இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

சின்னவெங்காய சாகுபடி... இப்படி!

60 சென்ட் நிலத்தில் சின்னவெங்காய சாகுபடி பற்றி ராஜேஷ்குமார் சொன்ன விஷயங்கள் இங்கே...
வெங்காயத்துக்கேற்ற இரண்டு பட்டங்கள்!
“சின்னவெங்காயத்துக்கு, சம்பா பட்டம் (ஆனி முதல் ஆவணி மாதம் வரை), குறுவைப்பட்டம் (ஐப்பசி முதல் தை மாதம் வரை) ஆகிய இரண்டு பட்டங்களும் சிறந்தவை (இவர் சம்பா பட்டத்தில் வெங்காயம் நடவு செய்திருக்கிறார்). சம்பா பட்டத்தில் விதைக்க வேண்டுமென்றால், வைகாசி மாதக் கடைசியிலேயே ஆட்டுக்கிடை போட்டு, நிலத்தை உழவு செய்து காய விட வேண்டும். குறுவைப் பட்டத்தில் விதைப்பவர்கள் என்றால், புரட்டாசி மாதக் கடைசியில் ஆட்டுக்கிடை அமைத்து காய விடலாம். சம்பா சாகுபடிக்கு ஆனி மாதமும், குறுவைக்கு ஐப்பசி மாதமும் ஓர் உழவு அடித்துவிட்டு... உழவடித்த அன்றே 10 அடி நீளம் 5 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும். 60 சென்ட் நிலத்துக்கு 250 பாத்திகள் வரை வரும். பாத்தி எடுத்த உடனே தண்ணீர் பாய்ச்சி, தலைப்பகுதி மேலே இருக்குமாறு வெங்காயத்தின் முக்கால்பகுதியை மண்ணுக்குள் புதைத்து நடவு செய்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தொடர்ந்து, 4-ம் நாள் மற்றும் 9-ம் நாள் தண்ணீர் கொடுக்க வேண்டும். பிறகு நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சினால் போதும். நடவு செய்த 20 மற்றும் 40-ம் நாட்களில் களை எடுக்க வேண்டும்.
நுனிக்கருகலுக்கு, வேப்பங்கொட்டைக் கரைசல்!
நடவு செய்த 10-ம் நாளில் இருந்து, அறுவடை வரையிலான காலகட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் நுனிக்கருகல் நோய் தாக்கலாம். இந்நோய் தாக்கினால், வெங்காயத்தாள் நுனியில் வெள்ளை நிறமாக காய்ந்தது போல இருக்கும். தாளுக்குள் துளைபோட்டு புழுக்கள் சென்று வெங்காய விளைச்சலைப் பாதிக்கும். ரசாயன முறை சாகுபடியில் இந்நோய் அதிகமாக வரும். இயற்கை முறையில் நோய்த் தாக்குதல் குறைவுதான். அப்படியே வந்தாலும், வேப்பங்கொட்டைக் கரைசல் தெளித்து சரி செய்து விடலாம். தாள் காய்ந்தது போலக் காணப்பட்டாலே இக்கரைசலைத் தெளித்துவிட வேண்டும்.
பளபளப்புத் தன்மைக்கு, மீன் அமினோ அமிலம்!
நடவு செய்த 15-ம் நாள், 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். 45 மற்றும் 60-ம் நாட்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். வெங்காயத்துக்கு நிறம் கூட்டவும், பளபளப்புத் தன்மையை உருவாக்கவும் ரசாயன விவசாயத்தில் ரசாயனக் கலவை ஒன்றைத் தெளிப்பார்கள். ஆனால், மீன் அமினோ அமிலம் தெளித்தால் இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிறமும், பளபளப்பும் கிடைத்துவிடும். 70-ம் நாள் வெங்காயத்தை அறுவடை செய்து விடலாம்.”
சேமிப்புப் பட்டறை!
வெங்காயத்துக்கு விலை இல்லாத நேரங்களில் பட்டறை அமைத்து சேமித்து வைக்கலாம். விதை வெங்காயத்தையும்கூட பட்டறையில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். கிழக்கு-மேற்காகத்தான் பட்டறை அமைக்க வேண்டும். வடக்கு-தெற்காக பட்டறை அமைத்தால், வெங்காயத்தின் மீது வெயில் படும். வெங்காயத்துக்குக் காற்றோட்டமும் தேவை. மர நிழலில் பட்டறை அமைத்தால் நல்லது. தரையில் இருந்து ஓர் அடி உயரத்தில் செங்கல் வைத்து அடுக்கி அதன் மேல்... இரண்டரை அடி அகலத்தில் தேவைக்கேற்ற நீளத்தில், அகத்திக் கம்புகளைக் குறுக்கும் நெடுக்குமாக அடுக்க வேண்டும். அதன் மீது காய்ந்த நாற்று, தென்னங்கீற்று அல்லது பனை ஓலையைப் போட வேண்டும். வெங்காயத்தை அறுவடை செய்தவுடனே பட்டறையில் வைக்கக் கூடாது. தாளில் ஈரப்பதம் இருந்தால் வெங்காயம் அழுகிவிடும். அறுவடை செய்து 4 நாட்கள் களத்திலேயே காயவிட்டு, முதல் நாள் முக்கால் அடி, இரண்டாவது நாள் 2 அடி என கொஞ்சம் கொஞ்சமாகத்தான் எடை ஏற்ற வேண்டும். இரண்டடி உயரம் வரை மட்டமாக அடுக்கிவிட்டு இரண்டடிக்கு மேல் கூம்பு வடிவத்தில் அடுக்க வேண்டும். பட்டறையில் அடுக்கி முடித்த பிறகு, வெங்காயத்தின் மீது பனை ஓலை அல்லது சாக்கு போட்டு மூடவேண்டும். இந்தப் பட்டறையில் 7 மாதங்கள் வரை வெங்காயத்தைச் சேமித்து வைக்க முடியும்.
உணவுக்கு மட்டுமல்ல... மருந்துக்கும்!
வெங்காயத்தில் உள்ள ‘அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல்’ என்ற வேதிப்பொருள், பாலுணர்வை அதிகம் தூண்டும் தன்மையுடையது. தேனீ, குளவி ஆகியவைக் கொட்டிவிட்டால் வெங்காயத்தை உரித்து, கொட்டிய இடத்தில் தேய்த்தால், விஷம் முறிந்துவிடும்.
சின்னவெங்காயத்தை உணவில் தினமும் சேர்த்துக் கொண்டால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. நான்கு வெங்காயங்களை தோலை உரித்து அதனுடன் சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனவாய்க் கடுப்பு நீங்கிவிடும். புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றலும் சின்னவெங்காயத்துக்கு உண்டு. புகை பிடித்தல், காற்று மாசு, மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்தும்.
இ.கார்த்திகேயன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites