இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Wednesday, December 7, 2011

பனை மரம்

இப்பூவுலகில் கோடிக் கணக்கான தாவரங்கள் (Plants) நிலத்திலும் நீரிலும் பரிணமித்துள்ளன என்பது தாவரவியலாளரது (Botanist) கூற்றாகும். விலங்குகளைப் (Animals) பொறுத்தவரை இனப் பெருக்கம் (Reproduction) மேற்கொள்வதற்கு ஏற்ற பக்குவத்தை பெண் இனமே தன்னத்தே கொண்டுள்ளது.
பொதுவாகத் தாவரங்களில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை. ஆனால் பனை, பப்பாசி என்பனவற்றில் ஆண் பனை, பெண் பனை, ஆண் பப்பாசி, பெண் பப்பாசி என்று தனித்தனி மரம் உண்டாகி வளர்கின்றன. ஆண் பனையும் ஆண் பப்பாசியும் முதிர்ச்சியடைந்ததும் பூத்துக் குலுங்குவதுடனே தமது வாழ்நாளைக் கடத்தி வருகின்றன என்றும் கூறலாம். காய், பழம், விதை என்பவற்றை இவற்றிலிருந்து பெறுவது முடியாத காரியமாகும்.
ஏலவே வட மாகாணத்தில் உள்ள யாழ்குடா நாட்டில் அதிக அளவு வளர்ந்து பயன் தருகின்ற பனை மரம் (Palmyra Tree) பற்றி விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும்.
தேக்க (Teak), கருங்காலி (Ebony)போன்ற வலிமை மிக்க காட்டு மரங்களை வீட்டு நிர்மாணப் பணிக்கும் ஏனைய தளபாடங்கள் தயாரிப்பதற்கும் உபயோகப்படுத்தப்பட்டு வருவதை நாம் அறிவோம். அதே வலிமை பனை மரத்திற்கும் உண்டு என்பதால் இம் மரத்திலிருந்து பெறப்படும் கைமரம், சிலாகை என்பவற்றை வீட்டுக் கூரை ((Roof) நிர்மாணிப்பதற்கு இன்றும் பலர் பயன்படுத்திய வண்ணம் உள்ளனர்.
நம் நாட்டில் ஒருவர் சுமார் நூற்று ஐம்பது பனை மரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தால் அவரது குடும்ப பொருளாதாரம் (Economic) நலிவுறுவதற்கு சந்தர்ப்பம் உண்டாகாது.
‘கற்பகதரு’ என்று சிறப்புப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்ற பனை மரத்திலிருந்து பெறப்படுகின்ற அனைத்து பொருட்களும் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் உபயோகமாகிக் கொண்டே இருக்கின்றமை கண்கூடு, குருத்தோலை, காவோலை, பனை ஓலை, பனை மட்டை, பனஞ்சிராய், பனை ஈர்க்கு, பன்னாடை, பனஞ்சாறு, வெல்லம், பனம் கற்கண்டு, சக்கரை, நுங்கு பனம் பழம், பனாட்டு, பனம் விதை, பனங் கிழங்கு, புழுக்கொடியல், பனங்கள், பனஞ் சாராயம் ((Palmyra Arrack)போன்றவற்றைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள் தொடர்ந்து கொண்டே செல்கின்றது.
இனி பனை மரத்தை வளர்த்தெடுப்பது பற்றி சிறிது பார்ப்போம். இலங்கையில் இம் மரங்கள் உலர் வலயங்களில் செழித்து வளர்ந்து பயன் தருகின்றன. நம் நாட்டில் மனைமரத்துக்கு பெயர்பெற்ற மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். கற்பகத்தருவை உற்பத்தி செய்ய பெரும் உழைப்போ மிகுந்த செல்வோ தேவைப்படாது.
பனம் விதையை சுமார் நாற்பது சென்ரி மீற்றர் ஆழத்தில் புதைத்து விட்டால் அது தானாகவே முளைத்து வளரக் கூடியது. வேலி அடைத்து காவல் காக்வோ அல்லது பசளையிட வேண்டிய அவசியமும் இல்லை. பெரும்பாலும் நூறு சதவீதமான விதைகள் முளைக்கின்றன.
பனை மரத்தில் ஆண் பனை, பெண் பனை என்று இரு வர்க்கங்கள் காணப்படுகின்றன. இது பனை மரத்திற்குள்ள சிறப்பு அம்சமாகும். பெண் பனை பூத்துக் காய்த்து பழுத்து இன விருத்தியைத் தொடருகின்றது. ஆண் பனை காய்ப்பதில்லை ஆனால் பெண் பனையைப் போன்று மற்றெல்லாம் பயன்களையும் நல்குகின்றது.
பனை மரத்தின் குருத்தோலையை எடுத்து ஈர்க்குகளை நீக்கிவிட்டால் பல்வேறு வகையான பாய்கள், ஓலைப் பெட்டி, பை, கடகம், விசிறி, சிறுவர்களுக்கான விளையாட்டுச் சாதனங்கள், தொப்பி, பணப் பை போன்றவற்றைத் தயாரிக்கலாம்.
Pannadai 1
முதிர்ந்த பனை மரத்தின் முற்றிய ஓலைகள் கிராமத்து வீடு வேய்வதற்குப் பெரிதும் பயன்படும். பனை ஓலையினால் வேயப்பட்ட வீடுகளில் வாழ்பவர்கள் சிறிதும் வெயில் வெப்பத்தினால் தாக்கப்பட மாட்டார்கள்.
மட்டையோடு கூடிய பனை ஓலை வேலி அடைப்பதற்குப் பெரிதும் பயன்படும். இந்தப் பனை ஓலை மட்டையின் இரு புறங்களிலும் மரம் அறுக்கும் வாளுக்கு இருப்பது போன்ற பற்கள் தென்படுகின்றன. இதனைக் கருக்கு என்றும் அழைக்கலாம். இதனால் நாய், நரி, ஓநாய் போன்ற பாலூட்டி விலங்குகள் (Mammals) பனை ஓலை வேலிகளை ஊடுருவிச் செல்ல முடியாது. மீறிச்செல்ல எத்தனித்தால் அவற்றுக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
வீடுகளைச் சுற்றியும் பனை ஓலை வேலிகளை அமைக்கலாம். பனை ஓலை கொண்டு அடைக்கப்பட்ட வேலி குறைந்தது பத்து ஆண்டுகளுக்குப் பழுதுபடாமல் நிலைத்து நிற்கும் வல்லமை படைத்தது என்கின்றனர்.
பழைய பனை ஓலைகளை உதவாது என்று எண்ணி யாரும் எரித்து விடுவதில்லை. சிலவற்றை விறகாகப் பயன்படுத்தியது போக மிகுதியை நெல், மிளகாய், புகையிலை முதலான செடிகள் பயிராகும் நிலங்களில் வெட்டிப் புதைத்துவிடுவார்கள். இதனால் மண்ணில் உண்டாகும் பயிர்கள் வளர்ந்து நல்ல பயனைத் தருகின்றன.
பனை மரத்திலேயே முற்றி உலர்ந்து தானாகக் கீழே விழும் ஓலைக்கு காவோலை என்று பெயர். இந்தக் காவோலை விறகாகப் பயன்படுகிறது.பண்டைக்காலத்து மக்கள் தங்களுடைய விலையுயர்ந்த பொக்கிஷமாகக் கருதிய இலக்கியங்களை எல்லாம் பனை ஓலைகளினால் செய்யப்பட்ட ஏடுகளில் தான் எழுதி வைத்திருந்தார்கள். உலகம் போற்றும் திருவள்ளுவர்கூட தாம் யாத்த இணையற்ற திருக்குறளைப் பனை ஓலை ஏட்டில் தான் எழுதினார். சங்க இலக்கியங்கள் யாவும் பனை ஓலையினால் செய்யப்பட்ட ஏடுகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பட்டவைகளாகும்.
ஆதிகாலத்தில் கடலில் சென்று மீன் பிடிக்கும் மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கு பனை ஓலையினால் தயாரிக்கப்பட்ட பறிகளையே பயன்படுத்தினார்கள்.
பனை ஓலையின் ஒரு பகுதி பனை ஈர்க்காகும். இந்த ஈர்க்கினால் முறம் (சுளகு) விளக்குமாறு என்பன தயாரிக்கப்படுகின்றன. பனை ஓலையினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெட்டிகள் மடங்காமலும் சுருங்காமலும், வளையாமலும் இருப்பதற்காக அமைக்கப்படும். சட்டத்தைத் தைப்பதற்கு பனை ஈர்க்கு பயன்படுகின்றது- பனை ஈர்க்கினால் கயிறு திரித்துக் கொள்வதுமுண்டு. திருகணை, உறி போன்ற சமையலறைப் பொருட்களும் ஈர்க்கினாலேயே தயாரிக்கப்படுகின்றன.
Pannadai
பனையிலிருந்து பெறப்பட்ட பன்னாடையை ஆதிகால மக்கள் தேன், நெய் முதலியவற்றை வடிகட்டுவதற்குப் பனை மரத்திலிருந்து இறக்கப்படும் பனஞ்சாறு அல்லது பதநீர் மிகவும் சுவையுள்ள பணமாகும். இது பனை மரப் பாளையினின்றும் கிடைக்கின்றது.
இளம் பளம் பாளையைச் சுற்றி நாரினால் இறுகக் கட்டுவார்கள். பின்பு அப்பாளையின் முனையைச் சிறிதளவு சீவி அதன் உட்புறத்தில் சுண்ணாம்பு தடவிய மண் கலயத்தைக் கட்டிவிடுவார்கள். அந்தப் பாளையிலிருந்து கசியும் பனஞ்சாறு பானையில் விழுகின்றது. அதைத்தான் பதநீர் என்கின்றோம்.
இந்தப் பதநீரை காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் உடல் வெப்பம் குறைகின்றது. அத்துடன் பருகியவரை இது வீரியமடையச் செய்கின்றது.வெல்லம் பனஞ் சாற்றிலிருந்து பெறப்படுகின்றது. கரும்பிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்ற வெல்லத்தை விட இது உடலுக்கு உகந்தது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பனை வெல்லத்தில் பல ஆயுள்வேத மருந்துகளைக் கலந்து உண்டார்கள்.
பனஞ்சாற்றிலிருந்து தயாரிக்கப்படுகின்ற பனங்கற்கண்டும் மருந்துக்கு பெரிதும் பயன்படுகின்றது-சித்த மருத்துவர்கள் பல மருந்துகளை பனங் கற்கண்டுடன் கலந்து உண்ணும்படி கூறுகின்றனர்.
பனஞ்சாற்றிலிருந்து சீனியையும் தயாரிக்கலாம். இது கரும்பிலிருந்து பெறப்படும் சீனியைப் போன்று வெண்மை நிறத்தைக் கொண்டிராது. ஐந்து சதாப்த காலங்களுக்கு முன்னர் ஜெர்மன் நாட்டு தொழிலதிபர் ஒருவர் நம்நாட்டில் பனஞ்சாற்றிலிருந்து பனம் சக்கரை ((Java) தயாரிக்கும் தொழிற்சாலையொன்றை உருவாக்கினார். உற்பத்தியும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
ஆனால் இலங்கை மக்கள் ஜாவா ((Java) விலிருந்து இறக்குமதியான சீனியை மிகவும் விரும்பி கொள்வனவு செய்ததினால் தொழிற்சாலை மூடப்பட்டது என்றும் அறிய முடிகின்றது.காய்க்கும் இயல்புடையது பெண்பனை ஆகுமென்று முன்னர் பார்த்தோம். பனங்காய் முற்றுவதற்கு முன்பு நுங்காகவே தென்படுகின்றன. இந்த நுங்கு மிகவும் சுவைமிக்கதாகும். இதை அருந்தினால் சோர்வும், களைப்பும் நீங்கி புத்துணர்ச்சி பெறலாம்.
வைத்தியர்களின் கூற்றின் பிரகாரம் இளம் நுங்கு வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. குடலைத் (Intestine) துப்பரவு செய்வதுடன் வலுவூட்டும் பணியையும் மேற்கொள்கின்றது. வயது பேதமின்றி நுங்கை யாரும் சாப்பிடலாம்.
பனம் பழத்திலிருந்து பிழிந்து தயாரிக்கப்படுகின்ற பனாட்டு சுவை மிக்கது. பசி போக்கும் தன்மையும் கொண்டது. ஜாம் (Jam) சந்தைக்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியதினால் பனாட்டின் உற்பத்தி வெகுவாக வீழ்ச்சி கண்டது என்றும் கூறலாம்.
நீண்ட நாட்களாக நிலவிய அசாதாரண நிலைமை காரணமாக ‘ஏ’ ஒன்பது நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்ததை நாமறிவோம். இதனால் வடபகுதியிலிருந்து பனை உற்பத்திப் பொருட்கள் தென் இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது ‘ஏ’ ஒன்பது ((A-Nine)பாதை திறந்து போக்குவரத்து சகஜ நிலைக்குத் திரும்பியதினால் தென்பகுதி மக்களே வடபகுதி சென்று பனை உற்பத்திப் பொருட்களை சுளகு, ஒடியல், புழுக்கொடியல் என்பவற்றைக் கொள்வனவு செய்து எடுத்துச் செல்வதைக் காணமுடிகின்றது.
எனவே கற்பகத்தருவின் மகிமையை இந்நாட்டு பிரஜைகள் அனைவரும் உணர்ந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியமை உண்மை. கருங்காலிக்கு நிகர் கற்பக தரு என்பது நிதர்சனமாகும்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites