இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, July 13, 2023

கேட்டரிங் தொழிலில்

 எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், எந்த வேலையில், எந்த நாட்டில் வசித்தாலும் அடிப்படையில் உணவுதான் ஒருவருக்கான முதல் தேவை. படிப்பு, பணிச்சூழலால் வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் பலரின் முதல் தேடல் வீட்டுப் பக்குவத்திலான தரமான உணவுதான். பிள்ளைகள் வெளிநாட்டில் வேலை செய்ய, வயதான பெற்றோர் பலரும் நல்ல உணவுக்காக ஏங்குவார்கள். இப்படி நம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருப்போரை நம்பியே சிறிய அளவில் உணவு தயாரிப்புத் தொழிலைத் தொடங்கினால், தானாகவே பலரும் நம்மைத் தேடிவந்து நிரந்தர வாடிக்கை யாளர்களாக மாறுவார்கள்.எல்லா நாளும் வருமானம்!

மூன்று வேளைக்கான உணவுகள் தயாரிப்பது தவிர, குழம்பு, பொரியல், இனிப்பு மற்றும் ஸ்நாக்ஸ் வகை உணவுகளையும் தனித்தனியேகூட விற்பனை செய்யலாம். உணவுக்கடை தொடங்க முடியாதவர்கள், ஆர்டரின் பேரில் வீட்டில் இருந்தே உணவு தயாரிக்கலாம். முதல் ஆறு மாதங்கள் பெரிதாக லாபம் பார்க்காமல், வாடிக்கையாளர்கள் வட்டாரத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையே அதிகம் மேற்கொள்ள வேண்டும். வார நாள்கள், வார இறுதி நாள்கள், விடுமுறை நாள்கள், பண்டிகை நாள்கள் என ஒவ்வொரு காலகட்டத்திலும் பலரின் எதிர்பார்ப்பும் தேவையும் மாறுபடும். இவற்றையெல்லாம் சரியாகக் கணித்து உணவு தயாரிப்பில் ஈடுபட்டால் வருடத்தில் எல்லாக் காலத்திலும் நிலையான வருமானம் உறுதி.

செலவுகளைக் குறைக்க...

ஒரு வேளைக்குப் பலவித உணவுகள் தயாரித்தால்தான் கூட்டம் அதிகம் வரும் என்று நினைக்கத் தேவையில்லை. இரவு உணவாக வெறும் இட்லி, சப்பாத்தி மட்டுமே தயாரித்து, அதை மிகச்சிறந்த தரத்தில் கொடுத்தால் அதற்கே வாடிக்கையாளர்கள் கூட்டம் நிறையும். சுவை பிடித்துப்போனால் வாடிக்கையாளர்கள் அவ்வளவு சீக்கிரம் நம்மை விடமாட்டார்கள். முடிந்தவரையில் மசாலாப் பொருள்களையும் நாமே தயாரித்துக்கொண்டால் கூடுதல் தரத்துடன், செலவினங்களையும் குறைக்கலாம். உணவுத் தயாரிப்பு என்பது தரத்துடன், கைப்பக்குவத்தையும் உள்ளடக்கியது. எனவே, உணவுகளை நேர்த்தியாகத் தயாரிக்கப் பழகுவது மிகவும் அவசியம்.நம்பகத்தன்மையை இழக்கக் கூடாது!

சில உணவுக்கடைகளில் பழைய எண்ணெய், மீதமான உணவுப்பொருள்களை அடுத்த வேளைக்குப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால் தரமும் சுவையும் குறையும். இதனால், உணவுக் கடைகள் மீதான மக்களின் நம்பகத்தன்மை குறைந்து வருகிறது. இதுபோன்ற எண்ணங்களை நேர்மறையாக மாற்றும் வகையில் நம் அணுகுமுறையும் தயாரிப்பும் இருந்தால், வாடிக்கையாளர்கள் எப்போதும் நம்மைவிட்டு விலகமாட்டார்கள்.

முதலீடு: ஆரம்பத்தில் வீட்டில் இருக்கும் தரமான உணவுப் பொருள்களைக் கொண்டே சமையல் செய்யலாம். பலவித உணவுகளையும் செய்து பலருக்கும் சாம்பிள் கொடுத்துக் கருத்துக் கேட்கலாம். உறுதியான நம்பிக்கை வந்ததும் சில ஆயிரம் முதலீட்டில் தொழிலாகச் செய்யலாம்.

கேட்டரிங் தொழிலுக்குத் தேவையானவை: சமையல் பாத்திரங்கள், காய்கறிகள், மளிகைப் பொருள்கள்.

பயிற்சி: உணவு தயாரிப்போர், அம்மா மற்றும் பாட்டி உள்ளிட்ட குடும்பத்திலுள்ள மூத்த பெண்களிடமும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: வீட்டில் இருந்து விற்பனை செய்து, வாடிக்கையாளர்கள் அதிகரித்ததும் தள்ளுவண்டிக்கடையிலும், பிறகு வாடகைக் கட்டடத்திலும் உணவுக்கடை நடத்தலாம். வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே உணவு டெலிவரி செய்வதாலும் கூடுதலான வாடிக்கையாளர்களை ஈட்டலாம். பேச்சிலும் செயலிலும் நாணயம் இருந்தால், வாடிக்கையாளர்கள் தானாகவே அதிகரிப்பார்கள்.

நோட் பண்ணுங்க!

ஒவ்வொரு வாடிக்கையாளரின் விருப்பமும் தேவையும் வெவ் வேறானவை. ஏதோ ஒரு காரணத்தால் நம் அணுகுமுறை பிடிக்காமல் ஒரு வாடிக்கையாளரை இழந்தாலும் பெரிய இழப்புதான். ஒருவர்தானே என யாரையும் குறைச்சலாக எடை போடக்கூடாது. உணவின் சுவையுடன், நம் பேச்சும் அணுகுமுறையும் பிடித்திருந்தால் ஒருவரே பல வாடிக்கை யாளர்களை நமக்குக் கொண்டுவருவார்.

* கேட்டரிங் தொழிலுக்கான ஆலோசனைகள் பெற ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் அமைந்துள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites