் சப்ளை பண்ணிட்டு இருக்கேன்’’ என்ற சுப்பிரமணியன், அதைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.
மொத்தம் 35... கறவை 25!
“மொத்தம் 35 கலப்பினப் பசுக்கள் இருக்கு. இதுல 25 உருப்படி கறந்துட்டு இருக்குது. மீதி சினையா இருக்கு. கன்னுக்குட்டி குடிச்சது போக, சராசரியா ஒரு மாட்டுல இருந்து 10 லிட்டர் பால் கிடைக்கும்.
25 மாடுகள் மூலமா தினமும் 250 லிட்டர் பால் கிடைக்குது. ரெண்டு வருஷமா இந்தப் பகுதியில கடுமையான வறட்சி. மேய்ச்சல் நிலம் எல்லாம் காஞ்சு கருகிப்போச்சு. தண்ணீர் பற்றாக்குறையால பசுந்தீவன உற்பத்தியும் சொல்லிக்கிற மாதிரி இல்லை. பசுந்தீவனத்தையும், மக்காச்சோளத் தட்டையும் விலைக்கு வாங்கி் போட்டும் கட்டுபடியாகல. அதனால, பால் உற்பத்தி குறைவாதான் இருக்கு. இந்த வருஷம் பருவமழை பரவாயில்ல. அதனால, தீவனத்துக்குப் பஞ்சம் இருக்காதுனு நினைக்கிறேன். பாலை, திருப்பூருக்கு அனுப்பி, ஆட்கள் மூலமா நேரடியா விநியோகம் பண்றேன். கெட்டியாவும், சுவையாவும் இருக்குறதால, எங்க பண்ணை பாலுக்கு ரெகுலர் வாடிக்கையாளர்கள் இருக்காங்க. சில ஓட்டல்கள்லயும் ரெகுலரா வாங்குறாங்க.
இனிக்கும் இயற்கைப் பால்!
இப்போ இயற்கை அங்காடிகள் பெருகுறதால ‘இயற்கைப் பால்’ உற்பத்தி பண்ணலாம்னு யோசிச்சு... பண்ணையில அஞ்சு மாடுகளை தனியா பிரிச்சோம். அந்த மாடுகளை பகல்ல மரத்தடி நிழல்ல கட்டி தீனி போட்டு, ராத்திரிக்கு மட்டும் தனி தொழுவத்துல அடைக்கிறோம். அந்த மாடுகளுக்கு மட்டும் எங்க தோட்டத்துல இயற்கை முறையில விளைவிச்ச பசுந்தீவனம், மக்காச்சோளத்தட்டை, இயற்கை அரிசி உற்பத்தி செய்ற விவசாயிகள்கிட்ட இருந்து வாங்கின தவிடு, இயற்கையில விளைஞ்ச தேங்காய்் பிண்ணாக்குனு எல்லாமே இயற்கைப் பொருட்களா கொடுக்குறோம். அந்த மாடுகள்ல இருந்து கிடைக்கிற 50 லிட்டர் பாலை ஒரு லிட்டர் அளவுல பாக்கெட்கள்ல அடைச்சு, திருப்பூர்ல பனியன் ஏற்றுமதி நிறுவனம் நடத்துற என்னோட மகன் குகனுக்கு அனுப்பிடுவேன். என், மருமகள் வித்யாவுக்கு இயற்கை விவசாயத்துல ஆர்வம் அதிகம். அவங்கதான் இந்த 50 லிட்டர் இயற்கைப் பாலை விற்பனை செய்றாங்க. வாங்கி பயன்படுத்தறவங்க எல்லாரும் ரொம்ப நல்லா இருக்குனு சொல்றாங்க. இதுல முக்கியமான விஷயம்... இயற்கை பால்ங்கிறதுக்காக அதிக விலைக்கு விற்பனை செய்றதில்லை. நமக்கு விலை முக்கியமில்லை. விழிப்பு உணர்வு பெருகணுங்கிறதுதான் முக்கியம். அதனால, வழக்கமான பால் விலைக்குதான் கொடுக்குறோம்.
லாபம் குறைவு... மனம் நிறைவு!
நாளுக்கு நாள் பசுமாடு வளப்புக்கான உற்பத்திச் செலவு கூடிட்டே போகுது. இன்னிக்கு நிலைமைக்கு ஒரு நாளைக்கு ஒரு பசுவுக்கு சராசரியா 205 ரூபாய் செலவாகுது. டெலிவரி செலவு, லிட்டருக்கு 3 ரூபாய். லிட்டர் 30 ரூபாய்னு விற்பனை செய்றோம். ஆக, 10 லிட்டர் கறக்கிற ஒரு மாட்டுல இருந்து ஒரு நாள் லாபம் 65 ரூபாய் கிடைக்குது. 25 மாடுகள் மூலம் ஒரு நாளைக்கு எங்களுக்கு கிடைக்கிற வருமானம் 1,625 ரூபாய்தான். இதுல ஆரம்பகட்ட செலவுகள் தனி. பண்ணை ஆரம்பிச்சு எட்டு வருஷம் ஆனதால, அதையெல்லாம் இப்போ கணக்குல கொண்டு வரல. அந்தச் செலவுகளை ஒன்றரை வருஷத்துலேயே எடுத்துட்டேன். பொருளாதாரம் படிச்ச எனக்கும், சட்டம் படிச்ச என் மனைவிக்கும் ஏற்ற வருமானம் இல்லைனாலும், பணநிறைவை விட மனநிறைவோட, சொந்த மண்ல இருக்குற மகிழ்ச்சிக்கு எதுவும் ஈடில்லை.
அதேசமயம், பால் பண்ணை வெச்சா லாபம் கிடைக்காதுனு நினைச்சுடாதீங்க. பால் பண்ணையை மட்டும் வெச்சு, தேமேனு இருந்தா குறைவான லாபம்தான் வரும். பால் பண்ணை தொடர்பான உபதொழில்களையும் செய்யணும். இதைத்தான் நான் செய்துட்டிருக் கேன். குறிப்பா மண்புழு உரம் தயாரிக்க ஆரம்பிச்சேன். 15 ஆயிரம் சதுர அடியில பெட் அமைச்சு நிழல்வலை போட்டு, சாணம் மூலமா... சுழற்சி முறையில, ஒரு நாளுக்கு ஒரு டன் மண்புழு உரம் உற்பத்தி செய்றோம். இது செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரங்கிறதால, கிலோ 7 ரூபாய்னு விற்பனை செய்றேன். இதன் மூலமா ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் கிடைக்குது. இதுல 3 ஆயிரத்து 500 ரூபாய் உற்பத்திச் செலவு போக தினசரி லாபம் 3 ஆயிரத்து 500 ரூபாய்” என்ற சுப்பிரமணியன், நிறைவாக, பால் மட்டும் போதாது!
‘‘ஆக, வெறுமனே பால் மட்டும் உற்பத்திப் பண்ணினா, நிரந்தர வருமானமும் கிடைக்காது... லாபமும் இருக்காது. பால், சாணம், மூத்திரம் எல்லாத்தையும் பயன்படுத்தி பலவகையான பொருட்களை தயாரிச்சு விற்பனை செய்தால்தான் லாபம் பார்க்க முடியும். நாங்க பாலை மட்டும் வித்தப்போ, மாசம் 45 ஆயிரம் ரூபாய்தான் லாபம் பார்த்தோம். ஆனா, மண்புழு உரம் தயார் செஞ்சு விற்பனை செய்ய ஆரம்பிச்ச பிறகு, மாசம் ஒன்றரை லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைக்குது. அதனால, உப தொழில்களையும் சேர்த்து செஞ்சா நிச்சயம் லாபம் கிடைக்கும்’’ என்று சொல்லி விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
கே.பி. சுப்பிரமணியன்,
செல்போன்: 99944-49696.

செழிப்பு தரும் செரிவூட்டப்பட்ட மண்புழு உரம்!
தற்போது விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது, செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம். இதன் தயாரிப்புத் தொழில்நுட்பத்தை சுப்பிரமணியனுக்குச் சொல்லித் தந்தவர், பேராசிரியர் விவேகானந்தன். அவரிடம் இதுபற்றி கேட்டபோது, “செரிவூட்டம் செய்யப்பட்ட மண்புழு உரம் என்பது, பல நுண்ணுயிரிக் கரைசல்களை சாணத்துடன் கலந்து, செரிவூட்டி மண்புழு உரமாக மாற்றுவது. ஒரு டன் சாணத்தை மண்புழு ‘பெட்’டில் பரப்பி, அதன் மீது... தலா 200 மில்லி அசோஸ்பைரில்லம், அசிட்டோஃபேக்டர், சூடோமோனோபாஸ், பாஸ்போ - பாக்டீரியா மற்றும் பேசிலஸ் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.
இதனால், பெட்டில் பல மடங்கு நுண்ணுயிரிகள் பெருகுவதால்... மண்புழுக்களில் இருந்து நுண்ணுயிரிகளுக்கும், நுண்ணுயிரிகளில் இருந்து, மண்புழுக்களுக்கும் ஊட்டம் மாறி மாறிச் செல்லும். இதனால் கிடைக்கும் மண்புழு உரம், நுண்ணுயிரிகளின் செரிவூட்டப்பட்ட கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பயன்படுத்தும்போது ஆரோக்கியமான விளைச்சல் கிடைக்கிறது’’ என்றார்.

Monday, November 17, 2014

சிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும் இதை செய்யலாம்

நாளொன்றுக்கு 40 லிட்டர் வரையிலும் பால் கொடுப்பதால் ஜெர்ஸி, சிந்து, எச்.எஃப். போன்ற கலப்பினப் பசுக்களை வாரி அணைத்துக் கொண்டவர்கள், 4 லிட்டர் மட்டுமே பால் தரும் நாட்டு மாடுகளை நிர்க்கதியாக்கி விட்டனர். நாட்டு மாடுகளிலிருந்து பால் உற்பத்தி பெரிதளவில் இல்லையெனினும், இம்மாடுகளின் மூலம் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களை இயற்கை முறையில் தயாரித்து லாபம் ஈட்டி வருகிறார் திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள மேட்டுக்கடையைச் சேர்ந்த ஈஸ்வரி.

நாட்டு மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பிரதானமாகக் கொண்டு அர்க், ஷாம்பு, ஹேர் ஆயில், சோப்பு, சாம்பிராணி, ஃபேஷியல் பவுடர், பல்பொடி, டிஸ்வாஷ் பவுடர், விபூதி, வலி நிவாரணி என ஈஸ்வரி தயாரிக்கும் சிறுதொழில் பொருட்களுக்கு நல்ல விலை கொடுத்து வாங்கிச் செல்ல வாடிக்கையாளர் பலர் இருக்கின்றனர். “விவசாயம்தான் எங்களுக்கு முக்கியத்தொழில், இந்தப் பொருட்களையெல்லாம் ஆரம்பத்துல எங்க பயன்பாட்டுக்குத்தான் தயாரிச்சேன். எந்த கெமிக்கலும் இல்லாம இயற்கை முறையில தயாரிக்கிறதால, நிறைய பேர் எங்களுக்கும் வேணும்னு கேட்க ஆரம்பிச்சாங்க, அப்புறம்தான் தொழிலை விரிவுபடுத்தினேன்” என்று 
தொடங்குகிறார் ஈஸ்வரி. 

“11 ஏக்கர் நிலத்துல குமுளு, காயா, வேம்பு, மலை வேம்பு, ஈட்டி, தீ மரம், வாகை, சப்போட்டா, நெல்லி மரங்களை நட்டிருக்கோம். விவசாயத்துக்காக 11 நாட்டு மாடுகளை வளர்த்துட்டு வர்றோம். நானும் என் கணவர் முத்துச்சாமியும்தான்  இதையெல்லாம் கவனிச்சுக்குறோம். உப்பு உரம் பயன்படுத்துறதில்லை, ஜீவாமிர்தம் தயாரிச்சு ஊத்தி இயற்கை விவசாயம்தான் பண்ணிக்கிட்டிருக்கோம். ஒரு முறை இங்கே வந்த நம்மாழ்வார் அய்யா, எங்க விவசாய முறையை பார்த்துட்டு பாராட்டினார். சேலம் பக்கத்துல நாகமலைல சுனில் மான்சிங்னு நாக்பூரை சேர்ந்த வேளாண் அறிஞரோட பயிற்சி முகாம்ல கலந்துகிட்டப்பதான் இந்தத் தயாரிப்பு முறைகளை கத்துக்கிட்டேன். எனக்கு ரொம்ப நாளா மூட்டுவலி இருந்துச்சு, நானே ‘அர்க்’ தயாரிச்சு குடிச்ச பிறகு நல்லாயிடுச்சு. 

அதுக்கப்புறம்தான் இதோட மகத்துவம் எனக்கு புரிய ஆரம்பிச்சுது” என்றவர் இப்பொருட்களின் செய்முறைகள் மற்றும் பயன்பாடுகள் குறித்தும் பேசுகிறார். “காலையில மூன்றரை மணிக்கு கோமியம் பிடிச்சு, பானையில ஊத்தி காய்ச்சினோம்னா, அது கொதிச்சு ஆவியா மேலெழும்பும். அந்த ஆவி குளிர்ந்து நீரா மாறுவதுதான் அர்க். இதைக் குடிச்சா சளியிலிருந்து பல நோய்கள் குணமாகுது.  சீவக்காய், ஊச்சக்கொட்டையை ஊறவெச்சு அரைச்சு அதை கோமியத்துல கலந்து காய்ச்சினா ஷாம்பு தயாராகிடும். இதைப் பயன்படுத்தினா இளநரை, முடி உதிர்வு, பொடுகு இருக்காது. நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயோட நாட்டு மாட்டுப்பால், வேம்பாலம்பட்டை, கார்போகரிசல், செடாமனஸ் சேர்த்து 4 மணி நேரம் காய்ச்சி ஹேர் ஆயில் தயாரிக்கிறேன். 

இது முடியை நல்லா கருப்பாக்கிடும். பஞ்சகாவ்யா சோப் பயன்படுத்தினா தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். முல்தானிமெட்டி, சாணப்பவுடர், நல்லெண்ணெய், வேப்பிலையை காய்ச்சி அச்சில் ஊத்தி  காய வெச்சு பஞ்சகாவ்யா சோப் தயாரிக்கிறேன். சாணப்பவுடர், குங்கிலியம், கம்ப்யூட்டர் சாம்பிராணி, நெய், பச்சரிசி மாவை அச்சில் ஊத்தி எடுத்து காய வெச்சு சாம்பிராணி தயாரிக்கிறேன். கொசுவர்த்திகளால் அதன் புகையை சுவாசிக்கும் நமக்கு நிறைய பாதிப்புகள் ஏற்படுது. அதுக்காக மூலிகை கொசு விரட்டி தயாரிக்கிறேன். சாணப் பவுடர், நொச்சி இலை, வேப்பிலை, துளசியை பொடிப்பண்ணி காய்ச்சி அச்சில் ஊத்தி எடுக்கணும். 

மாசு, மருக்கள் போய் முகம் பளபளப்பாகுறதுக்காக ஃபேஷியல் பண்றாங்க. முல்தானிமெட்டி, கோரக்கிழங்கு, பூலாங்கிழங்கு, வசம்பு, பூங்காதியை அரைச்சா ஃபேஷியல் பவுடர் தயாராகிடும். இதைப் பன்னீர் அல்லது பாலில் கலந்து முகத்தில் பூசிக்கலாம். பல்பொடிக்கு மாட்டுச் சாணத்தை எரிச்சு, தைமால், கற்பூரம் கலந்து ஒரு வாரம் உலர வைச்சு பேக் பண்ணிடறேன். இதைப் பயன்படுத்தும்போது பல் சொத்தை, நாற்றம் எதுவும் இருக்காது. பாத்திரம் துலக்க முன்னால ஓடை மண், சாம்பலைப் பயன்படுத்துனாங்க. இப்ப ரசாயனம் கலந்த டிஸ்வாஷ் பவுடர்! இதுக்கு மாற்றா வரட்டியை எரிச்சு சாம்பல் பண்ணி, அதுக்குள்ள இலுப்பைத்தூள், ஆரஞ்சுத் தோலைப் போட்டு அரைச்சு டிஸ்வாஷ் தயாரிக்கிறேன்.

மூட்டுவலி, தசைப்பிடிப்பு வலிகளுக்கு நிவாரணியா மாலிஷ் ஆயில் தயார் பண்றேன். நல்லெண்ணெய், சாணிப்பால், கோமியத்தை காய்ச்சி எடுக்குற எண்ணெயில் தைமால், கற்பூரத்தை கலந்தா அதுதான் மூலிகை மாலிஷ் ஆயில்” என்கிறவர், விற்பனை குறித்துப் பேசுகிறார்...

“அர்க் ஒரு லிட்டர் 205 ரூபாய், ஷாம்பு 110 மில்லி 85 ரூபாய், 60 கிராம் சோப் 30 ரூபாய், 18 சாம்பிராணி, கொசுவர்த்தி துண்டுகள் 25 ரூபாய், 60 கிராம் ஃபேஷியல் பவுடர் 50 ரூபாய், 60 கிராம் பல்பொடி 40 ரூபாய், டிஸ்வாஷ் பவுடர் கிலோ 40 ரூபாய், 100 மில்லி மாலிஷ் ஆயில் 120 ரூபாய்க்கு விற்பனை செய்றேன். வெள்ளக்கோவில், பொள்ளாச்சி, காரைக்கால், பெருந்துறை, ஈரோடுல இயற்கை அங்காடிகளுக்கு விற்பனைக்கு அனுப்புறேன்.  முத்தூர் சுத்துவட்டாரத்துல பல ஊர்கள்ல இருந்து எங்க தோட்டத்துக்கே வந்து வாங்கிட்டுப் போறாங்க. 

நான் விவசாய வேலைகளைக் கவனிக்கிறதோட, இந்தத் தயாரிப்பிலும் ஈடுபடுறதால கூடுதல் வருவாய் கிடைக்குது. ரசாயனங்களே இல்லாம எல்லாப் பொருட்களையும் இயற்கை வழியிலேயே தயாரிக்க முடியும். இயற்கை முறையிலான தயாரிப்புப் பொருட்களை தேடி வர்றவங்க இப்ப அதிகரிச்சுட்டு வர்றாங்க. சிறுதொழில் செய்யணும்னு நினைக்குற யார் வேணும்னாலும் இதை செய்யலாம். வருவாய் கிடைக்குதுங்கிறது மட்டுமில்லாம, எந்தக் கேடும் இல்லாத பொருட்களை மத்தவங்களுக்குக் கொடுக்கிறோம்கிற மனநிறைவும் இருக்கு” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் ஈஸ்வரி!(9965929098)

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites