இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

ஒருங்கிணைந்த பண்ணை

ஆடு, கோழி, மாடு, நெல், எலுமிச்சை...குடும்பத் தலைவியின் இயக்கத்தில் ஓர் !
திருமணத்துக்குப் பிறகு சிறகுகளை முடக்கிக் கொண்டு குடும்பக்கூட்டுக்குள் முடங்கும் பெண்கள்தான்  ஏராளம். ஒரு சிலரே அந்தக்கூட்டுக்குள் இருந்து வெளியேறி வெற்றிக்கொடி நாட்டுவர். அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த தீபலட்சுமி. ‘விவசாயம் செய்ய வேண்டும்’ என்ற பெருங்கனவில், கணவரின் துணையோடு  நிலம் வாங்கி, ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ அமைத்து வருமானம் பார்த்து வருகிறார், இவர்.
வேலூர்-சித்தூர் சாலையில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது, கொள்ளமடுகு கிராமம் (ஆந்திர மாநிலம்). இங்குதான் அமைந்துள்ளது, தீபலட்சுமியின் ஒருங்கிணைந்த பண்ணை. தோட்டத்தில் நுழைந்ததும், குரைப்பின் மூலமாக நமது வரவை அறிவித்தன, தீபலட்சுமியின் வளர்ப்பு நாய்கள். முற்றத்தில் மேய்ந்துகொண்டிருந்த கோழிகள், பசுந்தீவனத்தைச் சுவைத்துக்கொண்டிருந்த காசர்கோடு குட்டை மாடுகள், கொட்டிலுக்குள் உலவிக்கொண்டிருந்த ஆடுகள்... என இனிமையான சூழலில் இருந்தது, அந்தப்பண்ணை. நம்மை வரவேற்றுப் பேச ஆரம்பித்தனர், சுதாகரன் - தீபலட்சுமி தம்பதியர்.
விவசாய ஆசை கொடுத்த பசுமை விகடன்!
முதலில் பேசிய தீபலட்சுமி, “வேலூர்தான் எனக்குச் சொந்த ஊர். எம்.சி.ஏ முடிச்சிட்டு வேலூர்ல ஒரு ஹாஸ்பிடல்ல வேலை பார்த்தேன். படிப்பு, வேலை எல்லாமே நகரத்துல இருந்தாலும், எனக்கு விவசாயம், ஆடு, கோழி வளர்ப்புல ஆசை அதிகம். அதுக்குக் காரணம் கிராமத்துல இருந்த எங்க பாட்டிதான். அவங்க வீட்டுக்கு நான் அடிக்கடி போய் வந்ததால எனக்கு விவசாயம், கால்நடை வளர்ப்புனு ஆசை வந்துடுச்சு. ஆனா, எங்க வீட்டுல செடி வளர்க்க இடமில்லை. வேலைக்குப் போயிட்டு இருந்ததால நேரமும் இல்லை.
அப்புறம் கல்யாணம், குழந்தைனு ஆனதும் வேலையை விட்டுட்டேன். கணவர் வீட்டுல செடிகள் வளர்க்க இடம் இருந்ததால காய்கறிச் செடிகள், மூலிகைச் செடிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். கணவர் அசிஸ்டண்ட் புரொபசரா இருக்கார். அவர் பயோ-டெக்னாலஜி படிச்சிருக்கறதால இயற்கை பத்தி அடிக்கடி பேசுவார். அவர்தான் எனக்கு ‘பசுமை விகட’னை அறிமுகப்படுத்தினார். அதைப்படிக்க ஆரம்பிச்சதும், நிலம் வாங்கி விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை அதிகமாச்சு” என்றவரைத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார், அவருடைய கணவர் சுதாகரன்.
“எனக்கு இயற்கை மேல ஆர்வம் இருந்தாலும், விவசாயம் செய்ய நேரம் இல்லை. மனைவி ஆசைப்பட்டதும் அதை நிறைவேத்தலாம்னு முடிவு பண்ணுனேன். நிலத்தைத் தேடி அலைஞ்சப்போ எனக்கும் விவசாய ஆசை அதிகமாகிடுச்சு. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வந்தா நிலம் பார்க்கக் கிளம்பிடுவேன். பல தேடல்களுக்குப் பிறகு இந்த மூணு ஏக்கர் நிலம் கிடைச்சது. இதை வாங்கி ஒண்ணரை வருஷமாச்சு. பசுமை விகடன் மூலமா தெரிஞ்சிக்கிட்ட விஷயங்களை அடிப்படையா வெச்சு, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கலாம்னு முடிவு செய்தோம். 
மகிழ்ச்சி கொடுத்த நிலக்கடலை!
நிலத்தைச் சுத்தம் செய்து, 80 சென்ட் நிலத்துல முழு இயற்கை முறையில மானாவாரியா நிலக்கடலை விவசாயம் செய்தோம். அதுல 10 மூட்டை நிலக்கடலை கிடைச்சது. அதைப் பார்த்தப்ப சந்தோஷம் தாங்க முடியலை. அடுத்து போர்வெல் போட்டுட்டு நிலக்கடலை அறுவடை செய்த நிலத்துல பலதானிய விதைப்பு செய்து, மடக்கி உழுது வெச்சிருந்தோம்.
பாடம் கற்றுக் கொடுத்த நெல்!
அப்போ, ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில இருந்து பயிற்சிக்காக வந்திருந்த அஞ்சு மாணவர்கள், அந்த நிலத்துல ஒற்றை நாற்று முறையில நெல் நடவு செஞ்சாங்க. அதுல பயிர் நல்லா வளர்ந்துச்சு. ஆனா, எங்களுக்கு அனுபவம் இல்லாததால சரியா பராமரிக்கல. அதனால, 80 சென்ட்ல 6 மூட்டை (80 கிலோ மூட்டை) நெல்தான் கிடைச்சது. அதை அரைச்சதுல 300 கிலோ அரிசி கிடைச்சது. 150 கிலோ அரிசியை 72 ரூபாய்னு இயற்கை அங்காடிக்கு விற்பனை செய்துட்டோம். மீதி அரிசியை, சொந்தக்காரங்களுக்குக் கொடுத்தோம்.
லாபம் கொடுத்த கீரை!
அடுத்து, கீரை சாகுபடி செய்யலாம்னு முடிவு செய்து, 10 சென்ட் நிலத்துல அரைக்கீரையையும், சிறுகீரையையும் வெதைச்சிருந்தோம். வேப்பம் பிண்ணாக்கு, மண்புழு உரம் பயன்படுத்தினதுல பூச்சித் தாக்குதல் அதிகம் இல்லாம செழிப்பான கீரை கிடைச்சது. ஒரு கட்டு 7 ரூபாய்னு, தினம் 20 கட்டுகள் வீதம் இயற்கை அங்காடியில விற்பனை செய்தோம். மொத்தம் ஆயிரம் கட்டுக்கீரை கிடைச்சது. அதுல செலவு போக 5 ஆயிரம் லாபம் கிடைச்சது” என்று சுதாகரன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அவருக்கு அலைபேசி அழைப்பு வர, மேற்கொண்டு நமக்கு பண்ணையைச் சுற்றிக் காட்டி விளக்க ஆரம்பித்தார் தீபலட்சுமி.
நம்மாழ்வார் வழியில் பண்ணை வடிவமைப்பு!
“மொத்தம் மூணு ஏக்கர் நிலம். அதுல 80 சென்ட்ல எலுமிச்சை இருக்கு. 40 சென்ட்ல வேலிமசால், முயல்மசால், கோ-4, அகத்திக்கீரை, சூபாபுல்னு பலவகையான  பசுந்தீவனங்கள் இருக்கு. 23 சென்ட்ல மீன்குளம், 5 சென்ட்ல கிணறு, 20 சென்ட்ல வண்டிப்பாதை, 80 சென்ட்ல நெல், 30 சென்ட்ல சேம்பு இருக்கு. 22 சென்ட்ல வீடு, ஆட்டுப்பட்டி, மாட்டுக்கான கொட்டகை எல்லாம் இருக்கு.
நம்மாழ்வார் அய்யா சொல்லிச் சென்ற வழிமுறைகளின்படி பண்ணையை வடிவமைச்சிருக்கோம். நீண்ட நாள் வருமானம் கொடுக்கிற பயிர்ங்கிறதால எலுமிச்சை நட்டோம். 18 அடிக்கு 18 அடி இடைவெளியில 80 சென்ட் நிலத்துல மொத்தம் 100 செடிகள் இருக்கு. நடவு செய்து ஆறு மாசம் ஆகுது. இன்னும் மூணு வருஷத்துல வருமானம் கிடைக்க ஆரம்பிக்கும். 100 மரங்கள்ல இருந்து வருஷத்துக்கு ரெண்டு லட்ச ரூபாய் வருமானம் எடுக்கணுங்கிறது எங்க குறிக்கோள்.
இந்தப் பகுதியில நிறைய பேர் சேம்பு சாகுபடி செய்றதால நாங்களும் கொஞ்சம் சேம்பு நட்டிருக்கோம். இப்போ 3 மாசப்பயிரா இருக்கு. இன்னும் 3 மாசத்துல வெட்டுக்கு வந்துடும். வெட்டும்போது, 20 மூட்டை (100 கிலோ) அளவுக்குச் சேம்பு கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது மூலமா 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம்.
80 சென்ட் நிலத்துல இந்த முறை அறுபதாம் குறுவையையும், சீரகச் சம்பாவையும் நடவு செய்யலாம்னு இருக்கோம்.
கேரளாவில் கிடைத்த குட்டை மாடு!
பசுமை விகடன்ல ‘ஜீரோ பட்ஜெட்’ விவசாய முறைகளைப் படிச்ச பிறகு நாட்டு மாடுதான் வாங்கணும்னு முடிவு செய்துட்டேன். பலகட்ட தேடலுக்குப் பிறகு, உலக அளவுல குட்டை இன பசுவான ‘காசர்கோடு குட்டை’ ரக மாடுகளை வாங்கினோம். நாலு பெரிய மாடுகள், ஒரு கன்றுக்குட்டினு மொத்தம் அஞ்சு மாடுகள் இருக்கு. ஒரு மாடு சினையா இருக்கு. ஒண்ணரை வயசுல ரெண்டு கிடேரிகள் நிக்கிது. ஒரு மாடு மட்டும் கறவையில இருக்கு. அதுல இருந்து தினம் கன்றுக்குட்டிக்கு ஒரு லிட்டர் அளவுக்குக் குடிக்க விட்டது போக, ஒண்ணரை லிட்டர் பால் கிடைக்கிது. மாடு குட்டையா இருக்கிறதால பராமரிக்கிறது சுலபமா இருக்கு. தினம் 5 கிலோ தீவனமே போதுமானதா இருக்கு. இந்த இனத்தைக் கலப்பில்லாம பெருக்கணும்னு முடிவு பண்ணியிருக்கோம்.
ஓஹோ... ஓஸ்மானாபாடி!
இங்க நிக்கிறது மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட ஓஸ்மானாபாடி ஆடுகள். நம்ம நாட்டு ரக ஆடுகளைப் போலவே கருப்பு நிறத்துல இருக்கும். ஆனா, இந்த ரகத்துல பால் அதிகமா கிட்டைக்கும். ரெண்டு கிடா, 13 பெட்டை, 3 குட்டிகள்னு மொத்தம் 18 ஆடுகள் இருக்கு. உலவுறதுக்கு இடம் விட்டு கொட்டகை அமைச்சிருக்கோம். ஒவ்வொரு ஆட்டுக்கும் தினமும் காலையிலயும் சாயங்காலமும் ஒண்ணரை கிலோ அளவுக்கு பசுந்தீவனமும், கால் கிலோ அடர்தீவனமும் கொடுக்கிறோம். இன்னும் ரெண்டு வருஷம் கழிச்சு குட்டிகள் பெருகினதுக்கப்பறம்தான் இதுல வருமானம் கிடைக்கும். வருஷத்துக்கு 40 குட்டிகள் எடுக்கணும்னு வெச்சிருக்கோம். எங்க கணக்குப்படி சரியா கிடைச்சா ஆடு மூலமா வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய்க்கு மேல வருமானம் எடுக்க முடியும்.
செலவில்லா வருமானம் கொடுக்கும் கோழிகள்!
‘பெருவிடை’ நாட்டுக்கோழி ரகத்துல 8 பெட்டை, 2 சேவல்னு மொத்தம் 10 கோழி வெச்சிருக்கோம். இப்போ, வாரம் 25 முட்டையில இருந்து 30 முட்டைகள் வரை கிடைக்கிது. ஒரு முட்டை 8 ரூபாய்னு விற்பனை செய்றோம். கோழிகளுக்குத் தீவனத்துக்காக எந்தச் செலவும் இல்லை. மேய்ச்சல் மட்டும்தான்.
இதோட, ஒரு ஜோடி கோம்பை நாய்களை தடுப்பூசி எல்லாம் போட்டு ஊட்டமா வளர்த்துக்கிட்டிருக்கோம். அதுல இருந்து குட்டிகளை எடுத்து விற்பனை செய்யலாம்னு இருக்கோம். மீன் வளர்ப்புக்காக 10 ஆயிரம் சதுர அடியில குளம் எடுத்து வெச்சிருக்கோம். இன்னும் மீன் வளர்க்க ஆரம்பிக்கலை. அதே மாதிரி நிலத்துல அமைச்சிருக்கிற பாதையில தென்னை, கொய்யா, சப்போட்டா, நாவல், மாதுளை, மா, பலா, வாழைனு பழச்செடிகளை நடவு செய்திருக்கோம். வாழை சீக்கிரம் தார் போட்டுடும். மத்த பழங்கள் கிடைக்க மூணு வருஷம் ஆகும். எப்பவும் ஏதாவது ஒரு பழம் தோட்டத்துல காய்ச்சிட்டு இருக்குற மாதிரிதான் தேர்வு பண்ணியிருக்கோம்” என்று நிறுத்தினார் தீபலட்சுமி.
நிறைவாகப் பேசிய சுதாகரன், ‘‘தற்சமயம் பண்ணை வளர்ச்சி நிலையிலதான் இருக்கு. இப்போதைக்கு முட்டை விற்பனை, நெல், கீரை விற்பனை மூலமாகக் கிடைக்கிற வருமானம் பராமரிப்புக்கே சரியாகிடுது. இன்னும் ரெண்டு வருஷத்துல நல்ல வருமானம் கிடைக்க ஆரம்பிச்சுடும். அதுக்குப் பிறகு வருஷத்துக்கு 6 லட்சம் ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறோம். அது இல்லாம இப்போ எங்க பிள்ளைங்களுக்கு விவசாயத்தைக் கற்றுக் கொடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.
நகர வாழ்க்கையில இருக்கிற வெறுமையை, இந்தப் பண்ணை மூலமா போக்கிக்கிட்டோம். கூடவே வருமானத்துக்கான வழியையும் உருவாக்கிட்டோம். இதைவிட நகர வாழ்க்கையில கூடுதல் வருமானம் கிடைக்கலாம்... ஆனா, இந்த சந்தோஷம் கிடைக்குமா” என்று கேட்டு புன்னகையுடன் விடைகொடுத்தார்.
தொடர்புக்கு,
தீபலட்சுமி,
செல்போன்: 96773-07272

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites