இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, October 1, 2011

என் புன்னகை

என் புன்னகை என்னும்
முகமூடிக்குப் பின்னால்
ஒளிந்துகொண்டு இருப்பது என் முகமல்ல..
எப்பொழுதும்
அழுதுகொண்டே இருக்கும்
என் இதயம்...
"பெண்"ணென்ற பால்மை வேறுபாட்டின்
வரையறைகளுக்குள்
வார்க்கப்பட்டிருப்பதென்னவோ
வாழ்வின் பெருந்துயரம் தான் தோழி!

நீ
நேசிக்கப்படுவதற்கும்
வாசிக்கப்படுவதற்கும்
செவிகூர்ந்து கேட்கப்படுவதற்கும் பின்னணியில்
நீயொரு "பெண்"ணாக இருத்தலின்
தாத்பர்யம் கூர்மைபெறுகிறது...
"உன்னுடையவை" என்பதான அனைத்துக்கும்
அளிக்கப்படும் பெறுமானம் - நீ
"அவள்" ஆக இருப்பதாலேயே
ஒருபடி தாழ்ந்துவிடுகிறது,
அன்றேல்,
"அவன்" ஆக இருப்பதினின்றும்
வித்தியாசப்படுகின்றது.

வீட்டிலோ வெளியிலோ
கடலிலோ கரையிலோ
காவியக் கதைகளிலோ
எல்லாவகையான வன்மம் தீர்த்தலிலும்
பெண்மை பாத்திரமாகிறது;
நெடுந் துயரத்தின் பாதை
நீண்டு விரிகிறது.

மொழியின் வழக்குக்குள் மட்டுமென்ன,
மானபங்கம் ஒருதலைப்பட்சமானதுதான்!
ஆற்றிலும் சேற்றிலும்
கால்புதைத்து நிமிர்ந்துசெல்லும்
"ஆண்குண"த்தின் மமதைக்கு
வாங்கப்படும் வக்காலத்துக்கள்
பெண்ணென்று வந்திடிலோ
ஆக்கத்தின் அழிவும்
சிரித்தலில் இழிவுமாய்
வகைதொகையின்றி வசைபாடுகின்றன!

பூமிக்கு உவமை சொல்லி
பொங்கியெழல் தவிர்த்ததுவும்...
கற்புக்கு ஒப்புசொல்லி
அதையே சூறையாடியதும்...
ஏய்ப்பதற்கும் மேய்ப்பதற்கும்
கால்நடைபோல் மாற்றியதும்
இன்று நேற்று உள்ளதுவா? - மனம்
மரத்துத்தான் போனதுண்மை!

சமையலுக்கும் சுமைகளுக்கும்
அமைந்ததிந்த வாழ்க்கையெனில்,
வேண்டாம் அது நமக்கு
இன்றே வா மறுதலிப்போம்!
இழிதலற்ற வாழ்வுநோக்கி
இனி புதிய யுகம் படைப்போம்!

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites