ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகளுடன் கூடிய பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பு இத்தாலியின் மிலன் நகரில் அமைக்கப்பட்டு வருகிறது. புதுவீடு வாங்கியிருக்கீங்கள, வீட்டை சுத்தி வாழை, தென்னை வைக்க முடியுமா என்று கேட்டால் அதற்கு வீட்டில் குடியிருப்பவர்கள் 400 சதுர அடி அபார்ட்மென்டில் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று பதில் தருவார்கள். இத்தாலியை சேர்ந்த கட்டுமான நிறுவனம் இதை சாத்தியம் என்கிறது. ஸ்டெபனோ போரி என்ற ஆர்க்கிடெக் தலைமையில் போரி ஸ்டுடியோஸ் நிறுவனம் இத்தகைய அபார்ட்மெண்ட்டை அமைத்து வருகிறது. 27 மாடிகளுடன் கூடிய அபார்ட்மென்ட் அருகிலேயே அதைவிட சற்று சிறியதாக இன்னொரு அபார்ட்மென்ட் அமைத்து அனைத்து தளங்களிலும் மரம், செடி, கொடிகள் அமைக்கப்படுகின்றன. மொத்தம் 730 மரங்கள், 11 ஆயிரம் செடிகள், 5 ஆயிரம் புதர் மற்றும் குரோட்டன்ஸ் வகைகள் இதில் அமைக்கப்படுகின்றன. வானுயர அமைக்கப்படும் காடு என்று பொருள் படும் வகையில் பாஸ்கோ வெர்ட்டிகல் என்று அபார்ட்மென்டுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். இதுபற்றி போரி நிறுவனத்தின் இயக்குனர் மிகேல் பிரனலோ கூறியதாவது, தரையில் வீடு கட்ட வசதி இல்லாத சூழலில் தான் மாடிகள் கட்டும் எண்ணம் உதித்தது. குடியிருப்புக்காகத்தான் மாடிகள் கட்ட வேண்டும் என்பது இல்லை. மரம், செடிகள் நடுவதற்கு மாடி கட்டலாம் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இந்த பாஸ்கோ வெர்ட்டிகல் அபார்ட்மென்ட். மரம், செடி, கொடிகளை பார்க்கும் போதே மனதுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைக்கும். சூரிய வெப்பம், மாசு பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நம்மை காப்பவை தாவரங்கள் தான். தரை தளத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி அடுக்குமாடிகளில் வசிப்பர்களுக்கும் இந்த சுகம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கட்டிடத்தை உருவாக்கி வருகிறோம். அபார்ட்மென்ட் விலை ரூ.4.35 கோடி முதல் ரூ.13.25 கோடி. வீடுகள் மட்டுமே அவர்களது தனிப்பட்ட சொத்து. இங்கு இருக்கும் அனைத்து தாவரங்களும் பொது சொத்தாகும். சூரிய ஒளி, காற்று ஆகியவற்றை அனுசரித்து, புயல், மழை வந்தாலும்கூட விழாத வகையில் மரங்களை அமைத்துள்ளோம். எனவே வீட்டின் உரிமையாளர்கள் அவர்கள் வசதிக்கேற்ப மரங்களை மாற்றியமைக்க முடியாது. தங்களுக்கு பிடித்த மரங்கள் அமைந்திருக்கும் இடத்தில் அபார்ட்மென்ட்டை வாங்கிக் கொள்ளலாம். அடுக்குமாடி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அனைத்து தளங்களிலும் வைக்கப்பட உள்ள மரம், செடிகள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஆண்டில் கட்டுமான பணிகள் முடிந்ததும் அவை அதனதன் இடத்தில் வைக்கப்படும். மனிதர்களோடு சேர்த்து மரம், செடி, கொடிகள் வாழ்வதற்கும் ஏற்ற குடியிருப்பை கட்டுவது மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது என்றார். |
0 comments:
Post a Comment