இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, December 4, 2012

டிசைனர் ஜுவலலரியில் டிக்!

‘ஃபேஷன் ஜுவல்லரியா? அதான் மூலைக்கு மூலை நிறைய பேர் பண்றாங்களே?’’ சாந்தி ஸ்ரீனிவாசன், நம்மைத் தொடர்பு கொண்ட போது, இப்படித்தான் அலுத்துக்கொள்ளத் தோன்றியது. அவரது நீண்ட வற்புறுத்தலின் பேரில், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள அவரது யூனிட்டுக்கு விசிட் செய்ததும், அப்படியே மாறிப் போகிறது நமது அபிப்ராயம். ஒரு பக்கம் முகூர்த்தத்துக்கும் வரவேற்புக்கும் ஆர்டர் செய்யப்பட்ட நகைகளுக்கான மேட்ச்சிங் சேலைகள்... இன்னொரு பக்கம் தங்கமே தோற்றுப் போகிற அளவுக்கு அத்தனை அழகான, அம்சமான நகைகள்... பி.எஸ்சி. நியூட்ரிஷனும், எம்.ஏவும் படித்த சாந்தி, இன்று முழுநேர ஜுவல்லரி டிசைனர்.


‘‘பொழுதுபோக்கா ஒருநாள் ஜுவல்லரி டிசைன் கிளாஸுக்கு போனேன். கத்துக்கிட்டு வந்த எனக்கு எதுவுமே சரியா புரியலை. முழுமையா கத்துக் கொடுக்கலைன்னு புரிஞ்சது. எனக்குத் தெரிஞ்சதை வச்சு, நானாகவே முயற்சி செய்ய ஆரம்பிச்சேன். சாம்பிளுக்கு செய்ததை கொலுவுக்கு வீட்டுக்கு வந்தவங்களுக்கு தாம்பூலத்துல வச்சுக் கொடுத்தேன். அதைப் பார்த்துட்டு, எல்லாரும் விலைக்குக் கேட்டு ஆர்டர் கொடுத்தாங்க. 

இன்னிக்கு வீட்டுக்கொருத்தர் ஜுவல்லரி டிசைனிங் பண்றாங்க. எனக்கு ஏற்பட்ட அனுபவம் பலருக்கும் நடந்திருக்கும். அது தப்பு, முழுமையா இல்லைங்கிறதுகூடப் புரியாம நிறைய பேர், தப்பும் தவறுமாத்தான் பண்ணிட்டிருக்காங்க. என்கிட்ட கத்துக்கிறவங்களுக்கு அப்படி நடக்கக்கூடாதுங்கிறதுல தெளிவா இருந்தேன். ஒவ்வொருத்தருக்கும் தனிப்பட்ட முறையில பக்கத்துல உட்கார்ந்து புரியற வரை கத்துக் கொடுக்கறதுன்னு முடிவு பண்ணினேன். இன்னிக்கு 5 பேரை வேலைக்கு வச்சு, ஒரு யூனிட்டாவே நடத்தற அளவுக்கு இந்த பிசினஸ்ல நான் பிஸி. 

சும்மா கலரை கேட்டு, மேட்ச்சிங் நகைகள் பண்ணிக் கொடுக்கறதில்லை என் வேலை. புடவையையோ, சல்வாரையோ கொண்டு வரச் சொல்லி, அதுக்கு மிகப்பொருத்தமான மேட்ச்சிங் கலர் பார்த்து, அதே டிசைன்ல நகைகள் பண்ணிக் கொடுப்பேன். ஒவ்வொருத்தரோட முக அமைப்பு, கழுத்து அளவு, உயரம், உடல்வாகுன்னு பலதையும் பார்த்து, அவங்களுக்கு எந்த மாதிரி டிசைன், கலர் பொருத்தமா இருக்கும்னு ஆலோசனைகளும் சொல்றதால, நான் பண்ற டிசைனர் நகைகளுக்கு எக்கச்சக்க வரவேற்பு’’ எனப் பூரிக்கிற சாந்தியின் வாடிக்கையாளர்களில் பிரபலங்களும் உண்டு!

இது இப்படித்தான்!

மூலப்பொருள்கள்

கட்டர், பிளேயர், ஸ்டாப்பர், ஸ்பிரிங், டபுள் ஸ்டோன், சிங்கிள் ஸ்டோன், கோல்டன் பால், கியர் ஒயர், மணி, முத்து, கிரிஸ்டல், கம்மல் பேஸ், வளையலுக்கான பேஸ், ஜிமிக்கி பேஸ், சலங்கை உள்ளிட்ட நகைத் தயாரிப்புக்கான மொத்த செட்...

எங்கே வாங்கலாம்? முதலீடு?

சென்னையில் பாரிமுனையில், நகைத் தயாரிப்புக்கான பொருள்கள் விற்பனைக் கடைகளில் சகலமும் கிடைக்கும். ஆரம்ப நிலை பிசினஸுக்கு இங்கே வாங்கலாம். கிரியேட்டிவாகவும் புதுமையாகவும் முயற்சி செய்ய விரும்புவோர், மும்பை, பெங்களூரு போன்ற இடங்களில் இருந்து மெட்டீரியல்கள் வாங்கலாம். 5 ஆயிரம் ரூபாய் முதலீடு அவசியம்.

இட வசதி?

உட்கார்ந்த இடத்திலேயே செய்துவிடக்கூடிய இந்தக் கலைக்கென தனியே இட வசதி தேவையில்லை. டிசைன் செய்த நகைகளை காட்சிக்கு வைப்பதானால் மட்டுமே இட வசதி வேண்டும். மற்றபடி கைக்கு அடக்கமான ஒரு பை அல்லது பெட்டியில் வைத்து எடுத்துச் சென்றே ஆர்டர் பிடிக்கலாம்.

மாத வருமானம்?

நகைகளின் ஆரம்ப விலையை 10 ரூபாயாக வைக்கலாம். அப்படிப் பார்த்தால் ஒரு நாளைக்கு 50 கம்மல் செய்து, விற்றாலே லாபம்தான். கம்மல், செயின், வளையல் அடங்கிய முழு செட் (சிம்பிளானது) என்றால் ஒரு நாளைக்கு 15 செட் வரை செய்யலாம். கொஞ்சம் பெரிய, ஆடம்பரமான செட் என்றால் 2 முதல் 3 வரை செய்யலாம். 30 முதல் 40 சதவிகித லாபம் நிற்கும். 

விற்பனை உத்தி?

வீட்டுக்கொருவர் ஃபேஷன் நகைகள் செய்கிற காலமிது. அவர்களை உங்களது போட்டியாளர்களாக நினைக்க வேண்டாம். தங்க நகை விற்பனையாளர்களைப் போட்டியாக நினைத்துக் கொள்ளுங்கள். தங்கம் வாங்க வசதியில்லாதவர்களுக்கு, தங்கம் மாதிரியே காட்சியளிக்கிற டிசைன்களில் செய்து தருவதில்தான் இருக்கிறது உங்கள் திறமை. மஞ்சள் நிறத்தில் செயற்கையாகப் பளிச்சிடக் கூடாது. ஒருமுறை அணிந்ததுமே கல்லும், முத்தும் கழன்று வரக்கூடாது. பரவலாக மார்க்கெட்டில் கிடைக்கிற டிசைன்கள் தவிர்த்து, புதுமையான டிசைன்களில் வடிவமைப்பதே உங்கள் பிசினஸை வளர்க்கும். கற்பனைக்குத்தான் இதில் முதலிடம். வாடிக்கையாளரின் புடவை அல்லது சல்வாரின் நிறம் மற்றும் டிசைனை அப்படியே பிரதிபலிக்கிற நகைகள் அதிக வரவேற்பு பெறும்.

மார்க்கெட்டிங்?

கல்லூரிப் பெண்கள், வேலைக்குச் செல்வோர்தான் உங்கள் முதல் வாடிக்கையாளர்கள். வயது, பட்ஜெட் என இரண்டையும் கவனத்தில் கொண்டு டிசைன் செய்ய வேண்டியது முக்கியம். ஓரளவு பிசினஸ் வளர்ந்ததும், ஏதேனும் பொட்டிக், ஃபேஷன் டிசைனரை தொடர்பு கொண்டு, அவர்களுடன் இணைந்து நகை வடிவமைப்பை மட்டும் செய்து கொடுக்கிற பொறுப்பை ஏற்கலாம். சின்னத்திரை செய்தி வாசிப்பாளர்கள், சீரியல் நடிகைகள், தொகுப்பாளினிகள், மாடல்கள் போன்றவர்களுடனான அறிமுகம், உங்கள் பிசினஸை எங்கேயோ கொண்டு போகும்.

நாம் எவ்வளவு தான் தங்க நகை வைத்திருந்தாலும் விதவிதமான கவரிங் நகைக்கு பல நூறுகள் செலவு செய்து வாங்கத்தான் செய்கிறோம்.

ஆடைக்கு ஏற்ற நிறங்களில் கற்கள் வைத்தும், எனாமல் எனப்படும் நிறச் சேர்ப்பு செய்தும் இவை வருவதால் பெண்களிடையே இதுபோன்ற நகைகளுக்கு அதிக மவுசு உண்டு.

அப்படி வாங்கிய கவரிங் நகை சில நாட்களில் கறுக்கத் தொடங்கிவிடும். இதனை வாங்கிய கடையில் கொடுக்கவும் முடியாது, நாம் அணிந்து கொள்ளவும் முடியாது. இப்படி வீணாகிப் போவதைத் தடுக்க ஒரு நல்ல திட்டம் உள்ளது.

புதிதாக கவரிங் நகை வாங்கியவுடன் அதன் மீது நெயில் கலர் நெயில் பாலிஷ் ஒரு கோட்டிங் கொடுக்கவும். அதாவது நிறமில்லாத நெயில்பாலிஷ் வாங்கி அதனை உங்கள் நகை மீது தடவி வைக்கவும்.

இப்படி செய்வதால் நகை தண்ணீரில் பட்டு வெளுத்துப் போவது தவிர்க்கப்படும். 

எப்பொழுதும் பளிச்சென்று இருக்கும். 

பொதுவாக தங்க நகைகளை விட கவரிங் நகைகளை பத்திரமாக பாதுகாத்தால் அதிக நாட்களுக்கு வைத்திருந்து அணிந்து கொள்ளலாம்.

கவரிங் நகைகளை தங்க நகையுடன் போடாவேக் கூடாது. 

இது தங்க நகையையும் சேர்த்து பாழாக்கிவிடும். 

கவரிங் நகையும் கெட்டுப் போகும்.
கவரிங் நகைகளை அணிந்து விட்டு எடுத்து வைக்கும் பொழுது அதனை நன்றாக மெல்லிய காட்டான் துணிவைத்து துடைத்து பாக்ஸில் வைக்கவும்.

இப்படி செய்வதால் கவரிங் நகையில் ஊறி இருக்கும் உங்கள் வியர்வை அகற்றப்படும். நகை கறுக்காமல் இருக்கும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites