இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Tuesday, April 17, 2012

நெல்லியில் இருக்கு... நூறு நுட்பம்

'எல்லாரும் செய்வது மாதிரிதானே நாமளும் விவசாயம் செய்கிறோம்... ஆனால், நமக்கு மட்டும் ஏன் சரியாக மகசூல் கிடைப்பதில்லை?’ என்கிற கேள்வி, இங்க ஏகப்பட்ட விவசாயிகளுக்கு எழாமல் இருப்பதில்லை. 'உரம், பூச்சிவிரட்டி, தண்ணீர், இயற்கைச் சூழல் என்பனவற்றையும் தாண்டி, பல்வேறு நுணுக்கங்களும் ஒளிந்து கிடக்கின்றன... பயிர்த் தொழிலில்' என்பதுதான், அனுபவசாலிகளின் கருத்து. அப்படிப்பட்ட ஆயிரமாயிரம் நுணுக்கங்களை எல்லாம், ஒவ்வொரு பயிரிலும் நன்கு அனுபவப்பட்ட விவசாயிகள், இதழ்தோறும் இங்கே பகிர்ந்து கொள்ளப் போகிறார்கள்... பசுமை டாக்டராக! ஆம், விவசாயியின் நிலத்துக்கு நேரடியாகச் சென்று, அங்கே உள்ள பயிரில் இருக்கும் பிரச்னை, மண்ணின் பிரச்னை, இயற்கைச் சூழலால் வரும் பிரச்னை, தேவையான ஊட்டம், அந்தத் தோட்டத்துக்கென்றே இருக்கும் பிரத்யேக பிரச்னை என்று அனைத்து விஷயங்களையும் அலசி, நல்ல மகசூல் பெறுவதற்கான வழிகாட்டுதலைத் தரப் போகிறார்கள்.

திண்டுக்கல் அருகே இருக்கிறது, குட்டியப்பட்டி கிராமம். விவசாயத்தில் ஆட்கள் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக வடிவெடுக்க... 'மரப்பயிர்தான் ஒரே தீர்வு' என்று 40 ஏக்கர் நிலத்தில் நெல்லியை நடவு செய்தார் இந்த ஊரைச் சேர்ந்த பசும்பொன். வழக்கமாக மூன்றாம் ஆண்டு முதல் காய்க்க வேண்டிய நெல்லி, இவருடைய தோப்பில் நான்கு வருடமாகியும் காய்க்கவில்லை. அத்துடன் செடிகளும் வளர்ச்சியில்லாமல் குன்றியே இருந்தன.இந்நிலையில் எதேச்சையாக இவருடைய தோப்புக்கு வந்த ஜல்லிபட்டியைச் சேர்ந்த நெல்லி விவசாயியான ஜெயக்குமார் சில ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார். அதன்படி செயல்பட்டதின் விளைவு, தற்போது காய்த்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது பசும்பொன்னுடைய தோப்பு.காய்க்காத மரங்கள் எப்படி காய்த்தன... ஜெயக்குமார் தந்த ஆலோசனைகள் என்னென்ன... என்பவற்றைத் தெரிந்துகொள்வதோடு, மேற்கொண்டும் நெல்லித் தோப்பில் கடைபிடிக்க வேண்டியத் தொழில்நுட்பங்கள் எவையெவை என்பதையும் தெரிந்து கொள்ளும் வகையில், பசும்பொன்னுடைய தோப்புக்கே ஜெயக்குமாரை வரவழைத்தோம்...

''மரப்பயிருக்குத் தாவிடலாம்னுதான் நெல்லி விவசாயத்துக்கு மாறினேன். ஆனா, நான் நினைத்த மாதிரி நெல்லி விவசாயம் அவ்வளவு சுலபமாக இல்லை. நடவு செய்து மூன்று வருடத்தில் காய்க்கும் என்று சொன்னாங்க. மூன்று வருடமாகியும் காய்ப்பும் இல்லை... வளர்ச்சியும் இல்லாமல் நின்ற செடிகளைப் பார்க்கப் பார்க்க மனசுக்குக் கஷ்டமாயிருந்தது. 'ஏண்டா நெல்லியைப் போட்டோம். பேசாமல் காட்டை அழிச்சுட்டு, வேற வெள்ளாமைக்குப் போயிடலாம்' என்று முடிவே பண்ணிட்டேன். அந்த நேரத்தில்தான்  ஜெயக்குமாரை சந்திக்கற வாய்ப்பு கிடைத்தது.
என் தோப்புக்கு வந்து மரங்களைப் பார்த்துவிட்டு, செடி வளராமல் இருக்கறதுக்கான காரணத்தை இவர் சொன்னதும்தான்... விஷயமே எனக்கு உறைத்தது. நெல்லி சாகுபடியில் இத்தனை நுணுக்கம் இருக்கிற விஷயமே அப்பத்தான் தெரிந்தது. தொடர்ந்து அப்பப்ப வந்து ஆலோசனை கொடுத்துட்டு இருக்கார். அவர் சொன்னபடி செய்ததில், போன வருடம் 70% காய்த்தது. இந்த வருடம் பூ பிடித்திருப்பதைப் பார்த்தால்... 90% மகசூல் இருக்கும் என்று நினைக்கிறேன்'' என்றவரிடம், ''ஜெயக்குமார் முதலில் சொன்ன நுணுக்கங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க'’ என்று நாம் குறுக்கிட்டோம்.

''நான் சொல்றதைவிட அதை அவர்கிட்டயே கேளுங்க'' என்றார் பசும்பொன்., அந்த வித்தைகளைச் சொல்லத் தொடங்கினார், ஜெயக்குமார். ''முதலில், இது களிமண் பூமி. இதில் நெல்லியை நடவு செய்திருக்கக் கூடாது. அப்படியே செய்தாலும்... பாசன விஷயத்தில் கவனமாக இருக்கணும். ஆனால், நான் வந்து பார்த்தப்ப செடிகளை சுற்றி குளம் மாதிரி தண்ணீர் தேங்கியிருந்தது. செடி வளராத காரணம் அதுதான் என்று புரிந்தது. அதிகமா தண்ணீர் தேங்கியிருந்ததால், மண்ணுக்குள்ள காற்று போக வழியில்லாமல். வேரெல்லாம் சுவாசிக்க வழியில்லாமல் திணறிப் போனதால்தான் செடிகள் வளரவில்லை. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் காய்ச்சலும், பாய்ச்சலுமாகத்தான் பாசனம் செய்யணும். ஒரு மரத்திற்க்கு ஒரு நாளைக்கு அதிகபட்சம் 50 லிட்டருக்கு மேல் தண்ணீர் கொடுக்கக் கூடாது. அதை எடுத்துச் சொன்னேன். உடனடியாக தண்ணீர் பாய்ச்சுறதைக் குறைச்சுக்கிட்டாரு. தண்ணீர் அளவாக கொடுத்ததும்... கொஞ்சம், கொஞ்சமாக செடிகள் எந்திரிக்க ஆரம்பித்தது. உடனே செடிக்கு 10 கிலோ தொழுவுரம் கொடுத்தோம். தளதள என்று வளர்ந்தது. அடுத்தடுத்து சின்னச்சின்ன நுட்பங்களை முறையாக கடைபிடிக்கவும் மரம் காய்க்கத் தொடங்கிவிட்டது'' என்ற ஜெயக்குமார், நெல்லியில் கடைபிடிக்க வேண்டிய தொழில்நுட்பங்களை நடவு தொடங்கி மகசூல் வரை விரிவாகவே விளக்கினார்.

மழைக் காலத்தில் நடவு செய்யக்கூடாது!
பொதுவாக கன்றுகளை மழைக் காலத்தில் நடவு செய்வார்கள். ஆனால், நெல்லி சாகுபடிக்கு அப்படி செய்யக் கூடாது. வெயில் காலத்தில்தான் நடவு செய்ய வேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்தால், கன்றுகளை, நாற்றுப் பண்ணையிலிருந்து வாங்கி வரும்போது எப்படி செடி இருந்ததோ, அப்படியேதான் இருக்கும். வளர்ச்சி என்பது கொஞ்சம்கூட இருக்காது. நெல்லி நடவு செய்யத் தீர்மானித்தால்... மழைக் காலத்தில் இரண்டு கன அடி குழி எடுத்து, 10 கிலோ தொழுவுரத்தை மேல்மண்ணுடன் கலந்து கொட்டி நிறைத்துவிட வேண்டும். அதைத் தொடர்ந்து வரும் வெயில் காலத்தில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை), அந்தக் குழியில் கன்று நடவு செய்ய வேண்டும். நடவு செய்த உடன் தண்ணீர் கொடுக்க வேண்டும். என்.ஏ-7, கிருஷ்ணா, சக்கையா, பி.எஸ்.ஆர் ரகங்களை நடவு செய்வதாக இருந்தால், 20 அடி இடைவெளியும், தேர்வு செய்யப்பட்ட ரகமாக (செலக்சன் ரகம்)  இருந்தால், 15 அடி இடைவெளியும் இருப்பதுபோல் பார்த்துக் கொள்ள வேண்டும். நடவு செய்த 20-ம் நாள் புது இலைகள் துளிர்க்கும். மழைக் காலத்தில் நடவு செய்தால், புதுத் தளிர் வராது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

ஒட்டுப் பிரிப்பதில் கவனம்!
புது இலைகள் வந்து, செடியின் மேல்பக்கம் வரை உயிரோட்டம் வந்ததும், செடியின் ஒட்டுப் பகுதியில் உள்ள பிளாஸ்டிக் பேப்பரை அகற்றிவிட வேண்டும். சிலர் அஜாக்கிரதையால் இதைச் செய்வதில்லை. அதனால் ஒட்டு வளர்வதற்கு பதில், தாய்ச் செடி வளர்ந்துவிடும். இப்படி வளரும் மரங்கள் காய்ப்பதற்கு குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் ஆகும். சொல்லிக் கொள்ளும்படி மகசூலும் இருக்காது. செடி வளரும் நிலையில் அதிக தண்ணீர் கொடுக்கக் கூடாது. தேவையான அளவிற்க்கு மட்டும் காய்ச்சலும், பாய்ச்சலுமாகக் கொடுத்தால் போதும் என்பதில், கவனமாக இருக்க வேண்டும். ஆறு மாதத்துக்கு ஒருமுறை, மரத்துக்கு 10 கிலோ ஆட்டு எரு அல்லது தொழுவுரம் கொடுக்க வேண்டும். ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை தேவையைப் பொறுத்து பூச்சிவிரட்டிகளைத் தெளிக்க வேண்டும்.

நெல்லி உறங்கும் நேரம்!
நெல்லி மரத்தை ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதம் பாசனம் செய்யாமல் காயவிட வேண்டும். இதை 'உறங்கும் நிலை’ என்பார்கள். இதுதான் நெல்லி சாகுபடியில் முக்கியமான நுட்பம். அநேக விவசாயிகள், இதை முறையாகச் செய்வதில்லை. நவம்பர் முதல் ஜனவரி கடைசி வரை உள்ள காலத்தில் மரங்களுக்கு எதுவும் கொடுக்காமல் காயவிட வேண்டும். மரம் இலைகளோடு பச்சைப் பசேல் என இருந்தால், பூ பிடிக்காது. இதற்காக சிலர் ரசாயன மருந்துகளைத் தெளித்து இலைகளை கொட்ட செய்வார்கள். இது தவறான முறை. இயற்கையாகவே இலைகள் உதிரும் வரை காத்திருப்பதுதான் நல்லது. இயற்கைச் சுழற்சிக்கு ஏற்ப ஓய்வு கொடுத்தால், மரத்தின் வளர்ச்சி நன்றாக இருப்பதுடன், அதிக மகசூலும் கிடைக்கும். மரங்களை உறங்கும்நிலையில் வைக்கும்போது, இலைகள் உதிர்ந்து, குச்சி திரட்சியாகும். அந்தக் குச்சிகளில் பூக்கள் உருவாகும். இப்படி உருவாகும் பூக்கள், பனியில் உள்ள ஈரத்தில் பெரிதாகும். பூவெடுப்பதில் மூன்று நிலைகள் உள்ளன. சின்னதாக அரும்புகள் தோன்றுவது முதல்நிலை. 2|ம் நிலையில் மலர்ந்து பூவாக இருக்கும். 'செட்டிங்’ என அழைக்கப்படுது மூன்றாவது நிலை. அதாவது, மகரந்தச் சேர்க்கை முடிந்த பிறகு கடுகை விட சிறியதாக கருப்பு நிறத்தில் பூக்கள் குச்சியில் உருவாகியிருக்கும். இதைத்தான் 'செட்டிங்' என்கிறார்கள்.

பார்த்துப் பாத்து செய்ய வேண்டும் பாசனம்!
பூவெடுத்தவுடனே சிலர் பாசனம் செய்வார்கள். அப்படி செய்வது தவறு. 'செட்டிங்' ஆன பிறகுதான் பாசனமே செய்ய வேண்டும். செட்டிங் ஆன பிறகு (பிப்ரவரி முதல் வாரம்), முதலில் மரத்துக்கு வாரம் 10 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். காய் கொஞ்சம் பெருத்து பட்டாணி அளவிற்க்கு வந்ததும் வாரம் 20 லிட்டர், அரை காய் அளவிற்க்கு வந்ததும் 30 லிட்டர் என பாசனநீரின் அளவை சீராக அதிகரிக்க வேண்டும். அதற்குப் பிறகு 50 லிட்டர் வரை தண்ணீர் பாய்ச்சலாம். செட்டிங் ஆன பூ வெடிப்பதற்கு குளிர்ச்சி தேவை. ஒரு மழையாவது கிடைத்தால்தான் பிஞ்சு உருவாகும். ஏப்ரல் மாதம் நிச்சயம் ஒரு மழையாவது கிடைத்துவிடும். நெல்லி வயலில் இடை உழவு செய்யக்கூடாது. அப்படியே செய்தாலும் அதிக ஆழமாக உழக்கூடாது. அப்படிச் செய்தால், நெல்லியில் அதிகமாக இருக்கும் சல்லி வேர்கள் துண்டிக்கப்படும். காயம்பட்ட வேர்களில் பாக்டீரியா தாக்கி, செடியின் வளர்ச்சியை, பாதிக்கக் காரணமாக அமைந்துவிடும்.

செடியில் காய் நன்றாக பெருத்ததும், குச்சி கீழ் நோக்கி வளையும். இதைத் தவிர்க்க குச்சியில் கடைசி காய்க்கு முன்பாக வெறுமனே உள்ள குச்சியை கவாத்து செய்து விடவேண்டும். இப்படிச் செய்தால் குச்சி வளையாது'' என பயனுள்ள ஆலோசனைகளைச் சொன்னார் ஜெயக்குமார். அத்தனையையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த பசும்பொன், ''விவசாயத்தைப் பொறுத்தவரைக்கும் 'கடனே என்று செஞ்சா கஷ்டந்தான் மிஞ்சும், கடமை என்று நினைச்சு செஞ்சாத்தான் நல்ல மகசூல் எடுக்க முடியும்’ என்பதை நான் அனுபவம் மூலமாக  புரிந்து கொண்டேன்.
சரியான நேரத்துல ஜெயக்குமார் கொடுத்த ஆலோசனையால் நான் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். இதுவரைக்கும் மரத்தை எப்படியாவது காய்க்க வைக்கணும் என்றுதான் நினைச்சுட்டு இருந்தேன். இனி, 100% மகசூல் எடுப்பதுதான் என்னோட அடுத்த இலக்கு. ஏற்கெனவே இவர் சொன்னதையெல்லாம் சரியாக கடைப்பிடித்ததால், இந்த முறை நல்லாவே பூவெடுத்திருக்கு. மேற்கொண்டும் இப்ப இவர் சொல்லியிருக்கும் எல்லா தொழில்நுட்பங்களையும் தவறாமல் கடைபிடித்து, அடுத்தப் பருவத்துலயே 100% மகசூலை சாதிச்சுடுவேன்'' என்று சபதமாகவே சொன்னார் சந்தோஷமாக!
தொடர்புக்கு,பசும்பொன், செல்போன்: 91504-47270
ஜெயக்குமார், செல்போன்: 98659-25193.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites