இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Monday, April 16, 2012

நயம் நாட்டுச் சர்க்கரை


காலங்களை வென்ற ஊத்துக்குளி' நெய், 'சேலம்' மாம்பழம், 'பண்ருட்டி' பலா, 'மணப்பாறை' முறுக்கு... என ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பெருமை உண்டு. அந்த வரிசையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் தித்திப்பான பெருமை கொண்டது, 'கவுந்தப்பாடி' நாட்டுச் சர்க்கரை. ஈரோடு மாவட்டத்தில் இருக்கிறது அந்த இனிப்பு ஊர்! ஊருக்குள் நுழையும்போதே நாசி வழியாக நுழைகிறது, சர்க்கரைப் பாகின் நறுமணம். கரும்பை ஆலையிலிட்டு அரவை செய்வது, அரைத்தக் கரும்புப்பாலைக் கொப்பரையில் கொதிக்க வைப்பது... என ஆங்காங்கே பல்வேறு நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த ஒரு முற்பகலில், குவியலாகக் கிடந்த சர்க்கரையை மூட்டை பிடித்துக் கொண்டிருந்த பொன்னுசாமியிடம் பேசினோம்.

மூணு தலைமுறையா மதிப்புக்கூட்டல் !
''விவசாயிங்க, உற்பத்தி செய்யும் பொருள்களில் ஒரு பகுதியையாவது மதிப்புக்கூட்டி வித்தாத்தான் லாபம் பார்க்க முடியும் என்று சமீபகாலமாக பலரும் சொல்ல ஆரம்பிச்சுருக்காங்க. ஆனால், பல நூறு வருடத்திற்க்கு முன்ன இருந்தே... கரும்பை மதிப்புக்கூட்டி சர்க்கரையா மாத்திக்கிட்டு இருக்கோம் நாங்க. ஆமாம்... மூன்று, நான்கு தலைமுறையாக, இந்தப் பகுதியில் நாட்டுச் சர்க்கரை உற்பத்தி நடக்கிறது. கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் இருக்கும் விவசாயிகள், கரும்பை ஆலைகளுக்கு அனுப்புவதில்லை.

முன்பெல்லாம், தை மாதம் தொடங்கி வைகாசி மாதம் வரைதான் சீசன் இருக்கும். ஆனால், இப்ப அப்படியில்லை. பத்து மாதமும் பவானி ஆத்துத் தண்ணீர் கிடைப்பதால், கரும்புக்குப் பட்டம் இல்லாமல் போயிடுச்சு. நடவு, களை, அறுவடை என்று வருடமெல்லாம் வெள்ளாமை இருக்கு. அடைமழைக் காலம் போக மத்த நாட்களில் சர்க்கரை உற்பத்தி நடந்துட்டே இருக்கு. இப்ப கரும்புல வீரிய ரகங்கள் வந்துடுச்சு. இருந்தாலும், பெரும்பாலான விவசாயிங்க நாட்டுக்கரும்பையும் விடாம விளைய வெச்சுக்கிட்டுதான் இருக்காங்க'' என்று முன்கதைகளோடு சேர்த்து ஊர் பெருமை பேசினார் பொன்னுசாமி.

அடுத்ததாக, கரும்பு அரைக்கும் இயந்திரத்தின் பசிக்கு கரும்பைத் தின்னக் கொடுத்துக் கொண்டிருந்த 'சிலுக்குப்பட்டி' வெங்கடாச்சலம், இங்கே பேசுகிறார்... ''தாத்தா காலத்துலயெல்லாம்... மரத்துல செய்த செக்கு மாதிரியான ஆலையில் கரும்பை நசுக்கி, பெரிய பெரிய மண் மொடாக்களில் நிரப்பி வைப்பாங்க. பிறகு, காது வைத்த பெரிய செப்புக் கொப்பரைகளில் ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சுவாங்க. பாகு பதத்திற்க்கு வந்ததும் ஆறவைத்து 'தேய்ப்பு முட்டி’ என்று சொல்லும் மர முட்டிகளை வைத்து, கட்டிகளை உடைத்து, தேய்ச்சுப் பொடியாக்குவாங்க. பிறகு பொதி மாடுகளில் ஏற்றி பெருந்துறை, பொள்ளாச்சி, காங்கேயம், கரூர், ஒட்டன்சத்திரம் சந்தைகளில் கொண்டுபோயி கொடுத்துட்டு... உப்பு, சீரகம், துணிமணிகள் என்று  தேவையானதை வாங்கிட்டு வருவாங்க. இப்ப உள்ளூர்லயே சந்தை இருக்கு. ஏதோ நாட்டுச் சர்க்கரை புண்ணியத்துல பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு''பேச்சு முடிந்ததற்கு அடையாளமாக, வேலையில் மும்முரமானார், வெங்கடாச்சலம். அடுத்ததாக, நாம் சென்ற இடம் கவுந்தப்பாடி சர்க்கரை சந்தை. அணி அணியாய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, சர்க்கரை மூட்டைகள். வெளியூர் வியாபாரிகளால் பரபரப்பாக இருந்தது, சந்தை. நாட்டுச் சர்க்கரை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் ப.அ. மசக்கவுண்டரிடம் பேசினோம்.

மறந்து போன பழக்கம் !

''தமிழ்நாட்டைப் பொருத்தவரை நாட்டுச் சர்க்கரை சந்தை என்றால், அது கவுந்தப்பாடிதான். முகலாயர் ஆட்சிக்கு முன்ன இருந்தே இங்க சர்க்கரை தயாரிப்பு நடந்திட்டிருக்கு. பழனி பஞ்சாமிர்தத்தில் கலக்குற நாட்டுச் சர்க்கரை, இங்க இருந்துதான் போகுது. சீசன் காலத்துல, வாரத்துக்கு 15 ஆயிரம் மூட்டை அளவுக்கு வெளியூர்களுக்குப் போகும். கொஞ்ச வருடத்திற்க்கு முன்ன வரைக்கும் எல்லா வீட்டுலையும் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தினாங்க. வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு சாப்பாட்டு இலையில சர்க்கரை, பழம் வைக்கும் வழக்கம் இருந்தது. அதிரசம், லட்டு, பணியாரம்னு பலகாரங்கள்கூட இதுலதான் செய்வாங்க. கோடை காலத்தில் தண்ணீர் பந்தலில் நாட்டுச் சர்க்கரையுடன் புளிக்கரைசல் கலந்த 'பானகம்’ கொடுப்பாங்க. இப்ப அந்தப் பழக்கமெல்லாம் மறைஞ்சுட்டு வருது'' என வருத்தப்பட்டவர்.

இதுல கலப்படம் இல்லை !
''நாகரிகம் என்று சொல்லிக் கொண்டு ரசாயனம் கலந்த அஸ்கா சர்க்கரையை (சீனி) வாங்கி பயன்படுத்த மக்கள் பழகிட்டாங்க. இதனால் வயிறு சம்பந்தமான நோய், வயிறு எரிச்சல் ஏற்படுது. சில கலப்படக்காரங்க அஸ்காவோட, அதேமாதிரி இருக்கும் செயற்கைத் துகள்களையும் கலக்கறாங்க. ஆனால், நாட்டுச் சர்க்கரையில் எந்தக் கலப்படமும் கிடையாது. மூன்று வருடம் வரைக்கும்கூட கெட்டுப் போகாது. வளரும் குழந்தைகளுக்கு பாலில் நாட்டுச் சர்க்கரையைக் கலந்து தினமும் தூங்கப் போறதுக்கு முன் ஒரு டம்ளர் கொடுத்தால்... வயிறு சம்பந்தமான எந்த நோயும் அண்டாது. உடம்பும் ஊக்கமாகும்'' என்று ஆரோக்கிய ஆலோசனைகளையும் தந்தார் மசக்கவுண்டர்.

மதிப்புக் கூட்டினால் ஏக்கருக்கு லட்ச ரூபாய் !
நிறைவாக லாபக் கணக்குப் பேசியவர், ''பொதுவாக கரும்பில் 35 டன்தான் சராசரி விளைச்சல் என்று சொல்வாங்க. ஆனால், எங்க பக்கமெல்லாம் ஏக்கர்ல 50 டன்ங்கறதுதான் சராசரி விளைச்சல். அதுக்குக் காரணம், மண் வளமும் முறையான பராமரிப்பும்தான். 50 டன் கரும்பிலிருந்து 5 முதல் 6 டன் நாட்டுச் சர்க்கரையை உற்பத்தி பண்ணலாம். 60 கிலோ மூட்டை ஆயிரத்து ஐநூறு ரூபாய்ல இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுது. இந்தக் கணக்கை வைத்து பார்த்தால்... ஏக்கருக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் கிடைக்கும். கரும்பு வெட்டிலிருந்து விற்பனை வரை எல்லா செலவும் சேர்த்து, 50 ஆயிரம் ரூபாய் போனாலும்... ஏக்கருக்கு ஒரு லட்ச ரூபாய் நிச்சயம் லாபமா கிடைக்கும்'' என்ற மசக்கவுண்டர்,''இந்த நாட்டுச் சர்க்கரை உற்பத்தி செழிப்பாக இருக்கணும் என்றால், அரசாங்கம் அஸ்கா சர்க்கரை உற்பத்தி பண்றதுல செலுத்துற கவனத்தில், கொஞ்சமாவது நாட்டுச் சர்க்கரை பக்கமும் திரும்பினால்தான் கவுந்தப்பாடி சர்க்கரை... தலைமுறைகள் தாண்டியும் இனிக்கும்'' என்ற வேண்டுகோளையும் வைத்தார்.

தொடர்புக்கு
என்.கே.கே. பெரியசாமி,
செல்போன்: 94432-42726,
மசக்கவுண்டர், செல்போன்: 98428-45077
வெங்கடாச்சலம், செல்போன்: 90952-75737

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites