இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Saturday, December 10, 2011

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா?

சில வருடங்கள் உபயோகப்படுத்தும் உடையையே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் பலருக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் சறுக்கல்கள் ஏற்படுகிறது. காலம் முழுவதும் கை கோர்த்து கூட வரும் உறவை தேர்ந்தெடுப்பதில் ஆண்களும் சரி பெண்களும் சரி எந்த அளவுகோளை கைக் கொள்கின்றனர் என்பது கணிக்க முடியாததாக இருக்கின்றது.

ஒரு சிலர் அழகுக்கு முக்கியத்துவம் தருகின்றனர், ஒருசிலர் அறிவுக்கும், சிலரோ சம்பாதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே குணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

கண்டதும் காதல் வருமா?

காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட மணமோ எதுவுமே மூன்று நிமிடத்தில் பார்த்தவுடன் முடிவெடுத்துவிட முடியாது. கூடாவும் கூடாது. ஒரு செடியில் மலர் மலரவே நன்றாக செடி வளர்ந்து அதற்குரிய பருவம் வந்தபின்புதான் பூக்கும். ஆனால் கண்டதும் காதல் வருவதை சட்டென பூக்கும் பூவைப்போல என உதாரணமாக கூறுகின்றனர். அவசரப்பட்டு காதலித்து விட்டு பின்னர் ஆள் சரியில்லையே என்று வருந்துவதை விட ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள்.

பகட்டுக்கு முக்கியத்துவம்

ஏனெனில் சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக உணரப்பட்ட இளைஞன் பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக கொஞ்சம் பந்தவாக தோற்றமளிப்பதுதான். நான்கு மாதங்கள் பழகிய பின்னரும் அந்த பெண்ணுக்கு தன்னுடைய காதலனைப்பற்றிய எந்த தகவலும் தெரிந்திருக்காது. ஏனெனில் டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இதுவே பின்னர் ஏமாற்றத்திற்கு காரணமாகிறது.

இதே சூழ்நிலையில் சிக்கி ஏமாந்த ஆண்களும் பலர் உண்டு. அழகாய், சிவப்பாய், கவரும் தோற்றத்துடன் இருக்கும் பெண்களை கண்ட ஆண்கள் அவர்களின் பின்னணி பற்றி ஆராயாமல் அவர்களின் பின்னால் சுற்றி பர்ஸ் காலியான பின்னர் அந்த பெண்ணிடம் ஏமாந்து நிற்கும் ஆண்களும் இருக்கின்றனர்.

உள்ளுணர்வு சொல்லுமா ?

புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல நேர்ந்தால் அங்கே தனக்குரியவரியவரை சந்திக்கத்தான் இயற்கை தன்னை அனுப்பியிருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றும் என்கின்றனர் சில இளைய தலைமுறையினர். பேருந்து நிறுத்தமோ, திருமண மண்டபமோ, நண்பர்களின் வீட்டிலோ இப்படி எங்காவது செல்லும்போது புதிதாக நம்மை கவரும் ஒருவரை சந்தித்தால் அவர் தனக்குரியவர்தான் என்று உள்ளம் சொல்லும் என்கின்றனர் சில யுவதிகள்.

இது எப்படி சாத்தியமாகும் என்பது உளவியலாளர்களின் கேள்வி. ஏனெனில் நன்றாக பழகிய பின்பு கூட ஒருவரின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஏனெனில் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதன்று என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை மூன்று நிமிடங்களில் கணிக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.

கணிப்பு சரியாகுமா?

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே’ என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்? என்பது உளவியலாளர்களின் கேள்வி

ஆபத்பாந்தவனாகும் செல்போன்

ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவர்களின் பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் இளைய தலைமுறையினர் கூடா நட்பினை கட் செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஒருவரின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites