இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, October 16, 2011

ரெடிமேடு சுடிதார்.. நல்ல வருமானம்


ஆண்கள் ரெடிமேடு சட்டைகளை விரும்புவது போல, பெண்களும் ரெடிமேடு சுடிதார்களை விரும்புகின்றனர். வித்தியாசமான டிசைன்கள், விலை குறைவு போன்றவற்றால் ரெடிமேடு சுடிதார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இவற்றை தயாரித்து விற்றால் லாபகரமான தொழிலாக இருக்கும் என்று கூறுகிறார் திருப்பூர் மாவட்டம் உடுமலை எஸ்.வி.மில் அருகே நிலா டிசைனர்ஸ் நடத்தி வரும் வளர்மதி. அவர் கூறியதாவது: பிளஸ் 2 முடித்ததும் தையல் கற்றேன்.  வீட்டில் இருந்தவாறே ஜாக்கெட்கள் தைத்து கொடுத்தேன். திருமணத்துக்கு பின் வீட்டில் தைத்து வந்தேன்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் தையல் நிலையம் தனியாக துவக்கினேன். 3 பேரை வேலைக்கு அமர்த்தினேன். அருகில் மகளிர் கல்லூரி உள்ளதால், மாணவிகள் பலர், ‘துணியை நீங்களே எடுத்து சுடிதார் தைத்து கொடுங்கள்’ என்றார்கள். இதற்காக துணிகளை வாங்கி வந்து இருப்பு வைத்தேன். அதை தேர்வு செய்து கொடுத்தனர். தையலோடு, துணி விற்பனையும் நடந்தது.  ‘பலர் ரெடிமேடாக சுடிதார் இருக்கிறதா?’ என்று கேட்டார்கள். இதற்காக பல்வேறு சைஸ்களில் ரெடிமேடு சுடிதார்களையும் தைத்து விற்பனைக்கு வைத்தேன்.

சுடிதார் அளவு தேர்வு செய்ய ஒவ்வொரு அளவிலும் மாதிரி சுடிதார்களை தயாரித்து வைத்தேன். அவற்றை போட்டு பார்த்து அளவை தெரிந்து கொண்டபின், துணி ரகம், தையல் டிசைன், கலர் போன்றவற்றை தேர்வு செய்தால் போதும். ரெடிமேடு சுடிதார்களை தேர்வு செய்வது அவர்களுக்கு எளிதாக இருந்தது.
தற்போது எனது கடையில் பெண்கள் கொண்டு வரும் துணியை தைத்து கொடுப்பது, இங்கு அவர்கள் தேர்வு செய்யும் துணிக்கு தைத்து கொடுப்பது, ரெடிமேடாக விற்பது என்று 3 முறையில் தொழில் நடக்கிறது.

தொழில் அபிவிருத்திக்கு வெண்புறா மகளிர் சுய உதவி குழு அமைத்து கடனுதவி பெற்றேன். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமும் வாடிக்கையாளர்கள் பெருகினர். என்னதான் அழகாக சுடிதார் தைத்தாலும், உள்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாக தயாரிப்பது தொழில் வெற்றிக்கு முக்கியமானது. இவ்வாறு வளர்மதி கூறினார்.

தயாரிப்பது எப்படி?

சுடிதார் தைப்பதற்கு அடிப்படை கட்டிங் செய்வது தான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டி ருக்கும். அதில் டாப்ஸின் முன்புற மேல்பகுதி டிசைன் மற்றும் சுடிதாரின் மாடல் இடம்பெற்றிருக்கும். அதன்படி வெட்டி தைக்க வேண்டும். இதில் மீடியம்(எம்), லார்ஜ்(எல்), எக்ஸ்ட்ரா லார்ஜ்(எக்ஸ் எல்), டபுள் எக்ஸ்ட்ரா லார்ஜ்(டபுள் எக்ஸ் எல்) என்று தனித்தனி அளவுகள் உள்ளன.

சுடிதாரில் டாப்ஸ், பேன்ட் என்று 2 பாகங்கள் உள்ளன. டாப்ஸில் சோல்டர், உயரம், உடல் சுற்றளவு, இடுப்பு, பாட்டம் அகலம், கை உயரம், கை அகலம், பேன்டில் இடுப்பு சுருக்கு, பெல்ட் பிளிட்ஸ், உயரம், லூஸ், பாட்டம் அகலம் என்று தனித்தனி அளவுகள் உள்ளன.  சில டாப்ஸ்கள் கை இல்லாமலும் (ஸ்லீவ்லெஸ்), சில முழுக்கையாகவும்(புல் ஸ்லீவ்ஸ்) இருக்கும். அதற்கு நிலையான அளவுகள் உள்ளன.

சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்து கொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் சுடிதார் ரெடி.
பயிற்சிக்கு: சுடிதார்களின் அளவு அறியவும், வெட்டவும், தைக்கவும் பயிற்சி வேண்டும். ஒரு மாதம்  பயிற்சி எடுத்தால் முறையாக கற்றுக்கொள்ளலாம்.

முதலீடு

குறைந்தபட்சம் 15க்கு 15 அடியில் 2 அறைகள் வேண்டும். 3 லோக்கல் தையல் பவர் மெஷின் தலா ரூ.9 ஆயிரம்(பழையது ரூ.5 ஆயிரம்). ஒரு ஓவர்லாக் மெஷின் ரூ.7 ஆயிரம்(பழையது ரூ.4 ஆயிரம்), ஒரு ஜிக்ஜாக் மெஷின் ரூ.10 ஆயிரம் (பழையது ரூ.7 ஆயிரம்), எம்ப்ராய்டரி மெஷின் ரூ.15 ஆயிரம் (பழையது ரூ.10 ஆயிரம் வரை). 4 ஷெல்ப் தலா ரூ.4 ஆயிரம்.

கட்டிங் டேபிள் ரூ.3 ஆயிரம், அயர்னிங் டேபிள் ரூ.3 ஆயிரம். தையல் மெஷின் ஒயர் ஸ்டூல் 3 ரூ.2400, 4 கத்தரிக்கோல் ரூ.1000, 6 அளவை நாடா (டேப்) தலா ரூ.60, ஹேங்கர் 5 டஜன் ரூ.300, 2 சுடிதார் அளவை ஸ்கேல் ரூ.80, இட வாடகை அட்வான்ஸ் ரூ.20 ஆயிரம். மொத்த முதலீட்டுக்கு (பழைய மெஷின்களாக வாங்கினால்) ரூ.60 ஆயிரம் வேண்டும்.

கிடைக்கும் இடங்கள்

தையல் இயந்திரங்கள், தளவாட சாமான்கள் மற்றும் தேவைப்படும் பொருட்கள் அனைத்து நகரங்களிலும் கிடைக்கும். எனினும் தையல் இயந்திரங்கள் திருப்பூரில் குறைந்த விலையிலும், சுடிதார் துணி வகைகள் சென்னை, பெங்களூர், மதுரை, கோவை,  ஈரோட்டில் குறைந்த விலையில் கிடைக்கும்.

உற்பத்தி செலவு!

ஒரு நாளைக்கு ஒரு நபர் மூலம் ஒரு ஷிப்டில் 6 சுடிதார் தைக்கலாம். 3 பேர் மூலம் 18 சுடிதார் என மாதம் 25 நாளில் 450 சுடிதார் தைக்கலாம். ஒரு சுடிதாருக்கு டாப்ஸ்(இரண்டரை மீட்டர்), பேன்ட்(2 மீட்டர்), சால்(2 மீட்டர்) என 7 மீட்டர் துணி வேண்டும். இவை அனைத்தும் அடங்கிய துணி ஒரே பேக்கிங்கில் இருக்கும். இதில் காட்டன் மற்றும் சிந்தடிக் துணிகள் ரகம் வாரியாக ரூ.150 முதல் ரூ.600 வரை வாங்கலாம்.

இதில் ரூ.150 மதிப்புள்ள துணியில் 150 சுடிதார்கள், ரூ.200 துணியில் 100, ரூ.250, ரூ.300 துணிகளில் தலா 50, ரூ.350, ரூ.400, ரூ.450, ரூ.500, ரூ.600 மதிப்புள்ள துணிகளில் தலா 20 என 100 என்று 450 சுடிதார்கள் தைக்க துணி கொள்முதல் செலவு ரூ.1.16 லட்சம். லைனிங் துணி ரூ.22,500, தையல் கூலி, தையல் பொருள் செலவுகள் ரூ.22,500, மின்கட்டணம், இட வாடகை உட்பட நிர்வாக செலவுகள் ரூ.9 ஆயிரம், கட்டிங், அயர்னிங், பேக்கிங் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் உரிமையாளர் சம்பளம் ரூ.10 ஆயிரம். ஒரு மாத உற்பத்திக்கு ரூ.1.8 லட்சம் வேண்டும்.

மாதம் ரூ.51 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

உற்பத்தி செய்யப்பட்ட சுடிதார்களை அதே கடையிலேயே வாடிக்கையாளர்களுக்கு விற்கலாம். விற் காமல் மீதமானதை இருப்பில் வைத்தால் பண்டிகை, திருவிழாவின் போது எளிதில் விற்று விடலாம். சுடிதார் துணியின் ரகத்திற்கேற்ப ரூ.400 முதல் ரூ.850 வரை விற்கலாம். இதன் மூலம் மாத வருவாய் ரூ.2.31 லட்சம் கிடைக்கும். இதில் லாபம் ரூ.51 ஆயிரம்.

கடைகளுக்கு விற்கலாம்!

ரெடிமேடு சுடிதார்கள் கிராமப்புற ஜவுளிகடைகள், ரெடிமேடு கடைகளில் கூட மற்ற ஆடைகளுக்கு இணையாக விற்கப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் சுடிதார்களை பல்வேறு ஊர்களில் உள்ள கடைகளுக்கு மொத்தமாக குறைந்த லாபத்தில் விற்கலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites