இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, November 4, 2011

தைராய்டு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்


யற்கையின் படைப்பில் மனிதன் ஒரு உன்னத படைப்பாகும். பல கோடி நரம்புகள், எலும்புகள், தசைகள் பிண்ணிப் பிணைந்து உருவாக்கப்பட்டது தான் மனித உடல். இந்த மனித உடலானது கருவிலிருந்து அதன் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. உடலின் உள்ளே உள்ள சிறு சிறு உறுப்புகளின் செயல்பாடுகள் கூட கரு உருவாகும் போதே தீர்மானிக்கப்படுகிறது. 

இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை நாளமில்லாச் சுரப்பிகள்(Endocrine glands) நம் உடலில் பிட்யூட்டரி, தைராய்டு, பாராதைராய்டு, அட்ரீனல் என பல நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை சுரக்கும் பொருளை இயக்குநீர் அல்லது ஹார்மோன்கள் (Harmone) என்று அழைக்கிறோம்.

நாளமில்லா சுரப்பிகளில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது தைராய்டு சுரப்பியாகும்.

கருவில் குழந்தை உருவாகும்பொழுது அதன் உணவுப் பாதையில் இருந்து கீழ் இறங்கி தொண்டைப் பகுதியில் இருக்கும் குரல்வளையைச் சுற்றி தைராய்டு சுரப்பி அமைந்திருக்கும். சுமார் 15 முதல் 25 கிராம் எடையுள்ள இது வண்ணத்துப் பூச்சியின் வடிவம் கொண்டது. வண்ணத்துப் பூச்சியின் இரு இறகுகள் போன்ற வடிவுடைய பகுதிகள், நடுவில் இணைப்பு திசுவால் (Isthumus) இணைக்கப் பட்டுள்ளது. தைராய்டு சுரப்பி குரல்வளையோடு சேர்ந்து நன்றாகப் பிணைக்கப் பட்டிருப்பதால் சிலருக்கு உணவை விழுங்கும்போது குரல் வளையோடு தைராய்டு சுரப்பியும் மேலே தூக்கப்படுவதைப் பார்க்க முடியும். தைராய்டு ஒருவரின் கண்ணுக்குப் புலப்படுகிற தென்றாலே அது தன் வழக்கமான 25 கிராம் எடையை விட மிகுதியாய் இருக்கிறது என்பதை அறியலாம். 

தைராய்டு அதனுடைய சுரப்புத் தன்மையை கரு உருவாகி இரண்டு வார காலத்தில் இருந்தே துவக்கிவிடுகிறது. சுரக்கும் ஹார்மோனின் பெயர் தைராக்சின். தைராக்சின் தைராய்டு செல்களால் சுரக்கப்படுகிறது. தைராய்டு செல்களிடையே செழிப்பான ரத்த ஓட்டம் இருக்கிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் இருந்து அயோடின் என்ற மூலத்தை இந்த செல்கள் கவர்ந்தெடுத்து தைரோஸின் என்னும் அமைனோ அமிலத்துடன் இணைத்து தைராக்சின் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்பட்ட ஹார்மோன் தைரோகுளோபுலின் சேமித்து வைக்கப்படுகிறது. தேவையான பொழுது இவை இரத்தத்தில் கலக்கப்படுகிறது இந்த தைராக்சின் உருவாகும் செல்கள் அனைத்தும் தைராய்டு ஊக்கி ஹார்மோன் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த ஹார்மோன் பிட்யூட்டரியால் சுரக்கப்படுகிறது. தைராய்டு ஹார்மோன்கள் என்று நாம் கீழ்கண்டவற்றை அழைக்கிறோம்.

T3 - Triiodothyronin

T4 - Thyroxine

TSH - Thyroid stimulating hormone (தைராய்டு ஊக்கி ஹார்மோன்)

தைராய்டு ஹார்மோனின் வேலைகள் 

உடல் வளர்ச்சிக்கும், உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும், தைராய்டு ஹார்மோன்கள் பெரிதும் உதவுகிறது. உடல் வெப்பநிலையை சீராக வைக்கவும் உதவுகிறது. செல் மற்றும் திசுக்களில் நடைபெறும் வளர்சிதை மாற்றத்தின் மூலம் உடலில் வெப்பம் உண்டாக்கப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

· புரதப் பொருள்களை (Protein) சிதைவுப்படுத்தி செல்களின் வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் உதவுகிறது. குளுகோஸ் (Glucose)உறிஞ்சப் படுவதை தூண்டுகிறது. 

· கிளைக்கோஜன் (Glycogen) சிதைவுபட உதவுகிறது.

· கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் எலும்புகளில் இருந்து அதிக அளவில் விடுபட வைக்கிறது. வைட்டமின் அ உருவாக ஏதுவாக உள்ளது.

· குழந்தைகளின் உடல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது.

· இதய துடிப்பை சீராக வைக்க உதவுகிறது. குடலின் உறிஞ்சும் தன்மையை அதிகப் படுத்துகிறது. 

· இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள் சரியாக நடைபெற உதவுகிறது. பால் சுரப்பு கோளங்களை தூண்டி அதிக அளவில் பாலை சுரக்க வைக்கிறது.

தைராய்டு சுரப்பியின் இயக்கக் குறைவினாலோ, மிகுதியாலோ நோய்கள் ஏற்படலாம். தைராய்டு இயக்க குறை நோயை (Hypothyroidism) என்றும் தைராய்டு இயக்க மிகை நோய் (Hyper thyroidism) என்றும் அழைக்கின்றனர்.

தைராய்டு இயக்க குறை நோய்  ( Hypothyroidism)

குழந்தை கருவிலிருக்கும் போதே தைராய்டின் இயக்கம் குறைந்திருந்தால், குழந்தை பிறக்கும் முன் கருப்பையில் குழந்தை சுறுசுறுப்பாக உலாவவில்லை என்ற அறிகுறியின் மூலம் அறியலாம். அப்படிப்பட்ட குழந்தைகள். குழந்தை பிறந்த உடனேயே வீறிட்டு அழுவதில்லை. உடனே மலம் கழிப்பதில்லை, மூச்சு எடுத்து விடக் காலம் கடத்தும். மற்றும் வயிறு பெருத்து, தொப்புளில் குடலிறக்கத்துடன் காணப்படும். இக்குழந்தைக்கு இயல்பாக பிறந்தவுடன் ஏற்படும் மஞ்சள் காமாலை நெடுநாள் வரை நீடிக்கும். பிறந்தது முதல் குழந்தையின் வளர்ச்சியும் முதிர்ச்சியும் மற்ற குழந்தைகளை விட பின் தங்கியே இருக்கும்.

வயதாக வயதாக குழந்தையின் அறிவு முதிர்ச்சி பின்தங்கத் துவங்கும். பெற்றோர்கள் இப்பருவத்தில் இதனை உணரத் துவங்குவார். கற்பதில் குறைபாடுகள், நினைவுக் குறைபாடுகள் ஆகியன தெரிய ஆரம்பிக்கும்.

பிறந்த சில ஆண்டுகளுக்குப் பின் தைராய்டு குறை ஏற்பட்டால், இக்குழந்தைகளின் செயல் வேகம் குறைந்து இருப்பதைக் காண முடியும். பருவ வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகள் தக்க சமயத்தில் பருவம் எய்துவதில்லை.

இதுவே வயது வந்தவர்களுக்கு தைராய்டுக் குறை ஏற்படின் அதைக் கண்டு பிடிப்பதற்கே மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது. 

தலை முடி கொட்டுதல், புருவங்களில் இருந்து முடி உதிர்தல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். முகம் எப்பொழுது பார்த்தாலும் தூங்கி வழிந்தது போலவே இருக்கும். கண்ணைச் சுற்றி ஒரு வீக்கம் இருக்கும். பேச்சு ஏற்றத் தாழ்வில்லாமல், மெதுவான வேகத்தில் இருக்கும். குரல் தடித்திருக்கும். மலச்சிக்கல், நீர் பிரியாமை, உடல் முழுவதும் வீக்கம் ஆகிய பிற அறிகுறிகள் தோன்றலாம். ஆண்மைக் குறைவு, மாத சுழற்சியின் போது உதிரம் அதிகம் போதல், மலட்டுத்தன்மை ஆகியவையும் தைராய்டு இயக்க குறையால் ஏற்படலாம்.

முதுமையில் தைராய்டு இயக்க குறைவு ஏற்பட்டால், அது நரம்புகள் பலம் இழப்பு, நரம்புகள் தடித்துப் போவதால் கைகளிலும், கால்களிலும் மதமதப்பு போன்றவை ஏற்படலாம். கைகால் வலிப்பு உண்டாகலாம். சிறு மூளை, பாதிக்கப்பட்டு தள்ளாட்டமும் நடுக்கமும் ஏற்படலாம்.

தைராய்டு இயக்க மிகை நோய் ( Hyperthyroid)

வளர்சிதை மாற்றம் அதிக அளவில் நடப்பதால் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். அதிக அளவு வெப்பத்தை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. 

வயிற்றுப் போக்கு அதிகம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிலக்கின் போது உதிரம் குறைவாகவே வெளியேறும். 

ஒரு நாளில் பலமுறை மலம் கழிப்பதுண்டு. மனதில் இனம் புரியாத பயம், படபடப்பு ஏற்படும். கைகள் நடுங்கும், இதயம் படபடக்கும். உடம்பெங்கும் வியர்த்துக் கொட்டும். எளிதில் சோர்வு ஏற்படும். சரியான உறக்கம் ஏற்படாது.

வயதானவர்களுக்கு இந்த நோய் ஆண்மை குறைவை ஏற்படுத்தும். மாத சுழற்சி சிலசமயம் நின்றுவிடலாம். இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை வருவதற்கு வாய்ப்புண்டு இதயத்தின் இயக்கம் சீர் கெடும். நாடித்துடிப்பு 200க்கு மேலாகவும் சீரில்லாமலும் இருக்கும்.

பரிசோதனைகள்

தைராய்டு நோய் ஒருவருக்கு இருக்கின்றதா என்று ஆராயும்போது இரண்டு செய்திகள் கவனிக்கப்படுகின்றன.

· தைராய்டு சுரக்கும் ஹார்மோன்கள் குறைவாகவா, சரியாகவா அல்லது மிகுதியாகவா என்பது.

· தைராய்டு சுரப்பியின் வடிவம் எவ்வாறு உள்ளது என்பது.

உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை பரிசோதிப்பது தைராய்டு செயல்படும் நிலையை அறிய உதவுகிறது. இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலை அளப்பது, அடிப்படை வளர் சிதை மாற்ற விகிதத்தைக் கணிப்பது, இரத்தத்தில் கூ3, கூ4, கூகுஏ ஆகியவற்றின் அளவை அளப்பது போன்றவை மற்ற பரிசோதனை முறைகள் ஆகும்.

இதய மின் வரைபடங்களில் (ECG) ஏற்படும் மாறுதல்கள் கூட தைராய்டு செயல்படு நிலையில் உள்ள மாறுபாடுகளை எடுத்துக்காட்டும். 

தைராய்டு சுரப்பியின் வடிவத்தை அறிய எக்ஸ் - கதிர் படம், கணினி அச்சு வெட்டுப்படம், காந்த அதிர்வு படம் மற்றும் நுண் ஒலித் துருவு படங்கள் உதவுகின்றன. கதிரியக்க அயோடின், டெக்னீஷியம் 99-எம், தாலியம் ஆகிய மூலகங்களைத் தைராய்டு சுரப்பி கவரும் தன்மை கொண்டது. இத்தன்மையை பயன்படுத்தி சில துருவுப் படங்கள் எடுப்பதன் மூலம் தைராய்டின் வடிவம் மட்டுமின்றி எந்தப் பகுதி மிகுதியாக வேலை செய்கிறது, எந்தப் பகுதி குறைவாக வேலை செய்கிறது என்பதை அறிய முடியும்.

மருத்துவம்

தைராய்டு இயக்க கோளாறுகளால் ஏற்படும் நோயை தக்க மருத்துவரின் உதவியுடன் அறிந்து அதற்கு உகந்த மருந்துகளை உட்கொள்வது சாலச் சிறந்தது. மற்றும் கடல் சார்ந்த உணவு வகைகளை உட்கொள்வதால் அயோடின் சத்து நம் உடலுக்கு தேவையான அளவு கிடைக்கிறது. இதனால் தைராய்டு நோய்கள் முளையிலேயே தடுக்கப் படுகிறது.

இந்திய மருத்துவ முறைகளில் தைராய்டு சம்பந்தமான நோய்களுக்கு சிறந்த மருந்துகள் உள்ளன. 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites