இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, June 7, 2012

ரப்பர்

 

இன்றைய உலகின் இன்றியமையாத் தேவைகளுள் ஒன்றாக விளங்குவது ரப்பர் எனில் அது மிகையன்று. இப்பொருள் இல்லாத உலகை இன்று நாம் கற்பனை செய்தும் பார்க்க இயலாது. 

துவக்கத்தில் இப்பொருள் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிப்பதற்குப் பயன்பட்டதால், "அழிப்பான்" என்ற பொருளில் பிரீஸ்ட்லி என்பவர் 1770இல் இதனை ரப்பர் (rubber) என அழைத்தார். இப்பெயருக்கு முன்னர் இந்தியன் என்ற சொல்லும் சேர்த்து 'இந்தியன் ரப்பர்' என்றே அழைக்கப்பட்டது. முதன் முதலில் ரப்பர் அமெரிக்காவில் (சிவப்பு) இந்தியர்கள் வசித்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதே இதற்குக் காரணம். இந்த இந்தியன் ரப்பர் லண்டன், பாரீஸ் ஆகிய நகரங்களில் பென்சிலால் எழுதப்பட்டவற்றை அழிப்பதற்கான கருவியாக விற்கப்பட்டது. 

ரப்பர் இயற்கையாக மரங்களிலிருந்தே பெறப்பட்டது; பின்னர் அதன் தேவை மிகுதியானதன் காரணமாக ரப்பர் உற்பத்தியில் முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; புதிய வகைச் செடிகொடிகளை வளர்ப்பதற்கும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்கப் பழங்குடி மக்கள் 11ஆம் நூற்றாண்டிற்கு முன்னரே ரப்பர் பற்றி அறிந்திருந்தனர். அக்காலத்திய ரப்பர் பொருட்கள் இன்றும் தொன்மையான காட்சிப்பொருட்களாக விளங்குகின்றன. கொலம்பஸ் தமது இரண்டாவது கடல் பயணத்தை 1493இல் ஹைட்டி என்னும் பகுதியில் மேற்கொண்டார்; அப்பகுதியின் பழங்குடி மக்கள் மரக்கோந்து அல்லது பிசினால் செய்யப்பட்ட பந்து ஒன்றை வைத்துக்கொண்டு விளையாடியதைப் பார்த்து வியப்படைந்தார். பிரெஞ்சு நாட்டு வானியல் குழுவினர் 1735ஆம் ஆண்டு தென் அமெரிக்காவின் பெரு நாட்டிற்குச் சென்றபோது அப்பகுதியில் கோந்து மற்றும் வடிசாறு போன்ற திரவங்களை வடிக்கும் மரங்களைப் பார்த்தனர். இவ்வடிதிரவம் நிறமற்று, ஒட்டிக்கொள்ளும் தன்மையுடன் இருந்ததோடு, சூடுபடுத்தும்போது அல்லது சூரிய வெப்பத்தில் வைக்கும்போது கெட்டித்தன்மை அடைவதையும் கண்டனர். இந்த கோந்துப் பொருளை அங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் காலணி, குப்பி போன்ற பொருட்களைச் செய்யப் பயன்படுத்தினர். இப்பொருட்கள் சிலவற்றை அந்தப் பிரெஞ்சுக் குழுவினர் தங்கள் நாட்டிற்கும் எடுத்துச் சென்றனர். இப்பொருட்கள் பலகாலம் ஐரோப்பாவில் வியப்பிற்குரிய பொருட்களாக விளங்கின. இதே வேளையில் தென் கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து வந்தோர் கூடை, பந்து போன்ற பொருட்களை ரப்பரைக் கொண்டு செய்து வந்தனர். ஆனால் ஐரோப்பியர் அமெரிக்காவிடமிருந்தே ரப்பர் பொருட்களைப் பற்றி அறிந்தனர். உயர்ந்த, தரமான ரப்பர் தென் அமெரிக்காவின் அமேசான் காட்டுப்பகுதிகளில் விளையும் ஹிவியா மரத்திலிருந்தே பெறப்பட்டது.

நாளுக்கு நாள் பல்வேறு அறிவியல் சோதனைகள் ரப்பரில் மேற்கொள்ளப்பட்டன. ரப்பரைக் கற்பூரத் தைலத்துடன் கலந்து துணிகளுக்கு மேலே பூசி மழையில் நனையாத ஆடைகளை உருவாக்கினர். இத்தகைய துணிகளில் தண்ணீர் உட்புக முடிவதில்லை. இம்முறையைப் பயன்படுத்தி சார்லஸ் மகிண்டோஷ் என்பவர் வணிக ரீதியாக மழைக்கால ஆடைகளைத் தயாரித்தார். 

குட் இயரும் ரப்பரும் :

ரப்பரைச் செயல்முறைப் பயன்பாட்டிற்கு 1831ஆம் ஆண்டு கொண்டு வந்தவர் சார்லஸ் குட் இயர் என்னும் அமெரிக்கர் ஆவார். இவர் தம் வாழ்நாள் முழுவதையும் ரப்பர் பற்றிய ஆய்விற்காகவே செலவிட்டவர். பல்வேறு பொருட்கள் ரப்பருடன் எவ்வாறு வினை புரிகின்றன என்ற ஆய்வுகளை இவர் நடத்தினார். ரப்பருடன் உப்பு, சர்க்கரை, கடுகு எண்ணெய், சோப்பு போன்ற பல பொருட்களைக் கலந்து பரிசோதனைகளை மேற்கொண்டார். ரப்பரில் திடத்தன்மையைக் கொண்டுவரவும், எளிய வெப்பத்திலும் அது உருகி ஒட்டிக்கொள்வதைத் தவிர்க்கவும் குட் இயர் முயற்சிகளை மேற்கொண்டார். பலவகைப் பொருட்களையும் ரப்பரைக் கொண்டு செய்வதற்கு முயன்றார். ஆனால் கோடைக்காலத்தில் ரப்பர் உருகித் தீநாற்றம் வீசவும் ஒட்டிக்கொள்ளவும் துவங்கின. காலணிகள், பைகள் போன்ற ரப்பர் பொருட்களின் விற்பனை நின்று போயிற்று. விற்ற பொருட்களும் திருப்பித் தரப்பட்டன. இவற்றை உற்பத்தி செய்தோர் பொது மக்களின் சினத்திற்கும், எதிர்ப்புக்கும் ஆளாயினர். இத்தகைய சூழலில் குட் இயர் அவர்களின் உயிருக்கே கூட ஆபத்து உண்டாயிற்று. ஆனாலும் ரப்பர் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த அவர் தயங்கவில்லை. எனவே அவர் தம்மையே ஒரு ரப்பர் போர்வையால் போர்த்திக்கொண்டு சென்றார். அந்நாளில் அவரைப்பற்றி வேடிக்கையாக இவ்வாறு கூறுவது உண்டு: " யாராவது ஒரு மனிதர் ரப்பர் கோட் உடுத்துக்கொண்டு, இந்திய ரப்பரால் செய்யப்பட்ட காலணிகளை அணிந்துகொண்டு, சட்டைப் பையில் ரப்பரால் செய்யப்பட்ட பணப்பையுடன், ஆனால் அப்பையில் ஒரு செண்ட் காசும் இல்லாமல் நடந்து சென்றால் அம்மனிதர் வேறு யாருமன்று, குட் இயர் அவர்கள்தான்." 

ஒரு நாள் குட் இயர் தம் நண்பர்கள் முன்னிலையில் ரப்பர், கந்தகம் ஆகிய இரு பொருட்களுடன் பரிசோதனை ஒன்றில் ஈடுபட்டிருந்தார். தற்செயலாக இவ்விரு பொருட்களின் கலவை அடுப்புத் தீயில் விழுந்து விட்டது; பின்னர் அக்கலவை மீட்டெடுக்கப்பட்டது. குட் இயருக்கு வியப்பூட்டும் விதமாக, வெப்பத்திலிருந்து மீட்கப்பட்ட அந்த ரப்பர்-கந்தகக் கலவை ஒட்டும் தன்மை சிறிதுமின்றி கெட்டித்தன்மையுடன் விளங்கிற்று; வெப்பத்தில் மட்டுமன்று, கடுங்குளிரிலும் அக்கலவையில் வெடிப்பு ஏதும் உண்டாகவில்லை. இதிலிருந்து ரப்பரைக் கந்தகத்துடன் கலந்து வெப்பமூட்டி, குறிப்பிட்ட வெப்ப அளவில் சூடாக்குவதை நிறுத்தி விட்டால், ரப்பரின் ஒட்டிக்கொள்ளும் தன்மை முழுமையாக நீங்கிவிடும் எனும் உண்மையை அவர் கண்டறிந்தார். இச்செயல்முறை கந்தக வலுவூட்டல் செயல்முறை (vulvanizing process) எனப் பின்னாளில் அழைக்கப்பட்டது. இதற்கு உரிய, சரியான வெப்ப அளவைக் கண்டறிய ரப்பரையும் கந்தகத்தையும் கலந்து பல்வேறு வெப்பநிலைகளில் சூடுபடுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. குட் இயர் அவர்களின் அயராத முயற்சிகளால், மக்களின் வாழ்க்கையில் ரப்பர் சிறப்பானதோர் இடத்தைப் பிடித்தது.

ரப்பரின் முக்கியத்துவத்தைக் கருதி, இங்கிலாந்தில் ரப்பர் மரங்களை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பிரேசில் நாட்டிலிருந்து ரப்பர்ச் செடி விதைகளை இறக்குமதி செய்ய முயற்சிகள் நடந்தன. ஆனால் பிரேசில் அரசு இதற்குத் தடை விதித்தது. இருப்பினும் விக்மென் (Wickmen) எனும் ஆங்கிலேயர், ஹிவியா ரப்பர் மர விதைகளைத் திருட்டுத்தனமாக இங்கிலாந்துக்குக் கடத்திச் சென்றார். லண்டன் நகரப் பூங்கா ஒன்றில் 1876ஆம் ஆண்டு சுமார் 70,000 ரப்பர் செடி விதைகள் விதைக்கப்பட்டன. இவற்றுள் சுமார் 27,000 விதைகள் மட்டுமே துளிர்த்தன. இச்செடிகள் மிகக் கவனமாக சிங்கப்பூர், ஜாவா, பர்மா, இலங்கை போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டு அங்கு ரப்பர் விளைவிக்கப்பட்டது. 

அந்நாளில் ரப்பர் மரங்கள் இந்தியாவில் இயற்கையாகவே வளர்ந்தன என்றாலும், அதன் வாணிக முக்கியத்துவம் இங்கிருப்போர்க்குத் தெரியவில்லை. தற்போது உள்ளவாறு ரப்பர் பயிரிடுவது இந்தியாவில் 50-60 ஆண்டுகளுக்கு முன்னர்தான் துவங்கியது. ரப்பர் செடிகளை வளர்த்தல், ரப்பரை உருவாக்குதல், தூய்மைப்படுத்தல் ஆகியவற்றில் தற்போது பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ரப்பர் பொருட்கள் முன்னர் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தற்போது இந்தியாவிலேயே பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் ரப்பர் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுவிட்டன.

கடந்த முப்பதாண்டுகளில் இந்தியாவில் இயற்கை ரப்பர் உற்பத்தி பத்து மடங்கு பெருகியுள்ளது. உலகின் ரப்பர் உற்பத்தி செய்யும் நாடுகளுள் தற்போது இந்தியாவும் ஒன்றாக விளங்குகிறது. ரப்பரைச் செயற்கை முறையிலும் கூட ஆய்வகங்களில் உற்பத்தி செய்ய இயலும். 

இயற்கையில் கிடைக்கும் ரப்பர் ஆதாரங்கள் :

பால், கோந்து, பிசின், சாறு வகைகளில் ரப்பரைத் தரும் சுமார் 500 தாவர வகைகள் உள்ளன. சிறந்த வகை ரப்பர் ஹிவியா மரத்திலிருந்து பெறப்படுவதே. இது தென் அமெரிக்காவின் அமேசான் பள்ளத்தாக்கில் பெருமளவு வளர்கிறது. தென் இந்தியாவின் திருவாங்கூர், கொச்சி, மைசூர், குடகு, மலபார்ப் பகுதிகளிலும் இது காணப்படுகிறது. 

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites