இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label செல்ல பிராணி வளர்ப்பு. Show all posts
Showing posts with label செல்ல பிராணி வளர்ப்பு. Show all posts

Thursday, July 13, 2023

வளமான வருமானம் தருமே பெட்ஸ் சொந்தங்கள்!

 வளர்ப்புப் பிராணிகளைக் காலங்காலமாகவே நம் முன்னோர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். அந்த வழக்கம் தற்போதுவரை தொடர்ந்தாலும், சில வளர்ப்புப் பிராணிகளைப் பெருமிதத் துக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் வளர்ப்போரும் அதிகரித்துவிட்டனர்.



பச்சைக்கிளி, குருவி, குரங்குகள் உட்பட இந்திய வனப்பகுதியில் வளரும் விலங்குகள், பறவைகள், பிராணிகள் எதையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. ஆனால், நாய், பூனை, வெளிநாட்டுப் பறவைகள், பிராணிகள் உட்பட இந்தியாவில் வளர்க்க அனுமதியுள்ள வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வரு மானமும் ஈட்டலாம். பல நிறங்களில் ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் உள்ளன. அவை ஜோடி 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று முறை இனப் பெருக்கம் செய்யும். பெண் பறவை ஒவ்வொரு முறையும் நான்கு முட்டைகள் வரை இடும். மூன்று மாத பருவத்திலுள்ள பறவைக்குஞ்சு ஒன்றை 1,000 ரூபாய்க்கு விற்கலாம். இப்படிப் பல்வேறு வளர்ப்புப் பிராணிகள் மூலம் வருமானம் ஈட்டலாம்.

வீட்டில் வளர்க்க சிறந்த பெட்ஸ் எவை?

கண்ணாடி பாட்டிலிலேயே வண்ண மீன்களை வளர்த்து நிலையான வருமானம் ஈட்டுவோரும் உண்டு. அதிக இடவசதி உடையவர்கள் நாட்டு நாய்கள் உட்பட டாபர்மேன், பொமரேனியன் வகை நாய்களையும் வளர்க்கலாம். தவிர, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், காக்டெய்ல், பூனை, வெள்ளெலி, சுகர் க்ளைடர் (Sugar Glider), கினி எலி (Guinea Pig), அழகுக்கான கோழி வகைகள், அலங்கார புறாக்கள்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!
JordiStock

லைசென்ஸ் அவசியம்!

பொழுதுபோக்குக்காக ஒருசில பெட்ஸ் வளர்ப்போர் லைசென்ஸ் வாங்கத் தேவையில்லை. ஆனால், விற்பனை வாய்ப்புகளுக்காக வளர்த்தால், விலங்குகள் நல வாரியத்தில் நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ லைசென்ஸ் வாங்க வேண்டும். தவிர, தாங்கள் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிலும் பதிவு செய்ய வேண்டும்.

குழந்தைபோல கவனிப்பு!

எந்தத் தேவைக்கு வளர்த்தாலும், வளர்ப்புப் பிராணிகளைக் குழந்தைகள்போல பராமரிக்க வேண்டும். வீட்டில் உலாவும்படியே நாய்கள், பூனைகளை வளர்க்கலாம். பறவை வகையைக் கூண்டில் வைத்து வளர்ப்பது சிறந்தது. அந்தக் கூண்டு போதிய இடவசதி, காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும். அவை வளரும் அறை நன்றாக சூரிய வெளிச்சம் பரவக்கூடிய வகையில் இருந்தால் நல்லது.

முதலீடு: 2,000 ரூபாய்க்குள் விருப்பப்பட்ட ஒருசில வகை பெட்ஸ் வாங்கி ஓராண்டு வளர்த்து அனுபவங்கள் கற்க வேண்டும். பிறகு, 20,000 ரூபாய் முதலீட்டில் தொழிலை விரிவுபடுத்தலாம்.

வளர்ப்புக்குத் தேவையானவை: கூண்டு, சாப்பாடு வைக்கும் கிண்ணம், பிரத்யேக உணவுகள், மருந்துப் பொருள்கள்.

வீட்டிலிருந்தே செய்யக்கூடிய எட்டு தொழில்கள்! - குறைவான முதலீடு... நிறைவான வருமானம்!
101cats

பயிற்சி: பெட்ஸ் வளர்ப்போர், பெட்ஸ் வளர்ப்பு அசோஸி யேஷன்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளால் பயன்பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: நாம் பெட்ஸ் வளர்ப்பது தெரிந்தால், பலரும் நம்மைத் தேடிவருவார்கள். சமூக வலைதளங்களில் நாமும் விற்பனை விஷயங்களைப் பதிவிடலாம். அருகில் உள்ள பெட் ஷாப்புகளிலும் சிரமமின்றி விற்பனை செய்யலாம்.

நோட் பண்ணுங்க!

பெட்ஸ் வளர்க்கும் அறை மட்டுமல்லாமல், நம் வீடும் தூய்மையாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு முறை தண்ணீர் மாற்ற வேண்டும். உணவு, தண்ணீர் வைக்க தினமும் ஒரே பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வளர்ப்புப் பிராணியின் குணநலன்கள் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் எல்லா உடல்நல பாதிப்புகளும் வரும். அந்தச் சூழல்களில் செய்ய வேண்டிய மருத்துவத் தேவைகளை முறையாகச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கால்நடை மருத்துவரைக் கொண்டும் சிகிச்சையளிக்க வேண்டும். பருவநிலை மாறும்போது பெட்ஸ் பராமரிப்பில் கூடுதல் கவனம் அவசியம்.

* செல்லப்பிராணிகள் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள் பெற, சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு: 044 - 25551586

Saturday, March 7, 2015

செல்லப் பிராணிகள்



சென்னை, கே.கே.நகரில் உள்ள பாக்யலட்சுமியின் வீட்டுக்குள் நுழைந்தால் முதலில் நம்மை வரவேற்பவர்கள் அவர் வீட்டுச் செல்லப் பிராணிகள். குட்டியும், பெரிசுமாக வீடு கொள்ளாத செல்ல நாய்களின் கூட்டம்... நாய்க்குட்டிகளை வளர்த்து விற்பனை செய்கிற வேலையை அத்தனை அன்பாகச் செய்கிறார் பாக்யலட்சுமி!

‘‘என் பொண்ணுக்கு பக் இன நாய்க்குட்டி ஒண்ணு கிஃப்ட்டா வந்தது. அதை ஆசையா வளர்த்திட்டிருந்தோம். அதை வளர்க்கிற அனுபவம் ரொம்ப நல்லா இருந்தது. எங்க வீட்ல ஒரு நபரா நேசிச்சோம். நாய்கள் மேல எங்க பிரியம் அதிகமானதால, செயின்ட் பெர்னார்டு இன நாய்க்குட்டி ஒண்ணு வாங்கினோம். முதல்ல வாங்கின பக் நாய் 6 குட்டிகள் போட்டது. தெரிஞ்சவங்க எல்லாரும் எங்களுக்கு ஒரு குட்டி கொடுங்கனு கேட்க ஆரம்பிச்சாங்க.  உடனடியா 3 குட்டிகள் வித்துப் போச்சு. நாய்க்குட்டிகளை வளர்க்கறதுங்கிறது ரொம்ப சுவாரஸ்யமான ஒரு அனுபவம். 

மனுஷங்களைப் போலவே பார்த்துக்கணும். பெண் குட்டியா இருந்தா அதுக்கும் மாதவிடாய் வரும். ரெண்டாவது முறை மாதவிடாய் வந்ததும் அதை இனப்பெருக்கத்துக்கு விடணும். இனப்பெருக்கத்துக்கு விடப்படற ஆண் நாயோட சொந்தக்காரங்களுக்கு ஒரு குட்டியோ அல்லது அதுக்கான பணத்தையோ கொடுத்துடணும். நாயோட கர்ப்ப காலம் 2 மாசம். குட்டிகள் போட்டதும் 50 நாட்கள் கழிச்சுதான் விற்கணும். ஒவ்வொரு இன நாய்களுக்கும் என்ன சாப்பாடு கொடுக்கணும், எப்படிப் பார்த்துக்கணும்கிற தகவல்களை அவசியம் தெரிஞ்சு வச்சிருக்கணும். 

நாய் குட்டி போட்டதும், அதுங்களோட பிறந்த தேதி, அம்மா பேர் எல்லாம் குறிச்சு வைக்கணும். விற்கற போது அந்தத் தகவல்களைப் பார்த்துதான் வாங்குவாங்க. செல்லப் பிராணிகள் மேல அன்பு இருக்கிறவங்களுக்கு இந்த பிசினஸ் சூப்பரா ஒர்க் அவுட் ஆகும்’’ என்கிற பாக்யலட்சுமி, 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் இந்தத் தொழிலைத் தொடங்க நம்பிக்கை அளிக்கிறார். ‘‘நாய்க்குட்டி வாங்கற செலவு, அதுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவச் செலவுனு எல்லாம் இதுல அடக்கம். யாருக்கு என்ன மாதிரித் தேவைனு பார்த்து அதுக்கேத்த இனமா வளர்க்கலாம். 

சிலர் ஆசைக்காக வளர்க்க விரும்புவாங்க. அவங்களுக்கு பக், பொமரேனியன் மாதிரி அமைதியான நாய்க்குட்டிகள் பிடிக்கும்.  ராட்வீலர், லெசப்சோ, செயின்ட் பெர்னார்டுனு நிறைய இனங்கள் இருக்கு. எந்த இனமா இருந்தாலும் 50 சதவிகித லாபம் பார்க்கலாம்’’ என்கிற பாக்யலட்சுமியிடம் நாய் வளர்ப்பு, அவற்றுக்கான உணவுகள், பராமரிப்பு, இனப்பெருக்கம், விற்பனை என எல்லாவற்றுக்கும் ஒரு நாள் பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். கட்டணம் 300 ரூபாய். (98408 44181)

Saturday, November 8, 2014

ஆண்டுக்கு ரூ. 2,00,000 ஜோரான வருமானம் தரும் ஜோடிப்புறா!


'வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும் வெண்புறாவே’, 'பக்பக்பக் மாடப்புறா...’ இப்படியாக அன்று தொட்டு இன்றுவரை புறாவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. மணிப்புறா, மாடப்புறா, கோயில் புறா என்று அவற்றில் பல ரகங்கள் உண்டு. பெரும்பாலும், புறாக்களை அழகுக்காகத்தான் வீட்டில் வளர்க்கிறார்கள். ஆனால், ''அழகுக்காக மட்டுமில்லை... ஆதாயத்துக்காகவும் புறா வளர்க்கலாம்'' என்கிறார், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் புத்தரிச்சல் கிராமத்தைச் சேர்ந்த இளம் விவசாயி ஆர்.கே. மைதீஷ்குமார்.
பணம் கொட்டும் பரம்பரைத் தொழில்!
'பக்...பக்...பக்...' என்று மைதீஷ்குமார் குரல்கொடுக்க, கூண்டுக்குள் இருந்து வெளிப்பட்ட புறாக்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, அவர் வீசிய தீனியைக் கொத்திக்கொண்டிருந்த காட்சி ரம்யமாக இருந்தது.
''எங்களுக்கு இங்க 20 ஏக்கர் நிலம் இருக்கு. பண்ணை வீட்டுலதான் குடியிருக்கோம். 10 ஏக்கர்ல தென்னையும், மூணு ஏக்கர்ல நெல்லியும் போட்டிருக்கோம். மீதமுள்ள நிலத்துல வெங்காயம், மிளகாய், கத்திரி, கொத்தமல்லினு தண்ணீர் வசதிக்குத் தகுந்தாப்பல மாத்தி மாத்தி வெள்ளாமை வெச்சுடுவோம். எல்லாமே கிணத்துப்பாசனம்தான்.
நான் படிச்சு முடிச்சதும், திருப்பூர்ல ஒரு பனியன் கம்பெனியில வேலை பார்த்தேன். எங்க தோட்டத்துல 10 ஜோடிப் புறாக்களை மரக்கூண்டு வெச்சு அப்பா வளர்த்துட்டு இருந்தார். சின்னவயசுல இருந்தே அதைப் பார்த்து பழகினதால, எனக்கும் புறா வளர்ப்புல ஈடுபாடு வந்துடுச்சு. எங்க தோட்டத்துல புறா இருக்கிற விஷயம் தெரிஞ்சு, நிறையபேரு அதை வாங்கிட்டுப் போவாங்க. அதுக்கு ஒரு மார்க்கெட் இருக்கிறது தெரிஞ்சதும், 'இதையே பண்ணையா மாத்தினா என்ன?’னு யோசிச்சேன். வீட்ல சொன்னதும், பரம்பரையா வீட்ல வளர்ந்துட்டு வந்த 10 ஜோடிப்புறாக்களை என்கிட்ட கொடுத்திட்டாங்க. படிப்படியா பெருக்கி, இப்ப 250 ஜோடிகள் கையில இருக்கு. வெள்ளை, சாம்பல், நீலம், அடர் ஊதானு பல நிறங்கள்ல புறாக்கள் இருக்கு. இந்த 250 ஜோடிகளை தாய்ப்பறவைகளா வெச்சு, கிடைக்கிற குஞ்சுகளை விற்பனை செய்றேன்' என்ற மைதீஷ்குமார், நிழல்வலைத் திடலின் கதவைத் திறந்துவிட ஒன்றன்பின் ஒன்றாக வானில் சிறகடிக்கத் தொடங்கின, புறாக்கள். அவை கண்ணை விட்டு மறையும் வரை, அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தவர் மீண்டும் பேச ஆரம்பித்தார்.
கூண்டுக்குள் வளர்க்க முடியாது!
'இதெல்லாம், நாட்டுப்புறா வகையைச் சேர்ந்தவை. அதனால, கூண்டுல அடைச்சு வளர்க்க முடியாது. சுதந்திரமா பறந்து ரொம்ப தூரம் போய், மேஞ்சுட்டு வர்றதுதான் இதுகளுக்குப் பிடிக்கும். அதன் இயல்பும் அதுதான். நாம அதை மாத்த முயற்சி பண்ணக்கூடாது.
புறாக்கள் தங்குறதுக்காக, 60 அடி நீளம், 10 அடி அகலம் 20 அடி உயரத்துல ஓட்டு வீடு அமைச்சிருக்கேன். உள்ளே இருக்கிற இரண்டு சுவர்கள்லயும், ஹாலோ பிரிக்ஸ் மூலமா இரண்டு புறாக்கள் தங்குவதற்கு, ஏத்த மாதிரி 1,100 சின்னச்சின்ன அறைகளை அமைச்சு... அதுக்குள்ள மெது மணலைக் கொட்டி வெச்சிருக்கேன். எங்கிட்ட, இப்ப இருக்கிற புறாக்களுக்கு 250 அறைகள் மட்டுமே போதுமானதா இருந்தாலும், எதிர்காலத்தை மனசுல வெச்சு, அறைகளை அதிகப்படுத்தியிருக்கேன்.
புறாக்களோட வீட்டு மேல, ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள சின்டெக்ஸ் டேங்க் வெச்சு, 24 மணி நேரமும் புறாக்களுக்கு தண்ணி கிடைக்கிற மாதிரி, ஏற்பாடு பண்ணிருக்கேன். வளரும் குஞ்சுகள் மட்டும்தான் எப்பவும் அறைக்குள்ள இருக்கும். பெரிய புறாக்கள் பகல் நேரத்துல வெளியில போயிடும். புறாவுக்கான கூண்டு வீட்டைச் சுத்தி நிழல் வலை கட்டி வெச்சிருக்கேன்.
பராமரிப்புக் குறைவு!
புறாக்களுக்கு தினமும் ஒருவேளை மட்டும் கொஞ்சமா தீனி போட்டா போதுமானது. காலை 6 மணிக்குத் திறந்துவிட்டா, 25 கிலோ மீட்டர் சுற்றளவுக்குப் பறந்து திரிஞ்சு இரை எடுக்கும். சிலசமயங்கள்ல 40 கிலோ மீட்டர் வரைக்கும்கூட போகும். காலை பத்து மணிக்கு எல்லா புறாவும் வீட்டுக்குத் திரும்பிடும். நாட்டு ரக ஜோடிப்புறாக்கள் சுத்த சைவம். நிலத்திலுள்ள புல், பூண்டு, சிறுதானியங்கள், களிமண் உருண்டைகளை உணவா எடுத்துக்கும். ஈரக்களிமண்ணை அலகாலேயே சின்ன உருண்டைகளாக உருட்டி சாப்பிட்டுக்கும். இரை எடுத்துட்டு வந்ததும், எல்லா புறாக்களும் தொட்டிகள்ல உள்ள தண்ணியைக் குடிக்கும். கலங்கி அழுக்கா இருக்குற தண்ணியை, பெரும்பாலும் இதுங்க குடிக்கிறதில்லை. அதனால சுத்தமான தண்ணி அவசியம். ஒரு நாளைக்கு நாலு தடவையாவது புறாக்கள் தண்ணீர் குடிக்கும். திரும்பவும், சாயங்காலம் 3 மணிக்கு புறா வீட்டைத் திறந்து சுத்தி அடைச்சிருக்குற நிழல் வலைக்குள்ள விட்டு தானியங்களைத் தூவுனா சாப்பிட்டு, தண்ணி குடிச்சுட்டு இருட்டுற நேரத்துல, அறைகளுக்குள்ள அடைஞ்சிடும். 250 ஜோடிகளுக்கு ஒரு நாளைக்கு 15 கிலோ தானியமும், 10 லிட்டர் தண்ணியும் தேவைப்படுது'' என்ற மைதீஷ்குமார், விற்பனை வாய்ப்புப் பற்றி சொன்னார்.
விற்பனையில் பிரச்னையில்லை!
''தாய்ப்புறா 8 வருஷம் வரைக்கும் முட்டை வைக்கும். அதுக்குப் பிறகு, தாய்ப்புறாவை மாத்திடணும். அப்பதான் முட்டை உற்பத்தி குறையாம இருக்கும். ஒரு ஜோடிப்புறா மூலமா, வருஷத்துக்கு 14 முட்டைகள் கிடைக்கும். இதுல சேதாரம் போக, சராசரியா
10 முட்டைகள் தேறும். பொறிக்கற குஞ்சுகள் பறக்க ஆரம்பிக்கிற நிலை வரைக்கும், வளத்து வித்துடணும். நம்மகிட்ட பழகிட்டா... எவ்வளவு தூரம் கொண்டு போய் விட்டாலும், திரும்ப நம்மகிட்டயே வந்துடும். அதனால, பறக்குறதுக்கு முன்னயே கண்டிப்பா வித்துடணும்.
கோயம்புத்தூர், பெங்களூரு, கேரளாவுல இருந்து வியாபாரிகள் தேடிவந்து புறாக்குஞ்சுகளை வாங்கிட்டுப் போறாங்க. புறா இறைச்சியை நிறைய நோய்களுக்கு மருந்தா சாப்பிடுற பழக்கம் இருக்கிறதால, எப்பவும் நல்ல கிராக்கி இருக்கு.
இப்போதைக்கு ஒரு ஜோடி, 250 ரூபாய்ல இருந்து 300 ரூபாய் வரை விற்பனையாகுது. 250 ஜோடி தாய்ப்புறாக்கள்ல இருந்து வருஷத்துக்கு சராசரியா 1,200 ஜோடி குஞ்சுகள் கிடைக்குது. விற்பனை செய்றது மூலமா வருஷத்துக்கு 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது. தீவனம், வேலையாள் செலவு எல்லாம் போக வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது.  
 2 லட்சம் நிச்சயம்!  10 லட்சம் லட்சியம்!
இடவசதி இல்லாதவங்க புறக்கடையிலகூட புறாவை வளக்கலாம். அதிக முதலீடு தேவையில்ல. நாம வளக்கப்போற புறாக்களோட எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி கூண்டு அமைக்கறது மட்டும்தான் செலவு. பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செய்யறதுக்கு ஏற்ற தொழில் இது. இப்போதைக்கு
2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்குது. படிப்படியா ஆயிரம் ஜோடி தாய்ப்புறாக்களை உருவாக்கி, வருஷத்துக்கு 10  லட்ச ரூபாய் லாபம் எடுக்கணும்கிறதுதான் என் லட்சியம்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.
தொடர்புக்கு,
ஆர்.கே. மைதீஷ்குமார்,
செல்போன்: 98431-80009

நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டு நாய் வளர்ப்பு!

சிப்பிப்பாறை... கன்னி... கேரவன்...

செல்லப்பிராணி என்றாலே 'சட்’டென நினைவுக்கு வருவது, நாய்தான். ரகம் ரகமாக வெளிநாட்டு நாய்கள் அழகுக்காக வளர்க்கப்பட்டாலும், எப்போதுமே நம்நாட்டு ரக  நாய்களுக்கு தனி மவுசு உண்டு. காரணம், அவற்றை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதோடு, கொஞ்சம் பழக்கினால், வேட்டை, காவல் போன்ற பணிகளிலும் ஈடுபடுத்த முடியும். குறிப்பாக, தமிழ்நாட்டில், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கோம்பை,   கன்னி போன்ற நாட்டு ரக நாய்களுக்கு எப்போதுமே கிராக்கி உண்டு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டு ரக நாய்களை வளர்த்து லாபம் ஈட்டி வருகிறார், ஜான் ஆர்தர்.
திருநெல்வேலி-தென்காசி சாலையில் உள்ள மாறாந்தை எனும் ஊரில் 'டேவிட் ஃபார்ம்’ என்ற பெயரில் நாட்டு நாய்கள் பண்ணையை வைத்திருக்கிறார் ஜான் ஆர்தர். இந்தப் பண்ணையில் மேலாளராக இருப்பவர் அந்தோணி ஷெட்டி. ஒரு மாலைவேளையில், பண்ணையில் நாய்களோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த  அந்தோணி ஷெட்டியைச் சந்தித்தோம். ''நாட்டு நாய்கள், நம்ம மண்ணோட சொத்து. அதை அழிஞ்சி போகாம பாதுகாக்கத்தான், இந்த பண்ணையை ஜான் ஆர்தர் தொடங்கினாரு. அவர், நினைச்சது போலவே, பண்ணைய சிறப்பா நடத்திக்கிட்டு வர்றோம்...'' என்று அறிமுகம் சொன்ன அந்தோணி ஷெட்டி விரிவாகப் பேசத் தொடங்கினார்.
''சின்னவயசுலயே எனக்குப் பிராணிகள் வளர்ப்புல ஆர்வம் அதிகம். மிட்டாய் வாங்க கொடுக்குற காசை சேர்த்து வெச்சு, கோழிக்குஞ்சு வாங்கிட்டு வந்துடுவேன். குறிப்பா, நாய்கள் மேல ரொம்ப பிரியம். நாட்டு நாய்ல இருந்து, பல ரக நாய்களையும் வாங்கி வளர்த்திருக்கேன். கோவாவுல தனியார் கப்பல் கம்பெனியில சூப்பர்வைசரா இருந்தேன். அங்க இருந்து போபாலுக்கு மாத்தினாங்க. 'வேலை பார்த்தது போதும் ஊரைப் பார்க்க வந்துடுங்க’னு வீட்டுல சொன்னதால, திருநெல்வேலிக்கே திரும்பி, எஸ்.டி.டி பூத், ஜெராக்ஸ் கடை வெச்சேன். கூடவே நாய் வளர்ப்பையும் தொடர ஆரம்பிச்சேன்.
ஒரு நண்பர் மூலமா நாட்டு ரக நாய்கள் பத்தியும், அதுங்கள்லாம் அழியற நிலையில இருக்கறதையும் கேள்விப்பட்டேன். இதையெல்லாம் பாதுகாக்கிற வகையில, 'தமிழ்நாட்டுப் பாரம்பரிய ரகங்களை மட்டும்தான் வளர்க்கணும்'னு முடிவு பண்ணினேன். பள்ளி, கல்லூரி நண்பர்களைவிட... நாய்கள் வளர்ப்பு மூலமா கிடைச்ச நண்பர்கள்தான் அதிகம். அப்படி அறிமுகமானவர்தான், இந்தப் பண்ணையோட உரிமையாளர் ஜான் ஆர்தர். அவருக்கும் நாய் வளர்ப்புல ரொம்ப ஈடுபாடு. எனக்கு நாட்டு ரக நாய்கள் மேல இருந்த ஈடுபாட்டை பாத்துட்டு, இந்தப் பண்ணையிலேயே இடம் கொடுத்து நாய்களை வளர்க்கச் சொல்லிட்டார். தன்னோட பண்ணைக்கு என்னை மேலாளராவும் ஆக்கிட்டார். இப்போவரைக்கும் நாய் வளர்ப்புக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் அவர்தான் செஞ்சுக்கிட்டு இருக்கார். இப்போ, 9 சிப்பிப்பாறை (5 பெண் 4 ஆண்), 4 கன்னி (3 பெண் 1 ஆண்) மற்றும் 3 கேரவன் பெண் நாய்கள் (மகாராஷ்டிர இனம்) என மொத்தம் 16 நாய்கள் இருக்கு'' என்ற அந்தோணி ஷெட்டி, தனது வளர்ப்பு முறைகள் பற்றிச் சொன்னதைப் பாடமாகத் தொகுத்துள்ளோம்.
காலை பால்... மாலை உணவு!
'தினமும் காலையில் 8 மணிக்கு ஒவ்வொரு நாய்க்கும் அரை லிட்டர் பாலை (அரை லிட்டர் பாலுக்கு 100 மில்லி தண்ணீர் கலந்து) காய்ச்சி, ஆறவைத்து கொடுக்கவேண்டும். தண்ணீர் கலக்காவிட்டால், வயிற்றுப்போக்கு வரும். மாலை 3 மணிக்கு 300 கிராம் சாதம், 300 கிராம் கோழிக்கறி. கொதிக்கும் உலையில் அரிசி போடும்போதே, கோழி இறைச்சியையும் சேர்த்துப் போட்டு சமைக்கலாம். சாதத்தில் உப்பு சேர்த்தால், தோல் நோய் வரும். எலும்பு கலந்த கறியாக இருந்தால், கால்சியம் குறைபாடு ஏற்படாமல் இருக்கும். காலை, மாலை மற்றும் இரவு மூன்று வேளையும் சுத்தமான தண்ணீரைக் குடிக்கக் கொடுக்க வேண்டும்.
நோய்கள் கவனம்!
இந்த ரக நாய்களை 'பார்வோ’, 'டிஸ்டம்பர்’ என்கிற இரண்டுவிதமான நோய்கள் அதிகமாகத் தாக்கும். கண்ணில் பீளை வடியும், உடல் சூடு அதிகரிக்கும். சுறுசுறுப் பில்லாமல், சாப்பிடாமல் சோம்பலாகவே படுத்துக் கிடக்கும். உள்ளங்கால் சொரசொரப் பாக இருக்கும். இப்படி இருந்தால் அது, 'பார்வோ’ நோயின் அறிகுறி. உடனே கால்நடை மருத்துவரிடம் காண்பித்து, ஊசி போட வேண்டும். நாய் நிற்கும்போது தலையைத் தூக்கிப் பார்க்காமல், தொங்க போட்ட நிலையில் தலை ஆடிக் கொண்டே இருந்தால், டிஸ்டம்பர் நோய்க்கான அறிகுறி. லேசாக தலை ஆடும்போதே அதற்குரிய ஊசியைப் போட வேண்டும். இல்லாவிட்டால், உயிரிழப்பு ஏற்படக்கூடும். உண்ணிகள் வராமல் இருக்க, நாய்க் குடிலைச் சுற்றி தடுப்பு மருந்தைத் தெளிக்க வேண்டும். ஒவ்வொரு நாய்க்கும் ஆண்டுக்கு ஒரு தடவை ரேபிஸ் தடுப்பூசி கண்டிப்பாகப் போடவேண்டும். நாய்களை வாரத்துக்கு ஒரு முறைதான் குளிப்பாட்ட வேண்டும்.    
60 நாள் குட்டிகள் விற்பனை!
நாய்கள், 6 மாதங்களுக்கு ஒரு முறை பருவத்துக்கு வரும். ஆனால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் ஆண் நாயோடு சேர்த்து, இனப்பெருக்கம் செய்தால், தரமான குட்டிகள் கிடைக்கும். ஆண் நாயோடு சேர்ந்த நாளிலேயே, பெண் நாயை தனியாகப் பிரித்து அடைக்க வேண்டும். 63 நாளில் குட்டிப் போடும். சராசரியாக ஒரு நாய் வருடத்திற்கு 6 முதல் 8 குட்டிகள் வரை போடும். 11 நாளில் இருந்து 13 நாட்களுக்குள் குட்டிகள் கண் திறக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதம் வரைதான் பால் சுரக்கும். குறைவாக குட்டி போட்டிருந்தால், கொஞ்சம் கூடுதல் நாட்கள் பால் சுரக்கும். தாயிடம் பால் சுரப்பு நின்றுவிட்டால், மாட்டுப்பாலை வாங்கி, காய்ச்சி ஆற வைத்து, 100 மில்லி பாலுக்கு ஒரு ஸ்பூன் என்கிற விகிதத்தில் கேழ்வரகு மாவு கலந்தும் நான்கு மணி நேரத்துக்கு ஒரு தடவை குட்டிகளுக்குக் கொடுக்க வேண்டும். குட்டிகளுக்கு 45-ம் நாளிலும், 60-ம் நாளிலும் தடுப்பூசி போட வேண்டும். 60 நாளைக்கு மேல் குட்டிகளை விற்பனை செய்யலாம்.'
ஆண்டுக்கு  2 லட்சம்!
நிறைவாக விற்பனை வாய்ப்புப் பற்றிப் பேசிய அந்தோணி ஷெட்டி, ''பண்ணையில இருக்குற 11 பெட்டைகள் மூலமா வருஷத்துக்கு சராசரியா 30 குட்டிகள். கிடைக்குது.  சராசரியா ஒரு குட்டி 8 ஆயிரம் ரூபாய்க்கு விலை போகுது. அதே சமயம், ஒரு வருஷம் வைச்சிருந்து வித்தா குட்டி ஒண்ணு ரூ. 50 ஆயிரத்துக்கு கூட விலை போகும். எப்படி பார்த்தாலும், வருஷத்துக்கு 4 லட்ச ரூபாய் கிடைக்கும்.   இதுல, உணவு, மருந்து, பராமரிப்புனு 2 லட்ச ரூபாய் செலவு போக, 2 லட்ச ரூபாய் லாபமா கிடைக்குது. இந்தப் பண்ணையை லாப நோக்கத்துல நடத்தல. நம்ம நாய்கள் இனத்தைக் காப்பாத்ததான் பண்ணையை வைச்சிருக்கோம். இதையே, தொழில்முறையா நாட்டு நாய் பண்ணையை நடத்துனா, இன்னும் பல மடங்கு லாபம் கிடைக்கும்'' என்று சொல்லி விடை கொடுத்தார்.

  நாய்களுக்கு மரியாதை!
உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாய் இனங்கள் உள்ளன. ஆனால், 350 வகை நாய் இனங்களுக்குத்தான் அங்கீகாரம் உள்ளது. அதில் ஆறு வகை இந்திய நாய்கள். இந்த ஆறில் கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை மற்றும் ராஜபாளையம் நாய்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவை. ஹரியானா மாநிலம் கர்னால் என்ற இடத்தில் உள்ள தேசிய விலங்குகள் மரபின ஆராய்ச்சி மையமும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகமும் இணைந்து, ராஜபாளையம் மற்றும் சிப்பிப்பாறை ஆகிய இன நாய்கள் குறித்து, ஆராய்ச்சி செய்து வருகின்றன. இந்தவகை பாரம்பரிய ரக நாய்களை கௌரவிக்கும் வகையில், மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டுள்ளது.

தொடர்புக்கு,
அந்தோணி ஷெட்டி,
செல்போன்: 93459-56565

Saturday, June 1, 2013

செல்லப்பிராணி வளர்க்க


வீட்டில் செல்லப்பிராணி வளர்க்க வேண்டும் என்றால் முதலில் வரும் பதில் என்னவாக இருக்கும். கண்டிப்பாக நாய் அல்லது பூனைகள் தான் பலரின் குரலாக இருக்கும். நம்மில் அநேகமாக பல பேர் நாய்களையும் பூனைகளையும் தான் வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க ஆசைப்படுவோம். நீங்களும் அதையே தான் செய்ய வேண்டுமா? தேவையில்லையே! தைரியமாக இந்த வட்டத்தை விட்டு வெளியே வாருங்கள். சரி, பின் என்ன வளர்க்கலாம் என்று தானே கேட்கிறீர்கள்? ஏன் நீங்கள் ஒரு பறவையை செல்லப்பிராணியாக தேர்ந்தெடுக்க கூடாது? நீங்கள் நினைப்பதைப் போல் இது குளறுபடியாக இல்லாமல், உங்களுக்கு பல மடங்கு கேளிக்கையை கொட்டி கொடுக்கும். ஒரு பறவையை செல்லப்பிராணியாக வளர்க்க நமக்கு தேவையானதெல்லாம் அதனுடைய கூண்டை அமைக்க ஒரு சிறிய இடம் மட்டுமே. மேலும் பல பேர் பறவையை ஒரு செல்லப்பிராணியாகவே பார்ப்பதில்லை. அதனால் அதனை உங்கள் வீட்டில் வளர்க்க நீங்கள் தனியாக அதற்கென்று கூடுதலாக எந்த செலவும் செய்யத் தேவையில்லை.

1. குரல் மென்மையாகவும் இனிமையாகவும் இருக்கும் : பொதுவாக செல்லப்பிராணி வளர்ப்பவர்கள் மத்தியில் பறவைகளின் மீது நல்ல மதிப்பு கிடையாது. அதிலும் சில நாய் அல்லது பூனை விரும்பிகளை பொறுத்தவரை பறவைகள் என்பது அசிங்கமான, விரும்பத்தகாத ஒரு இனமாகும்; அது வீட்டில் இருப்பதை விட வெளியிலேயே இருப்பது நல்லது என்று எண்ணுவர். ஆனால் நாய் அல்லது பூனை வேண்டாம் என்று நினைப்பவர்களுக்கு பறவைகள் தான் சரியான செல்லப்பிராணி.

2. மலிவாக கிடைக்கும் உணவுகள்: நாய்கள் மற்றும் பூனைகளுக்கு உணவின் செலவு ஆதிகம். ஆனால் பறவைகளுக்கு மிகவும் குறைவே. அவைகள் உயிர் வாழ தேவையானதெல்லாம் தினசரி சிறு அளவு உணவு மற்றும் தண்ணீர் மட்டுமே. பறவைகளுக்கென்று நல்ல தரமான மாத்திரை வடிவிலான உணவு கொடுக்கப்பட வேண்டும். வேண்டுமெனில் அதனுடன் சேர்த்து சிறு பழங்களையும், காய்கறிகளையும் அதற்கு தீனியாக போடலாம்.

3 அறிவாளிகள்: ஒருவரை "பறவையின் புத்தி" என்று புகழ்வது, அவரை அவமரியாதை செய்வதைப் போல் இருக்கலாம். ஆனால் உண்மையில் விலங்கு இனத்திலேயே புத்திக்கூர்மை அதிகமாக இருப்பது பறவைகளுக்குத் தான். யோசித்து பாருங்களேன், மற்ற விலங்குகளைப் போல் அல்லாமல் பறவைகள் தான் நாம் செய்வதையும், பேசுவதையும் திரும்பச் செய்ய முயற்சி செய்யும்.

4. குறைந்த பராமரிப்புச் செலவு: நாய்கள் மற்றும் பூனைகளைப் போல பறவைகளுக்கு அதிக கவனம் செலுத்த தேவையில்லை. அதற்கு நடை பயிற்சியையோ, வீட்டில் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சியையோ அல்லது அவைகளை சந்தோஷப்படுத்தும் கேளிக்கைகளைளோ செய்யத் தேவையில்லை. மேலும் நாய்களின் கழிவை சுத்தம் செய்வதை காட்டிலும், பறவைகளின் கூண்டை சுத்தப்படுத்துவது எளிது

5. சிறிய இடத்திற்கு சரியான தேர்வு: ஒரு சின்ன அபார்ட்மெண்ட்டில் இருக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் வளர்ப்பதற்கு நாயும், பூனையும் சரியாக இருக்காது. ஏனெனில் அவைகள் ஓடவும், விளையாடவும் வீட்டில் போதிய இடம் இருக்காது. அதுவே பறவை என்றால், அதனை வளர்க்க ஒரு சிறிய கூண்டு மட்டும் போதுமானது.

6. மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை: மனிதர்களிடம் நன்கு பழகக் கூடியவை பறவைகள். நாய்கள் மற்றும் பூனைகளை காட்டிலும் பறவைகள், அதனை வளர்ப்பவரிடம் அதிகமாக ஒன்றிவிடும். மேலும் அன்றைய நாளை பற்றிய குறைகளை நீங்கள் கூறும் போது, அதை கேட்பதற்கு நிச்சயம் உங்கள் பறவை செவி சாய்க்கும். கேட்பது மட்டுமல்லாது, உங்களுக்கு ஆறுதலாக கீச்சிடவும் செய்யும்.


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites