இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, August 27, 2014

விவசாயிகளை அலற வைக்கும் வெளிநாட்டு மரம்!


பிரச்னை
வறட்சி, விலைவீழ்ச்சி, ஆள்பற்றாக்குறை போன்ற பல பிரச்னைகள் விவசாயத்தை வாட்டி எடுக்கும் சூழலில்... வெனிலா பீன்ஸ், பேரீச்சை, கோகோ, அகர் மரம் என மாற்றுப் பாதைகளில் பயணிக்க ஆரம்பிக்கிறார்கள், விவசாயிகள். ஆனால், ஒரு கட்டத்தில் இவையெல்லாம் கையைக் கடிக்கவே... பலவித சிக்கல்களில் மாட்டிக் கொள்வதோடு, பொருளாதார இழப்புக்கும் உள்ளாகிறார்கள். இவர்களில் ஒருவர்தான், ஈரோடு மாவட்டம், பொலவக்காளிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம்.
பேரீச்சை நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து, கன்றுகள் வாங்கி நட்டு ஏமாந்த விஷயத்தை, நமது அலுவலகக் குரல் வழிச் சேவையில் பதிவு செய்திருந்தார், சுப்பிரமணியம். அதைத் தொடர்ந்து அவரது தோட்டம் தேடிப்போய் அவரைச் சந்தித்தோம்.
ஒன்பது வருஷமாகியும்...?
''2006-ம் வருஷத்துல, 'பேரீச்சை வளர்த்தா பெரும் லாபம்’னு சில பத்திரிகைகள்ல விளம்பரங்கள் வந்துச்சு. அதைப் பாத்து ஆசை வந்து, அந்த கம்பெனியைத் தேடி தர்மபுரிக்குப் போனேன். அங்க, பேரீச்சை பத்தி ரொம்ப சிலாகிச்சு சொன்னாங்க. 'வறட்சியைத் தாங்கி வளரும். எல்லா வகையான மண்ணுலயும் வரும். நட்ட அஞ்சாம் வருஷத்துல மகசூலுக்கு வந்துடும். ஒரு மரத்துல இருந்து வருஷத்துக்கு 100 கிலோ பேரீச்சை கிடைக்கும். தொடர்ந்து 100 வருஷம் வரை, வருமானம் கொடுக்கிற அமுதசுரபி’னெல்லாம் சொல்லிட்டு 'பேரீச்சையை விக்கிறதுக்கும் நாங்களே ஏற்பாடு செஞ்சு தர்றோம்’னும் சொன்னாங்க.
அதை நம்பி ஒரு கன்னு 65 ரூபாய்னு,175 கன்னுகளை வாங்கி, வேன் வெச்சு தோட்டத்துக்குக் கொண்டு வந்தேன். அந்த கம்பெனிக்காரங்க சொன்ன மாதிரியே,
20 அடி இடைவெளியில நட்டு, களை, உரம், பூச்சிக்கொல்லி, பாசனம்னு முறையாதான் பராமரிச்சுட்டு இருந்தேன். அஞ்சு வருஷத்துக்குள்ள மரமெல்லாம் தளதளனு வளர்ந்துச்சு. 'இன்னிக்கு பூ எடுத்துடும், நாளைக்கு பூ எடுத்துடும்’னு தினமும் குட்டிப்போட்ட பூனை மாதிரி மரங்களையே சுத்திச்சுத்தி வந்தேன். ஆனா, ஒன்பது வருஷம் ஆகியும் பூவும் பூக்கல. பிஞ்சும் பிடிக்கல. அப்படியே அத்தனை மரமும் மலடா நிக்குது. அவங்க 'பில்டப்’ கொடுத்த மாதிரி ஒண்ணுமே நடக்கல. பொறுத்துப் பார்த்துட்டு ஒரு கட்டத்துல கம்பெனிக்கு போன் போட்டேன். 'சில ஊர்கள்ல சீதோஷ்ண நிலை சரியில்லைனா காய்க்கிறதுக்கு 10 வருஷம்கூட ஆகும். அப்ப நல்ல லாபம் பார்க்கலாம். அவசரப்பட்டு மரங்களை அழிச்சுடாதீங்க’னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாகிடுச்சு'' என்ற சுப்பிரமணியம், தொடர்ந்தார்.
குறி வைத்த கூன்வண்டு!
''அவங்க சொன்னதை இன்னமும் நம்பிக்கிட்டு மரங்களைப் பாதுகாத்து பராமரிச்சுட்டு இருக்கேன். இதுவரைக்கும் பூக்குற அறிகுறி தெரியல. ஆனா, இன்னொரு பிரச்னை ஆரம்பிச்சிருக்கு. சிவப்பு கூன்வண்டுகள் படையெடுத்து வந்து, மரங்கள்ல ஓட்டை போட்டு சேதப்படுத்த ஆரம்பிச்சதுல, தளதளனு இருந்த மரங்களெல்லாம் வாடி வதங்க ஆரம்பிச்சுடுச்சு. பக்கத்துல இருக்குற விவசாய ஆபீஸ்ல போய் சொன்னதுக்கு, 'விளக்குப்பொறி, இனக்கவர்ச்சிப்பொறி வெச்சுக் கட்டுபடுத்தலாம்’னு சொன்னாங்க. பொறிகளை வெச்சுட்டு கடுமையான விஷத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லியையும் தெளிச்சேன். ஆனாலும், பிரயோஜனமில்லை. வண்டுகள், பாதி மரங்களை அழிச்சுடுச்சு.
மஞ்சள், கரும்பு, குச்சிக்கிழங்குனு ஒழுங்கா வெள்ளாமை வெச்சு, பத்துக்கு ரெண்டு பழுதில்லாம வருமானம் பாத்துட்டு இருந்தேன். அந்த நிலத்துல பேரீச்சையைப் போட்டு ஒண்ணுமில்லாம நிக்கிறேன். மத்த விவசாயிகளுக்கு இது ஒரு பாடமா இருக்கட்டுமேனுதான் இதை உங்கக்கிட்ட சொல்றேன்'' என்ற சுப்பிரமணியத்தின் பேச்சில் அக்கறை ததும்பியது!
எல்லா மரங்களையும் எரிச்சிட்டேன்!
இதே அனுபவம்தான் அப்பகுதியைச் சேர்ந்த வீரப்ப கவுண்டருக்கும். ''ஒரு ஏக்கர்ல எழுபது பேரீச்சைச் செடியை நட்டு எட்டு வருஷமாச்சு. காய்ப்பும் இல்லை... ஒரு மண்ணும் இல்லை. சிவப்பு கூன்வண்டுகளை ஒண்ணுமே செய்ய முடியல. இந்த மரங்களை அழிச்சது மட்டுமில்லாம பக்கத்துல இருந்த என்னோட தென்னந்தோப்புலயும் வண்டுகள் சேதப்படுத்த ஆரம்பிச்சிடுச்சு. விட்டா மொதலுக்கே மோசமாகிடும்னு மொத்த பேரீச்சை மரங்களையும் மெஷின் வெச்சு பிடுங்கி... பக்கத்துல இருக்குற வறட்டுக் குட்டையில போட்டு தீ வெச்சுட்டேன். பாதிக்கப்பட்ட தென்னை மரங்களையும் பிடுங்கி வெச்சிருக்கேன். அதையும் எரிச்சிடுவேன்'' என்று சோகமாகச் சொன்னார், வீரப்ப கவுண்டர்.
வறட்சியைத் தாங்கி வளராது!
பொலவக்காளிப்பாளையத்தில் மட்டுமில்லை. மற்ற பகுதிகளிலும் இதேபோன்ற பாதிப்புகளே என்பதற்கு சாட்சி சொல்கிறார்... இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படையின் முன்னாள் உதவி ஆணையரும் முன்னோடி விவசாயியுமான கே. தெய்வசிகாமணி.
''திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பக்கத்துல என்னோட தோட்டம் இருக்கு. 200 பேரீச்சைக் கன்னுகளை வாங்கி நட்டேன். பராமரிப்பும் சரியாத்தான் செஞ்சேன். ஆனா, ஒரு பலனும் இல்லை. 'வறட்சியைத் தாங்கி வளரும்’னு சொன்னதே தப்பு. தென்னைக்கு பாய்ச்சுறதைவிட இதுக்கு அதிக தண்ணீர் கொடுக்க வேண்டியிருக்கு. இல்லாட்டி மரம் வாடிடுது. இதுல பெரிய சிக்கலே மகரந்தச் சேர்க்கைதான். 10 பெண் மரங்களுக்கு ஒரு ஆண் மரம் இருக்கணுங்கிறாங்க. இதை வித்தியாசம் கண்டுபிடிக்கிறது பெரிய சிரமம். அதில்லாம கம்பெனிக்காரங்க கொடுக்குற கன்னுல பாதிக்குப்பாதி ஆண் மரமாத்தான் இருக்கு. இதுல இயற்கையா மகரந்தச் சேர்க்கை நடக்காது. நாமதான் ஒவ்வொரு மரத்துலயும் மகரந்தச் சேர்க்கையைச் செய்யணும். இது ரொம்ப கஷ்டமான வேலையா இருக்கு.
அறுவடை செஞ்ச பிறகு பழங்களை அப்படியே விற்பனை செய்ய முடியாது. அதைத் தனியா பக்குபவப்படுத்தித்தான் விற்பனைக்கு அனுப்ப முடியும். இதையெல்லாம்கூட சமாளிச்சுடலாம். ஆனா, பூச்சிகளை ஒண்ணுமே செய்ய முடியல. முக்கியமான விஷயம் என்னான்னா... இந்த விவசாயத் துக்கு அரசாங்க உதவிகள் எதுவுமே கிடையாது. சொட்டு நீர், பயிர்க்கடன், உரம், தொழில்நுட்ப உதவினு எதுவும் அரசு தரப்புல கிடைக்கிறதில்லை.
திசு வளர்ப்பும் துன்பமே!
இப்போ, திசு வளர்ப்பு மூலம் கன்னுங்க விற்பனைக்கு வந்திருக்கு. இந்த மரங்கள்ல கிடைக்கிற பழங்களைப் பதப்படுத்த வேண்டியதில்லை. பறிச்சு அப்படியே விற்பனைக்கு அனுப்பலாம். ஆனா, விற்பனையில நிறைய சிக்கல்கள் இருக்கு. ஒரு கன்னு 60 ரூபாய்னு விதை நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... 3 ஆயிரத்து 500 ரூபாய்க்கு திசுவளர்ப்பு நாத்து வாங்கி வளர்த்தாலும் சரி... பேரீச்சை நட்டா பெருந்துன்பம்தான் வந்து சேரும். இது தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு ஏத்த பயிர் கிடையாது. நட்ட அஞ்சு வருஷத்துலேயே அத்தனை கன்னுகளையும் நான் பிடுங்கிப் போட்டுட்டேன்'' என்று வேதனை பொங்கச் சொன்னார் தெய்வசிகாமணி.
பராமரிச்சா... லாபம்தான்!
பேரீச்சைக் கன்றுகளை விற்பனை செய்துவரும் தர்மபுரி 'சாலியா நர்சரி' உரிமையாளர் நிஜாமுதீனிடம் பேசியபோது, ''விதைகளை முளைக்க வெச்சு உருவாகுற நாத்துகள்ல மகசூல் கிடைக்க ஏழு வருஷத்துல இருந்து பத்து வருஷம் வரைகூட ஆகும். அதுவரைக்கும் பொறுமையா இருந்தா கண்டிப்பா நல்ல மகசூல் எடுத்து லாபம் பாக்கலாம். இதுல சந்தேகமே தேவையில்லை. அதேமாதிரி விற்பனை வாய்ப்பு பத்தியும் கவலைப்படவே தேவை யில்லை. இப்பகூட நல்ல டிமாண்ட்லதான் போயிட்டிருக்கு. கூன்வண்டு, ஊசிவண்டு, நோய்த் தாக்குதல் எல்லாம் எல்லா பயிர்கள்லயும் வரக்கூடியதுதான். அதுக்கு தடுப்பு நடவடிக்கைகளை விவசாயிகள் செஞ்சுக்கணும். சரியான முறையில வாரம் ஒரு தண்ணி கொடுத்து, பராமரிச்சா, பேரீச்சை விவ சாயம் லாபகரமானதுதான்'' என்றவரிடம்,
''நீங்கள் சொல்கிற அத்தனை பராமரிப்பை செய்தும் எந்தப் பலனும் இல்லை என்பதுதானே பொலவக்காளிப்பாளையம் சுப்பிரமணியம் உள்ளிட்ட விவசாயிகளின் குற்றச்சாட்டு' என்று கேட்டோம். இதற்கு, ''சுப்பிரமணியம் தோட்டத் துக்கு எங்க கம்பெனியில இருந்து ஒரு விவசாய ஆலோசகரை அனுப்பி ஆலோசனை சொல்லியிருக்கோம். அதை சரியா கடைபிடிச்சா... அவரும் நல்ல மகசூல் எடுக்கலாம்'' என்று விடாமல் பேசியவர்,
''இப்போ நாங்க இறக்குமதி செய்து விற்பனை செய்ற திசு கல்ச்சர் கன்னுகள்ல அமோக விளைச்சல் கிடைக்கும்'' என்று அடுத்தக் கட்டத்துக்கும் அழைப்பு வைத்தார்.
இதுமட்டுமல்லாது, ''எங்கக்கிட்ட கன்னு வாங்கி நட்ட நிறைய பேர் நல்ல மகசூல் எடுத்துட்டு இருக்காங்க. அவங்க நம்பர் தர்றேன். அவங்ககிட்டயே கேளுங்க'' என்று சொல்லி சிலரின் செல்போன் எண்களையும் கொடுத்தார் நிஜாமுதீன்.
''கியாரண்டியும் இல்ல... வாரண்டியும் இல்ல''
அவர்களில் ஒருவரான, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரிடம் பேசியபோதுதான் தெரிந்தது... 'தம்பி... போன் வயர் பிஞ்சு ஒரு வாரம் ஆச்சு' என்கிற கதை.
''நான் ஒரு ஏக்கர்ல விதைமூலம் வளர்த்த 100 கன்னுகளை நடவு செஞ்சேன். அதுல 20 மரங்கள் ஆண் மரமாகிடுச்சு. 20 மரங்களை கூன்வண்டுகள் அழிச்சுடுச்சு. மிச்சம் 60 மரங்களைக் காப்பாத்தி வெச்சிருக்கேன். இதுல மகரந்தச் சேர்க்கையை நாமதான் செய்ய வேண்டியிருக்கு. இப்போதான் முதல் மகசூலை எடுத்திருக்கேன். மரத்துக்கு சராசரியா 30 கிலோ கிடைச்சுது. போகப்போக ஒரு மரத்துல 100 கிலோவுக்கு மேல கிடைக்கும்னு சொல்றாங்க. விற்பனை செய்றதும் கஷ்டம்தான். ஒவ்வொரு கடையா ஏறி இறங்கித்தான் விக்க வேண்டியிருக்கு. மொத்தத்துல எந்த கியாரண்டியும், வாரண்டியும் இல்லாத விவசாயம் இது'' என்று வேதனைதான் பொங்கியது குணசேகரனின் வார்த்தைகளில்!
விவசாயிகள் விழிப்பு உணர்வு இயக்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் வேளாண் துறை அதிகாரியுமான 'அக்ரி’ வேலாயுதத்திடம் இதைப் பற்றிக் கேட்டபோது, ''கன்றுகளை விற்கும் நர்சரிகளுக்கான விற்பனை உரிமம் மட்டும்தான் வேளாண்துறையினரால் வழங்கப்படுகிறது. உற்பத்திக்கான சான்றிதழ் வழங்கப்படுவதில்லை. விதை உற்பத்திக்கு சான்றிதழ் வழங்கும் முன்பு குறிப்பிட்ட அளவு விதைகளை வேளாண்மை அலுவலக பரிசோதனைக் கூடத்தில் முளைக்கவைத்து... முளைப்புத்திறன் குறைபாடு இன்றி இருந்தால் மட்டுமே, சான்றிதழ் வழங்கும் முறை உள்ளது. ஆனால், 'நாற்றுப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் நாற்றுகள் காய்ப்புத்திறன் கொண்டதா?’ என்கிற பரிசோதனைகள் எல்லாம் நடத்தப்படுவதில்லை. அதற்கான வசதிகளும் செய்து தரப்படவில்லை. எனவே, விற்பனை உரிமத்தை மட்டும் வைத்துக்கொண்டு இதுபோன்ற புதுப்புது ரகங்களை கொள்ளை விலைக்கு விற்று, விவசாயிகள் வாழ்க்கையில் விளையாடுகிறார்கள் சிலர். இப்படி, 'வெளிநாட்டு நாற்றுகளை இறக்குமதி செய்து அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது, முதலில் வேளாண் துறைக்கு தெரியுமா?’ என்பதே சந்தேகத்துக்கு உரியதாக உள்ளது. இது அரசால் தெளிவுபடுத்தப் படவேண்டிய விஷயம். நாற்றுப் பண்ணைகளையும் ஆய்வு செய்வதற்கு தனித்துறை அமைத்தால்தான் இதுபோன்ற கவர்ச்சி வியாபாரிகளிடம் இருந்து விவசாயிகளை ஓரளவாவது காப்பாற்ற முடியும்'' என்று சொன்னார்.
இப்படியெல்லாம் விவசாயிகள் ஏமாற்றப்படும் விவகாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, தமிழக வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தலையாய கடமை என்பதே விவசாயிகளின் கருத்தாக இருக்கிறது
 தொடர்புக்கு,
டாக்டர் ஆர்.எம். விஜயகுமார்,
தொலைபேசி: 0422-6611269
'அக்ரி’ வேலாயுதம்,
செல்போன்: 94437-48966
தெய்வசிகாமணி, செல்போன்: 89036-04727

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites