இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

நெல், பப்பாளி, காய்கறிகள், அழகுச் செடிகள்...


விருதுகளை குவிக்கும் வெற்றி விவசாயி!

த.ஜெயகுமார், படங்கள்: கே.கார்த்திகேயன்
“ரைது ரக்ஷன தேச ரக்ஷன ரைது ரக்ஷனே மன பிரத்துக்கு ரக்ஷன’ என்பது தெலுங்கின் புகழ்பெற்ற பழமொழி. இதன் பொருள், ‘விவசாயிகள் வளர்ந்தால் தேசம் வளரும்... விவசாயிகள் நன்றாக இருந்தால், உலகத்திலுள்ள உயிர்கள் எல்லாம் நன்றாக இருக்கும்’ என்பதுதான். ஆனால், ‘நம் நாட்டில் விவசாயிகளின் வாழ்வு வளமாக இருக்கிறதா?’ என்று கேட்டால் ‘இல்லை’ என்பதுதான் நிதர்சனம். நம் நாட்டைப் பொறுத்தவரை, ‘நாடு விவசாயிகளை உயர்த்தும்’ என்று எதிர்பார்ப்பதை விட விவசாயிகள் தம்மைத் தாமே உயர்த்திக் கொள்வதுதான் சிறந்த வழி. அதுவும் தெலங்கானா உள்ளிட்ட ‘விவசாயிகள் தற்கொலை’ அதிகம் நடந்து வரும் மாநிலங்களில் தற்சார்பு ஒன்றே சிறந்த வழி.
தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 1,450 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வறட்சி, கடன் காரணமாக பல விவசாயிகள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள். இந்தியாவில் தற்கொலை நடக்கும் மாநிலங்களில், மகாராஷ்டிராவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறது, தெலங்கானா. கடந்த அக்டோபர் 10-ம் தேதி மாநிலம் முழுவதும் விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் பொது வேலைநிறுத்தம் செய்தன. அந்தளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது. விவசாயத்தைப் பிரதானமாகக் கொண்ட மாநில அரசிடத்தில், விவசாயத்துக்கு உயிரூட்டும் வழிகள் எதுவும் உருப்படியாக இல்லை.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோதும் சரி,  இப்போது தெலங்கானா என பிரிந்துவிட்ட போதும் சரி... இதுதான் நிதர்சனம்!
இத்தகையச் சூழலிலும், ஆள்பவர்களிடமிருந்து எந்தச் சலுகையையும் எதிர்பார்க்காமல், கடந்த 26 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தின் மூலம், மாநிலத்தில் நேர்மையான முறையில் சம்பளத்தை மட்டும் வாங்கும் ஓர் அரசு உயரதிகாரியை விட, அதிகமாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், ஒரு விவசாயி. ஆந்திரா முதல்வர் முதல் அமெரிக்க அதிபர் வரை அவரது விவசாய முறைகளைக் கேட்டு வியந்து பாராட்டியுள்ளனர். அத்தனை பெருமைக்கும் உரிய அந்த விவசாயி, ‘குடிவாலா நாகரத்தின நாயுடு’.
அண்மையில் ஈரோட்டில், பசுமை விகடன் நடத்திய ‘அக்ரி எக்ஸ்போ-2015’ல் கலந்து கொண்டு, தமிழ்நாட்டு விவசாயிகள் மனதிலும் இடம்பிடித்தார். இவர் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றி முடித்தவுடன், ‘‘இவரது பண்ணைக்குச் சென்று, பசுமை விகடனில் விரிவாக எழுதுங்கள்...’’ என வாசகர்கள் தரப்பில் அன்புக் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நாகரத்தினம் நாயுடுவைச் சந்திக்கப் புறப்பட்டோம்.... ஹைதராபாத்-விஜயவாடா சாலையில் 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் வருகிறது, ராமோஜிராவ் பிலிம்சிட்டி. அதன் நுழைவாயிலுக்கு எதிரே செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இருக்கிறது, நாயுடுவின் பண்ணை. பிரிக்கப்படாத ஆந்திர மாநிலத்தில் இருந்த இப்பகுதி தற்போது, தெலங்கானா மாநிலம், ரெங்காரெட்டி மாவட்டம், தரமதிபேட்டா கிராமத்துக்கு உட்பட்டதாக இருக்கிறது.
காலை வெயில் ஏறிக் கொண்டிருக்க... பச்சை பசேலென்ற நெற்கதிர்கள், தாள்கள் கூப்பி வரவேற்றன. கூஸ் வாத்துக்களின் ‘லபக்... லபக்’ சத்தத்துக்கு இடையே நாகரத்தின நாயுடுவைச் சந்திதோம். பண்ணையைச் சுற்றிக் காட்டிக்கொண்டே பேச ஆரம்பித்தார், அவர்.
 “என்னுடைய பூர்விகம் சித்தூர் மாவட்டம், பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணாபுரம் கிராமம். டிப்ளமோ எலக்ட்ரானிக்ஸ் படிச்சுட்டு சென்னையில ரெண்டு வருஷம் வேலை செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்போதிருந்தே நல்லா தமிழ் பேசத் தெரியும். பிறகு, ஹைதராபாத் வந்து நானும், என் மனைவியும் ஒரு கம்பெனியில வேலை செஞ்சிக்கிட்டு இருந்தோம். அந்த நேரத்துல (1989-ம் ஆண்டு) இந்த 12 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். வாங்கும்போது அது, வெறும் பொட்டல் காடு. கற்களும், சிறு குன்றுகளும் நிறைஞ்சிருந்தது.
 வேலையிலிருந்து விலகி முழு நேரமா விவசாயத்துல இறங்கினேன். நண்பர்கள், ‘வேண்டாம், ஆழம் தெரியாம காலை விடாதே’னு எச்சரிச்சாங்க. ‘வேலையில இருந்துக்கிட்டே விவசாயம் செய்யுங்க’னும் சொன்னாங்க. நான், ‘விவசாயம்தான்’னு ஒரே முடிவா இறங்கிட்டேன்” என்ற நாகரத்தின நாயுடு, “கொஞ்சம் பொறுங்க... பப்பாளித் தோட்டத்துல அறுவடைக்கு ஆட்களை வரச் சொல்லியிருந்தேன். வந்துட்டாங்களானு பாத்துட்டு வந்திடுறேன்” என்று தோட்டத்துக்குள் சென்றார். அவர் வரும் வரை பொக்கே தயாரிக்கப் பயன்படும் அழகுச்செடிகளைச் சுற்றிப் பார்த்தவாறு இருந்தோம்.
உழைப்பால் உருவான மாற்றம்!
சற்றுநேரத்தில் திரும்பி வந்த நாகரத்தின நாயுடு, “இந்த மண்ணு சரளை மண் வகையைச் சேர்ந்தது. அதனால இதுல பெரியளவுல வெள்ளாமை எடுக்க முடியாதுனு பலபேர் சொன்னாங்க. முதல்ல ஒரு ஏக்கர் நிலத்தை உழுது, கற்களைப் பெருக்கி, சமன் செஞ்சு பயிர் வெச்சேன். அதுல வந்த வருமானத்த வெச்சே, அடுத்து ஒவ்வொரு ஏக்கரா தயார் பண்ணினேன். இப்படியே 12 ஏக்கரையும் தயார் செய்துட்டேன். அப்போ நிலத்திலிருந்து கற்களை வெளியேத்துறதுக்கு ஒரு லோடுக்கு 50 ரூபாய் நான் கொடுத்தேன். இப்போ ஒரு லோடுக்கு 3 ஆயிரத்து 500 ரூபாயை நிலத்துக்காரங்களுக்குக் கொடுத்து எடுத்துட்டுப் போறாங்க.
கரையேற்றிய கலப்புப் பயிர்!
அடிப்படையிலேயே பாரம்பர்ய விவசாய முறை குடும்பங்கிறதால ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி இல்லாமலேயே விவசாயத்தைத் தொடங்கினேன். ஆந்திரா, தெலங்கானாவைப் பொறுத்தவரை நெல், பருத்தி, மிளகாய்தான் முக்கியப் பயிர்கள். ஆரம்பத்துல நானும் நெல்தான் போட்டேன். ஆனா, நெல்லோட நின்றிருந்தா இந்தளவுக்கு வளர்ந்திருக்க முடியுமானு தெரியலை. கலப்புப் பயிர் செய்றதாலதான் இந்தளவுக்கு என்னால வளர முடிஞ்சது. அதிலும் ‘பொக்கே’வுக்குப் பயன்படுத்துற அழகு மலர்கள், காய்கறிகள், பழப்பயிர்கள்னு பல பயிர்களையும் கலந்து செய்ய ஆரம்பிச்சேன்.
தினமும் `7 ஆயிரம் வருமானம்!
இதுல அழகு மலர்கள் அதிகமான வருமானத்தைக் கொடுத்தது. ஹைதராபாத் மாநகர் பகுதியில தனியார் மருத்துவமனைகள், துணிக்கடைகள், நகைக்கடைகள்னு கொண்டு போய் அழகு மலர்களை வித்தேன். அங்க, வரவேற்பு அறைகள்ல அழகுக்காக அதிகம் பயன்படுத்துவாங்க. அதுபோக, ஏதாவது விசேஷங்கள், விருந்தினர்கள் வர்றப்போவும் அதிகமா அழகு மலர்களை வாங்குவாங்க. இதனால அதிகமா அழகு மலர்களை உற்பத்தி செய்தேன். ஒரு நாளைக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை மலர் விற்பனையில சம்பாதிச்சிக்கிட்டு இருந்தேன். நானும், எங்கம்மாவும் பண்ணை வேலைகளைப் பார்த்தோம். பிறகு மனைவியையும், வேலையை விட்டு விலகச் சொல்லி, விவசாயத்துல இறங்க வெச்சேன். அப்போதும், ‘அவங்களாவது வேலைக்குப் போகட்டுமே’னு நண்பர்கள்கிட்ட இருந்து கடும் எதிர்ப்பு. ஆனாலும் நான் முடிவை மாத்திக்கலை. நெல், அழகு மலர்களோடு, மா, தென்னைனு வளர்க்க ஆரம்பிச்சேன். இதோடு சோளம், நிலக்கடலை, துவரையை மானாவாரிப் பயிர்களா விளைவிக்க ஆரம்பிச்சேன்...
உள்ளூரில் உருவான சந்தை வாய்ப்பு!
ஆரம்பத்துல இயற்கை முறையில் விளைஞ்சதுனு சொல்லி பருப்புகளை விற்பனை செய்யும்போது, தனி மரியாதை கிடைச்சது. தெரிஞ்சவங்க, நண்பர்கள்னுதான் விற்பனையை ஆரம்பிச்சேன். எங்கிட்ட ஒரு பழக்கம், பண்ணையிலிருந்து வர்ற எந்தப் பொருளை வித்தாலும், நண்பர்களா இருந்தாலும் சரி, உறவினர்களா இருந்தாலும் சரி, கறாரா பணத்தை வசூல் செஞ்சிடுவேன். ஆனா, கொடுக்கிற காசுக்கு தகுந்த மாதிரி எந்தக்குறையும் இல்லாம தரமான பொருட்களைக் கொடுப்பேன். அதனால, பெரும்பாலும் யாரும் என்கிட்ட இலவசமா எதிர்பார்க்க மாட்டாங்க. இந்தப் பழக்கத்தால, நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்து வீடுகள்னு வீட்டைச் சுத்தியே ஒரு சந்தை உருவாக ஆரம்பிச்சிடுச்சு. இதனால, விற்பனை செய்றதுக்கு வேற எந்த சந்தையையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லாமப் போயிடுச்சு” என்றவர், அறுவடை செய்து கொண்டு வந்த பப்பாளியில் இருந்து, சற்று பழுத்திருந்த ஒரு பழத்தை அறுத்து துண்டு போட்டுக் கொடுத்தார். அருமையான சுவையில் இருந்தது, இயற்கையில் விளைந்த அந்தப்பழம். அதை சுவைத்தவாறே நெல் சாகுபடி குறித்துப் பேச ஆரம்பித்தார், நாகரத்தின நாயுடு.
ஏக்கருக்கு 92 மூட்டை நெல்!
“ஆரம்பத்துல வழக்கமான முறையில நடவு பண்ணிதான் நெல் சாகுபடி செஞ்சிக்கிட்டு இருந்தேன்.
2000-ம் வருஷத்துக்குப் பிறகு மடகாஸ்கர்ல எஸ்.ஆர்.ஐ (ஒற்றை நாற்று நடவு) முறையில நெல் சாகுபடி செய்றதைப் பத்தி கேள்விப்பட்டேன். ஒரு வேளாண் விஞ்ஞானிகிட்ட பேசி அந்த சாகுபடி முறை பத்தித் தெரிஞ்சுக்கிட்டேன். 2003-ம் வருஷத்துல இருந்து எஸ்.ஆர்.ஐ முறையில பயிர் செய்யத் தொடங்கினேன். 2004-05-ம் வருஷத்துல என்னோட நெல் வயல்ல ஒரு ஹெக்டேருக்கு 15.4 டன் (1 ஏக்கருக்கு 92 மூட்டை) நெல் மகசூல் எடுத்தேன். அதுவும் 60 சதவிகித தண்ணீர் பாசனத்தில் சாதிச்சேன். அந்த வருஷம் ‘மாநில அரசின் சிறந்த விவசாயி’ விருதை எனக்குக் கொடுத்தாங்க.
ஆந்திரா முதல் அமெரிக்கா வரை!
அதே வருஷம், அப்போ ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஒய்.எஸ்.ஆர்.ராஜசேகரரெட்டி ஹெலிகாப்டர்ல என் பண்ணைக்கு வந்தார். நெல் அறுவடைப் பணிகளைப் பார்த்துட்டு அன்னிக்கு முழுசும் பண்ணையிலேயே இருந்தார். ஒரு மாநில முதல்வர் விவசாயியின் பண்ணைக்கு வந்து ஒரு நாள் இருக்கிறதுங்கிறது எவ்வளவு பெரிய விஷயம்... அதை சாத்தியமாக்கினது என்னோட  இயற்கை விவசாயம்தான்.
அப்போ, ‘நீங்க விவசாயத்துல எவ்ளோ சம்பாதிக்கிறீங்க?’னு முதல்வர் என்கிட்ட கேட்டார். ‘ஒரு நேர்மையான அரசு உயர் அதிகாரி எவ்ளோ சம்பாதிக்கிறாரோ, அதற்கு இணையா சம்பாதிச்சிக்கிட்டு இருக்கிறேன்’னு சொன்னேன். ஏன்னா, அந்த நேரத்துல விவசாயத்துல நல்ல நிலைக்கு நான் வந்திருந்தேன். ‘முதல்வரே பண்ணைக்கு வந்தார்’ங்கிற விஷயம், மாநிலம் முழுக்க பரவிடுச்சு. அப்படியே பக்கத்து மாவட்டங்கள்லயும் பரவினதுல... ‘ஒரு விவசாயி’யா எனக்கு மிகப் பெரிய கௌரவம் கிடைச்சது. பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த டாக்டர். ரீட், என்னோட நெல் சாகுபடி முறையைக் கேள்விப்பட்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யூ.புஷ்கிட்ட சொல்லியிருக்கார். அவர் 2006-ம் ஆண்டு இந்தியா வந்தப்போ என்னை அழைச்சு எஸ்.ஆர்.ஐ முறை பத்தி விசாரிச்சு கைகுலுக்கிப் பாராட்டினார்.
330 சர்வதேச, தேசிய, மாநில விருதுகள்!
பங்களாதேஷ் நாட்டிலிருந்து வந்த 17 பேர் குழு என்னோட வயலைப் பார்த்துட்டு விருது கொடுத்தாங்க. இதுவரைக்கும் சர்வதேச, தேசிய, மாநில அளவுல 330 விருதுகளை வாங்கியிருக்கேன். இப்பவும் பள்ளிக்குழந்தைகள், விவசாயிகள்...னு எல்லோருக்கும் இயற்கை விவசாயத்தைப் பத்தியும் எஸ்.ஆர்.ஐ.தொழில்நுட்பம் பத்தியும் சொல்லிக் கொடுத்துக்கிட்டு இருக்கேன். வேறெந்தத் துறையில இருந்திருந்தாலும், இந்த அங்கீகாரம் எனக்கு கண்டிப்பாக கிடைச்சிருக்காது” என்று நெகிழ்ந்த நாகரத்தின நாயுடு, உணவு உண்ண அழைத்துச் சென்றார்.
உணவுக்குப்பிறகு, தனது மற்ற பயிர்கள் பற்றியும், தனது விவசாய முறைகள் குறித்தும் நாகரத்தின நாயுடு விரிவாகச் சொன்ன விஷயங்கள், அடுத்த இதழில்...

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites