இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Friday, December 14, 2012

தொன்னை தொழில்!
கும்பகோணத்தை அடுத்துள்ள தியாகராஜபுரத்தில் வசிக்கும் 140 குடும்பங்கள் வாழை தொன்னை செய்து இந்தியா முழுவதும் அனுப்புகிறார்கள். கோயில்களில் தொடங்கி, இப்போது பானிபூரி கடைகளில் கூட தொன்னைகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
தஞ்சை மாவட்டத்தில் பல்லாயிரம் ஏக்கரில் வாழை பயிரிடப்படுகிறது. மரம் வளர வளர இலைகள் பழுத்து, காய்ந்து ஒடிந்து தொங்கத் தொடங்கும். ஈரம் காயாத அதிகாலையில் அச்சருகுகளை வெட்டிச் சேகரிக்கிறார்கள்.

“ஆயிரம் சருகு 400 ரூபா... வெட்டி எடுத்துட்டு வந்து, தனியா தரம் பிரிச்சு, மடிச்சு வெட்டிக்குவோம். தென்னை மர ஓலைகளைப் பிய்ச்சு, கிழிச்சு அந்தக் குச்சியை வச்சுத் தைப்போம். கீழே ஒரு ஏடு, மேலே ஒரு ஏடு... ஒரு இலைக்கு ரெண்டு தொன்னை செய்யலாம். ஒருநாளைக்கு ஒருத்தர் 2,000 தொன்னைகள் தைக்கலாம்’’ என்கிறார் 30 ஆண்டுகளாக தொன்னை தயாரிக்கும் வீரமணி. மதுரை, திருச்சி பகுதிகளில் உள்ள ஏஜென்டுகள் தொன்னைகளை வீட்டுக்கே வந்து மொத்தமாக கொள்முதல் செய்கிறார்கள். 100 தொன்னை களை 25 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

“ஒரு காலத்துல திருப்பதிக்கே நாங்கதான் தொன்னை அனுப்புனோம். அதுக்கு பெரிய முதலீடு தேவை. அதோடு, இந்த வட்டாரத்துல தண்ணிப்பிரச்னை காரணமா, வாழைச்சாகுபடி குறைஞ்சுக்கிட்டே வருது. வாழைமர வேரு லேசா காத்தடிச்சாலே சரிஞ்சு விழுந்துடும். அது விழுந்துட்டா தொழிலும் விழுந்துடும். அதனால ரெகுலரா திருப்பதிக்கு சப்ளை பண்ணமுடியலே...’ என்கிறார் கலியப்பெருமாள். பலர் கூலிக்கு தொன்னை தைத்துத் தருகிறார்கள். 1,000 தொன்னை தைத்தால் 50 ரூபாய் கூலி. பெண்கள் வீட்டில் அமர்ந்தபடியே நாளொன்றுக்கு 100 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.

“கைவினைத் தொழில்கள்ல எங்க ஆட்களுக்கு ஆர்வம் அதிகம். அந்தக்காலத்துல வீட்டுல சும்மா இருக்கப் பிடிக்காம பெண்கள் ஆரம்பிச்சு வச்ச தொழில் இது. இன்னைக்கு எங்க வாழ்வாதாரமாவே மாறிப்போச்சு. காத்து மழை, எதைப்பத்தியும் கவலையில்லை. இப்போ சருகு கொஞ்சம் டிமாண்டா இருக்கு. திருச்சி, கடலூர் பகுதிகள்ல போயி வாங்கிட்டு வர்றோம்’ என்கிறார் வீரமணி.

வாழைத் தொன்னையில் உணவிட்டுச் சாப்பிடுவது வயிற்றைக் குளுமைப்படுத்துவதோடு, உடல் சூட்டையும் சமப்படுத்தும் என்கிறார்கள் சித்த மருத்துவர்கள். ஒரு சமூகத் தொழிலாக விளங்கும் தொன்னை தயாரிப்பை அரசு சிறுதொழிலாக அங்கீகரித்து கடன் வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது இம்மக்களின் கோரிக்கை. ‘அதன்மூலம் தொழிலை இயந்திரமயமாக்க முடியும். கைகளால் தயாரிப்பதைப் போல 10 மடங்கு அதிகம் தயாரிக்கலாம்’ என்கிறார்கள் தியாகராஜபுரம் மக்கள். 

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites