இந்ததளத்திற்கு வருகை தரும் உங்களை இன் முகத்தோடுவரவேற்கிறேன் .என் நட்புக்கள் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் நிகழட்டுமாக !!!

Thursday, July 13, 2023

தையால் தொழில்லில் நல்ல லாபம்

 விழுப்புரத்தைச் சேர்ந்த மான்விழி கண்ணன், டெய்லரிங் தொழிலில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். ஃபேஷன் தொழிலில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளை வழங்குகிறார்.

வர்லாம் வாங்க!

காலங்கள் மாற, மக்கள் தங்கள் உடைகளிலும் புதுமைகளை அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, பெண்களுக்கான ஆடைகள் தயாரிப்பில் இருக்கும் தொழில் வாய்ப்புகள் ஏராளம். அதிலும் மணமகளுக்கான ஆடை, அலங்காரப் பொருள்கள் தயாரிப்பில் பெரிய வியாபார வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. நிச்சயதார்த்தம், திருமணம், வரவேற்பு நிகழ்ச்சி என ஒவ்வொரு தருணத்திலும் ஏராளமான வேலைப்பாடுகளுடன்கூடிய ஆடைகள், அவற்றுக்குப் பொருத்தமான அலங்காரப் பொருள்களைத் தயாரித்து, ஒரு திருமண ஆர்டரிலேயே பல ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டலாம். இதுபோல சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் உட்பட வழக்கமான பயன்பாடுகளுக்கான ஆடை களிலும் பல்வேறு டிசைன்களைப் புகுத்தி அட்டகாசமான வருமானம் ஈட்டலாம்.

ஒரு பிளவுஸ்... பல ஆயிரம் வருமானம்!

சாதாரண காட்டன் ஆடைகள் முதல் பட்டுப் புடவைகள் வரை எல்லாவற்றிலும் டிசைனிங் வேலைகளையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த கொரோனா காலத்திலும்கூட, ‘டிசைனர் மாஸ்க்தான் வேண்டும்’ என்போரும் உண்டு. மக்களின் தேவைதான் இந்தத் தொழிலுக்கான பிசினஸ் படிக்கட்டு. உதாரணத்துக்கு டிசைனர் பிளவுஸ் தயாரிப்புக்கான மூலப் பொருள்கள் வாங்க சில நூறு முதல் சில ஆயிரம் ரூபாய்வரைதான் செலவாகும். ஆனால், அதன் பிறகான உழைப்புதான் பெரியது. அதில், ஆரி, எம்ப்ராய்டரிங், ஸ்டோன் வேலைப்பாடுகள் அனைத்தையும் முடிக்கச் சில தினங்கள் வரை ஆகலாம். உழைப்புக்கேற்ப, அந்த டிசைனர் பிளவுஸில் பல ஆயிரம் லாபம் ஈட்டலாம்.

அப்டேட் எப்போதும் அவசியம்!

தற்போது பெண்களுக்கான ஆடைகளில் பெயின்டிங் வேலைப் பாடுகளுக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. டெய்லரிங் மட்டும்தான் தெரியும் என்பதைத் தாண்டி, எம்ப்ராய்டரிங், ஆடைகளில் பெயின்டிங் செய்வது உட்பட டிசைனிங் வேலைகளையும் தெரிந்து கொண்டால் வேகமாக முன்னேறலாம். தரம் நன்றாக இருந்தால் நாம் எதிர்பார்த்ததைவிடவும் கூடுதல் வருமானமும் கிடைக்கும்.

கூடுதல் வருமானத்துக்கு உபதொழில்கள்!

ஆடைக்குப் பொருத்தமான ஆபரணங்களைப் பயன்படுத்தவே பலரும் ஆசைப்படுவார்கள். எனவே, டிசைனிங், டெய்லரிங் தொழில்களுடன் சில்க் த்ரெட் வளையல், டிசைனர் ஜிமிக்கி, மணமகள் அலங்காரத்துக்கான அலங்காரப் பூக்கள், ஜடை அலங்காரத்தையும் செய்துகொடுப்பதுடன், மணமகள் அலங்காரம் உள்ளிட்ட வேலைகளும் தெரிந்திருந்தால், எல்லாக் காலத்திலும் நிலையான வேலைவாய்ப்புடன், நிலையான வருமானத்தையும் உறுதி செய்யலாம். தவிர, சுப நிகழ்ச்சிகளுக்கான டிசைனர் ஆரத்தித் தட்டு, சீர்வரிசைத் தட்டு வடிவமைப்பிலும் நல்ல வருமானம்

ஈட்ட முடியும். ஆர்வம், கிரியேட்டிவிட்டி திறன்தான் இந்தத் தொழிலுக்கான அடிப்படை மூலதனம். ஒரு டிசைன் கற்றுக்கொண்டால் அதை வைத்தே புதிய டிசைன்கள் பலவற்றையும் உருவாக்கும் திறன் இருந்தால் இந்தத் தொழிலில் வேகமாக வளரலாம். வெளியிடங்களுக்குப் போகும்போது பலதரப்பட்ட மக்கள் பயன்படுத்தும் ஆடைகள், பத்திரிகைகள், தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் மூலம் ஃபேஷன் விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் நமக்கு அனுபவம் கூடுவதுடன், இந்தத் துறையில் நீண்டகாலம் நிலைத்திருக்கவும் முடியும்.



முதலீடு: டெய்லரிங் தெரிந்தவர்கள், உறவினர் மற்றும் தெரிந்தவர் களுக்கு ஆடைகள் தயாரித்து அனுபவம் பெற்று தொழிலாக மாற்றலாம். இதற்குச் சில ஆயிரம் ரூபாய் முதலீடே போதும்.

மூலப்பொருள்கள்: நூல், ஊசி, கத்தரிக்கோல், டேப், அயர்ன் பாக்ஸ், ஆரி மற்றும் எம்ப்ராய்டரிங் தேவைகளுக்கான பொருள்கள்.

பயிற்சி: தையல் பயிற்சி வகுப்புகள் மற்றும் மகளிர் குழுப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளலாம். டெய்லரிங் தொழில் செய் வோரிடமும் பயிற்சி பெறலாம்.

விற்பனை வாய்ப்பு: ஒரு வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை மீறி நேர்த்தியாக ஆடைகளைத் தயாரித்துக் கொடுத்தால், அவரால் பல வாடிக்கையாளர்கள் நம்மைத் தேடிவருவார்கள். தயாரிக்கும் ஆடைகளை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டும் புதிய வாடிக்கையாளர்களை ஈட்டலாம். ஃபேஷன், டெய்லரிங் விஷயங்களை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்தும், பயிற்சி வகுப்புகள் நடத்தியும் வருமானம் ஈட்டலாம்.

நோட் பண்ணுங்க!

கால மாற்றத்துக்கேற்ப ஃபேஷன் துறையில் அறிமுகமாகும் புதுமைகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து வைத்திருப்பதும் அவசியம். இது நம் மூலமாக வாடிக்கையாளர்களுக்குத் தெரிந்தால்தான், இந்தத் துறையில் நமக்கு அதிக அனுபவமும் ஆர்வமும் இருப்பது அவர்களுக்குப் புரியும். அதனால், அவர்கள் வேறு ஒரு டிசைனரையோ, டெய்லரையோ நாடிச் செல்ல வாய்ப்பில்லை.

* ஃபேஷன் தொழில் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகள் பெற, சென்னையிலுள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.

தொடர்புக்கு: 044 - 22500121

பயிற்சி நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

0 comments:

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites