வளர்ப்புப் பிராணிகளைக் காலங்காலமாகவே நம் முன்னோர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். அந்த வழக்கம் தற்போதுவரை தொடர்ந்தாலும், சில வளர்ப்புப் பிராணிகளைப் பெருமிதத் துக்காகவும் பொழுதுபோக்குக்காகவும் வளர்ப்போரும் அதிகரித்துவிட்டனர்.
பச்சைக்கிளி, குருவி, குரங்குகள் உட்பட இந்திய வனப்பகுதியில் வளரும் விலங்குகள், பறவைகள், பிராணிகள் எதையும் வீட்டில் வளர்க்கக் கூடாது. ஆனால், நாய், பூனை, வெளிநாட்டுப் பறவைகள், பிராணிகள் உட்பட இந்தியாவில் வளர்க்க அனுமதியுள்ள வளர்ப்புப் பிராணிகளை வளர்த்து வரு மானமும் ஈட்டலாம். பல நிறங்களில் ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ் உள்ளன. அவை ஜோடி 3,000 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு மூன்று முறை இனப் பெருக்கம் செய்யும். பெண் பறவை ஒவ்வொரு முறையும் நான்கு முட்டைகள் வரை இடும். மூன்று மாத பருவத்திலுள்ள பறவைக்குஞ்சு ஒன்றை 1,000 ரூபாய்க்கு விற்கலாம். இப்படிப் பல்வேறு வளர்ப்புப் பிராணிகள் மூலம் வருமானம் ஈட்டலாம்.
வீட்டில் வளர்க்க சிறந்த பெட்ஸ் எவை?
கண்ணாடி பாட்டிலிலேயே வண்ண மீன்களை வளர்த்து நிலையான வருமானம் ஈட்டுவோரும் உண்டு. அதிக இடவசதி உடையவர்கள் நாட்டு நாய்கள் உட்பட டாபர்மேன், பொமரேனியன் வகை நாய்களையும் வளர்க்கலாம். தவிர, ஆப்பிரிக்கன் லவ் பேர்ட்ஸ், லவ் பேர்ட்ஸ், காக்டெய்ல், பூனை, வெள்ளெலி, சுகர் க்ளைடர் (Sugar Glider), கினி எலி (Guinea Pig), அழகுக்கான கோழி வகைகள், அலங்கார புறாக்கள்.
லைசென்ஸ் அவசியம்!
பொழுதுபோக்குக்காக ஒருசில பெட்ஸ் வளர்ப்போர் லைசென்ஸ் வாங்கத் தேவையில்லை. ஆனால், விற்பனை வாய்ப்புகளுக்காக வளர்த்தால், விலங்குகள் நல வாரியத்தில் நேரடியாகவோ, ஆன்லைன் வாயிலாகவோ லைசென்ஸ் வாங்க வேண்டும். தவிர, தாங்கள் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிலும் பதிவு செய்ய வேண்டும்.
குழந்தைபோல கவனிப்பு!
எந்தத் தேவைக்கு வளர்த்தாலும், வளர்ப்புப் பிராணிகளைக் குழந்தைகள்போல பராமரிக்க வேண்டும். வீட்டில் உலாவும்படியே நாய்கள், பூனைகளை வளர்க்கலாம். பறவை வகையைக் கூண்டில் வைத்து வளர்ப்பது சிறந்தது. அந்தக் கூண்டு போதிய இடவசதி, காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும். அவை வளரும் அறை நன்றாக சூரிய வெளிச்சம் பரவக்கூடிய வகையில் இருந்தால் நல்லது.
முதலீடு: 2,000 ரூபாய்க்குள் விருப்பப்பட்ட ஒருசில வகை பெட்ஸ் வாங்கி ஓராண்டு வளர்த்து அனுபவங்கள் கற்க வேண்டும். பிறகு, 20,000 ரூபாய் முதலீட்டில் தொழிலை விரிவுபடுத்தலாம்.
வளர்ப்புக்குத் தேவையானவை: கூண்டு, சாப்பாடு வைக்கும் கிண்ணம், பிரத்யேக உணவுகள், மருந்துப் பொருள்கள்.
பயிற்சி: பெட்ஸ் வளர்ப்போர், பெட்ஸ் வளர்ப்பு அசோஸி யேஷன்களால் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளால் பயன்பெறலாம்.
விற்பனை வாய்ப்பு: நாம் பெட்ஸ் வளர்ப்பது தெரிந்தால், பலரும் நம்மைத் தேடிவருவார்கள். சமூக வலைதளங்களில் நாமும் விற்பனை விஷயங்களைப் பதிவிடலாம். அருகில் உள்ள பெட் ஷாப்புகளிலும் சிரமமின்றி விற்பனை செய்யலாம்.
நோட் பண்ணுங்க!
பெட்ஸ் வளர்க்கும் அறை மட்டுமல்லாமல், நம் வீடும் தூய்மையாக இருக்க வேண்டும். தினமும் இரண்டு முறை தண்ணீர் மாற்ற வேண்டும். உணவு, தண்ணீர் வைக்க தினமும் ஒரே பாத்திரங்களைப் பயன்படுத்தக் கூடாது. ஒவ்வொரு வளர்ப்புப் பிராணியின் குணநலன்கள் குறித்து நன்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மனிதர்களைப் போலவே அவற்றுக்கும் எல்லா உடல்நல பாதிப்புகளும் வரும். அந்தச் சூழல்களில் செய்ய வேண்டிய மருத்துவத் தேவைகளை முறையாகச் செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கால்நடை மருத்துவரைக் கொண்டும் சிகிச்சையளிக்க வேண்டும். பருவநிலை மாறும்போது பெட்ஸ் பராமரிப்பில் கூடுதல் கவனம் அவசியம்.
* செல்லப்பிராணிகள் வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகள் பெற, சென்னையிலுள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தைத் தொடர்புகொள்ளலாம்.
தொடர்புக்கு: 044 - 25551586
0 comments:
Post a Comment