இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

• எங்கும் உயர்ந்தே நில்! எதிலும் தமிழே சொல்!! வறுமை கண்டு நொருங்காதே! வாய்ப்பு இருக்கு மறக்காதே!! விதையென விழு! விருட்சமென எழு!! உறுதியான உள்ளம் ! உலகை வெல்லும் !! ;

விவசாயத்தை தொழிலாக்கு! இந்தியாவை வளமாக்கு!! உயர்ந்தவனாய் இரு! பிறரை உயர்த்துபவனாய் இரு!! சிந்தனையில் சீற்றம்! வாழ்க்கையில் ஏற்றம்!! மூச்சு உள்ளவரை முன்னேறு ! முடியும் என்பவர்க்கே வரலாறு !! ;

.

• முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!! செயலில் மேதையாகு! பலருக்கு பாதையாகு!! வல்லமையை வெளிப்படுத்து! வாழும் உலகை வசப்படுத்து!! முடியும் என்பதுதான் முன்னேற்றத்தின் முதல்படி !!

.

• பண்பில் உயர்ந்து நில் ! பணியில் உயர்ந்து செல் !! அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு தடைகளைத் தகர்த்திடு சாதிப்புகளை நிகழ்த்திடு !!

.

Showing posts with label கல் தயாரிப்பில். Show all posts
Showing posts with label கல் தயாரிப்பில். Show all posts

Thursday, September 5, 2013

ஹாலோ பிளாக் விற்பனையில் 15% லாபம்!


விற்பனையில் 15% லாபம்
''வீட்டை கட்டிப்பார்; கல்யாணத்தை பண்ணிப்பார்' என்பார்கள்... அப்போதுதான் வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களைப் புரிந்துகொள்ள முடியும் என்பதற்காக! ஆனால், இப்போதெல்லாம் ஒரு கல்யாணத்தைகூட எளிதாக நடத்தி விடலாம், ஆனால்  வீடு கட்டுவது என்பது சாதாரண விஷயமில்லை! பக்காவாக திட்டமிட்டு வேலையைத் தொடங்கினால் அப்போதுதான் சிமென்ட் விலை ஏறிவிட்டது, கம்பி விலை ஏறிவிட்டது, மணல் விலை ஏறி விட்டது என்பார்கள்.
இந்த கட்டுமான பொருட்களின் விலையேற்றத் தைக் கட்டுப்படுத்த எந்த கட்டுப்பாடும் இல்லை. அதிலும் செங்கல் விலை சொல்லவே வேண்டாம். ஏரியாவுக்கு ஏரியா விலை வித்தியாசம் எகிறுகிறது. எந்த டைப் வீடு கட்டினாலும் செங்கல் இல்லாமல் காரியம் நடக்காது. அந்த அளவுக்கு அதன் தேவை இருக்கிறது. பழைய பாணியில் எல்லா பணிகளுக்கும் செங்கல்லை மட்டுமே ஏன் நம்பியிருக்க வேண்டும்? வேலையை இன்னும் சுலபமாக்க வேறு தொழில்நுட்பத்தைப் புகுத்தினா லென்ன என்ற முயற்சியில் வந்தது தான் இந்த 'ஹாலோ பிளாக்’. செங்கல்லைவிட லேசானதாலும், சிமென்ட் பயன்பாட்டை குறைப்பதாலும் கட்டுமானத் தொழில் உலகில் இப்போது நீங்காத இடம்பிடித்து விட்டது இந்த ஹாலோ பிளாக்.  
ஒரேஒரு ஹாலோ பிளாக் நான்கு செங்கல்லுக்கு ஈடாக தேவையைப் பூர்த்திசெய்து விடுகிறது. வேலையும் சுலபம். இதனால் விறுவிறுவென கட்டட வேலைகள் முடிந்து விடுவதால் கட்டுமானத் துறையில் இதன் தேவை தற்போது அதிகரித்துள்ளது.  காம்பவுன்ட் சுவர், ஆர்ச்சுகள் போன்றவற்றைக் கட்டுவதற்கு அதிகளவில் இதைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் செலவும் கைகளுக்குள் அடங்கி விடுகிறது.

ஆர்.சி.சி, ஜி.ஐ. ஷீட்ஸ், ஏ.சி.சி. ஷீட்ஸ் போன்ற ரூஃபிங்கிற்கு சப்போர்ட்டாகவும் செங்கல், கற்கள் போன்றவைகளுக்கு மாற்றாகவும்  ஹாலோ பிளாக் இடம் பிடித்து விட்டதால் நாளுக்குநாள் இதன் தேவை அதிகரிக்கவே செய்யும். உத்தரவாதமான நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் என்பதால் துணிந்து இறங்கலாம். கட்டுமானத் தொழில் வளர வளர, இந்தத் தொழிலுக்கும் ஏறுமுகம்தான்.

தயாரிக்கும் முறை  கருங்கல் குவாரியிலிருந்து வெளியேறும் மணல்துகள்கள், அவல் ஜல்லி, சிமென்ட் போன்றவைகள் தான் முக்கிய மூலப் பொருட்கள். எல்லாவற்றையும் தகுந்த விகிதத்தில் கலவையாக்கி லேசான ஈரப்பதத்தோடு இதற்கென்றே உள்ள ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் நிமிடத்தில் ஹாலோ பிளாக் ரெடி!   அதிக பலமிக்க ஹாலோ பிளாக் வேண்டுமெனில் சிமென்ட், மணல், அவல் ஜல்லி போன்றவைகளை 1:3:6 என்கிற விகிதத்தில் கலக்க வேண்டும். இதுவே சாதாரணமான கட்டடங்களுக்கு எனில் 1:5:8 என்கிற விகிதத்தில் இருப்பதுபோல பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர், சிமென்ட் கலவை 0.4:1 என்கிற விகிதத்தில் இருக்க வேண்டும்.

ஃபைனான்ஸ்
சொந்த இடம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் வாடகைக்கு எடுத் தும் செய்யலாம். இடமிருந்து, சொந்தமாக கட்டடம் கட்டும்பட்சத்தில் அந்த வகைக்கு சுமார் ஆறு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு மூன்று லட்சம் ரூபாயும், செயல் பாட்டு மூலதனத்துக்கு ஒரு லட்சம் ரூபாயும் என மொத்தம் பத்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.
மூலதனம்  
இந்த தொழி லைத் துவங்க நினைக்கும் ஒருவர் தனது கையிலிருந்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை மூலதனமாக போட வேண்டியது வரும். மீதமுள்ள ஒன்பதரை லட்ச ரூபாயை வங்கியிலிருந்து கடனாகப் பெற்றுக் கொள்ளலாம்.

மானியம்
பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த தொழில் வருவதால் மூன்றரை லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் வரவு வைக்கப்படும். மூன்று வருடத்திற்குப் பிறகு நான்காவது ஆண்டின் தொடக் கத்திலிருந்து கடன் தொகை ஆறு லட்சம் பிடித்தம் செய்யப்படும்.

ஆட்கள்
முழு உற்பத்தி திறனில் வேலை பார்க்க பத்து நபர்கள் தேவைப்படு வார்கள். நல்ல ஈடுபாட்டுடன் வேலைபார்க்கும் ஒன்பது பேரும், விற்பனை மற்றும் கலெக்ஷன் நிர்வாகம் செய்வதற்கு ஒருவரும் போதுமானது.


இயந்திரம்
இந்த  ஹைட்ராலிக் ஆபரேட்டிங் இயந்திரம் தமிழ்நாட்டிலேயே கிடைக்கிறது. கோவை, உடுமலைப்பேட்டை பகுதிகளில் வாங்கலாம்.

வார்ப்பு அளவுகள்
கற்கள் மூன்று அளவுகளில் உள்ளன.
4 இஞ்ச், 6 இஞ்ச்,  8 இஞ்ச் என்ற அளவுகளில் இருக்கின்றன.
4 இஞ்ச் கற்கள் பாத்ரூம் கட்டுவதற்குப் பயன்படுகிறது. (இதன் நீளம் 15 இஞ்ச், அகலம் 4 இஞ்ச், உயரம் 8 இஞ்ச்)
6 இஞ்ச் கற்கள் ஓட்டு வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 6 இஞ்ச்)
8 இஞ்ச் கற்கள் மாடி வீடு கட்டப் பயன்படுகிறது. இதற்கு அகலம் மட்டும் வேறுபடும் (அகலம் 8 இஞ்ச்)

சாதகமான விஷயம்
சாதாரணமாக மழைக் காலங்களில் செங்கல்  தயாரிக்க முடியாது.  காய வைப்பதற்கேற்ப வெயில் இருக்காது என்பதால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் செங்கல் தொழில் அடியோடு பாதிக்கப்படும். ஆனால்,  ஹாலோ பிளாக் தொழிலில் அப்படியான கவலை இல்லை. மழைக் காலங்களில்கூட தயார் செய்ய முடியும். இயந்திரத்திலிருந்து எடுத்த அரை மணி நேரத்திற்குள் இந்த கற்கள் காய்ந்து விடுவதால் மழைக்காலம் என்றாலும் பாதிப்புகள் ஏற்படாது.

ரிஸ்க்
தொடர்ச்சி யான மின்சாரம் தான் இதன் முக்கிய தேவை. மின்தட்டுப்பாடுதான் இந்த தொழிலை வளரவிடாமல் தடுக்கும் முக்கியமான விஷயமாகும். மின்சாரம் தொடர்ச்சியாகக் கிடைத்தால் நல்ல லாபம்தான்.
-பானுமதி அருணாசலம்
படங்கள்:  பா.காளிமுத்து

குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம்
காரைக்குடி அமராவதிபுதூரில் உள்ள 'உமையாம்பிகை ஹாலோ பிளாக் தயாரிப்பு யூனிட்உரிமையாளரான பார்வதி தன்னுடைய தொழில் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
கட்டட கான்ட்ராக்டர்களே இடம் தேடிவந்து ஆர்டர் கொடுத்து விடுவார்கள். அதற்கேற்ப சப்ளை செய்வோம். சில நேரங்களில் அவர்களே வாங்கிச் செல்வதும் உண்டு. மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்துவிடுவதும் இதன் கூடுதல் சிறப்பு.  அச்சு வார்ப்புகளுக்கு ஏற்பதான் கற்கள் வரும். கவனமாக எடுத்துச் சென்று வெயிலில் காய வைக்க வேண்டியதுதான் நமது முக்கியமான வேலையே. விற்பனையைத் தனியாக கவனித்துக் கொள்கிறோம்.
சாதாரணமாக 4,000 கற்கள் தயாரிக்க தேவைப்படும் தொகை:
அவல் ஜல்லி ஒரு லோடு (3 யூனிட்) - 6,500 ரூபாய்
50 மூட்டை சிமென்ட் - (மூட்டைக்கு 280 வீதம்) - 14,000 ரூபாய்.
கிரஷர் மண் ஒரு லோடு- (3 யூனிட்) - 3,500 ரூபாய்.
மொத்தம் 24,000 ரூபாய்வரை செலவாகிறது.
ஒரு ஹாலோ பிளாக் 9.50 முதல் 20 ரூபாய் வரை விலைபோவதால் 10 முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.  இயந்திரம் மூலம் மட்டுமின்றி சாதாரணமாக கைகளாலும் தயாரிக்க முடியும். இருந்தாலும் இயந்திரத்தை  உபயோகித்தால் உற்பத்தியின் அளவு அதிகரிக்கும், நேரம் குறையும், நமக்கும் நல்ல லாபம்தான். 80,000 ரூபாய் விலையில் இந்த இயந்திரம் கிடைக்கிறது.
இந்த தொழிலுக்கே உள்ள சிரமம் என்னவென்றால் கற்கள் மேடைக்கு வந்தவுடன் அதனை இழுப்பதுதான். கொஞ்சம் கடினமாக இருக்கும் அதை இழுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு பேராவது தேவைப்படுவார்கள். எங்களைப் பொறுத்தவரை இதை குடும்பத் தொழிலாகவே செய்து வருகிறோம்,  அதனால் அதிக லாபம் பார்க்கிறோம். சம்பளத்திற்கு ஆள் வைத்து பார்த்தால் இவ்வளவு லாபம் பார்க்க முடியாது என்றார் பார்வதி.


Wednesday, September 4, 2013

ஃபிளை ஆஷ் பிரிக்ஸ்! டேர்ன் ஓவரில் 10% லாபம்



செங்கல்லுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த தொடங்கியதன் முதல்படி ஹாலோ பிளாக் என்றால், அதன் அடுத்த கட்டமாக வந்த தொழில்நுட்பம்தான் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ். ஹாலோ பிளாக்ஸ் தயாரிப்பு, தொழில்நுட்பம் பற்றி கடந்த வாரம் அலசியதற்கு வந்த வரவேற்பைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாகவே இந்த வாரம் ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ்.
புதிய தொழில்நுட்பத்தில் நவீனமான முறையில் தயாரிக்கப்படுவதாலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நண்பனாக இருப்பதாலும், கட்டுமானத்துறையில் இப்போது ஃப்ளை ஆஷ் அதிக அளவில்  பயன்படுத்தப்படுகிறது. தயாரிப்புச் செலவு அதிகம் என்றாலும், செங்கல்லின் தேவை தவிர்க்க முடியாதது என்பதால் இந்தத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் நிலக்கரி சாம்பல்தான் முக்கிய மூலப் பொருள். 'சிமென்ட் செங்கல்’, 'சிமென்ட் கல்எனவும் அழைக்கப்படுகிற இந்த ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ், செங்கல்லை விடவும் நீடித்து உழைக்கும். மற்றும் சீக்கிரத்தில் உடையாது. இந்த தன்மைகளால் கட்டட வேலைகளில் பெரிதும் நம்பகத் தன்மையை அடைந்து விட்டது.
ஆண்டுக்கு 90 மில்லியன் டன் ஃப்ளை ஆஷ் இந்தியாவின் அனல் மின் நிலையங்களிலிருந்து கிடைக்கிறது. வரும் ஆண்டுகளில்  இன்னும் அதிகளவில் இந்த நிலக்கரி சாம்பல் கிடைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர். பொது வாக நமது நாட்டில் மின்சாரத் தேவையை 70% அளவுக்கு அனல்மின் நிலையங்களே பூர்த்தி செய்வதால், இந்த கற்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருளுக்கு தட்டுப்பாடு வராது என்று நம்பலாம். குறிப்பாக  தமிழ்நாட்டில் நெய்வேலி, மேட்டூர், தூத்துக்குடி, எண்ணூர், மற்றும் வடசென்னை அனல்மின் நிலையங்களிலிருந்து எளிதாகக் கிடைத்து விடுவதால் இதன் அருகில் இருக்கும் ஊர்களில் இருப்பவர்களுக்கு இந்த தொழில் செய்வது கூடுதல் வாய்ப்பாகக் கருதப்படுகிறது.
பயன்பாடுகள்
இந்த ஃப்ளை ஆஷ் கற்களைக் கொண்டு கட்டப்படும் கட்டடங்கள் நல்ல உறுதியாக இருப்பது முக்கியமான விஷயம். இதன் வடிவம் மற்றும் அளவு கட்டட வேலைகளை சுலபமாக்குகிறது. தண்ணீர் கசிவின்மை,   வலிமை, நெகிழ்வுத்தன்மை போன்ற கான்கிரீட்டை உறுதிப்படுத்தும் பண்புகள் இந்த கற்களில் இருப்பதால் கட்டட பொறியாளர்களின் முதன்மை தேர்வாக இது இருக்கிறது.
தயாரிக்கும் முறை
நிலக்கரி சாம்பல் 70%, மணல் 15%, சுண்ணாம்புகல்  10% மற்றும் ஜிப்சம் 5% ஆகிய மூலப்பொருட்களை சரியான விகிதத்தில் சேர்க்க வேண்டும்.  8-10% என்கிற விகிதத்தில் தண்ணீர் சேர்த்து இந்த கலவையை ஹைட்ராலிக் இயந்திரத்தில் கொட்டி இயந்திரத்தை இயக்கினால் ஃப்ளை ஆஷ் செங்கல் கிடைத்துவிடும். ஹாலோ பிளாக் தயாரிப்பு முறைதான் இதற்கும் என்றாலும், இதனை 48 மணி நேரத்திற்கு வெயிலில் காய வைக்க வேண்டும். அதன்பிறகு இந்த கற்கள் மீது  தண்ணீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்றும்போதுதான் கற்கள் கூடுதல் அடர்த்தியாகும்.
இயந்திரங்கள்
மெக்கானிக்கல்,  ஹைட்ராலிக் மற்றும் ஸ்டேஷனரி போன்ற இயந்திரங்கள் இதில் பயன் படுத்தப்படுகிறது. இந்த மூன்றும் வெவ்வேறு வகையான அளவுகளில் கற்களை தயாரித்து தருகின்றன. எனவே வசதிக்கு தகுந்தாற்போல், உற்பத்தி திறனுக்கு ஏற்ற வகையில் இயந்திரத்தை வாங்கிக் கொள்ளலாம். இந்த இயந்திரங்கள் கோயம்புத்தூரில் மட்டுமே கிடைக்கிறது.
ஆட்கள்
ஒரு யூனிட்டுக்கு 20 பணியாளர்கள் வரை தேவைப்படுவார்கள். சந்தை வாய்ப்பு
சாதாரண செங்கலுக்கு பதில் தற்போது நவீன தொழில்நுட்பத் தில் தயாரிக்கப்படும் இந்த ஃப்ளை ஆஷ் எனும் சிமென்ட் செங்கல் கட்டுமானத் துறையில் அதிகளவில் பயன்படுத்துகிறார் கள்.  எனவே இதற்கான சந்தை வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. கமிஷனுக்கு வாங்கிச் செல்லும் ஏஜென்டுகள், கட்டட பில்டர்கள், கான்ட்ராக்டர்கள் மற்றும் நேரடி வாடிக்கையாளர்கள்.
ஃபைனான்ஸ்
சொந்த இடமாக இருந்தால் உற்பத்திச் செலவு குறையும்.  கட்டடம் மற்றும் சிவில் வேலைகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை செலவாகும். அத்துடன் பிளான்ட் மற்றும் இயந்திரத்திற்கு பதினாறு லட்சம் ரூபாய், செயல்பாட்டு மூலதனம் ஐந்து லட்சம் ரூபாய் என மொத்தம் இருபத்தைந்து லட்சம் ரூபாய் வரை ஆகும்.

மூலதனம்  
நிறுவனர் ஐந்து சதவிகித மூலதனமாக 1.25 லட்சம் ரூபாய் வரை போட வேண்டியது வரும். மீதமுள்ள 95% அதாவது 23.75 லட்சம் ரூபாய் வங்கியிலிருந்து கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
மானியம்  
இந்த தொழில் பிரதம மந்திரி வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் வருவதால் 8.75 லட்சம் ரூபாய் வரை மானியம் பெறமுடியும். மானியத் தொகையானது இந்த தொழிலுக்காக வாங்கிய கடன் கணக்கில் மூன்று வருடத்திற்குப் பிறகுதான் வரவு வைக்கப்படும்.  
சாதகம்
இந்த தொழிலுக்கு தேவையான முக்கிய மூலப் பொருளான நிலக்கரி சாம்பல் கிடைப்பதில் முன்பு சிக்கல் இருந்து வந்தது. அனல் மின் நிலைய உலையில் இருந்து 20% நிலக்கரி சாம்பல்களை இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் உரிமையாளர்களுக்கு கண்டிப்பாக தர வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இனி மூலப் பொருள் கிடைப்பதில் சிக்கல் இருக்காது என்பது இந்த தொழிலுக்கு சாதகமாக இருக்கிறது.
பாதகம்
இயந்திரத்திலிருந்து செங்கல் வந்ததும் காயவைத்த பின்பு தண்ணீர் ஊற்றி கல்லை கடினப் படுத்த வேண்டும். இந்த வேலை மழைக்காலத்தில் சுலபமாகிறது. மிதமான மழையினால் இந்த தொழிலில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பலத்த மழை எனில் கொஞ்சம் தொய்வு ஏற்படும்.
-பானுமதி அருணாசலம்
படங்கள் : வெ. பாலாஜி
''பிரகாசமான தொழில் என்பதில் சந்தேகம் இல்லை!!'
ந்த தொழிலின் வெற்றிகரமாக ஈடுபட்டுவரும் கோவை  சின்னவேடம் பட்டி 'சக்தி பிரிக்ஸ்உரிமையாளர் சசிதரனின் அனுபவங்கள்:
''சாதாரண செங்கல்கள் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருப்பதால் தற்பொழுது ஃப்ளை ஆஷ் பிரிக்ஸை வாங்க பல கட்டுமான பொறியாளர்கள் தேடி வருகிறார்கள். தண்ணீரைக் குறைவாக உறிஞ்சுகிறது, அதிக எடையைத் தாங்கக்கூடியது  என்பதால் இரண்டு மாடிக்குமேல் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு இனி ஃப்ளை ஆஷ் பிரிக்ஸ் வைத்துதான்  கட்ட வேண்டும்  என அரசாங்கம் அறிவித்திருப்பதும்,  இந்தியாவில் கட்டுமானத் துறை வளர்ந்து வருவதும் இந்த தொழிலுக்கு மிகவும் சாதகமான அம்சமாக இருக்கிறது. 1.5 ஏக்கர் அளவு நிலமும், 50 ஹெச்.பி. மின்சாரமும் வேண்டும்.
மெக்கானிக்கல் மெஷின், ஹைட்ராலிக் மெஷின் மற்றும் ஸ்டேஷனரி மெஷின்ஸ் என மூன்றுவிதமான இயந்திரங்களை இதில் பயன்படுத்துகிறோம். எட்டு மணி நேர வேலையில்  மெக்கானிக்கல் மெஷின் 7,500 கற்களையும், ஹைட்ராலிக் மெஷின் 8,500 கற்களையும், ஸ்டேஷனரி மெஷின்ஸ் 20,000 கற்களையும் தயாரிக்கும். ஒரு கல்லுக்கு எவ்வளவு லாபம் என்று  கணக்கிடுவதைவிட வருட டேர்ன் ஓவரில் எவ்வளவு லாபம் என்று பார்க்க வேண்டும். ஸ்டேஷனரி மெஷின்ஸ் உபயோகப்படுத்தும் பட்சத்தில் இரண்டு கோடி வரை டேர்ன் ஓவர் வரும். இப்போது சப்ளையைவிட டிமாண்ட்தான்  அதிகம். எதிர்காலத்திலும் டிமாண்ட் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. சரியான வழிகாட்டுதலுடன், தரமான இயந்திரங்களை வாங்கிப்போட்டு செய்தால் இது மிகச்சிறந்த லாபகரமான தொழிலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை'' என்றார் சசிதரன்.
-பா. விஜயசந்தர்




Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites