இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 7, 2011

சிங்கப்பூர் சுற்றுலா

1 புதிய லாண்ட் மார்க் ? விரிந்த சாலைகள், உயர்ந்த கட்டிடடங்கள், எங்கும் சுத்தம், எதிலும் ஒழுங்கு என்று பாராட்டப்படும், உலக நாடுகளில் அதிகமாக சுற்றுலா பயணிகளைப் பெறுகிற ஒன்றாகத் திகழும் சிங்கப்பூர் உங்களில் பலரும் சென்ற வந்த இடமாகவே இருக்கக் கூடும். சென்றிராதவருக்கு சில தகவல்கள் உதவலாம் என்றும், சென்ற வந்த நினைவுகள் மறக்காமல் இருக்கவும் என் பயண அனுபவத்தை.. என் கேமரா பார்வையில், சிறுகுறிப்புகளாக, சிலபல பாகங்களாகப் பகிர்ந்து கொள்ள உள்ளேன். விரிவான பயணக்கட்டுரையாக இல்லாமல் அதாவது பயணக் கதைக்குப் ‘படங்கள்’ என்றில்லாது, எடுத்த ஐநூறுக்கும் அதிகமான படங்களில் வடிகட்டித் தரவுள்ள சுமார் நூறு படங்களுக்கான ‘கதை’ எனக் கொள்ளலாம்:)!

# 2 அதிர்ஷ்டத்தின் அடையாளச் சின்னம்
சிங்கப்பூருக்கு அதிர்ஷ்டத்தை அழைத்து வருகிற அடையாளச் சின்னமாகக் கொண்டாடப்படும் மெர்லயன் சுற்றுலா செல்லுபவர்கள் தவறவிடாத இடம். ‘மெர்’ என்றால் கடல். கீழுள்ள மீனுடல் ஒருகாலத்தில் இந்நாடு மீன்பிடி கிராமமாகத் திகழ்ந்ததின் குறியீடாகவும், சிங்கத் தலை சிங்கப்புரா (லயன் சிட்டி) எனும் அதன் புராதனப் பெயரின் குறியீடாகவும் அமைந்துள்ளது.


சிங்கப்பூர் நதியோரமிருக்கும் இவ்விடத்திலிருந்தே எஸ்ப்ளனேட், மெரினா பே சான்ட்ஸ் (Marina Bay Sands) , தென்கிழக்கு ஆசியாவின் உயர்ந்த கட்டிடங்களுள் ஒன்றான Swissotel The Stamford ஹோட்டல், உலகின் அதி உயர சிங்கப்பூர் ஃப்ளையர் அனைத்தும் காணக் கிடைப்பதால் சுற்றலாப் பயணிகள் சுழன்று சுழன்று அவற்றைப் படமாக்கியபடி இருந்தார்கள் இப்படி:
# 3 Marina Bay Sands
அந்த ஜோதியில் நானும் ஐக்கியமானேன். சிங்கப்பூர் என்றாலே மெர்லயனே முக்கிய லாண்ட்மார்க்காக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது போய் அந்த இடத்தை சாண்ட்ஸ் ஹோட்டல் பிடித்துக் கொண்டு வருகிறதோ எனத் தோன்றுகிறது. அதனாலாயே ஒரு மாறுதலுக்கு முதல் படமாக அதைப் பகிர்ந்தேன்! 57 மாடிகளைக் கொண்ட இந்த ஹோட்டலின் மூன்று கட்டிடங்களையும் இணைக்கிறது நீர்ச்சறுக்குப் பலகை போன்ற தோற்றத்துடனான ஸ்கை பார்க் எனும் மேல் தளம். அதில் 150 மீட்டர் நீள நீச்சல் குளம் அமைந்திருப்பது கூடுதல் ஈர்ப்பு.
# 4
ஆடம்பர ஹோட்டலான இதில் தங்குபவர் தவிர்த்து மேலிருந்து சிங்கப்பூரினை ரசிக்க ஐம்பது பேர்கள் கொண்ட குழுக்களாக தலைக்கு இருபது டாலரை வசூலித்து அனுப்பி வைக்கிறதாம் நிர்வாகம். இரவு நேரத்தில் விளக்கின் ஜாலத்தில் இந்த ஹோட்டல் ஜொலிக்கும் அழகைக் காணவே பலர் மாலையில் மெர்லயன் பக்கம் செல்வதுண்டு. எங்கள் பயணத்திட்டத்திலும் மாலையாக இருந்த சிடி டூரை நாங்கள்தான் காலை நேரத்துக்கு மாற்றி விட்டிருந்தோம். பிறகுதான் ஏன் மாலையில் செல்ல வற்புறுத்தப்பட்டோமெனப் புரிந்தது.

சற்றுத் தள்ளி அமைந்த, 2002 ஆம் வருடம் நிர்மாணிக்கப்பட்ட எஸ்ப்ளனேட் கட்டிடம் உலகின் அதிமுக்கிய கலை அரங்கமாக செயல்பட்டு வருகிறது.
# 5 Esplanade Mall

டுரியன் பழத்தை இரண்டாக வெட்டிக் கவிழ்த்தது போன்ற கட்டுமானத்தைக் கொண்டது:
# 6

# 6 Swissotel The Stamford Singapore
741 அடி உயரத்தில் இன்னொரு பக்கம் ஸ்டாம்ஃபோர்ட் ஹோட்டல் உலகின் உயர்ந்த கட்டிடமாக கின்னஸில் தான் பெற்றிருந்த இடத்தை, சென்ற வருடம் துபாய் புர்ஜ் காலிஃபாக்கு விட்டுக் கொடுத்திருந்தாலும் தென்கிழக்கு ஆசியாவின் உயரமான கட்டிடங்களில் ஒன்றாகக் கம்பீரம் குறையாமல் காட்சி தருகிறது.

அருகாமையில் வாகனத்திலிருந்து எடுத்தது. கிராப் செய்த படம் அன்று:
# 7


சிங்கப்பூர் ஃப்ளையர்
# 8
பார்ப்பதற்குத் தீம் பார்க் ஜெயண்ட் வீல் போலத் தெரிந்தாலும் 44 மாடிகளின் உயரம், அதாவது சுமார் 541 அடி உயரம் கொண்டது இந்த ஃப்ளையர். ஒரு சுற்றுச் சவாரி அரைமணியில் சென்றுவந்து விடலாம். பறவைப் பார்வையில் சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியா வரை பார்த்திடலாமென்றும் நீந்தும் ஆகாய மேகங்களின் அருகாமையில் செல்லுவது அற்புத அனுபவமென்றும் சொல்லப் படுகிறது.
# 9
2005-ல் தொடங்கி மூன்று ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது. லண்டன் ஐ, மற்றும் சைனாவின் ஸ்டார் ஆஃப் நன்சங் ஆகிய சவாரி சக்கரங்களையும் விட உயர்ந்தது.
# 10
குளிர்சாதன வசதியுடனான 28 கூடைகள் ஒவ்வொன்றும், 28 பேர் அமரும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சின்ன வயதிலிருந்து எங்க ஊர் பொருட்காட்சி ஜெயண்ட் வீலில் ஏறவே பயப்படும் வீராங்கனை நான். எந்த மலைப் பிரதேசத்துக்குச் சென்றாலும், திருப்பதி போன்ற உயரம் குறைந்த குன்றானாலும். குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் வண்டி ஏற ஏற அசெளகரியமாக உணர ஆரம்பித்து விடுவேன். எலுமிச்சையை மூக்குக்கு அருகே வைத்துக் கொள்வேன். நகர்வதே தெரியாமல் மிக மிக மெதுவாகவே சுற்றுமெனச் சொல்லப்பட்ட போதிலும், வந்த இடத்தில் எதற்கடா வம்பு என இதில் ஏறி ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. படம் எடுத்ததோடு நிறுத்திக் கொண்டேன். பிரச்சனை இல்லாதவர்கள் தவறவிடக் கூடாத ஒன்றே இந்த வான் உலா.

# 11 செல்வம் தரும் நீருற்று
The Fountain of Wealth என சீன நம்பிக்கையின் பேரில் அமைக்கப்பட்ட இது சன்டெக் சிட்டி ஷாப்பிங் மாலினுள் உள்ளது. 1998-ல் உலகின் மிகப்பெரிய நீருற்றாக கின்னஸில் இடப் பெற்றதாகும். ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணிநேரங்கள் நீர் நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் செல்வமும் அதிர்ஷ்டமும் அடைய வேண்டி நீருற்றின் நடுவே அமைந்த குட்டி நீருற்றைச் சுற்றி நடக்க அனுமதிக்கப் படுகிறார்கள். தினம் இரவு 8 முதல் 9 மணிவரை லேசர் ஒளியில் பாட்டுக்கு ஏற்ற மாதிரியாக அசைந்தாடும் இந்த நீருற்று. சன் டெக் மாலுக்கு மக்களை ஈர்க்கவும் இது உதவுவதாகச் சொல்லப்படுகிறது.

# 12 நதிபார்த்து வான் தொட்டுக் கட்டிடங்கள்
வெள்ளை நிறத்திலிருப்பது ஆண்ட்ர்சன் பாலம். இடது பக்கம் தெரிவது எஸ்பளனேட் பாலம். சிங்கப்பூர் நதியின் அழகை ரசித்துக் கொண்டிருந்த வேளையில் இங்கு ஆரம்பித்து வெகுதூரம் நீளுகிற இந்தப் பாலத்துக்கடியிலிருந்து நுழைந்தது நீஈஈஈண்ட படகொன்று.
# 13 படகு சவாரி (river cruise) மூலமாகவும் சுற்றிப்பார்க்கிறார்கள் நகரினை. படம் 5-ல் உள்ள படகு மற்றும் இது போன்ற ட்ராகன் போட்களில்..
# 14
நாங்கள் சென்றிருந்தது கஸ்டமைஸ்ட் பேக்கேஜ் என்பதால் ஒவ்வொரு இடத்துக்கும் செல்ல இரண்டு குடும்பங்களுக்கு ஒரு வாகனம் என ஏற்பாடு செய்திருந்தார்கள். சொல்லி வைத்த மாதிரி ஒவ்வொரு நாள் வந்த ஓட்டநர்களும் கஸ்டமர்கள் நேரத்துக்கு சாப்பிட்டார்களா என்பதில் அக்கறை காட்டினார்கள். இல்லையெனில் எங்கே ஓட்டலில் நிறுத்த வேண்டுமானாலும் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார்கள். சிட்டி டூருக்கு மட்டும் தனிவாகனம் கேட்டுப் பெற்றோம் விருப்பப்படி விருப்பமான இடத்தில் அதிக நேரம் எடுத்துக் கொள்ளலாமென. ஆனால் சிட்டி டூருக்கு அதற்காகவே பிரத்தியேகமாக இயக்கப்படும் இரண்டு தளம் கொண்ட பேருந்தைப் பயன்படுத்தியிருந்தால் நன்றாக இருந்திருக்குமே என ஆதங்கப்பட்டார் சிங்கப்பூர் வாழ் நண்பர். ஆம், வித்தியாசமான அனுபவமாக, படமெடுக்கக் கூடுதல் வசதியாக இருந்திருக்கும்தான். இருப்பினும் கூட நகரும் வாகனத்தின் உள்ளிருந்து ஓரளவு வெற்றிகரமாகவே பல இடங்களைப் படமாக்கிவிட்டுள்ளேன்:)!

# 15 பழைய உச்சநீதி மன்றம்


# 16 இஸ்தானா பார்க் நுழைவாயில், தேசியக் கொடிகளுடன்..
சிங்கப்பூர் அதிபரின் குடியிருப்பாகிய இஸ்தானாவிற்கு எதிர்ப்புறம் அமைந்துள்ளது.

தங்கியிருந்த ஐந்து நாட்களில் நேரமின்மையால் உள்ளே செல்ல இயலாத இடங்களாயினும், காட்சிப் படுத்தியப் படங்களை அதன் சிறப்புகளுடனேயே பகிர்ந்திருக்கிறேன் இனி செல்ல இருப்பவர் திட்டமிட உதவுமென.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites