இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

சொக்கவைக்கும் சூரியகாந்தி!

90 நாள்.... ரூ.50 ஆயிரம் வருமானம்... 
து, கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஒட்டியுள்ள பாரதிபுரம் பகுதி. முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ள சாலையோர நிலம். மஞ்சள் தொப்பி அணிந்த ராணுவ வீரர்கள் போல பிசிறு இல்லாமல் ஒரே சீராக சூரிய நமஸ்காரம் செய்துகொண்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான சூரிய காந்திப் பூக்கள். அவ்வழியில் செல்லும் அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைக்கிறது அவற்றின் வசீகரம். அந்த அழகை ரசித்தபடியே வயலுக்குள் நுழைந்தோம்.
‘‘ஏனுங்க... இந்த சூரியகாந்தி வயலை போட்டோ எடுத்துக்கலாமா?’’ வயலில் வேலையாக இருந்தவரைப் பார்த்துக் கேட்டோம்.
‘‘காசா... பணமா! போதும் போதும்னு நீங்க நெனைக்குற வரை எடுத்துத் தள்ளுங்க’’ ஏக மனதாக அனுமதி கொடுத்தார் வெள்ளந்தி விவசாயி.
பச்சைக்கிளிகள் பூவோடுவரப்பில் நடந்தபடியே தப்பட்டை அடிப்பதுபோல, அலுமினிய வட்டில் ஒன்றின்மீது குச்சி மூலம் தட்டி ஒலி எழுப்பிக்கொண்டே, வட்டில் ஒலியோடு சேர்ந்து, ‘ஆலோலோலோலாங் கூய்... ஆலோலோலோலாங் கூய்’ என்று வாய்குவித்து ஓசை எழுப்பியபடி வயலை வலம் வந்து கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.
‘‘இது, அறுப்பு நேரம். இந்த விதைங்க ருசியா இருக்கும். இதை கொத்தித் திங்க பச்சைகிளிங்க வரும். அதுவும் சாயங்கால நேரத்துல கூட்டம் கூட்டமா வரும். அதுகளை கவ்வை வில்லுல கல்கொண்டு அடிச்சு விரட்டுறது பாவங்க. அதுக்காக விரட்டாம இருந்தா வெள்ளாமை வீடு வந்து சேராது. அதனாலதான் இப்படி கிளிகளை விரட்டுறாங்க’’ என அந்த விவசாயி நமக்கு விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அந்த பெண்மணியும் வந்து சேர்ந்துகொண்டார்.
வைகாசிப் பட்டம் வளமான மகசூல்!
இருவரும் வரப்பில் உட்கார்ந்துகொண்டு, நம்முடைய புகைப்படக்காரர் படமெடுப்பதை அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களருகில் அமர்ந்து சூரியகாந்தி சாகுபடி பற்றி நாம் கேள்விகளை வீச... மடைதிறந்த வெள்ளமாகப் பேசத் தொடங்கினார் அந்த விவசாயி.
‘‘என்னோட பேரு மூர்த்தி. இது என் மனைவி கருத்தம்மா. எங்க ரெண்டு பேர் உழைப்புதான், இங்க பூப்பூவா பூத்து நிக்குது. இது எங்க சொந்த வயல் கிடையாது. இதுக்கு உரிமைப்பட்டவங்க வெளியூர்ல இருக்காரு. அடிக்கடி இங்கு வந்து அவரால விவசாயம் பார்க்க முடியலை. எங்ககிட்ட பொறுப்பைக் கொடுத்திருக்காங்க. அவங்க அனுமதியோட வெள்ளாமை வெச்சு எடுத்து, வருஷ கடைசியில ஒரு தொகையை அவங்களுக்குக் குத்தகையா கொடுத்திடுவோம்.
எதைப் போட்டாலும் பொன்னா விளையக்கூடிய வளமான வண்டல் மண் பூமி இது. பாசனத்துக்கு ஏத்த நல்ல தண்ணீரும் கிணத்துல கிடைக்கு. இந்தப் பக்கம் செடிமுருங்கை வெள்ளாமைதான் அதிகம். ஆனா, குத்தகை நிலத்துல ரொம்பநாள் வெள்ளாமை வைக்க முடியாது. திடீர்னு கேணியில தண்ணி குறைஞ்சா சிக்கலாகிடும். வெச்ச முருங்கையும் பாதியில கருகிடும். அதை யோசனை பண்ணித்தான் குறுகிய காலப்பயிரான சூரியகாந்தியை விதைச்சு, இயற்கை உரத்தை மட்டும் போட்டு சாகுபடி செஞ்சிருக்கோம்’’ என்று சொன்ன மூர்த்தி, அடுத்து சாகுபடிப்பாடத்தை சொல்லத்தொடங்கினார் (பார்க்க, பெட்டி செய்தி).
‘‘அறுத்து, விதைகளைப் பிரிச்ச பிறகு, விக்க அதிகம் அலைய வேண்டியதில்லை. போன் பண்ணி சொன்னா போதும், களத்துமேட்டுலயே வந்து எடை போட்டு எடுத்துக்கிட்டு காசு கொடுத்துட்டு போயிடுவாங்க யாவாரிங்க. இன்னைய தேதிக்கு கிலோ 30 ரூபாயில இருந்து 35 ரூபாய் வரைக்கும் போகுது. சராசரியா ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் வருமானம் வரும். குத்தகைப் பணம், செலவெல்லாம் போக 30 ஆயிரம் ரூபாய் கையில நிக்கும். 90 நாள்ல இது நல்ல வருமானம்தானே’’ என்று தெம்பாகச் சொன்னார்.
அவரைத் தொடர்ந்த மனைவி கருத்தம்மா, ‘‘அடுத்த போகம் ஐப்பசிப் பட்டத்துல நிலக்கடலை, அதுக்கு அடுத்த போகம் எள் விதைப்போம். கூலி வேலைக்குப் போயிட்டு இருந்த நாங்க, இன்னிக்கு குத்தகை நிலத்துல வெள்ளாமை பண்ணி நாலு காசு கண்ணுல பாக்குறோம். எங்களுக்குக் கைகொடுத்து உதவுறது, நிலக்கடலை, எள், சூரியகாந்தி மூணும்தான். இந்த மூணு பயிருக்கும் ஆட்டு எருதான் போடுறோம்’’ என்றவர், பழையபடி ‘ஆலோலோலோ ஊய்...’ என்று குரல் கொடுத்து, பச்சைக்கிளிகளை விரட்ட போனார்.   
சாகுபடிக் குறிப்பு...அடியுரமா ஆட்டு எரு!
இதன் அதிகபட்ச வயது 100 நாட்கள். இறவையில் சாகுபடி செய்ய பட்டம் தேவையில்லை. இருந்தாலும், அதிக வெயிலும் மழையும் இல்லாத, கார்த்திகை, வைகாசி, ஆடிப் பட்டங்களில் நடவு செய்தால் முழுமையான மகசூலை எடுக்கலாம். முன்னதாக, சித்திரைப் பட்டத்தில் இரண்டு முறை கோடை உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்கிக் கொள்ள வேண்டும். தொடர்ந்து ஏக்கருக்கு 5 டன் ஆட்டு எருவைக் கொட்டி பரவலாக இறைத்து விடவேண்டும். ஆட்டு எரு நன்றாகக் காய்ந்து ஈரத்தன்மை இல்லாமல் இருக்கவேண்டும். ஆட்டுப் புழுக்கைகளில் சில நோய்க் கிருமிகள் இருக்கும். எனவே அதை நேரடியாக நிலத்தில் போடுவதை விட, புழுக்கைகளைப் பொடியாக்கி போடுவது நல்லது. ஆட்டு எருவைப் பரவலாக இறைத்துவிட்ட பிறகு, ‘பார் முறைப் பாத்தி’ அமைக்க வேண்டும். பாருக்கு பார் 2 அடி இடைவெளியும், செடிக்கு செடி ஒன்றரை அடி இடைவெளியும் இருக்கும்படி பாத்தி எடுத்து, வரப்பில் விதைகளை நடவு செய்யவேண்டும். ஏக்கருக்கு 3 முதல் 4 கிலோ விதைகள் தேவைப்படும்.
ஜி.பழனிச்சாமி
படங்கள்: ரமேஷ் கந்தசாமி க.சத்தியமூர்த்தி

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites