இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

ஊறுகாய் தயாரிப்பது

புதினா ஊறுகாய் பற்றி இங்குள்ளவர்களுக்கு அவ்வளவாக தெரியாததால், அதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். இப்போது திருப்பூரில் எங்களின் புதினா ஊறுகாய் தான் பிரபலம். வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறோம். சிறிய பைகள், பாட்டில்களில் அடைத்து தினசரி 15 கிலோ விற்கிறோம். இத்தொழிலுக்கு பெரிய அளவு முதலீடு தேவையில்லை. தரத்தோடும், சுவையோடும் தயாரித்தால் நல்ல வருமானம் ஈட்டலாம்.

வீட்டிலேயே தயாரிக்கலாம்

தனி இடம் தேவையில்லை. வீட்டு சமையலறையே போதும். பொருட்களை அரைக்க மிக்ஸி, 2 பிளாஸ்டிக் டப், ஒரு கிலோ கொள்ளளவு உள்ள பாட்டில்கள், 50, 100, 200 கிராம் கொள்ளளவு உள்ள பிளாஸ்டிக் கவர்கள் தேவை. புதினா மற்றும் இதர பொருள்கள் மொத்த காய்கறி மார்க்கெட்டிலும், பாட்டில்கள் பழைய பாட்டில் வியாபாரிகளிடமும் குறைந்த விலையில் கிடைக்கும்.

முதலீடு குறைவு

வீட்டில் உள்ளவர்கள் பகுதி நேரமாகவோ, முழு நேரமாகவோ செய்யலாம். தினசரி 15 கிலோ ஊறுகாய் தயாரிக்கலாம். ஒரு கிலோ ஊறுகாய் தயாரிக்க தேவையான பொருட்களுக்கு ரூ.60 செலவாகும். தினசரி முதலீட்டு செலவு ரூ.900. மாதம் ரூ.27 ஆயிரம் வேண்டும்.பாட்டிலில் அடைத்து விற்றால் ரூ.80க்கு குறையாமலும், பாக்கெட்கள் மூலம் விற்றால் ரூ.110க்கு குறையாமலும் விற்கலாம். தினசரி குறைந்தபட்ச லாபம் ரூ.300 முதல் அதிகபட்சம் ரூ.750 வரை என மாதம் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.22,500 வரை லாபம் பார்க்கலாம்.

சந்தை வாய்ப்பு

புதினா ஊறுகாய்க்கு நல்ல மவுசு உள்ளது. கடைகளுக்கும், வீடுகளுக்கும் சாம்பிள் கொடுத்து ஆர்டர் பிடிக்கலாம். ஒருமுறை வாங்கியவர்கள், அடுத்து தானாகவே நம்மை தேடி வந்து ஆர்டர் தருவார்கள். உணவகங்களிலும் விற்பனை செய்யலாம்.

ஸ்பெஷல் புதினா ஊறுகாய்

ஒரு கிலோ புதினாவை சுத்தம் செய்து நறுக்கி, உப்பு 100 கிராம், மிளகாய், புளி தலா 25 கிராம், இஞ்சி, மல்லி, சீரகம் 2 டேபிள் ஸ்பூன் அளவு வீதம் சேர்த்து மிக்சியில் போட்டு கெட்டியாக அரைத்துக்கொள்ள வேண்டும். 300 மி.லி. நல்லெண்ணெயை வாணலியில் ஊற்றி, இதை போட்டு தாளித்தால் நிமிடத்தில் புதினா ஊறுகாய் தயார். மாங்காய், எலுமிச்சை, நார்த்தங்காய் ஊறுகாய்களை போல, புதினா ஊறுகாய்க்கு ஊற வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

விதவிதமான ஊறுகாய் தயாரிப்பது எப்படி?

எல்லா வகையான ஊறுகாய்களையும் தயாரிப்பது எளிதுதான். பக்குவம் தவறிவிடக்கூடாது. சுவையில் மற்ற ஊறுகாயில் இருந்து வித்தியாசம் காட்ட வேண்டும். அப்போதுதான் மார்க்கெட்டில் நிற்கும்.

பூண்டு

வாணலியில் 400 மி.லி. நல்லெண்ணெய் ஊற்றி, 2 ஸ்பூன் கடுகு தாளித்து, அரை ஸ்பூன் மஞ்சள் தூள், 2 ஸ்பூன் பெருங்காயத்தூள், ஒரு கிலோ உரித்த பூண்டு போட்டு வதக்க வேண்டும். பூண்டு பொன்னிறமாக வதங்கியவுடன் தேவைக்கேற்ற உப்பு, 20 எலுமிச்சம்பழங்களின் சாறு ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். சாறு வற்றியவுடன் 300 கிராம் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறினால் பூண்டு ஊறுகாய் தயார்.

எலுமிச்சை

40 எலுமிச்சம்பழங்களை நன்றாக கழுவி, துண்டுகளாக வெட்டி, தேவையான அளவு உப்பு போட்டு ஒருநாள் முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் அவற்றை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் மீண்டும் மூடி வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் பகலில் வெயிலிலும், இரவில் மூடியும் வைக்க வேண்டும். காய்ந்த மிளகாய் 40, 2 ஸ்பூன் வெந்தயம், 4 ஸ்பூன் பெருஞ்சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து அவற்றை எலுமிச்சம்பழத்தோடு கலக்க வேண்டும். அதில் சிறிதளவு உப்பு, ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு 2 நாள் மூடி வைக்க வேண்டும். இடை இடையே உலோகமில்லாத கரண்டியால் கிளறி வந்தால் எலுமிச்சை ஊறுகாய் தயாராகும்.

மாங்காய்

8 மாங்காயை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் 6 ஸ்பூன் எண்ணெய் விட்டு 2 ஸ்பூன் கடுகு தாளித்து, அதில் மாங்காய் துண்டுகளைப் போட்டு வதக்க வேண்டும். அதில் 200 கிராம் மிளகாய்ப்பொடி, 4 பிடி உப்பு, ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 2 ஸ்பூன் பெருங்காயம், 2 ஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை போட்டு பச்சை வாசனை போகும்வரை கிளறினால் மாங்காய் ஊறுகாய் ரெடிதேவையான பொருட்கள்
வடு - அரைக்கிலோ
கடுகு ‍ 2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
ம‌ஞ்ச‌ள் பொடி தேவையான‌ அள‌வு
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு - முக்கால் ஆழாக்கு
செய்முறை
மாவடுவை நன்றாக கழுவ வேண்டும். அதனுடன் எண்ணையை ஊற்றி கலந்து வைக்க வேண்டும். கடுகுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து, அதை மாவடுவோடு கலக்க வேண்டும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, உப்புத்தூள் ஆகியவற்றை மாவடுவுடன் கலந்து மூடி வைக்க வேண்டும். தினமும் காலையில் ஜாடியைக் குலுக்கி வைத்து அதை ஊறவிட வேண்டும். நன்கு ஊறியவுடன் எடுத்து பயன்படுத்த வேண்டும்.
.

நெல்லிக்காய்

8 பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியில் 6 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் கடுகு, 2 ஸ்பூன் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், ஏற்கனவே வறுத்து பொடியாக்கிய 3 ஸ்பூன் கடுகு, 4 ஸ்பூன் வெந்தயம் மற்றும் நெல்லிக்காய், 3 ஸ்பூன் உப்பு போட்டு கிளறினால் நெல்லிக்காய் ஊறுகாய் தயார். இதில் 4 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து ஒரு நிமிடம் அடுப்பில் கிளறியும் தயாரிக்கலாம்.

இஞ்சி, மிளகாய்

அரை கிலோ பச்சை மிளகாய், 200 கிராம் இஞ்சியை துண்டாக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக கலந்து 10 ஸ்பூன் உப்பு, 2 ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு, 20 எலுமிச்சம்பழத்தின் சாற்றை ஊற்றி கலக்க வேண்டும். வாணலியில் 4 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் பெருங்காயம், 8 ஸ்பூன் கடுகு ஆகியவற்றைப் போட்டு தாளித்து அதில் இஞ்சி, மிளகாய் கலவையை போட்டு லேசாக கிளறினால் தயாராகிவிடும்.
 
 
 
காய்கறி உறுகாய்   தேவையான பொருட்கள்

நறுக்கிய காரட் - 100 கிராம்
பட்டாணி - 100 கிராம்
பிஞ்சு பீன்ஸ் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 10
நறுக்கிய சின்ன வெங்காயம் - ஒரு கப்
மிளகாய்த்தூள் - 3/4 கப்
எலுமிச்சம் பழம் - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
வினிகர் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

பச்சைமிளகாயை வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். நறுக்கி வைத்த காய்கறிகளை வினிகரில் வேக வைத்து குழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு கலந்து கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெயை ஊற்றி கடுகைத் தாளித்து ஊறுகாயில் ஊற்ற வேண்டும். எலுமிச்சம் பழ சாற்றை ஊறுகாயில் பிழிந்து கரண்டியால் கிளறி விட வேண்டும். பின்பு அதில் வினிகர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளரி காய் உறுகாய்

தேவையான பொருட்கள்
வெள்ளரிக்காய் - 3
வினிகர் - 2 தேக்கரண்டி
சோயா ஸாஸ் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 1தேக்கரண்டி
உப்பு - 1 தேக்கரண்டி
செய்முறை
வெள்ளரிக்காயை கழுவி சுத்தம் செய்து நீளவாக்கில், சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின் வெள்ளரித் துண்டுகளின்மேல் உப்பை தூவி முப்பது நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதற்கிடையில் சோயா ஸாஸ், வினிகர், சர்க்கரை இவைகளை ஒன்றாகக் கலந்து அதனுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும்.
முப்பது நிமிடம் கழித்து வெள்ளரித்துண்டுகளை உப்பு போக கழுவிவிட வேண்டும். பின் கழுவிய வெள்ளரித்துண்டுகளை தயாராக வைத்திருக்கும் கரைசலில் சேர்க்க வேண்டும். இதனை ஒரு வாரம் வரை ப்ரிஜில் வைத்து பின் எடுத்து உபயோகிக்க வேண்டும்

 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites