இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, October 17, 2011

வாழை நார் ஹேண்ட்பேக்.. வற்றாத வருமானம்

வருவாயை அள்ளித்தரும் வாழை நார்



சுற்றுச்சூழல் விழிப்புணர்வு காரணமாக நிலம், நீர், காற்றுக்கு மாசு ஏற்படுத்தாத பொருட்களுக்கு மவுசு கூடி வருகிறது. அந்த வகையில் வாழை நாரில் உருவாகும் ஹேண்ட்பேக், மிதியடி, பாய் போன்றவை பிரபலமாகி வருகின்றன. அவற்றை தயாரிக்க கற்றுக் கொண்டால் வளமான வாழ்வு நிச்சயம்என்கிறார் கோவை பாப்பம்பட்டியில் வாழைநார் ஹேண்ட் பேக்குகள் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வரும் பாபு. அவர் கூறியதாவது: 
எம்.ஏ. சமூகவியல் படித்துள்ளேன். சொந்த தொழில் செய்ய திட்டமிட்டேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு திரிபுரா சுற்றுலா சென்றபோது, வாழை நார் ஹேண்ட் பேக் தயாரிப்பு பிரபலமாக இருப்பதை அறிந்தேன். அங்குள்ள பயிற்சி றிலையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். பின்னர் ஊரில் ரூ.20 ஆயிரம் முதலீட்டில் தொழிலை தொடங்கினேன். விவசாயிகளிடம் வாழை மட்டைகளை வாங்கினேன். பை பின்னுவதற்கு பெண்களுக்கு பயிற்சி அளித்தேன். அவர்களை வேலைக்கு அமர்த்தி பைகள் உற்பத்தி செய்து விற்க தொடங்கினேன். நல்ல வருமானம் கிடைத்தது. அதை வைத்து தொழிலை விரிவுபடுத்தினேன்.
முதலில் பிளேடால் வாழை மட்டையில் இருந்து நார்களை பிரித்தேன். இப்போது இதற்கென இருக்கும் இயந்திரங்களை பயன்படுத்தி வருகி றோம். 450 பேர் பணி புரிகின்றனர். மாதம் 65 ஆயிரம் பைகள் வரை விற்கிறது. முதலில் ஒரு ஆண்டு கடினமாக இருந்தது. விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்ததால் வெற்றி கிடைத்திருக் கிறது. இதற்கிடையே, தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் சிறந்த தொழில் முனைவோர் விருது கிடைத்தது. 
யார் வேண்டுமானாலும் இதில் ஈடுபடலாம். தேவை அதிகம் இருப்பதால் லாபம் நிச்சயம் உண்டு. எங்கள் நிறுவனத்தில் ரெடிமேடு வாழை நார்கள் விற்கிறோம். வாழை நார் ஹேண்ட்பேக், மிதியடி, தொப்பி, ஷாப்பிங் பேக், டிபன் கூடை, டீ பாய் மேட், ப்ளோர் மேட், அலங்கார மாலை உள்ளிட்ட பொருட்கள் பின்னுவதற்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. ஒரு வாரத்தில் கற்றுக் கொள்ளலாம். 

எளிய முதலீடு 
ஒரு நபர் ஒரு நாளில் 3 பை வீதம் மாதம் 90 பைகள் பின்னலாம். 3 பை தயாரிக்க ஒரு கிலோ வாழை நார், 100 கிராம் சாயப்பவுடர் தேவை. செலவுகள் 200, உழைப்புக்கூலி 100 என உற்பத்திச் செலவுக்கு ரூ.300 செலவாகிறது. மாதம் 90 பைக்கு ரூ.9 ஆயிரம் செலவாகிறது. 

வங்கி கடனுதவி
வாழை நார் பை தயாரிப்பில் பெண்கள் பெரும்பாலானோர் ஈடுபடுவதால், மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு வங்கிகள் கடனுதவி அளிக்கின்றன. தொழில் துவங்க மானியமும் உள்ளதால் பெண்கள் குழுவாக இணைந்து இத்தொழிலை மேற்கொண்டால் நல்ல லாபம் பார்க்கலாம். 
லாபம் ரூ.13 ஆயிரம்
ஒரு பையின் உற்பத்தி செலவு ரூ.100. பையின் டிசைனுக்கேற்ப ரூ.175 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யலாம். மாதத்துக்கு 90 பைகள் விற்றால் வருவாய் குறைந்தபட்சம் ரூ.15,750, அதிகபட்சம் ரூ.22,500. இதில் லாபம் மட்டும் ரூ.6,750 முதல் ரூ.13,500 வரை கிடைக்கிறது. கண்காட்சிகளில் சொந்தமாக ஸ்டால் போட்டு விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

எப்படி தயாரிப்பது?

மூலப்பொருட்கள்: வாழை மட்டை, நார் பிரித்தெடுக்கும் இயந்திரம், உப்பு, சாயப்பொடி. கிடைக்கும் இடங்கள்: வாழை மட்டை விவசாயிகளிடம் கிடைக்கும். சாயப்பவுடர் பேன்சி ஸ்டோர்களில் கிடைக்கும். நார் எடுக்கும் இயந்திரம் கோவை, சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களில் கிடைக்கிறது. ஆர்டர் கொடுத்தால் தயாரித்து கொடுப்பார்கள். இயந்திரம் வாங்க முடியாதவர்கள் பிளேடு வைத்து கையாலேயே வாழை மட்டையில் நார்களை உரிக்கலாம். வாழை நார் ரெடிமேடாகவும் கிடைக்கிறது.
கட்டமைப்பு: வீட்டின் வெளியே நார் உரிக்கும் இயந்திரம் வைக்கவும், நார்களை காய வைக்கவும், வீட்டினுள் பைகளை பின்னுவதற்கும் குறைந்தபட்ச இடம் போதும். இயந்திரத்தின் விலை ரூ.65 ஆயிரம். வீட்டில் வைத்து தொழில் செய்தால் இயந்திரம் தேவையில்லை.
தயாரிக்கும் முறை: வாழைத்தண்டுகளில் உள்ள மட்டைகளை உரித்து எடுக்க வேண்டும். அவற்றை ஒன்றரை அடி அளவில் வெட்டிக் கொள்ள வேண்டும். இயந்திரத்தில் மட்டைகளை சொருகினால் நார் நாராக வெளிவரும். அவற்றிலுள்ள நீரை பிழிந்து, வெயிலில் காய வைக்க வேண்டும். நாரின் இரு முனைகளையும் கயிற்றால் கட்டி வைக்க வேண்டும். 2 குடம் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் 100 கிராம் தேவைப்படும் கலர் சாயப்பவுடர், ஒரு கிலோ உப்பு போட்டு சாயம் உருவாக்க வேண்டும். அதில் இரு முனைகளும் கட்டப்பட்ட நார்க்கட்டுகளை 5 நிமிடம் ஊற வைத்தால், சாயம் ஏறிய நார் கிடைக்கும். அவற்றை அரை மணி நேரம் உலர வைத்து, நூல், நூலாக பிரிக்க வேண்டும். அவற்றை கொண்டு பொருட்கள் தயாரிக்கலாம்.

எடை குறைவு ; புதுப்புது டிசைன்
பிளாஸ்டிக் வயரால் பின்னப்படும் பைகள் எடை அதிகமாக இருக்கும். வளைந்து கொடுக்காது. வாழை நார் பைகள் எடை குறைவாக இருப்பதோடு துணியை போல் வளைந்தும் கொடுக்கும். அழுக்கானால் சோப்பு நீரில் ஊறவைத்து அலசினால் போதும். பளிச்சென்று புதுப்பொலிவு பெற்றுவிடும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக பயன்படுத்தப்பட்டு வரும் காகிதப்பை நீண்ட நாள் உழைப்பதில்லை. ஆனால் வாழை நார் பைகள் நீண்ட காலம் உழைப்பவை. வண்ணமயமாக, ஸ்டைலாக உருவாக்கப்படும் வாழை நார் ஹேண்ட் பேக்குகளை பெண்கள் மற்றும் வெளிநாட்டினர் அதிகம் விரும்புகின்றனர். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாவதால் கிராக்கி அதிகம் உள்ளது.
ஹேண்ட் பேக் மட்டுமல்ல காய்கறி, பழங்கள் ஆகியவற்றை காற்றோட்டமாக வைக்கக்கூடிய பை உள்பட அனைத்து வகை பைகளையும் வாழை நாரில் தயாரிக்க முடியும். வாடிக்கையாளரின் தேவைக்கேற்ற டிசைனில் தயாரித்தால் தொழிலில் ஜொலிக்கலாம். தற்போது கல்லூரி மாணவிகளை பொருத்தவரை வாழை நார் பைகள் தான் புது பேஷனாக உள்ளது.


தமிழகத்தின் மிக முக்கியமான பணப்பயிர்களில் வாழையும் ஒன்று. புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களால் சில நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் நல்ல வருமானம் தரக்கூடியது. இந்தியாவில் சுமார் 6,45,000 ஹெக்டேரில் வாழை பயிர் செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1,15,000 ஹெக்டேரில் பல்வேறு ரகங்களில் வாழை பயிரிடப்படுகிறது.
வாழை என்றால் உடனே நினைவுக்கு வருவது வாழைப்பழம் தான் என்றாலும் இலை, காய், பூ, தண்டு என வாழையின் எந்த வொரு பாகமும் வீண் போவதில்லை. அதன் அனைத்துப் பாகங்களும் ஏதோவொரு வகையில் பயன்படுத்தப்படுகின்றன.
தற்போது வாழை நார் மூலம் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கென உருவாக்கப்பட்டுள்ள இயந்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் எட்டு மணி நேரத்தில் 30 கிலோ வாழை நார்களை எளிதில் பிரித்தெடுக்க முடியும்.
வாழைநாரில் இருந்து அலங்காரத் தொப்பிகள், கூடைகள், பை, பாய்கள், திரைச்சீலைகள் போன்ற பல்வேறு மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் வாழை நார்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறப்புக் காகிதங்கள் வாழ்த்து அட்டைகள் தயாரிக்கவும் பயன்படுகின்றன.

மேலும் வாழை நார்கள் தண்ணீரின் மேல் மிதக்கும் எண்ணெயை அதிக அளவில் உறிஞ்சும் தன்மை கொண்டுள்ளதால் வாழை நார்களைப் பயன்டுத்தி கடலில் கலக்கும் எண்ணெயை எளிதில் பிரிக்க முடியும் என்று ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் வாழை நார்களுக்கு நல்ல வரவேற்பு காத்திருக்கிறது. சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள பிரபல உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனம் வாழை நார்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளை அறிமுகம் செய்தது. அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

வாழை நாரால் தயாரிக்கப்படும் புடவைகள் எடை குறைவாகவும், மிருதுவாகவும், அதிக ஈரத்தன்மை உறிஞ்சும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன. இதனால் வாழைநார் புடவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தினந்தோறும் ஒரு ஷிப்ட் வீதம் மாதத் திற்கு 26 நாட்கள் வேலை செய்தாலே மாதம் ரூ.22,780 வருவாய் கிடைக்கும். வாழை நாரிலிருந்து உபபொருட்களாகக் கிடைக்கும் வாழைச் சாற்றிலிருந்து திரவ உரம் தயாரிக்க முடியுமா என்று தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வாழைச்சாறு தவிர மற்ற கழிவுகளை நன்கு மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்கலாம். அதன்மூலமும் வருமானம் கிடைக்கும். வாழை அதிகம் விளையும் ஒவ்வொரு கிராமத்திலும் தனி நபராகவோ அல்லது சுய உதவிக் குழுக்கள் மூலமாகவோ இத்தகைய மதிப்புக்கூட்டும் தொழிலை எளிதில் செய்ய முடியும்.


வாழை தொழிற்நுட்ப பயிற்சி
வாழை தேசிய ஆராய்ச்சி மையம் (NRCB) வாழை, வாழை நார் பிரித்தெடுத்தல், கைவினை பொருட்கள் தயாரித்தல் மற்றும் பிந்திய அறுவடை கையாளுதல், பழுக்க வைக்கும் உத்திகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மீது பயிற்சி திட்டங்களை அளிக்க இருக்கிறது.

மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு பற்றிய  ஜூலை 11 முதல் 16 வரை நடக்கும்
வாழை நார் பிரித்தெடுத்தல் மற்றும் தயாரித்தல் கைவினை பொருட்கள் மீது பயிற்சி ஜூலை 26 மற்றும் 28 ஜூலை இடையே நடக்கும்.
ஏற்றுமதி வாழை, அறுவடை கையாளுதல் மற்றும் பழுக்க நுட்பங்கள் ஆகஸ்ட் 9 மற்றும் 12 இடையே நடத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு அணுகுவீர்:
M.M. Mustaffa, இயக்குனர், National Research Center for Banana, Tiruchy, தொலைபேசி எண் :04312618106
இயக்குனர்

தேசிய வாழை ஆராய்ச்சி மையம் 

தோகமலை ரோடு
தயனூர் தபால் நிலையம் திருச்சிராப்பள்ளி - 620017, 
தமிழ்நாடு.
தொலைப்பேசி: 91-431-2618104, 2618106தொலைநகலி: 91-431-2618115மின்னஞ்சல்: nrcbdirector@sancharnet.in  directornrcb@gmail.com
try_nrcbaris@sancharnet.in 



வாழை நார் பிரித்தெடுக்கும் இயந்திரங்கள் மற்றும் இதர தொழில் நுட்பங்கள் தேவைக்கு :
வாழைநார் ஆராய்ச்சி மையம்,
22,
நல்லப்பன் தெரு, குரோம்பேட்டை,சென்னை – 600 044என்ற முகவரியில் பெறலாம்.
தொலைபேசி : 044-2223 1796. செல்பேசி :94440 15576.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites