இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, June 15, 2012

''எங்க வெற்றிக்கு முக்கியக் காரணம், புதுசு புதுசா யோசிச்சு டிசைன்கள உருவாக்கறதுதான்

''பெண்கள் ஒன்று சேர்ந்தா... வெட்டிப் பேச்சுதான்ங்கிற கேலியை அடிச்சு நொறுக்கினது, சுய உதவிக் குழுக்களோட வெற்றி. எங்கள் குழுவும் அப்படி ஒரு குழுதான். எழுதப் படிக்க மட்டுமே தெரிஞ்ச நாங்க, இன்னிக்கு கிரிஸ்டல் நகைத் தொழில் மூலமா... மாசம் 40 ஆயிரம் லாபம் பார்க்கிற சுயதொழில் முனைவோரா வளர்ந்திருக்கோம். பெருமையா இருக்கு!''
- எளிய வார்த்தைகளில் பேசுகிறார் உமா. இவர், கும்பகோணம் அருகே, கொற்கை கிராமத்தில் இருக்கும் 'உதயம் நலச்சங்கம்’ சுய உதவிக்குழுவின் நிறுவனர்.
சுற்றுப்புற ஊர்களில் இருந்து, புடவைக்கு மேட்சாக மணி, வளையல் வேண்டும் என்கிற ஆர்டர்கள் குவிந்த வண்ணம் இருக்க... நூற்றுக்கணக்கான நிரந்தர வாடிக்கையாளர்களால் தள்ளாட்டம் இல்லாத, திடமான லாபத்தை ருசித்துக் கொண்டு இருக்கிறது இந்தக் குழு. இத்தகைய வளர்ச்சிக்கு காரணம்... அவர்களின் உழைப்பும், கற்பனைத்திறனும்தான்!
குழுப் பெண்களின் குரலாக நம்மிடம் பேச ஆரம்பித்த உமா, ''நான் டிப்ளமா வரை படிச்சிருக்கேன். படிப்பு முடிச்ச கையோட திருமணத்தை முடிச்சுட்டாங்க எங்க வீட்டுல. அஞ்சு வருஷத்துக்கு முன்ன, ஃபேஷன் நகைகள் செய்ற தஞ்சாவூர் சிவரஞ்சனி மேம் பத்தி, 'அவள் விகடன்’ல நியூஸ் வந்தது. அதைப் பார்த்துட்டு, அவங்ககிட்ட பயிற்சி எடுத்துக் கிட்டேன். அப்புறம் வளையல், மாலைனு செய்து தோழிகள், உறவினர்கள்னு கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு நிறைய பேர், 'எங்களுக்கும் செய்து கொடுங்களேன்'னு வந்தாங்க. என்கூட பயிற்சி எடுத்தவங்ககிட்டயும் இதே மாதிரியான விண்ணப்பம்தான். நாங்க எல்லாருமே சேர்ந்து பேசினப்போ... 'இதையே ஒரு தொழிலா எடுத்துச் செஞ்சா என்ன?'ங்கிற கேள்வி வந்துச்சு'' என்று உமா இடைவெளிவிட, தொடர்ந்தார் குழு உறுப்பினர் சுதா.
''பணம் வேணுமேங்கற யோசனை வந்தப்பதான், அரசு மகளிர் சுய உதவித் திட்டத்தின் கீழ் நாங்க 20 பேர் சேர்ந்து குழுவா இணைஞ்சு, வங்கியில 60 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி, வேலைகளை ஆரம்பிச்சோம். வளையல், கொலுசு, மாலை, கம்மல்னு விதவிதமா செய்து அரசு சுய உதவிக் குழுக்கள் கண்காட்சியில் விற்பனைக்கு வெச்சோம். இளம் பெண்கள்தான் முக்கிய டார்கெட்டுங்கிறதால், பெண்கள் கல்லூரிகள்ல அனுமதி வாங்கி ஸ்டால் போட்டோம். நாங்களே ஆச்சர்யப்படுற அளவுக்கு... முதல் மாசமே 18 ஆயிரம் லாபம். 'நாம சரியான பாதையில்தான் போய்க்கிட்டு இருக்கோம்'ங்கற நம்பிக்கையோட வெற்றிகளை நோக்கி நகர ஆரம்பிச்சோம். இப்போ, வங்கியில 5 லட்சம் கடன் வாங்கற அளவுக்கு வளர்ந்திருக்கோம். மாசம், 40 ஆயிரம் லாபம் கிடைக்குது!''
- பெருமை படர்கிறது சுதாவின் முகத்தில்.
''எங்க வெற்றிக்கு முக்கியக் காரணம், புதுசு புதுசா யோசிச்சு டிசைன்கள உருவாக்கறதுதான். உமாவைத் தவிர, எங்க குழுவில் யாரும் படிக்கல. ஆனாலும், கணக்கு வழக்கில் இருந்து மார்க்கெட்டிங் வரை எல்லாத்தையும், உமா பக்குவமா எங்களுக்கு சொல்லிக் கொடுத்துச்சு. 'கற்பனைத் திறனுக்குப் படிப்பு வேணாம்க்கா... நீங்க பொண்ணுங்களுக்குப் பிடிக்கிற மாதிரி புதுசு புதுசா டிசைன்கள யோசிச்சுப் பண்ணுங்க. அதுதான் இந்தத் தொழிலுக்கு வேணும்’னு மந்திரம் மாதிரி சொல்லிக் கிட்டே இருக்கும். ஆறு வருஷமா ஒற்றுமையா இயங்கிட்டு வர்ற எங்க குழுவில், புது டிசைன் உரு வாக்குறதுல மட்டும் எங்களுக்கு இடையில் பலமான போட்டி இருக்கும். அதுதான் எங்க வெற்றிக்கு அடித் தளம்!''
- சக்சஸ் சீக்ரெட் பேசும் மல்லிகாவுக்கு, குரலில் அத்தனை உற்சாகம்.
''எங்களோட வெற்றியைப் பார்த்துட்டு இந்தப் பகுதியில அடுத்தடுத்து நான்கு சுய உதவிக் குழுக்கள் கிரிஸ்டல் நகை தொழில் செய்ய ஆரம்பிச்சிருக்காங்க. மார்க்கெட்டிங் பண்றதுக்கு நாங்க கஷ்டப்படறதில்லை. தேடி வர்ற ஆர்டர்கள முடிக்கவே நேரம் சரியா இருக்கு. ரிசப்ஷன், கல்யாணம்னு மணப்பெண் அலங்காரத்துக்குத் தேவையான நெத்திச்சுட்டியில் இருந்து ஒட்டியாணம் வரை கிரிஸ்டல் நகைகள் செய்து வாடகைக்கு கொடுக்கிறோம். கல், கவரிங் நகைகளைவிட, இந்த கிரிஸ்டல் நகைகள் பட்டுப்புடவை கலருக்கு மேட்சா கிடைக்கறதால, பெண்கள் ரொம்பவே விரும்பி வாங்குறாங்க''
- பிஸினஸ் மேக்னட் போல படபடக்கிறார் தமிழ்ச்செல்வி.
''ஆர்வம் இருக்கறவங்களுக்கு கிரிஸ்டல் நகை செய்யுற பயிற்சியும் நாங்க தர்றோம். அடுத்ததா... விபூதி, குங்குமம், கம்ப்யூட்டர் சாம்பிராணி, மெழுகுவர்த்தி செய்றதுக்கான பயிற்சியை காரைக்கால்ல முடிச்சுட்டு வந்திருக்கேன். குழுவில் எல்லாருக்கும் கத்துக்கொடுத்து, அதையும் ஒரு தொழிலா எடுத்துச் செய்யுறதைப் பத்தியும் பேசிட்டு இருக்கோம்...'' என்று உமா சொல்ல, அதை ஆர்வத்தோடு ஆமோதித்து தலையாட்டுகிறார்கள் அத்தனை பெண்களும்!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites