இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Sunday, December 6, 2015

கைகொடுக்கும் நாடன் வாழை

ஒரு ஏக்கர்... ரூ 2,70,000 வருமானம்... நட்டமில்லா விவசாயத்துக்கு கைகொடுக்கும் நாடன் வாழை!
ற்றுமதிக்கு ஏற்ற கலப்பின வாழை ரகங்களை சாகுபடி செய்து, அதிக வருமானம் எடுக்கும் விவசாயிகளுக்கு மத்தியில்... உள்ளூர் மார்க்கெட்டுக்கு ஏற்ற நாட்டு வாழை ரகங்களை சாகுபடி செய்து நல்ல வருமானம் எடுக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், கடலூர் மாவட்டம், வழிச்சோதனைப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா. இவர், ‘பச்சை நாடன்’ ரக வாழையை சாகுபடி செய்து, லாபகரமான வருமானம் பார்த்து வருகிறார், 
நாம் ராஜாவின் பண்ணைக்குச் சென்றபோது, வாளிப்பாக வளர்ந்திருந்த வாழை மரங்களும், தென்னை மரங்களும் வேகமாக வீசிய காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. தோப்பில் ஆங்காங்கே நாட்டுக்கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. ரம்மியமான அந்தச் சூழ்நிலையில் ராஜாவிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும், உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.
“பூர்விக விவசாயக்குடும்பம் நாங்க. தாத்தாவுக்கு அப்பறம் அப்பா விவசாயம் பாக்க ஆரம்பிச்ச பிறகு, கிணறு வெட்டி... மணிலா, கேழ்வரகு, கம்பு, மரவள்ளினு சாகுபடி செய்தார். கிணற்றுப் பாசனத்துல இருந்து போர்வெல் பாசனத்துக்கு மாறினதும், கரும்பு, வாழைனு பணப்பயிர் சாகுபடிக்கு மாறினார், அப்பா. நிலம், வீடு எல்லாம் ஒரே இடத்துல இருக்கிறதால சின்னப் பிள்ளையில இருந்தே விவசாயம் என்னோட ரத்தத்துல ஊறிப் போச்சு. படிக்கிற நேரம் போக மத்த நேரம் முழுக்க, அப்பா கூடச் சேர்ந்து நிலத்துல வேலை பார்க்கிறது வழக்கம். ஐ.டி.ஐ முடிச்சிட்டு, முழுநேரமும் விவசாயத்துல இறங்கினேன். நான், வழக்கமான பயிர்களோட பந்தல் காய்கறிகளையும் பலவித வாழை ரகங்களையும் சாகுபடி செய்ய ஆரம்பிச்சேன்.
கஷ்டம் கொடுத்த வாடல்நோய்!
அப்பா, பூவன் ரகத்தை மட்டும்தான் சாகுபடி செய்தார். நான், ரஸ்தாளி, கற்பூரவல்லி, கிராண்ட்-9 (ஜி-9) ரகங்களையும் சேர்த்து சாகுபடி செய்தேன். ஆரம்பத்துல எருவோடு, உரங்களையும் கலந்து போட்டப்ப விளைச்சல் நல்ல முறையில் இருந்துச்சு. விலையும் நல்லா கிடைச்சதால, வருமானமும் அதிகமா கிடைச்சது. போகப்போக ரசாயன உரங்களோட விலை ஏற்றம் அதிகமாச்சு. ஆனா, வாழைத் தாருக்கு விலை கிடைக்கலை. மண்ணுல வளம் குறைஞ்சி பூச்சி, நோய்த் தாக்குதலும் அதிகமாகிடுச்சு. ஒருமுறை கற்பூரவல்லி வாழையில ‘வாடல் நோய்’ தாக்குதல் அதிகமா இருந்துச்சு. பலபேர்கிட்ட ஆலோசனை கேட்டும், தீர்வு கிடைக்கலை. ஒரு கட்டத்துல வாழையை அழிச்சிடலாம்னு தோணுச்சு. கடைசியா ஒரு விஞ்ஞானியோட ஆலோசனைப்படி டிரைக்கோ டெர்மா விரிடி,  சூடோமோனஸ் கலவையைக் கலந்து தெளிச்ச பிறகுதான் கட்டுப்பாட்டுக்கு வந்துச்சு. அப்போதான், மண்ணும் சூழலும் கெட்டுப்போயிருக்கிறதைப் புரிஞ்சுக்கிட்டேன்.
பாடம் சொல்லிக்கொடுத்த பசுமை விகடன்!
அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ கையில கிடைச்சது. அதைப் படிக்க படிக்க, என்னோட பல சந்தேகங்கள் தீர்ந்துடுச்சு. பாலேக்கர், நம்மாழ்வார் சொல்லிக் கொடுத்த பல வித்தைகள் மண்ணைப் பொன்னாக்கும்னு தெரிஞ்சுக்கிட்டேன். தடாலடியா இயற்கை விவசாயத்துல இறங்கினா, மகசூல் குறையுங்கிறதால, கொஞ்சம் கொஞ்சமா இயற்கை விவசாயத்துக்கு மாற ஆரம்பிச்சேன். இப்ப அஞ்சு வருஷமா முழுக்க இயற்கை விவசாயம்தான் செய்றேன். அதனால, மண் வளமா இருக்கிறதோட, ரசாயன உரம் போடுறப்ப கிடைக்கிற விளைச்சலுக்கு நிகரா மகசூலும் கிடைச்சுக்கிட்டிருக்கு” என்ற ராஜா, வாழை சாகுபடி அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். 
பழ உதிர்வைக் குறைக்கும் இயற்கை விவசாயம்!
‘‘இந்தப் பகுதியில அதிக அளவுக்கு பூவன், கற்பூரவல்லி ரகங்களைத்தான் சாகுபடி செய்றாங்க. நான் நாலு வருஷமா செவ்வாழையும், நாடனும் சாகுபடி செய்றேன். இந்த மண்ணுக்கும், தண்ணீருக்கும் செவ்வாழையும், நாடனும் நல்லமுறையில விளைஞ்சு வருமானம் கொடுக்குது. அதில்லாம இயற்கை முறையில சாகுபடி செய்யும்போது, பழம் நல்ல சுவையோட இருக்கிறதோட அதிக நாட்கள் சீப்புல இருந்தாலும் பழங்கள் உதிர்றதில்லை.
நான் செவ்வாழை தார்களைக் கொஞ்சம் கொஞ்சமா வெட்டிக்கொண்டு போய் கடலூர் மாக்கெட்ல விற்பனை செய்றேன். தினமும் அறுவடை செய்து, விற்பனை செய்யும்போது கூடுதலா லாபம் கிடைக்குது. நாடன் வாழைப் பழங்களைத் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்தவங்க அதிகமா விரும்பி சாப்பிடுவாங்க. சென்னை, கோயம்பேடு மார்க்கெட்லயும் இந்த ரகத்துக்கு நல்ல விலை கிடைக்குது.
மொத்தம் 10 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல, 4 ஏக்கர்ல பூவன், ஒண்ணரை ஏக்கர்ல செவ்வாழை, 3 ஏக்கர்ல நாடன் இருக்கு. ஒண்ணரை ஏக்கர் பப்பாளி நடவு செய்ய போறேன். நாடன் வாழையில ரெண்டு ஏக்கர்ல அறுவடை முடிஞ்சது. மீதம் ஒரு ஏக்கர் வாழை அறுவடைக்குத் தயாரா இருக்கு” என்றவர், நாடன் வாழை சாகுபடி பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். அது பாடமாக இங்கே...
சிறப்பான மகசூலுக்கு செம்மண்!
‘நாடன் வாழையின் வயது 10 மாதங்கள். ஆடிப் பட்டமும், கார்த்திகைப் பட்டமும் நடவுக்கு ஏற்றவை. தண்ணீர் தேங்காத எல்லா மண்வகைகளிலும் சாகுபடி செய்யலாம் என்றாலும், சிறப்பான மண் செம்மண்தான். தேர்வு செய்த நிலத்தை இரண்டு சால் உழவு செய்து, ஏக்கருக்கு 10 டன் என்ற கணக்கில் எருவைக் கொட்டிக் கலைத்து... ஒரு சால் உழவு செய்ய வேண்டும். 
ஏக்கருக்கு 1,000 மரங்கள்!
நிலத்தை ஈரப்படுத்தி, ஆறரை அடி இடைவெளியில் மண்வெட்டி கொண்டு முக்கால் அடி ஆழத்துக்குக் குழி எடுக்க வேண்டும். ஏக்கருக்கு ஆயிரம் குழிகள் வரை எடுக்க முடியும். இரண்டு முதல் மூன்று மாத வயதுள்ள ‘ஈட்டி’ வாழை இலைக்கன்றுகளைத் தேர்வு செய்து, அவற்றில் கிழங்கில் இருந்து அரை அடி உயரத்துக்குத் தண்டுப் பகுதியை மட்டும் விட்டு மீதியை வெட்டி நீக்க வேண்டும். 200 லிட்டர் தண்ணீரில் ஒரு கிலோ சூடோமோனஸ், ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், 10 லிட்டர் பஞ்சகவ்யா ஆகியவற்றைக் கலந்து, அதில் கிழங்கை முக்கி எடுத்து 3 மணி நேரம் நிழலில் உலர்த்தி, விதைநேர்த்தி செய்து குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த நான்கு மாதங்கள் வரை வாழைக்கு இடையில் ஊடுபயிராகக் கத்திரி, வெண்டை, நிலக்கடலை மாதிரியான குறைந்த வயதுடைய பயிர்களை சாகுபடி செய்யலாம்.
மாதம் ஒரு உழவு!
நடவு செய்த ஒரு வாரத்தில் கன்றுகளில் இருந்து இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். ஊடுபயிர் இருந்தால், 20-ம் நாளில் களை எடுக்க வேண்டும். வாழை மட்டும் இருந்தால், 30-ம் நாளில் இருந்து எட்டாவது மாதம் வரை மாதம் ஒரு முறை பவர் வீடர், மினி டிராக்டர் மூலம் உழவு செய்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நடவிலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் 200 லிட்டர் அமுதக்கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். 3 மற்றும் 6-ம் மாதங்களில் ஒரு வாழை மரத்துக்கு ஒரு கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து மண் அணைக்க வேண்டும்.
வளம் கூட்டும் இலைவழித் தெளிப்பு!
நடவு செய்த 1 மாதம் கழித்து, 150 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் ஹியூமிக் ஆசிட் கலந்து இலைவழித் தெளிப்பாகத் தெளிக்க வேண்டும். 2-ம் மாதம் 150 லிட்டர் தண்ணீரில் 5 லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 3-ம் மாதம் ஆயிரம் லிட்டர் தண்ணீரில் டிரைக்கோடர்மா விரிடி - 10 கிலோ, சூடோமோனஸ் -10 கிலோ, பஞ்சகவ்யா- 10 லிட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து ஒவ்வொரு வாழைக்கும் ஒரு லிட்டர் வீதம் மரத்தைச் சுற்றி ஊற்ற வேண்டும். 4-ம் மாதம் 150 லிட்டர் தண்ணீரில் 500 மில்லி மீன் அமினோ அமிலம் கலந்து தெளிக்க வேண்டும். 5-ம் மாதம் 150 லிட்டர் அமுதக்கரைசலுடன், 5லிட்டர் பஞ்சகவ்யாவைக் கலந்து தெளிக்க வேண்டும். 5 மற்றும் 7-ம் மாதங்களில் 150 லிட்டர் தண்ணீருடன் 900 கிராம் பயோ பொட்டாஷ் கலந்து தெளிக்க வேண்டும். 6-ம் மாதம் 150 லிட்டர் தண்ணீருடன் கடல்பாசி உரம் அரை லிட்டர் கலந்து தெளிக்க வேண்டும்.  
மட்டைக் காய்ச்சல்... கவனம்!
இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், அதிக அளவு பூச்சி, நோய்த்தாக்குதல் இருக்காது. 5 மற்றும் 7-ம் மாதங்களில் வாழையில் மட்டைக்காய்ச்சல் அதிகமாகும். அந்த சமயத்தில், 200 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் சூடோமோனஸ், ஒரு லிட்டர் வேப்பண்ணெய், 50 மில்லி காதிசோப் கரைசல் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தெளித்து விட வேண்டும். இரண்டு முதல் மூன்று மாதங்களில் பக்கக் கன்றுகள் வரத்துவங்கும். அவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். நான்காவது மாதத்துக்கு மேல் காய்ந்த சருகுகளை அறுத்து மூடாக்காகப் போட வேண்டும். 8-ம் மாதத்துக்குள் குலை தள்ளி விடும். 9-ம் மாதத்தில் ஒவ்வொரு மரத்துக்கும் ஒரு சவுக்குக்கம்பை முட்டுக் கொடுத்துக் கட்ட வேண்டும். 10-ம் மாதத்தில் வாழையை அறுவடை செய்யலாம். ஒரு தாரில் 8 முதல் 10 சீப்புகளும், ஒரு சீப்புக்கு 16 முதல் 20 பழங்களும் இருக்கும். ஒரு தார் 35 முதல் 40 கிலோ எடை இருக்கும்.”
சாகுபடிப் பாடம் முடித்த ராஜா, நிறைவாக வருமானம் பற்றிச்  சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஒரு வாழைத்தார் 250 ரூபாய்ல இருந்து 350 ரூபாய் வரைக்கும் விற்பனையாகுது. ஒரு தாருக்கு சராசரியா 300 ரூபாய் விலை கிடைச்சுடும். நடவு செஞ்ச 1,000 மரங்கள்ல சேதமானது போக, 900 தார் எப்படியும் கிடைச்சுடும். அந்த வகையில 2 லட்சத்து 
70 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல உழவு, இடுபொருள், பராமரிப்புச் செலவுகள் போக ஒண்ணே முக்கால் லட்ச  ரூபாய்க்கு மேல லாபமா நிக்கும்” என்று சொல்லி விடைகொடுத்தார். 
தொடர்புக்கு,
ராஜா,
செல்போன்: 97861-31320.
‘பலே’ பச்சை நாடன்!
இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இந்த வாழை ரகம் பயிரிடப்படுகிறது. இந்த வாழை ரகத்தை ‘நாடு’ என்றும் சொல்கின்றனர். கற்பூரவல்லி, ரஸ்தாளி வாழை சாகுபடி செய்யப்படும் இடங்களில் கன்று அழுகினாலோ அல்லது காய்ந்து போனாலோ அந்த இடத்தில் இந்த ரகத்தை நடவு செய்வார்கள். அதனால், இந்த வாழைக்குக் ‘காலிவாழை’ என்ற பெயரும் உண்டு. மூளை வளர்ச்சிக்குத் தேவையான மாங்கனீஸ், ஹீமோகுளோபினை அதிகப்படுத்தும் இரும்புச்சத்து ஆகியவை இந்த ரக வாழையில் அடங்கியுள்ளன.
விருது வாங்கிக்கொடுத்த வாழை!
செவ்வாழை, நாடன் ஆகிய வாழை ரகங்களை, ராஜா சிறப்பான முறையில் சாகுபடி செய்து வருவதைப் பாரட்டும் வகையில், திருச்சியில் உள்ள ‘தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம், இந்த ஆண்டுக்கான ‘சிறந்த வாழை விவசாயி’ விருதை அவருக்கு வழங்கி கௌவரப்படுத்தியுள்ளது.
காசி.வேம்பையன்
படங்கள்: எஸ்.தேவராஜன்

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites